அத்தியாயம் -1

காலையிலே எட்டு மணி… மந்தைவெளியிலே பழமையான வீடுகள். லேசாக புதுப்பிக்கப்பட்டு, இன்னும் காத்து வீசற அளவுக்கு கேப் விட்டு, முற்றம், தண்ணித்தொட்டி-னு பழமையை மாத்தாம, அதே சமயம் புதுமையும் கூட்டி அழகான வீடுகள் இருந்த தெருக்களில் அதுவும் ஒண்ணு. காலையிலே கோலமில்லாம, சாம்பிராணி, ஊதுவத்தி மணம் வராத, கலகலப்பில்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணிடலாம் அந்த ஏரியாவுலே. அதுக்காக எல்லாரும் பக்திமான்கள்னு சொல்ல முடியாது.. அது அவங்க ரொட்டீன்… வழமை.. அப்படி இருந்த ஒரு வீடு ‘நித்தியவாசம்’… பழமையும் புதுமையும் நிறைஞ்ச பெரிய வீடு. வீட்டு முகப்புலே போட்டிருந்த வருஷப்படி, அந்த வீட்டுக்கு 60 வயசாகுது… அப்பாவுக்கு அப்பா… தாத்தாவுக்கு தாத்தானு வழி வழியா வந்த பரம்பரை சொத்து-னு பார்த்தவுடனே தெரிஞ்சுது. ஆலமரம் மாதிரி ஏழு படுக்கயறையோட இருக்கற அந்த வீட்டு மேலே கண்ணு வைக்காத பில்டரே இல்லே. ஆனா ‘நித்தியவாசிகள்’ மனசு வைக்காததனால இன்னும் அவங்களுக்கே சொந்தமாயிருக்கு!  

சரி… இப்போ நித்தியவாசத்தோட வாசிகளை பார்க்கலாமா? முதல்ல நித்தியவாசத்தோட அடிக்கல்! உயிரும் உழைப்பும் உணர்வும் குடுத்து அதை உருவாக்கினவங்க ரெண்டுப் பேர். நித்தியானந்தம்-கற்பகவல்லி. அவங்களுக்கு வயசு எழுபதுகளின் கடைசி. போன வருஷம் தான் அறுபதாவது திருமண நாளை கொண்டாடினாங்க. சுறுசுறுப்பா அவங்க வேலையை செஞ்சுட்டு, மகன் மருமகளுக்கு உதவி பண்ணிக்கிட்டு அவங்க காலத்தை சந்தோஷமா கழிக்கிறாங்க. அவங்களோட சந்தோஷத்துக்காகவே எல்லா பேரப்பிள்ளைங்களும் கூடவே இருக்காங்க. இன்னும் கூட ஆரோக்கியமாவே இருந்திருப்பாங்க. 15 வருஷத்துக்கு முன்னாடி ஒரு கொடூர விபத்துலே அவங்க மகளையும் மருமகனையும் பலி கொடுக்காம இருந்திருந்தா… ஆனா மகள் தங்களை நம்பி விட்டுட்டு போன பேரப்பிள்ளைக்காக திடம் பண்ணி வைராக்கியமா வாழ்ந்தாங்க… வாழறாங்க… அவங்க இழந்த மகள் தான் மூத்தவ. அதுக்கு அப்புறம் அவங்களுக்கு மகளுக்கு அடுத்து ஒரு மகன் இருக்கார். அவர் பேர் நித்தியவாசன். ‘நித்தியம் கன்ஸ்டிரக்‌ஷன்ஸ்’-சோட ப்ரொப்ரைட்டர்- சேர்மேன். கொஞ்சம் பெரிய கம்பெனிதான். அவங்க முக்கியமா எடுத்து செய்யறது அடுக்குமாடி கட்டிடங்கள். அது அப்பார்ட்மெண்ட் ஆனாலும் சரி கமர்ஷியல் பில்டிங்னாலும் சரி. ரொம்ப நல்லா பண்ணுவாங்கன்னு பேர் எடுத்தவங்க. நித்தியானந்தமும் அதே கட்டுமான தொழில்லே இருந்ததால, பையனுக்கு அந்த பிசினஸ் ஆரம்பிச்சுக் குடுத்து உதவி பண்ணார். இன்னிக்கும் நித்தியவாசனுக்கு அவங்க அப்பா மாசத்துக்கு ஒரு தடவையாவது ஆபீஸுக்கு வரணும். அதனால அவங்களும் போவாங்க.

நித்தியவாசன்… பிசினஸ் மூளை… அவருக்கு நித்தியம் கன்ஸ்டிரக்‌ஷன்ஸ் இன்னொரு பிள்ளை தான். எங்கே வளையணும், எங்கே நெளியணும், எங்கே இறுகணும்-னு தெரிஞ்சுட்டு லாவகமா நடத்தினதுனால வியாபாரமும் நல்லா போச்சு. குடும்பத்தை பொறுத்த வரைக்கும் அன்பான கணவர், அப்பா எல்லாம். கடமையை தவறாம செய்வார். ஆனா பாசத்தை பொழிய அவருக்கு நேரம் கிடையாது. அதனாலேயே என்னமோ, அப்பா ரொம்ப ஸ்டிரிக்ட்-னு பிள்ளைங்களுக்கு ஒரு மாயை உருவாகிப் போச்சு. ஆனா அதையும் அவர் பெரிசா எடுத்துக்கிட்டதுக் கிடையாது.பிள்ளைங்களுக்கும் அது பெரிசா தெரியலே. ஏன்னா அன்பை பொழியத்தான் அம்மா, தாத்தா, பாட்டி இருக்காங்களே. நித்தியவாசனோட மனைவி சுபத்ரா. அமைதியும் பக்குவமும் இருக்கற அன்பான பெண்மணி. படிக்க வைக்க இவங்க வீட்டுலே வசதி இருக்கலே. அதனால கற்பகவல்லி மாதிரி அவங்களும் ஒரு வீட்டுப் பறவை தான். குடும்பம் தான் மூச்சுப் பேச்சு எல்லாம். அவங்களுக்கு இப்போ தெரியற உலகமும் நித்தியவாசன் சொல்லிக் குடுத்ததுதான். ஆனா அனுபவம் குடுத்த அறிவு, அவங்கப் பிள்ளைங்களை தெளிவோடவும், நேர்மையோடவும்,கொள்கைகளோடவும் வாழ சொல்லிக் குடுக்க வைச்சுது. அவங்களுக்கு பிறந்த ரெண்டுல ஒண்ணு அதிகமா கத்துக்கிச்சு. அதுதான் பிரச்சினையே! 🙂  

நித்தியவாசன் – சுபத்ரா தம்பதிக்கு ரெண்டு குழந்தைங்க. மூத்தவ பேர் ஆனந்தியா… தாத்தாவோட பேர்லே இருந்து அவளுக்கு பேர் வைச்சாங்க. வயசு 25. இண்டீரியர் டிசைன் படிச்சிருக்கா. இப்போ அப்பாவோட கம்பெனியிலேயே வேலை பார்க்கறா. சந்தன நிறத்துலே, அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத, கண்ணை உறுத்தாத அழகு. அவங்க அம்மாவை கொண்டு வாய்ச்ச லட்சணமான முகம். சுபத்ராவோட குணம்-னு அச்சு பிசகாம வந்ததால அமைதியும் பொறுப்பும் வந்திருந்துச்சு. அதிகம் கோபம் வராது, அதிர்ந்து பேச வராது, வெடுக்-னு பேச வராது. பெரியவங்களும் கட்டிக்கிட்டவனும் சொல்ற பேச்சை மீறும் பழக்கம் கிடையாது. அவங்களும் அவ விருப்பத்துக்கு விரோதமா எதுவும் சொல்லவும் மாட்டாங்க. அவளோட குணாதிசயங்களால, இளையவளுக்கு அவளையும் சேர்த்து ரெண்டு அம்மா. ஒரு குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம் அக்கா-தங்கை ரெண்டுப் பேரும் சண்டைப் போட்டே பார்த்ததில்லே. 

அவளோட புருஷன் பரத்.. அதே வீட்லே வளர்ந்தவன்… நித்தியவாசனோட அக்கா பையன். பதினைந்தாவது வயசுலே இந்த வீட்டுக்கு வந்தவன். இங்கே தான் வளர்ந்தான். பி.ஆர்க் படிச்சு நித்தியம் கன்ஸ்டிரக்‌ஷன்ஸ்லே சேர்ந்தான். இன்னிக்கு அவன் நித்தியவாசனோட வலது கை போல! நித்தியவாசன் பரத்தையும் தன் மகனை போலத் தான் வளர்த்தார். 31 வயசு ஆகுது… ரொம்ப பொறுமை. அதே சமயம் தீர்க்கமும் தைரியமும் இருக்கிறவன். அழகன். மாமா அத்தைதான் எல்லாம். அவங்க என்ன சொன்னாலும் செய்வான். அவன் அவங்க அம்மா அப்பாவை தொலைச்சுட்டு நின்னப்போ, இழப்புன்னா என்னன்னு தெரியாத சின்ன குழந்தைகளாயிருந்த மாமன் பொண்ணுங்க காட்டின அன்புனால, ரெண்டுப் பேரும் அவனுக்கு கண்மணிகள். அதுலேயும் அந்த வீட்டு சின்னக்குட்டி அவனுக்கு இன்னும் குழந்தை தான். அவனோட 20வது வயசுலே மாமனோட மூத்த மகள் ஆனந்தியாவை பார்க்கற முறை மாறிச்சு. அன்பிருந்த இடத்துலே காதல் வந்துச்சு. அவ கிட்டேயும் அதுக்கு எதிரொலியா இருக்கவும், குடும்பத்துக்குத் தெரியாம காதல் வளர்ந்துச்சு. அவனோட 27வது வயசுலே அவன் கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சப்போ, பட்னு சொல்லிட்டான். நித்தியவாசன் தான் ஒரே வீட்லே வளர்ந்து கல்யாணம் பண்ணா ஊர்லே என்ன சொல்லுவாங்களோனு ரொம்ப பயந்தார். ஆனா கற்பகவல்லியும் சுபத்ராவும் சேர்ந்து கன்வின்ஸ் பண்ணாங்க. பல தர்ம சங்கடங்களை தீர்க்க இதுதான் சரியான முடிவுன்னு எடுத்து சொன்னாங்க. கல்யாணமும் நடந்து மூணு வருஷமாச்சு. அவங்களுக்கு அழகான மகனும் இருக்கான் ஒரு வயசுலே.

அடுத்து நித்தியவாசன் – சுபத்ராவோட ரெண்டாவது மகவு… அந்த வீட்டுக் கடைக்குட்டி… முக்கியமா நம்ம ஹீரோயின்… இளையவ.. பேரு மதுரியா… வீட்டுலே எல்லாத்துக்கும் ரியா… அவளோட அக்கா எல்லாருக்கும் தியா.. சுபத்ராவோட அப்பா மதுரவேல் பேரை கொண்டு அவளுக்கு மதுரியான்னு வைச்சாங்க. வயசு 22. எம் பி பி எஸ் ஃபனல் இயர், ஸ்டான்லியிலே படிக்கறா. நல்லா படிப்பா. புத்திசாலி. அறிவும் தெளிவும் தைரியமும் கூடவே பிறந்த சொத்து. அக்கா ஆனந்தியாவுக்கு கொஞ்சம் எதிர்மறை-னு கூட சொல்லலாம். மனசுலே படறதை ஒளிவு மறைவு இல்லாம சொல்லிடுவா. கோபம் வந்தா வெடுக்னு பதிலும் வரும். முன்கோபின்னாலும் சமயோசிதமா ஆர்ப்பாட்டமில்லாத அழுத்தமான கோபம். அதே சமயம் கலகலன்னு பேசி சிரிக்கவும் வரும். ஆனா எல்லார் கூடவும் கிடையாது. மதுரியாவுக்குனு சில வரையறைகளும் கொள்கைகளும் இருந்துச்சு. சின்ன பிள்ளையிலே இருந்து கேட்டுப் பழகி இப்போ அவளுக்கு ஒரு அங்கம் மாதிரி ஆயிடுச்சு. எந்த அளவுக்குன்னா அந்த கொள்கைகளுக்காக மனுஷங்களையே விட்டுக்குடுக்கற அளவுக்கு. கட்டுக்குள் இருக்கிறத் திமிர்ன்னு சொன்னா சரியா இருக்கும். பொய் சொல்றது, ஊளு ஊளுன்னு அழறது அறவே பிடிக்காது. சின்ன வயசுலே இருந்து அவ அழுதே யாரும் பார்த்ததில்லே. அழுவது பலகீனம்-னு நினைக்கறவ. அதனாலேயே யாரோ சொந்தம் அவளையும், பரத்தையும் இணைச்சுத் தப்பாப் பேசினப்போ அக்காவை மாதிரி கண்கலங்கி நிக்காம, அந்த நிமிஷமே அவங்க முகத்துலே கரியை பூசின மாதிரி, ‘பரத்தப்பா’னு அவனையும் அப்பானு கூப்பிட ஆரம்பிச்சவ இப்போ வரைக்கும் அப்படித்தான் கூப்பிடறா. அவனும் அவளை மூத்தமகளாத்தான் பார்த்தான்.

மதுரியா… சராசரி உயரம்.. ஒல்லி உடல்வாகு… தந்த நிறம்.. பெரிய கண்ணு.. கூர்மூக்கு… நெளிஞ்ச அடர்த்தியான புருவம்.. அரிசிப்பல் சிரிப்பு… ஆக மொத்தம் சுண்டி இழுக்கற அழகு. ஆனந்தியா பார்வைக்கும் குணத்துக்கும் அம்மான்னா, மதுரியா பார்வைக்கும் குணத்துக்கும் அப்பா! அதனாலேயே நித்தியவாசனுக்கு சின்னவ பேர்லே கொஞ்சம் செல்லம் அதிகம்.. ஆனா வெளியே காட்டிக்க மாட்டார். அதுக்கு இன்னோர் காரணமும் இருக்கு. தாம்பத்யம்னா என்னன்னு புரிஞ்சு காதல் புரிஞ்சதுக்கப்புறம் பிறந்தவ-னு அவருக்கு மனசுலே ஒரு எண்ணம். ஆனந்தியாவும் அவருக்கு உயிர் தான். ஆனா தனக்கு உறவுகள்னா என்ன… அன்புன்னா என்ன அப்படின்னு உணர வைச்சவ ரியா-னு மனைவிகிட்டேயும், பெத்தவங்க கிட்டேயும் அடிக்கடி சொல்லுவார். 

இவ்வளவுலேயும் தன் சின்ன மகள் பி.ஆர்க் படிச்சுத் தன்னோட பிசினஸுக்கு வரலேன்னு வருத்தம் தான். அஞ்சு வருஷம் முன்னாடி பெரும் போராட்டம் தான். நிறைய மார்க் வாங்கி மெடிசின் தான் போவேன்னு சொன்னப்போ, வாசன் ஒத்துக்கலே. கடைசியிலே பட்டினி இருந்து சாதிச்சுக்கிட்டா மதுரியா. அப்போவும் தன்னைப் போல காரியத்தை சாதிக்கற ரகம்-னு பெருமைதான் பட்டுக்கிட்டார். அப்புறம் அந்த படிப்புலே அவ காட்டின ஈடுபாடு… இதுதான் அவளுக்கு சரியானது-னு நம்பினார். அந்த வீட்டுக்கே உயிர் நாடின்னா அது மதுரியாவோட சிரிப்புத் தான். கண்ணுலே ஒளிமின்ன அரிசிப்பல் சிரிப்பு இருக்கே, அதை காட்டினா எல்லாரும் மயங்கிடுவாங்க. இப்போ கொஞ்ச நாளா அதைக் காணோம். கடனே-னு ஒரு சிரிப்பும், முகத்துலே ஏதோ ஒரு யோசனையும், எந்த நேரமும் கண்ணுலே தெரியற வலியும் சோகமும் தான். 

அந்த வலியும் சோகமும் சுபத்ராவுக்கும் ஆனந்தியாவுக்கும் புளியை கரைச்சுதுனு சொல்லணும். பின்னே இருக்காதா? கல்யாணம் முடிவான பொண்ணு அப்படி இருந்தா பதைக்கத்தானே செய்யும். அன்னிக்கு காலையிலே எல்லாரும் வேலைக்குக் கிளம்பத் தயாராகி சாப்பிட வந்தாங்க. நித்தியானந்தமும் கற்பகமும் கோயிலிலே இருந்து வந்தாங்க. நித்தியவாசனும் வந்தார். சுபத்ரா ஆனந்தியா பையனுக்கு ஊட்டிட்டிருந்தாங்க. பரத்தும் சாப்பிட வந்தான். “அப்பா…. இன்னிக்கு ஆபீஸ் வர்றீங்க தானே?”-னு கேட்டார் நித்தியவாசன். “வர்றேன்பா… ஆனா மதியம் போல சாப்பிட வீட்டுக்கு வந்துடுவேன்”-னு சொன்னார் அப்பா. “தியா… சாப்பிட வாம்மா… டைம் ஆகுது”ன்னு கூப்பிட்டாங்க கற்பகம். “ரியா எங்கே?”-னு கேட்டான் பரத். “தெரியலேப்பா. இதோ வருவான்னு நினைக்கிறேன். லேட்டா எந்திரிச்சாளோ என்னமோ?”-னு சொன்னா தியா. “தியாப்பா… அவளுக்கு என்ன ஆச்சுன்னே தெரியலே… எந்நேரமும் சோகமும் யோசனையும் தான்… அப்படி நம்மகிட்ட கூட சொல்ல முடியாம என்ன பிரச்சினை தியாப்பா அவளுக்கு?”-னு படபடத்தாங்க சுபத்ரா. “சுபி! அதெல்லாம் ஒண்ணுமில்லே. ஏன் அவளை நை நை-ங்கறே?”-னு கேட்டார் நித்தியவாசன். “வாசு! சுபா சொல்றது சரிதான் கண்ணா… வேதா வீட்டுலே பேசி முடிச்சுப் போனப்புறம் பிரசன்னம் இருந்துச்சு.. இப்போ ஒரு வாரமா சோகமயம்… கல்யாணப் பேச்செடுத்தாலே கண்ணுலே குளம் கட்டி தண்ணி நிக்குது… அப்படி ஒரு துக்கம். என்னன்னு கேக்கணும்?”னு கற்பகம் முடிக்கவும் மதுரியா சாப்பிட வரவும் சரியா இருந்துச்சு.

“ரியா… என்னடா? ஒரே டல்லடிக்கிறே? உடம்பு சரியில்லையா?”-னு கேட்டார் தாத்தா. “அதெல்லாம் ஒண்ணுமில்லே தாத்தா… எதோ யோசனை.. ரெண்டு இட்லியும் பூஸ்டும் போதும்.. ஹாஸ்பிடலுக்கு டைம் ஆச்சு”-னு எந்த உணர்ச்சியும் இல்லாம சொன்னா. “ரியா… என்ன நடக்குது? உன்னை கேட்டுத்தானே முடிவு பண்ணோம்? இப்போ இப்படி பண்ணா என்ன அர்த்தம்?”-னு கொஞ்சம் அழுத்தமாவே கேட்டார் நித்தியவாசன். மதுரியாவுக்கு கொஞ்சம் திகைப்புத்தான். தன்னை இவ்வளோ கவனிப்பாங்கன்னும். அதை இப்படிக் கேட்டுக் கவலைப்படுவாங்கன்னும் யோசிக்கலை. தன்னைப் போல தன் பிரச்சினையிலேயே ஒளப்பி இப்படி இவங்களை எல்லாம் மறந்துட்டு ‘பே’-னு இருந்துட்டோமே-னு குற்றவுணர்ச்சியா கூட இருந்துச்சு அவளுக்கு. உயிரை வெளியிலே உருவற வலியை மறைக்க தன்னால் ஆன எல்லா முயற்சியும் பண்ணா. 

ஆழ்ந்த மூச்சு எடுத்து விட்டு தன்னை நிலைப் படுத்திக்கிட்டா. “என்னப்பா சொல்றீங்க? எனக்கு எதுவுமே புரியலே?”-னு இட்லியை பிச்சு வாயிலே போட்டுக்கிட்டே கேட்டா மதுரியா. “ரியாம்மா… பாட்டியும் அம்மாவும் கவலைப்படறாங்களே டா? நீ டல்லா இருக்கே. சரியா சாப்பிடறதில்லே.. கல்யாணம் பத்தி பேசினாலே ரசிக்கறதில்லே?”ன்னு கேட்டார் தாத்தா. “ஓ… மை… காட்… என்னம்மா இது? பாட்டி நீங்களுமா?-னு வராத ஷாக்கையும், கோபத்தையும் வந்தா மாதிரி நடிக்கவும், “கோபமெல்லாம் அப்புறம் படலாம்… முதல்லே மாமா கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு ரியா”ன்னு சொன்னான் பரத். “எங்கக்கிட்ட கூட சொல்ல முடியாத பிரச்சினை-னு உனக்கு இருக்கா ரியா?”-னு கேட்டா ஆனந்தியா. மதுரியாவுக்கு உள்ளேயிருந்த வலியிலே கண்ணை கரிச்சுது. ஆனா அதை அடக்கி, “அக்கா, என்ன பேசறே? உங்க கிட்ட எதை சொல்லாம விட்டிருக்கேன்? இவங்ககிட்ட சொல்ல தயக்கமா இருந்தா கூட உன் கிட்டேயும் பரத்தப்பாகிட்டேயும் சொல்லிடுவேனே… எல்லாருக்கும் என்னாச்சு?”-னு கேட்டா மதுரியா. 

அப்புறம் அவளே தொடர்ந்தா. “எனக்கு அப்படி எதுவும் இல்லே” -னு அழுத்தம் திருத்தமா சொன்னா. “அப்போ ஏன் இப்படி இருக்கே? கல்யாணம் பத்தி பேசினாலே வருத்தப்படறியாமே?”னு கேட்டார் நித்தியவாசன். “ஆமா பா, இப்போ அது என் லீக்லேயே இல்லே?”-னு சொல்லி அதிரவைச்சா. “ரியா, என்ன சொல்றே?”-னு கேட்டாங்க சுபத்ரா. “ஆமாம்மா… நாளைக்கு எனக்கு காலேஜ் லிஸ்ட் குடுக்கணும்… அப்புறம் அட்மிஷன்… போட்டிருக்கற மூணு காலேஜ்லே கிடைக்கணும். இதுதான்மா ஒரு வாரமா ஓடுது”-னு சொல்லவும் ஒரு ரிலீஃபோட நம்பினாங்க எல்லாரும். ஆனந்தியா-பரத்தைத் தவிர! 

“ஊப்ஸ்…. என்னை டென்ஷன் பண்ணிட்டாங்க எல்லாரும். என்ன சுபி? நீயே கேட்டிருந்தா சொல்லியிருக்கப் போறா… அதை விட்டுட்டு ஏதேதோ யோசிச்சு நீயும் அம்மாவும் என்னையே காப்ரா படுத்திட்டீங்க”-னு எரிச்சலா சொன்னார் நித்தியவாசன். “சரி..விடுடா! ரியாக் குட்டியை எல்லாம் முடியற வரைக்கும் எதுவும் தொல்லை பண்ண வேண்டாம். மூர்த்திக் கிட்டே சொல்லிடு வாசு.. பேச்சு வார்த்தை கூட ரியா அட்மிஷன் முடிஞ்சதும் பண்ணிக்கலாம்”-னு சொன்னார் நித்தியானந்தம். “ரியா… உன்னை ஹாஸ்பிடல்லே நானும் தியாவும் டிராப் பண்றோம்… இந்த டென்ஷன்லே நீ வண்டியை ஓட்ட வேண்டாம்”-னு பரத் கூர்மையா சொல்லவும் மதுரியா முகத்துலே மீண்டும் கலக்கம்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top