அதே காலை நேரம்… தி நகர்லே… அந்த காலத்திலே வாங்கி இப்போப் புதுப்பிக்கப்பட்ட ஒரு பெரிய வீடு. சென்னையிலே இருக்கற ‘வேதம் பில்டர்ஸ் அண்ட் ப்ரோமோட்டர்ஸ்’- அதோடப் ஓனர் வேதமூர்த்தியோட வீடு. அந்த வீட்டு பேரும் ‘வேதம்’ தான். நித்தியவாசம் அளவுக்கு பழசானது இல்லைன்னாலும் வேதத்துக்கும் 45 வயசாகுது! வேதமூர்த்தியோட அப்பா வேதாசலம் நிலம் வாங்கிப் போட்டு, அப்புறம் வசதி வந்தப்புறம் கட்டின வீடு.
‘வேத’ வாசிகளைப் பார்ப்போமா?
அந்த சாம்ராஜ்ஜியத்தோட ராஜமாதா நீலவேணி.. வேதாச்சலத்தோட மனைவி. அறுபது வருஷ கல்யாண வாழ்க்கை நிறைஞ்சு, போன வருஷம் தான் வேதாச்சலம் மாரடைப்புலே அவங்களை விட்டு போனார். நீலவேணி அறிவும், துணிவும் அதே சமயம் அப்பாவித் தனமும் வாய்ச்ச மனுஷி. அதனால தானோ என்னவோ அவங்க புருஷன் போனதும் பிள்ளையும் மருமகளும் இடிஞ்சு போகக் கூடாது-னு தன்னையே தைரியம் பண்ணிக்கிட்டாங்க.. பிள்ளையையும் கூப்பிட்டு, “மூர்த்தி, உங்கப்பா தன்னோட 81 வருஷ வாழ்க்கையை சந்தோஷமா வாழ்ந்து, பேரனுக்குப் பையன் பிறந்து, கனகாபிஷேகத்தையும் நடத்திக்கிட்டு நிறைவோட போனவர்.. அவர் போனதை நினைச்சு நம்ம யாரும் வருத்தப்படக் கூடாது”ன்னு அழுத்தமா சொல்லிட்டாங்க.
ஆயிரம் அம்மா சொன்னாலும் ஒரே மகனான வேதமூர்த்திக்கு அப்பா இல்லைங்கறது பெரிய வருத்தம் தான். அதே சமயம், அம்மா உள்ளேயே வைச்சு புழுங்கறாங்களோ-னு ஒரு பயமும் இருந்துச்சு. ஆனா நீலவேணி அப்படியெல்லாம் புழுங்கவே இல்லை. அவங்க மனசுலே இருக்கற வருத்தம், பாரம், ஏக்கம், அழுகை எல்லாத்தையும் அவங்க உயிர்த்தோழியான கற்பகவல்லியிடம் சொல்லிடுவாங்க. ஆமாங்க… நித்தியவாசிகளுக்கும் இவங்களுக்கும் ரொம்ப நெருங்கின உறவு இருக்கு. வேதாச்சலமும் நித்தியானந்தமும் ஒரே இன்ஜினீயருக்கு கீழே வேலை பார்த்த சக ஊழியர்கள்… ஒரே ஊர்க்காரர்கள்… ஏதோ தூரத்து அங்காளி-பங்காளி உறவுமிருக்கு. பஞ்சம்… பிழைக்க-னு ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் பட்டணத்துக்கு வந்தாங்க. ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயதும் கூட. ஒண்ணா வேலைக்கும் போய், ஒண்ணாத் தங்கி-னு நட்பும் பலப்பட்டது. அதுக்கு அப்புறம் காலம் ஓட வேதாச்சலத்துக்கும் நீலவேணிக்கும் கல்யாணம் நடந்துச்சு. அவங்க ரெண்டுப் பேரும் பார்த்து நித்தியானந்தத்துக்கு கற்பகவல்லியை கட்டிவைச்சாங்க. கற்பகவல்லியும் நீலவேணியும் சொந்தம். இப்படி தொடங்கின நட்பு அடுத்த 2 தலைமுறைக்கும் தொடர்ந்துச்சு.
வேதாசலம் – நீலவேணி தம்பதிக்கு ஒரே மகன்.. பேர் வேதமூர்த்தி.. வேதமூர்த்தியும் நித்தியவாசனும் ஒண்ணாத்தான் சிவில் இன்ஜினீயரிங் படிச்சாங்க. அப்பாக்கள் கூட சின்ன வயசுலே போய் அவங்களுக்கும் கட்டுமானத் தொழில்லே அதீத ஆர்வம். ஆனா ரெண்டு பேருக்கும் தனி தொழில் ஆரம்பிக்கற ஆர்வம் தான். முதல்லே ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் ஆரம்பிச்சாங்க. நாள் பட வேதமூர்த்திக்கு டெவலப்பிங், ப்ரோமோடிங், சேல்ஸ்லே ஆர்வம் வர, தன்னோட பங்கை பிரிச்சுக்கிட்டு தனியா ஆரம்பிச்சார். நண்பனோட ஆர்வம் புரிஞ்ச நித்தியவாசனும் பங்கை குடுத்து சந்தோஷமா அனுப்பி வைச்சார். ஆனா வேதமூர்த்திக்கு ‘வேதம் பில்டர்ஸ்’ ஆரம்பிச்ச சமயம் பெரிய சறுக்கல் வந்துச்சு. பெரிய லேண்ட் டெண்டர், கவர்மெண்ட் காண்ட்ரேக்ட் எடுக்கற நுணுக்கம் புரியாம பெரிய அளவுலே நஷ்டம் ஆயிடுச்சு. அந்த நேரத்துலே தோள் குடுத்துத் தூக்கி விட்டவங்க நித்தியானந்தமும் நித்தியவாசனும் தான். அதுக்கான நன்றி எப்போவும் வேதமூர்த்தி மனசுலே இருக்கு. அதனாலேயோ என்னவோ நித்தியவாசன் குடும்பத்தோட சம்பந்தம் பண்ணி உறவாகணும்னு நினைச்சார்.
அவரோட அதே எண்ணங்களை பிரதிபலிச்சாங்க மனமொத்த அவரோட மனைவி சங்கரி. சங்கரியும் சுபத்ரா போலத்தான். வீட்டுப்பறவை. புருஷன் தான் உலகம். அவர் சிரிச்சா சிரிச்சு, வருத்தப்பட்டா வருத்தப்பட்டு வாழ்ந்தவங்க, வாழறவங்க. அப்பிராணி. இன்னிக்கு வரைக்கும் தாயா இருந்து வழி நடத்தறவங்க நீலவேணி தான். புருஷனை இழந்தவங்க வேகமா சுதாரிக்க முக்கிய காரணம் சங்கரி. அவங்க இல்லைன்னா சங்கரி இன்னும் உடைஞ்சு போயிருவாங்கன்னு தெரியும் அவங்களுக்கு. நீலவேணியம்மா எப்போவும் சொல்றது “இப்படி எங்களையே சுத்தி சுத்தி வர்றியே, உன் வாழ்க்கையை எப்போ வாழுவியோ?”-னு. எப்போவும் போல ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு போயிடுவாங்க. அந்த வீட்டுலே அவங்களை பிடிக்காதவங்களே இல்லை.
அவங்களை அவங்க மாமியாருக்கும் பிடிக்கும், மருமகளுக்கும் பிடிக்கும். வேதமூர்த்தி – சங்கரி தம்பதிக்கு ரெண்டு பிள்ளைங்க. மூத்தவன் ரிஷிநந்தன், சுருக்கமா ரிஷி. அவன் பரத்துக்கு ஒரு வருஷம் சீனியர். வயசு 31. தங்கமான பையன். பொறுமைசாலி. அதே சமயம் பேச்சுலே கெட்டிக்காரன். மெக்கானிகல் இன்ஜினீயரிங் முடிச்சு, எம்.பி.ஏ படிச்சு அப்பா பிசினஸ்லேயே சேர்ந்தான். தொழில்லே ஆர்வம் இருக்கணும்-னு தனி வீடுகள், பங்களாக்கள், டவுன் ஹவுசஸ் பகுதி வியாபாரத்தை பெரியவனுக்குப் பிரிச்சுக் குடுத்தார் வேதமூர்த்தி. ஆனாலும் அவரோட மேற்பார்வை இருக்கும்.. வேதமூர்த்தி கையை பிடிச்சு கத்துக் குடுக்கற ரகமில்லை. தூக்கி தண்ணியிலே போட்டு நீயே மேலே வா-னு சொல்ற ரகம். அதேதான் ரிஷிநந்தனுக்கும் பண்ணார். ஆறு மாசத்திலே தொழில் கத்துக்கிட்டான். அஞ்சு வருஷத்துலே நல்ல வளர்ச்சி அடைஞ்சான்.
அவன் மனைவி கிருத்திகா. ஒரு ஸ்கூல் டீச்சர். அவனோடது காதல் கல்யாணம். கிருத்திகா அவனோட காலேஜ்-மேட். அவங்களுக்கு 3 வயசுலே ஒரு மகனும் இருக்கான். பேர் விவான். சுட்டிப்பையன். கிருத்திகாவும் நல்ல பொண்ணுதான். ஆனா தன்னை அடக்க நினைக்கிறவங்களைப் பிடிக்காது அவளுக்கு. அவளுக்கும் ரிஷியின் வயது தான். அதனால அவன் அதை செய்ய டிரை பண்ணா சிலிர்த்துக்கிட்டு சண்டைக்குப் போயிடுவா. இவங்க கல்யாணத்துலே வேதமூர்த்திக்கு அவ்வளவு சந்தோஷம் கிடையாது. ஏன்னா, அவருக்கு அவரோட மூத்த பையனுக்கு ஆனந்தியாவை பேசி முடிக்கணும்-னு ஆசை. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் மகனும் மருமகளும் வாழறதை பார்த்தவர், இது இப்படித்தான் இருக்கணும்-னு தன்னை சமாதானம் ஆக்கிக்கிட்டார். இது கிருத்திகாவுக்கு தெரிஞ்சாலும் அவளுக்கு அவர் மேலேயோ நித்தியவாசன் குடும்பத்தின் மேலேயோ எந்த உறுத்தலும் கிடையாது.
இன்னிக்கு ரெண்டு குடும்பமும் சந்திக்கும் போது கிருத்திகா ரெண்டு பேர் கூடவும் சகஜமா பேசுவா. இன்னும் சொல்லணும்-னா தன்னைப் போலவே வெளிப்படையா பேசற மதுரியாவை ரொம்ப பிடிக்கும் அவளுக்கு. அதுக்கு அடுத்த சில வருஷங்கள்லேயே ஆனந்தியாவுக்கும் பரத்துக்கும் அவங்க விருப்பம் போல கல்யாணம் நடக்கவும், தன்னோட ஆசை எவ்வளோ பெரிய அனர்த்தம்-னு உணர்ந்தார் வேதமூர்த்தி. அதுக்கப்புறம் அவர் மனசுலே இருந்த கொஞ்ச நஞ்ச சலனமும் விட்டுப் போச்சு. ஆனா அவரோட ஆசை ஆசையாவே இருந்துச்சு. எப்படி நடக்கப் போகுது?!
வேதமூர்த்தி – சங்கரி தம்பதியோட இளைய மகன்… அவன் தான் நம்ம ஹீரோ! J அவனைப்பத்தி பார்ப்போமா?? அந்த வீட்டு இளையராஜாவோட பெயர் விதுரன்.. வயசு 28… வயசுக்கு ஏத்தாற்போல எப்போவும் கலகலப்பா பேசி சிரிச்சுக்கிட்டு, ஜாலியா இருப்பான். நல்லவன். அன்பானவன். நியாய தர்மம் தெரிஞ்சவன். ஒழுக்கமானவன். தெளிவான சிந்தை இருக்கிறவன். இதெல்லாத்துக்கும் மேலே சடைப் பிடிவாதம் பிடிச்சவன்! ‘பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’-கிற மாதிரி கஷ்டம் தெரியாம வளர்ந்தவன். அதுக்கு காரணம், விதுரன் குறைமாசக் குழந்தையா பிறந்ததால சங்கரி அவனுக்கு அளவுக்கு அதிகமா அன்பைக் குடுத்தாங்க. அது அதிக செல்லமும் கூட. அதனாலேயோ என்னவோ அவனுக்கு எல்லாமே லேசான விஷயம் தான். அவனுக்கு என்ன தோணுதோ அதைத் தான் செய்வான். எல்லாரையும் கீழ்க் கண்ணுலே பார்க்கிற குணமும், தன்கிட்டே பழகறதே மத்தவங்களுக்கு ஒரு பாக்கியம்-கிற நினைப்பும் இருந்துச்சு. அவனுக்கு அவன் சந்தோஷம் தான் முக்கியம். அதுக்காக குடும்பத்து மேலே அன்பில்லே-னு அர்த்தமில்லே. அதுவும் இருந்துச்சு. இவன் குணத்துக்கு கிருத்திகாவுக்கும் அவனுக்கும் ஒத்தேப் போகாது. அதனாலேயே அவ்வளவா பேச்சு வைச்சுக்க மாட்டா. அதையும் மீறி அவன் தானா போய் பேசி வம்பிழுத்து, அவகிட்ட வாய் நிறைய வாங்கியும் கட்டிக்குவான்.
இதைப் பார்த்தப்போ தான் சங்கரிக்கு அவங்க பண்ண தப்பே புரிஞ்சுது. ஆனா… பாவம்… இப்போ திருத்தத்தான் வழி தெரியலே! அவனோட குணாதிசயங்களாலே அப்பாவுக்கும் அவனுக்கும் நடுவே எப்போவுமே பனிப்போர். இப்படி பக்குவமே இல்லாம இருக்கானேன்னு தூக்கத்தை தொலைச்சார் வேதமூர்த்தி. இது ஒரு தறுதலை-னு தண்ணியும் தெளிச்சு விட முடியலே. ஏன்னா அவ்வளோ நல்லா படிப்பான். சென்னையிலே நம்பர் ஒன் காலேஜ்லே மெரிட்லே பி.ஆர்க் படிச்சான். ஸ்கூல், காலேஜ் ரெண்டுலேயும் ரேங்க் ஹோல்டர். அறிவு கூடவே பிறந்தது. சரி, படிப்பு பக்குவத்தை குடுக்கும்-னு பெரியவங்க நினைக்க, நல்ல படிப்பு நிறைய தலைக்கனத்தையும் திமிரையும் குடுத்துச்சு. பி.ஆர்க் முடிச்சவன் அடுத்து என்ன-னு கேட்டதும், “கிவ் மீ எ ப்ரேக் ப்ளீஸ்”-னு பயங்கர மாடர்னா சொல்லிட்டு போயிட்டான். ரெண்டு வருஷம் கோயில் மாடு மாதிரி திரியறான்-னு பயங்கர கோபத்துலே வேதமூர்த்தி இருந்தப்போ ஒரு யூனிவர்சிடியிலே சேர்ந்து எம்.பி.ஏ மார்க்கெட்டிங் முடிச்சு டிகிரியோட வந்து நின்னான். வேதமூர்த்தி கோபம் போய் கண்ணை விரிச்சார்.
ஆனா சின்னப்பிள்ளையை நினைச்சு கவலை அதிகமாத்தான் ஆச்சு. அவரை புரிஞ்சுக்கிட்ட சங்கரிக்கு கவலை இன்னும் அதிகமாத்தான் ஆச்சு. ஏன்னா கவலை கூட குற்றவுணர்ச்சி வேறே இதெல்லாத்துக்கும் அவங்க தான் காரணம்-னு. குணமும் படிப்பும் பார்த்தோம். ஆள் எப்படினு பார்க்கணும்லே. சராசரிக்கும் கொஞ்சம் கூட உயரம். மாநிறம். கட்டு மஸ்தான உடம்பு. செஞ்சு வைச்ச சிலை போல முகம். அழகான சிரிப்பு. மொத்தத்துலே கொஞ்சம் அழகும் வாய்ச்சவன் தான். அதனாலேயும் திமிர் தான். இந்த கர்வம், திமிர்னாலே பெண்கள் மேலே பெரிய மரியாதை கிடையாது. தான் புத்திசாலி. தான் சொன்னது தான் தனக்கு துணையா வரப்போறவ கேட்கணும்-னு நினைச்சான். தன் அன்பை பிரதிபலிக்கணும். ‘மாடர்ன் கோர்ட்ஷிப்’ அதாவது நாகரீகமா கையைக் கோர்த்துட்டு சுத்த வேணும்-னு அவனோட ஆசைகளுக்கு அளவே இருக்கலே… ஆனா தன் துணையை எப்படி மதிக்கணும் மரியாதை குடுக்கணும்னு எல்லாம் யோசிக்கவே இல்லே!
சரி, இவனை எப்படி வழிக்கு கொண்டு வரணும்-னு யோசிச்ச வேதமூர்த்தி, பெரிய பையன் கிட்ட கையாண்ட அதே வழியை கையாண்டார். அவர் வியாபாரத்துலே இருந்து அப்பார்ட்மெண்ட்ஸ், கேட்டெட் கம்யூனிடி டெவலப்மெண்ட் பொறுப்புக்களை விதுரன் கிட்ட குடுத்தார். அது நல்லா வேலை செஞ்சுது. அவனுக்கு அந்த பிசினஸ் சவால்கள் ரொம்பப் பிடிச்சுது. நுணுக்கங்களை தேடித் தேடி கத்துக்கிட்டான். நல்ல பேச்சுத் திறமையாலும்,புத்திசாலித் தனத்துலேயும் பதினாறடி பாயறக் குட்டிப்புலியா இருந்தான். ரெண்டு தரம் அவன் வெற்றிகளை வேதாசலமே வியந்து பாராட்டவும், வெற்றி அவன் தலைக்குப் போக ஆரம்பிச்சுடுச்சு. அந்த துறையிலே புலியான வேதாசலமே பாராட்டவும் ‘பழைய குருடி கதவை திறடீ’-னு மாறிப் போனான். வேதமூர்த்திக்கு சலிப்புத்தான் வந்துச்சு. சங்கரிக்கு சின்ன மகனோட வாழ்க்கை என்ன ஆகுமோன்னு பயமே வந்துடுச்சு.
அப்படி இருக்கறப்போ ஒரு நாள்… வேதாசலம் இறக்கறதுக்கு சில மாதங்களுக்கு முன்னால்.. ஒரு பௌர்ணமி அன்னிக்கு சாயந்திரம், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு நாலு பெரியவங்களும் போனாங்க. சதா சர்வகாலமும் சின்ன பிள்ளையை நினைச்சு கவலைப்படற மகனுக்கு வேதாசலம் ஒரு யோசனை சொன்னார். “மூர்த்தி, நம்ம ரியாவைப் பத்தி என்ன நினைக்கறே?”னு கேட்டார் வேதாசலம். “நல்ல பொண்ணுப்பா… புத்திசாலி, நல்லவ… குணவதி.. ஏன் பா? நம்ம சொந்தத்துலே யாராவது கேட்டாங்களா?”-னு கேட்டார் வேதமூர்த்தி. வேதாசலம் சிரிச்சுட்டு, “மக்குப் பயலே! அவளை நம்ம விதுரனுக்கு பார்த்தா என்ன?”னு கேட்டார். வேதமூர்த்தி ஆடியே போனார். “என்னப்பா? தெரிஞ்சே ரியாவை கொண்டுப் போய் விதுரன்கிட்ட தள்ள நான் தயாரில்லைப்பா. இன்னும் படிப்பு கூட முடிக்காத சின்ன பொண்ணு. அதோட அவங்க ரெண்டு பேருக்கும் வயசும் நிறைய வித்தியாசம். சரி வராதுப்பா”-னு அழுத்தமா மறுத்தார்.
“மூர்த்தி, நீ நினைக்கற அளவுக்கு விதுரன் மோசமில்லை. அது கடிவாளம் போடாத குதிரை. அதான் கொஞ்சம் துள்ளுது… கல்யாணம் பண்ணா தன்னைப் போல அடங்கிடும். நான் போடாத ஆட்டமா. இப்போ இந்த கிழவிக்கு முறை வாசல் செய்யலே?”-னு சிரிச்சார். “போதுமே… கிழவருக்கு புத்தி போகுது பார் இந்த வயசுலே!”ன்னு நொடிச்சுக்கிட்டாங்க நீலவேணி. “ஆனா… இது சரி வருமா? பாவம்மா ரியா”-னு சொன்னார் வேதமூர்த்தி. “அட யாருடா நீ? அவளை என்ன காட்டுக்கா அனுப்பப் போறோம். அதோட கற்பகத்தோட ரெண்டாவது பேத்தி கொஞ்சம் தைரியமானவ.. அது மட்டுமில்லே. அவளும் விதுரன் மாதிரி காரியம் சாதிக்க தெரிஞ்சவ.. கைக்கு கை… வாய்க்கு வாய்-னு சொல்லுவோம்லே? நமக்கு சண்டைக்காரி வேண்டாம் மூர்த்தி. காரியக்காரிதான் வேணும். அந்த பொண்ணு தானும் நல்லா இருப்பா. நம்ம பிள்ளையையும் வழிக்கு கொண்டு வருவா. நீ வேணும்னா பாரு. நம்ம விதுரன் மதுரியானால தான் தெளிவான்”னு நீலவேணி சொல்லி முடிக்கவும் கோயில் மணி அடிக்கவும் சரியா இருந்துச்சு. ஆனா அவங்க யாருக்கும் புரியலே… கடவுள் விதுரனை சோதனை பண்ணி அந்த சோதனையிலே ஜெயிச்சாத்தான் இதை நடத்தி வைப்பார்-னு.
ஒரு மாதிரி கன்வின்ஸ் ஆனதும் வேதாசலமும் நீலவேணியும், இதைப்பத்தி நித்தியானந்தம் – கற்பகவல்லி தம்பதிகிட்ட பேசி, பெரியவங்க ஒத்துக்கிட்டாங்க. அதுக்கப்புறம் சின்னவங்கக் கிட்ட கேட்டாங்க. மேற்படிப்பை தொடர விடணும்கிறதைத் தவிர மதுரியாகிட்டே இருந்து வேறே எந்த கண்டிஷனும் இல்லை. அப்புறம் ரெண்டு பேரும் மீட் பண்ணி பேசினாங்க. ரெண்டுப் பேரும் ‘பார்க்க அழகா இருக்காங்க. தெரிஞ்ச ஃபேமிலி. ஓரளவு நல்லா பேசறாங்க’-னு நினைச்சாங்க. மேம்போக்கா பார்த்தப்போ மதுரியாவுக்கும் விதுரனுக்கும் மறுக்க எந்த காரணமும் இருக்கலே. உண்மையிலே சொல்லணும்னா மதுரியாவுக்கு விதுரனோட ஆளுமை, கம்பீரத்து மேலே ஒரு பிடிப்பு வந்துச்சு. அதே மாதிரி விதுரனுக்கு மதுரியாவோட அழகு, புத்திசாலித்தனத்து மேலே ஒரு மயக்கம்.. கட்டிக்க போறவங்க சரி-னு சொல்லவும், சீக்கிரமே இவங்க குடும்பமா போய் பூ வைச்சு உறுதிப்படுத்திக்கணும்னு நினைச்சாங்க. ஆனா விதி, இது நடக்கறதுக்கு முன்னாடி வேதாச்சலத்தைக் கொண்டுபோய் விட்டது!
வீட்டுப் பெரியவரோட கடைசி ஆசைங்கறதுனால மூணு மாசம் கழிச்சு பூவெல்லாம் வைச்சு வீட்டு மட்டுக்கு உறுதிப் படுத்திக்கிட்டு ஒரு வருஷம் கழிச்சு எல்லாம் பண்ணிக்கலாம்-னு முடிவு பண்ணாங்க. ஆனா இந்த 6 – 7 மாசத்துலே நிறைய நடந்துப் போச்சு. அவங்களுக்குள்ளே அண்டர்ஸ்டேண்டிங் வர்றதுக்கு பதிலா பிரிவு தான் வந்துச்சு. வேதமூர்த்தியும் ரிஷிநந்தனும் தான் ஆபீஸ்லே நடக்கறதை பார்க்கறாங்களே. அன்னிக்கு காலையிலே, “விதுர், நீ பண்றது சரியில்லே… அந்த ஸ்வாதி கூட ஏன் அவ்வளோ க்ளோஸா பழகறே?”-னு கேட்டான் ரிஷி. திமிராவே சுத்தற விதுரனை அண்ணன் கேட்ட விதம், அவனுக்கு கோபம் வந்துச்சு. “ஏன்னா? அவளை எனக்கு பிடிச்சிருக்கு, அதான்”னு அலட்சியமா சொன்னான். ஆனா அது உண்மையில்லே. சுவாதி அவன் மேலே விழுந்து பழகறது அவன் ஈகோவை வீசி விடறது அவனுக்குப் பிடிச்சுது. ஆனா லைஃப்லே துணையா அவளை நினைச்சதே இல்லை. சுவாதியும் பார்க்க பளபள-னு இருப்பாளே தவிர மதுரியாவோட அழகுக்கு கிட்டே கூட வரமுடியாது. ஒரு மாதிரி நட்பும் இல்லாம காதலும் இல்லாம ப்ளேடோனிக் ரிலேஷன்ஷிப்லே ஓடிட்டு இருந்துச்சு விதுரனுக்கும் சுவாதிக்கும்.
“விதுரா, என்ன சொல்றே?”னு எல்லாரும் அதிர்ந்தாங்க. அவங்க அதிர்ச்சியை அலட்சியப்படுத்திட்டு சாப்பிட்டான் விதுரன். “தம்பி, உனக்கு ரியாகூட நிச்சயமாகி இருக்கப்பா.. இதெல்லாம் தப்பு கண்ணா”-னு தணிவா சொன்னாங்க சங்கரி. “நிச்சயமானது நடக்காது. நீங்களே போய் பெரியவங்க கிட்ட சொல்லிடுங்க. நான் இன்னிக்கு சாயந்திரம் அவகிட்ட சொல்லிடறேன். அதோட நானும் நிம்மதியா இருப்பேன். நீங்களும் நிம்மதியா இருங்க. என் லைஃபை நான் பார்த்துக்கறேன்”-னு சொன்னான் விதுரன்.