அத்தியாயம் 24

நாட்கள் சென்றன… ஒரு வழியாய் நறுமுகை தனது தீசஸை முழுதாய் முடித்து வைவாவிற்காக முழுவதும் தன்னை தயார்படுத்திக் கொண்டாள் விக்ரமின் உதவியுடன்…

 

என்னென்ன கேள்விகள் கேட்டால் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என ஒவ்வொன்றையும் அவளுக்கு பார்த்து பார்த்து சொல்லிக் கொடுத்தான் விக்ரம் …

 

ஒரு வழியாய் வைவாவிற்கான நாளும் வந்திட.. நேர்த்தியாய் காட்டன் சுடிதாரை அவன் சொன்னபடி அணிந்து வந்தவள் தலை முடியை பின்னி உருவங்களுக்கு மத்தியில் கருப்பு நிற பொட்டு ஒன்றை வைத்து விட்டு …கண்ணுக்கு சற்று அடர்த்தியாகவே மையிட்டுக் கொண்டாள்…

மணிகட்டில் கடிகாரத்தையும் மற்றொரு கரத்தில் பிரேஸ்லெட்டும் அணிந்து கொண்டவள் பார்ப்பதற்கு அத்தனை நேர்த்தியாக இருந்தாள்…

 

அன்று சீக்கிரமே வந்திருந்தாள் நறுமுகை…வர சொல்லி இருந்தான் விக்ரம… அன்று அவளுக்கு புதிதாக எதுவும் சொல்லித் தரவில்லை அவளது கரங்களை இறுக பிடித்து ,

 

“ஆல் தி பெஸ்ட் ..நல்லா பண்ணு தைரியமா பண்ணு…”  என வாழ்த்து கூறி அனுப்பி வைத்தான்..

அதன் பின் ஒவ்வொரு மாணவர்களாய் சென்று தாங்கள் செய்த ப்ராஜெக்ட் பற்றி விளாவரியாய் விளக்கம் அளித்திட அங்கிருந்த பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் கேள்வியை கேட்டனர் ….கவிதாவும் நல்லபடியாக முடித்துவிட்டு வந்தாள்… 

 

இப்போது நறுமுகையின் முறை வரவும் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு அவளுக்காகவே அவளுடன் இருந்த விக்ரமை பார்த்தாள் ..

 

“தைரியமா பண்ணு.. நர்வஸ் ஆகாத..”  என்றதும் சிறு தலை அசைப்புடன் உள்ளே நுழைந்தால்  நறுமுகை.…

விக்ரமும்  கடைசி இருக்கையில் சென்று அமர்ந்து கொள்ள ..பேராசிரியர்களை பார்த்தாலும் அடிக்கடி விக்ரமைப் பார்த்தவாறு தான் ஒவ்வொன்றையும் விளக்கம் அளித்து கொண்டு இருந்தாள் நறுமுகை…

 

பேராசிரியர் கேட்ட கேள்வி ஒவ்வொன்றிற்கும் நன்றாகவே பதில் அளித்தாள்… அனைத்தையும் கூர்ந்து கவனித்த விக்ரமிற்கு அவள் அளித்த பதில்கள் அனைத்திலும் திருப்தியை தான் தந்தது …

 

இறுதியாக ஒரு பேராசிரியர் தான் ,

 

“நீங்க பண்ண ஆயின்மென்ட் எடுத்துட்டு வந்திருக்கீங்களா..??” என்றதும் வேகமாக பையில் இருந்து ஒன்றை அவரிடம் நீட்டினாள்…

 

“இதை போட்டா ஊண்ட்ஸ் (காயங்கள்) சரி ஆகுமா.. ??’

 

“கண்டிப்பா சார்.. நானும் ட்ரை பண்ணி இருக்கேன் எனக்குமே சின்ன சின்ன காயம் எல்லாம் சரியாகிருக்கு ..” என நம்பிக்கை அளித்ததும் கொஞ்சமாய் எடுத்து தன் விரலில் இருந்த சிறு காயத்திற்கு பூசிக்கொண்டார்…

 

“ பார்க்கிறேன் சரியாகு தானு”

 

” கண்டிப்பா சரியாகும் சார்…நீங்க இந்த பாட்டிலை வெச்சிங்கோங்க… ” என்றதும் அங்கிருந்த பேராசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் அவள் தயாரித்து வைத்த ஆயில்மெண்டை தந்து விடவும் அனைவரும் நன்றியுரைத்து விட்டு அதை வாங்கிக் கொண்டனர்..…

 

பின் வெற்றிகரமாக தனது வைவாவையும் முடித்து வெளி வந்தவள்,

 

‘ அப்பாடா ..!’ என்கிற மனநிலையில் இருந்தாள்…பெரும் பாரம் இறங்கிய உணர்வு…

விக்ரமும் அவளை அழுத்தமாக பார்த்தவாறு இருந்தான்… அவனது ஒற்றை பார்வையில் சட்டென திடுக்கிட்டு போன நறுமுகை என்னவென கேட்கலாம் என வரும் நேரம் அவளது வகுப்பு மாணவர்கள் வந்திட அவர்களுடன் ஒவ்வொருவரும் என்னென்ன கேள்வி கேட்டார்கள் பதில் அளித்தார்கள் என பேசியவாறு சென்று விட்டாள்…

 

அன்று மாலை விக்ரம் தான் அவளை வழக்கம் போல அழைத்துச் சென்று இருந்தான் வீட்டிற்கு .…

 

“எப்படி பண்ணி இருந்தேன்…?”

 

“ம்ம்ம்… நல்லா பண்ணி இருந்த..!” என்றான் சுருக்கமாக… 

 

ஏனோ அவனது பதில் அவளுக்கு திருப்தியை தரவில்லை… தயக்கமாக,

 

“ என்ன ஆச்சு..?? சரியா ஏதும் சொல்லலையா..?”

 

” அப்படி எல்லாம் இல்ல ..கேட்ட கேள்வி எல்லாத்துக்கும் நல்லா பதில் சொன்ன..”  என்றதும்,

 

“ப்ச்… அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க..?” 

 

பெரு மூச்சுவிட்ட விக்ரம்,

 

” கேள்வி ஒவ்வொன்னத்துக்கும் நீ கரெக்டா தான் பதில் சொல்ற.. அப்புறம் ஏன் பயப்படற..?”  என சரியாக கூறியதும் தன்னை கண்டு கொண்டதில் நாக்கை கடித்துக் கொண்டு பார்வையை திருப்பிக் கொண்டாள் நறுமுகை… 

 

“பதிலே சொல்ல மாட்ற ..??..ஓய்…உன் பாடி லாங்குவேஜ் பார்த்தாலே தெரியுது.. அப்படியே டென்ஷன்ல இருக்கேன்னு…

 

ஏன் அப்படி ..??? உனக்கு தெரிஞ்சதை.. நீ பண்ணதை தானே சொல்ல போற..??? அதுக்கு இவ்வளவு பயமா?..நீ பயந்தாலே நீ தெரிஞ்சதையும் சொதப்பிடுவ அதை எப்போதும் ஞாபகம் வச்சுக்கோ..”  என அறிவுரை வழங்கியதும்,

 

” சரி விக்ரம்.. இனி கவனமா இருக்கேன் ..” என்றதும் அவளைப் பார்த்துக் புன்னகைத்தவன் கன்னத்தை பிடித்து கிள்ளிவிட்ட பின்னரே முகம் மலர்ந்தது நறுமுகைக்கு …

 

அதற்கு அடுத்த வந்த நாட்களில் விக்ரமிற்கான பிஎச்டி வைவாவும் வந்தது… தன் வாழ்வின் மிக முக்கியமான நாள் இது என்பதால் சற்று கவனமாகவே பார்த்து பார்த்து தயாராகினான்…

 

அடர் நீல நிற கோட் சூட்டினை அணிந்து கொண்டவன் அத்தனை நேர்த்தியாக தயாராகி இருந்தான்… அவனது தந்தை தேசிங்கனோ மகனை அணைத்து விடுவித்தவர்,

 

“ ஆல் த பெஸ்ட் விக்ரம்.. நல்லா பண்ணு..!”

“ கண்டிப்பாப்பா…”

அன்னையிடமும் ஆசிர்வாதம் வாங்கிட..அவன் கன்னம் ஊட்டியவர்,

 

“இயர் எண்ட்ப்பா…நம்ம கடைல ஒர்க் ஜாஸ்தி எங்களால வர முடியலைன்னு தப்பா எடுத்துக்காத…”

 

“அம்மா…எனக்கு புரியுது…நான் பார்த்துக்கிறேன்…”

 

“சரிப்பா…” 

பிறகு தன் காரில் ஏறி கல்லூரிக்கு வந்தான் அவன்…

 

வரும் வழியில் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள் அவனின் அவள்.. நறுமுகை…

முன்னமே சொல்லியிருந்ததால் காரினை அவள் இருக்கும் இடத்தில் வந்து நிற்பாட்டியதும் வேகமாக கதவை திறந்து உள்ளே வந்த நறுமுகை அவசரமாய் தன் உள்ளங்கையில் இருந்த சிறு காகிதத்தை திறந்து அதில் இருந்து விபூதியை எடுத்து அவனுக்கு வைக்கலாம் என போகும் நேரம் சட்டென வைக்காது அவனை பார்த்தவள்,

 

” விபூதி வைக்கலாம்ல..?” என அனுமதி வேண்டி கேட்டிவும் அவளது கையைப் பிடித்தவன்,

 

“ப்ச்… வெச்சி விடுடி.. இது என்ன கேள்வி..?”  என்றதும் புன்னகையுடன் அவனது நெற்றியில் சிறு கீற்றாய் விபூதியை வைத்து விட்டவள்,

 

” ஆல் தி பெஸ்ட் விக்ரம்..”  என்றதும் அவளையே ஆழ்ந்து பார்த்தவன் ஒரு கணம் தன் மணிக்கட்டில் கட்டி இருந்த கை கடிகாரத்தில் நேரத்தை பார்த்துவிட்டு அவளை பார்த்தவன்,

 

” ஒரே ஒரு ஹக்…  ரொம்ப மிஸ் பண்றேன்…”  என்றதும் அடுத்த கணம் அவனை இறுகி அணைத்து இருந்தாள் நறுமுகை…

 

அவனுமே அவளை தன் இதயத்திற்குள் மொத்தமாய் அவளை புகுத்தி விடுவது போல இறுக்கமாய் கட்டி அணைத்து இருந்தவன்,

 

” இதுக்கப்புறம் கல்யாண அப்போ தான் பார்க்க முடியும்.. அதுவரைக்கும் பார்க்கவே முடியாதுல..?” என உள்ளே போன குரலில் கேட்டதும் ஆம் என்று தலையசைத்தவள் வேகமாய் அவனிடமிருந்து விலகி இதழோடு இதழை பொருத்திக் கொண்டாள்…

அவனுக்கும் அந்த நேரம் தேவைப்பட்டது போல இதழ் முத்தம்…கண்கள் மூடி ஆழ்ந்த முத்தம் ஒன்றை பதித்து விட்டு மெல்ல இதழை விடுவித்தவன் அவள் கன்னங்களை இரு கரங்களால் தாங்கி,

 

” லவ்வர்ஸ்ஸா  நாம தந்துக்கிற கடைசி முத்தம்… இதுக்கப்புறம் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப்பா தான் தந்துப்போம்..”  என முத்துப்பற்கள் தெரிய கூறியதும் வெட்கச் சிரிப்பை சிந்தி வைத்தாள் நறுமுகை…

“சரி… காலேஜுக்கு போகலாம்..”  என்றதும் பயம் கொள்ளவில்லை தைரியமாய் தலையசைத்து வைத்தாள்…

. இருவரும் ஒரு சேர கல்லூரிக்கு நுழைந்திட.. விக்ரமின் காரில் இருந்து நறுமுகை இறங்கி வருவதை அங்கிருந்தோர் பார்த்துவிட்டு தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்…

 

ஒரு சிலர் நேரடியாகவே,

 

” என்ன நளுமுகை விக்ரம் காரில் வர..?”  என கேட்டதும்,

 

” சும்மா தான்…” என சிரிப்புடன் பதில் அளித்துக் கொண்டாள்…

அதன் பின் விக்ரமின் அருகில் தான் பேசியவாறு இருவரும் ஒன்றாக கல்லூரிக்குள் நுழைந்திட அனைவரும் அவர்களைத் தான் பார்த்துவிட்டு சென்றனர் …

“சரிடீ நீ கிளாஸ்க்கு போ…நான் லேபுக்கு போறேன்…ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி உனக்கு கால் பண்றேன்..வந்துடு” என்று கூறிவிட்டு சென்று விட்டான்…

 

நறுமுகையும் வகுப்பிற்கு வந்து சேர்ந்தாள்… ப்ராஜெக்ட் முடிந்தாலும் இன்று தான்  அனைவருக்குமான இறுதி வகுப்பு அதனால் அனைவரும் வந்து இருந்தனர்…

 

அவள் வகுப்புக்கு வருவதற்கு முன்னமே விக்ரமுடன் காரில் வந்த விடயம் அனைவருக்கும் பரவி விட்டிருந்தது…

 

கெளசல்யா கவிதாவிடம் வந்தவள்,

 

“அந்த முகை என்ன காரியம் பண்ணி இருக்கான்னு பாருடீ…விக்ரம் அண்ணா கூட ஒன்னா கார்ல வந்து இருக்கா..??

 

லூசாடீ அவ…தேவையில்லாத வேலை எதுக்கு பண்ணிட்டு இருக்கா…அசிங்கமாவே இருக்காதா அவளுக்கு….அவங்க பேரண்ட்ஸ்க்கு தெரிஞ்சா என்ன ஆகும்…?? அதை பத்திலாம் கவலையே பட மாட்டா போல…” என நறுமுகையை அவலாய் அரைத்து கொண்டிருந்தாள் கெளசல்யா…

 

கவிதாவிற்கு ஐயோடா என்றானது…உண்மையை சொல்லவுமா முடியாது விழுங்கவும் முடியாது தவித்தவள்,

 

“விடுடீ…அவளோட கைட் தானே அந்த அண்ணா…வர வழியில பார்த்துருப்பாரு அதனால கூட்டிட்டு வந்து இருப்பாரு டீ…விடு..” அப்பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து இருந்தாள்…

 

அந்நேரம் நறுமுகையும் வந்திட அனைவரும் அவளை பார்த்து தங்களுக்குள் ஏதேதோ பேசிக்கொண்டனர்…ஜான் குமாருக்கும் கூட இவ்விடயம் தெரியும்…இருந்தும் கவிதா கெளசல்யாவிடம் கூறியது போல் தான் அவர்களும் எண்ணி இருந்தார்களே ஒழிய தவறாக நினைக்கவில்லை…

 

 

அதன் பின் சிறிது நேரத்தில் விக்ரமிற்கான வைவா ஆரம்பிக்கப்பட்டது…

தன்னவளுக்கு அழைத்து விஷயத்தை கூறி விட்டிருந்தான் விக்ரம்… 

 

நறுமுகையுடன் கவிதாவும் கூட அங்கு தான் அமர்ந்திருந்தனர்… இத்தனை வருடங்களாய் அவன் உழைத்த உழைப்பை சிறிதும் வீணாக்காமல் ஒவ்வொன்றையும் அத்தனை நேர்த்தியாகவும் தெளிவாகவும் எடுத்துரைத்தான்…

 

நுனி நாக்கு ஆங்கிலத்தில் அவன் பேசுவதை ஆச்சரியமாகவும் பெருமையாகவும் பார்த்து வைத்தாள் நறுமுகை …

 

பேராசிரியர்கள் ஒவ்வொருவரும் ஏகப்பட்ட கேள்விகளை கேட்டனர்.. அத்தனைக்கும் கொஞ்சம் கூட பதற்றம் கொள்ளாது கம்பீரமாக பதிலளித்து வைத்தான்…

இறுதியாய் பி.எச். டி பட்டத்தை பேராசிரியர்கள் ஒன்றிணைந்து அவனுக்கு தந்திட… புகைப்படமாய் அதை தன் கைபேசியில் எடுத்துக் கொண்டவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது …

 

அவனுடைய நண்பர்கள் பேராசிரியர்கள் அனைவரும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.…

 

நாகராஜன் சாரும் அவனை இறுக அணைத்து விடுவித்து,

 

” ரொம்பவே பெருமையா இருக்கு விக்ரம்… உனக்கு போஸ்டிங் லெட்டர் வந்தாச்சு…” என்றதும் அதில் இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்து போனான் விக்ரம் …

 

நறுமுகையுடன் கவிதாவும் வெளியே  வந்தனர்… முதல் ஆளாய் அவனது கைகளை பற்றி வாழ்த்து தெரிவித்திருந்தாள் நறுமுகை…

ஏனோ அவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வந்திட விக்ரம் தான் சிறிதும் தயங்காது அவளை நெருங்கி கண்ணீரைத் துடைத்து விட்டு ,

 

” நல்லபடியாக முடிஞ்சதுடீ…அழாத”  என மென் குரலில் சமாதானம் செய்தான்..

அவனுக்கு அருகே இருந்தவர்களும் அவர்களை தான் ஆச்சரியமாய் பார்த்து வைத்தனர்…

 

அவனுடன் இருந்தவர்களும் நறுமுகையை பார்த்து விட்டு விக்ரமிடம் ,

 

“டேய் என்னடா நடக்குது இங்க..?”  என ஆச்சரியம் பொங்க கேட்டதும் விக்ரம் நெற்றியை கீறியவாறு சிரித்து வைத்தவன்,

 

” என்னோட ஃபியான்சேடா”என அலட்டாது கூறிடவும்  வாயில் கை வைத்து ஆச்சரியப்பட்டு போயினர்…

அனைவரும் இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்திட மனதார அதனை ஏற்றுக் கொண்டனர் .…

கவிதா தான் தோழியிடம்,

“இன்னிக்கு பத்திரிக்கை வைக்க போறீங்களாடீ…”

 

“ஆமாடீ…நான் தான் நேத்து சொன்னேன்ல…இதுக்கு அப்பறம் நாம காலேஜ் வர மாட்டோம்…அதான் இன்னிக்கே பத்திரிகை வைச்சிடலாம்னு சொன்னாரு” 

 

அவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே விக்ரம் தான்,

 

“ நறு வெயிட் பண்ணு நான் ஃபார்மாலிட்டிஸ் முடிச்சுட்டு வரேன் ..அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்…”

 

“ம்ம்ம்… சரிங்க..”  என்றதும் கவிதாவும் நறுமுகையும் வகுப்பிற்கு சென்று விட்டனர்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top