அத்தியாயம் 36

காலையில் தான் சுகன்யா வக்கீல் நோட்டீஸ் நறுமுகைக்கு அனுப்பியதை மகனிடம் கூறி இருந்தார்…

 

கேட்டதும் கொதித்து எழுந்து விட்டான் விக்ரம்… சுகன்யாவும் தனக்கு பேரப்பிள்ளை வேண்டும் என ஒற்றை காலில் நிற்க விக்ரமோ எவ்வளவோ பேசிப் பார்த்தான்…

 

ஆனால் எதையும் கேட்கும் நிலைகளில் சுகன்யா இல்லை… தாய் மனைவி என இருவரும் அவரவர் நிலையில் இருக்க இருவரிடமும் சிக்கித் தவிப்பதை எண்ணி ஒருவிதமான அழுத்தம் தான் அதிகமாகி இருந்தது விக்ரமிற்கு …

 

அந்த நிலையிலேயே கல்லூரிக்கு வந்திட இங்கு நறுமுகையும் தன்னை பற்றி புரிந்து கொள்ளாமல் வார்த்தைகளை விட்டு விடவும் கொதித்து எழுந்து விட்டான் …

 

தன்னவள் பேசிய வார்த்தைகள் இவனை காயப்படுத்தியது போல..இவன் விட்ட வார்த்தைகளில் பெண்ணவளுக்கு மனம் விட்டு போனது…

 

 

இங்கு மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில்  திளைத்திருந்தது..  ஆண்டவன் தங்கள் மீது  கண் திறந்து விட்டார்  என மனதார கடவுளுக்கு நன்றி அளித்தனர்.. 

அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க அறைக்குள் இருந்து வெளிவந்த செவிலியர்,,

“ நீங்க போய் பார்க்கலாம்!”  என அனுமதி தந்ததும் அதற்காகவே காத்திருந்தது போல வளவன், சுரதை , பாரி மற்றும்  வித்யா என  நால்வரும் வேகமாக  அறைக்குள் சென்றனர்.. 

 

அங்கு சற்று சோர்வாக கண்களை  மூடிய  படி கிடந்தாள்  நறுமுகை..  வித்யாவிற்கும் சுரதைக்கும் கண்களில் கண்ணீரே வந்து விட்டது.. 

அவளை நெட்டி  முறித்து,

“ எவ்வளவு சந்தோஷமாக இருக்கு  தெரியுமா? உனக்கு ஒரு நல்லது நடக்கணும்னு  தினம் தினம்  கடவுளை வேண்டிக்கிட்டே இருந்தேன்..  இப்பதான் அந்த ஆண்டவனுக்கு கேட்டுச்சு போல..  கடவுளே !”  என மேலே பார்த்து கைகூப்பியவர் மகளைப் பார்த்து ஆனந்த கண்ணீரை சிந்தி ,

“எல்லாம் நல்லதே நடக்கும்..”  என்றவர் வேகமாக தன்னவரை பார்த்து,

 

“ ஏங்க மாப்பிள்ளை கிட்ட விஷயத்தை சொல்லுங்க”  என்றதும் மகிழ்ச்சியுடன் கைபேசியை எடுத்தார் வளவன்.. 

அடுத்த கணம் மகள் சொன்ன கூற்றில்  வளவனின் கை தானாக இறங்கி மகளை கேள்வியாக நோக்கியது.. 

வித்யா தான்,

“ எதுக்கு வேண்டாம்னு சொல்ற?  நல்ல விஷயத்தை சொன்னா அவங்களும் சந்தோஷப்படுவாங்க”  என கண்டிக்கவும் அனைவரையும் வெறுமையாய் பார்த்த நறுமுகை ,

 

“ இந்த குழந்தை இல்லனு  தானே என்னை  டைவர்ஸ் பண்ணனும் நினைச்சாங்க .. 

இப்ப குழந்தை வருதுன்னு சொன்னதும் டைவர்ஸ் கண்டிப்பா பண்ண மாட்டாங்க..  ஆனா கடைசி வரைக்கும் இந்த குழந்தைக்காக என் புருஷன் கிட்ட வாழ்க்கை பிச்சை  கேட்டுட்டு நான் அதுல வாழணுமா ?” என அவள் கேட்ட கேள்வியில  அங்கிருந்த அனைவரையும் ஓங்கி அறைந்தது போல் இருந்தது.. 

 

சுரதையோ,

 

“ஏன்மா  இப்படி பேசுற?”  என  ஆதங்கமாக கேட்கவும் நறுமுகை அன்னையை திடமாக நிமிர்ந்து பார்த்தவள் ,

 

“ வேற எப்படிம்மா பேச சொல்ற? என் மேல இருக்குற பாசம் எல்லாம் அவருக்கு  எப்பயோ போயாச்சு .. 

என்னை  வெறும் குப்பையா தான பார்த்தாங்க..  இப்ப குழந்தை வந்ததும் அந்த குழந்தையை  எல்லாரும் கொண்டாடுவாங்க!

 

ஆனா அதுக்கப்புறம் என் வாழ்க்கை?..  குழந்தைக்காக வாழனும் .. அவளுக்காக மத்தவங்க கிட்ட அட்ஜஸ்ட் பண்ணிட்டு போனும்னு காலம் பூரா நான் நரகத்தில் இருக்க சொல்றீங்களா ?

 

சொல்லுங்க ..?.. அப்போ நீங்களும் அவங்களை  மாதிரி இன்னும்  கையிலேயே வாங்காத குழந்தை மேல தான் பாசமா இருக்கீங்க!.. 

என்னை  பத்தி யாரும் நினைக்கலை..  எல்லாருக்கும் நானும் ஒரு அரைகுறை பிண்டமா தான் தெரியிறேனா ?” என வலி மிகு  வார்த்தைகளை  கொட்டி விட கேட்ட அனைவரும் பதறிப் போய் விட்டனர்..  

 

வளவன் மகளை நெருங்கி,

“ வேண்டாம்டா..  இப்படி எல்லாம் பேசி இந்த அப்பனை உயிரோடு கொள்ளாத.. 

 

யாரும் என் பொண்ணுக்கு வாழ்க்கை பிச்சை போட வேண்டாம்..  என் பொண்ணு வேண்டாம்னு  அவங்க முடிவு பண்ணது  அப்படியே இருக்கட்டும் .. என் பொண்ணு கடைசி வரைக்கும் நான் பாத்துக்குறேன் .. யாரும் ஏன் பொண்ணை சுமையா  நினைக்க வேண்டாம் “ என க ண்ணீர் விடவும் மற்ற மூவரால் எதுவும் பேச முடியவில்லை.. 

நறுமுகை கூறுவது சரிதானே! வரப்போகும் குழந்தைக்காக மீண்டும் மகளை அவர்களிடம் அனுப்பினால் நாளை என்ன ஆகும்?.. 

அந்த குழந்தையை அனைவரும் கொண்டாடுவார்கள்..  ஒரு வேளை அந்த குழந்தைக்கும்  ஏதேனும் குறை இருந்தால் நறுமுகையின் வாழ்க்கை இன்னும் நரகத்தில் தள்ளிவிட்டது போல் தானே ஆகும்!.. 

 

வேண்டாம் தங்கள் மகள் தங்களிடமே சந்தோஷமாக இருந்து விட்டுப் போகட்டும்..  அவளுக்கு பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருந்தாலும் சரி இல்லை ஏதேனும் குறையோடு பிறந்தாலும் சரி..  அவளையும் தாங்கிட தாங்கள் இருக்கிறோம் என பெரியவர்கள் நால்வரும் ஒரு மனதாக  முடிவெடுத்து விட விளைவு விஷயம் விக்ரமிற்கும்   அவனது குடும்பத்தாருக்கும் முற்றிலும் மறைக்க பட்டு விட்டது..  

நாட்கள் வேகமாக சென்றன…. நறுமுகைக்கு பாதி கர்ப்பப்பை என்பதால் அவளை மெத்தையிலிருந்து அசையவே கூடாது என்று விட்டனர் மருத்துவர்கள்..  பிறந்த குழந்தையை  போல பெற்றவர்களும் பெரியம்மாவும் அவளை மெத்தையில் வைத்து தாங்கினார்…. 

 

ராகினிக்கும் ரோகினிக்கும்  தங்கள் தமக்கை கருவுற்றது அறிந்து மிகவும் மகிழ்ந்து போயினர்..  அதைவிட அவள் தங்களுடனே இருந்தால் சந்தோஷமாக இருப்பாள்  என அவர்களுக்கும் புரிந்தது போல..  மகிழ்ச்சியாகவே அவளை தாங்கிக் கொண்டனர்.. 

 

உறவுகளின் கவனிப்பிலும் அக்கறையிலும் நாள் பூராக இதமாக உணர்ந்தாலும் இரவானால் சத்தம் இன்றி கண்ணீர் வடிப்பாள்  நறுமுகை..  

எல்லாம் விக்ரமை நினைத்துத்தான்..  தனக்கு பாதி கர்ப்பப்பை என தெரிந்த போது கூட அவளை அவன் ஒதுக்கவே  இல்லை.. 

கூடவே இருந்து அவளை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டான்..  ஐவிஎஃப் முயற்சி செய்யும் போது கூட அவளை விட அவன் தானே வேதனையிலும் வலியிலும் உழன்று தவித்தான்.. 

 

ஆனால் தற்போது தனக்கு நேரம் தருமாறு கேட்டதும் எங்கிருந்து தான் அவனுக்கு அவ்வளவு கோபம் வந்ததோ?..  அல்லது இத்தனை நாட்களாய் உள்ளுக்குள்  உறங்கி கொண்டிருந்த மிருகம் இப்போது வெளிப்பட்டு விட்டதோ என்னவோ!..  எப்படி எல்லாம் பேசி விட்டான்.. 

 

தனக்கு நேரம் தர அவனால் முடியாதாம் ..  ஆனால் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள மட்டும் முடியுமாம்.. 

தான் தான் அவனை இன்னொரு திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதை நன்றாக மறந்து போய் இருந்தாள் முகை.. 

தன்னுடன் மனம் ஒத்து வாழ்ந்து விட்டு  எப்படி இவனால் இன்னொரு பெண்ணை திருமணம் செய்யும் மனம் வந்தது?

 

விவாகரத்து நோட்டீஸ் வேறு அனுப்பி உள்ளானே?  அப்படி என்றால் அவன் மனதில் தான் சுத்தமா இல்லாத போய் விட்டோம் தானே !

 

அவனுக்கு தான் துளி அளவு கூட வேண்டாம் எனும் போது தான் மட்டும் குழந்தையை சாக்கு  வைத்து அவனுடன்  வாழலாமா? வாழத்தான் முடியுமா?

 

ஒரு வேலை பிறந்தது பெண் குழந்தையாக இருந்துவிட்டு அதற்கும் தன்னைப்போல பாதி கர்ப்பப்பை இருக்குமோ என பயந்து பயந்து வாழ்வதா?

 

மாமியார் என்ன சொல்வார்? மாமனார் என்ன சொல்வார்? சுற்றி இருக்கும்  உறவினர்கள் வாயில் அவலாக இருந்துவிட  கூடுமோ என ஒவ்வொரு நாளும் பயந்து தானே வாழ முடியும்.. 

யாரும் தனக்கு பக்க பலமாக இருக்க மாட்டார்களே!..  ஏன் தனக்கு குறை உள்ளதால் தன்னையே வேண்டாம் என்று முடிவு செய்தவன் நாளை குழந்தைக்காக தன்னை ஏற்றுக் கொண்டாலும் அக்குழந்தைக்கும் தன்னைப்போல பாதி கர்ப்பப்பை என தெரிந்த பின்னர் தங்கள் இருவரையும் அவன் தங்களை  நிற்கதியாக விட்டுவிட்டால் என்ன செய்வது? என பெரும் பயம் மனதை அழுத்தியது  நறுமுகைக்கு..  

அவனுடன் எப்படியெல்லாம்  வாழ்ந்தோம்!..  எவ்வளவு சந்தோஷமாக நாட்களை  கழித்து  வந்தோம் என ஒவ்வொன்றையும் தினம் நினைத்து நினைத்து கண்ணீர் வடிப்பாள்.. 

தன்னை அவன் விட்டு விட்டானே என்பது மட்டும் தான் அவளை குடைந்து கொண்டே இருந்தது..  

 

இங்கு  விக்ரமோ பைத்தியம் பிடிக்காத குறையாக  இருந்தான் விக்ரம்.. 

அவள் தன்னை விட்டு சென்று விட்டதை  அவனால் இன்னும் நம்ப முடியவில்லை..  இதில்  அன்னை வேறு விவாகரத்து பிரச்சனையை இழுத்து விட்டதில் இன்னும் அழுத்தத்திற்கு உள்ளானான்  விக்ரம்.. 

 

ஆரம்பத்தில் அமைதியாக இருந்த தேசிங்கன் கூட இப்போது மனைவியுடன்  சேர்ந்து அழுத்தம்  கொடுக்கலானார்..  ஒன்று நறுமுகையை  மருத்துவரிடம் அழைத்துச் சென்று செயற்கை முறையாக கருவுருதலுக்கு முயற்சிக்க வேண்டும்..  இல்லையா இன்னொரு திருமணம் செய்ய வேண்டும் என திட்டவட்டமாக கூறிவிட்டார்..  

 

இந்த உலகையே பார்க்காத ஒரு குழந்தைக்காக உயிருக்கு உயிராய் நேசித்தவளை விட்டு இன்னொருத்தியை தான் திருமணம் செய்ய வேண்டுமா என என்கிற நினைப்பே அவனை வெறுப்பாக்கியது.. 

தான் தான் ஏதோ கோபத்தில் பேசிவிட்டோம் அதற்காக தன்னை வேண்டாம் என சொல்லி விட்டு சென்று விட்டாளே .. 

ஒன்று அல்ல ஆயிரம் விவாகரத்து பத்திரங்கள் அவளை தேடி வந்தாலும் தன்னவன் இதை நிச்சயம் செய்திருக்க  மாட்டான் என்கிற நம்பிக்கை கூடவா அவளுக்கு தன் மீது இல்லை?  என நினைக்க நினைக்க அவனுக்கு அவ்வளவு ஆத்திரம் உண்டானது அவள் மீது .. 

 

தினந்தோறும் தன் அறைக்கு  வருவதையே   வெறித்தான் விக்ரம்..  எங்கு பார்த்தாலும் தன்னவளது  நினைவே அவனுக்கு வந்திட எங்கேனும் சென்று  ஓடி ஒளிந்து கொள்ளலாமா என்கிற எண்ணமே மேலோங்கி நின்றது அவனுக்கு..  

 

சரியான உறக்கம் இன்றி .. சரியான  உணவும் இன்றி முற்றிலும் தவித்துப் போனான்.. 

தன்னவளைப் பற்றி யோசித்தவாறு கேன்டீனில் அமர்ந்து டீயை அருந்தி கொண்டிருந்தான்  விக்ரம்..  அவனுடன் பணிபுரியவர்களும் அங்கு தான் இருந்தனர்.. 

 

அப்போது கல்லூரி அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் குடித்துக்கொண்டிருந்த டீயை கீழே போட்டு விட்டு  திடீரென ஓவென்று கத்தி கதற ஆரம்பித்து விட்டார்.. 

என்னவோ ஏதோ என்று அனைவரும் அவரை சுற்றி  ஒன்று சேர்ந்திட..  அவரோ  தலையில் அடித்துக் கொண்டு அழுதார்..  

 

“இத்தனை வருஷம் கழிச்சு என் வைஃப் பிரக்னென்ட்டா ஆனா சார்..  இப்பதான் வளைகாப்பு முடிச்சு அவங்க அம்மா வீட்டுல விட்டுட்டு வந்தேன்.. 

அங்கிருந்து ஹாஸ்பிடல் பக்கத்தில் இருக்குனு  நம்பிக்கையா விட்டுட்டு வந்தேன்..  நல்லா தான் இருந்தா காலையில கூட போன் பண்ணி பேசனேன்.. 

இப்ப வலி வந்து இருக்குன்னு ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க குழந்தை இறந்துடுச்சாம்”  என தலையில் அடித்து கதறியவரை கண்டு அனைவரும் ஸ்தம்பித்து போய் விட்டனர்..  

விக்ரமிற்கும் ஒரு நொடியில் உலகமே நின்று விட்டது போல உணர்ந்தான்..  அழுபவரது கண்ணீரை கண்டு  ஒரு நொடி தன்னையே அவ்விடத்தில் பொருத்திப் பார்த்திட தொப்பென்று இருக்கையில் அமர்ந்தவனுக்கு அவர் கூறிய செய்தியை கேட்டதும் நிலை கொள்ளவே முடியவில்லை..  

 

உடன் இருந்தவர்கள்  அனைவரும் வேதனைக்கு உள்ளாயினர்.. 

 

“ அழாதீங்கண்ணா.. நீங்க  தைரியமாக இருந்த தானே உங்க வைஃப்புக்கும் தைரியம் சொல்ல முடியும்!”

“ எப்படி சார் தைரியம் சொல்ல முடியும்? அவளுக்கு குழந்தையே பொறக்காதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க சார்.. என்  அம்மா என் அக்கா எல்லாம் என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி அவ்வளவு கெஞ்சினாங்க.. 

அவதான் வேணும்னு  ஒத்த காலில் இருந்தேன்..  எங்க உறவும் வேண்டாம் ஒட்டும் வேணாம்னு யாரும் எங்க கூட பேச்சு வார்த்தை வச்சுக்க மாட்டாங்க சார்.. 

எல்லாமே அவங்க அம்மா வீட்டு  சைடு தான் பேச்சு வார்த்தை எல்லாம்..  கிட்டத்தட்ட 10 வருஷம் சார்..  இப்பதான் மாசமானா..  அவ்வளவு ஆசையா இருந்தோம் சார்.. 

 

அவளுக்கு குழந்தையே பொறக்காதுன்னு டைவர்ஸ் பண்ணிட கூட சொன்னா சார்..  ஆனால் நான் தான் குழந்தையே இல்லனாலும் பரவால்ல நாம மட்டும் வாழ்ந்துக்கலாம்னு  சொன்னேன்.. 

 

இத்தனை வருஷம் கழிச்சு மாசமானதும்  ஆசையா காத்துக்கிட்டு இருந்தோம்..  ஆனா குழந்தை  கைல கிடைக்கிறதுக்கு முன்னாடியே எல்லாமே முடிஞ்சிருச்சு சார்..  ஐயோஓஓஓ .. கடவுளே !..” என கதறியவரின் கதறல் அங்கிருந்த அனைவருக்கும் கண்ணீரை வரவழைத்தது.. 

 

அதன் பின்  அவரை சமாதானம் செய்து அவரது மனைவி இருக்கும் மருத்துவமனைக்கு உடனிருந்த சிலர் அழைத்துச் சென்றனர்.. 

விக்ரம் உடன் பணிபுரியும் ஒருவரோ ,

“ இத்தனை நாளா குழந்தை வர போதுனு  அவ்வளவு சந்தோஷமா இருந்தாரு..  இப்ப என்ன பண்ண போறாரு தெரில.. ம்ச் .. பாவம் “ என்றதும் உடன் இருந்த மற்றொருவரும்,

“ நம்மை இவரை நினைக்கிறோம் சார்..  ஆனா அவர்  வைஃப் இத்தனை  வருஷத்துக்கு குழந்தையே இல்லை தன் புருஷன் தன்னை  விட்டுக் கொடுக்காமல் தன் கூட வாழ்ந்தார் .. இப்ப எல்லாம் சரி ஆகும்னு நினைக்கும் போது   கடைசி நேரத்துல குழந்தை இறந்தது தெரிஞ்சும் அது எவ்வளவு கொடுமை..  ஆண்டவன் தான் அவங்களுக்கு தைரியம் தரணும்!”  என்றதும் விக்ரமிற்கு  அங்கு இருக்கவே முடியவில்லை.. 

 

ஒருவேளை இதே போல தனக்கும் நறுவிற்க்கும் குழந்தை உண்டாகி இறுதி வேளையில் அது தங்களுக்கு கிடைக்காமல் போய்விட்டால் என்னவாகும்?.. 

தன் மனையாள்  எவ்வளவு தூரம் துடிப்பாள்  என ஏதேதோ  கற்பனை செய்து பார்த்திட..  அவ்வளவு தான் மூச்சு விட கூட சிரமமாகி போனது விக்ரமிற்க்கு.. 

தலையை அழிந்த பற்றிய படி இருந்தவன்  இப்போதே இங்கிருந்து ஓடு என மூளை அறிவுறுக்கவும் உடனடியாக விடுப்பு எடுத்துக்கொண்டு ஓடினான் தன் மாமனாரை தேடி.. 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top