யுகம்-11

அன்பு காதலன் ஆத்ரேயனுக்கு, 

விழிகளின் வழியே நுழைந்தவனே, 

இதயத்தின் கதவினை திறந்தவனே

உன் இதழ் கொண்டு என் இதழ் மூடும் 

நாளுக்காக காத்திருக்கும்

வைஷ்ணவி

 

கைகளை கட்டியவாறு கால் மேல் கால் போட்டு பெஞ்சில் சாய்ந்து  இருந்த ஆத்ரேயனும் அதனை புன்சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். கவிதையை வாசித்ததும் “ஊ…”  என்று அனைவரும் ஓலமிட்டனர்.இதை கேட்டதுமே அவள் திக்கி திணறி போனாள். மனதுக்குள், ‘இதை எழுதினதுக்கு எழுதாமல் இருந்திருக்கலாமேடி,  என் மானம் போகுதே…  சும்மாவே ஆடு ஆடு என்று ஆடுவான்… இப்போ என்ன செய்ய போறானோ?’ என்று அவனை கடைக்கண்ணால் பார்த்தாள். அவன் கண்கள் சந்தேகமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தன.

மனதுக்குள் புலம்பியவளை பார்த்து ஒருவன், “உன்னிடம் லவ்வை சொல்ல சொன்னா நீ அவன்ட்ட முத்தம் கேக்கிறியா? ரொம்ப தைரியம் தான்” என்றான்.

இன்னொருவன் ஆத்ரேயனிடம் திரும்பி, “உன்கிட்ட என்னமோ கேட்கிறா எப்படி வசதி?” என்றான்.

சிரித்தபடி அவளின் கடிதத்தை வாங்கி பார்த்தவன் நண்பனின் காதில் ஏதோ கிசுகிசுத்து விட்டு, “கேட்டத நமக்கு எப்போவும் கொடுத்து தானே பழக்கம் மச்சி…”  என்றபடி தனது இதழ்களை நாக்கால் ஈரமாக்கியவன் இரு ஷர்ட் கைகளையும் மேலே இழுத்தவாறே அவளை நோக்கி நடந்தான்.

“ஊஊ …” என்று சத்தமான சிரிப்புடன் ஊளையிட்டவர்களுக்கு தெரியும் அவன் பெண்களிடம் முறை தவறி நடக்க மாட்டான் என்பது … ஆனால் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை வைஷ்ணவி விஷயத்தில் அவன் விதி விலக்கு என்று.

அவன் சொன்னதை கேட்டதும் வைஷ்ணவியின் இருதயம் செயல்படாத போல் உணர்ந்தாள். எல்லோர் முன்னிலையிலும் ஏதும் பண்ணிருவானோ என்று பயந்தவளின் கண்களில் கண்ணீர் கோர்க்க ஆரம்பித்தது. முத்தமிடுவது ஒன்றும் அவனுக்கு புதிய விஷயமில்லையே. நான்கு சுவருக்குள் நடந்ததால் அவனின் முதல் முத்தத்தை மறந்து வாழ்ந்தவளால்  இதை ஒதுக்க முடியவில்லை.

‘எவ்வளவு பேர் நிக்கிறாங்க… இப்போ இவன் முத்தமிட்டால் என் வாழ்க்கை என்னாவது? என் மானம்  மரியாதை என்னாவது???’ என்று பயந்த படி நின்றவள் பின்னால் நகர்ந்தாள். 

அவளை நோக்கியபடி அவன் நடந்த ஒவ்வொரு காலடிக்கும் மருண்டபடி பின்னால் நகர்ந்தவள் ஒரு கட்டத்தில் அவ்விடத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தில் மோதி நின்றாள்.  அவளை கூர்ந்து பார்த்தபடி சிறு புன்னகையுடன் வந்தவனின் கண்கள் தாபத்துடன் அவளிதழில் நிலைத்து நின்றது.

நெருங்கி வந்தவன் அவன் கையிரண்டையும் மரத்தில் குற்றியபடி அவள் இதழ் நோக்கி குனிந்தான். அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து பயத்தில் கண்களை மூடியவள்,  அவன் மார்பில் தன் இரு கைகளையும் வைத்து தள்ளியபடி, “அது நான் எழுதவில்லை என் நண்பி சந்தியா தான் எழுதினாள்” என்று சத்தமாக கத்தினாள்.

அவளை விட்டு விலகி கையை கட்டி நின்றபடி சத்தமாக சிரித்தவன், “நான் சொன்னேன் தானே மச்சி இவ எழுதி இருக்க மாட்டா என்று” சொன்னபடி நண்பர்களுடன் கையை அடித்துக் கொண்டான். கண்களை திறந்தவள் அவனும் அவன் நண்பர்களும் கை தட்டி சிரித்தபடி அவளை பார்த்துக் கொண்டு நின்றனர்.

“அதெப்படிடா நீ கண்டு பிடிச்ச?”  என்று கேட்டவனுக்கு, “முயல் பிடிக்கிற நாய மூஞ்ச பார்த்தாலே தெரியும் ” என்றவன் பெஞ்சில் போய் உட்கார்ந்தான். ஆனால் உண்மையில் அவளின் கையெழுத்தை பார்த்ததுமே அவனுக்கு தெரிந்து விட்டது இது அவள் எழுதவில்லை என்று.

வைஷ்ணவிக்கு அவமானத்தால் கோர்த்திருந்த கண்ணீர் கீழே விழுந்தது.  “இப்போ எதுக்கு அழுகுற அவன் கிஸ் பண்ணல என்றா?” என்று நக்கலாக சிரித்தபடியே ஒருவன் கேட்டதும் அவள் பேயறைந்தது போல் அவனை பார்த்தாள்.

‘நான் எதுக்கோ அழுகிறேன் இந்த மடையன் என்ன கேக்கிறான் பாரு… உன்ன எல்லாம் செருப்பால அடிக்கணும் போல இருக்குடா’ என்று மனசுக்குள் அவனை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள்.

அதை அறியாதவனோ, “நீ கவலை படாத பேபி…அவன் நீ இல்ல அந்த உலக அழகி வந்து கேட்டாலும்  கிஸ் பண்ண மாட்டான்… ஐயா சுத்த தங்கம்” என்றான்.

அவளோ மனசுக்குள், ‘அப்படி நீ தான் நினைச்சிட்டு இருக்கணும்’ என்று கவுண்டர் கொடுத்தபடி அவனை பார்த்தாள்.

நண்பன் சொன்னதை கேட்டு தர்மசங்கடப்பட்ட ஆத்ரேயன் அதனை கவனிக்காத போல் மரத்தை பார்த்துக் கொண்டிருந்தான். ‘இந்த நடிப்புக்கு ஒண்ணும் குறைச்சலில்லை’ என்று மனசுக்குள் நொடித்துக் கொண்டாள் வைஷ்ணவி.

“சரி விடு உன்னை பார்க்க பாவமா இருக்கு நீ நாங்க சொல்ற பாட்டு ஒன்னு பாடிட்டு ஹாஸ்டல் க்கு போகலாம்” என்றனர். பாடல் தெரிவு செய்வதில் அங்கு பெரிய சண்டையே நடந்து ஓய்ந்தது.  கடைசியாக தொலைபேசியில் ஒரு பாடலை எடுத்து பாட சொல்லி அவளிடம் கொடுத்தனர்.

அந்த பாடலை பார்த்து தர்மசங்கட பட்டவள் தன் இனிய குரலால் அதனை உணர்ச்சியோடு பாட  தொடங்கினாள். ஆத்ரேயன் அவள் நன்றக பாடுவாள் என்று கேள்வி பட்டிருக்கிறான் இவ்வளவு நன்றாக பாடுவாள் என்று இன்று தான் தெரியும்.

மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே

மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா?

பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே

பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ?

உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்

நீ எங்கே எங்கே இன்று உனை தேடி தேடி பார்க்கிறது

உன்னோடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்

நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே

அறியாத வயதில் விதைத்தது ஓ ஓ ஓ …

அதுவாகவே தானே வளர்ந்தது

புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஓ ஓ ஓ …

அட யாரது யாரது பறித்தது?

உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே

அது பாதியில் தொலைந்ததடா

நான் கேட்டது அழகிய நேரங்கள் ஓ ஓ ஓ…

யார் தந்தது விழிகளில் ஈரங்கள்?

நான் கேட்டது வானவில் மாயங்கள் ஓ ஓ ஓ…

யார் தந்தது வழிகளில் காயங்கள்?

இந்தக் காதலும் ஒரு வகை சித்ரவதைதானே

அது உயிருடன் எரிக்குதடா

பாடி முடித்ததும், “வாவ் அமேஸிங்” என்றபடி பெரிய கைதட்டல் அங்கிருந்து வந்தது. ஆத்ரேயனோ கையை தட்டாமல் அவளை மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவளின் குரலையும் இசையையும் ரசித்தவர்கள் மத்தியில் அவன் பாடல் வரிகளை ரசித்திருந்தான்.

அந்த வரிகள் அவன் மனதை அசைத்து பார்த்தது. மூடி வைத்திருந்த ஏதோ இனம் புரியாத உணர்வு உடைத்துக் கொண்டு வெளிவருவது போல் இருந்தது.

இங்கு ஒரு கணம் நின்றால் கூட தன்னை கட்டுப்படுத்த முடியாது என்று நினைத்தவன் அவளை பார்க்காமல் விறு விறுவென எழுந்துச் சென்றான்.

அவன் போனதும் அவளை விடுதிக்கு போக சொன்னவர்கள் தாங்களும் விடுதியை நோக்கி நடந்தனர்.  விடுதிக்குச் சென்ற ஆத்ரேயனால் நிலை கொள்ள முடியவில்லை… அவன் கட்டுப்பாடு எல்லாம் தகர்த்தெறிய அவள் ஒரு கண்ணசைவே போதுமானதாக இருந்தது. எப்படி அவளை தவிர்ப்பது என்று புரியாமல் தவித்தான். அவன் மூளை அவளை வேணாம் என்று ஒதுக்கினாலும் அவன் மனம் அவளை எதிர்பார்த்தது. அவள் பாடலின் வரிகளை சுகமாய் மீட்டியபடி கட்டிலில் மல்லாந்து படுத்தவன் அப்படியே உறங்கி போனான்.தனது விடுதிக்குச் சென்றவளுக்கு மனம் ரொம்ப அழுத்தமாய் இருக்க யாருடனும் பேசாமல் தூங்கி விட்டாள்.

அடுத்த நாளிலிருந்து அவளுக்கான பகிடிவதை கணிசமாக குறைந்திருந்தது… அவளுக்கே அது ஆச்சரியமாகி போனது. ஆனால் மனதுக்குள் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தது. அதுக்கு காரணம் ஆத்ரேயன் தான்.. அவளை தவிர்ப்பதற்கு அவளின் நேற்றைய கண்ணீரை காரணம் காட்டி அவள் மீதான பகிடிவதையை குறைத்திருந்தான்.

மனதின் அழுத்தம் குறைந்ததால் அவள் மற்றைய நண்பர்களுடன் பழக ஆரம்பித்திருந்தாள்.

பயத்தை கை விட்டு கொஞ்சம் நிமிர்வாக நடக்க தொடங்கினாள். ஆத்ரேயன் அவளிருக்கும் பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை. முடிந்தளவு அவளை பார்ப்பதை தவிர்த்திருந்தான்.

அது அவளுக்கும் சற்று நிம்மதியாக இருந்தது. அதனை குலைக்கும் முகமாக வந்து சேர்ந்தது “பிரெஷர்ஸ் டேலேண்ட் ஷோ” புதிதாக வந்தவர்கள் சீனியர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். அது பகிடிவதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிகழ்வாக இருக்கும்… இரவு நேர சாப்பாட்டுடன் அந்த நிகழ்வு முடிவடையும். அதன் பிறகு முதலாம் வருட மாணவர்கள் சுதந்திரமாக நடமாட முடியும். கலகலப்பான அந்த நிகழ்ச்சிக்காக அனைவரும் காத்திருந்தனர்.

அன்று சனிக்கிழமை விடுமுறை நாள், ஷோவை பற்றி அறிமுகம் கொடுப்பதத்திற்காக ஆத்ரேயன் ஒரு கூட்டத்தை ஒழுங்கு படுத்தி இருந்தான். அந்நிகழ்வுக்காக இடையில் ஒன்றரை மாசங்கள் இருந்த போதும், வழமையாக அந்நிகழ்வுக்கு நிறைய முக்கிய புள்ளிகள் அழைக்கப்படுவதால், நிகழ்வு நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒத்திகையை அன்றே தொடங்கி விட்டனர்.

வைஷ்ணவி வழக்கம் போல தாமதமாக எழுந்தவள் சந்தியாவையும் எழுப்பி மீட்டிங் நடைபெறுமிடத்துக்கு தாமதமாக வந்து சேர்ந்தனர்.  “எக்ஸ்க்யூஸ் மீ” என்று உள்ளே நுழைந்தவர்களை, “அவுட்” என்று சிம்ம கர்ஜனையுடன் வெளியே போக சொல்லி கை காட்டினான் ஆத்ரேயன். அவனின் தொனியில் எல்லாருக்கும் ஒரு வித கிலி உண்டானது.

“சாரி” என்றவாறே விளக்கம் கொடுக்க வந்தவர்களிடம், “நோ மோர் எக்ஸ்பிளனேஷன் கெட் அவுட் அண்ட் ஸ்டாண்ட் தேர்” என்று வெயில் சுட்டெரிக்கும் இடத்தை காட்டினான்.

‘நம்மள  அவமான படுத்துறதிலேயே குறியா இருக்கான்’ என்று நினைத்த வைஷ்ணவி சந்தியாவை இழுத்துக் கொண்டு வெளியேறி சொன்ன இடத்துக்கு போய் நின்றாள். “ஒன்றரை மாசத்துக்கு தான் இவங்க நம்மளோட வால்  ஆட்ட முடியும்… அதுக்கு பிறகு பார் என்னோட பெர்பார்மென்ஸ் ஐ” என்றவள் நேற்று இருவரும் பார்த்த ஷாருக்கானின் படத்தை பற்றி சிரித்தபடி அரட்டையடிக்க தொடங்கினர்.

பேசிக்கொண்டிருந்தவன் சிரிப்பு சத்தம் கேட்டு அவர்களை நோட்டமிட்டு,கோபத்துடன்,   ‘பாவம் என்று உன்ன சும்மா விட்டா நீ கொழுப்பேறி போய் இருக்க டி …வரும் ஒரு மாசத்துக்கு  உன்ன ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்’  என்று  சூளுரைத்தவன், மேடையில் நின்றபடியே வைஷ்ணவியையும் சந்தியாவையும் கூப்பிட்டான்.  இருவரும் அங்கே வந்து சேர்ந்ததும், கைகள்   இரண்டையும் பாக்கெட்டுக்குள் விட்டவாறே, “லேட்டா வந்ததுக்கு பனிஷ்மென்ட் தர வேண்டாமா ??” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டான். ‘இப்போ தந்ததுக்கு பேர் என்ன?’ என்று மனதுக்குள் வைஷ்ணவி பதிலடி கொடுத்தாள்.

“இந்த மண்டபம் ரொம்ப அழுக்கா இருக்கு” என்றவன் மேடையின் மூலைக்குச் சென்று தும்பு தடியையும் குப்பை கூடையையும் எடுத்து வந்தான்.   தும்புத்தடியை சந்தியாவிடமும் குப்பை கூடையை வைஷ்ணவியிடமும் கொடுத்தவன், “நீ கூட்டு நீ அள்ளு” என்றபடி உட்கார்ந்திருந்த மற்றையவர்களிடம் திரும்பி தனது பேச்சை தொடர்ந்தான்.

“தொடங்கிட்டானே… இனி நம்ம பாடு” என்று முணுமுணுத்தவாறே சந்தியா கூட்டிய குப்பைகளை அள்ள தொடங்கினாள் வைஷ்ணவி . முன்ன பின்ன வேலை செய்து பழக்கமில்லாதவள் என்றதால் குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

ஆத்ரேயனின் நண்பர்கள் புதிய மாணவர்களுடன் பேசிக் கொண்டிருக்க, ஆத்ரேயன் இருவரையும் நோக்கி வந்தான்.  ஒழுங்காக அள்ளப்படாத குப்பைகளை பார்த்தவனுக்கு கோபம் எகிறியது. அவனை பொறுத்தவரை எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும்.  “ஏய்…” என்று சத்தமாக அழைத்தவன் அவள் நிமிர்ந்து பார்த்ததும், “உனக்கு இது கூட அள்ள தெரியாதா?? முன்ன பின்ன வீட்ல வேல செய்திருக்கியா இல்லையா???” என்றபடி அவளின் கழுத்து பிடரியை பிடித்து ஆக்ரோஷமாக இழுத்து வந்தவன் சிதறி கிடந்த குப்பைகளை காட்டி, “இதெல்லாம் யார் அள்ளுவா??” என்று கேட்டான்.

அந்த கோபத்தில் அவள் பழைய ஆத்ரேயனை பார்த்தாள். ‘நல்லா தானே இருந்தான்… இப்போ என்ன ஆச்சு?’ என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.  பெண்கள் மீது அவனின் இந்த ஆக்ரோஷம் அவன் நண்பர்களுக்கும் புதிது… எல்லா பெண்களிடமும் கண்ணியமாகவும் மென்மையாகவும் பழகும் இவன் ஏன் இவளிடம் மட்டும் இப்படி வன்மையை காட்டுகிறான் என்று யோசித்தார்கள்.

மறுபடியும் அவமானப்பட்டதால் மனம் முழுதும் வலிக்க தொடங்கியது. அவனை ஒரு அடிபட்ட பார்வை பார்த்தாள். அவள் பார்வையை உணர்ந்தவன் தலையை உலுக்கி சமன் செய்தான்.  நண்பனிடம் சென்று சிகரெட்டை வாங்கியவன் வெளியில் போய்  ‘இதெல்லாம் பெரிய விஷயமா ?? ஏன் நான் கோபப்பட்டேன்?’ என்று யோசித்தவாறே புகையை ஊதி தள்ளிக் கொண்டிருந்தான்.

உள்ளே வைஷ்ணவியை எல்லாரும் காட்சி பொருள் போல பார்த்தனர். கண்களில் கோர்த்திருந்த நீர்  விழாமலிருக்க கஷ்டப்பட்டவள்,

“சந்தியா நீ கூட்டு நான் அள்ளுறேன்” என்றபடி வேலையை தொடர்ந்தாள்.  ‘எல்லாருக்கும் நல்லவனாக இருப்பவன் எனக்கேன் கெட்டவனாகி போனான்?’ என்று அவள் மனம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது.

வெளியில் நின்றவனுக்கு ஒரு  தொலைபேசி அழைப்பில் பதட்டத்துடன் பேசியவன் சிகெரெட்டை போட்டு விட்டு உள்ளே வந்தான். “வைஷ்ணவி இங்கே வா” என்று சத்தமாக அழைத்தவனின் குரலில் அவளுக்கு மேலும் கிலி  ஏற்றப்பட்டது.

எல்லாவற்றையும் போட்டு விட்டு அவனருகில் வந்தாள். “உன் போன் எங்கே?” என்று கேட்டதும் தான் நேரமாகி விட்டதால் தான் விடுதியிலேயே விட்டு வந்ததாக சொன்னாள். பெரு மூச்சொன்றை விட்டு சிறிது யோசித்தவன்,  “நீ போ” என்றபடி நண்பனிடம் வந்தான். அவனின் உயிர் நண்பன் ஆகாஷை தனியே அழைத்துச் சென்றவன் “நீ எனக்காக ஒரு உதவி செய்யணும்” என்றான். “என்னடா?” என்று கேட்டவனிடம்  வைஷ்ணவி தனது மாமன் மகள் என்று கூறி தற்போது மலர்வேந்தனுக்கு ஹார்ட் அட்டாக் வந்திருப்பதாகவும் தான் வைஷ்ணவியை கூட்டிச் செல்ல வேண்டுமெனவும் கூறியவன். நிகழ்ச்சிக்கான ஒழுங்குகளை பார்த்துக் கொள்ளும் படியும் கூறினான். “முக்கியமாக  இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் சமாளிச்சுக்கோ” என்றான்.

ஆகாஷ் அவனை விறைத்து பார்த்தபடி, “என்னடா இத்தனை ஷாக்கிங் நியூஸ்ஐ ஒரேடியா கொடுக்குற? சரி நான் சமாளிச்சுக்கிறேன். நீ இப்போ போ… வந்ததும் உனக்கு இருக்கு” என்றவனிடம்,  “தேங்க்ஸ் மச்சி” என்று கண்ணடித்து விட்டு தன் காரை எடுத்துவர விடுதிக்கு போனான். இந்த விஷயத்தை எப்படி வைஷ்ணவிக்கு சொல்வது என்று குழப்பமாகவே இருந்தது. சொன்னால் அவள் அழுது புலம்புவாள் என்று நன்கு அறிந்தவன், அதை தன்னால் சமாளிக்குமளவுக்கு தன்னிடம் பொறுமை இல்லை என்பதையும் உணர்ந்தான்.

எதுவும் கூறாமல், “காரில் ஏறு” என்று வைஷ்ணவியை யாரும்  அறியா வண்ணம் பின் வழியாக அழைத்துச் சென்றான். “எங்கே போறோம்?” என்று கேட்டவளிடம், “சத்தம் போடாமல் வா” என்பது மட்டும்  பதிலாக வந்தது. அவனாக சொல்லட்டும் என்றபடி போகும் பாதையை ரசித்துக்கொண்டு வந்தாள். சில மணி நேரங்களில் கார் ஒரு மருத்துவமனை வளாகத்துக்குள் சென்றது.

அதில் திடுக்கிட்டவள், “யாருக்கு என்னாச்சு?” என்று பதறியபடி கேட்டாள். எப்படி சொல்வது என்று தயங்கியவனின் ஷர்ட் காலர் ஐ பிடித்து உலுக்கியவள், “சொல்லுங்க…” என்று ஆக்ரோஷமாக கேட்டாள். இனியும் மறைக்க முடியாது என்று உணர்ந்தவன், “மாமாக்கு ஹார்ட் அட்டாக்” என்றவனிடம் மறு பேச்சு பேசாமல் காரை திறந்துக் கொண்டு வைத்தியசாலைக்குள் ஓடியவளை அவன் தடுக்கவில்லை.

ரிசப்ஷன் இல் கேட்டு ஒருவாறு ICU வை அடைந்தவள் முன்னால் அழுதுக் கொண்டிருந்த அம்மாவையும் அக்காவையும் கட்டி பிடித்து “அப்பா அப்பா” என்று கதற தொடங்கினாள். பின்னால் வந்து தலையை வருடிய மாலதி, “பயப்பட ஒன்றுமில்லையம்மா ஆறு அடைப்புகளை ஆபரேஷன் பண்ணி விட்டால் அண்ணா நூறு வருடம் வாழுவார்” என்று அழுதவாறு சமாதானப் படுத்தினார்.

சமாதானப் படுத்தினாலும் அனைவருக்கும் மனசெல்லாம் பயமாகவே இருந்தது. “ஆறு அடைப்பா ?”  என்றவள்  அப்படியே நிலத்தில்  அமர்ந்தாள். கார்த்திகேயன் யாருக்கும் சமாதானம் சொல்லும் நிலையில் இல்லை. ஆதி மட்டும் கொஞ்சம் தெம்பாக இருந்தான்.

ICU வை அடைந்த ஆத்ரேயனுக்கு கண்கள் குளமாகி இருந்தது. அவன் மதிப்பளிக்கும் ஒரே ஜீவன் அவர்தான். அவ்விடத்தில் இருந்த கதிரையில் தோய்ந்து அமர்ந்திருந்தான்.

சிறிது நேரம் கழித்து வந்த டாக்டர்  இன்னும் ஒரு கிழமைக்குள் ஆபரேஷன் செய்ய வேண்டும் எனவும் அவரை அதிர்ச்சியடைய விடாமல் ஒருவர் பின் ஒருவராக அவரை போய் பார்க்க வேண்டுமெனவும் சொன்னார்.  குடும்பத்தினரிடம் பேசி புதன்கிழமை ஆபரேஷன் செய்யலாம் என்று முடிவெடுத்தனர். கோகிலா, வைஷ்ணவி, வர்ஷினி சென்று வந்ததும், மூக்கில் ஆக்ஸிஜன் பொருத்தி கஷ்டப்பட்டு பேசிக் கொண்டிருந்த நண்பனை பார்க்கச்  சென்ற கார்த்திகேயன் கண்கள் கலங்க, “வேந்தா” என்றார்.

“நான் இறந்தா என் மனைவி மக்களை பார்த்துக் கொள் கார்த்தி” என்றவரின் குரல் நலிந்து ஒலித்தது. “என்ன பேச்சுடா இது … இந்த ஆபரேஷன் பண்ணினா நீ 100 வருஷம் வாழ்வாயடா” என்று கண்ணீர் மல்க கூறினார். கொஞ்ச நேரம் நிலவிய நிசப்தத்துக்கு பின், “கார்த்தி உன் ரெண்டாவது பையனை என் பொண்ணு வைஷ்ணவிக்கு கட்டி கொடுப்பாயா?” என்று கேட்டார். உடனே அதிர்ச்சி அடைந்தவர் அதனை காட்டிக் கொள்ளாமல் சமாளிக்கும் பொருட்டு, “சரி” என்றார். அப்போதும் கார்த்திகேயன்  யோசித்தது வைஷ்ணவிக்காக மட்டுமே.

எல்லாம் முடிய சமாளிச்சுக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தார். இரண்டாவது மகனை நம்பி அவருக்கு வாக்கு கொடுக்கவும் பயம்.

ஆனால் விதி யாரை விட்டது? “எப்போ எனக்கு ஆபரேஷன்?” என்று கேட்டவர், புதன்கிழமை என்றதும் அன்றைக்கே இரண்டு மகள்களினதும் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றார். கல்யாணம் முடிந்த பிறகு தான் ஆபரேஷன் செய்துக் கொள்வதாக கூறினார். அவருக்கு கார்த்திகேயனை பற்றி நன்கு தெரியும்… இந்த விஷயத்தை இந்த சந்தர்ப்பத்தில் முடிக்கா விட்டால் அது நடைபெறாது என்று அறிந்தவர் அவர். ஆதியை விட ஆத்ரேயன் மேல் கொள்ளை பிரியமுள்ள மலர்வேந்தன் சாமர்த்தியமாக அவர்களின் திருமணத்துக்கு வித்திட்டார். 

இப்போது கார்த்திகேயனுக்கு மாரடைப்பு வருவது போல் இருந்தது. “என்ன அவசரம்டா ? ஆபரேஷன் முடிந்ததும் கல்யாணம் வச்சுக்கலாம். இன்னும் இருவரும் படித்து முடிக்கவுமில்லை.  3 நாட்களில் எப்படிடா கல்யாணத்துக்கு ஏற்பாடுகள் மேற்கொள்வது?” என்று கேட்டார். “கோவிலில் வைத்து தாலி கட்டிவிட்டு, ஆறு மாசம் கழிய வரவேற்பை பெரிதாக செய்வோம்” என்று அதுக்கும் பதில் வைத்திருந்தார். ‘இவன் எல்லாம் முடிவே செய்துவிட்டான் போல’ என்று நினைத்தவரிடம், “ஆத்ரேயனிடம் நீயே கேட்டுக்கொள் சம்மதத்தை” என்றார். அவருக்கு தெரியும் தான் கேட்டால் அவன் சுண்டு விரலை கூட அசைக்க மாட்டான்  என்று.

வெளியில் வந்தவர் ஆத்ரேயனை பார்த்து, “வேந்தன் உன்னிடம் பேசணுமாம்” என்றவர் உணர்ச்சியற்ற பார்வை ஒன்றை பார்த்தார். அவன் உள்ளேச் சென்றதும் அனைவரிடமும் மலர்வேந்தன் கூறியதை கூறினார். கோகிலா மனதுக்குள், ‘இந்த மனுசனுக்கு மூளை ஏதும் குழம்பிடுச்சா?’ என்று கணவனுக்கு நன்றாக திட்டினார். வைஷ்ணவியோ,  ‘இவனை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா? என்னால முடியாது.இத எப்படி அப்பாவிடம் சொல்லுவேன்?’ என்று   பதறியவள், “அவனே என்னை கட்டிக்கமாட்டான்” என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாள்.  மீதி இருந்தவர்கள் வைஷ்ணவிக்காக பரிதாபப்பட்டனர். மாலதி அவர்களின் பயத்தை உணர்ந்தவராய், “பயப்படாதீங்க அண்ணி ஆத்ரேயன் இப்போ திருந்திட்டான்” என்றார். ‘அண்ணனுக்கும் தங்கச்சுக்கும் மர கழண்டு போச்சு’ என்று மனதுக்குள் கார்த்திகேயன் நினைத்துக் கொண்டார்.

அவனை அருகில்  அழைத்த  மலர்வேந்தன், “என் பொண்ணு வைஷ்ணவியை கல்யாணம் பண்ணிப்பியா ?” என்று கேட்டார். இதை விட அவனுக்கு யாரும் பெரிய இடியை தலையில் போட முடியாது.

‘எப்படி இல்லை என்று  சொல்வது?’ என்று மனதுக்குள் யோசித்தவனிடம், ‘இவனை யோசிக்க விட கூடாதே’ என்று நினைத்த மலர்வேந்தன், “நீ கல்யாணம் பண்ணினால் தான் நான் ஆபரேஷன் செய்துக் கொள்வேன் இல்லாவிட்டால் இப்படியே செத்து விடுவேன்” என்றவர் கார்த்திகேயனிடம் கூறிய கல்யாணம் சம்பந்தமான அனைத்து விடயங்களையும் அவனிமும் கூறினார். ‘சின்ன பையன் போல பிடிவாதத்தை பாரு’ என்று நினைத்த ஆத்ரேயன் அவரின் கண்ணீரால் கொஞ்சம் நிலை தடுமாறி  தான் போனான். “உன் கையை காலா நினச்சு கேட்கிறேன்பா என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ” என்று அழுதவரிடம் அவரை சமாதான படுத்தும் விதமாக, “சரி” என்று மட்டும் உரைத்தவன் கோகிலா அத்தையிடம் விஷயத்தை சொல்லி சமாளிக்கலாம் என்று நினைத்தான்.

வெளியில் வந்தவன் யாரிடமும் எதுவும் பேசாமல் வீட்டுக்குச் சென்றான், அவனிடம் கேட்க பயந்து யாரும் எதுவும் கேட்கவில்லை. முடிவெடுக்க முடியாமல் சற்று நேரம் திணறியவன் ஒரு முடிவெடுத்தவனாக வைத்தியசாலையை நோக்கி மீண்டும் சென்றான். காரிடரில்  நடந்து ICU இருக்கும் பக்கம் நெருங்க போனவனுக்கு வைஷ்ணவி தன் தாயிடம் பேசிக் கொண்டிருப்பது தெளிவாக கேட்டது.

“அம்மா எனக்கு அந்த நெட்டையன் வேணாம்மா… அவன் ரொம்ப மோசமம்மா…  ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க…” என்று கண்ணீர் மல்க தாயிடம் வேண்டிக் கொண்டிருந்தாள். அதை கேட்டவனின் கோபம் எகிறியது.

‘நான் தான் உன்ன வேணாம் என்று சொல்லணும்…என்னை கட்டிக்க உனக்கு கசக்குதாடி… இதுக்காகவே உன்ன கல்யாணம் கட்டி பாடாய் படுத்துறேன் பாரு…’ என்று வன்மமாய் மனதில் நினைத்தவன் ICU வுக்குள் செல்லாமல் வீட்டை நோக்கி விறுவிறு வென்றுச் சென்றான்.

❤️ Loading reactions...
1 Comment
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top