அத்தியாயம் : 9
குமாரின் குரலில் இருந்த உண்மை, ராஜகுமாரனுக்கு ஒருவித ஆறுதலை அளித்தது. ஆனால், அந்த ஆறுதல் ஒரு நொடிக்குத்தான். அவனது மனதில் இருந்த ஆத்திரம் தணியவில்லை.
“அவளைக் கண்டுபிடிக்கிறதுக்கு என்ன வழியோ, அத்தனையையும் பண்ணுங்க. எங்க அவள் ஒளிஞ்சிருந்தாலும் சரி, அவளை கண்டுபிடிச்சு என் முன்னாடி நிறுத்தணும். இனி இதுதான் உங்களுக்கு வேலை.” அவன் குரலில் அவளை பழி வாங்கியே தீர வேண்டும் என்ற வெறி இருந்தது.
குமார், ராஜகுமாரனின் நிலையை கண்டு வருந்தினான். நிதமும் சவரம் செய்து, நேர்த்தியான ஆடைகள் அணிந்து, சிரித்தமுகமாகவும், சுருசுருப்புடன் ஒரு நடிகர் போல இருந்தவன், தற்போது இரண்டு வாரத்தில் கன்னங்கள் ஒடுங்கி, கண்களின் கீழ் கரு வளையங்கள் சூழ்ந்து, தூக்கியமின்மையால் சிவந்திருந்த கண்கள், பொழிவிழுந்திருந்த முகம், கசங்கி இருந்த முடிக்கற்களோடு ஆளே மொத்தமாய் மாறி போய், பார்க்கவே பரிதாபமான நிலையில் இருந்தான்.
“அண்ணா, நாங்க உடனே களமிறங்குறோம். சீக்கிரம் அவளை கண்டுபிடிச்சிடுவோம். நீங்க உங்க உடம்பை பார்த்துக்கங்கண்ணா. நீங்க இரண்டு வாரமா சரியாகவே சாப்பிடலை. ஆபிஸுக்கும் சரியா போகலை. நீங்க நல்லா இருந்தால்தான அவளை தண்டிக்க முடியும்” என்று கவலையுடன் கூறினான்.
“ஆமாங்கண்ணா… இனி நீங்கத்தான் எங்க எல்லாருக்குமே அண்ணன். உங்களை விட்டா எங்களுக்கும் யாருமில்லை. நிச்சியமாக, நம்ம அண்ணனை கொன்னவளை, நாங்க கொல்லாமல் விட மாட்டோம்” என்றார்கள் ஒன்றாக…
அவர்களது வார்த்தைகளில், ராஜகுமாரன் மீது அவர்கள் வைத்திருந்த அன்பும், அக்கறையும் வெளிப்பட்டன. ஆனால், ராஜகுமாரனின் மனம் அவர்களது ஆறுதல் வார்த்தைகளை ஏற்று கொள்ளவில்லை. அவன் மனம் முழுவதும் ஸ்வேதாவையும், அவளுக்கு கொடுக்க வேண்டிய தண்டனையை பற்றியும் மட்டுமே சிந்தித்து கொண்டிருந்தது.
“வெறும் அவளை கண்டுபிடிச்சா மட்டும் போதாதுடா. அவளை பத்தி எல்லா தகவல்களும் எனக்கு வேணும். அவளோட பின்னணி, அவள் குடும்பம், அவள் யார் யாரோட தொடர்புல இருக்கான்னு ஒவ்வொண்ணும் எனக்குத் தெரியணும். பணம் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. என் அண்ணனை ஏமாத்தினவள், அவளோட குடும்பம்னு யாரும் தப்பிக்கக் கூடாது!” அவன் குரலில் இருந்த கர்ஜனை, அவனது ஆழமான காயத்தையும், அதிலிருந்து பிறந்த கொடூரமான முடிவையும் கூறினான்.
‘ஸ்வேதா… நீ எங்க ஒளிந்தாலும் சரி, உன்னை மட்டுமில்ல உன் குடும்பத்தையும் நான் விட்டுவைக்க மாட்டேன்!’ என்று மனதிற்குள் சபதம் எடுத்தான். ஏனெனில், அவன் இழந்தது வெறும் ஒரு உறவு மட்டும் அல்ல. நினைவு தெரிந்த நாளிலிருந்து தன்னை பொத்திப் பொத்திப் பாதுகாத்த தன் மற்றொரு உயிரை அல்லவா? அந்த வேதனை, அவளை மட்டும் அல்ல, அவளது குடும்பத்தையும் சேர்த்து வேட்டையாட தூண்டியது.
அண்ணனின் மரணத்திற்கு பின்னால் இருந்த அவமானம், துரோகம் இவை அனைத்தும் சேர்ந்து, ராஜகுமாரனை ஒரு பழிவாங்கும் கொலைக்காரனை போல மாற்றியது. அவனது நியாயமான கோபம், இப்போது ஒரு கொடூரமான முடிவை எடுக்க வைத்தது.
அன்றிலிருந்து, ராஜகுமாரனின் ஆட்கள் ஸ்வேதாவை சல்லடை போட்டு நாலாபுறமும் தேட ஆரம்பித்தார்கள். ராஜவர்மன் உயிரோடு இருந்தபோது, அவனும் அவளும் சென்ற இடங்கள், ஒன்றாக நேரம் செலவழித்த இடங்கள் என அனைத்தையும் மிக நுணுக்கமாக ஆராய்ந்தார்கள். முடிவில், ஸ்வேதாவை பற்றி அறிந்ததில், எந்த ஒரு உறுதியான தடயமும் அவளை பற்றி கிடைக்கவில்லை. அவள் வசித்த வாடகை வீடு பூட்டியிருந்தது. அவளது சொந்த ஊரை கண்டுபிடித்து, விசாரித்தபோது, பல வருடங்களாக அவள் குடும்பத்திற்கும் சொந்தங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் எங்கே சென்றார்கள் என்று தெரியவில்லை என்றார்கள்.
இது ராஜகுமாரனை மேலும் குழப்பியது. அவள் ஒரு திட்டமிட்ட குற்றவாளியாக இருந்து, அண்ணனை ஏமாற்றினாளா? இல்லை அவளுக்கு பின்னால் தங்களை பிடிக்காத யாரேனும் இருக்கிறார்களா? என்ற நோக்கத்தில் யோசிக்க ஆரம்பித்தவன், ராஜவர்மனின் செல்போன் அழைப்பு பதிவுகள், குறுஞ்செய்திகள், சமூக ஊடக பயன்பாடு மற்றும், கடைசி நாட்களில் யாரிடம் பேசினான், என்னென்ன செய்திகள் பரிமாறிக்கொண்டான் என்பது பற்றியும், ஸ்வேதாவின் சமூக ஊடகக் கணக்குகள், அதில் அவள் வெளியிட்ட பதிவுகள், நண்பர்கள், அவளின் அன்றாட நகர்வுகள் என அனைத்தையும் வைத்து, ஒரு தனியார் துப்பறிவு நிறுவனத்தில், ஸ்வேதாவை பற்றிய ஒவ்வொரு துல்லியமான தகவலை திரட்ட ஆரம்பித்தான்.
பணம் ஒரு பொருட்டல்ல என்று ராஜகுமாரன் கூறியதால், அவள் ஒருவேளை வெளிநாட்டிற்குத் தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் துப்பறிவாளர் கூறவும், விமானநிலையங்கள், துறைமுகங்கள் என அனைத்து இடங்களிலும் அவளை தேட ஆரம்பித்தார்கள்.
அவள் பயன்படுத்திய வங்கிக் கணக்குகள், கடன் அட்டை என அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளும் ஆராயப்பட்டன. ஆனால், ஒரு சிறிய துளி தகவல் கூட, தற்போது அவள் இருப்பிடத்தை அறிய முடியவில்லை. எல்லாத்திலும் மூன்று மாதத்திற்கு முன்னால் குடி போன வீட்டு முகவரியாகவும், மூன்று மாதத்திற்கு முன்னால் ஆரம்பித்த கணக்குகளாகவும் இருந்தன.
ஒரு மாதமாகியும், ஸ்வேதாவை பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காதது, ராஜகுமாரனின் பொறுமையை ரொம்ப சோதித்தது. ‘அவள் அவ்வளவு பெரிய சாமர்த்தியசாலியா?’ என்று எண்ணி, அவனது வெறி இன்னும் அதிகரித்தது. ஒவ்வொரு நாளையும் கடக்கும் போதும், ‘ஸ்வேதா… நீ எங்க ஒளிந்தாலும் சரி, உன்னை விட மாட்டேன்’ என்று சொல்லி கொண்டே கண்களை விழித்தான்.
தனது அண்ணனின் மரணத்திற்கு நீதி கிடைத்தால்தான், தன் மனதிற்கு நிம்மதி கிடைக்கும் என்பதை நாளாக நாளாக, ஆழமாக உணர்ந்தவன், அவளை தேடி கொன்றால்தான், அண்ணனின் ஆத்மாவும் சாந்தியடையும் என்று நம்ப ஆரம்பித்தான்.
—————————————————-
சென்னை மாநகரின் பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையை கைவிட்டு, ஒரு புதிய அனுபவத்தை தேடி, கன்னியாகுமரியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தாள் யுவதி ஒருத்தி. சென்னையில் இருந்து சுமார் எழுநூறு கிலோமீட்டர் தூரம், பேருந்தில் கன்னியாகுமரிக்கு செல்ல பயணம் மேற்கொள்ள வேண்டும்.
இந்த நீண்ட தூரப்பயணம் சாதாரணமான விஷயம் அல்ல. ஆனால், நிச்சயம் புதுவித அனுபவம் கிடைக்கும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனெனில்… காலைப்பொழுதில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கி, மெல்ல நகரத்தைவிட்டு வெளியே வந்து, ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும், ஒவ்வொரு ஊருக்குமான தனித்துவத்தையும், மக்களின் பேச்சுவழக்கையும் அறியலாம். மேலும், நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டும், பாடல்கள் கேட்டுக்கொண்டும், புத்தகம் படித்துக்கொண்டும், குடும்பமாக பேசிக்கொண்டும் நேரத்தைச் செலவழித்து வரும், சக பயணிகளில் நாமும் ஒருவராய் பயணத்தை ரசிக்கலாம்.
வழியில் சுவையான தமிழ்நாட்டு உணவுகளை சுவைக்கலாம். குறிப்பாக, ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமான உணவின் சுவையை அறியலாம். இவ்வாறான பயணங்கள் இல்லையெனில் வாழ்க்கை ஏதோ பயனின்றி செல்வது போலத்தானே தோன்றும்.
தன் வாழ்வின் பயனை அடைய வேண்டி பயணத்தைத் தொடங்கியவள், ஜன்னல் வழியாக பார்வையை பதித்தபடி இருந்தாள்.
அவள் மனதிற்குள் ஏதோ ஒரு மனப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. ஒருவித தயக்கமும், அதேசமயம் இனம் புரியாத ஒரு எதிர்பார்ப்பும் நிறைந்திருந்தது.
நீண்டு சென்று கொண்டிருந்த பயணம், இரவு நெருங்கிய வேளையில், முன்னும் பின்னும் வரும் வாகனத்தின் வெளிச்சத்தால் சாலையில் மின்னல் மின்னுவது போன்று அடிக்கடி வாகனத்தின் விளக்குகள் மின்ன ஆரம்பித்தன. அதன் ஒளியின் தாக்கம் தாங்காது கண்களை மூடிக்கொண்டாள். பின்னர் எப்போது துயில் கொண்டாள் என்பதே அறியாது உறக்கத்தைத் தழுவினாள்.
அதிகாலை சுமார் நான்கு மணியளவில், அடர்ந்த இருள் மெல்ல மெல்ல அகல்வதை எதார்த்தமாய் கண்களை விழித்துக் கவனித்தவள், திடீரென, அடிவானில் இருந்து ஒரு ஒளி மெல்ல மேலே எழும்புவதை நோக்கினாள். அந்த ஒளி என்னவென்று அவளது கண்களும், இதயமும் காண்பதற்கு ஆர்வமாகின.
மெல்ல மெல்ல அந்த ஒளி இளஞ்சிவப்பு நிறத்திலும், தங்க நிறத்திலும் மிளிர்ந்தவாறு அடிவானத்தில் இருந்து எழுந்து நிற்பதைக் கண்டவள், அது சூரியகதிர்கள் என்று அறிந்தாள். நாலாபக்கமும் சூரியகதிர்கள் நன்றாக மிளர ஆரம்பிக்கவும், வானம் ரம்மியமாக காட்சியளிக்கத் தொடங்கியது. அதைக் கண்டவளின் கண்களில் ஒரு புதிய ஒளி பிறந்தது. அந்த அற்புத ஒளி தரும் அதிசய உணர்வு, தன்னுள் இருக்கும் சோகத்தை மெல்ல விரட்டுவதை உணர்ந்தவள், மனதிற்குள் ஒரு புதிய நம்பிக்கை துளிர்விடுவதை அறிந்தாள்.
கடந்த காலத்தின் கவலைகள் மறைந்து, ஒரு புதிய அத்தியாயம் அவளுக்காகக் காத்திருப்பதை நம்பினாள். கன்னியாகுமரி நகருக்குள் பேருந்து நுழைந்ததும், தூரத்தில் தெரிந்த கலங்கரை விளக்கம் பட்டென்று ஈர்க்க, ஒரு புதிய உலகத்திற்குள் நுழைவது போன்ற உணர்வை ரசித்து மகிழ ஆரம்பித்தாள்.
பேருந்து நிலையத்திலிருந்து இறங்கியதும், காலை நேரத்தின் குளிர்ந்த காற்று அவளை அன்போடு தழுவியது போன்று சுகமடைந்தாள். தூரத்தில், அலைகளின் ஆர்ப்பரிப்பு மெல்லிய சத்தமாய் காதில் வந்து விழவும், அந்தச் சத்தம் சொல்லத் தெரியாத ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்க, இரவு முழுவதும் பயணித்த களைப்பு உடலை விட்டு நீங்குவதை உணர்ந்தாள்.
பாதுகாப்பு மற்றும் வசதி நிறைந்திருந்த அறையை வாடகைக்கு எடுத்துவிட்டு, கொண்டு வந்த தோள்பையை மஞ்சத்தில் மீது வைத்துவிட்டு, எதார்த்தமாய் அறையின் பின்னால் இருக்கும் கதவைத் திறந்தாள். எதிரே, நீல நிறப் போர்வையை விரித்தாற்போல் பரந்து விரிந்திருந்த கடற்கரையைப் பார்த்ததும், அந்தப் பிரம்மாண்டமான காட்சி, அவளை மெய்சிலிர்க்க வைத்தது.
தானாக கடற்கரையை நோக்கி கால்கள் செல்ல, மெல்ல எடுத்து வைத்து நடக்க ஆரம்பித்தாள்.
மெல்லிய மணலில் அவள் கால்களை பதித்தபோது, அவளுக்குள் ஒருவிதக் குளிர்ந்த சிலிர்ப்பு தோன்றியது.
தூரத்தில் தெரிந்த கடலின் எல்லையையும், அடிவானத்தையும் இணைக்கும் இடத்தில் எழுந்த நின்ற சூரியனின் பிரகாச ஒளி, கற்பனைக்கு எட்டாத ஒரு ஓவியத்தை போல அற்புதமாக காட்சியளித்தன. அவற்றை ஆச்சரியமாக பார்த்தபடி, கடற்கரை அருகில் சென்றாள்.
கடல் காற்றின் உப்பு வாசனையும், தூரத்தில் அலைகளின் ஓசையும் அவளை முழுமையாக ஆட்கொண்டு மகிழ்ச்சி கலந்த புத்துணர்ச்சியை அளித்தன.
அலைகள் ஒன்றோடொன்று மோதி, நுரைகளாக சிதறி, மீண்டும் கடலுக்குள் ஐக்கியமாயின. சில அலைகள் ஆர்ப்பரித்துக் கரையைத் தழுவி அழகாகப் பின்வாங்கி சென்றன. கடலின் அழகும், கம்பீரமும், அதன் முடிவில்லா எல்லையும், அலைகளின் சீற்றமும் அவளை ஒருவித பிரமிப்பில் ஆழ்த்தின.
இந்த அற்புதக்காட்சியைப் பார்த்து அவற்றை விவரிக்க வார்த்தைகளே அவளுக்கு வரவில்லை. மெல்ல மணலில் அமர்ந்து, அலைகள் தன் பாதங்களை தொட்டு செல்வதை ரசிக்க ஆரம்பித்தாள்.
ஒவ்வொரு அலையும் அவளிடம் அன்பு பாராட்ட வருவது போலவும், திரும்பி செல்லும்போது அவளுக்குள் இருந்த கவலையை கையோடு இழுத்துச் செல்வது போலவும் உணர்ந்தாள்.
ஹாய் ப்ரெண்ட்ஸ்!
இந்த அத்தியாயம் பற்றிய கருத்துகளை கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படியும், அப்டியே ஒரு லைக் கொடுத்து உற்சாகப்படுத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.