யுகம்-13

உடை மாற்றி கீழே வந்தவள் ஹாலில் ஆத்ரேயன் அமர்ந்திருப்பதை பார்த்து சற்று அதிர்ச்சியடைந்தாள். அவள் வருவதற்காக காத்திருந்தவன் முன்னால் நடக்க அவள் பின்னால் நடந்தாள். வீட்டுக்கு  வந்ததும் மாலதியிடம், “அம்மா நைட் காலேஜ் க்கு போகணும்… அதனால இன்று பூரா வைஷ்ணவி மாமாவோட இருக்கட்டும்” என்றவனை யாரும் எதிர்த்து கேட்கவில்லை. அவளை ஏற்றிக் கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றவன் அவளுக்கு அங்கு  சாப்பாடு வாங்கி கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்தான். கல்லூரியை பற்றி யோசித்தவன் ஆகாஷை தொடர்பு கொண்டு பேசி  இதுவரைக்கும் எந்த பிரச்சனையுமில்லை என்று அறிந்த பின்னர் தான்  நிம்மதியடைந்தான்.

வைஷ்ணவியின் தந்தைக்கு மாரடைப்பு என்ற விடயம் மட்டும் நண்பர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்தது. மனிதாபிமானம் காரணமாக ஊருக்கு அவசரமாக அண்ணாவின் கல்யாண ஏற்பாட்டுக்குச் சென்ற ஆத்ரேயன் அவளை கொண்டு  விட்டான் என்று எதையெதையோ சம்பந்தப்படுத்தி ஆகாஷ் கஷ்டப்பட்டு ஒரு கதையை உருவாக்கி இருந்தான். ஆத்ரேயன் சம்பந்தப்பட்டது என்பதால் யாரும் தூண்டி துருவவில்லை.

சாப்பிட்டு விட்டு எல்லோரிடமும் விடைபெற்றவர்கள் இரவானதும் காரில் கிளம்பினார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. ரேடியோவில்  பாடலை கேட்டவாறே வந்து சேர்ந்தனர். இரவானதால் ஒலிபரப்பப்பட்ட காதல் பாடல்களை கேட்டவள் அவஸ்த்தையில் நெளிந்தாள். வைஷ்ணவியின் விடுதியை நெருங்கியதும் காரை ஓரமாக நிறுத்தினான் ஆத்ரேயன்.

‘இவன் எதுக்கு இப்போ காரை நிறுத்தினான்? பாடலை கேட்டு அவனுக்கு ஏதும் பீலிங்ஸ்   வந்திடுச்சோ? ஏதும் பண்ணிருவானோ?’ என்று தாறு மாறாக யோசித்தவள் மருட்சியுடன் அவனை பார்த்தாள்.

உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்துடன் அவளை பார்த்தவன் சடாரென குனிந்து, அவளின் சேலையை விலக்கி காலை தேடினான். அவன் செய்ததுக்கெல்லாம் மன்னிப்பு கேட்டு காலில் விழுறானோ என்று யூகித்தவள், “ஐயோ என்ன பண்றீங்க??? காலில எல்லாம் விழ வேணாம்.. நான் உங்கள மன்னிச்சிட்டேன்” என்று சொல்லிக் கொண்டிருந்தவளை நிமிர்ந்து கேலியாக பார்த்தவன், “உனக்கு அப்படி எல்லாம் வேற நினைப்பிருக்கா?” என்று கேட்டான்.

மேலும் பேச வந்தவளை தடுத்தவன் மீண்டும் குனிந்து அவளின் காலை தேடினான். ‘அப்போ என் கால் இவனுக்கெதுக்கு?’ என்று யோசித்து கொண்டிருக்கையிலேயே  திடீரென நெஞ்சத்தில் சுரீரென ஒரு வலியை உணர்ந்தாள். மேலே எழுந்தவன் அவள் காலில் கிடக்கும் இரு மெட்டிகளையும் உருவி கையில் வைத்திருந்தான். கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டு பார்த்தவளை ஏளனமாக பார்த்தவன் காரின் முன்னாள் வைக்கப்பட்டிருந்த வெட் டிஷ்யூ வை எடுத்து நெற்றி வகிட்டில் வைக்கப்பட்டிருந்த குங்குமத்தை அழித்தான். அவன் செயல்களால் கோர்த்திருந்த கண்ணீர் கீழே உருண்டு விழுந்தது.

அதன் பிறகு அவள் கழுத்தில் கிடந்த தாலி மேல் கை வைத்தவனை தனது கையால் தடுத்தவள்,  “இது வெளிய தெரியாம நான் பார்த்துக்கிறேன்”

என்றாள் கண்களில் கண்ணீருடன். அவளை ஊடுருவ பார்த்தவன், “தாலி செண்டிமெண்ட் தடுக்குதோ?” என்று கேலியாக கேட்டபடி  அவன் கையை பிடித்திருந்த  அவள் கைகளை வருடினான்.

கையை விடும் போது  கையிலிருந்த மாற்று மோதிரத்தை மட்டும் உருவியெடுத்திருந்தான். அப்போது தான் அவன் கையில் மோதிரம் இல்லாததை கவனித்து, ‘கொஞ்சம் கூட செண்டிமெண்ட் இல்லாத காட்டானாக இருக்கானே’ என்று  நினைத்தவளுக்கு கண்ணீர்  விடாமல் வெளியேறியது.

“உன் கண்ணில் ஏதும் வாட்டர் டேங்க் கட்டி வச்சு இருக்கியா தெரியல. எப்படி தான் எதுக்கெடுத்தாலும் உனக்கு அழுகை வருதோ. எனக்கு தெரியாம எங்கேயும் கிளிசெரினை ஒளிச்சு வச்சுருக்கியா?” என்று சினந்து கேட்டபடி காரை கிளப்பினான். ‘இவனுக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா? மனிதாபிமானமே இல்லாத மரக்கட்டை. என் கண்ணீர் இவனுக்கு எப்போவும் நடிப்பா தெரியுதா?’ என்று வெளியில் திட்ட முடியாததை மனசுக்குள் திட்டியவள் தாலி தெரியாமல் இருக்க புடவை முந்தானையை  எடுத்து கழுத்தை சுற்றிக் கொண்டாள். அவளை விடுதியில் விட்டவன் காரை கிளப்பிக் கொண்டு தனது விடுதிக்குச் சென்றான்.

அறைக்கு வந்து கதவை தட்டியதும் தூக்க கலக்கத்தில் வந்த சந்தியா கதவை திறந்தாள்.  “எப்படி வந்தாய் ?? என்னடி ஆச்சு?? அப்பா எப்படி இருக்கார்??? ஏன் டி சொல்லிட்டு போகல ??? அழுதியா?? ஏன் சாரி உடுத்திருக்க ?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டவளிடம் எதுவும் கூறாமல் கட்டிலில் தொப்பென்று  இருந்தவள் அவளை உணர்ச்சியற்ற பார்வை பார்த்தாள்.

“வந்து சொல்றேன்” என்றபடி  குளிப்பதற்கு  உடைகளை எடுத்தவள் குளித்து முடிந்ததும்  இரவு உடையுடன் கழுத்தை சுற்றி டவல் ஐ போர்த்திக் கொண்டு வந்தாள். அவள் வரும் வரை காத்திருந்த சந்தியா  அவள் டவல் ஐ விலக்கியதும் வைஷ்ணவி கழுத்தில் தொங்கிய தாலியை பார்த்து அதிர்ந்து  போனாள்.  இதை எதிர் பார்த்த வைஷ்ணவி குளிக்கும் போதே  சந்தியாவுக்கு என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்து வைத்து விட்டவளுக்கு  கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

“என்னடி கல்யாணம் பண்ணிட்டியா??? ஏன் டி சொல்லல???” என்று கேள்வி கேட்டவளிடம், “அப்பா, நான் கல்யாணம் பண்ணினால் தான் ஆபரேஷன் செய்வேன் என்று பிடிவாதம் பிடித்தார். அதனால் தெரிந்த உறவுக்கார பையனுடன் அவசர அவசரமாக கல்யாணம் முடிந்து விட்டது. தொலைபேசியை இங்கேயே வைத்து விட்டு போனதால் உன்னை தொடர்பு கொள்ள முடியவில்லை. உன் தொலைபேசி எண்ணும் எனக்கு பாடமில்லை.கல்லூரியில் இது தெரிந்தால் சீனியர்கள்  கலாய்ப்பார்கள். அதானால் இதை மறைக்க நீ உதவ வேண்டும். மெட்டியையும் மோதிரத்தையும் கழட்டி வைத்து விட்டு வந்த எனக்கு தாலியை கழட்ட மனம் வரவில்லை. இனி இதனை மறைத்தவாறு ஹை நெக் உடைகள் தான் அணிய வேண்டும்” என்று உண்மை

பாதி பொய் மீதி என்று மனப்பாடம் பண்ணிய அனைத்தையும் ஒப்புவித்தாள்.

அனைத்தையும் அதிர்ச்சியும்  ஆவலும் கலந்த மனநிலையுடன் கேட்ட சந்தியா,  “பையன் பேர் என்ன?? பையன் அழகா இருப்பானா??? கல்யாண போட்டோ இருக்கா???” என்று சரமாரியாக கேள்வி கணைகளை தொடுத்தாள்.  ‘அய்யய்யோ இதுக்கெல்லாம் நான் ஒத்திகை பார்க்கவில்லையே’ என்று தடுமாறியவள், ‘சமாளிப்போம்’ என்று நினைத்தவாறே,

“அவசரமாக நடந்ததால் போட்டோ எடுக்கவில்லை… சுமாரான பையன்… பெயர் ஆரியன்” என்றாள். அவளுக்கு வேறு பெயரை சொல்ல விருப்பமில்லாமல் இருந்ததால் அவனின் பெயரையே சுருக்கி சொன்னவள் மனதுக்குள், ‘இவ வேற தொண தொண என்று கேள்வி கேட்டிட்டு இருக்கிறாள். கேள்விக்கு பிறந்தவள்… ஐயோ இப்போ எப்படி சமாளிப்பேன்? சந்தியா பேபி முடியலடி இதுக்கு மேல பொய் சொல்றதுக்கு…’ என்று  நினைத்தவள், மேலே கேள்வி கேட்க போனவளிடம்,

“தூக்கம் வருது ப்ளீஸ் டி நாளைக்கு பேசிக்கலாம்” என்றவாறு படுத்து உறங்க போனாள். ஆனால் உறங்காமல்  எப்படி நாளைய நாளை சமாளிப்பது என்று மட்டும் யோசித்துக் கொண்டிருந்தாள்.

அறைக்கு வந்த ஆத்ரேயன் குளித்து வந்ததும் ஆகாஷ் கேள்வி கேட்க இடம் கொடுக்காமல், “தலை வலிக்குதுடா” என்றபடி தூங்கி விட்டான்.

வெள்ளிக்கிழமை நன்றாக தூங்கி எழும்பியவள் சனிக்கிழமை முதலாம் ஆண்டு மாணவர்களின் நிகழ்ச்சி சம்பந்தமான ஒத்திகைக்காகச் சென்றாள். போன கிழமை தாமதமாகச் சென்று குப்பை அள்ளியது நினைவுக்கு  வர,  சொல்லிய நேரத்துக்கு முன்பாகவே சந்தியாவுடன் சென்றுவிட்டாள்.

நண்பர்களுடன் வருகை தந்த ஆத்ரேயன் அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியாவது செய்ய வேண்டும் என எதிர்பாத்திருந்தான். அனைவரையும் ஊக்குவிப்பதில் அவனை மிஞ்ச ஆளில்லை. எல்லாரும் என்னென்ன நிகழ்ச்சியில் பங்கு பெற போகிறார்கள் என்று ஒவ்வொருத்தராக கேட்டவன் சந்தியாவில் வந்து நின்றான்.

“நான் கவிதை எழுத போகிறேன்” என்றவளை விஷம சிரிப்புடன் நோக்கியவன், 

“எனக்கு எழுதி அனுப்பிய போல நான்கு வரியில் எழுதாமல் கொஞ்சம் நீளமா எழுதும்மா” என்றான். எல்லாரும் அங்கு சிரிக்க தொடங்கி விட்டனர். சந்தியாவோ வைஷ்ணவியை முறைத்தபடி நின்றாள். ‘ஐயோ சண்டையை மூட்டி விடுறதுலயே இவன் குறியாக இருக்கானே…’ என்று மனதில் திட்டியவள் சந்தியாவை பார்த்து கண்களால் இறைஞ்சினாள்.

அடுத்து வைஷ்ணவியை கை காட்டி சொல் என்பது போல சைகை செய்தான். “நான் பாட போகிறேன்” என்றாள். “இங்கு நிறைய பேர் பாட பெயர் கொடுத்து விட்டார்கள் சுசிலா மேடம் நீங்க ஆடலாமே” என்றான் கேலிக்குரலில்…

‘என்னது ஆடுறதா??? இவனுக்கென லூசா???’ என்று யோசித்தவள், “எனக்கு ஆட தெரியாது” என்று வாய் கூசாமல் பொய் சொன்னாள். அவள் பரதநாட்டியம் பயின்றதை நன்கு அறிந்தவன் அவளை சந்தேகமாக பார்த்து, 

“நான் தான் கோரியோக்ராபர்,   உனக்கு நான் பழக்கி விடுவேன்.நீ ஆடணும்… மேலே ஒரு வார்த்தை பேசாதே” என்றான். அவளோ மனதுக்குள்,

‘இவன் நம்மள ஆட வைக்கிறதிலேயே குறியா இருக்கான்… என் விருப்பத்தை எதிலேயும் கேட்கவே மாட்டானா?’ என்று நினைத்துக் கொண்டாள். பயமில்லாமல் எல்லோர் முன்னிலையிலும் பாட தெரிந்தவளுக்கு நடனம் என்றதும் ஒரு வித பயம்  ஏற்பட்டது.

நடனத்துக்கு பெயர் கொடுத்தவர்களை அழைத்தவன்,  ஜோடி நடனம் ஒன்று, ஆண்கள் மட்டும் உள்ளடங்கிய ஹிப்ஹாப் நடனம் ஒன்று,  என இரு நடன நிகழ்ச்சிகளை ஒழுங்குப் படுத்தி வைத்து இருந்தான். ஹிப்ஹாப் நடனத்துக்கான அசைவுகளை சொல்லிக் கொடுப்பதற்காக மேடைக்கு ஏறினான்.

நடனமாட கூடிய  லூசான ஜீன்ஸ் உம் டிஷர்ட் உம்  அணிந்திருந்தவன் பாடலை போட்டதும் கைகள்  இரண்டையும் தட்டியபடி ஆட தொடங்கினான். அவனின் நடனத்தை வாயை திறந்தபடி பார்த்துக் கொண்டிருந்தவர்களில் வைஷ்ணவியும் ஒருத்தி. இருந்து, படுத்து, சுழன்று என பல பரிணாமங்களில் பிரபு தேவா போன்று ஆடியவனை கண் கொட்டாமல்  பார்த்தவள் மனதுக்குள், ‘கிளிஞ்சுது  போ… இவன போல ஆடுனா நாலு நாளைக்கு என்னால எழும்ப முடியாது. இவன் பழக்கி  நான் ஆடி இதெல்லாம் நடக்கிற கதையா???நல்ல காலம் இது ஆண்கள் மட்டும் ஆடுற டான்ஸ். இல்லாட்டி என்னை தான் முதலில  இந்த முட்டாள்  ஆட சொல்லி இருப்பான்.’ என்று சலித்துக் கொண்டாள்.

அவன் நடனத்தை பார்த்த ஆண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “இத போல எப்படிடா ஆடுறது???” என்று அவர்கள் தங்களுக்குள் பேசியது வைஷ்ணவிக்கு விளங்க, அவர்களை பார்த்து சிரித்தவள், “உங்க பாடு டர் தான்” என்றாள். “ஆ நீயும் தான் ஆடணும்… அப்போ பார்த்துக்கலாம்” என்று அவர்களும் பதிலுக்கு கிண்டலடித்தனர். ஆடி முடிய அங்கு பெரிய கரகோஷம் எழுந்தது.

கைதட்டியவர்களை பார்த்து முறைத்தவன், “நீங்க கை தட்டுறதுக்காக நான் ஆடல… எப்படி ஆடணும் என்று கவனிச்சு நீங்க ஆடுறதுக்காக தான் ஆடி காட்டினேன்” என்றான்.

அந்நடனத்தை ஆடுவதற்காக,  ஆத்ரேயன் அழைத்ததும் அதை  ஆட பிரியப்பட்டவர்கள் தயக்கத்துடன் மேடைக்கு வந்தனர். “கம் ஆன் கைஸ்” என்றவன் பாடலை போட சொல்லி சைகை செய்து விட்டு முதல் ஸ்டெப்பை போட்டு காட்டினான்.

முதல் ஸ்டெப்பிலேயே மலைத்தவர்கள் அதனை கஷ்டப்பட்டு ஆடி காட்டினார்கள். அவனும் மிக பொறுமையாக ஒவ்வொருத்தராக அசைவுகளை திருத்திக் கொண்டிருந்தான்.. அவர்கள் கஷ்டப்பட்டு தட்டு தடுமாறி ஆடுவதை பார்த்த வைஷ்ணவிக்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வர கட்டுப்படுத்த முடியாமல் சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தாள். நேரே கதிரையில் இருந்து  அவள் சிரிப்பதை பார்த்த மாணவர்கள் ஆடுவதற்கு சங்கடப்பட்டுக் கொண்டிருந்தனர்.

அவளுக்கு முதுகு காட்டி பழக்கிக் கொண்டிருந்த ஆத்ரேயன், “வாட் ஹாப்பண்ட் ?” என்றவாறே அவர்கள் பார்வை போகும் திசையை அறிந்து திரும்பி பார்த்தான். அவள் சிரிப்பதை பார்த்தவனுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது… பாட்டை நிறுத்த சொல்லி சைகை காட்டியவன், முழுதாக திரும்பி கை கட்டியபடி அவளை கண் வெட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றான். பாட்டு நின்றும் அவள் கட்டுப்படுத்த முடியாமல் வாயை மூடி சிரித்தவள் எல்லாரும் பார்ப்பதை உணர்ந்து கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினாள்.

அப்போது தான் ஆத்ரேயன் கையை கட்டியவாறு தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை கவனித்தவள் பயந்தபடி எழுந்து நின்றாள்.

சுட்டு விரலை நீட்டி, “வா” என்றழைத்தான் ஆத்ரேயன். ‘தூங்குற சிங்கத்தை சொறிஞ்சுட்டனே… நெட்டையன் இப்போ என்ன பண்ண போறானோ?’ என்று பயந்தபடி அவனருகே சென்றவளுக்கு நிசப்தமான அந்த மண்டபத்தில் காதில் கோய்ங் என்று ஒரு சத்தம் மட்டும் கேட்டது. ஆம் அவளை அவன் அறைந்திருந்தான்.

அவன் இப்படி பெண்கள் மீது கை நீட்டி யாரும் பார்க்கவில்லை என்பதால் அனைவருக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது. எல்லோரும் வாயை கப்பென்று மூடிக் கொண்டனர் .வலியை பொறுத்துக் கொண்டவளுக்கு அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எல்லார் பார்வையும் அவள் மேலே நிலைத்திருந்தது. தன்னை காக்க வேண்டியவன் தன்னை அடித்ததும் கண்ணீர் பொத்துக் கொண்டு உடைப்பெடுத்தது..

“பீஹேவ் யுவர் செல்ப்… அவர்களை பார்த்து சிரிப்பதற்கு யூ ஆர் நாட் ஏ சைல்ட் எனிமோர்… ட்ரை டு பீ மேச்சுர்ட் கேர்ள்… என் கண் முன்னாடி நிக்காதே வெளிய போ” என்று கத்தியவன், “கம் ஆன் கைஸ்…பார்கெட் தட் டாக்” என்றபடி தனது வேலையை தொடங்கினான்.

அவமானம் ஒரு பக்கம் வலி ஒரு பக்கம் என தலையை குனிந்தபடி கன்னத்தில் கை ஒன்றை பதித்தபடி வெளியேறியவளுக்கு தெரியும் தான் நடந்துக் கொண்டது பிழை என்று…

 ‘அதுக்காக இப்படியா அடிக்கணும்? வாயால சொல்ல வேண்டியது தானே… போதாததுக்கு என்ன டாக் என்று வேற திட்டுறான். நான் டாக் இல்லடா நீ தான் டாக் அதுவும் சொறி டாக்” என்று குழந்தை போல திட்டிக் கொண்டு விம்மியபடி அறையை அடைந்தவள் துக்கம் தாழ முடியாமல் அழுதழுது தூங்கி போனாள்.

தாமதமாக வந்த சந்தியாவுக்கு குழந்தை போல் விம்மியபடி படுத்திருந்த வைஷ்ணவி மேல் பரிதாபமாக இருந்தது.”நீ ஏன் டி சிரிச்ச?” என்றவாறே அவளை அணைத்துக் கொண்டாள். தோழி தோளில் சாய்ந்தவளுக்கு கண்ணீர்  மட்டும் நிற்கவில்லை.  அவனை எப்படி எங்கே லாக் பண்ண முடியும் என்று யோசித்துக் கொண்டே இருந்தாள். அடுத்தநாள் ஒத்திகைக்கு வரமுடியாது என்று விடுதியிலேயே தங்கி விட்டாள்.

தனியாக வந்த சந்தியாவை கவனித்த  ஆத்ரேயன் அவள் வரமாட்டாள் என்பதை ஏற்கனவே எதிர்பார்த்து இருந்தான். போகும் போது சந்தியாவை அழைத்தவன்,

“உன் நண்பி கிட்ட சொல்லு என் கிட்ட இருந்து எப்போவும் அவள் தப்பிக்க  முடியாது என்று” என்றவாறே தன்னறைக்கு புறப்பட்டான்.

சந்தியா அவன் கூறியதை வைஷ்ணவியிடம் கூறினாள். “அவன் என்ன பெரிய ஆளா?? அவன் வீரம் எல்லாம் பொம்பளைங்க கிட்ட மட்டும் தான்” என்று பொரிந்து தள்ளிய  வைஷ்ணவிக்கு மனதில் கோபத்தீ திகு திகுவென பற்றி எரிந்தது.

ஒழுங்காக தூங்காததால் வெள்ளி கிழமை  ஓய்வு எடுத்தவள் திங்கட்கிழமை கல்லூரிக்குச் சென்றாள்.  கேன்டீனில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆத்ரேயன் அவளை வர சொல்லி கைகளால் அழைத்தான். “இந்த வில்லங்கம் நம்மள இப்போ எதுக்கு கூப்பிடுது?” என்று முணுமுணுத்தபடி வந்து நின்றாள்.

“நேற்று ஏன் வரல?” என்று கேட்டவனிடம், “கொஞ்சம் உடம்பு சரி இல்லை” என்று சமாளித்தவளுக்கு சந்தியா எழுப்ப எழுப்ப அவளுக்கு திட்டிவிட்டு போர்வைக்குள் புகுந்து தூங்கியது நினைவுக்கு  வந்தது. “இனி ஒழுங்கா வரும் வழியை பார்… வராததுக்கு தண்டனையாக 500 தடவை மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி பின்னேரம் கொண்டு வந்து தா” என்று கூறியவன் அவளை போகுமாறு சைகை செய்தான்.

அவனின் தொடர் தொல்லைகளால் பூவாக இருந்தவள் புயலாக மாறினாள். அவனின் செயலுக்காக மனசுக்குள், ‘மன்னிப்பு கேக்கணுமாமே … அடேய் தடியா  உன்னோட இந்த திமிருக்கு உன்ன கதற விடணும்டா…என்ன பண்ணலாம்?’ என்று யோசித்துக் கொண்டே வகுப்புக்குச் சென்றவளுக்கு தலையில் இடி விழாத குறையாக ஐந்து அசைன்மெண்டுகள் அடுத்த நாளே சப்மிட்  பண்ண சொல்லி இருந்தது.

“என்னடி இது?? நான் என்ன  மெஷினா ஒரு நாளில் எப்படிடி ஐந்து அசைன்மெண்டுகள் செய்ய முடியும்… இப்போ என்னடி பண்றது??” என்று சாந்தியாவிடம் பாவமாக கேட்டாள்.

“இதுக்கு தான் டி சீனியர் யாரையும் லவ் பண்ணி கைக்குள போட்டு வச்சிருக்கணும்… இப்படியான நேரத்தில் ரொம்ப உதவியா  இருக்கும்.ஆத்ரேயன் சீனியர்  போல ஒருவர் கிடைச்சா  இன்னும் நல்லா இருக்கும்… அவர் பேட்ச் டாப்பர் தெரியுமா?? யாரு ட்ரை பண்ணியும் மடியவே மாட்டேன் என்கிறார் டி” என்று  கண்ணை விரித்து சொன்னவளை ஆச்சரியமாக பார்த்த வைஷ்ணவிக்கு அவன் பேட்ச் டாப் என்பது புது  செய்தியாக இருந்தது. ‘நெட்டையன்  படிப்புலயும் புலி போல’ என்று நினைத்தவளுக்கு ஒரு யோசனை தோன்ற  குறும்புடன் சிரித்தவள்,

“ஆத்ரேயா இனி நீ என் அடிமைடா” என்று சூளுரைத்தபடி பாடத்தை  கவனித்தாள்.

வகுப்பு முடிந்து செல்லும் போது சந்தியாவை போக சொன்னவள் சற்று தள்ளி நின்றபடி மரத்தடியில் இருந்தோருக்கு மத்தியில் இருந்த ஆத்ரேயனை சுட்டு விரலால் வர சொன்னாள்.  அது அங்கிருந்த எல்லாருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. “நானா” என்று கேட்ட ஆகாஷிடம்,

“இல்லை” என்று சைகையில் சொன்னவள் பக்கத்திலிருந்த ஆத்ரேயனை காட்டினாள்.

“டேய் உன்ன தானாம்டா” என்றபடி அனைவரும் அவளை வெறித்து பார்த்தனர்.

அவளின் நடவடிக்கை ஆத்ரேயனின் கோபத்தை அதிகரிக்க, “என்னடி லந்தா???” என்று கேட்டபடி சட்டை கையை மடித்தவாறு அவளருகில் வந்தவன், “அறைஞ்சேன்னா உன் பல்லெல்லாம்  கொட்டி போய்டும்… இந்த திமிர வேற யார்கிட்டயும் வச்சுக்கோ… என் கிட்ட வேணாம்…” என்று புறங்கையால் அடிப்பது போல காட்டியவன் மேலும் அவளின் சுட்டு விரலை தன் கையால் பிடித்து, “கைய நீட்டி கூப்பிடுறியா??” என்றபடி அதை முறுக்கினான். வலி தாங்க முடியாமல் அவளும்,  “ஆ… விடுங்க வலிக்குது” என்று சத்தமாக கத்தியவளிடம்,

“கொன்னிருவேன்” என்றபடி திரும்பி நடந்தான்.

“எதுக்கு கூப்பிட்டேன் என்று கேட்கவே இல்லையே Mr .ஆத்ரேயன்” என்றாள். அவளின் பெயருச்சரிப்பில் திரும்பியவன் கண்களில் சினம் ருத்ரதாண்டவமாடியது. 

“என்னடி பேர் சொல்லி கூப்பிடுற??? கொழுப்பா???” என்றவளிடம், “அதானே உங்க பெயர். உங்களுக்கு  பிடிக்காட்டி புருஷன்னு கூப்பிடவா ??” என்று விஷம சிரிப்புடன் கண்ணை அடித்து கேட்டாள். அவ்வளவு நேரமும் சிங்கம் போல் சிலிர்த்துக் கொண்டிருந்தவன் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

அவனின் அதிர்ச்சியை போக்குவதற்காக அவன் கண் முன்னால் சொடக்கிட்டவள்,  “சொல்லுங்க கூப்பிடவா? தாலி உள்ள தான் இருக்கு எடுத்து வெளிய போடவா?” என்று கேட்டாள். ஒரு கணம் திகைத்தவன் உடனே சுதாரித்து, “என்ன மிரட்டுறியா ?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் வினவினான்.

“சே சே… நான் யாருங்க உங்கள மிரட்டுறத்துக்கு? நீங்க தான் பேட்ச் டாப்பர் , பேஸ்கெட் பால் சாம்பியன், யூனியன் லீடர், மேல் மாடல்… ஆ … அப்புறம் டான்ஸ் கோரியோகிராபர்… இப்படி பல திறமையுள்ள தி கிரேட்   ஆத்ரேயன் ஆச்சே. உங்கள போய் நான் மிரட்ட முடியுமா? என்ன போல பொண்ணுக்கு நீங்க புருஷன் என்று சொன்னா  அத போல பெருமை வேற எங்கயும் இல்ல. அப்படி நீங்க தான் சொல்லி இருக்கீங்க. சோ நான் சொல்லி பெருமை படலாம் என்று நினைச்சிருக்கேன்” என்றவள் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு தாடையை தடவியவாறே, “ஆனா பாருங்க உங்கள போல ஒருவர் என்ன போல சுமாரான நோ அப்படி இல்ல அசிங்கமான  பொண்ண பொண்டாட்டி என்று சொல்ல முடியுமா? உங்கள தேடி தினம் தினம் எவ்வளவு ப்ரோபோசல் வருது… அன்னைக்கு நான் கொண்டு வந்து தந்த லெட்டர் தந்த பொண்ணு கூட அழகான பொண்ணு தான்… அவங்க முன்னாடி என்னை  பொண்டாட்டி என்று  சொல்றது உங்களுக்கு அசிங்கமில்லையா?? அத நினச்சா மட்டும் தான் கொஞ்சம் கவலையா இருக்கு… நீங்களே சொல்லுங்க என்ன பண்ணலாம்?” என்றபடி புருவத்தை உயர்த்தி கேட்டாள் கேட்டாள்.

அவன் இந்த அதிர்ச்சியை எதிர் பார்க்கவில்லை. அவள் இவ்வளவு பேசி அன்று தான் கேட்டிருக்கிறான்… அவன் முகத்தில் கோவம் ருத்ரதாண்டவமாடியது. இந்த பெரிய கல்லை தலை மேல் போடுவாள் என்று கொஞ்சம் கூட அவன் யோசிக்கவில்லை. ‘தன்னை அடக்க ஒருத்தியா ?’ என்று யோசித்தவனுக்கு பிபி எகிறியது . ஆனால் இப்போது அதனை காட்ட முடியாது என்று நன்கு உணர்ந்துக் கொண்டவன், “சரி சொல்லு இப்போ என்ன பண்ணனும்? எதுக்கு கூப்பிட்ட?” என்று கோபத்தில் பற்களை கடித்தவாறு கேட்டான்.

“அப்படி வா மச்சான் வழிக்கு”  என்றவள் கையிலிருந்த பேப்பர்களை அலட்சியமாக அவன் புறம் நீட்டி, “எனக்கு நாளைக்கு ஐந்து அசைன்மெண்ட்ஸ்  இருக்கு… போன வாரம் லீவு எடுத்ததால் எல்லாம் நாளைக்கு சப்மிட் பண்ணனும். நீங்க எல்லாவற்றையும் நாளைக்கு செய்து நான் வர முதலே அந்தந்த லேப் இல் சப்மிட் பண்ணி விடுறீங்க… புரியுதா?” என்றாள். அதனை வாங்கி பார்த்தவன், “நீ தானே படிக்க வந்திருக்க… நீ தானே செய்யணும்” என்றான்  கோபத்தை அடக்கியவாறு. அவனை கேலியாக பார்த்தவள், “அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம்…. சொல்றத செஞ்சா சீனியர் இல்லாட்டி புருஷன் ஓகேவா ?” என்று சிரித்தபடி  கேட்டுவிட்டு “அப்பாடா… இன்னைக்கு நல்லா  தூங்கலாம்” என்று கையை தூக்கி நெட்டி முறித்தாள்.

அவள் சொல்லுவதை கேட்டுக்கொண்டு அவன் அமைதியாக நிற்பதை பார்த்த அவன் நண்பர்கள், “அவன் சிங்கம் போல சிலிர்த்து போன வேகத்தை பார்த்து நான் நினைச்சேன் அவளை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணனும் என்று… என்னடா அவன் இப்படி பம்முறான்?” என்று கிசு கிசுத்தனர்.தூரத்தில் இருந்ததால் வைஷ்ணவியும் ஆத்ரேயனும் பேசியது அவர்களுக்கு கேட்கவில்லை.

“நான் சொன்னது புரியும் என்று  நினைக்கிறேன்” என்று விசிலடித்துக்கொண்டு, ‘நல்லா கதறுடா’ என்று மனதுக்குள் திட்டிவிட்டு விடுதிக்குச் சென்றாள்.

முதன் முதலாக அன்று தான் ஆத்ரேயனின் வாய் மறு பேச்சு பேசாமல் அடங்கி இருந்தது. அவள் செல்வதை வெறித்து பார்த்தவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று குழப்பமாகவே  இருந்தது.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top