அந்த மருத்துவமனையை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது ….கல்லூரி தலைமை ஆசிரியர், கவிதா ஜான் குமார் அங்கு தான் பதற்றத்துடன் நின்றிருந்தனர்..
கவிதா தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள்… ஜான் மற்றும் குமார் இருவருக்கும் கண்கள் கலங்கி கண்ணீரை சத்தமின்றி வெளியேற்றிக் கொண்டிருந்தது…
அங்கிருந்த தலைமை ஆசிரியரும்,
” என்ன ஆச்சு என்ன பிரச்சனை மொதல்ல அவங்களுக்கு..?” என கேட்டதும் யாருக்கும் எதுவும் தெரியவில்லை …
ஆண்கள் முழிப்பதை கண்டு விட்டு கவிதாவிடம்,
“ம்மா ஏதாவது தெரியுமா உனக்கு..??” என கேட்டதும் என்ன பதில் சொல்லிடுவாள்..
“ தெரியல சார்… நல்லா தான் இருந்தா ..திடீர்னு இது மாதிரி ஆயிடுச்சு..”
” அவங்களுக்கு ஏதாவது பிரச்சனைனு ஏதாவது சொன்னாங்களா உங்ககிட்ட..?” என்றதும்,
“ இல்லை சார்… அதெல்லாம் எதுவும் சொல்லல.. நார்மலா தான் இருந்தா… ”
விக்ரம் திட்டியதால் தான் அவள் அப்படி செய்திருக்கிறாள் என்றால் அவன் தான் சில நாட்களுக்கு முன்பு திட்டிருந்தானே.. அப்போதே ஏதேனும் நடந்திருந்தாலாவது அவனை சொல்லலாம் …
ஆனால் அதுக்கு பின்னரும் ஏன் இன்று காலையில் கூட நறுமுகை இயல்பாக தானே இருந்தாள் …அப்படி இருக்கும் பட்சத்தில் யாரை என்று கை காட்டுவது …
“ஜான் …குமார் உங்களுக்கு ஏதாவது தெரியுமா…?”
” இல்லை சார்… அவ நல்லா தான் இருந்தா.. திடீர்னு என்ன ஆயிடுச்சுன்னு தெரியல சார்..” என்றதும் தலையை பிடித்துக் கொள்ளாத குறை தான் தலைமை ஆசிரியருக்கு…
“ டாக்டர் என்ன சொல்றாங்கன்னு பார்த்துட்டு அதுக்கப்புறம் உங்க பேரன்ஸ்க்கு இன்பார்ம் பண்ணனும் ….கவிதா உங்க கிட்ட அவங்க பேரன்ட்ஸ் நம்பர் இருக்கா..??”
“ இருக்கு சார்…”
” சரிம்மா …அழாதீங்க ஒன்னும் ஆகி இருக்காது..” என தலைமை ஆசிரியர் தான் அழுது கொண்டிருக்கும் கவிதாவிடம் ஆறுதல் கூறினார்..
ஜான் குமாரிடம்,
“ இருடா.. விக்ரம் அண்ணா கிட்ட கேட்டு பார்க்கிறேன்.. அண்ணாவை பார்த்தியா நீ…?”
” இல்லடா… மார்னிங் பார்த்து அதுக்கு அப்புறம் பார்க்கல..” என்றதும் வேகமாக விக்ரமிற்கு அழைப்பு விடுத்து இருந்தான் …
அழைப்பை ஏற்ற விக்ரம்,
” சொல்லு ஜான்..” என அசட்டையாக கேட்டதும் தான் தாமதம்,
” அண்ணா உங்களுக்கும் நறுமுகைக்கும் ஏதாவது பிரச்சனையா .??” என்று தான் முதலில் கேட்டது.
“ எனக்கும் அவளுக்குமா..??? ஏன் என்னாச்சு..??”
” என்னன்னே தெரியலண்ணா திடீர்னு மாடில இருந்து குதிச்சிருக்கா…!” என தொண்டை அடைக்க பேசியவனின் பேச்சு விக்ரமின் காதல் விழுந்ததும் தான் தாமதம் அவனுக்கு நெஞ்சே வெடித்து விடும் போலானது…
கைபேசி பிடித்த கரங்கள் நடுங்கிட அவள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையை கேட்டறிந்து கொண்டு வேக வேகமாக அடித்துப் பிடித்து வந்து சேர்ந்திருந்தான் விக்ரம் .…
விக்ரமால் நம்பிடவே முடியவில்லை… நறுமுகையா..?? அதுவும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாளா..??
தலையெல்லாம் கிர்ரென்று சுற்றியது…
அவன் வருவதற்கும் மருத்துவர் அறையிலிருந்து வெளிவருவதற்கும் சரியாக இருந்தது..
மூச்சு வாங்கியவாறு வந்து சேர்ந்தவனை அனைவரும் ஒரு கணம் பார்த்துவிட்டு வேகமாக மருத்துவரை நெருங்கினர்..
மருத்துவரும்,
“ நல்ல வேலை பெருசா அடி ஏதும் படல.. கால்ல மட்டும் சின்ன ஃப்ராக்சர்… மத்தபடி கை முகத்துல துன் சின்ன சின்ன காயமாகி இருக்கு…மருந்து போட்டு இருக்கு..”
” டாக்டர் அவங்க முழிச்சிருக்காங்களா..?? வேற ஏதும் சொன்னாங்களா…?” என கேட்ட தலைமை ஆசிரியரிடம்,
“ம்ம்ம்… முழிச்சு தான் இருக்காங்க…எதும் பேசலை சார்… நீங்க போய் பாருங்க..”
வேகமாக தலைமை ஆசிரியருடன் அனைவரும் ஒன்றாக உள்ளே சென்றனர்…
நறுமுகையின் கன்னத்திலும், காதிலும், கழுதிலும், இரு கைகளிலும் ஆங்காங்கே சின்ன சின்னதாய் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது… காலில் மட்டும் முறிவு ஏற்பட்டு இருப்பதால் கட்டுப்போட்டு வைத்திருந்தனர்…
.
அனைவரையும் மிரட்சியுடன் பார்த்தாலும் அங்கு விக்ரமை கண்டதும் தான் அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது…
தலைமை ஆசிரியர் வேகமாக அவளை நெருங்கி,
” இப்ப எப்படி இருக்கீங்க..?’ என்று தான் முதலில் கேட்டார்..
” ஓ..ஓகே தான்.. சார்..” என்றவரிடம்,
” சரி நறுமுகை… என்ன ஆச்சு எதனால் நீங்க இப்படி பண்ணுங்க .?” என தன்மையாகவே கேட்டார்…
அக்கேள்வியில் உடனே தலையை குனிந்து கொண்டாள்…
ஜானோ,
” உன்னை தான் கேட்கிறோம்.. சொல்லு… நாங்க எல்லாருமே பதறிட்டோம் முகை…யாராவது ஏதாவது சொன்னாங்களா..??? சொல்லித்தொலை…” என கத்திடவும் தலைமை ஆசிரியர்,
“ கொஞ்சம் அமைதியா இரு ஜான்.. நீ சொல்லும்மா.. என்ன பிரச்சனை தைரியமா சொல்லு…”
“அ… அது தெரியாம… அங்கிருந்து விழுந்துட்டேன்.. சார் …” என்றதும் அனைவரும் அவளை புரியாது பார்த்து ஒருசேர,
“ தெரியாமையா….???”
“ஆ…ஆமா… அது ஜன்னல் மேல.. சும்மா ஏறி உட்கார்ந்துட்டு இருந்தேன்… அப்பதான் ஸ்லிப் ஆகி… விழுந்துட்டேன்..” என்றதும் அனைவருக்கும் ஐயோடா என்றானது…
” கீழே எவ்வளவு இடம் இருக்கு அங்கேயாவது உட்கார்ந்து தொலைஞ்சு இருக்க வேண்டியது தானே..??? ஏதாவது ஆகிருந்தா என்னடி பண்ணி இருப்போம்????” என தேம்பி தேம்பி அழுதும் கவிதாவை நறுமுகையால் காண முடியவில்லை .…
“அழாத கவிதா…”என தயக்கத்துடன் தான் உரைத்தாள்…
” என்ன அழாத.. ஏதாவது ஆயிருந்தா என்னடி பண்றது… அறிவே இல்லை உனக்கு…எருமை…” என அவள் மீது சாய்ந்து அழ ஆரம்பித்து விடவும் அனைவருக்கும் வேதனையாக இருந்தது …
அச்சமயம் போலீசாரும் வந்திருந்தனர்…. கல்லூரி வளாகத்தில் அவள் குதித்து இருந்ததால் தலைமை ஆசிரியர் தான் செய்தி அனுப்பி இருந்தார்….
அதனால் தான் விசாரிக்க வந்திருந்தார்கள்… அனைவரையும் வெளியேற்றி விட்டு நறுமுகையிடம் வந்தவர் அவளது விவரங்களை கேட்டு அறிந்தார் முதலில்…
பின் நேரடியாக விஷயத்திற்கு வந்தவர்,
“எதனாலம்மா விழுந்தீங்க..??? நீங்களா விழுந்தீங்களா இல்ல யாராவது தள்ளி விட்டார்களா..??” என்றதும் அவசரமாய்,
“ இல்ல சார் …யாரும் தள்ளிவிடல …”
“எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லுங்கம்மா.. ஏதாவது லவ் பிரச்சனையா..?? இல்ல காலேஜ்ல யாராவது ஏதாவது தொல்லை பண்ணாங்களா..??? நீங்க தைரியமா சொல்லுங்க.. நாங்க கம்பளைண்ட் எடுத்து ரகசியமா விசாரிப்போம்..’ என்றதும் நறுமுகை உள்ளுக்குள் மிரண்டு போய்விட்டாள்…
நிச்சயம் தான் தானாக தான் குதித்திருக்கிறோம் என்றால் இது தன்னை மட்டுமல்ல கல்லூரி வரை பெரிய பிரச்சினையாகிவிடும்…
அப்போது ஏதோ ஒரு மனநிலையில் அவ்வாறு செய்துவிட்டாளீ பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காது…
ஆனால் இப்போது உண்மையை கூறினால் பெரிய பிரச்சினையாகி விடுமே..!
எச்சிலை விழுங்கிக் கொண்டு காவலரை பார்த்தவள்,
” இல்லை சார் ..எங்க லேப் ஜன்னல் ரொம்ப பெருசா இருக்கும் ..ஒரு சில பேர் அங்க உட்கார்ந்து பேசுவாங்க.. எனக்கும் அங்க உட்கார ஆசை அதான் லேப்ல யாரும் இல்லாதபோது உட்கார்ந்து பார்க்கலாம்னு உட்கார்ந்து கீழே விழுந்துட்டேன் சார்..” என்றதும் காவலரால் நம்ப முடியவில்லை …
“பயப்படாதம்மா.. பயந்த உன்னை இன்னும் தான் ஏதாவது டார்ச்சர் பண்ணுவாங்க …வீட்ல ஏதாவது பிரச்சனையா ..??இல்ல பர்சனலா ஏதாவது உங்களுக்கு பிராப்ளமா..??தைரியமா சொல்லுங்க..” என மீண்டும் மீண்டும் காவலர் அவளிடம் அழுத்தி கேட்டிட.. நறுமுகை விடாப்படியாக தான் தவறுதலாக தான் கீழே விழுந்து விட்டோம் என்று தான் கூறிவிட்டாள்…
அதன் பின் அவளிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் வந்தவர்,
“ஒன்னும் பிரச்சனை இல்ல சார்.. அந்த பொண்ணு தெரியாம தான் விழுந்திருக்கும் சொல்லுது.. பாத்துக்கோங்க..” என்று விட்டு சென்று விட்டார்..
தலைமை ஆசிரியருக்கு அதன் பின் தான் உயிரே வந்தது.. ஏதேனும் பிரச்சனை என்றால் நிர்வாகம் அவரை தானே கேள்வி கேட்கும்…
கல்லூரிக்கும் அவப்பெயர் ஆகிவிடுமே …
நறுமுகையின் பெற்றோருக்கும் விஷயம் தெரிவிக்கப்பட அனைவரும் வந்து சேர்ந்தனர்…
மகளைக் கண்டதும் சுரதையும் வளவனும் அழுது விட்டனர் …
முதலில் அவர்களுக்கு விஷயத்தை தலைமை ஆசிரியர் முழுமையாய் கூறவில்லை.. அவளுக்கு உடல்நிலை சரியில்லை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறோம் என்றுதான் கூறி வர சொல்லி இருந்தனர்..
ஆனால் வந்ததும் மருத்தவரும் தலைமை ஆசிரியரும் விலா வாரியாக அனைத்தையும் தெரிவித்துவிட்டார் ..
கேட்ட அவர்கள் நெஞ்சே கணத்து விட்டது… ஒற்றை மகள் ஆயிற்றே..இப்படி வாரிக் கொடுக்கவா பெற்றுள்ளோம்..? என அவரைக் கட்டி அழுது தீர்த்து விட்டனர் …
பின் தலைமை ஆசிரியர் தான் பெற்றவர்களை சமாதானப்படுத்தி,
” நீங்க கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க… நறுமுகை நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு காலேஜ் வரட்டும்… ப்ராஜெக்ட் முடிக்கலனாலும் பரவால்ல ஒன்னும் பிரச்சனை இல்ல.. உங்களுக்கு எக்ஸ்ட்ரா டைம் கூட நாங்க தரோம் நீங்க குணமாகி வாங்க ..” என சிறிது நேரத்தில் கிளம்பி விட்டார்..
ஜான் குமார் கவிதாவிடம் தான் சுரதையின் பெற்றோர் பேசி என்ன ஏது என்று தெரிந்து கொண்டனர் …
கவிதாவை தான் சுரதை கடிந்து கொண்டார் ,
“அவ கூடவே இருக்கல கவிதா.. பார்த்துக்கலாம்ல.. ஏன் தனியா விட்ட ..?இப்ப எல்லாம் நீயும் அவ கிட்ட பேசுறதே இல்லைன்னு சொல்லி அவ அப்படி அழுதா …என்னதான் பிரெண்ட்ஸ்ங்களோ…மூனு வருஷம் ஒன்னா இருந்துட்டு இப்ப இப்படி இருக்கீங்க…” என்றதும் கவிதாவிற்கு குற்ற உணர்வு ஆகிவிட்டது …
பின் வளவன் தான் குமாருக்கும் ஜானுக்கும் நன்றி தெரிவித்து விட்டு கவிதாவையும் சமாதானப்படுத்தி அவர்களுடன் கிளம்ப சொல்லிவிட்டு இருந்தார்…
அங்கிருந்து செல்லும் முன்னர் ஜான் தான்,
” விக்ரம் அண்ணாவை அங்கே பார்த்தீங்களாடா..?? ஆளையே காணோம்..” என்றவாறு விக்ரமிற்கு அழைப்பு விடுத்தான்…
மறுபுறத்தில் இருந்து விக்ரமோ,
” நீங்க கிளம்புங்க ஜான்..
நான் இங்கே ஃபிரண்ட பார்த்தேன்… அவங்க கிட்ட பேசிட்டு இருக்கேன்..” என்றதும் அனைவரும் கிளம்பிவிட்டனர் …
விக்ரமோ நறுமுகை அனுமதிக்கப்பட்ட அறைக்கு வெளியே இருந்தவன் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்..
அங்கு அழுது கொண்டிருந்த சுரதை வருங்கால மருமகனை கண்டதும் திடுக்கிட்டு எழுந்து நின்றவரால் எதும் பேச முடியவில்லை…
விக்ரமும் நறுமுகையை தான் அழுத்தமாக பார்த்தவாறு வந்தான் … அவனை நிமிர்ந்து பார்க்க கூட உடல் கூசியது அவளுக்கு…
வளவனும் விக்ரம் இங்கு வருவதை பார்த்து,
” வாங்க.. வாங்க… தம்பி அது.. அவ காலேஜ்ல…” என்றதும் அவரை அமைதியாக பார்த்தவன்,
” தெரியும் மாமா.. கேள்விப்பட்டு தான் வந்தேன் ..” என்றதும் வளவனுக்கு தொண்டை அடைத்தது..
” அது அவ தெரியாம தான்.. விழுந்து இருக்கா.. வேற.. எதுவும் இல்ல… அப்பா அம்மாக்கு தெரிஞ்சு.. ஏதாவது தப்பா நினைச்சுக்க ..போறாங்க..” என தடுமாற்றத்துடன் கூறியதும் விக்ரம் ,
“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை மாமா..நான் பார்த்துக்குறேன்.. நீங்க கவலைப்படாதீங்க..” என்றவன் நறுமுகையின் புறம் பார்வையை திருப்பினான்..
அவளும் அவனைப் பார்ப்பேனா என்பது போல தலையை குனிந்தே இருந்தாள்…
சுரதை தான் ,
“ப்ச்…உன்னை பார்க்க மாப்ள வந்திருக்காங்க பாரு.. ” என்றதும் அவளும் குனிந்த தலையை நிமிர்த்தாது,
” எனக்கு தூக்கம் வருதும்மா.. நான் தூங்குறேன்..” என்றதும் வளவனும் சுரதையும் சங்கடமாய் விக்ரமை பார்த்தனர்…
அவனும் அங்கிருந்த இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்தவன்,
” பரவால்ல மாமா ..நான் வெயிட் பண்றேன் ..” என்றதும் விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் எச்சிலை விழுங்கி கொண்டாள்…
அவளிடம் பேசியவாறு இருந்தார் சுரதை… பின் வளவன் தான் விக்ரமை ஒரு கணம் பார்த்துவிட்டு,
” நீ வா சுரதை ..கேண்டின்ல போய் மாப்பிள்ளைக்கு எதாவது குடிக்க வாங்கிட்டு வரலாம்..” என்றதும் அவனும் புரிந்துக் கொண்டு சரியென இருவரும் கிளம்பிவிட்டனர் …
அவர்கள் சென்றதும் கைச்சட்டையை மடித்து விட்டவாறு கதவருகே சென்றவன் கதவை தாழ்ப்போட்டுவிட்டு அவளை நெருங்கி வந்தான்…
தலை குனிந்து இருந்தாலும் அவனை கவனித்துக் கொண்டு இருந்தவள் அவன் தன்னை நோக்கி வருவதை பார்த்து விட்டு தன்னை கட்டிக்கொண்டு அவன் அழ போகிறான் என எதிர்பார்த்து தலையை உயர்த்தினாள்…
அவ்வளவு தான் விட்டான் ஒரு அறை பளார் என்று அவளது கன்னத்தில் ….சுரீரென்ற வலியில் கண்களை இறுக மூடி கொண்ட நறுமுகையின் கழுத்து திருப்பிக்கொண்டது…