யுகம்-7

பரிசுகளை எடுத்துக் கொண்டு வைஷ்ணவி வீட்டுக்குச் செல்ல முடியாது என்று அறிந்துக் கொண்டவன், அடுத்தநாள் வைஷ்ணவிக்கு கால் பண்ணி, “வைஷ்ணவி கொஞ்சம் வீட்டுக்கு பின்னால் இருக்கும் பார்க்குக்கு வரமுடியுமா?” என்று கேட்டான். அண்ணி என்ற முறையில் அவளுக்கு மரியாதை அளிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு.

‘இவன் எதுக்கு என்னை கூப்பிடுறான்?’ என்று மனதில் நினைத்தவள் அரை மணி நேரத்தில் பூங்காவை அடைந்தாள். வசீகரமாக சிரித்தபடி வந்தவன், “ஹாப்பி வாலன்டைன்ஸ் டே” என்றபடி  தன் கையிலிருந்த பூங்கொத்தையும் கார்டு மற்றும் சாக்லேட் அடங்கிய பையையும் அவளிடம் கொடுத்தான். பெற்றுக்கொண்டவள் மனம் படபடவென அடித்துக்கொண்டது. “இவன் நம்மள காதலிக்கிறானா?   நம்பமுடியவில்லையே…” என்று மூளையை போட்டு குடைந்தவள் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தபடி நின்றிருந்தாள்.

அவள் முகத்துக்கு நேரே சொடக்கு போட்டவன், “என்ன பகல் கனவா? சரி நான் கிளம்புறேன்” என்றபடி வீட்டை நோக்கி நடக்க தொடங்கினான். சொடக்கு போட்டதில் தன்னிலை அடைந்தவள்,

“அத்தான்”  என்றபடி பின்னால் ஓடினாள்.  திரும்பியவன் புருவத்தை தூக்கி “என்ன?” என்றான், அப்போது தான் அவனின் அழகு அவள் கண்ணில் பட்டது. மனதை  கட்டுப்படுத்தியவள் அவனை நோக்கி, “அத்தான் உங்க பீலிங்ஸ் புரியுது… ஆனால் படிக்கும் போது இதெல்லாம் சரிவராது. எனக்கும் சிவில் என்ஜினீயர் ஆகணும் என்று பெரிய கனவு எல்லாம் இருக்கு. நான் படிச்சு முடிஞ்சதும் வீட்டுக்கு வந்து பேசி சம்மதம் வாங்குங்க. இந்த காதல் கல்யாணம் எல்லாம் இப்போதைக்கு வேணாம்” என்றாள் தலையை குனிந்தபடி.

‘நான் ஏன் இவ வீட்ட போய் பேசணும்?’ என்று நினைத்தவனுக்கு பொறி தட்டியது. சற்று அதிர்ந்தவன் கோபம் கொப்பளிக்க, “உனக்கு அண்ணாவும் வேணும் தம்பியும் வேணுமா? என்ன கேரக்டர் டி நீ? உன் மூஞ்சிக்கு எங்கண்ணா கிடைச்சதுக்கே நீ பெரிய புண்ணியம் பண்ணி இருக்கணும். அதுக்குள்ள நான் வேற உனக்கு வேணுமா? ச்சே… உன்னை போய் நல்லவள் என்று நினைச்சேன் பாரு… உன் மனசு இவ்வளவு அழுக்கா? அந்த மடையன் கால் பண்ணி சொல்லுறான் நீ கவலைப்படுவியாம் உனக்கு வாலன்டைன்ஸ் டே கிபிட் வாங்கி கொடுக்கணும் என்று. ஆனா நீ எனக்கு ரூட் போடுறியா? உன் முகத்தை கண்ணாடியில் பார்த்துருக்கியா ? அது சரி உன்ன பார்க்க கண்ணாடி இனி செய்து தான் எடுக்கணும்…” என்று பரபரவென்று பொரிந்தவனை விறைத்து போய் பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. “இப்போ எதுக்குடி அழுகிற ? உன் நடிப்பை தொடங்கிட்டியா? உன்ன காதலித்ததுக்கு ஆதி தான் அழணும். உன்னை விட அந்த விபச்சாரிகள் எவ்வளவோ மேல்” என்றவனின் கன்னங்களை அவள் கைகள் பதம் பார்த்தது.

பொறுமையின் சிகரம் அவள். ஆனால் செய்யாத தப்புக்கு தன்னை கீழ்த்தரமாக குற்றம் சாட்டுவதை  அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவனின் வார்த்தைகளின் வீரியத்தில் தன் பொறுமையை தொலைத்தவள்,அவன் தந்த அனைத்து பரிசுகளையும் கீழே போட்டு விட்டு அவன் கன்னம் பழுக்க முழு பலத்துடன் அறைந்திருந்தாள்.

“ஏய்…” என்று தன் கையை உயர்த்தியவன் பொது இடம் என்பதால் தன்னை கட்டுப்படுத்தி இருந்தான். “ஆம்பிளையவே அடிக்கிறியா? உன்ன சும்மா விடமாட்டேன் டி” என்று கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளை கடித்து துப்பியவன், அங்கு நிற்காமல் விறு விறுவென வீட்டை நோக்கிச் சென்றுவிட்டான்.

அவன் முதுகை வெறித்தபடி அவ்விடத்திலேயே தோய்ந்து அமர்ந்தவளின் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.

அவள் அறைந்ததை பார்த்த சிலர், “இந்த பொண்ணுக்கு ரொம்ப திமிர் தான்… காதலை சொன்னால் இப்படி தானா எல்லோர் முன்னாடியும் ஆம்பிளையை கை நீட்டி  அறைவது? ஹீரோ போல இருக்கான். இவளுக்கு அவன் கிடைச்சதே பெரியவிஷயம். பிடிக்காட்டி பண்பாக சொல்லி இருக்கலாம் தானே” என்று அவள் காதுப்படவே பேசினர். மேலும் இங்கு இருந்தால் காட்சி பொருளாகி விடுவோம் என்ற பயத்தில் விறு விறுவென அழுதபடி வீடு நோக்கி நடந்தாள்.

வீட்டுக்கு வந்தவள் நேரே அறைக்குச் சென்று கட்டிலில் விழுந்து கதறி அழ தொடங்கினாள். அவள் கண்ணில் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது.

வீட்டுக்கு வந்த ஆத்ரேயனுக்கு  மனம் உலையாக கொதித்தது. கோபத்தை கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் குட்டி போட்ட பூனை போல் அங்கும் இங்கும் நடந்தான். அப்போதும்  கோபம் மட்டுப்படாமல் வீட்டிலேயே உள்ள ஜிம் அறைக்கு சென்றவன் கார்டியோவை ஆன் பண்ணி விட்டு உயர் வேகத்தில் ஓட தொடங்கினான்.

ஒரு மணி நேரமாக ஓடியவனால் கோபத்தை கொஞ்சம் கூட கட்டுப்படுத்த முடியாமல் போனது கண்ணாடியில் தெரிந்த அவன் முகத்தை பார்த்த காரணத்தினால்.

செக்க சிவந்த நிறமுடையவனின் ஷேவ் செய்யப்பட்ட கன்னத்தில் அவள் கைதடம் அழுத்தமாக பதிந்து இருந்தது.

அவன் போட்டிருந்த டிஷர்ட் முழுவதும் நனைந்து குளித்தது போல இருந்தான். கோபம் குறையாததால் குளியலறைக்கு சென்று கை இரண்டையும் சுவரில் குத்தியவாறு தலையை குனிந்தபடி அரை மணி நேரம் ஷவர் இன் கீழ் நின்றான். அவனின் முறுக்கேறிய தோள்பட்டையில் பட்டு தெறிக்கும் நீர்துளிகளை போல அவன் மனமும் தத்தளித்துக் கொண்டது.

கோபம் தணிந்ததும் வந்தவன் உடனடியாக தொலைபேசியை பார்த்தான். அதில் ஆதி இருபது அழைப்புகளை எடுத்திருந்தான். “இவனின் காதலால் நான்  கண்டவகிட்ட எல்லாம் அடி வாங்க வேண்டி கிடக்கு” என்று புலம்பியபடி ஆதிக்கு கால் பண்ணினான்.

மறு முனையில் ஆதி, “கிபிட் ஐ கொடுக்க போக வேணாம்டா

வர்ஷினி அவ அம்மாவோட பாட்டி வீட்டுக்கு காலையிலேயே போய்ட்டாளாம்… அத சொல்ல தான் கால் எடுத்தேன். எங்கடா போய் தொலைந்த? அம்மாக்கு எடுத்தால் அவரும் மாதர் சங்க கூட்டத்தில் இருக்கிறாராம். யாருக்கும் வீட்டில் இருக்கும் எண்ணமில்லையா?”  என்று வினவினான். “வர்ஷினி” என்ற அழைப்பில் ஆத்ரேயனின் இதயம் நின்று துடித்தது.   கலவையான உணர்வுகள் மனதில் தோன்றி அவனை ஆட்டி படைக்க தன் முட்டாள்தனத்தை அவனிடம் சொல்ல விரும்பாதவன், “ஓகே ஆதி  எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அப்புறம் கூப்பிடுறேன்” என்று தொலைபேசியை அணைத்து விட்டு தலையில் கை வைத்தபடி கொஞ்ச நேரம் உட்கார்ந்தான்.

“அவளும் தானே அடித்தாள். என்னை அவ வீட்டுக்கு பொண்ணு வேற கேட்க வர சொன்னா… அப்படி பட்டவளுக்கு நான் பேசிய பேச்சு தவறில்லை”  என்று அவனின் மூளை விவாதித்து அவனை நியாயப்படுத்திக் கொண்டது. தன்னை சமநிலைப்படுத்தியவன் தனது வேலைகளை தொடர்ந்தான்.

ஆனால் பதின் வயது இளம் பாவையினால் தன்னை நிலை கொள்ள செய்ய முடியவில்லை. கட்டிலில் படுத்தபடியே அழுது கரைந்தவள் விம்மியபடி எழுந்து குளிக்கச் சென்றாள். குளித்து முடித்து வெளியே வந்தவளுக்கு மனமும் உடலும் சேர்ந்து பாரமாக இருந்தது. அடிவயிற்றில் சுரீரென்ற வலி உடல் முழுதும் பரவ, “அம்மா…” என்று கத்தியபடி சுருண்டு விழுந்தாள்.

தாங்க முடியாத வயிற்றுவலியினால் நிலத்திலே புரண்ட படி துடி துடித்து போனாள். அவளின் கஷ்டகாலத்துக்கு  வேலைக்காரி கூட அன்று விடுப்பெடுத்து இருந்தாள்.

கீழே விழுந்தவள் கையை நீட்டி கட்டில் மேல் அடித்துக்கொண்டிருந்த  தொலைபேசியை எடுக்க போனவளால் அதனை  எடுக்க கூட முடியவில்லை. நிறைய தடவைகள் தொடர்பு கொண்டும் அவள் தொலைபேசியை எடுக்கவில்லை என்றதும் வர்ஷினிக்கும் கோகிலாவுக்கும் படபடப்பானது. மலர்வேந்தனும் கார்த்திகேயனும் கூட தொழில் விஷயமாக வெளியிடம் சென்றிருந்தனர்.

ஒரு மணி நேரத்துக்கு மேல் முயன்றவர்கள் அவள் கால் ரீஸிவ் பண்ணவில்லை   என்றதும் அவர்களின் பயம் எகிற தொடங்கியது. கோகிலாவுக்கு தலை சுற்றுவது போலிருந்தது.  “அண்ணிக்கு கால் எடு”  என்றவரின் கண்களில் பயம் அப்பட்டமாக தெரிந்தது. “காமாட்சி அம்மாளே, என் பொண்ணுக்கு எதுவும் ஆக கூடாது” என்று கடவுளை கண்ணீருடன் வேண்ட தொடங்கினார். கோகிலாவும் வெளியிடத்தில் இருப்பதாக கேள்விப்பட, “எங்க போயிருப்பா ?” என்று பதற தொடங்கிவிட்டார் கோகிலா.  “நீங்க அழாதீங்கம்மா” என்ற வர்ஷினி வேறு வழி தெரியாமல் ஆத்ரேயனுக்கு அழைத்தாள். தன் தாயை ஆறுதல் படுத்தியவளுக்கும் கண்ணீர் நிக்காமல் வழிந்துக் கொண்டிருந்தது.

“ஆத்ரேயன், வைஷ்ணவிக்கு ஒரு மணி நேரமாக கால் எடுக்கிறேன் ரீஸிவ் பண்ண மாட்டிங்குறா. வீட்டில் தனியாக தான் இருக்கிறாள். கொஞ்சம் போய் பார்க்க முடியுமா?” என்று தயக்கத்துடன் கேட்டாள். எல்லாவற்றையும் கேட்ட ஆத்ரேயனுக்கு நெஞ்சம் பட படவென அடித்துக் கொண்டது. தன்னால் ஏதும் தற்கொலை முயற்சி பண்ணி இருப்பாளோ என்று மனம் தறி கெட்டு யோசிக்க ஆரம்பித்தது. 

“நான் பாத்துக்கிறேன், நீங்க பயப்படவேணாம்” என்றபடி அணிந்திருந்த டிஷர்ட் மற்றும்  காற்சட்டையுடன் வைஷ்ணவி   வீட்டை நோக்கி ஓடினான்.

வைஷ்ணவியின் அறை தெரியாததால், “வைஷ்ணவி வைஷ்ணவி” என்று அழைத்தபடி அனைத்து அறையிலும் தேடியவன், கடைசியில் அவள் அறையை கண்டுபிடித்து உள்ளே நுழைந்தான். அங்கு அவன் கண்ட காட்சி அவனின் இரும்பு மனதையும் அசைத்து பார்த்தது. 

ரத்த வெள்ளத்தில் வயிற்றை பொத்தியபடி அரை மயக்கத்தில் விழுந்து கிடந்தாள் வைஷ்ணவி . அவன் மூளை வேலை செய்ய மறுத்தது. அருகில் ஓடி வந்தவன், அவள் சுருண்டு விழுந்ததினால் அவிழ்ந்த துண்டை அவள் கண்ணை பார்த்தபடியே அவள்  மார்பில் கட்டிவிட்டான். ‘எந்த  பெண்ணுக்கும் இந்த  நிலை வரகூடாது’ என்று மனதில் நினைத்தவளின் கண்களில் “என்னை காப்பாற்று” என்ற இறைஞ்சலை ஆத்ரேயன்  உணர்ந்தான்.

அவன் முகத்தை பார்த்தபடியே கண்ணை மூடி சுய நினைவின்றி போனாள். ”வைஷ்ணவி வைஷ்ணவி” என்று கன்னத்தில் தட்டினான்.  அவள் எழும்பவில்லை ஆனால் மூச்சு இருந்தது. நிறைய ரத்த இழப்பு ஏற்பட்டதால் அவள் மயங்கி இருந்தாள். எங்கிருந்து ரத்தம் வருகிறது என்று  தெரியாதளவுக்கு இடம் முழுதும் இரத்தத்தால் நிரம்பி இருந்தது.

என்ன செய்வது என்று கொஞ்ச நேரம் குழம்பியவன் தனது டி ஷர்ட் ஐ கழட்டி அவளுக்கு அணிவித்து விட்டு அவளை தூக்கிக் கொண்டு மாடியிலிருந்து இறங்கினான். அவளின் 70kg எடையை கூட உணரமுடியதளவுக்கு ஸ்தம்பித்து போய் இருந்தான். அவளை காப்பாற்ற வேண்டுமென்பதே அவனின் முதல் எண்ணமாக இருந்தது. அவள் கண்கள் அவனிடம் தன்னை காப்பாற்ற சொல்லி இறைஞ்சியது மட்டுமே அவன் நினைவிலிருந்தது. அவன் யார் என்பதை மறந்தான். சற்று முன் நடந்த சண்டைகளை மறந்தான்.

மாலதியும் கூட்டத்தில் இருக்க மனமற்று வைஷ்ணவியை பார்க்க வீட்டுக்கு விரைந்திருந்தார். வைஷ்ணவியின் வீட்டு வாசலில் வெற்று மார்புடன் வைஷ்ணவியை தூக்கியவாறு இருவரின் உடல் முழுதும் ரத்தம் வழிய நடந்து வந்த ஆத்ரேயனை பார்த்து ஒரு கணம் அதிர்ந்தவர், அவனருகில் ஓடி வந்து, “என்னாச்சுடா?” என்றார்.

“எனக்கும் தெரியலம்மா பயமா இருக்கும்மா ஹாஸ்பிடல்  போவோம் வாங்க” என்று கண்களில் வலியுடன்  கூறியவன் அவருக்கும் புதியவனே. வாழ்க்கையில் அவன் முதல் முறை கலங்கி கண்டிருக்கிறார். வைஷ்ணவியை பார்த்தவர் அவள் தனது மகனின் சட்டையை அணிந்திருப்பதை நோட்டமிட்டார். பின்  வைஷ்ணவி கட்டியிருந்த ரத்தம் தோய்ந்த வெள்ளை துண்டு அவருக்கு நடந்ததை பறைசாற்றியது. பெண்ணான அவருக்கு புரிந்து போனது. “ஓவர் ப்ளீடிங் போல அதான் மயங்கி இருக்கிறாள். பயப்பட ஒன்றுமில்லை வா வந்து வண்டியிலேற்று” என்று மகனை சமாதானம் செய்தவாறு  முன்னோக்கி தனது வீட்டுக்குச் சென்றவருக்கு இந்த ரத்தப்போக்கு சாதாரணமான விஷயமல்ல என்று நன்கு புரிந்தது. கையில் ஒரு டி ஷர்ட் உடன் வெளியில் வந்தவர், “இதை போட்டுக்கோ” என்றார்.  டி ஷர்ட் ஐ போட்டவன் அவள் தலையை தூக்கி மடியில் வைத்த படி பின்னால் அமர்ந்து அவளை இறுக அணைத்திருந்தான். அந்த அணைப்பு, “என்னை விட்டுச் செல்ல உன்னை விடமாட்டேன்” என்பது போலிருந்தது. அவனின் செயல்களனைத்தும் மாலதிக்கே விசித்திரமாக தோன்றியது.

ஹாஸ்பிடலை நோக்கி வண்டியை செலுத்தினார். அங்கே சென்றதும் அவளுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. வெளியே வந்த டாக்டர் நிறைய ரத்த இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் உடனடியாக O+ ரத்தம் அவசரமாக தேவை  என்றார். ஆத்ரேயன் பதறியடித்தபடி, “என்னுடையது O+ தான் டாக்டர். நான் தர்றேன்” என்று  சொல்லியபடி டாக்டர் காட்டிய வழியில் அவசரமாக இரத்த தான பிரிவுக்குச் சென்றவனை  பார்த்த மாலதிக்கு தன் கண்ணையே நம்ப முடியவில்லை.

அனைத்து சிகிச்சைகள் முடியும் வரையும் அவன் தன் அன்னையின் அருகில் ரத்த கறையுடன் அமர்ந்திருந்தான். எதிலும் சுத்தம் பார்க்கும் மகன் இவ்வாறு ரத்த கரையுடன் அமர்ந்திருப்பது மாலதிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சிகிச்சை முடிந்து வெளியில் வந்த வைத்தியர் அதிக உடல் எடை காரணமாக fibroid கட்டிகள் கர்ப்பப்பையில் இருப்பதாகவும் அதனால் தான் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாகவும், கொஞ்சம் தாமதித்திருந்தால் கூட ரத்த போக்கால் உயிருக்கு ஆபத்து ஏற்றப்பட்டிருக்கும் என்றவர், அதனால் தான் தாங்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் கூறினார். கட்டிகளை கரைக்க சிகிச்சை செய்ய வேண்டும் என்றவர்  மேலும் வைஷ்ணவி கண்டிப்பாக உடல் எடையை குறைக்க வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கினார். அவள் உடல்நிலை சீராகும் வரைக்கும்  வைத்தியசாலையில் இருக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

அனைத்தையும் வெளியில் சோபாவில் குனிந்து இருந்தபடியே இரு கைகளை முழங்காலில் முட்டு  கொடுத்தவாறு கேட்டவனுக்கு கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடியது. அக்கா தங்கையுடன் பிறக்காததால் அவனால் இந்த சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வாழ்க்கையில் சந்தோஷத்தை மட்டும் பார்த்து வளர்ந்தவனுக்கு இது தான் அவன் சந்தித்த முதல் நெகிழ்ச்சியான சம்பவம். அவனின் இளகிய இதயத்தை வெளியில் கொண்டு வந்திருந்தது. மகனின் மாற்றம் மனதுக்கு நிம்மதியளித்தது. ஆனால் அவருக்கு தெரியவில்லை இது தற்காலிகமானது தான் என்று.

மன ஆறுதலுக்காக தாயின் மடியில் படுத்தவன் அப்படியே உறங்கி போனான்.

தூங்கி எழும்பியவன் நடந்தது அனைத்தையும் மீட்டி பார்த்தான். நானா இப்படி நடந்தேன்? என்று அவனாலேயே நம்ப முடியவில்லை. தலையை கோதி, ‘இவ்வளவு நேரமும் இந்த ரத்த கரையுடனே இருந்திருக்கிறேனே!’ என்று மனதுக்குள் யோசித்தவனுக்கு தாயை பார்க்க சங்கடமாக இருந்தது.

“அம்மா நான் போய் முதலில் குளிக்கணும் கார் கீ தாங்க” என்று கேட்டதும் கார் கீ கொடுத்தார். போக முற்பட்டவன் திரும்பி வந்து, “நான் இப்படி நடந்துகிட்டத யார் கிட்டயும் சொல்லவேணாம், நீங்களே கொண்டு வந்து அட்மிட் பண்ணியதா சொல்லுங்க” என்று முகத்தை கடினமாக வைத்துக் கொண்டு உரைத்தான். ‘இப்போ தானேடா நல்லா இருந்த? அவளை நான் தூக்கி வந்தேன் என்று சொன்னா கூட யாரும் நம்பமாட்டாங்கடா’ என்று மனதில் நினைத்தவாறே அவனின் இறுகிய முகத்தை நோக்கி அதிர்ச்சியுடன் “சரி” என்றார்.

வீட்டுக்கு வந்தவன் ரத்த கறை  போக நன்கு குளித்தான். அந்த சிறிய நேரத்துக்குள் தனக்கு என்ன ஆனது அவனுக்கும் புரியவில்லை. அவனின் இந்த இயல்பு அவனுக்கே வியப்பாக இருந்தது. மனிதாபிமானத்தில் தான் அவளை காப்பாற்றினான் என்று மனதை சமாதானப்படுத்தினாலும் ஏன் அவளை அணைத்துக்கொண்டு காரில் இருந்தான் என்று அவனுக்கு புரியவில்லை. அனைத்தையும் நினைக்க அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தது.

மாலதி வைத்தியசாலையிலிருந்து  கோகிலாவுக்கும் மலர்வேந்தனுக்கும் தான் கொண்டு வந்து அனுமதித்ததாக கூறியவர் மறந்தும் மகன் பற்றி வாய் திறக்கவில்லை.

வைத்தியசாலையில் கண்  விழித்த வைஷ்ணவிக்கு,   நினைவு முழுதும் ஆத்ரேயனே இருந்தான். ஏற்கனவே அவன் மேல் வெறுப்பில் இருந்தவளுக்கு அவன் முன் இப்படி ஒரு நிலையில் தான்  இருக்க வேண்டி வந்துவிட்டதே என்று மனம் பாரமாகவே இருந்தது.

அவள் நிலைமை கேள்விப்பட்டதும் அனைவரும் வைத்தியசாலைக்கு வந்திருந்தனர் ஆத்ரேயனை தவிர. ஆத்ரேயனிடம் வர்ஷினி சொல்லியும் அவன்  செல்லவில்லை என்று  கோகிலா மூலமாக அறிந்தவர், ஒரு உயிரை காப்பாற்றுமளவுக்கு தன் மகன் மனிதாபிமானம் இல்லாதவனா? மாலதி வரும் வரை என்ன செய்துக் கொண்டிருந்தான்? என்ற பல கேள்விகள் அவர் மனதில் உதித்தன. ஆத்ரேயனின் செயல் மலர்வேந்தனுக்கும் உவப்பாக இல்லை. ஆத்ரேயனை நினைத்தவருக்கு மனதில் வெறுமை குடிகொண்டது. ‘இவ்வளவு  திமிர் அவனுக்கு ஆகாது’  என்று மனதில் நினைத்துக் கொண்டார். வர்ஷினியும் ஆதிக்கு எடுத்து ஆத்ரேயனின் செயலை பற்றி சொல்லி பொங்கிவிட்டாள்.

ஆத்ரேயனை தொடர்பு கொண்ட ஆதி நடந்ததை விசாரிக்க, “என்னிடம் இதை பற்றி பேசாதே” என்று கூறி தொலைபேசியை அணைத்திருந்தான்.  மனம் பொறுக்காத கார்த்திகேயன் அவனிடம் விசாரித்தே ஆகவேண்டும் என்று முடிவெடுத்து ஆத்ரேயனுக்கு அழைத்தவர், “நீ உடனே ஹாஸ்பிடலுக்கு வா” என்று கூறினார்.

அவரின் குரலிலிருந்த சினம் புரிந்தவன், “போய் தான் பார்ப்போமே” என்று முடிவெடுத்து வைத்தியசாலையை நோக்கிச் சென்றான் அஞ்சா நெஞ்சத்துடன்.

வைத்தியசாலையை அடைந்தவன் வைஷ்ணவியை அட்மிட் பண்ணி இருந்த அறைக்குச் செல்ல சங்கடப்பட்டான். கொஞ்சம் தைரியத்தை ஏற்றுக்கொண்டு உள்ளே நுழைந்தவன் மறந்தும் அவள் புறம் திரும்பவில்லை.  அவ்வளவு நேரமும் நினைவுக்கு வராதவையெல்லாம்  அப்பொழுது தான் நினைவுக்கு வந்தன. கஷ்டப்பட்டு மனதை அடக்கியவன், சிங்கம் போல் சிலிர்த்துக்கொண்டிருந்த கார்த்திகேயனை நோக்கி, “என்ன விஷயம்?” என்று கேட்டான் நெஞ்சை நிமிர்த்தியபடி.

எதற்கும் அசராத ஆத்ரேயனை பார்த்து அனைவரும் பிரமித்தனர் வைஷ்ணவி உட்பட.  அவன் தன்புறம் திரும்பாதது கொஞ்சம் நிம்மதியளிக்க நடப்பதை கட்டிலில் சாய்ந்து இருந்தபடி வேடிக்கை பார்க்க தொடங்கினாள் படபடப்பான மனதுடன்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top