அத்தியாயம் 10

மாப்பிள்ளை வீட்டினர்  எடுத்து தந்த இளஞ்சிவப்பு நிற பட்டுடுத்தி மணமேடையில் நின்றிருந்தாள் நறுமுகை…

 

நடப்பது யாவும் கனவா? இல்லை நிஜமா? என அவள் ஒரு தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறாள்… 

பெண் பார்த்து விட்டு சென்றதை இன்னமும் அவளால் நம்பிடவே முடியவில்லை..

அதுவும் விக்ரமை தான் தனக்கு வரனாக பார்த்திருப்பதை துளி அளவும் அவளால் நம்பிட முடியவில்லை…

ஆனால் நடந்தது அனைத்தும் நிஜம் என்று மண்டையில் உரைக்கவும் மறுநாள் வழக்கத்தை விட அவசரமாக கல்லூரிக்கு கிளம்பி சென்று இருந்தாள்…

நிச்சயம் தன்னை பார்க்க அவன் சீக்கிரம் வருவான் என எதிர்பார்த்து இருக்க ..ஆனால் விக்ரமோ வழக்கமாய் வரும் நேரத்திற்கு வந்தவன் நறுமுகையை சின்னதாய் கூட ஒரு சலன பார்வை பார்க்கவில்லை …

முன்பு எப்படி அவளிடம் நடந்து கொள்வானோ..? எப்படி பார்ப்பானோ ?? அதே போலத்தான் அப்போதும் இருந்தான்…

இந்நிலையில் குழம்பித்தான் போனால் நறுமுகை… உண்மையில் நேற்று வந்தது விக்ரம் தானா ..? அல்லது அவனைப் போல வேறு யாருமா..? என்கிற யோசனை வந்திட அவனிடம் என்னென்னவோ கேட்க வேண்டும் என இருந்தவள் ஒரு வார்த்தை கூட கேட்காது அவன் சொன்ன வேலைகளை செய்தபடி தன் எண்ணத்திலேயே உழன்று கொண்டிருந்தாள்…

அன்று வீட்டிற்கு சென்றவளிடம் மாப்பிள்ளை வீட்டில் அனைவரும் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தற்போது நிச்சயதார்த்தத்தை மட்டும் வைத்துக் கொள்ளலாம் எனவும் வைகாசி மாத முகூர்த்தத்தில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்குள் மாப்பிள்ளைக்கும் வேலை உறுதியாகிவிடும் என்றும் கூறியிருந்தனர் …

கேட்ட அவளுக்கு தலையே சுற்றி விட்டது …சுரதை வேறு,

 

” மாப்பிள்ளை உன் காலேஜ் தானாமானே… உனக்கு தெரியுமா..?”  என கேட்டதும் என்ன பதில் கூறுவது என முழித்த நறுமுகையை கண்ட வளவன்,

 

” அங்க ஏகப்பட்ட பேர் படிக்கிறாங்க.. இவளுக்கு ஒவ்வொருத்தரையும் பாக்குறது தான் வேலையா..? சும்மா விடு..”  என அதட்டி இருந்தார்…

ஆனால் இவர்கள் மாப்பிள்ளையாக பார்த்து இருக்கும் பையன் தான் தனக்கு ப்ராஜெக்ட் செய்ய  கைடாக இருக்கிறான் என கூறினால் பெற்றோர்கள் என்ன எண்ணுவார்களோ என நினைத்து அமைதியாக இருந்து விட்டாள்..

ஒன்று மட்டும் உறுதியானது நிச்சயம் நேற்று வந்தது விக்ரம் தான்.. வேறு யாரும் அல்ல ..

ஆனால் அவளுக்கு இருக்கும் சந்தேகம் அவன் எப்படி தனக்கு சம்மதம் தெரிவித்தான் என்பது தான்…

ஒரு வேலை அவனது பெற்றோர் கட்டாயப்படுத்தி இருப்பார்களோ..?.. அவனைப் பார்த்தால் யாரும் கட்டாயப்படுத்தி  கேட்பவன் போல தெரியவில்லையே..

இவனது ஒற்றை பார்வைக்கு எதிரில் இருப்பவர் அடங்கி போய்விடுவார் அப்படி இருக்கையில் இவன் மற்றவருக்கு அடங்கி இருப்பானா..?  என தனக்குள்ளேயே ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்த நறுமுகைக்கு தலையை வெடித்து விடும் போலானது…

நாளை அவனிடம் பேசியே தீர வேண்டும் என முடிவெடுத்த பின்னர் தான் அவளால் நிம்மதியாய் உறங்கவே முடிந்தது …

மறுநாள் அவன் எதையோ வேலை சம்பந்தமாய் லேப்டாப்பை பார்த்தபடியே அவளிடம் கூறிக் கொண்டிருக்க, அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்ட நறுமுகை அங்கிருந்து செல்லாது அப்படியே நின்றாள்..

நிச்சயம் அவள் இன்று விடவே மாட்டாள் ஏதேனும் கேட்பாள் என விக்ரமும் எதிர்பார்த்து தான் இருந்தான் ..பொறுத்து பொறுத்துப் பார்த்த நறுமுகை அவன் அமைதியாக இருப்பதைக் கண்டு பொறுமை இழந்தவளாய் ,

 

“எப்படி சம்மதிச்சீங்க..?”  என்று தான் முதல் கேள்வியை கேட்டு வைத்தாள் …

அவனும் சிறிது கூட தடுமாறவில்லை.. தன் வேலையை லேப்டாப்பில் பார்த்தவாரே,

 

“ஏன் பிடிக்கலையா..?”  என கேட்டதும் அடுத்த நொடி,

 

” உங்களுக்கு எப்படி என்னை பிடிச்சுதுன்னு கேட்கிறேன்..”  என்ற நறுமுகையின்‌  அழுத்தமான கேள்வியில் சட்டென தன் வேலையை நிறுத்தி விட்டு தலை திருப்பி அவளைப் பார்த்தான் விக்ரம்…

 

அவன் இப்படி தன்னை திடுமென பார்க்க கூடும் என எதிர்பாராததால் தடுமாறிய நறுமுகை தலை குனிந்து நின்று,

 

” உங்களுக்கு என்னை பிடிக்காது.. அது மட்டும் இல்லாம எனக்கு பேசிக் நாலேஜ் கூட கிடையாது.. முட்டாள் முட்டாள்னு திட்டிக்கிட்டே இருப்பீங்க.. கண்டிப்பா நீங்க இந்த கல்யாணம் வேண்டாம்னு தான் சொல்லி இருப்பீங்க …எனக்கு தெரியும்.. உங்க அப்பா அம்மா ஃபோர்ஸ் பண்ணு சம்மதிச்சீங்களா…? எங்க அப்பா வேற உங்க வீட்டு சைட்ல இருந்து ஓகே சொல்லிட்டதா சொன்னாங்க..

நீங்க உங்க அம்மா அப்பா கிட்ட பேசுங்க.. இல்லன்னா நானே கூட என் அப்பாகிட்ட சொல்லிடுறேன் ..” என்றவளை நாடியில் கை வைத்து கூர் வழிகளால் அளந்த விக்ரம்,

 

” என்னை யாரும் ஃபோர்ஸ் பண்ணல …என் முழு மனசோட தான் நான் சம்மதம் சொன்னேன் ..போதுமா..?”  என்றவனின் வார்த்தைகளை கேட்ட நறுமுகைக்கு சட்டென அடிவயிற்றில் ஏதோ ஒன்று செய்தது.. அது பட்டாம்பூச்சி பறந்ததா அல்லது கம்பளிப்பூச்சி குத்தியதா என்று தான் அவளுக்கு கண்டறிய முடியவில்லை..

 

“எ… என்ன ..சொல்றீங்க..??  உங்களுக்கு தான் என்னை பிடிக்காதே ..” என மெல்லிய குரலில் பதற்றமாய் கூறியதும் விக்ரம்,

 

“ நான் சொன்னேனா உன்கிட்ட ”

 

” ஆனா நீங்க அப்படித்தானே நடந்துப்பிங்க… அது மட்டும் இல்லாம நீங்க பிஎச்டி முடிச்சு இருக்கீங்க.. எனக்கு எதுவுமே தெரியாது ..அப்புறம் என்னை முட்டாள் முட்டாள்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லி சொல்லி குத்தி காட்டவா …?” என்றதும் அவளை ஆழ்ந்து பார்த்த விக்ரம்,

 

” இது வேற ..அது வேற.. அதை புரிஞ்சுக்கோ நறுமுகை.. வீட்ல கேட்டாங்க எனக்கு ஓகேன்னு தோணுச்சு ..சரின்னு சொன்னேன்.. சப்போஸ் உனக்கு பிடிக்கலைன்னா தாராளமா நீ சொல்லு ..நான் உன்னை ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்..”  என திட்டவட்டமாக கூறியதும் என்ன பதில் சொல்வது என திணறிய நறுமுகை,

 

” எனக்கு எங்க அப்பா முடிவு தான் எல்லாமே ..” என  மெல்ல உரைத்ததும் குறும்பாக அவளை பார்த்து விட்டு லேப்டாப்பில் கவனம் பதித்தவன்,

 

” அப்போ உனக்கு என்னை பிடிக்கல.. அப்படித்தானே..?  அதை சொல்றதுக்கு தானே வந்த..??” என போட்டு வாங்கவும் பதறியவள் ,

 

“அப்படி எல்லாம் இல்ல.. செட்டாகுமானு ஒரு சந்தேகம்..”

 

” அதுலாம் செட் ஆகும் பார்த்துக்கலாம்..”  என்றதும் சரியென தலையசைத்து நகர முயன்றவளிடம் ஏதோ நினைவு வந்தவனாய் ,

 

“ஒரு நிமிஷம்.. இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது புரிஞ்சுதா..??? எப்போ யார்கிட்ட சொல்லனும்னு நான் சொல்றேன் அதுவரைக்கும் ஒருத்தருக்கும் தெரியக்கூடாது.. தெரிஞ்சா தேவை இல்லாம இஷ்யூஸ் வரும் ..அப்புறம் உனக்கு வேற கையை மாத்துவாங்க ..எப்படியும் இன்னும் ரெண்டு மூணு மாசத்துல கல்யாணம்னு சொல்லிட்டு இருக்காங்க.. அதுவரைக்கும் நம்ம ஒருத்தொருக்கொருத்தர் புரிஞ்சுக்க இது ஒரு நல்ல சான்ஸ்னு நினைக்கிறேன்..என்ன சொல்ற..?”  மறுக்க எக்காரணமும் இல்லை என்பதால் சரியென மண்டையை ஆட்டி வைத்தாள்..

 

” கவிதாக்கு கூட சொல்ல கூடாது ..புரிஞ்சுதா.?”  என இன்னும் அழுத்தம் கூட்டி கூறியதும் சரியென சலிப்பாக தலையாட்டி  நறுமுகை அவனை ஒரு கணம் பார்த்துவிட்டு சென்றுவிட்டாள் …

 

அதன் பின்னர் நாட்கள் இயல்பாய் தான் கடந்தன… இவள் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் என அவன் வரம்பு மீறவும் இல்லை.. அதிகப்படியாய் பேசவும் இல்லை ..எப்போதும் போலவே பேசினான்,வேலைகளை சொன்னான், அவ்வளவே…

நிச்சயத்தை மட்டும் சீக்கிரம் வைக்க வேண்டும் என அவனது பெற்றோர் வற்புறுத்தியதால் இதோ நிச்சயப்பட்டு எடுத்து மண்டபமும் பிடித்து அனைத்து ஏற்பாடும் செய்யப்பட்டு மேடையில் அமர்ந்திருக்கிறாள் நறுமுகை …

மணமகன் அறையில் கிரே கலர் பேண்ட்டும் மெல்லிய இளஞ்சிவப்பு நிற சட்டையும் அணிந்து கைகடிகாரத்தை மாட்டியவன் ஒன்றுக்கு இரண்டு முறை அனைத்தும் சரியாக இருக்கிறதா என கண்ணாடியில் தன்னை பார்த்தவாறு நின்று இருந்தான் விக்ரம்…

 

அவனின் நினைவுகளோ பின்னே சென்றது… அவனது அன்னை சுகன்யா தான் நறுமுகையின் புகைப்படத்தை அவனிடம் காட்டியது.. 

 

அவன் தற்போது திருமணம் வேண்டாம் என்றெல்லாம் எண்ணவில்லை.. அவனை பொறுத்தவரை அந்தந்த வயதில் அனைத்தும் நடந்திட வேண்டும் என்று தான் எண்ணிடுவான் …

அதனால் அன்னை திருமண பேச்சை எடுத்ததும் சரியென ஒப்புக்கொண்டவன் இன்னும் சிறிது மாதங்களில் தனக்கும் வேலை கிடைத்துவிடும் தனக்கென ஒரு பெண் வந்துவிட்டால் இன்னும் நன்னாக இருக்கும் என எண்ணியவன் அன்னை காட்டிய புகைப்படத்தை வாங்கி பார்த்தவன் உண்மையில் அதிர்ந்து தான் போனான்.. அதிலிருந்து நறுமுகையை கண்டு.. 

அவளது குடும்பத்தை பற்றி சுகன்யா புட்டு புட்டு வைக்க.. அனைத்தும் மண்டையில் ஏறினாலும் தான் யோசித்துக் கூறுவதாக அன்னையிடம் தெரிவித்து விட்டிருந்தான் விக்ரம் …

லேபிற்கு வந்தவனது பார்வை முழுவதும் நறுமுகை இடம்தான் இருந்தது ..

 

அவளுக்கு குறை  எதுவும் சொல்லிட முடியாது ..பார்த்ததும் ஈர்த்து விடும் தோற்றம் தான்.. பளிச்சென்று இருக்கிறாள்… வயதுக்கு உரிய அனைத்தும் செழிப்பாக உள்ளது ..என உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றையும் அளந்தவனுக்கு தான் இவ்வாறு அவளை அவளுக்கே தெரியாமல் ஆராய்வது தவறு என மூளை எச்சரித்தாலும் தன் வாழ்நாள் முழுவதும் வரப்போகிறவளை அறிந்து கொள்வது ஒன்றும் தவறு இல்லையே என அவனது மனம் முரண்டியது …

 

பொறுமையாக எடுத்துக் கூறினால் அனைத்தையும் புரிந்து கொள்கிறாள்.. தன்னிடம் எதிர்த்து பேச வில்லை ..அவளது தோழிகள் அவளுக்கு எதிராய் நடந்திருந்தாலும் முழுதாய் ஒதுக்கிடாது எல்லையுடனே பழகுகிறாள் ..

 

படிப்பை தவிர வேறு எதிலும் கலந்து கொள்ளாது ஒதுங்கி விடுவதில்லை …தானே முன்வந்து கலந்து கொள்கிறாள் ..அதை பொங்கல் அன்று போட்டிகளில் அவள் கலந்து கொண்டதை பார்த்திருக்கிறானே…

 

அனைத்தையும் பொறுமையாய் யோசித்தான்.. முக்கியமாக அவனை எதிர்த்து அவள் ஒரு வார்த்தையும் பேசியதில்லை… இத்தனைக்கும் அவன் அவளிடம் கடுமையாக தான் நடந்து கொண்டிருக்கிறான்.. ஆனால் ஒரு முறை கூட வெறுப்பாய் அவனை பார்ப்பதோ, எதிர்த்து கேள்வி கேட்டதோ இல்லை.. அனைத்தையும் யோசித்துப் பார்த்த விக்ரம் அன்னையிடம் சரி என கூறிவிட்டான்…

அவ்வளவு தான் சுகன்யா அன்றைய வாரமே  பெண் பார்க்க செல்ல வேண்டும் எனக் கூறிவிட்டார்.. 

 

அவளுக்கும் ஏதேனும் தெரியும் தன்னிடம் ஏதேனும் கேட்பாள் என எதிர்பார்த்தான் தான்.. ஆனால் அவளோ சித்தப்பா பையனுக்கு கல்யாணம் என கூறி விடுமுறை கேட்டதும் சிரிப்பு தான் வந்தது விக்ரமிற்கு…

சரி எவ்வளவு தூரம் தான் செல்கிறாள் என பார்ப்போம் என எண்ணித்தான் அவனும் வேண்டுமென்றே பிகு செய்து பின்பு சரியென விடுமுறை தந்திருந்தான்…

 

அன்று வீட்டில் தன்னை அவள் கண்டதும் அதிர்ந்த அவளது முகம் இப்போது வரை நியாபகத்தில் உள்ளது…

அனைத்தையும் நினைத்து பார்த்து எண்ணி சிரித்தவனை அழைத்திருந்தனர் உறவினர்கள் …

ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவன் உதட்டில் உறைந்த சிறு புன்னகையுடன் மேடை வந்திட , அங்கு தலை நிறைய பூ வைத்து மிதமான அலங்காரத்துடன் நின்றிருந்தவளை ஒரு கணம் அழுத்தமாய் பார்த்தவன் பின் உறவினர்களுக்கு வணக்கம் வைத்தான்…

முதலில் பெரியவர்கள் முன்னிலையில் லக்கின பத்திரிக்கையை புரோகிதர் வாசித்திட பின் தட்டில் சீர் வரிசைகளை இருவீட்டினரும் மாற்றி நிச்சயித்துக் கொண்டனர்… 

 

அதைத் தொடர்ந்து மணமகன் மற்றும் மணமகள் இருவரிடமும் மோதிரத்தை தந்திட முதலில் விக்ரம் தான் மெல்ல அவளது மருதாணி இட்ட மென் கரத்தை பற்றி மோதிரத்தை போட்டு விட்டான்…

அவனது ஸ்பரிசத்தில் ஜில்லென்று ஆனது நறுமுகைக்கு…சட்டென முகமெல்லாம் சூடாகிட…அவளது நெஞ்சமோ உணர்ச்சியில் ஏறி இறங்கியது…

 

அடுத்ததாய் அவளிடம் மோதிரம் தந்திட விக்ரமின் முரட்டு கரத்தை பிடித்ததும் பயம் தான் தொற்றிக்கொண்டது அவளை…

 

எச்சிலை விழுங்கி கொண்டு அவனது விரலில் மோதிரம் போட்டதும் கச்சிதமாய் பொருந்திக் கொண்டது அவனது விரலுக்கு அவள் அணிவித்த மோதிரம்…

 

அதன் பின் இருவரது கரமும் சேர்ந்தே இறங்கிட…விலகிட பார்த்தவளது கரத்தை கெட்டியாய் பிடித்து கொண்டான் விக்ரம்…

அதன்பின் இருவரையும் அமர வைத்து இரு குடும்பத்தாரும் நலங்கு வைத்து மகிழ்ந்தனர்…

அன்றைய தினம் ஜோடிகள் இருவருக்கும் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top