யுகம்-14

பெருமூச்செடுத்தவன் நண்பர்களிடம் என்ன சொல்லி சமாளிப்பது என்று நினைத்துக் கொண்டே நண்பர்களை நோக்கி நடந்தான். “என்னடா அவ என்னமோ சொல்லுறா… நீயும் பூம் பூம் மாடு போல தலையாட்டிட்டு வந்து நிக்குற..?” என்று கேட்ட ஒருத்தன் அவன் கையிலிருக்கும் பேப்பர்களை வாங்கி பார்த்தான். “அவ அசைன்மென்டை நீ ஏன்டா வாங்கிட்டு வந்த???” என்று கேட்டவனிடம் இதுக்கு மேல் சும்மா இருக்க முடியாது என்று முடிவெடுத்தவன், “அவ அப்பா ஹாஸ்பிடல்ல தானே இருக்கிறார்…ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக இருக்குதாம் அசைன்மென்ட்  செய்றதுக்கு உதவி செய்ய சொல்லி கெஞ்சி கேட்டா. நானும் பாவம் போனா போகுது செய்துக் கொடுக்கலாம்னு வாங்கிட்டு வந்துட்டேன்” என்றான்.

“இதெல்லாம் நம்புற போல இல்லையே… அவ கெஞ்சி  கேட்ட போலவே இல்லையேடா” என்று ஒருவன் சந்தேகமாக கேட்டான்.

‘இவன் ஒருத்தன் நேரம் காலம் தெரியாம சந்தேகப்பட்டுக்கிட்டு…உன் திறமையை இதுல காட்டு படிப்புல காட்டாதே…’ என்று மனசுக்குள் புழுங்கியவன் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தான்.

எல்லாம் நேருக்கு நேர் சுட சுட  பேசி பழகிய அவனுக்கு  சமாளிப்பது எல்லாம் மலையை பிளக்கும் வேலையாக இருந்தது. இதெல்லாம் பார்த்த ஆகாஷுக்கு  நண்பனை பார்க்க பாவமாக இருந்தது. “அவனை கொஞ்சம் விடுங்கடா” என்று கூறியவன், “நீ வா மச்சான்” என்று தோளில் கை போட்டபடி  அழைத்துச் சென்றான்.

கொஞ்ச தூரம் சென்றதும் ஆத்ரேயனிடம்,  “என்னடா பிரச்சனை?” என்று கேட்க,  ‘நீயுமாடா??’ என்ற தோரணையில் அவனை பார்த்த ஆத்ரேயன், “ஒண்ணுமில்லடா நான் அவளோட அத்தான் என்று  எல்லார்ட்டையும் சொல்ல போறதாக மிரட்றாடா” என்றவன், ‘யார்கிட்ட என்ன  என்ன பொய் சொன்னோம் என்று ஒரு லிஸ்ட் எழுதணும்’ என்று மனசுக்குள் காமெடியாக நினைத்துக் கொண்டான்

“அதுல என்னடா இருக்கு… சொன்னால் சொல்லட்டுமே” என்ற நண்பனை பார்த்து,  “இப்போதைக்கு வேணாம்டா … அந்த கதையை கொஞ்சம் விடேன் ப்ளீஸ்” என்றபடி முன்னே நடந்துச் சென்றான்.

அறைக்குச் சென்ற வைஷ்ணவி  முகத்தில் ஒரு வித மலர்ச்சி இருந்தது என்றாலும் அவன் இதுக்கெல்லாம் மசியக்கூடிய ஆளா என்று சந்தேகம் ஒரு மூலையில் இருந்துக் கொண்டே இருந்தது. அசைன்மென்ட் எதுவும் செய்யாமல் லேப்டாப்பில் படம் பார்த்துக் கொண்டிருந்தவளிடம், “என்னடி பயமில்லாம படம் பார்த்துட்டு இருக்கிற?” என்று சந்தியா   கேட்டாள்.

“அதெல்லாம் செய்யலாம் நீ உன் வேலைய பாரு” என்றபடி படத்தில் மூழ்கி போனாள். ஆத்ரேயனுக்கு அசைன்மென்ட் எல்லாம் பெரிய விடயமாகவே தெரியவில்லை.ஒரு மணி நேரத்தில் அனைத்தையும் முடித்தவன், ‘புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும் என்று நான் என்ன கனவா கண்டேன்’ என்று வடிவேல் பாணியில் மனதுக்குள் நினைத்தபடி எதுவும் செய்ய மனசில்லாமல் அப்படியே தூங்கிவிட்டான்.

காலையில் அவன் தொலைபேசிக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது வைஷ்ணவியிடமிருந்து… “என்ன சார் எல்லாம் முடிச்சிட்டீங்களா?” என்று. “இவளொருத்தி” என்று தொலைபேசியை ஆப் பண்ணி தூக்கி கட்டிலில் போட்டவன் கல்லூரிக்குச் சென்று அவளின் அசைன்மென்ட்ஸ் எல்லாம் சப்மிட் பண்ணிவிட்டு கேன்டீனில் உட்காந்திருந்தான்.

‘இந்த பய ரிப்ளை பண்ணவும் இல்லை. போனும் ஆப்… முடிக்காட்டி இப்போ என்ன பண்றது? கடவுளே காப்பாத்துப்பா’  என்றபடி கல்லூரிக்கு அறக்க பறக்க வந்தவள் அவளுடையது எல்லாம் சப்மிட் பண்ணி இருக்கவும் நிம்மதியாக கேன்டீனுக்கு போனாள்.

சந்தியாவையும் விட்டு விட்டு நேரத்துக்கு முந்தியே வந்ததால் கான்டீன் வெறிச்சோடி போய் கிடந்தது. ஆத்ரேயனும் ஒரு சிலரும் மட்டுமே அமர்ந்திருந்தனர். காபியை ஆர்டர் பண்ணியவள் அதனோடு போய் ஆத்ரேயன் இருந்த மேசையில் அவன் முன்னே அமர்ந்தாள்.

‘ஐயோ வந்துட்டாளே… இன்னைக்கு என்ன குண்டை தூக்கி தலையில் போட போறாளோ?’ என்று முதல் தடவையாக மனசுக்குள் பயந்தபடி உட்காந்திருந்தான்.

“எங்கே போன்?” என்று கேட்டவளிடம், “சார்ஜ் இல்ல” என்றபடியே அவளை பார்க்காமல் கண்ணாடியூடு வெளியில் பார்த்துக் கொண்டிருந்தான். ‘இவனுக்கு இன்னும் திமிர் அடங்கலை’ என்று யோசித்தவள், “அடுத்ததா என்ன உத்தேசம்?” என்று கேட்டாள்.

வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, “இப்போ எதுக்கு தொண தொண என்று பேசிட்டு இருக்க? நீ சொன்ன போல எல்லாம் செய்து சப்மிட் பண்ணிட்டேன்… இதுக்கு மேல உனக்கென்ன வேணும்?” என்று கேட்டான்.

அவளோ மனசுக்குள்,  ‘நீ ஏன்டா இப்படி துள்ளுற? உனக்கு என்ன டாஸ்க் கொடுக்கலாம் என்று யோசிச்சு யோசிச்சே தல வலிக்குது…  கொஞ்சம் டைம் தாடா…’ என்று நினைத்தவள், ‘தேவைப்படும் போது கேக்கிறேன்” என்றபடி காபியை  அருந்த தொடங்கினாள் .

அந்நேரம் பார்த்து அங்கு வந்து சேர்ந்தான் ஆகாஷ். இருவரும் ஒரே மேசையில் இருப்பதை பார்த்தவன் விறுவிறுவென மேசையருகில் வந்து உட்கார்ந்தவன், “இன்னைக்கு எத்தனை அசைன்மென்ட் கொண்டு வந்திருக்க ?” என்று கோபமாக கேட்டான்.

‘அவ விட்டாலும் இவன் விடமாட்டான் போலயே…. எப்படியோ அடிச்சு மோதட்டும்’ என்று யோசித்தபடி  தனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை எனபது போல் இருந்தான் ஆத்ரேயன். “இன்னைக்கு ஒண்ணுமில்லை அண்ணா” என்று சிரித்தபடி கூறினாள்.   “இங்க பாரு நீ அவன் மாமன் மகள் என்று எனக்கு தெரியும்  அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அத வச்சு என் நண்பனை விரட்டுனா நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன். வந்து 1st  இயர் கூட முடியல அதுக்குள்ள  உனக்கு அவ்வளவு திமிராடி?” என்று சினத்துடன் வினவினான். ‘சரி அவளை உசுப்பேத்திட்டான்… நம்ம பாடு என்ன ஆக போகுதோ?’ என்று யோசித்த ஆத்ரேயன் மறந்தும் அவள் புறம் திரும்பவில்லை.

ஆகாஷை விசித்திரமாக பார்த்த வைஷ்ணவி ஆத்ரேயனையும் பார்த்தாள். அவன் தன்னை பார்க்கவில்லை என்றதும் அவன் முன்னே சொடக்கிட்டாள். அவள் சொடக்கிட்டதில் ஆடி போனது ஆகாஷ் தான். வைஷ்ணவியை பார்த்த ஆத்ரேயன், “என்ன?” என்று சோர்வாக வினவினான். “என்ன பேச்சு இது?” என்று புருவத்தை தூக்கியபடி ஆகாஷை கண்களால் காட்டி கேட்டாள்.  அவளின் அதிரடியிலும் நண்பனின் பம்மலிலும் அதிர்ந்து போன ஆகாஷ், “நீ ஏன் மச்சி அடங்கி போற?” என்று கேட்டான். அவனை வெற்று பார்வை பார்த்தவன்  வைஷ்ணவியிடம், “இப்போ உனக்கு என்ன வேணும் ?” என்று கேட்டான்.

“அவர் என்கிட்டே மன்னிப்பு கேட்கணும்” என்றவள், ‘மாட்டினியாடா?’ என்று மனசுக்குள் சிரித்துக் கொண்டாள். “கிழிஞ்சிது போ …” என்று முணுமுணுத்தபடி நண்பனை பார்த்தான். நண்பனின் பார்வையை உணர்ந்த ஆகாஷ்,  “நான்  எதுக்கு மன்னிப்பு கேட்கணும் ? நீ தான் என்கிட்டயும் இவன் கிட்டயும் காலில விழுந்து மன்னிப்பு கேட்கணும்”  என்றான்.

‘இவன் வேற நேரம் காலம் தெரியாம ஓவரா பெர்பார்ம் பண்றானே’ என்று யோசித்த ஆத்ரேயன், “அடுத்து என்ன?” என்பது போல வைஷ்ணவியை பார்த்தான். அவளும் தனது கையை ஹை நெக் சல்வார் கழுத்தடிக்கு கொண்டு போனவள் கழுத்தை வருடி கொடுத்தாள். “கொல்றடி” என்று முணுமுணுத்த ஆத்ரேயன், “மன்னிப்பு தானேடா கேட்டு விடேன் டா…” என்று ஆகாஷிடம் சொன்னான்.

அவனின் கூற்றில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்தான். “நான் ஏன்டா கேக்கணும்? அவதானேடா கேக்கணும்” என்று வீராப்பாக உரைத்தவன் நண்பனின், “ப்ளீஸ்டா எனக்காக இந்த ஒரே ஒரு தடவை மட்டும்” என்ற கெஞ்சலில் கொஞ்சம்  இளகினான்.  “நீ வர வர சரி இல்ல மச்சான்…” என்றவன் நோட்புக்கை எடுத்தவாறே, “மன்னிச்சிடும்மா” என்றபடி விறுவிறுவென கேன்டீனை விட்டு வெளியேறினான் . ஆத்ரேயன் இவ்வாறு கெஞ்சி ஆகாஷ் பார்த்தது இன்று தான்… ஏதோ சரி இல்லை என்று தோன்ற “கண்டுபிடிக்கிறேன்” என்று சூளுரைத்தவாறு வகுப்பறைக்குச் சென்றான்.

அவன் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தவன், “இப்போ திருப்தியா?” என்று கேட்டவாறே எழுந்து வகுப்பறைக்குச் சென்றான்.

அவனின் தளர்ந்த நடை அவளுக்கே நெருடலாக இருந்தது. வாழ்க்கையில் அவன் வாங்கிய முதல் அடி அது. அன்புக்கு மட்டுமே அடி பணிந்தவன் இன்னொருவரின் அதிகாரத்துக்கு முதல் முறை பணிந்து நடக்கிறான். அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இக்கட்டான நிலையில் தவித்துக் கொண்டிருந்தான். வகுப்பறைக்குச் சென்றவன் ஆகாஷ் பக்கத்தில் உட்கார அவனோ முகத்தை திருப்பி வைத்துக் கொண்டிருந்தான்.

“புருஷன் கிட்ட கோவிச்ச பொண்டாட்டி போல ஏன்டா முகத்தை திருப்பிட்டு இருக்க??” என்று நக்கலாக கேட்டு நண்பன் தோளில் கைபோட்டு சிரித்த ஆத்ரேயனை பார்த்து அவன் சமாதானமானாலும் அவன் எண்ணம் முழுக்க ‘வைஷ்ணவி எதுக்காக ஆத்ரேயனை அடக்குகிறாள்?’ என்பதிலேயே நிலைத்திருந்தது.

வகுப்பு முடிந்து வைஷ்ணவி வந்த போது ஆத்ரேயனின் நண்பர்கள், “ஏய் இங்கே வா…” என்று அவளை அழைத்தனர். ‘இவனுக எதுக்கு அவளை கூப்பிடுறானுக?’ என்று புருவத்தை சுருக்கி யோசித்தபடியே அவளை கண்  வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

கொஞ்சம் திமிராகவே வந்தவள், “என்ன அண்ணா ?” என்று கேட்டாள். “உனக்கு கை இல்லையா? உன் அசைன்மென்ட்ஸ் எல்லாம் எதுக்கு இவன் கிட்ட கொடுக்கிற?” என்று அதிலொருவன் கேட்க பதிலெதுவும் பேசாமல்  கழுத்தை வருடியபடி ஆத்ரேயனை விஷமமாக பார்த்தாள்.

“நான் இங்கே கேட்குறேன்… உனக்கென்னடி அங்கே பார்வை? திமிராடி ?” என்று கேட்டவன் பொங்கி எழுந்தான். அவளின் பார்வையின் அர்த்தத்தையும் நிலைமை மோசமாக போவதையும் உணர்ந்த ஆத்ரேயன், “அவளை விடுங்கடா” என்று இறைஞ்சும் குரலில் நண்பர்களிடம் சொன்னான். அவனின் இந்த குரல் அவர்களுக்கு புதிது.

“ஏன் டா விடணும்? இவளுக்கு கொழுப்பேறி போச்சு… அழுதுக் கொண்டிருப்பதால் ராகிங் பண்ண வேண்டாமென்று நீ சொன்னதால் தான் சும்மா விட்டோம்… ஆனா இவ சரி இல்லை” என்று ஒருத்தன் எகிறினான். ஆகாஷோ மனசுக்குள்,  ‘அவ கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்று இவன் தலையிலும் எழுதி வச்சிருக்கு போல’ என்று நினைத்துக் கொண்டான்.

இவ்வளவு நடந்தும் அவளின்  பார்வை ஆத்ரேயனிலேயே நிலைத்திருந்தது. புருவத்தை தூக்கியபடி கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள். ஆத்ரேயன் மனதில், ‘அவனுகளை பார்க்கிறாளா பாரு… என்னையே பார்த்துக்கிட்டு… இதுக்கும் நான் தானே சமாளிக்கணும்’ என்று  நினைத்தவன்,  “சொன்னா கேளு அவளை விடு… பார்த்துக்க வேண்டிய நேரம் நான் பார்த்துக்கிறேன்” என்று  கறாரான குரலில் கூறினான். அவனின் இந்த குரலுக்கு எதிர் குரல் கொடுக்கும் தைரியம் யாருக்குமில்லை.

“என்னமோ போடா” என்றபடி நண்பர்கள் தங்கள் வேலையை தொடர்ந்தனர்.  ‘அப்பாடா’ என்று மனசுக்குள் நினைத்தவன் போ என்று அவளை கண்களால் சைகை செய்தான். அவனை பார்த்து குறும்பு மின்ன கண்ணை அடித்தவள் சிரித்தபடியே நடந்துச் சென்றாள்

இப்படியே வார நாட்கள் கடந்து சனிக்கிழமையை அடைந்தது.

“எந்திரிடி… போன முறை போல என்னால கூட்ட முடியாது…  ப்ளீஸ் டி.” என்று சந்தியா வைஷ்ணவியை உசுப்பிக் கொண்டிருந்தாள். ” இவ ஒருத்தி ஒழுங்கா தூங்கவும் விடுறா இல்ல” என்று சலித்தபடி எழுந்தவள், “இனி எந்த கொம்பனும் நம்மள கூட்ட சொல்ல முடியாது.” என்றபடி சாவகாசமாக குளித்து முடித்து வந்தாள்.

“உன்னை எல்லாம் ஆத்ரேயன் சீனியர் அறைஞ்சிருக்க கூடாது கீழ போட்டு மிதிச்சிருக்கணும்” என்றபடி வைஷ்ணவியை இழுத்துக் கொண்டு சந்தியா ஒத்திகை பார்க்கும் மண்டபத்துக்கு விரைந்தாள்.

மிக தாமதமாக வந்ததால் சந்தியா தயங்கி நிற்க வைஷ்ணவியோ, “வாடி” என்றபடி உள்ளே அழைத்துச் சென்றாள்.

“எக்ஸ்கியூஸ் மீ” என்று உள்ளேச் செல்ல ஆயத்தமாக ஆத்ரேயன் வைஷ்ணவியை உறுத்து விழித்தவன் எதுவும் பேசாமல்  தனது பயிற்சியை தொடர்ந்தான்.

“எப்படி?? என்னோட  பவர்??” என்றபடி காலரை தூக்கி காட்டியவள் அவன் நிக்கும்  இடத்துக்கு வந்திருந்தாள். அவன் அவளை ஏறெடுத்தும்

பார்க்காமல் எல்லாருக்கும் பழக்கிக்   கொண்டே இருந்தான்.

‘என்ன திமிர் இவனுக்கு?? என்ன டான்ஸ்ல இருந்து தூக்கிட்டானா??? விடமாட்டேன்’ என்று மனதுக்குள் நினைத்தவள், “க்கும்… க்கும்…” என்று செருமினாள்.

அதனை கவனித்த ஆத்ரேயன் பெருமூச்சொன்றை விட்டுவிட்டு, “யூ கன்டினுயூ கைஸ்” என்றபடி அவளை நோக்கி வந்து அவளின் நேரே இரு கைகளையும் கட்டி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்றவன், “சொல்லுங்க” என்றான்.

“நான் டான்ஸ்ல இல்லையா? எனக்கு பழக்கும் உத்தேசம் இல்லையா???” என்றவளிடம்,

“நீ தான் போன வாரம்  வரவில்லையே … நான் நினைச்சேன் உனக்கு இஷ்டமில்லை என்று…சோ ஜோடி எல்லாம் செட் பணியாச்சு. அப்படி உனக்கு ஆட  ஆசை இருந்தா ஒருவனை கூட்டிட்டு வா…  ஆடலாம்” என்றபடி அவளை கூர்ந்து பார்த்தவன், “வேற ஏதும் பேசணுமா? நான்  போகலாமா?” என்று கேட்டான்.

அவன் வைஷ்ணவிக்கு அடங்கி போனான் ஆனால் முழுதாக அடங்க அவன் ஈகோ இடம் கொடுக்கவில்லை. அவனது கோபத்தை பொறுத்துக் கொண்டவளால் புறக்கணிப்பை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அவனை உறுத்து விழித்தவள், ‘எனக்கே ஆப்பா? இருடா உனக்கு பெரிய ஆப்பா வைக்கிறேன்’ என்று வன்மமாய் நினைத்தவள் அவனிடம்,

“எனக்கு கண்டவனோட எல்லாம் ஆட முடியாது. கண்ட இடத்துல கை வைப்பாங்க. அதனால உங்களோட ஆடலாம்னு  முடிவு பண்ணி இருக்கிறேன் என்ன சொல்றீங்க?” என்று கண் சிமிட்டி கேட்டாள்.

புருவத்தை சுளித்தவன், “வாட் ? நானா??? நான் எப்படி உன் கூட ஆடுறது??? நான் என்ன 1st இயர்  ஆ???” என்று கேட்டவனிடம்,

“நீங்க ஆடினா இங்க யாரும் எதிர்த்து கேள்வி கேட்கவே மாட்டாங்க… யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்ல… நீங்க ஆடலாம்… ச்சே ச்சே… ஆடணும்” என்றவாறே கழுத்தை வருடினாள்.

“இவ ஒருத்தி எதுக்கெடுத்தாலும் கழுத்துக்கிட்டயே கையை கொண்டு போவா… சரியான இம்சை டி நீ” என்று மூணு முணுத்தவன், “அப்போ நானும் கண்ட கண்ட இடத்துல கை  வைப்பேன் பரவாயில்லயா ??” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி  கேட்டான். அது அவளுக்கு தர்மசங்கடமான கேள்வி தான்… ஆனால் கொஞ்ச நேரம் யோசித்தவள், “பரவாயில்லை புருஷன் தானே நான் அட்ஜஸ்ட்       பண்ணிப்பேன்” என்று கண்ணடித்தாள்.

அவள் பேச்சை கேட்டு தலையிலடித்துக் கொண்டவன்,

“இருக்குடி உனக்கு” என்று முணுமுணுத்து விட்டு, “வா வந்து தொலை” என்றவாறு முன்னோக்கிச் சென்றான்.

பாடலை போட சொன்னவன் பாடல் தொடங்கியதும் அவள் இடையை இரு கைகளால் பிடித்து இழுத்து வலது கையை இடையை சுற்றி இறுக்கி அணைத்தபடி இடது கையால் அவள் வலது கையை கோர்த்துக் கொண்டான்.

“உன் இடது கையை என் தோள் மீது வை” என்றவன் பாடலுக்கேற்றவாறு இரு உடல்களையும் இணைத்து அசைத்தான்.

அவன் இழுத்த போதே அதிர்ச்சியுடன் அவன் மேல் விழுந்தவள்… அவனின் செய்கைகளால் கூச்சத்தில் நெளிந்தாள். ‘என்ன இவன் சும்மா சொல்றான் என்று பார்த்தா இப்படி பண்ணுறானே’ என்று  ஆரம்பத்தில் மனதில் நினைத்தவளுக்கு மஞ்சள் கயிற்றின் மாயத்தால் அவன் தன்னவன் என்ற எண்ணம் மேலிட்டது. 

அவனின் நெருக்கமும் பிரத்தியேக நறுமணமும் அவள் நெற்றியில் பட்ட அவன் மூச்சு காற்றும் அவளுக்கு ஒரு வித சிலிர்ப்பை உண்டாக்கியது.

அவளின் இடை மீது அவன் கொடுத்த அழுத்தம் அவளின் உணர்ச்சிகளை தூண்ட எங்கேயிருக்கிறோம் என்பதை மறந்து கண் மூடி அவனுடன் அவள் கன்னத்தை அவன் மார்பின் மீது பதித்து அவனுடன்  ஒன்றினாள்.

ஆரம்பத்தில் அவஸ்த்தையில் நெளிந்தவள் தன்னுடன் ஒன்றுவதை பார்த்து கொடுப்புக்குள் சிரித்தவன் அவள் காதில் அவனது மீசை முடி உரச நெருங்கி குனிந்து,

“மேடம் … உங்க பீலிங்ஸ்   எல்லாம்  கொஞ்சம் தள்ளி வச்சிட்டு இப்போ ஆடலாமே” என்றான்.

அவன் நெருக்கத்தை ஆழ்ந்து அனுபவித்தவள் அவன் குரலிலும் கூற்றிலும் நிஜ உலகுக்கு வந்ததும் எதிர் பாராத விதமாக அவனை தள்ளி விட்டாள். அப்போது தான் தனது செய்கையின் வீரியம் விளங்க,

‘ஐயோ இவன் முன்னாடி இப்படி அசிங்க பட்டாச்சே! இப்போ எப்படி  அவன் முகத்தில முழிக்கிறது? சும்மாவே பேரழகன் என்று நினைப்பு வேற அவனுக்கு… இனி இவனை  கைலயே பிடிக்க முடியாதே…! வைஷு பேபி உனக்கு கொஞ்சம் கூட கண்ட்ரோல்   இல்லையாடி ??’ என்று தன்னை தானே குனிந்து நின்று கடிந்தவள் சற்று நேரம் கழித்து  நிமிர்ந்து பார்த்தாள். பாடல் நிற்பாட்டி இருக்க அனைவரும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆத்ரேயனோ இரு கைகளையும் விரித்து காட்டி முகத்தினை  கடினமாக வைத்துக் கொண்டு,

“வாட் இஸ் திஸ்??” என்றான். ஆனால் அவனின் கண்களில் குறும்பையும் வாய் நுனியில் அடக்கப்பட்ட சிரிப்பையும் வைஷ்ணவி கண்டுக் கொண்டாள்.

‘இப்போ எப்படி சமாளிப்பது?’ என்று யோசித்தவள், “போன வாரம் வராததால் எனக்கு ஸ்டெப்ஸ் கஷ்டமா இருக்கு இன்று பார்த்திட்டு நாளைக்கு ஆடுறேனே” என்றாள். அவளை நக்கலாக  பார்த்தவன், “ஓகே யுவர் விஷ்” என்று தோளை உலுக்கியபடி  நடனத்தை பழக்க தொடங்கினான்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top