யுகம்-24

அவள் சென்றதும் அவன் மனதிலிருந்த கவலைகள் அனைத்தும் கோபமாக வெளிப்பட்டது. கோபத்தை கட்டுப்படுத்தும் வழி  தெரியாமல் மேசையிலிருந்த பூவாசை தூக்கி சுவரில் எறிந்து உடைத்தவன் குளியலறைக்குள் சென்று நன்றாக முகத்தில் தண்ணீர் அடித்து கழுவினான்.

சிறிது நேரம் கழித்து வெளியில் வந்தவன், சிற்றூழியரை அழைத்து கிளையன்ட்ஸ் ஐ நாளை சந்திப்பதாக சொல்லி அனுப்பியவன், மேலும் யாரையும் உள்ளே வர வேண்டாம் என்று சொல்லி ஷர்ட்டை திறந்துவிட்டு இரு கைகளையும் தலைக்கு வைத்தபடி காலை நீட்டி சோபாவில் சாய்ந்து கண் மூடி படுத்தான்.

தனது கேபினுக்குள் சென்றவளுக்கு அவன் மேல் கோபம் தீர்ந்த பாடில்லை. “கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாதவன். அந்த குழந்தை மேலே கூட பாசம் இல்லையா அவனுக்கு? செய்றதெல்லாம் செய்திட்டு இருக்கிறத பாரு” என்று பொரிந்து தள்ளினாள்.

அலுவலகத்தில் ஓய்வாக இருந்து பழக்கமில்லாத ஆத்ரேயனுக்கு அன்று ஓய்வு தேவைப்பட்டது. படுத்தவனுக்கு தூக்கம் வரவில்லை. மனம் பதட்டமாகவே இருந்தது. வீட்டுக்குச் செல்வதற்காக கார் கீயை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

எப்போதும் டிப் டாப் ஆக இருப்பவன், அன்று கலைந்த கேசத்துடனும் கோபத்தினால் சிவந்த  முகத்துடனும், ஷர்டின் முன் பக்கம் முழுதாக திறந்திருக்க வெற்று மார்புடன் வெளியேறியவனை பார்த்து அதிர்ந்த ஒட்டு மொத்த  கம்பெனி ஊழியர்களும் எழுந்து நின்றனர். அவன் செல்லும் வரை குண்டூசி விழுந்தால் கூட கேட்குமளவுக்கு நிசப்தமாக இருந்தது. அவன் கதவை திறந்ததும் எல்லாரும் குசுகுசு என பேச தொடங்க அது அவன் காதில் விழுந்து தொலைத்தது. ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் ஆத்திரமாக கதவை மீண்டும் திறந்து, “ஷட் அப் அண்ட் டூ யுவர் ஒர்க்ஸ்” என்று சிம்ம குரலில் கர்ஜித்தவன் எல்லோரையும் ஒரு தடவை நோட்டமிட்டுவிட்டு விறுவிறுவென வெளியேறினான்.

காரில் விரைவாக வீட்டுக்குச் சென்றவன் பிரிட்ஜ்ஜில் உள்ள பீரை எடுத்து குடித்தான். போதை ஏற ஏற அவன் காதல் கொண்ட மனம் வெதும்ப தொடங்கியது. அனாமிகா சொன்னதில் அவள் மேலுள்ள கோபம் அனைத்தும் அதை நம்பிய வைஷ்ணவி மேல் திரும்பியது. கோபம் என்பதை விட ஆதங்கம் கவலை மன உளைச்சல் என்று கூறலாம். மித மிஞ்சிய போதையில்,

“ஏன் டி நான் பொம்பள பொறுக்கியாடி ?? உன்னை  தவிர யாரையாச்சும் கண்ணுக்கு கீழ பார்த்து பேசி இருப்பனாடி ?? என் மேல உனக்கு கொஞ்சம்  கூட நம்பிக்கை இல்லையா? என் காதலை புரிஞ்சுக்காத நீ எனக்கு வேணாம்” என்று அகங்காரமாக கத்தியவன் கோபம் முழுவதையும் கையிலிருந்த க்ளாசில் காட்ட அது வெடித்து சிதறியது.

இடது  கையில் ரத்தம் வடிய அப்படியே படுக்கையில்  படுத்தவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது. அவனால் கண நேரத்தில் நிரூபிக்க முடியும் அவன் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் ஆனால் அப்படி தன்னை நிரூபித்து அவள் தன்னை நம்புவது அவனுக்கு பிடிக்காமல் இருந்தது.

கட்டிலில் படுத்தவன் கையில் ரத்தம் வடிய அப்படியே தூங்கி போனான்.  வேலை முடிந்ததும் கார்த்திக், கீர்த்தனா மற்றும் வைஷ்ணவி மூவரும் அனாமிகாவை பார்க்க வைத்தியசாலைக்கு விரைந்தனர். போகும் போது, “எதுக்கு சூசைடு அட்டெம்ப்ட்  பண்ணி இருப்பாங்க??” என்று கார்த்திக் கேட்க கீர்த்தனாவோ, “தெரியல” என்றாள்.  அனைத்துமறிந்த வைஷ்ணவி வாயை மூடிக் கொண்டு  மனதுக்குள் ஆத்ரேயனை திட்டியபடி வந்து சேர்ந்தாள்.

வைத்தியசாலையில் கட்டிலில் படுத்தவாறு இருந்தவள் முகத்தில் சோகத்தை தேடி பிடிக்க வேண்டி இருந்தது. ஸ்லீப்பிங் பில்ஸ் போட்டதாக வீட்டில் நடித்து ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தவள் டாக்டரை கைக்குள் போட்டுக் கொண்டு தனது நாடகத்தை அரங்கேற்றி இருந்தாள்.

அர்ஜுனும் தர்மேந்திரனும்  ஆத்ரேயன் அவளை நிராகரித்தது தான் காரணம் என்று யூகித்திருந்தார்கள். வேற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணலாம் என்று சொன்னதை காது கொடுத்து கேட்காதவள் ஆப்பிள் ஒன்றை சாப்பிட்டபடி காலை ஆட்டிக்   கொண்டு கட்டிலில் படுத்திருந்தாள். வைஷ்ணவி வந்ததும் கண நேரத்தில் முகத்தை சோகமாக மாற்றிக் கொண்டாள்.

மூவரும் அவளை நலம் விசாரித்து விட்டு வெளியே செல்ல இருந்த சமயம், “வைஷ்ணவி உங்க கூட தனியா பேசணும்” என்றதும் கார்த்திக்கும் கீர்த்தனாவும்  வெளியேறினர்.

“இப்போ கூட என்னை வந்து பார்க்கவில்லை  பார்த்தீங்களா ?? அவருக்கு என் குழந்தையை பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லையா??” என்று சோகமான குரலில் கேட்டாள்.

அவளின் சோகம் வைஷ்ணவியையும் தாக்க ‘ராட்சசன்’ என்று ஆத்ரேயனை மனதுக்குள் திட்டியவள், “கவலை படாதீங்க உங்க கல்யாணத்தை நான் முடிச்சு வைக்கிறேன்” என்றபடி வெளியேறினாள்.

வீட்டுக்கு வந்ததும் வராததுமாக கீர்த்தனாவை அனுப்பி விட்டு ஆத்ரேயன் வீட்டு கதவை தட்டினாள். ஏதோ சரி இல்லை என்று கீர்த்தனாவுக்கு புரிந்தாலும் அதை கேட்க பயத்தில் வாய் மூடி நடப்பதை வேடிக்கை பார்த்தாள். தூங்கி எழுந்தவன் இடது கையில் ரத்த கறையுடன் கதவை திறந்தான். அவனின் அலங்கோலத்தை பார்த்து அதிர்ந்தவள் ரத்தத்தை பார்த்ததும் அனைத்தையும் மறந்து, “ஐயோ என்னாச்சு?”   என்று அவனருகே ஓடிச் சென்று அவன் கையை பிடித்து காயத்தை பார்த்தாள்.

‘வந்துட்டா ஓவர் ஆக்ட்டிங் பண்ணுறதுக்கு’ என்று நினைத்தவன், அவளின் அக்கறை அவனுக்கு எரிச்சலை கூட்ட, “விடுடி கையை” என்று அவளிடமிருந்து கையை பிரித்தெடுத்தான். “இப்போ எதுக்கு இங்க வந்த??? உனக்கு என்ன வேணும்??? ப்ளீஸ் போயிடு. ஏற்கனவே கோபத்துல இருக்கிறேன். இன்னும் என்னை சீண்டாதே” என்று விடாமல் உறுமினான்.

அவன் கையை உதறியதால் வந்த கவலையை மறைத்தவள், “ஏன் நீங்க ஹாஸ்பிடல் போய்  அனாமிகாவை பார்க்கவில்லை?” என்று கேட்டாள்.

“லூசாடி நீ?? எனக்கு வாயில நல்லா  வருது. வேணாம்… இப்போ போகப்போகிறாயா? இல்லையா?” என்று கர்ஜித்தவனை கண்டு பயப்படாமல், “நீங்க …” என்று தொடங்கியவளை இடை மறித்தவன், “கொஞ்சம் நிறுத்து… நீங்க அனாமிகாவை கல்யாணம் பண்ணிக்கணும்… இத தானே சொல்ல வர்ற ??? ஓகே பண்ணிக்கிறேன். அதுக்கு முதல் அவ என் கூட பேசணும்” என்றான்.

அவன் ஒத்துக் கொண்டதில்  வைஷ்ணவிக்கு முறைக்கு மனதில் சந்தோஷம் பரவி இருக்க வேண்டும். ஆனால் அவள் மனதில் இனம் புரியாத வலி தோன்றியது.

மேலும் போகாமல் தயங்கி நின்றவளை பாய்த்தவன், “நவ் வாட்??” என்று கேட்டான். “உங்க கைக்கு பிரஸ்ட் எய்ட் பண்ண  வேணாமா???” என்று தயங்கியபடி கேட்டவளிடம், “நீ தந்த காயத்தை விட இதெல்லாம் பெரிய காயமே இல்ல… இப்போ போறியா ப்ளீஸ்” என்றவன் வாசலை சுட்டிக் காட்டினான்.

அவன் கூறியது அவளுக்கு மனதுக்குள் உறுத்த தொடங்கியது. வீட்டுக்கு வந்தவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. குளியலறைக்குச் சென்று அழுதவள் அனாமிகாவுக்கு தொலைபேசியில் நடந்ததை கூறினாள்.

“உண்மையாவா?? நாளைக்கே போய் பார்க்கலாம்” என்று குதூகலித்த அனாமிகாவை நினைத்து விரக்தியாக சிரித்துக் கொண்டாள்.

தான் கூறிய பொய்களை வைஷ்ணவி ஆத்ரேயனுக்கு சொல்லி இருக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் அடுத்தநாள் அலுவலகத்தில் காத்திருந்தாள். ஆத்ரேயன் அன்று விடுமுறை என்றதும் வைஷ்ணவியை கூட்டிக் கொண்டு அவன் வீட்டுக்கு புறப்பட்டாள். அவளுக்கு தெரியவில்லை சிங்கம் வெறிக் கொண்டு வேட்டையாட காத்திருக்கின்றது என்று. வைஷ்ணவி எத்தனையோ தடவை மறுத்தும் அவளை வற்புறுத்தி அழைத்துச் சென்றாள்.

வீட்டுக்கு வைஷ்ணவியுடன் வந்தவள் கதவை தட்ட, “கம் இன்” என்றபடி மடியில் லாப்டாப்பில் வேலை செய்தவாறு சோபாவில்  உள்ளங்கையில் கட்டுடன் அமர்ந்திருந்தான். 

“என்னாச்சு?” என்று கேட்ட அனாமிகாவை சட்டை செய்யாமல் அவள் பின்னால் நின்ற வைஷ்ணவியை எட்டி பார்த்தவன்,

“அது தான் கொண்டு வந்து விட்டாச்சே.  இடைல நீ எதுக்கு நந்தி மாதிரி…ஆபீஸ்  நேரத்தில நீ ஏன் வெளிய வந்தாய்? நாங்க கட்டி பிடிச்சிப்போம் கிஸ் பண்ணிப்போம்… அதெல்லாம் ஆ என்று வாய பிளந்து பார்க்கவா நிக்கிறாய்? வெளிய போடி” என்றான்.

அவன் வார்த்தையில் மனசுடைந்த வைஷ்ணவி கண்களில் கோர்த்த நீரை உள்ளிழுத்த படி பஸ்ஸில் ஆபீஸ்க்கு சென்றாள். அவன் தன்னை கிஸ் பண்ண போறான் என்று நினைத்து பூரித்த  அனாமிகாவுக்கு வைஷ்ணவியை அவமான படுத்தி துரத்தியது ரெட்டை சந்தோஷமாக இருந்தது.

அவளின் தாப பார்வை அவனுக்கு எரிச்சலாக இருந்தாலும் ஆத்திரத்தை  அடக்கிக் கொண்டு லாப்டாப்பை மூடியவன் வாசல் கதவை  காலால் சாத்திவிட்டு  கண்கள் பளபளக்க அவளை நெருங்கி  வந்தான்.

அவன் தன்னை முத்தமிட போகிறான் என்று நினைத்தவள் சுவரில் சாய்ந்து நிற்க, அவளருகில் துளைத்த பார்வையுடன் கடினமான எட்டுக்களுடன் வந்தவனை பார்த்து அவளுக்கு சிலிர்ப்பு உண்டானது. வெட்கப்பட்டுக் கொண்டே சுவரில் சாய்ந்துக் கொண்டாள். அவளை மூச்சு காற்று படுமளவுக்கு நெருங்கி  நின்றவன் தனது வலது கையை அவள் கன்னத்தில் வைத்து பெருவிரலால் கோலம் போட்டான்.

அதை கண்மூடி அனுபவித்து நின்றாள் அனாமிகா. கையை காதுக்கு அருகில் கொண்டு சென்று முடியை அலைந்தவன் அப்படியே முடியை பற்றி அவளை இழுத்து கீழே தள்ளி விட்டான்.

இந்த தாக்குதலை எதிர் பாராத அனாமிகா கீழே விழுந்தாள். நிலை கொள்ள சிறிது நேரம் எடுத்தவள் எழ முடியாமல் அப்படியே இருந்தபடி அவனை பயத்துடன் திரும்பி பார்த்தாள்.

அவளருகில் அழுத்தமான காலடிகளுடன் வந்தவன் கீழே குந்தியபடி அவள் தலைமுடியை ஆக்ரோஷமாக பிடித்தான், “நானே வில்லன்டி… என் கிட்டயே வில்லி வேலை பார்க்கிறாயா ??? உன் வயிற்றில்  என் குழந்தை வளருதா ?? யு…*** ” என்று கெட்ட வார்த்தையில் திட்டியவன். மேலும், “நீ எத்தனை பேரோட இருந்திருக்க எத்தனை அபார்ஷன் பண்ணி இருக்க என்கிற லிஸ்ட் என்கிட்ட இருக்குடி. இப்போ கூட உன்னை அடிச்சு துவம்சம்  பண்ண முடியும். உன் அப்பனால கூட என்னை ஒண்ணும்  பண்ண முடியாது… ஒரு பொம்பள கிட்ட என் வீரத்தை நான் காட்ட விரும்பல அதோட  உன் அண்ணனுக்காக உன்னை நான் சும்மா விடுறேன்” என்று சினம் பொங்க கர்ஜித்தான்.

அவன் முடியை இழுத்த வலி தாங்க முடியாமல் கதறியவளை பார்த்து,

“வலிக்குதாடி… நல்லா வலிக்கட்டும். இப்படி தான் எனக்கும் வலிச்சுது நீ சொன்ன பொய்யை நம்பி வைஷ்ணவி என் கிட்ட பேசின போது … அவள்  யார் என்று உனக்கு தெரியுமா ?? நான் தொட்டு  தாலி கட்டுன என் மனைவி… அவ கிட்டயே என்ன பத்தி தப்பா பேசி இருக்க… உன்ன எல்லாம் கொல்லணும்டி. இத வச்சு அவ மேல ஒரு தூசு பட்டாலும் நான் மனுஷனா இருக்க மாட்டேன். மைண்ட் இட்… நீ கடைசியா ஹாஸ்பிடல்ல நடிச்சது கூட எனக்கு தெரியும்” என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தவள்,  ‘இவனுக்கெப்படி எல்லாம் தெரியும் ??? வைஷ்ணவி  இவன்  மனைவியா? அப்போ அவளும் என்ன ஏமாற்றி இருக்காளா? உன்னை விடமாட்டேன்டி’ என்று மனதுக்குள் வன்மமாக நினைத்துக் கொண்டாள் .

அப்போதும் கோபம் அடங்காதவன் அவள் முடியை பிடித்தவாறே எழும்பி தர தரவென இழுத்து வெளியே தள்ளி விட்டு சொடக்கிட்டு கவனம் காட்டியபடி காலால்  கதவை அடித்து சாத்தினான்.

அவன் தலைமுடியை பிடித்து இழுத்த வலி ஒரு பக்கம் அவன் பேசியதால் அவமானம் ஒருபக்கம் என எல்லாம் சேர்ந்து அனாமிகா மனதில் கோபம் திகு திகு என பற்றி எரிந்தது. யாரும் பார்க்க முதல் எழுந்து வீட்டுக்கு வந்தவள் அவனை பழி வாங்க அடுத்த திட்டம் போட்டாள்.

அவன் மேல் கை  வைக்க முடியாது. ஆனால் வைஷ்ணவி மேல் இலகுவாக கை வைக்கலாம். அவன்  வாழ்நாள் முழுக்க கதற கதற வைஷ்ணவியை தாக்க வேண்டும் என யோசித்தவளுக்கு ஒரு எண்ணம் உதித்தது.

தன் எண்ணம் நிறைவேற லீவு நாளை எதிர் பார்த்திருந்தாள். லீவு நாளன்று வைஷ்ணவியை தொடர்பு கொண்டு பேசவேண்டும் என கூறியவள் அவர்கள் கம்பனிக்குரிய கட்டிக் கொண்டிருக்கும் பில்டிங் சைட்   பெயரை சொல்லி அங்கு வர சொன்னாள். காவலாளியை தவிர அங்கு யாரும் இருக்க வில்லை. முதல் மாடிக்கு ஏறிய வைஷ்ணவி கதிரையில் இருந்த அனாமிகாவை நோக்கி சிரித்தபடி வந்தாள். அனாமிகா பின்னால் இரு தடியன்கள்  நின்றனர். வைஷ்ணவி  வருவதை பார்த்து முறைத்த அனாமிகா, “வெல்கம் Mrs .வைஷ்ணவி ஆத்ரேயன்” என்றாள். அதில் அதிர்ந்த வைஷ்ணவி  அவளிடம், “நான்  டிவோர்ஸ் எடுத்துருவேன் சீக்கிரம்” என்றாள். “ஓ அப்போ நீ உன் புருஷனை எனக்கு பிச்சை போடுறியா?” என்ற கேள்வியில் அதிர்ந்தவள், “அப்படியில்ல” என்று சொல்ல வந்தவளை கை நீட்டி தடுத்து, “வாயை மூடு” என்றாள்.

அவளின் விசித்திரமான செய்கையில் பயந்தவள், “ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க …? நீங்க ப்ரக்னன்ட் என்று தான் அவரை உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க யோசிச்சேன்” என்று கூறியவளை பார்த்து சத்தமாக வாய் விட்டு சிரித்தாள் அனாமிகா. மேலும்,  “யாரு ??? நான் ப்ரக்னன்ட் ஆ ??  உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா? யாரு என்ன சொன்னாலும் நம்பிடுவியா?” என்று கேட்டவள்

மேலும்  முகத்தை கடினமாக்கியபடி,  “அவன் முத்தம் கொடுக்க போனதுக்கே  மீட்டிங் ரூம்ல வச்சு அறைஞ்சவன்… அவனால நான் ப்ரக்னன்ட் ஆகிறதா? அது மட்டுமா அவன் வீட்டுல என்னை  வெளிய தள்ளி அவமானபடுத்தினான். இதுக்கெல்லாம் சேர்த்து அவன் அனுபவிக்க வேணாமா? உன் மேல கை வச்சா அவன் மனுஷனா இருக்க மாட்டானாமே?  வச்சு பார்த்துருவோமா?” என்று சொன்னதை கேட்டவளுக்கு தலை சுற்றி விழாத குறைதான்.

‘என்னது?? இவ ப்ரக்னன்ட்   இல்லையா??? ஆத்ரேயன் அறைஞ்சானா ?’ என்று அடுக்கடுக்கான கேள்விகளை யோசித்தவள், ‘ஐயோ என்ன காரியம் பண்ணி வச்சிருக்கேன்?கொஞ்சம் கூட மூளை இல்லாம அவரை  இப்படி கஷ்டப்படித்திட்டேனே..!’ என்று  மனதுக்குள் மறுகியவள் அனாமிகாவை நோக்கி, “ச்சீ  நீயெல்லாம் ஒரு பொண்ணா?” என்று சீறினாள்.

“இல்ல தான்” என்றவள், “உன்னை சாகடிக்க கூடாது நீ வாழ்ந்துட்டே இருக்கணும் ஆனா அவன் உன்ன பார்க்கும் போதெல்லாம் சாகணும்” என்றவள் அந்த தடியர்களை பார்த்தாள்.

அவளை மானபங்க படுத்தும் வெறியுடன் ஒருத்தன் அவளை நோக்கி வர அடுத்தவன் அதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான். “ப்ளீஸ் அனாமிகா இதெல்லாம் வேணாம்” என்றவள் ஓட  தொடங்க ஒரே எட்டில் அவள் தலைமுடியை பிடித்தவன் கீழே தள்ளி அவள் மேல் படர தொடங்கினான்.

“கடவுளே என்ன காப்பாத்துப்பா” என்று கண்ணீர் விட்டு அழுதவள் தன் பலம் முழுவதையும் கொண்டு அவனை நகர்த்த முனைந்தவளால்  முடியவில்லை. அவள் போட்டிருந்த ஷர்ட்டை கழட்ட அவள் மார்பில் கை வைத்த  சமயம் அவள் கையில் ஒரு கம்பி  தட்டுப்பட அதை எடுத்து அவன் தலையில் அடிக்க அவன் நிலை குலைந்து போனான்.

இது தான் சந்தர்ப்பம் என்று அவனை தள்ளி விட்டு ஓட முயற்சி செய்தவளை அடுத்த தடியன் போனை கீழே போடு விட்டு பிடிக்க ஓடி வந்தான்.

ஒரு கட்டத்தில் மேலும் ஓட  முடியாமல் கட்டடத்தின் ஓரத்தை அடைந்தவளுக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. சிரித்தபடி அவளை நெருங்கியவனது பார்வையில்  மருண்டவள், உயிரா?மானமா? என்று யோசிக்க மானமே பெரிதாக பட்டது. அடுத்த கணம் யோசிக்காமல், “என்னை மன்னிச்சிடுங்க ஆத்ரேயன்” என்று கண்ணீர் மல்க கூறியபடி கீழே விழுந்தாள்.

அவள் குதித்ததை பார்த்து  ஓடி வந்த அனாமிகா அவள் குற்றுயிராய் கிடக்க இறந்து விட்டாளோ என்று பயந்து தன்னுடன் வந்த இருவரையும் கூட்டிக் கொண்டு காரில் பறந்தாள்.

விழுந்த சத்தம் கேட்டு முன்னால்  நின்ற காவலாளி  அவ்விடத்துக்கு விரைந்தான். அனாமிகா காரை எடுத்துக் கொண்டு போவதை கண்டவன் சற்று நேரம் முன் உள்ளே வந்த பெண் கீழே விழுந்து உயிருக்கு போராடியதை பார்த்து பயந்து  உடனே சைட் மேனேஜர்க்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லி விட்டு ஆம்புலன்ஸுக்கும் சொன்னான்.

அவள் விழுந்த அந்த நொடி தூங்கிக் கொண்டிருந்த ஆத்ரேயன் பதட்டத்துடன் எழுந்தான். வைஷ்ணவிக்கு ஏதோ ஆகிவிட்டது என்று மனம் சொல்லிக் கொண்டே இருந்தது.

எழுந்தவன் விறு விறுவென சென்று  வைஷ்ணவியின் வீட்டு  கதவை தட்டினான். கதவை திறந்த கீர்த்தனா, கலைந்த தலையும் தூங்கி எழுந்த முகமுமாக நின்ற ஆத்ரேயனை கண்டு சங்கடப்பட்டவள், வந்த காரணத்தை கேட்க முதலே, “வைஷ்ணவி எங்கே ?” என்று கேட்டான்.

“ஒரு கால் வந்திச்சு அப்போவே போய்ட்டா” என்றதும் கையிலிருந்த அலைபேசியில் அவளுக்கு அழைத்தான். பத்து தடவைக்கு மேல் தொடர்ந்து அழைத்தும் அவள் எடுக்காமல் இருக்க அவன் பதட்டம் அதிகமானது. அந்நேரம் பார்த்து சைட் மேனேஜர் ஆத்ரேயனுக்கு கால் பண்ணி யாரோ சைட்  இல் விழுந்து கிடப்பதாக கூற எரிச்சல் அடைந்தவன், “இவங்களுக்கு சூசைடு பண்ண நம்ம சைட் தான் கிடைச்சுதா ???” என்று பொரிந்து தள்ளினான்.

தனது வீட்டுக்குச் சென்றவன் ஆயத்தமாகி காரில் சைட்டை நோக்கி புறப்பட்டான். காரில் செல்லும் போது ப்ளூ டூத் ஐ காதில் மாட்டியபடி  தொடர்ச்சியாக வைஷ்ணவிக்கு அழைத்துக் கொண்டிருந்தான். “எங்க போய் தொலைஞ்சா ?”  என்று திட்டியபடி சைட்டுக்கு வந்து சேர்ந்தான்.

விழுந்து கிடந்தவளின் கைப்பை முதல் மாடியில் இருந்ததால் அவள் தொலைபேசி சிணுங்கியது யாருக்கும் கேட்கவில்லை. அவன் வர முதலே ஆம்புலன்ஸ் வந்ததால் அங்கு கூடி இருந்தவர்கள் அவளை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பினர்.

வந்து சேர்ந்தவனுக்கு ரத்த கரை மட்டுமே கண்ணில் பட்டது. “ஓஹ் காட்…” என்றவன் காவலாளியிடம் நடந்ததை விசாரிக்க, அனாமிகா இரு தடியன்களுடன் வந்ததையும்  விழுந்த பெண் அவர்களை தேடிச் சென்றதையும் கூறினான். அனாமிகா என்றதும் அவனுக்கு பொறி தட்ட இரு படிகள் தாண்டி ஏறியபடி முதல் மாடிக்கு வந்து சேர்ந்தான்.

சுவர் கட்டப்படாத அந்த மாடியில்  தனியாக ஒரு கதிரை மாத்திரம் போடப்பட்டு இருந்தது. சுத்தி சுத்தி ஏதும் கிடைக்குமா என்று  தேடியவன் கண்ணில் பட்டது கைப்பை… பதட்டத்துடன் சென்றவன் அதை எடுக்க போக அதற்கருகில் விழுந்து கிடந்த தொலைபேசி கண்ணில் பட்டது. தொலைபேசியை எடுத்து பார்த்தவன் அதில் வீடியோ ரெகார்டிங் மோட் இல் இருந்தது. அதை நிறுத்தியவன் அந்த வீடியோவை பிளே பண்ணியதும் கோபத்தில் அவன் கண்கள் துடிக்க தொடங்கியது. “ஹொவ் டேர் யூ டு டச் மை வைப்?” என்று கத்தியவன் அப்போது தான் உணர்ந்தான் விழுந்து கிடந்தது வைஷ்ணவி என்று…

“ஓஹ் ஷிட்” என்று கத்தியவன் கண்களில் கண்ணீர் வழிய  பதறியபடி தாவி இறங்கினான்.  கீழே ஓடி வந்து அவளை கொண்டுச் சென்ற வைத்தியசாலையை கேட்டு விட்டு அதே வேகத்தில் பாய்ந்து காரில் ஏறினான். அவன் வேகத்தையும் கண்ணீரையும்  பார்த்து அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து நின்றனர்.

காற்றை கிழித்துக் கொண்டு அவன் கார் செல்லும் போது உள்ளுக்குள் இருந்தவன், “வைஷு நீ எனக்கு வேணும்டி” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

வைத்தியசாலையை அடைந்ததும் ரிசெப்ஷன் இல் விசாரித்தவன் அவளுக்கு சிகிச்சை அளிக்கும் ICU  க்கு முன்னே வந்து நின்றான். மேலேயிருந்து விழும் போது ஒரு பக்கம் சரிந்து விழுந்ததால் வலது கையில் எலும்பு முறிவும் வலது காலில் தசை கிழியலும்  உடலில் கற்கள் குத்து பட்ட சீராய்வும் வலது பக்க நெற்றியில் அடிபட்டு ரத்தமும் போயிருந்தது.

முதலாம் மாடி என்பதால் உயிர் தப்பியவள் சரிவாக விழுந்ததால் தலையில் அடிபடாமல் தப்பி இருந்தாள். விழுந்த அதிர்ச்சியும் வலியும் சேர்ந்ததால் மயக்கத்தில் இருந்தவளுக்கு சிகிச்சை மேற்கொள்ளபட்டிருந்தது

“எப்போவும் நீ என்ன விட்டு போறதிலேயே இருக்கியேடி” என்று வாய் விட்டு கூறியவன் கண்களில் கண்ணீர் மட்டும் நின்ற பாடில்லை.

நிறைய நேரமாக வைஷ்ணவியை காணாமல் தேடிய கீர்த்தனா கடைசியாக ஆத்ரேயனுக்கு அழைத்திருந்தாள். அவளிடம் நடந்ததை கூறியவன் வைத்தியசாலையின் பெயரை சொல்லியபடி வைத்து விட்டான். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர், “உயிருக்கு  பயமில்லை… ஒரு மாதம் பெட் ரெஸ்ட் இல் இருக்க வேண்டும்”  என்று கூறினார். அவர் அவ்வாறு சொன்னதும் தான் அவனுக்கு போன உயிர் திரும்ப  வந்தது. அந்நேரம் பார்த்து வந்த கீர்த்தனாவிடமும் கார்த்திக்கிடமும், 

“வைஷ்ணவியை பார்த்துக்கோங்க எனக்கு வெளியில் நிறைய வேலை இருக்கு” என்று கூறியவன் வெறிக் கொண்ட கண்களுடன்  வைத்தியசாலையை விட்டு வெளியேறினான்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top