அத்தியாயம் 12

தனக்கு அருகே வந்து நின்ற வெள்ளை நிற காரினை திகைத்துப் போய் பார்த்த நறுமுகை அதிலிருந்த விக்ரமை கண்டதும் விழிகள் இரண்டும் மலர்ந்து விரிந்தன…

 

அவளது இதழ்களோ,

 

” விக்ரம் …” என அவளையும் அறியாது அழைத்திட, அவளை பார்த்தவாறு இரு புருவங்களையும் உயர்த்தி அவளை உள்ளே வருமாறு ஜாடை செய்தான்…

 

சட்டென தனது பையினை கழட்டியவாறு கார் கதவை திறந்து உள்ளே ஏறிக்கொண்டாள்…

சில்லென்று காற்று அவள் முகத்தில் மோதி விட ,அவனை தயக்கமாக பார்த்து புன்னகைத்தவாறு பையினை மடியில் வைத்துக்கொண்டு தலை குனிந்து  கொண்டாள்..

 

வண்டியை எடுக்கலாம் என கியரில் கை வைத்தவன் பின் அவள் சீட் பெல்ட் மாட்டாததை கவனித்து,

 

“சீட் பெல் போடு..”  என்றதும் அவளும் திணறி விட்டாள்…முதல் முறை அவனுடனான பயணம் அல்லவா இது..! அதனாலேயே சின்ன சின்ன விடயங்களை கூட மூளை கிரகித்துக் கொள்ள நேரம் தேவைப்பட்டது…

 

அவனும் யாரேனும் பார்த்து விடுவார்களோ என எண்ணியவன்  எக்கி சீட் பெல்ட்டை எடுத்தான்…

இருவருக்கும் நூல் அளவு இடைவெளிவு மட்டுமே இருந்திட , இவ்வளவு அருகில் அவன் வருவான் என எதிர்பாராத நறுமுகை மூச்சடைத்து சமைந்துவிட்டாள்…

அவனும் இதை தற்செயலாக தான் செய்தான் ..இந்த சில நொடி நெருக்கத்திற்கு அவனிடமிருந்து உஷ்ணம் பெருமூச்சு வெளியிட, அது அவள் முகத்தில் வந்து மோதி விடைப்பெற்றது…

 

அவனுடைய அனல் காய்ச்சல் இவளுக்கும் தொத்திக் கொள்ள நொடியில் சீட் பெல்ட்டை மாட்டி விட்டவன் தலையை பக்கவாட்டாக திருப்பி ஊஃப்  என்று இதழ் குவித்து ஊதி விட்டு வண்டியினை எடுத்தான்…

 

“நம்ம காலேஜ் யாராவது இருந்தாங்களா..??”  என்றதும் அவளுக்கு ஒன்றுமே பிடிபடவில்லை…

 

” ஹான்… என்ன..?”  இப்போது அவளை திரும்பிப் பார்த்து,

 

“ நம்ம காலேஜ் பசங்க யாராவது பஸ் ஸ்டாப்ல இருந்தாங்களான்னு கேட்டேன்…”

 

” இல்ல.. இருந்தாங்க ..அது.. பஸ் வந்ததும்.. போயிட்டாங்க..”  என திணறலுடன் கூறியதும் அவளை முகம் சுருக்கி பார்த்து விட்டு நேரே பார்த்த விக்ரம்,

 

” தெளிவாவே பதில் சொல்ல மாட்டியா ..? எப்போதும் திணறிக்கிட்டே தான் இருப்பியா..?”  என கேட்டதும் அவளுக்கு சட்டென ஒரு மாதிரியாகிவிட்டது…

ஏற்கனவே அவனிடத்தில் ஒரு வித தாழ்வு மனப்பான்மை அவளுக்கு இருக்கும்.. இப்போது இது போல் கேட்டிடவும் அவளுக்குத்தான் சின்ன விடயத்திற்கு கூட பதில் அளிக்க தெரியவில்லையே என தன்னைத் தானே கடிந்து கொண்டவள் அமைதியாகி விட்டாள்… 

 

அவள் பதில் ஏதும் கூறாது இருப்பதை கவனித்த விக்ரம் தலையாட்டிபடி அவளைப் பார்த்து விட்டு சாலையில் கவனம் பதித்தான்…

பாதி தூரம் சென்ற போது கூட அவள் ஏதும் பேசிடவில்லை.. பொறுத்து பொறுத்து பார்த்த விக்ரம்,

 

” என்கூட வர பிடிக்கலைன்னா சொல்லி இருக்கலாம்ல நறுமுகை?”  என்றதும் பக் என்று ஆனது அவளுக்கு ..

 

“இ..இல்ல.. அப்படியெல்லாம் இல்லை ..”

 

“அப்புறம் ஏன் எதுவுமே பேச மாட்டேங்குற..??  நானா ஏதாவது பேசினாலும் அமைதியா வர.?”  என அடிக்குரலில் அவன் கேட்டாலும் அதில் கடுப்பு அப்பட்டமாய் தெரிந்தது…

 

மேலும்  தொடர்ந்தவன் அவளை அழுத்தமாக பார்த்து,

 

” பிடிக்காமல் தான் இருக்கியா..?”  என கேட்டு விட்டான்…

 

அவளுக்குத்தான் அவனது பேச்சில் முனுக்கென்று கண்கள் கலங்கி விட்டது…

 

“அப்படி…லாம்..எதுவும் இல்லை.. ஏன் இப்படி பேசுறீங்க..?”

 

” நீ நடந்துக்கறதை பார்த்தா எனக்கு அப்படி தான் தோணுது..”  என்றதும் ஏற்கனவே ஒருவித பதற்றத்தில் இருப்பவளுக்கு அவன் இது போல் பேசிடவும் மிகவும் தடுமாறி போனாள் நறுமுகை …

 

“அது… என்ன பேசறதுன்னு தெரியல…”

 

” உன் ஃப்ரண்ட்ஸ் கிட்ட மட்டும் நல்லா பேசுற..? என்னை பாத்தா மட்டும் உனக்கு பேச்சு வரலையா..?”  என காண்டாகவே கேட்டவன்.. ஸ்டீயரிங்கிலிருந்து கரத்தை எடுத்து மோதிரம் அணிவித்து விட்ட அவளது கரத்தை கெட்டியாக பிடித்து அவள் முன்னே நீட்டி காட்டியவன்,

 

” இங்க பாரு இதுல  இருக்க மோதிரம் நான் போட்டது..”  என பேசியவாறு அவளது கரத்தோடு கரம் கோர்த்துக் கொண்டவன்,

 

” உனக்கு எனக்கும் கல்யாணம் ஆக போது.. பேசி புரிஞ்சுக்கலாம்ன்னு நினைக்கிறேன்.. இப்படி நீ அமைதியாவே  இருந்தா என்ன பண்ண முடியும் சொல்லு..?”  என கேட்டதும் அவனது  இந்த ஸ்பரிசத்தில் அடி வயிறு எல்லாம் அவளுக்கு இறுகிப் பிடித்தது போல் ஆனது …

 

எச்சிலை விழுங்கிக் கொண்டவள்,

 

“அது …அது…”  என தடுமாறிட, விக்ரமால் அவளது கை நடுக்கத்தை அப்பட்டமாய் உணர முடிந்தது…

 

” சரி.. ஃப்ரீயா விடு..”  என்றதும் தொப்பென இருக்கையில் சாய்ந்தவளுக்கு உடல் முழுவதும் வியர்வையில் குளித்திருந்தது எனலாம்…

புதுவித உணர்வு அவளை விட்டால் இதயம் வெடித்து இறக்கும் தருவாயிற்கு கொண்டு சென்று விடும் போல அப்படி இருந்தது அவளுக்கு …

 

சிறிது தூரம் சென்றதும் மெதுவாய் அவளை திரும்பிப் பார்த்தவன் உச்சபட்ச அதிர்ச்சிக்குள்ளானான்…

சட்டென வண்டியை ஓரம் கட்டியவன்,

 

” நறு என்ன உனக்கு இப்படி வேர்க்குது..?? என்ன பண்ணுதுடீ…?”  என்றவாறு ஏசியை அதிகப்படுத்தியவன் வேகமாக தண்ணீர் பாட்டிலை திறந்து அவளிடம் நீட்டினான்…

 

அதை வாங்குவதற்கு நீட்டியவளது கரம் கூட நடுங்கிட, சட்டென அவளது தலையை பிடித்து அவனே நீரினை வாயில் புகட்டினான்.. 

அதையும் மேலே சிந்தியவாறு குடித்தவளுக்கு தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவே நேரம் தேவைப்பட்டது..

தன் கை குட்டையை எடுத்து அவளது முகம் முழுவதும் துடைத்து விட்ட விக்ரம் ,

 

“என்ன பண்ணுது நறு..?? உடம்பு ஏதும் சரியில்லையா..?”  என சற்று மென்மையாய் கேட்டதும் அவளால் மூச்சு விடவே சிரமமாக இருந்தது..

 

“எ… எது..வும்.. இல்லை ..” என்றவளை புரியாது பார்த்தவனுக்கு அவளுடனான இந்த முதல் பயணம் சற்று ஏமாற்றத்தையே தந்திருந்தது…

வீட்டிற்கு சற்று முன்னரே வண்டியை நிற்பாட்டியவன்,

 

” வீட்டுக்கு போயிட்டு நல்லா ரெஸ்ட் எடு..”  என முகத்தில் எதையும் காட்டாது கூறிட மெல்ல அவனை திரும்பிப் பார்த்தாள் நறுமுகை…

அவனது முகம் சாதாரணமாக இருந்தாலும் விழிகளில் ஒரு வித ஏமாற்றம் அப்பட்டமாய் வெளிப்பட்டது.. அதை கண்டதும் நறுமுகைக்கு சுருக்கென்றானது… 

 

“நான்.. வரேன்..”  என்று மட்டும் கூறியவள் காரிலிருந்து இறங்கிட.. அவள் வீட்டிற்கு செல்லும் வரை பார்த்துவிட்டே காரினை கிளப்பி இருந்தான் விக்ரம்..

அதுவரை ஏதோ நோயாளி போல அவன் முன்பு இருந்தவள் வீட்டிற்கு வந்ததும் புது தெம்பு கிடைத்தது போல தன் தலையிலேயே அடித்துக் கொண்டாள்..

அவனிடம் இப்படி நடந்து கொண்டோமே என்று ..!

 

அன்று முழுவதும் அவளுக்கு தூக்கமே வரவில்லை.. நிச்சயம் தன்னை தவறாக அவன் எடுத்துக் கொள்வான்.. அவனுடன் இந்த முதல் பயணத்தை இப்படி சொதப்பிவிட்டோமே என தன்னையே கடிந்து கொண்டாள் நறுமுகை… 

 

விக்ரமோ தனது படுக்கையறையில் தலைக்கு அடியில் கரங்களை கொடுத்து விட்டத்தை பார்த்து படுத்திருந்தவனுக்கும் நறுமுகையின் எண்ணம் தான்…

 

இருவருக்குமான முதல் தனிமையான பயணம் அது.. இத்தனைக்கும் அவன் அத்து மீறவில்லை.. ஆனால் அதற்கே அவள் வியர்த்து விறுவிறுக்க தேவர் மகன் ரேவதி போல காத்துதான் வருது என்பது போல நடந்து கொண்டது அவனுக்கு ஒரு வித ஏமாற்றத்தை தான் தந்தது.

 

அதையே எண்ணியவாறு அவனும் உறங்கி விட மறுநாள் இருவரும் வழக்கம் போல கல்லூரிக்கு வந்தனர்…

வழக்கம் போல அவன் கூறிய வேலைகளை செய்தவள் தவிப்புடன் அடிக்கடி அவனையே பார்த்தவாறு இருந்தாள்…

லேபில் ஒவ்வொருவரும் அவரவர் வேலையை பார்க்க சென்றுவிட, இப்போது சற்று தைரியமாக அவன் முன்பு வந்து நின்ற நறுமுகை தலை குனிந்தவாறு ஒன்றை கூறினாள்…

அதைக் கேட்டவனோ,

 

“ புரியல… என்னது..?”

 

இப்போது மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவள் ,

 

“பிஹெச் செக் பண்ணனும்..!”  என்றதும் அவனையும் மீறி இதழ்கள் விரிந்தன சின்னதாய்…

பெண்ணவளை அழைத்துக்கொண்டு பிஹெச் பார்க்கும் அறைக்கு சென்றிட.. இன்று அவர்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை போல.. பொறுப்பாளர் அங்கேயே தான் இருந்தார்..

அதை கண்டதும் இருவரும் ஒருவரை ஒருவர் நொடியில் பார்வையை பரிமாறிக் கொண்டனர் ஏமாற்றமாய்… 

 

வேண்டுமென்றே விக்ரம் பிஎச் எப்படி பார்க்க வேண்டும் என அவளிடம் சொல்லிக் கொண்டிருக்க, அப்போது பொறுப்பாளருக்கு ஒரு அழைப்பு வந்ததும் ,

 

“விக்ரம் சார் நீங்க கொஞ்சம் பார்த்துக்கிறீங்களா..? நான் பயோ கெமிஸ்ட்ரி லேப் வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்… ஓகே அக்கா நீங்க பாருங்க..”  என்றதும் அவ்வளவு தான் நறுமுகையின் இதழ்கள் மலர்ந்து விட்டது …

கண்கள் மூடி மனதிற்குள் பத்து வரை எண்ணியவள் பின் தலை திருப்பி பார்த்திட , விக்ரம் அன்று போல் அவளை நெருங்கி வராது அதே இடத்தில் தான் நின்று இருந்தான்..

ஆனால் இம்முறை முதல் அடியை தானாக எடுத்து வைத்து இருந்தது சாட்சாத் நறுமுகையே  தான்…

அவனை நோக்கி மெல்ல முன்னேறி வந்தவள் மெதுவாய் தலையை உயர்த்தி அவனை பார்த்து,

 

” சாரி.. இதுக்கு முன்னாடி யார் கூடவும் தனியா போனது இல்ல… அதான் எனக்கு கொஞ்சம் படபடன்னு வந்துருச்சு ..” என மன்னிப்பு கோரியதும்  அதுவரை மனதை அழுத்தி இருந்து ஏதோ ஒரு அழுத்தம் மெல்ல விலகி சென்றது விக்ரமிற்கு…

 

விளைவு கண்களில் சிரிப்புடன் விக்ரம் அவளிடம்,

 

” இப்பவும் நாம தனியா தான் இருக்கோம் படபடன்னு வரலையா..?”  என தலை சாய்த்து கேட்டதும் அவனது விழிகளோடு விழிகளை ஆழ்ந்து நோக்கியவள் இல்லை என மறுப்பாக தலை அசைத்திட… 

 

இப்போது ஒரு அடியை எடுத்து முன்னே வந்த விக்ரம் அவளது விழிகளை தான் மாறி மாறி பார்த்தான் …

மெல்ல குனிந்து அவளது உச்சியில் தன் இதழை அழுத்தமாய் பதித்து முத்தமிட… கண்கள் மூடி அம்முத்தத்தை உள்வாங்கியவளது கரம் சட்டென  அவனது கரத்தின் மணிக்கட்டை கெட்டியாக பிடித்துக் கொண்டது பிடிமானத்திற்கு…

 

விழிகளைத் திறந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள் நறுமுகை… அவளது விழிகள் இரண்டும் சின்னதாய் கலங்கி காணப்பட்டது …

 

மீண்டும் குனிந்து அவளது கண்களில் மென்மையாக முத்தமிட்டவன் மெல்ல கீழ் இறங்கி அவளது கன்னத்தில் முத்தமிட்டு இதழை கொஞ்சமாய் நெருங்கும் நேரம் சட்டென கதவை திறந்து கொண்டு உள்ளே வந்து இருந்தான் சாமுவேல்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top