யுகம்-10

அவள் கல்லூரிக்குச் செல்லும் நாளும் வந்தது. எல்லோரையும் திரும்ப திரும்ப அணைத்து ஒப்பாரி வைத்து ஒரு வழி பண்ணிவிட்டாள். ‘இவ எப்போ கிளம்புவா?’ என்று கோகிலாவே நினைக்குமளவுக்கு அவளின் ஒப்பாரி பாடாய் படுத்தியது. ஆத்ரேயன் இருக்கும் தைரியத்தில் யாரும் அவளை பற்றி பெரிதாக கவலைப்படவில்லை.

தந்தையுடன் கல்லூரியை நோக்கி காரில் புறப்பட்டவளின் கண்கள் அழுதழுது வீங்கி இருந்தது.அங்கே கல்லூரி வெறிச்சோடி காணப்பட்டது.  ரெஜிஸ்ட்ரேஷன் ஐ முடித்து விட்டு, வந்தவர்களிடம் நிர்வாகி இன்று கல்லூரிகளுக்கிடையில் பாஸ்கெட் பால் டோர்னமெண்ட் நடப்பதாக கூறியவர் பெண்கள் விடுதிக்குச் செல்லுமாறு அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். நாளை முதல் வகுப்புகள் நடைபெறும் எனவும் கூறினார்.

அவளுக்கோ இதயம் முழுதும் படபடப்பாகவே இருந்தது. விடுதியில் சந்தியாவுக்கும் வைஷ்ணவிக்கும் ஒரே அறை  கிடைத்தது. மலர்வேந்தன் சென்றதும் தனிமையில் அழுதவளிடம் வந்த சந்தியா,

“ஏன் இதுக்கெல்லாம் அழுகிறாய்? ஜஸ்ட் என்ஜோய் யுவர் டேஸ் யா… இன்று டோர்னமெண்ட் நடக்குதாம் போய் பார்ப்போமா?” என்று கேட்டாள்.

அவளுக்கும் வீட்டு நினைவுகளை மறக்க ஒரு  மாற்றம் தேவைப்பட, “சரி” என்றவள் குளித்து முடித்து விட்டு அங்குச் சென்றனர். அங்கு பைனல் மேட்ச் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அங்கே சிவப்பு நிறத்தால் கேப்டன் என்று முதலாம் இலக்கம் பொறிக்கப்பட்ட வெள்ளை ஆர்ம்கட் உம் வெள்ளை ஷார்ட்ஸ் உம் அணிந்து பரந்து விரிந்த மார்புடனும் உறுதியான தோள்பட்டையுடனும் தலையில் உள்ள கேசம் அங்குமிங்கும் ஆடிக் கொண்டிருக்க, “கம் ஆன் ஆகாஷ் ஹர்ரி அப்” என்று ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருந்தான் ஆத்ரேயன். ஆகாஷிடமிருந்து பந்தை பாய்ந்து பிடித்தவன் தரையில் பந்தை அடித்தபடி, தன்னை சுற்றி வந்தவர்களுக்கு வெட்டு காட்டி கூடையை நோக்கி ஓடியவன், சர்வ சாதாரணமாக பந்தை கூடையில் போட்டு விட்டு சிரித்தபடி தலையை கோதிக்கொண்டு நடந்தான். அந்நேரம் பார்த்து நடுவர் விசிலடித்து நேரம் முடிந்துவிட்டது என்று அறிவிக்க… ஆத்ரேயனை நோக்கி ஓடி வந்த மற்றைய வீரர்கள் அவனை கட்டியணைத்து அவன் மேல் புரண்டனர்.

மேடையிலிருந்த பெண்கள், “ஐ லவ் யூ ஆத்ரேயன்” என்று ஒன்று சேர கத்தினார்கள். அனைவரையும் பார்த்து சிரித்தவன் அவர்களை நோக்கி ஒரு பறக்கும் முத்தத்தை அளித்து விட்டு உடை மாற்றும் அறைக்குச் சென்றான். ‘இதுக்கு மட்டும் குறைச்சலில்லை’ என்று மனசுக்குள் வைஷ்ணவி நினைத்துக் கொண்டிருக்க “வாவ்… என்னால முடியலடி, அவரை பார்க்கும் போது என்னவோ பண்ணுது” என்று கூறிய சந்தியாவை உணர்ச்சிகளை துடைத்த பார்வை ஒன்றை பார்த்தாள்.

அவன் விளையாடும் ஆக்ரோஷத்தை பார்த்து அதிர்ந்து நின்றவள், அவனுக்கு கல்லூரியில் இருக்கும் வரவேற்பை பார்த்து மலைத்து போனாள்.

‘இவ்வளவு அழகான பெண்களில் கண்டிப்பாக யாரையும் காதலிப்பான்’ என்று  நினைக்கும் போது மனசில் ஒரு வெறுமை அவளுக்கு ஏற்பட்டது. அனைத்தையும் மனதிலிருந்து ஒதுக்கி வைத்தவள் நடப்பவைகளை கவனிக்க தொடங்கினாள்.

கம்பீரமாக நடந்து வந்து ட்ரோபியை பெற்று முத்தமிட்டவனின் ஆளுமையில் அவளும் சொக்கி தான் போனாள். திடீரென்று அவனின் கொடுமைகள் நினைவு வர அவ்வளவு நேரமும் சூழ்ந்திருந்த மாயவலை அறுந்து விழுந்தது. தலையை உலுக்கிக்   கொண்டவள் அவன் மீது அனல் பறக்கும் பார்வையை நிலைக்க விட்டாள். எல்லாம் முடிந்து விடுதிக்கு வந்தவளால் ஒழுங்காக உறங்க முடியவில்லை… நாளைய நாளை நினைத்து பட படவென்று அடித்துக் கொண்டது.

பக்கத்தில் படுத்திருந்த சந்தியா ஆத்ரேயனை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தாள். ‘பேசாம ரூம் மாறுவோமா?’ என்று கூட வைஷ்ணவி யோசித்தாள். “நாளைக்கு அவரை பார்க்கணும்” என்று சந்தியா கூற, ‘நான் அவனை பார்க்கவே கூடாது’ என்று வைஷ்ணவி நினைத்துக் கொண்டாள்.

காலையில் 6 மணிக்கு கதவு தட்டப்பட வைஷ்ணவி எழும்பி திறந்தாள். ஏழு மணிக்கு காலேஜ் கிரௌண்ட் க்கு யூனியன் லீடர் இன் மீட்டிங்குக்கு அனைத்து முதல் வருட மாணவர்களையும் வர சொல்லி அழைப்பு வந்தது. சந்தியாவை எழுப்பியவள் அவசர அவசரமாக குளித்து வெள்ளை நிற சுடிதார் அணிந்து ஷால் போட்டு கிரௌண்ட் க்கு புறப்பட்டாள்.

கிரௌண்ட் இல் காலை ஜாக்கிங்கை முடித்துவிட்டு ட்ராக் சூட் உடன் நண்பர்களுடன் சிரித்தபடி உரையாடிக் கொண்டிருந்த ஆத்ரேயனை பார்த்தவளின் மூச்சு நின்றது. ‘இவன் எங்க இங்க?’ என்று யோசித்தவள்,நேற்று அந்த நெருக்கடியில் தன்னை அடையாளம் காணாதவன் இன்று எப்படியும் அடையாளம் கண்டு விடுவான் என்று பயந்து, என்ன செய்வது என்று தெரியாமல் ஷாலினால் முகத்தை மூடியபடி அவன் நின்ற இடத்துக்கு எதிர்பக்கம்  தலையை மட்டும் திருப்பியபடி கூட்டம் நடைபெறவிருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.

“ஐ நம்மாள்” என்று திரும்பிய சந்தியா, ஷாலினால் முகம் முழுதும் மூடி இருந்த வைஷ்ணவியை பார்த்து  அதிர்ந்தவள், “என்னடி வேஷமிது?” என்று கேட்டாள்.  “வாயை  மூடிட்டு வாடி” என்று அவளுக்கு திட்டு விழுந்தது. பேசிக் கொண்டிருந்த ஆத்ரேயனுக்கும் அவளின் செய்கை வித்தியாசமாக இருந்தது. ‘யாரும் இப்படி முகத்தை மூடி ஷால் போடுவார்களா?’ என்று யோசித்தவன், “ஹலோ ஒய்ட் சுடி” என்றழைத்தான்.

“உன்ன தான்டி கூப்பிடுறாங்க.” என்ற சந்தியாவிடம், “சும்மா இருடி” என்றவள் விறுவிறுவென நடந்து போனாள். கிட்டத்தட்ட ஓடி போனாள் என்றே கூறலாம்.

அவளின் செய்கை வித்தியாசமாக பட முகத்தை சுளித்து பார்த்தவன், “யாரடா மச்சி அது?” என்று நண்பர்களிடம் கேட்டான்.  “யாருக்குடா தெரியும்…நம்ம கிட்ட நல்லா படப்போறா என்று மட்டும் தெரியுது. அவளும் மீட்டிங்குக்கு தான் வந்திருக்கா. அங்க வச்சு பார்த்துக்கலாம் வா…” என்று அவ்விடத்தை நோக்கி நடந்தனர்.

அங்கு போனதும் ஷாலை விலக்கி, “அப்பாடா” என்று மூச்சு விட்டவளை சந்தியா விசித்திரமாக பார்த்தாள். “என்னடி பார்க்குற? கண்ண நோண்டிடுவேன் அங்க பாரு” என்று அதட்டினாள் தன் விசித்திரமான நடவடிக்கையை மறைப்பதற்காக. சந்தியாவும் மேலே ஒன்றும் கேட்காமல் மேடையை நோக்கி நின்றாள்.

நண்பர்களுடன் பேசி சிரித்தபடி மேடையேறிய ஆத்ரேயன், “ஹாய் ஐ அம் யுவர் யூனியன் லீடர் ஆத்ரேயன் பைனல் இயர் சிவில் இன்ஜினியரிங்” என்று தன்னை கம்பீரமாக அறிமுகப்படுத்திக் கொண்டான். ட்ராக் சூட் இல் அவன் கம்பீரத்தையும் அழகையும் பார்த்து எல்லா பெண்களும் சொக்கி நிக்க எல்லா ஆண்களும் அவனை தமது ரோல் மாடல் ஆக கற்பனை செய்துக் கொண்டனர். வைஷ்ணவியோ அதிர்ச்சியுடன் உடலை பாதியாக வளைத்து  முன்னிருந்த மாணவர்களுக்குள் ஒளிந்துக் கொண்டவள்,  ‘ஐயோ இவனா யூனியன் லீடர் ? யாருமே சொல்லவில்லையே… இப்போ என்ன பண்றது?’ என்று யோசித்து முகத்தை பழையபடி ஷாலினால் மூடிக் கொண்டாள் .

தங்கள் கல்லூரியை பற்றி விவரித்தவன், எல்லாருக்கும் ஊக்கமளித்து விட்டு ராகிங் என்ற பெயரில் ஏதும் துன்புறுத்தல்கள் நேர்ந்தால் தன்னிடம் கூறும்படி கூறி தன் தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்தான். அவன் ராகிங் பண்ணமாட்டான் ஆனால் நண்பர்களின் பகிடிவதைக்கு ஒத்துழைப்பான். பகிடிவதை உடலியல் துன்புறுத்தலாக  எல்லை மீறுவதை பொறுத்துக் கொள்ளவும் மாட்டான். பேசிக் கொண்டிருந்தவன் கூட்டத்தில் ஒருவர் மட்டும் அங்கும் இங்கும் முன்னால் இருக்கும் மாணவிக்கு பின்னால் ஷால் மூடிய தலையை மறைப்பதை கண்டுக் கொண்டான். நெற்றியை சுருக்கி அங்கு நோட்டமிட்டவன் ‘இது அந்த ஒய்ட் சுடி’ என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்க, அவனின் பார்வை சென்ற திசையை பார்த்த அவனின் நண்பன், “ஏய்” என்றபடி அவளை நோக்கி  வந்தான். நண்பனின் முன்னால் நடந்தவன் அவனை கை நீட்டி தடுத்து விட்டு தான் செல்வதாக கண்ணால் சைகை காட்டியவன்   அழுத்தமான காலடிகளுடன் கீழே இறங்கி வைஷ்ணவியை நோக்கி நடந்தான்.

அவனின் பார்வையை உணர்ந்த மாணவர்கள் அவனுக்கு வழி விட்டு பிரிந்துச் செல்ல  வைஷ்ணவி நடுவில் தனியாக வெள்ளை ஷாலால் முகத்தை மூடி பேய் போல நின்றாள்.

அவளின் நிலை ஆத்ரேயனுக்கு சிரிப்பை அளித்தாலும் சிரிப்பை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டான். ‘யாரிந்த லூசு ?’ என்று மனதால் அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

பேச்சு நின்றதை  அவதானித்தவள், மாணவர்களும் விலகிச் செல்ல என்ன நடக்கிறது என்று ஷாலின் உள்ளிருந்து பார்த்தவளுக்கு மங்கலாக அவன் தன்னை நோக்கி வருவது தெரிந்தது. ‘ஐயோ இந்த நெட்டையன் நம்மள நோக்கி வர்றானே. சும்மா இருந்திருந்தா கூட இவ்வளவு அவமானம் வந்திருக்காது… இப்போ எல்லார் முன்னாடியும் ச்சே… இப்போ என்ன செய்வேன்?’ என்று கையை பிசைந்த படி குனிந்து நின்றாள்.

ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் அவஸ்தைப்பட்டாள். அருகில் வந்தவன் கையை கட்டி நின்றபடி அவளை கூர்ந்து பார்த்தான். பின்பு பக்கத்தில் நின்ற சந்தியாவிடம் ஷாலை எடுத்து தரும்படி சைகை செய்தான். அவளும் வைஷ்ணவி அருகில் வந்து ஷாலை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். ஷாலை எடுக்கும் போது கண்களை மூடியபடி குனிந்து நின்ற வைஷ்ணவியை பார்த்து  அதிர்ச்சியடைந்தவன் அதனை வெளியில்  காட்டாமல் அவள் முன் சொடக்கிட்டான். இனியும்  குனிந்திருந்தால் இன்னும் மானம் போய்விடும் என்றவள் பயத்துடன் கண்ணை திறந்து அவனை நோக்கினாள்.

ஆரம்பத்தில் அதிர்ச்சி அடைந்தாலும் அவளின் கோமாளி கூத்தினால் வந்த எரிச்சலை கஷ்டப்பட்டு அடக்கியவாறு, “உன் பெயர் என்ன?” என்று சிம்ம குரலில் வினவினான். ‘தெரியாதாக்கும்’ என்று மனதில் நினைத்தவள், “வைஷ்ணவி மலர்வேந்தன்” என்றாள். ஷாலை அவளிடம் நீட்டியவன், “இதென்ன கோமாளி கூத்து? அட்டென்ஷன் சீக் பண்றியா?” என்றான்  சினம் கலந்த குரலில். ஷாலை பெற்றுக்கொண்டவள், அவன் கேட்ட கேள்வியில் வாயை பிளந்து அவனை பார்த்தாள். மனதுக்குள், ‘தொடங்கிட்டான் அவன் வேலையை…இனி நான் ஏதோ அவன் பின்னால் திரியிற போல பில்டப் பண்ண போறான். கடவுளே காப்பாத்துப்பா’ என்று  கடவுளை வேண்டினாள்.

என்ன சொல்வதென்று தெரியாமல் அவன் கூர்மையான பார்வையை தவிர்ப்பதற்காகவே தலையை குனிந்துக் கொண்டாள். அவள் மீது அனல் பார்வையை வீசியவன் விறு விறுவென மேடையை நோக்கிச் சென்று அனைவரிடமும் எல்லாவற்றையும் விளங்கப்படுத்தியவன் கல்லூரிக்குச் செல்லுமாறு பணித்து விட்டு உடை மாற்றுவதற்காக தனது விடுதிக்கு நண்பர்களுடன் சென்றான்.

எல்லாம் முடிந்ததும் அனைவருக்கும் வைஷ்ணவி மேல் ஒரு தவறான பார்வை விழுந்தது. அவள் ஏதோ ஆத்ரேயன் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக அப்படி நடந்ததாக அனைவரும் நினைத்துக் கொண்டனர். ஆத்ரேயனின் பேச்சு அப்படி இருந்ததால் அவர்களும் அவ்வாறே நினைத்துக் கொண்டனர். சந்தியா மட்டும் அவளுடன் கூட இருந்தாள். அனைவரின் பார்வைகளும் அவளை தூற்ற அவள் தனக்குள் ஒடுங்கி போனாள். “இவ மூஞ்சுக்கு ஆத்ரேயன் சீனியர் கேக்குதா?” என்று அவள் காது படவே பேசிக் கொண்டனர்.  அவமானத்தால் நிலை குலைந்து போனவளுக்கு சந்தியா மட்டுமே ஆறுதல். ஒரு நாள் பழகி இருந்தாலும் அவளின் உண்மையான நட்பில் சொக்கி தான் போனாள். சந்தியாவுக்கு வைஷ்ணவியை பார்க்க பரிதாபமாக இருந்தது. அவள் விசித்திரமாக நடந்துக் கொண்டது ஆத்ரேயன் சொன்ன காரணத்துக்காக மட்டும் இல்லை என நன்கு புரிந்தது.

வகுப்புக்கு போக முதல் பசியேற்பட சாப்பிடுவதற்காக கேன்டீனுக்கு வந்தனர். சாண்ட்விச் ஒன்றை வாங்கிய வைஷ்ணவிக்கு அது வயிற்றுக்குள் இறங்கவில்லை. தான் செய்த கோமாளி தனத்தால் முதல் நாளே தேடிக் கொண்ட அவமானத்தை நினைத்து எங்காவது ஓடி போவோமா என்று கூட யோசித்தாள். சல சலப்பாக இருந்த கான்டீன் அமைதியடைந்த அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். கருப்பு நிற டி ஷர்ட் உம் கருப்பு நிற டேனிம் உம் அணிந்து  ஷேவ் செய்து சில நாட்களில் அரும்பி இருந்த தாடி மீசையுடன் கம்பீரமாக நடந்து வந்தான் ஆத்ரேயன். கருப்பு நிறம் அவனின் நிறத்தை மேலும் கூட்டி காட்டியது. ‘இவனெங்கே இங்கே?’ என்று யோசித்தவள், அவளை  நோக்கிய அவனின் கேலி புன்னகையால்   அவமானமடைந்தவளுக்கு  அப்படியே நிலத்துக்குள் போய் விடலாம் போல இருந்தது

நண்பர்களுடன் போய் மேசையில் அமர்ந்தவன் வாங்கி வந்த இட்லியை சாப்பிட  தொடங்கினான். நண்பர்கள்  அவனின் அனுமதி பெற்று தங்கள் ராகிங் விளையாட்டை ஆரம்பித்து வைத்தனர். அதில் முதலில் அகப்பட்டது வைஷ்ணவி தான். “டேய் அந்த கோமாளி அங்கே இருக்குடா… அத 1st ஆ கூப்பிடுடா” என்றான் ஒருத்தன். சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆத்ரேயனுக்கு புரை ஏறியது.

ஒன்றும் பேசாமல் நடக்க போவதை மட்டும் அவதானித்தான். “ஏய் கோமாளி இங்கே வா…” என்று அவளை சுட்டிக் காட்டி கூப்பிட்டான் ஒருத்தன். குனிந்திருந்த அவள் அதனை கவனிக்கவில்லை.  அதை கவனித்த சந்தியா, “உன்ன தான் டி கூப்பிடுறாங்க… உனக்கு கோமாளி என்று பெயர் வேற வச்சுட்டாங்கடி” என்றாள். ‘ஐயோ இப்போ என்ன செய்வேன்?’ என்று யோசித்தவள் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவர்களை நோக்கி நடந்தாள்.

எல்லாரும் தன்னை பார்ப்பது போன்ற உள்ளுணர்வு அவளுக்கு ஏற்பட்டது. மறந்தும் அவள் ஆத்ரேயன் பக்கம் திரும்பவில்லை. ஆத்ரேயனும் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். மற்றைய அனைவரும் இருக்க அவளை நிக்க வைத்து, “உன் பேர் இனி கோமாளி… யார் கேட்டாலும் அப்படி தான் சொல்லணும்” என்றார்கள். அவளும் பயத்தில் தலையை ஆட்டி வைத்தாள்.

“இவரை நீ சைட் அடிச்சியா?” என்று ஆத்ரேயனை சுட்டிக் காட்டி கேட்டனர், அதுக்கும் அவள்  நிமிராமல் “இல்லை” என்றாள். “சரி விடு, இப்போ நீ மார்க்ஸ் போடணும்” என்றதும் அவள் இதயம் படபடவென அடித்துக் கொண்டது. முதலில் அவர்கள் காட்டியது ஆத்ரேயனை. அவனை நிமிர்ந்து பார்க்க தயங்கியவள், “ஒரு 25” என்றாள். “ஹா ஹா ஹா என்று சத்தமாக சிரித்தவர்கள், “அப்போ எங்களுக்கெல்லாம் மைனஸ் ஆ ? அதெப்படி முகத்தையே பார்க்காம மார்க்ஸ் போடுவ? ஒழுங்கா முகத்தை பார்த்து சொல்லு” என்றதும் தான் அவன் முகத்தை தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.

அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கூர்மையான வசீகரிக்கும் விழிகளும் கூரான நாசியும் செப்பமான உதடுகளும் அரும்பிய மீசை தாடி என குறை சொல்ல முடியாத வசீகரமான முகமும் திடகாத்திரமான உடலும் என ஆணழகனாக இருந்தவனை பார்த்து வியந்து போனாள்.

‘முகம் அழகா இருந்தாலும்  அழுக்கான அகமுடையவன்’ என்று மனசு சொல்லிக் கொண்டே இருந்தது. சுதாரித்தவள், “ஒரு 05” என்றாள். மொத்த கான்டீன் சிரிப்பில் மூழ்கியது. ஆத்ரேயனும் சிரித்துக் கொண்டான். “இங்க பாருடா முகத்த பார்க்காம 25 ஆம் முகத்தை பார்த்து 05 ஆம் … நீ உண்மையாவே கோமாளி தான்”  என்று சத்தமாக சிரித்தனர். வைஷ்ணவி மனதுக்குள், ‘நான் என்ன சொல்லிட்டேன் என்று இப்படி சிரிக்குதுகள் இந்த வானரங்கள்.’ என்று திட்டிக் கொண்டே இருந்தாள். மற்றயவர்களுக்கும் மார்க்ஸ் போட சொன்னார்கள், அவள் பயத்தில் எல்லாருக்கும் 75 க்கு மேல் சொன்னாள். அதை கேட்டு எல்லாரும் ஆத்ரேயனை பார்த்து, “நாங்க எல்லாம் பாஸ் நீ மட்டும் பெயில் டா” என்றனர்.

“என்ன பண்றது? நம்ம குடுத்து வச்சது அவ்வளவு தான்” என்று நக்கலாக சிரித்தபடி உரைத்தவன். அவளை பார்த்தவாறே கை கழுவச் சென்றான். அவளுக்கு அவமானம் பிடிங்கி தின்றது. “இவன் முன்னாலே இப்படி அசிங்கப்பட வேண்டி இருக்கே,இதுக்கு படிக்காமலே இருந்திருக்கலாம். எப்படி நாட்களை கடத்த போகிறேனோ?” என்று  புலம்பினாள். கையை கழுவி விட்டு வந்தவன் குனிந்துக் கொண்டிருந்தவளின் நாடியை கையிலிருந்த ரூலர் இனால் நிமிர்த்தி, விழும் நிலையிலிருந்த கண்ணீரை கண்டு அவளை ஊடுருவ பார்த்தவன், “கிளாஸ்சுக்கு போ” என்றான்.

அவனை மீறி அங்கு ஒரு வார்த்தை சொல்ல யாருமில்லயே. அவளும் பாட புத்தகத்தை எடுத்தவள் போக தயங்கினாள். “என்ன?” என்று புருவத்தை உயர்த்தி கேட்டவனிடம் சந்தியாவை காட்டினாள். “நான் உன்னை மட்டும் தான் போக சொன்னேன். அவளுடன் இருக்க விரும்பினால் இரு” என்று கறாராக கூறினான். ‘விட்டா போதும் சாமி’ என்று மனதில் நினைத்தவள் விறு விறுவென நடந்தாள்.

வகுப்புகளெல்லாம் முடிந்து விடுதிக்குச் செல்ல வெளியேறும் போது மரத்தடியில் இருந்த பெண்ணொருத்தி, “ஏய் இங்கே வா?” என்று வைஷ்ணவியை கூப்பிட்டாள். அவளும் பயந்த படி அவளருகில் சென்றாள். “உன் பெயரென்ன?” என்று கேட்க அவளுக்கு காலையில் சொன்னது நினைவு வந்தது.

“கோமாளி” என்றாள். “இங்க பாருடி கோமாளியாம்” என்று அனைவரும் கிண்டல் பண்ணி சிரித்தனர். அவளுக்கோ அவமானம் தாங்க முடியாமல் நெளிந்தாள். “சரி கோமாளி, இது என் பிரென்ட் அவளுக்கு நம்ம லீடர் ஆத்ரேயன் மேல கொள்ளை பிரியம். இது அவ எழுதுன லவ் லெட்டர்… அங்கே இருக்கிறான் பாரு. அவன்கிட்ட இத கொடுத்து விட்டு அவன் சொன்னதை எங்க கிட்ட வந்து சொல்லணும். இடையில் நீ யாருடனும் பேசக்கூடாது. அப்படி பேசினால் விடுதியில் உன்னை இன்று தூங்க விடமாட்டோம்”  என்றாள்.

அவளுக்கோ பெரிய இடியை யாரோ தலையில் போட்டது போல இருந்தது. ‘இதென்னடா வம்பு.  கடவுளே என்ன காப்பாத்துப்பா!’ என்று வேண்டியபடி கடிதத்தை பெற்றுக் கொண்டவள் அங்கு நிறைந்திருந்த நண்பர்களிடத்தில் வந்தாள்.

அவள் வருவதை பார்த்தவர்களுக்கு விளங்கி விட்டது. “ஷால் பார்ட்டி செமயா மாட்டிக்கிட்டா.” என்று கலகலத்தனர். ஆத்ரேயனும் அவள் வருவதை கண்டும் காணாமல் தொலைபேசியை பார்த்தபடி இருந்தான். “என்னடி?” என்று கேட்ட ஒருவனுக்கு பதில் சொல்லாமல் நேரே ஆத்ரேயனிடம் சென்றாள். “பார்டா” என்று கேட்டவன்  கலாய்த்தான்.

“இத உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க” என்று கடிதத்தை அவனிடம் நீட்டினாள். அவள் வருவது தெரிந்து தலை குனிந்து இருந்தவன் நிமிர்ந்து பார்த்து சலிப்புடன் அதை வாங்கிக் கொண்டான். ‘ரொம்ப தான் பண்றான்’ என மனதுக்குள் நினைத்தவாறே தலை குனிந்து நின்றாள். கடிதத்தை வாசித்து முடித்தவன், அவள் குனிந்துக் கொண்டே இருப்பதை பார்த்து, “கீழே ஏதும் விழுந்து விட்டதா?” என்று கேட்க “இல்லை” என்று சொன்னவளை ரூலர் இனால் நாடியை பிடித்து தலையை நிமிர்த்தியவன்,  “இனி நீ தலை குனிந்து நான் பார்க்க கூடாது” என்றான்.

‘இவனை தொடந்து பார்க்கணுமா? ஐயோ ஐயோ’ என்று மானசீகமாக தலையில் அடித்தவள், சரி என்று தலையாட்டினாள். “நீ போ” என்றவனிடம் போகாமல் தயங்கியபடி, “உங்க முடிவை சொல்ல சொன்னாங்க” என்றாள்.

“இவ ஒருத்தி…” என்று சலிச்சவன், “அந்த பொண்ணு எனக்கு பொருத்தமா?” என்று  கேட்டான். “நான் பார்க்கவில்லை” என்றவளிடம், “என் கண்ணை பார்த்து பேச முடியாத பெண் எனக்கு தேவையில்லை என்று சொல்” என்றான். போக போனவளை ஒரு கால் தடுத்தது. “அவ கொடுத்த லெட்டரை மட்டும் தான் கொடுப்பியா? நீ எழுதி கொடுக்கமாட்டியா?” என்றவனிடம், “இல்லை ” என்று தலையாட்டினாள். “அப்போ நாளைக்கு ஆத்ரேயனுக்கு காதல் கவிதை எழுதிக் கொண்டு வரணும். நாலு வரியில் நச் என்று இருக்கணும் அதை வாசித்தவுடனே அவன் மெர்சலாகணும். மொக்கையாக எழுதி வந்தால் நீ நாளைக்கு கிளாஸ்சுக்கு போகமாட்டாய் எப்படி வசதி?” என்றான் ஒருவன். ‘இது என்னடா வம்பா போச்சு?’ என்று யோசித்தாள்.

இது ஆத்ரேயனுக்குமே எரிச்சலாய் இருந்தது. ‘இவனுகளுக்கு வேற பொண்ணுங்க கிடைக்கலையா?’ என்று மனதுக்குள் அர்ச்சித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு வேண்டாத சில நினைவுகள் வந்தன. அவனால் கட்டுப்படுத்த முடியாமல், “கொஞ்சம் வேலையிருக்கு வரேன் மச்சி” என்றவாறு எழுந்துச் சென்று விட்டான். அவளால் தான் செல்ல முடியவில்லை. “என்ன புரியுதா?” என்று கேட்க சரி என்று சொல்லி விட்டு வந்தாள். அவள் வந்த நேரத்துக்கு லெட்டர் தந்த கோஷ்டி எழும்பிச் சென்று இருந்தது. சற்று நிம்மதியுடன் அறைக்கு தாமதமாக வந்தவள் நடந்தததை சந்தியாவிடம் சொன்னாள். “எனக்கு அப்படி எல்லாம் எழுத வராதே இதெல்லாம் எப்ப முடியும் ?”   என்று சோர்வாக கேட்டவளை பார்க்கவே சந்தியாவுக்கு பாவமாக இருந்தது.

அவள் முகமே சொன்னது அவளின் களைப்பை. “நீ படு வைஷு நான் எழுதி தரேன். இதெல்லாம் ஆறு மாசத்துக்கு தானாம்” என்றவள் வைஷ்ணவி தூங்கியதும் கவிதையை எழுதினாள். அவள் மனசில் ஆத்ரேயன் மேல் ஈர்ப்பு இருந்ததால் உணர்வுபூர்வமாக எழுதினாள்.

அடுத்த நாள் காலையில் நேரமாகியதால் விரைவாக வெளியேறிய இருவரும் வகுப்புக்குச் சென்றனர். அது வரை லெட்டர் நினைவு வைஷுவுக்கும் வரவில்லை சந்தியாவுக்கும் வரவில்லை. எல்லாம் முடிந்து வீட்டுக்கு புறப்படும் போது மரத்தடி பெஞ்சில் இருந்தவர்கள், “இங்கே வா” என்றதும் தான் வைஷ்ணவிக்கு கடிதத்தின் நினைவு வந்தது. “எங்கடி லெட்டர்?” என்று கேட்டவளிடம் நோட்டுபுத்தகத்தில் இருந்த கடிதத்தை நீட்டினாள். யாருக்கும் தெரியாமல் வாங்கியவள் அவர்களிடம் சென்றாள்.

அவள் கையிலிருந்து கடிதத்தை ஒருவன் வாங்கிக் கொண்டு அதனை படிக்க தொடங்கினான்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top