அத்தியாயம் 3

Ph.D. இறுதி கட்டத்தில் இருக்கும் ஒரு ஆய்வாளன் தான் நம் நாயகன் விக்ரம் …தனது பல வருட உழைப்பை ஒரு ‘தீசிஸ்’ (Thesis) வடிவில் சமர்ப்பிக்க இருப்பதால் தீவிரமான மனநிலையில் இருக்கிறான்..

அவனுக்கு அரைகுறை அறிவு என்றாலே அலர்ஜி.…

அவன் ஒரு முன்கோபி அல்ல… மற்ற மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் மிகவும் பண்பாகவும், கனிவாகவும், சிரித்த முகத்துடனும் பேசும் குணம் கொண்டவன் தான் விக்ரம்…

கல்லூரியில் மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் மென்மையானவன் (Soft-spoken). ஜூனியர்களுக்கு உதவி செய்வதில் அவனுக்குப் பெரிய பெயர் இருக்கும்.…

யாராவது வந்து சந்தேகம் கேட்டால் புன்னகையோடு விளக்கிடுவான்.…

உதவி என்று கேட்டால் முகம் சுளிக்காமல் செய்பவன்… கல்லூரியில் அவர் ஒரு “Gentleman” என்று பெயரெடுத்தவன்…

தனது தீசிஸ் (Thesis) வேலைகளில் மிகத் தீவிரமாக இருப்பதால், ஒவ்வொரு நிமிடத்தையும் கணக்கிட்டுச் செலவழிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு… 

 

யாரிடமும் அனாவசியமாகப் பேசிட மாட்டான் விக்ரம்.. ஆனால் பேசினால் அதில் ஒரு கண்ணியம் இருக்கும்..

 

அவருக்குப் பாதி தெரிந்த விஷயங்கள் என்றாலே பிடிக்காது. ‌…ஒரு விஷயம் தெரிந்தால் நுனி முதல் அடி வரை தெரிந்திருக்க வேண்டும், இல்லையென்றால் தெரியாது என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என நினைப்பவன்…

அவனது தந்தை தேசிங்கன் சொந்தமாக நகைக்கடை ஒன்றை வைத்திருக்கிறார்…அன்னை சுகன்யா நகைக்கடையின் வரவு செலவு கணக்குகளை பார்த்துக் கொள்வார்…

வீட்டிற்கு ஒற்றை மகனான விக்ரம் மீது பெற்றவர்கள் இருவரும் அன்பையும் பாசத்தையும் கொட்டிக் கொட்டி வளர்த்திருக்கின்றனர்…

இருவரும் அத்தனை பண்போடும் ஒழுக்கத்தோடும் அவனை வளர்த்திருப்பதால் பெண்கள் விடயம் மட்டுமல்லாது எந்தவித கெட்ட பழக்கமும் அவனுக்கு கிடையாது..

நேர்மையானவன், பண்பானவனும் கூட ..

 

பிஎச்டி முடித்துவிட்டு தான் வேலையில் அமர்ந்த பின்னர் தான் திருமணம் என முடிவெடுத்து இருப்பதால் பெற்றவர்களுக்கு அந்த ஒரு விடயத்தில் மட்டும் அதிருப்தியே..

ஒற்றை மகன் அவனுக்கு சீக்கிரமே திருமணம் செய்து வைத்து பேரன் பேத்தியை பார்க்க வேண்டும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்..

இந்த வருடம் தீசிஸை

சமர்ப்பித்து விட்டு வைவாவையும் முடித்து விட்டால் இந்த பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராக பணியாற்றுவதற்கான அனைத்து ஏற்பாட்டையும் செய்து விட்டிருந்தான் விக்ரம்..

அதற்கு சில பல லட்சங்களும் செலவாகிட அனைத்தும்  செய்துவிட்டாயிற்று …

 

அவனை இத்தனை வருடங்களாய் வழிநடத்தி வந்துள்ள நாகராஜனின் மீது கொண்ட மரியாதையின் காரணமாக அவர் கேட்டுக் கொண்டதற்காக மட்டுமே ஜூனியர் மாணவர்களுக்கு கைடாக பொறுப்பேற்று இருக்கிறான் …

 

தானும் வேலையில் இருப்பதால் தான் வழிநடத்தும் மாணவரும் அறிவாளியாக இருந்தால் தனக்கு பாதி வேலை மிச்சம் என எண்ணித்தான் நறுமுகையே பற்றி விசாரித்து இருந்தான் விக்ரம் ..

மதிப்பெண்களை வைத்து அவளை அளவிட்டவனுக்கு உண்மையில் அவளிடம் பேசிய பின்னர் தான் அவளுக்கு அடிப்படை அறிவு கூட இல்லை என்பதையே புரிந்து விட்டிருந்தது.…

இருந்தும் மனதில் ஓரம் முதல் நாள் அந்த பயத்தில் தான் அவள் அவ்வாறு எல்லாம் நடந்து கொள்கிறாளோ என்கிற எண்ணம் இருந்தது..

ஆனால் அவன் எதற்கும் இருக்கட்டும் என சில பல அடிப்படைக் கேள்விகளைக் கேட்டு வைத்திட , ஒரு சில கேள்விகளுக்கு பதில் அளிக்க தான் செய்தாள்.. அதுவும் அவளுக்கு என்ன புரிந்துள்ளது என்பதை விட புத்தகத்தில் என்ன இருந்ததோ அதை அப்படியே மனப்பாடமாய் ஒப்பித்தவளை கண்டு பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது விக்ரமால்…

 

அதுவும் இறுதியாய் ஒரே ஒரு கேள்வியை கேட்டான்… அதற்கு அவள் முழித்த முழிப் இருக்கிறதே இப்போது நினைத்தால் கூட தலையில் நறுக்கென்று  கொட்டி விடலாமா என்று தான் தோன்றும் …

 

“பிசிஆர்(PCR)  ஓட ஃபுல் ஃபார்ம் என்ன..?”  என கேட்டதும் திருதிருவென முழித்தாள் நறுமுகை..

“அது…பிசிஆர் ஹெல்ப்ஸ் இன் டிடெக்டிங் வைரஸஸ், பாக்டீரியா ஆர் ஃபங்கை அட் த வெரி இயர்லி ஸ்டேஜ்.பை எக்ஸ்ட்ராக்டிங் அண்ட் டெஸ்ட்டிங் த டிஎன்ஏ ஃப்ரம் அ ஸ்மால் லீஃப் ஆஃப் த ப்ளான்ட் , இட் கேன் பி கன்ஃபார்ம்டு வெதர் இனிவிஸிபல் மைக்ரோஆர்கானிஸம் ஆர் ப்ரசென்ட்.திஸ் ஹெல்ப்ஸ் ப்ரிவன்ட்  த ஸ்ப்ரெட் ஆஃப் த டிசிஸ்..

 

PCR helps in detecting viruses, bacteria, or fungi at a very early stage.

By extracting and testing the DNA from a small leaf of the plant, it can be confirmed whether invisible microorganisms are present. This helps prevent the spread of the disease. 

வைரஸ், பாக்டீரியா இல்ல பூஞ்சை (Fungi) காளான்களை மிக ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிய PCR உதவுகிறது.

தாவரத்தின் ஒரு சிறிய இலையிலிருந்து DNA-வை எடுத்து சோதனை செய்வதன் மூலம், கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் உள்ளதா என்பதை உறுதி செய்யலாம். இது நோய் பரவுவதைத் தடுக்க உதவுகிறது

என புத்தகத்தில் இருப்பதை அவள் ஒப்புவித்திட.. சலிப்பாக அவளை பார்த்த விக்ரம்,

 

” நான் பி சி ஆர் எதுக்கு யூஸ் பண்ணுவாங்கன்னு கேட்கலை…வாட் இஸ் த ஃபுல் ஃபார்ம் ஆஃப் பிசிஆர் ..?புரியுதா நான் கேக்குறது..?”  என கேட்டதும் மண்டையை ஆட்டி வைத்த நிரல்யா கைகளை பிசைந்தபடி அவனை பார்த்தவாறு இருந்தாளே ஒழிய வாய் திறந்து பதில் அளிக்கவில்லை..

கடுப்பான விக்ரம் நெற்றியை நீவியபடி ,

 

“பிசிஆர் ஓட ஃபுல் ஃபார்ம் பாலிமரைஸ் செயின் ரியாக்ஷன் (Polymerase chain reaction) …பேசிக்… இதுகூட உனக்கு தெரியாதா..?”  என கேட்டு விட அவமானம் ஆகிவிட்டது நறுமுகைக்கு…

தரையில் கால்களை அழுந்த ஊன்றிக் கொண்டு தலை குனிந்து நின்றவளுக்கு கண்கள் கலங்கி விட்டது…

‘ கவிதா படித்தது போல நானும் படித்திருந்தால் இவன் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதிலளித்து இருப்போமே.?’  என நெஞ்சம் அடித்துக் கொண்டது அவளுக்கு ..

“இங்கப்பாரு…மார்க் முக்கியமல்ல, விஷயம் தான் முக்கியம்…படிக்கிறதை புரிஞ்சிகிட்டு படி..

இப்படி ஒரு பேசிக் கூடத் தெரியாத ஒரு பொண்ணு நாளைக்கு  டீச்சராவோ இல்ல சயின்டிஸ்ட்டாகவோ போனா அது.. சமுதாயத்துக்கே கேடு” என முகத்தில் அடித்தது போல பேசிடவும் மொத்தமாய் கூனிக்குறுகி போய்விட்டாள் நறுமுகை…

 

அவன் அடிக்குரலில் சத்தம் இன்றி பேசியதால் தள்ளி நின்றிருந்த கவிதாவிற்கும் சாமுவேலிற்க்கும் எதுவும் கேட்டிடவில்லை என்றாலும் இருவரது உடல் மொழியையும் கண்டுவிட்டு அவன் நறுமுகையே திட்டுகிறான் என்பது மட்டும் புரிந்தது..

கவிதாவிற்கு நறுமுகையே காண கஷ்டமாக இருந்தது.. அதை பார்த்த சாமுவேல்,

 

” என்ன உன் ஃப்ரண்ட் வந்ததும் முதல் நாளே திட்டு வாங்குறா..?? அவன் வேற முரடு பிடித்தவன் ..எதுவும் தெரியாதுன்னு சொன்னா அதுக்கும் திட்டுவான் ..

பேசாம நாகராஜன் சார் கிட்ட பேசி கைடை மாத்த சொல்லிடு..”  என இயல்பாக கூறி விட கவிதாவிற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் ,

 

“சரிண்ணா.. நான் சொல்றேன் அவகிட்ட..”  என்று மட்டும் கூறிவிட்டு இருந்தாள்…

 

பின் துத்தி தாவரம் எப்படி இருக்கும் என தன் லேப் டாப்பில் புகைப்படத்தை காட்டியவன் ,அது எங்கவெல்லாம் கிடைக்கும், எப்படி இதனை கலெக்ட் செய்ய வேண்டும் என  ஒவ்வொன்றையும் கூறி விட்டிருந்தான்…

நாளை வரும்போது இதனை கொண்டு வந்தே தீர வேண்டும் எனக் கூறி விட கேட்ட நறுமுகைக்கு கண்ணை கட்டினாலும் அனைத்திற்கும் மண்டையை மண்டையை ஆட்டி வைத்தாள்…

 

அவளை கடுப்புடன் பார்த்து பெருமூச்சு விட்ட விக்ரம் சலிப்பாக தலையாட்டி விட்டு,

 

“இது ஒன்னுத்துக்கும் தேராது..” என முணுமுணுத்து விட்டு சென்று விட்டான்….அவன் கூறிய வார்த்தைகள் அச்சுபிசறாது நறுமுகையின்  காதில் விழுந்து விட்டிருந்ததே…

 

ஒரு நாள் முடிவதற்கே ஒரு யுகம் போல் ஆகிவிட்டது நறுமுகைக்கு.. மதிய உணவு கூட நறுமுகை மெதுவாகவே உண்டிட, கவிதா தான் சற்று அவசர அவசரமாக உண்டு கொண்டிருந்தாள்..

அவளை பார்த்த நறுமுகை,

 

“ ஏன் இவ்வளவு அவசரமா சாப்பிடுற ? டைம் தான் இருக்கே..?”

 

” இல்லடி சாமுவேல் அண்ணா சாப்பிட்டுட்டு சீக்கிரம் வர சொல்லி இருக்காரு..”  என்றதும் அவளை உதட்டை சுழித்துக் கொண்டு பார்த்த நறுமுகை,

 

“ ஆமா உனக்கு என்ன கொடுத்திருக்காங்க..”

 

“அதுவா தாவர நோயியல் (Plant Pathology)டீ…

ப்ளான்ட்ஸை தாக்குற பூஞ்சை இல்ல வைரஸ் நோய்களுக்கு இயற்கை முறையில் சொல்யூஷன் கண்டுபிடிக்கனுமாம்….அதான் ரசாயன உரங்களுக்குப் பதிலா உயிரியல் பூச்சிக்கொல்லிகளை (Bio-pesticides) உருவாக்குறது…

இதுக்கு நான்  ஃபீல்ட் ஒர்க்(களப்பணி) லாம் பண்ணனுமாம்…கடுப்பா வருது…

ஆமா நீ என்ன அந்த அண்ணா கிட்ட திட்டு வாங்கிட்டு இருந்த போல..??  எதுக்கு திட்டினாரு..?? முதல் நாளே இப்படி ஹார்ஷா நடந்துக்கிட்டா எப்படி? ” என கவிதா அவளுக்கு சாதமாக பேசவும் அமைதியாக இருந்த நறுமுகை,

 

“அவர் ரொம்ப ஸ்ட்ரிக்டுடீ…ஆமா சாமுவேல் அண்ணா உன்னை எப்படி கூப்பிட சொல்றாரு சாருன்னா..?”

 

“ஆமா..சார் தான் கூப்பிடனுமாம்.. ஆனா அண்ணனே கூப்பிடும்மா ஒன்னும் பிரச்சனை இல்லன்னு சொல்லிட்டாரு..” 

 

உதட்டை சுழித்த நறுமுகை,

 

” பரவால்ல ஆனா என்னை இவர் என்னம்மா சொல்றாரு சார்னு தான் சொல்லணுமாம்.. அண்ணா கிண்ணானு சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டாரு.. எரிச்சலா  வருது.. புண்ணுக்கு மருந்து தயாரிக்கணுமாம்.‌  வேற வேலை இல்ல பாரு ..கடுப்பா வருது.. பேசாம மெடிக்கல் ஷாப்ல இருந்து ஏதாவது ஒரு ஆயின்மென்ட் வாங்கிட்டு வந்து கொடுத்துட வேண்டியது தான்..”  என்றவளை முறைத்துப் பார்த்த கவிதா,

 

” லூசு மாதிரி பேசாத.. ஒழுங்கா கொடுக்குற வேலையை ஒழுங்கா பண்ண பாரு.. அந்த அண்ணனை பார்த்தாலே தெரியுது ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காருன்னு..

அதுக்கு ஏத்த மாதிரி இருக்கு பழகு.. இன்னும் ஆறு மாசம் தான் ப்ராஜெக்ட் முடிச்சாமா.. வைவா பண்ணோமா ..இந்த எம்எஸ்சி-யை தலைக்கு மேல தூக்கி போட்டு போயிட்டே இருக்கணும் ..ஏதாவது ஒரு வேலைக்கு ஒரு வருஷம் போயிட்டு வீட்ல பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணி செட்டில் ஆக வேண்டியது தான்..”  என சாப்பிட்டவாறு பேசிய கவிதாவை சோர்வாக பார்த்த நறுமுகை,

 

” எனக்கு இப்பவே கண்ணை கட்டுது கவிதா.. இந்த அண்ணன் என்னென்னவோ சொல்றாரு நினைச்சாலே பயமா இருக்கு..” என உள்ளே போன குரலில் பேசியதும் அவளை பாவமாக பார்த்த கவிதா ,

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல முகை… எல்லாம் நம்ம ஏற்கனவே லேப்ல பண்ணது தானே.. எதுக்கு கவலைப்படுற..?”

 

“ப்ச்.. ஆமா போடி.. நம்ம பிஎஸ்சி படிச்ச காலேஜ்ல ஏதாவது ஒரு பிராக்டிக்கலாவது உருப்படியா பண்ண வச்சிருக்காங்களா..??   மிஷினை காட்டி இந்த மிஷன் எதுக்கு யூஸ் ஆகும்னு வாயில தான் சொன்னாங்களே தவிர ஒன்னு ஒன்னும் செஞ்சு காட்டி இருந்தா நம்மளுக்கு எவ்வளவு ஈசியா இருந்து இருக்கும் ..

நீயே பார்க்குறல  நம்மளை தவிர மத்த ஸ்டூடண்ட்ஸ் எல்லாரும் அவங்க அவங்க காலேஜ்ல ph value எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு எல்லாமே சொல்லிக் கொடுத்திருக்காங்க…

ஆனா நம்மளுக்கு இதுதான் பிஹெச் கண்டுபிடிக்கிற மிஷின்னு கண்ணால மட்டும் தான் காட்டியிருக்காங்க ..வேஸ்ட் டி நம்ம காலேஜ் ..”

 

ஆம் அவர்கள் படித்த கல்லூரியில் ஒவ்வொரு இன்ஸ்ட்ருமென்ட்டையும் எதற்காக உபயோகப்படுத்துகிறார்கள் என வாய் வழியாகத்தான் சொல்லி தந்தார்களே ஒழிய அதை செய்து காட்டியது எல்லாம் இல்லை ..அத்தோடு மாணவர்களை ஒரு முறை கூட செய்ய வைத்ததும் இல்லை..

இப்போது முதுகலையில் மற்ற மாணவர்கள் ஒவ்வொருவரும் அவர்களே ஒவ்வொன்றையும் அழகாய் கையாள்வதை காணும் போது இவர்கள் நால்வருக்கும் அடிவயிற்றில் புளியை கரைக்கும் நமக்கு தெரியவில்லையே என்று …அந்த ஆதங்கத்தில் தான் நறுமுகை பேசியது…

 

இப்போதும் ப்ராஜெக்ட்டினை கஷ்டமாக நினைக்க  காரணம் அது மட்டுமே ஆகும்.. பின் கவிதா தான் நறுமுகையே சமாதானம் செய்துவிட்டு அவசர அவசரமாக உண்டு முடித்தவள் சாமுவேலிடம் ஓடியே விட்டாள்..

அவளை பெருமூச்சுடன் பார்த்த நறுமுகை தானும் உண்டு விட்டு எழுந்திடும் அந்நேரம் படியிலிருந்து ஏறி வந்த விக்ரம் அவளைத்தான் முறைத்துப் பார்த்துவிட்டு சென்று விட்டான்..

செல்பவனது முதுகையை கோபமாக பார்த்த நறுமுகை,

 

‘ ஆளையும் மூஞ்சியும் பாரு.. கை கால் உடைஞ்சு வீட்டிலேயே கிடந்து தொலைடா பாவி…!’   என உள்ளுக்குள் சாபம் இட்டுக் கொண்டாள்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top