அத்தியாயம் : 10
அனுபவம் வாய்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர், நாலைந்து நபர்களுடன் யுவதிக்கு மிக அருகில் வந்து நின்றார். எதார்த்தமாய் அவர்களை கவனித்தாள் அவள்.
“கன்னியாகுமரியை பத்தி சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய இருக்குங்க. முதல்ல, இப்ப… நீங்க நின்னுக்கிட்டிருக்கிற இந்த இடம். இது மத்த கடல்கள் போல சும்மா ஒரு சாதாரண கடல் இல்லைங்க. வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்தியப்பெருங்கடல்னு மூணு பெரும் கடல்கள் ஒண்ணு சேர்ற புண்ணிய பூமி. இது ஒரு அபூர்வமான சங்கம பகுதிங்க!”
அவர் பேசுவதை, ஆர்வமாக அனைவரும் கவனிக்க ஆரம்பித்தார்கள். அந்த யுவதியும் அவரை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தாள்.
“இங்க சூரிய உதயமும், அஸ்தமனமும் இங்க ரொம்பவே ஸ்பெஷல். சாயந்திரம், அந்தி மயங்குற நேரத்துல சூரியன் கடல்ல மறையிறதை பார்க்கணுமே… அப்பப்பா! கடல் அப்படியே சிவந்து, வானம் ஆரஞ்சு, பிங்க்னு பல கலர்கள்ல மின்னும். ஒரு பக்கம் சூரியன் உதிக்கும், இன்னொரு பக்கம் சந்திரன் மறையும் காட்சி இங்க மட்டும்தான் பார்க்க முடியும்னு சொல்லுவாங்க.
இங்க ஒவ்வொரு நாளும், ஒரு புது விடியல், ஒரு புது அஸ்தமனம் போலத்தான் தோணும். வாழ்க்கையில புதுசா ஒரு விஷயத்தை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, இங்க வந்து இந்த காட்சிகளை பார்த்தா ஒரு புது உத்வேகம் கிடைக்கும்னு சொல்வாங்க.”
‘உண்மையிலே… நாம சரியான இடத்துக்குதான் வந்திருக்கோம்’ என்று மனதிற்குள் எண்ணி கொண்டாள் அந்த யுவதி.
“இரண்டாவது, கடலுக்கு நடுவுல கம்பீரமா நிற்குற திருவள்ளுவர் சிலை. உலக பொதுமறையை கொடுத்த நம்ம திருவள்ளுவர், கடலுக்கு நடுவுல நின்னுக்கிட்டு நமக்கு அறத்தைப் போதிக்கிற மாதிரி பக்காவா அமைச்சிருக்காங்க.
மூணாவது, அதுக்கு பக்கத்துலயே விவேகானந்தர் பாறை இருக்கு. அங்கதான் சுவாமி விவேகானந்தர் தியானம் செஞ்சு ஞானம் அடைஞ்சார்னு சொல்லுவாங்க. இந்த ரெண்டு இடங்களையும் படகுல போய் பக்கத்துல பார்க்க முடியும்.
நாலாவது இடம், காந்தி மண்டபம். நம்ம மகாத்மா காந்தியடிகளின் அஸ்தியில் ஒரு பகுதி, இந்த கடல்ல கரைக்கப்பட்டதுனு சொல்வாங்க. அவருக்கு இங்க ஒரு மண்டபமும் இருக்கு. அவருடைய அஸ்தி வைக்கப்பட்டிருந்த கலசம் அங்க காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கு. ஒரு குறிப்பிட்ட நாள்ல சூரிய ஒளி அந்த இடத்துல படுற மாதிரி ஒரு சிறப்பான அமைப்பு பண்ணிருக்காங்க. யாராக இருந்தாலும், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு அமைதியான அஞ்சலியை நம்ம தேசத் தந்தைக்கு அந்த மண்டபத்துல செலுத்தலாம்.”
‘ஓ… இவ்வளவு விஷயமும் சிறப்பும் இருக்கிறதா?’ என்று யுவதிக்கு ஆச்சரியமா இருந்தது.
“அஞ்சாவது இடம், வட்டக்கோட்டை. இது ஒரு சின்ன, வட்ட வடிவ கோட்டை. 18-ம் நூற்றாண்டுல திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் கடற்பாதுகாப்புக்காக இதை கட்டினாங்க. அங்க இருந்து பார்த்தா கடலை நல்லா பெரிசா பார்க்கலாம். அப்படி கடலை பார்க்கும் போது பிரம்மிப்பா இருக்கும். அப்புறம், கன்னியாகுமரில உள்ள கடைகளில் சங்குகள், சிற்பங்கள், கைவினைப் பொருட்கள் நிறைய கிடைக்கும். சங்கு மாலைகள், சிப்பிகளால செய்யப்பட்ட பொருட்கள், மரச் சிற்பங்கள்னு விதவிதமான நினைவுப் பொருட்கள் நீங்க வாங்கலாம். உங்க வீட்டை அலங்கரிக்கலாம். உங்க நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இங்க இருந்து பரிசுப் பொருட்கள் வாங்கிட்டுப் போகலாம். ஆனால், பேரம் பேச மறக்காதீங்க” என்று சொன்னதும், அனைவரின் முகத்திலும் புன்னகை அரும்பியது.
“கன்னியாகுமரி வந்தா, கண்டிப்பா இங்க இருக்கிற கடல் உணவு வகைகளை சுவைக்கணும்ங்க. மீன் குழம்பு, இறால் வறுவல்னு விதவிதமான கடல் உணவுகள் இங்க ரொம்பவே ஃபேமஸ். அப்புறம், இங்க இருக்கிற பழங்கஞ்சி ரொம்பவே பிரபலமானது. இது உடல் சூட்டைத் தனிக்கும்னு சொல்லுவாங்க. கட்டாயம் ஒரு முறை சுவைச்சு பாருங்க.”
“கடைசியாக, ஆனால் ரொம்ப முக்கியமான விஷயம் என்னன்னா, இந்த ஊருக்கு கன்னியாகுமரினு பெயர் வரக் காரணமே, இந்த கடற்கரைக்கு அருகில் கோவில் கொண்டுள்ள அம்மன்தான்.
கன்னியாகுமரின்னா கடலும், சூரியனும் மட்டும் இங்க ஃபேமஸ் இல்லைங்க. இங்க அனைத்தும் அழகாகவும், அமைதியாகவும் இருக்க, காவல் தெய்வமா இருந்து காக்கிற நம்ம கன்னியாகுமரி அம்மன்தான் காரணம். அவங்களோட கதை சும்மா வேற லெவல்ல இருக்கும் கேளுங்க.
ரொம்ப காலத்துக்கு முன்னாடி, பாணாசுரன்னு ஒரு அசுரன், ஒரு கன்னிப் பொண்ணால மட்டும்தான் எனக்கு சாவே வரணும்னு பிரம்மாகிட்ட வரம் வாங்கிட்டு, ரொம்ப பவர்ஃபுல்லா இருந்தான். இந்த வரத்தால செம திமிரு பிடிச்சு, தேவர்களையெல்லாம் ஆட்டிப் படைச்சுக்கிட்டு இருந்தான். இந்திரனே இந்திர உலகத்தில் இல்லாம, உலகம் முழுக்க ஒரே குழப்பமா இருந்துச்சு. அப்ப, தேவர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து, அம்மா தாயே எங்களை காப்பாத்துங்கனு பராசக்திகிட்ட கெஞ்சினாங்க.
உடனே அம்மன், நம்ம கன்னியாகுமரில ஒரு சின்ன பொண்ணா அவதாரம் எடுத்தாங்க. அதாவது பகவதி அம்மனா தோன்றினாங்க. அம்மனோட அழகையும், அவங்க பண்ணின தவத்தையும் பார்த்த சிவன், இவங்களை கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசைப்பட்டாரு. கல்யாண தேதியும் பிக்ஸ் பண்ணிட்டாங்க.
கல்யாணமான அன்னைக்கு சிவன் சுசீந்திரத்துல இருந்து கன்னியாகுமரிக்கு கிளம்பிட்டாரு. ஆனால், உலகத்தை காப்பாத்தணும்னா, பாணாசுரனை அழிக்கணும். அதுக்கு ஒரு கன்னிப்பொண்ணுதான் வேணும்னு நாரதர்க்கு விபரம் தெரியும்ங்கிறதால, சிவன் பகவதி அம்மன் கல்யாணம் நடக்க கூடாதுன்னு, ஒரு சூப்பர் பிளான் போட்டாரு.
கல்யாண நேரம் நெருங்குறப்ப, நாரதர் ஒரு சேவல் மாதிரி கூவினார். உடனே சூரியன் உதிச்சு, நல்ல நேரம் முடிஞ்சுபோச்சுன்னு சிவன் நினைச்சுக்கிட்டு, சுசீந்திரத்திலேயே நின்னுட்டாரு.
மணமகன் வராததால, கல்யாணத்துக்காக ரெடியாகி உக்காந்திருந்த நம்ம அம்மனுக்கு செம கோபம் வந்துருச்சு. அந்த நேரம், அழகாக இருக்கிற அம்மனை பார்த்துட்டு நாம இவங்களை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சிகிட்டு அம்மன் பக்கத்துல பாணாசுரன் போனான். அவ்வளவுதான்! ஏற்கனவே கோபத்துல இருந்த அம்மன், தன்னோட சக்தியால பாணாசுரனை ஒரே போடா போட்டு அழிச்சுட்டாங்க! அப்படித்தான், கன்னிப் பொண்ணாலதான் சாகணும்னு அவன் வாங்கின வரம் பலிச்சுது.
அசுரனை அழிச்சு உலகத்தைக் காப்பாத்தினதுக்கு அப்புறம், தன்னோட அவதார நோக்கம் புரிஞ்சி, அம்மன் இங்கேயே தவத்தை தொடர்ந்தாங்க. அவங்களோட தவ சக்திதான் இந்த மூணு கடலையும் சேர்ற இடத்தையும், இந்த ஊரையும், அம்மாவை நம்பி வர்றவங்களையும் காப்பாத்திட்டு இருக்கு”
‘என்னை நீங்கத்தான் காப்பாற்ற வேண்டும் தாயே! உங்கள் அருளாலத்தான் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும்னு நம்பி வந்திருக்கிறேன். நல்வழியை நீங்கத்தான் காட்டணும் தாயே’ என்று கோவிலுக்குள் செல்லாமலேயே, அங்கேயே அமர்ந்து அம்மன் கதையை கேட்ட நொடி மனதிற்குள் வேண்டினாள் யுவதி.
“நீங்க ஆன்மீகத்துல ஈடுபாடு உள்ளவங்களா இருந்தாலும் சரி, கலை ஆர்வலரா இருந்தாலும் சரி, கன்னியாகுமரி உங்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். உங்க வாழ்க்கையில மறக்க முடியாத நினைவுகளா பதிஞ்சு போகும்.”
அவர் இறுதியில் கூறிய வார்த்தைகள் உண்மை என்று உணர்வுபூர்வமாக மனதிற்குள் உணர்ந்தாள் யுவதி. அவர்கள் இடத்தைவிட்டு நகர்ந்ததும், சற்று நேரம் அங்கேயே அமர்ந்திருந்தவள், பின்னர் நினைவுவந்தவளாக அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசர உணர்வு உள்ளத்தில் பிறக்க சட்டென்று எழுந்தாள்.
‘தான் எதற்கு வந்தோம்? அம்மனை தரிசித்துவிட்டு செல்ல வேண்டும் என்றுதானே? அவர் பேசுவதைக் கேட்டுவிட்டு அப்படியே அமர்ந்துவிட்டோமே?’ என்று, சாவி கொடுத்த பொம்மை போல வேக வேகமாக நடந்து அறையை அடைந்தாள்.
குளித்து முடித்து தயாராகி கோவிலில் நடை சாத்துவதற்குள் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்று வேகமாக நடந்தாள். கோவிலின் நுழைவாயிலிலேயே ஒருவித தெய்வீக அமைதி அவளைச் சூழ்ந்தது. அதில் நிதானமாகி மெதுவாக உள்ளே சென்றாள்.
கோவிலின் பழமையும், சிற்பங்களின் அழகும் அவளை வியப்பில் ஆழ்த்தின. நீண்ட வரிசையில் நின்று, மெல்ல மெல்ல கருவறையை நோக்கி நகர்ந்தாள்.
கருவறையின் உள்ளே, அன்னை பகவதி அம்மன், ஒளிவீசும் திருமுகத்துடன், கருணை பொழியும் கண்களுடன், அழகிய ஆபரணங்கள் அணிந்து கனிவாக காட்சியளித்தாள். குறிப்பாக அம்மனின் மூக்குத்தி பேரொளியாய் ஜொலித்தது. அந்த ஒளியில் யுவதியின் மனம் அம்மன் புறம் பக்தியில் கரைந்தது. ‘அம்மா, நான் வாழ்ந்துட்டு இருக்கிற இந்த கேவலமான வாழ்க்கையை பத்தி உனக்கே தெரியும். அதிலிருந்து நீதான்ம்மா என்னை மீட்டெடுக்கணும். இனிமேலாவது ஒரு நல்ல வாழ்க்கையை நீதான்ம்மா எனக்கு அமைத்து கொடுக்கணும். அவ்வளவு தூரத்தில் இருந்து என்னை நல்லபடியா வாழவைனு, உன்கிட்ட நம்பிக்கையோட வேண்டுதல் வைக்க வந்திருக்கிறேன்.
நான் முற்பிறவியிலோ அல்லது இந்த பிறப்பிலோ என்ன பாவம் செய்தேனு தெரியலை. நான் செய்த பாவத்தை மன்னித்து, எனக்கு ஒரு நல்ல நிம்மதியான வாழ்க்கையை தயவுசெய்து கொடும்மா’ என்று, மனதார அம்மனிடம் வேண்டுதல் செய்தாள்.
மனதில் இருந்த அனைத்து பாரங்களும் நீங்கியது போன்ற நிம்மதியுடன் அம்மன் சன்னதியில் இருந்து நகர்ந்து கோவிலைவிட்டு வெளிவந்தாள். அவளின் முன்பு வழிமறைத்தாற் போல வந்து நின்றான் ஒருவன்.
அவளோ, எதார்த்தமாய் அவன் வந்து நிற்கிறான் என நினைத்துவிட்டு, அவனை கடக்க முயல, “ஹே பிராடுகாரி! உன்னை என்னால கண்டு பிடிக்க முடியாதுனு நினைச்சிட்டியா?” என்று கர்ஜித்தான்.
அவளோ, பயத்துடன் அவனை பார்த்தாள்.
“உன்னைத்தான் ஒரு மாசமா தேடிட்டு இருக்கேன். இப்ப… என்கிட்ட வசமா மாட்டுனியா?” என்று கடுமையான முகத்துடன் பற்களை கடித்துக்கொண்டு ரௌத்திரமாக அவன் பேச,
“சார்… நா…ன்” என்று பயத்துடனும் தடுமாற்றத்துடனும் பேச முயன்றாள்.
அவளை பேசவிடாது, அவளது கைகளை பிடித்து தரதரவென இழுத்து நடக்க ஆரம்பித்தான்.
“அய்யோ என் கையை விடுங்க சார். நீங்…க… நினைக்கிற…. ஹெல்ப் மீ…” என்று அலறினாள்.
“சத்தம் கித்தம் போட்ட… கார்ல கன்னு இருக்கு. எடுத்துட்டு வந்து உன்னை போட்டிருவேன். கம்முனு வா” என்று மிரட்டிவிட்டு, வேகமாக வந்து நின்ற தன்னுடைய வாகனத்தினுள் அமரும்படி கூறினான்.
அந்த வாகனத்தினுள் அவனது அடியாட்கள் போல நாலைந்து பேர் இருந்தார்கள். “சார்… நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையாக கேளுங்க.”
“இங்க பாரு கோவில்னு பார்க்கிறேன். இல்லைன்னா நீ பண்ற கேவலமான வேலைக்கு, என்ன அசிங்கமா பேச வைக்காத. ஒழுங்கா கார்ல ஏறு” என்று அவளது முடிக்கற்றையை கொத்தாக பிடித்து வாகனத்தினுள் தள்ளினான்.
“சார்… நான்…”
“ஹே ஏறுடி இல்லை இந்த இடத்திலே நீ சின்னாபின்னம்மாகிருவ,” என்று அவன் ஆட்களில் ஒருவன் மிரட்ட,
“அண்ணா நான் சொல்றதை நீங்களாவது கேளுங்க. நான் நீங்க…”
அவளை பேசவிடாது, சட்டென்று அவளது கன்னத்தில் அறைந்து, “ஏறுடி உள்ள” என்று கர்ஜித்தான் அவன்.
“சார் என் பேக் ரென்டல் ரூம்ல இருக்கு. அதுல என் ஒரிஜினல் சர்டிபிகேட்…”
“ஓஹோ பிராடு வேலை பண்றதுக்கான சர்டிபிகேட்டெல்லாம் வச்சிருக்கியா?” என்று நக்கலாக அவன் கேட்கவும்,
“இல்லைங்க சார். ப்ளீஸ் நான் சொல்றதை…”
மேற்கொண்டு அவளை பேசவிடாது வம்படியாக அவளை வாகனத்திற்குள் தள்ளிவிட்டு “அண்ணா! நீங்க நிம்மதியா போய் அன்னதானம் பண்ணிட்டு வாங்க. நாங்க இவளை பார்த்துக்கிறோம்” என்றான் அவனது அடியாட்களில் ஒருவன்.
யுவதியோ கண்கள் கலங்க, “நீங்க நினைக்கிற பொண்ணு நான் இல்லை. என்னை நீங்க தவறா…”
“ஹே மூடுடி… உன் மோசமான வேலை எங்களுக்கு தெரியாதா? பெரிய பத்தினி போல வேஷம் போடுற?”
அங்கிருந்த ஒவ்வொருவரின் வார்த்தையும் அவளின் மனதை கத்தியால் குத்தி கிழிப்பது போல வேதனையை கொடுக்க, வாய் பொத்தி அழுதாள்.
கோவிலின் வெளியில் சற்று தள்ளி ஏற்பாடு செய்திருந்த அன்னதான கூடத்திற்கு, “அம்மா!… என் அண்ணனை கொன்றவளை நான் கண்டுபிடிக்க எனக்கு ரொம்ப பெரிய உதவி பண்ணிட்ட. உன்னை நம்பி, உன் இடத்துக்கு வந்த, எனக்கு கை மேல பலன் கொடுத்திட்ட. என் மனசில உள்ள பாரத்தை நான் இறக்கி வைக்க நீ துணிபுரிஞ்சிட்ட. நீ செய்த உதவிக்கு என் இறுதி மூச்சு இருக்கிற வரை, நான் உனக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன்ம்மா. உன்னை என்னைக்கும் நான் மறக்க மாட்டேன். ரொம்ப நன்றி தாயே! நீ தான்ம்மா இனி என் குலத்தையும் விளங்க வைக்கணும். என் வம்ச தலைக்க ஒரு நல்ல பெண்ணை என் கண்ணில் காட்டணும். நான் குடும்பமா வாழ அருள் புரியணும். என் அண்ணனே எனக்கு மகனா வந்து பிறக்க என்னை ஆசிர்வதிக்க வேணும்’ என்று மனதார, கோவிலின் வெளியில் இருந்து அம்மனிடம் வேண்டிவிட்டு அன்னதானத்தை ஆரம்பித்து வைத்தான்.
ஐந்து வகை சாதங்களும் சர்க்கரை பொங்கல் மற்றும் தண்ணீர் பாட்டிலும் கொடுத்தார்கள்.
“அய்யா நீங்க நல்லாயிருக்கணும்” என்று வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் வாழ்த்திவிட்டு நகர, அவ்வேளையில் மனதிற்குள் நிம்மதியை உணர்ந்தான்.
அன்னதானத்தை நிறைவு செய்துவிட்டு, ‘ஊர்க்கு போனதும் இந்த ஸ்வேதாவை கொல்லாம விடக்கூடாது. கண்டிப்பா பொண்ணாச்சேன்னு தயவு தாட்சண்யம் பார்க்க கூடாது,’ என்று எண்ணிக்கொண்டே, வாகனத்தினுள் வந்தமர்ந்தவன், வாகனத்தை இயக்கும்படி கூறினான்.
“சார்… நான் நீங்க நினைக்கிற பொண்ணு இல்லை. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க சார்,” என்று அழுது கொண்டே அவள் கூற,
“ஹே வாயை மூடிடு இல்லை. போற வழியில உன்னை குத்திக் கொன்று போட்டுட்டு நாங்க பாட்டுக்கு போயிருவோம்,” என்று அவளை எச்சரித்தான்.
இந்த அத்தியாயம் பற்றிய உங்களது கருத்துகளை லைக் அண்ட் கமெண்ட்ஸில் தெரிவிக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்.
நன்றி
அன்புடன்
சாய்லஷ்மி.