அத்தியாயம் -3

பரத்தோட கார்லே ஒரே அமைதி. ஆனந்தியா பரத்தோட முகத்தையும் மதுரியாவோட முகத்தையும் முன்னாடி சீட்லே இருந்து பார்த்துக்கிட்டிருந்தா. “ரியா, மாமாகிட்ட சொன்ன பொய்யை ஓரம் வைச்சுட்டு இப்போ உண்மையை சொல்றியா?”-னு அழுத்தமாவே கேட்டான் பரத். “பொய் சொல்ல வேண்டிய தேவை எனக்கென்னப்பா இருக்கு?”ன்னு கேட்டா மதுரியா. “இருக்குப் போல தோணுதே, நான் மட்டுமில்லே தியாவும் தான் அப்படி நினைக்கிறா”-னு கேட்டான் பரத். “எதை வைச்சு கேட்கிறீங்க?”-னு விடாம கேட்டா அவளும். “அதான் எப்பவும் நடக்காத ஒண்ணை இன்னிக்கு காலையிலே காரணமா சொன்னியே அதை வைச்சுத்தான்”-னு சலிப்பும் கோபமுமா சொன்னான் பரத். மதுரியா புரியாம பார்க்கவும், “ஏன் ரியா? எந்த நாள்லே டா நீ ரிசல்ட், எக்சாம் பத்தி எல்லாம் கவலைப்பட்டிருக்கே? நம்ம வீட்டுலே ரிசல்ட்ஸ் பத்தி டென்ஷன் ஆகிறது நான் மட்டும் தானே? நீ பரத் எல்லாம் நடக்க நடக்க பார்த்துக்கலாம்கிற டைப் ஆச்சே?”-னு வருத்தமா சொன்னா ஆனந்தியா.

மதுரியா ஒரு நிமிஷம் திகைச்சுத்தான் போனா. “அ… அக்கா.. நானும் மாறிட்டேனோ என்னமோ? நல்லது தானே மாற்றம் வந்தா”னு தடுமாறினா. கார் ஒரு கிரீச் சத்தத்தோட ஆள் அரவம் இல்லாத தெருவுலே ஓரமா நின்னுச்சு. “என்னாச்சு பரத்?”-னு கேட்டா ஆனந்தியா. “ஒண்ணுமில்லே தியா. இந்த நல்ல மாற்றம் கதையை முழுசா கேட்கலாம்-னு தான் நிறுத்தினேன்”னு சொல்லி மதுரியா பக்கம் திரும்பினான் பரத். “என்னப்பா, இப்படி வம்பு பண்றீங்க?ஹாஸ்பிடலுக்கு லேட் ஆகுது”-னு பேச்சை மாத்தினா மதுரியா. “நீ விஷயத்தை சொல்ற வரைக்கும் கார் இங்கே இருந்து நகராது”-னு அழுத்தமா சொன்னான் பரத். “ஓகே… எனக்கென்ன… ரெண்டு பேரும் ஆபீசுக்கு கட்-அடிச்சு அப்பா கிட்ட வாங்கிக் கட்டிக்கோங்க… எனக்கு ஒரு நாள் லீவ்”னு தோளை குலுக்கிட்டு பின் சீட்லே வசதியா சாய்ஞ்சா. “என்ன பரத் இது? கிளம்புங்க.. அப்பா பிச்சிடுவார்”-னு பதறினா ஆனந்தியா. ஒண்ணா வளர்ந்தாலும் சில சமயம் தங்கையை சமாளிக்க முடியாம தடுமாறுவா ஆனந்தியா. ஆனா ஏழு வயசுலே இருந்து அவளைப் பார்த்துட்டு இருந்து, அப்புறம் ஒரு கட்டத்துலே இன்னொரு அப்பாவாவே மாறிப் போன பரத்துக்கு, அவளை சமாளிக்கிற விதம் தெரியும். 

“ஆமா… மூணு பேரையும் தான்… ஏன்னா இன்னும் கொஞ்ச நேரத்துலெ சைல்ட் டிரஸ்ட் ஹாஸ்பிடல்லே இருந்து, அவங்க வசந்தாமணி மேடத்துக்கு போன் பண்ணுவாங்க… மேடம் நேரா அத்தைக்குத் தான் போன் பண்ணுவாங்க அவங்க செல்ல ஸ்டூடண்டுக்கு என்னாச்சோன்னு… பாவம் அத்தை! பொண்ணு மனசுலே குழப்பம், அதுலே காலேஜுக்கும் போகலேன்னா?? மாமாவுக்கு கால் போடுவாங்க”-னு அவளை போலவே தோளை குலுக்கினான். மதுரியா “ஐயோ..”-னு பதறினா. இருக்கற பிரச்சினையிலே புதுசா இது வேற…. அப்படீ-னு நினைச்சு பரத் முகத்தை பார்த்தா. அதுலே கொஞ்சம் கூட இறங்கி வர்ற இளக்கமே தெரியலே. ஒரு வழியா தான் வாயை திறக்காம வேலையாகாதுனு புரிஞ்சுக்கிட்டா. “சரி, சொல்றேன்.. பரத்தப்பா… இந்த கல்யாணம் நடக்க போறதில்லே… இன்னொரு ரெண்டு மூணு நாள்லே நிக்கப் போகுது”-னு கண்ணுலே தண்ணி வழிய சொன்னா மதுரியா. “ரியா… என்னடீ உளர்றே? அப்பாவுக்கு தெரிஞ்சா அவ்வளோதான்! உன்னை கொன்னுடுவார் ரியா”-னு பதறினா ஆனந்தியா. “தியா… கொயட்”-னு அழுத்தமான குரல்லே பரத் சொல்லவும் அமைதியானா ஆனந்தியா. அவன் சீட்லே இருந்து மதுரியா பக்கம் திரும்பி, நடுங்கற அவ கை மேலே கையை வைச்சு, அழுத்திப் பிடிச்சான். நடுங்கற அவ கையும் உதறலெடுத்த அவ உடலும், கண்ணுலே வழியற தண்ணியும் வேறே கதை சொல்லிச்சு. அதோட அர்த்தம் அவனுக்கு புரியாமல் இல்லை. ஆனா விளக்கம் வேண்டி இருந்துச்சு.

“ரியாம்மா… உனக்கு விதுரனை பிடிச்சுத்தானே கல்யாணத்துக்கு சம்மதிச்சே? பிடிக்கலே-னு பொய் மட்டும் சொல்லக் கூடாது?”-னு கனிவா தான் கேட்டான். அதுவே மதுரியா உடையறதுக்கு போதுமானதா இருந்துச்சு. “எனக்கு மட்டும் பிடிச்சு பிரயோஜனம் இல்லையே பரத்பா.. அவர்… அவருக்கு என்னை பிடிக்கற அளவுக்கு எனக்கு அதிர்ஷ்டம் இல்லையே?!”-னு அவன் கை மேலேயே தலையை கவிழ்த்து அழுதா மதுரியா. ரெண்டுப் பேரும் திகைச்சுப் போனாங்க. ஏன்னா அவங்களுக்கு தெரிஞ்ச மதுரியா தைரியசாலி. அழத் தெரியாதவ! அப்படிப்பட்ட பொண்ணை இப்படி அழ வைக்கறானே-னு கோபம் தான் ரெண்டுப் பேருக்கும். “ரியாமா… நீயா ஏதாவது நினைச்சுக்கறே-னு தோணுது.. பிடிக்காம போறதுக்கும் காரணம் ஏதாவது வேண்டாமா?”-னு கேட்டான் பரத். “அதை சொல்லத்தானே இன்னிக்கு ஈவினிங் கூப்பிட்டிருக்கார்… போனா தெரியும்”-னு கண்ணை அழுந்த துடைச்சுக்கிட்டே சொன்னா. “இந்த கல்யாணத்தை நிறுத்தறது அவ்வளோ ஈசியான வேலை இல்லேடா”-னு அவளை தைரியப்படுத்தினான் பரத். “ஆமாம்… அப்படி எல்லாம் நிறுத்த விடமாட்டோம்டா… நாங்க இருக்கோம்லே?”-னு சொன்னா ஆனந்தியா.

மதுரியா முகத்துலே ஒரு அழுத்தம், தீவிரம், கண்ணுலே கனல், “காதலை யாசகமா கேட்க சொல்றீங்களா?நடக்காது! என் தன்மானத்தை விலை பேசற சிரஞ்சீவி இந்த உலகத்துல யாருமே இல்லே! இந்த விதுரன் இல்லே… வேற எந்த மன்மதன் வந்தாலும் அதான் என் முடிவு”-னு கணீர்-னு சொன்னா. “இதுதான்… இதுதான்… எங்க ரியா… நாங்க வளர்த்தின ரியா…. இதுக்கு முன்னாடி இருந்த அழுமூஞ்சி யாரோ”-னு சிரிச்சா ஆனந்தியா. மதுரியாவும் சிரிச்சு, “முதல் ‘காதல் தோல்வி’ இல்லையாக்கா? கொஞ்ச நாள் வலிக்கும். நானும் கல்யாணத்துக்கு அப்புறம் தான் காதல்-னு இருந்த என் கொள்கையை விட்டுக் குடுத்ததுக்கான தண்டனை-னு வைச்சுக்கலாம்”னு சொன்னா. “எதுக்கு இவ்வளோ பாரத்தை தனியா சுமக்கணும்? மாமா கூட ஸ்டிரிக்டா இருந்தாலும் உன்னைத்தான் சப்போர்ட் பண்ணுவார்”-னு பிடிச்சிருந்த கையை தட்டிக்குடுத்து எடுத்தான் பரத். “ம்ம்ம்… எல்லாரும் எதுக்கு ஒரு வாரம் அழுது வடியணும்-னு தான் சொல்லலே”-னு சொன்னா மதுரியா. “ஆமாமா… அந்த விதுரன் பெரிய உலகத்தோட கடைசி ஆம்பிள்ளை பார்! அவரு வேண்டாம்-னு சொன்னதும் எல்லாரும் அழுது வடியணுமா? இவன் வேண்டாம்-னு சொல்றதால ரெண்டுத் தலைமுறை நட்பும் மாறிடாது. உன் வாழ்க்கையும் அப்படியே ஸ்தம்பிச்சுடாது”-னு கிண்டலும், அழுத்தமுமா பரத் சொன்னது மதுரியாவுக்குள்ளே சூம்பி சருகான ஒண்ணை மலர்ந்து நிமிர வைச்சுது. மதுரியாவுக்குக் கொஞ்சம் கலக்கம் இருந்தது உண்மைதான்.. சின்னப் பிள்ளையிலே இருந்து சங்கரிம்மா, வேதாப்பா, நீலாப்பாட்டி-னு சுத்தி வந்தது எல்லாம் இல்லாம போயிடுமோ-னு. இப்போ பரத் சொல்லவும் அது நடக்காதுனு தெரியவும் ஒரு நிம்மதி. 

‘அடுத்து என்ன?’-னு கேள்வி வரவும் மனசுலே ஒரு தாள முடியாத வலி. ‘வேண்டாம் மனசே! யோசிக்காதே’-னு தனக்குத்தானே சொல்லிக்கிட்டா. அவ முகம் தெளியாததைப் பார்த்து, “ரியா, இன்னிக்கு ஈவினிங் நாங்களும் வரட்டுமா? மேரேஜ் ப்ரேக் பண்றது அவ்வளோ சுலபமில்லே-னு புரியவைக்கிறோம்”-னு சொன்னா ஆனந்தியா. “வேண்டாமக்கா.. எனக்கு விதுரன்… அவரே வந்து இப்போக் கேட்டாக் கூட நான் கல்யாணத்துக்கு தயாரில்லே… அவர் முன்னாடி அழுதுடுவேனோ-னு பயப்படாதே! என்னோட நம்பிக்கையை உடைச்சக் கோபம் நிறையவே இருக்கு.. ஸோ… என்னை சீண்டினா, திருப்பி குடுத்துடுவேன்”-னு சொல்லிட்டே விதுரனுக்கு போன் பண்ணா மதுரியா. அதுக்கப்புறம் மதுரியாவை அவ ஹாஸ்பிடல்லே விட்டுட்டு, அவங்க ஆபீஸ் கிளம்பினாங்க. 

யோசனையிலேயே வர பரத்தைப் பார்த்து, “என்ன பரத்? என்னாச்சு?”-னு கேட்டா ஆனந்தியா. “தியா, அவ தைரியசாலி தான். ஆனா அவன் ஏற்படுத்திய காயம் லைஃப் டைமுக்கு நின்னுடுமோ-னு யோசனை. ஏன்னா, நமக்கு ரியாவைப் பத்தி தெரிஞ்ச வரைக்கும், அவ ஒரு முடிவு பண்ணிட்டா அப்புறம் அதை மாத்தவே முடியாது”-னு சொன்னான் பரத். தங்கையை நினைச்சு அக்காவுக்குமே கவலை வந்துச்சு. ஆனா மதுரியாவுக்கு அப்படி எதுவும் இருக்கலே. அக்கா மாமா கிட்ட சொன்னதும் ஒரு வடிகால் கிடைச்சுப் போச்சு. அதனால என்ன பேசணும், எப்படி பேசணும்-னு தெளிவு வந்துடுச்சு.

வீட்டுலே எல்லாரும் பேயறைஞ்ச மாதிரி ஆனாங்க. “விதுரா, என்னப்பா சொல்றே?”-னு கேட்டது நீலவேணி. “ஆமா.. பாட்டி.. அந்த பொண்ணு எனக்கு செட் ஆகமாட்டா… சரியான சாமியாரிணி. வெளியே கூப்பிட்டா வர மாட்டா….. போன்-லே பேச சொன்னா பேச மாட்டா… வேலண்டைன்ஸ் டே, க்ளப், டிஸ்கோதே எல்லாம் அவளை பொறுத்தவரைக்கும் மகா பாவம். எங்கேயோ 1900-லே பிறக்க வேண்டியது… தவறிப்போய் 2000-லே பிறந்திருக்கு… சே”ன்னு பொருமித் தள்ளினான். “இதெல்லாம் ஒரு காரணமா தம்பி?”-னு கேட்டது சங்கரி. “ம்மா… என்ன பேசறீங்க? நான் எவ்வளோ மாடர்ன். என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட இப்படி ஒரு பத்தாம் பசலியை கொண்டு போய் என் வைஃப்-னு அறிமுகப் படுத்தினா என் கௌரவம் என்ன ஆகறது?”-னு கேட்டான் விதுரன். “அப்படி என்ன உங்க கௌரவத்துக்கு பங்கம் வந்துடும் சார்?”னு நக்கலா கேட்டார் வேதமூர்த்தி. “ஒரு உதாரணம் சொல்றேன்… மிச்சத்தை நீங்களே யோசிச்சுக்கோங்க”னு சொன்னான் விதுரன்.

“விக்கியோட பர்த்டே பார்ட்டிக்கு கூட்டிட்டுப் போனா…. அங்கே ஹலோ சொல்லிட்டு ஃப்ரெண்ட்லியா ஹக் பண்ண வந்தா விலகிப் போறா.. சே”-னு கோபம் குறையாம சொன்னான் விதுரன். “நீ ஹக் பண்ண வந்தப்போவா?”-னு கேட்டா கிருத்திகா. “இல்லை… இல்லை… என் ஃப்ரெண்ட்ஸ் தான் பண்ண வந்தாங்க! என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பாங்க. ஒரு ஃப்ரெண்ட்லி ஹக் பண்ணா குறைஞ்சா போயிடுவா?”-னு பொருமி தள்ளியவனை வேத்து கிரகவாசியா பார்த்தாங்க வீட்டுலே இருந்தவங்க எல்லாம். அதுக்கப்புறமும் புலம்பியவனை பேச்சே இல்லாம பார்த்தார் வேதமூர்த்தி. அந்நேரம் விதுரனுக்கும் ஒரு போன் வந்துச்சு. “யெஸ்… மது… ரியா இன்னிக்கு ஈவினிங் மீட்டிங் என்னாச்சு? ஓகேவா? வெரி குட்! இடமா? நீயே சொல்லு… நோ ஸ்பெசிஃபிகேஷன்ஸ்… அமைதியான இடம்… கூட்டமில்லாம இருக்கணும்… எனக்கு செம்மொழி பூங்கா ஓகே…. ஆறு மணிக்கு பார்ப்போம்”-னு வைச்சுட்டான். அதை வைச்ச உடனே சொல்லி வைச்சாப் போல அடுத்த போன்.

“சொல்லு சுவாதி… குட்… என்ன விஷயம்.. நான் இன்னிக்கு ஃப்ரீ இல்லே.. அது உன் இஷ்டம்”-னு போனை வைச்சிட்டான். விதுரனுக்கு சுவாதி கூட வெளியே போக இஷ்டம் இல்லே. ஏன் அவ மேலேயே எந்த ஒரு இண்டரெஸ்டும் இல்லே.. தன் கூட தலையாட்டி பொம்மையா இருந்த சுவாதி மேலே இந்த ரெண்டு மாசத்துலே ஆர்வம் குறைஞ்சதை உணர்ந்தான். அதனாலேயே அந்த உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டுப் போறதைப் பத்தி ரொம்ப யோசிச்சான். ஆனா குடும்பத்துலே யாராவது சீண்டினா அந்த முடிவை எடுப்பான். அது தெரிஞ்சோ என்னவோ மறந்துப் போய் கூட யாரும் சுவாதியைப் பத்தி பேசலே. விதுரனுக்கு மதுரியாவை பிரியறதும் கஷ்டமாத்தான் இருந்துச்சு. அதுவும் ஒரு காரணம். 

வேதமூர்த்தி எப்போவும் கயிறுக்கட்டி கிணத்துலே நீச்சலுக்கு இறங்கறவர். இப்போ நீளமான கயித்தைக் கட்டி பையனை கடலுக்கு உள்ளே இறக்க சித்தமானார். அவர் தொண்டையை கனைச்சு, “விதுரா, என்னை மன்னிச்சுடுடா! உன் எதிர்பார்ப்புப் புரியாம… என் ஆசைக்கு கல்யாணம் பேசி முடிச்சுட்டேன்.. பெரியவங்களே இதை நிறுத்திடறோம்… எங்க யாருக்கும் உன் மேலே கோபம் இல்லே.. நான் உன்னை புரிஞ்சுக்கற சான்ஸா-தான் இதை நினைச்சுக்கறேன்” அப்படீ-னு சொல்லவும் விதுரனுக்கு அவ்வளோ ஆச்சர்யம். அப்பா தான் அதிகம் எதிர்ப்பார், சண்டை போடுவார்-னு நினைச்சா இறங்கி வந்து மன்னிப்பு வேறே கேட்கிறார்-னு. அவர் கையை பிடிச்சு “தேங்க்ஸ் பா”-னு சொன்னான். அவர் உதட்டுலே, யார் கண்ணையும் எட்டாத ஒரு முறுவல்.

“ஆமா விதுரா… இனி உன் லைஃப்… எப்பவும் உன் விருப்பம்.. உன் ரெஸ்பான்சிபிளிடி.. நாங்க தலையிட மாட்டோம்”-னு சொல்லவும் விபரீதம் புரியாம சந்தோஷமா போனான். “என்னங்க இது? அவன் தான் ஏதோ சொல்றான்னா… கண்டிக்காம நீங்களும் இப்படிப் பேசறீங்க?”-னு படபடத்த சங்கரி மேலே கனல் பார்வை. பயத்துலே கப்னு வாயை மூடிக்கிட்டாங்க சங்கரி. “தறுதலை! விவஸ்தை கெட்ட சனியன்! பிள்ளை வளர்த்த லட்சணத்துக்கு நம்ம புத்தியை ஜோட்டால அடிக்கணும். அடுத்தவன் நம்ம பொண்டாட்டியை கட்டிப் பிடிக்க வந்து அதை பொண்டாட்டி ஒத்துக்கலேன்னா அந்த தறுதலைக்கு கௌரவக் குறைச்சலாமே?”-னு பொங்கிட்டார் வேதமூர்த்தி. “அப்பா… இப்போ இதெல்லாம் சகஜம்பா.. கொஞ்சம் மாடர்னா இருக்கணும்-னு நினைக்கறான். ஏம்பா அதுக்குப் போயி இப்படித் திட்றீங்க?”.னு நிறுத்தினான் ரிஷிநந்தன். “ஏன் ரிஷி? எந்த காலம்னா என்ன? கூட இருக்கறவளோட மனநிலை முக்கியம்-னு நினைக்கலியே? அவ என்ன பஞ்சாங்க பாட்டியா? அப்போ அவளுக்கு பழகற சான்ஸ் குடுத்து, நட்பைப் புரிய வைச்சிருக்கணும் இல்லே?”-னு ஆணித்தரமா கேட்டார். ரிஷிநந்தனுக்கு பதில் சொல்ல முடியலே. “ஆனா ரிஷிப்பா! நல்ல பொண்ணு… நல்ல குடும்பம்”னு சங்கரி சொல்லவும், “அது இந்த மடையனுக்கு புரியலியே?இப்போ சுத்திட்டு இருக்கானே அந்த பொண்ணு… பேர் சுவாதி.. அவளோட விவரம் பெரியவன் கலெக்ட் பண்ணி இருக்கான். பாருங்க”-னு ஃபைலை தூக்கி எறிஞ்சார்.

“இதை சொன்னா சின்னவன் புரிஞ்சுப்பானே தம்பி? ஏன் சொல்லலே?-னு கேட்டாங்க நீலவேணி. “ஏன்மா சொல்லணும்? ஒருத்தருக்கு நிச்சயம் பண்ணி அந்த பொண்ணுக்கு எதிர்பார்ப்பை குடுத்துட்டு வேறே ஒருத்தியை விரும்பறான்னா.. இவனெல்லாம் மனுஷனாம்மா? அசிங்கமா இருக்கும்மா… என் பிள்ளையை நான் சரியா வளர்க்கலே-னு. அதான்மா இனி அவன் போக்குலே விட்டு கர்மா குடுக்கற தண்டனையை அவனை அனுபவிக்க விடறது தான் அவனுக்கு சரியா இருக்கும்னு விட்டுட்டேன். அன்பும் பாசமும் வைச்சாச்சே… அவன் கஷ்டப்படறதைப் பார்த்து நான் நொந்து போறது, நான் இவனை இப்படி இரக்கமே இல்லாம வளர்த்ததுக்கு தண்டனை”-னு பாதி சாப்பாட்டிலேயே வருத்தத்தோட எந்திரிச்சுப் போயிட்டார் வேதமூர்த்தி. 

மத்தவங்க எல்லாருக்கும் ரொம்ப வருத்தம். “ரிஷி, இவன் ஏண்டா இப்படி ஆயிட்டான்? நல்லதுக்கும் கெட்டதுக்கும் கூடவா வித்தியாசம் தெரியாம போயிடும்?”-னு அழுதாங்க சங்கரி. “ம்ம்ம்… என்னிக்கு சரியா இருந்திருக்கார்? இன்னிக்கு மட்டும் இப்படியாகிறதுக்கு?-னு சொன்னா கிருத்திகா. “கிருத்தி… கொஞ்சம் பேசாம இருக்கியா?”-னு கடுப்பா சொன்னான் ரிஷிநந்தன். விவானுக்கு டிபன் குடுத்து ரெடியாகிட்டிருந்தவ, “பேசலே சாமி… பேசலே… இப்படியே பேசாம இருந்துதான் இங்கே வந்திருக்கு.. தட்டிக்கேட்டா, தப்பு பண்ணாதே-னு சொன்னா,அன்பு கிடையாதுன்னு நீங்களா நினைச்சுக்கோங்க. நீங்க எல்லாம் பண்றதுக்குப் பேரு அன்பு இல்லே.. செல்லம் கொஞ்சறது”னு படபடத்தா கிருத்திகா. “செல்லம் கெட்டதைத்தான் கத்துக் குடுக்கும்… என் மேலே பாயறீங்க. இப்படி ஒரு கழிசடையை உங்கத் தம்பிக் கட்டி, இந்த வீட்டுக்குள்ளே விட்டா பொம்பிள்ளைங்க எங்களுக்கு ஏது நிம்மதி?உங்களுக்கு என்ன… பிசினஸ், ஆபீஸ், மீட்டிங்-னு போயிடுவீங்க. வீடு எங்களுக்குத்தானே நரகமாகும்? நாங்க மூணு பேரும் வீட்டை விட்டு எங்கே தேசாந்தரமா போக முடியும்? சும்மா வாயை மூடு, காதை மூடுன்னு கத்திக்கிட்டு இருக்கீங்க?”-னு அவ பங்குக்கு கோபப்பட்டா கிருத்திகா. “கிருத்திகா சொல்றது நியாயம் தானேப்பா?”னு வருத்தமா கேட்டாங்க சங்கரி. “புரியுதும்மா… எதுவும் பண்ண முடியாதே. அப்பா தான் ஒரு முடிவு எடுத்துட்டாரே”-னு சொன்னான் ரிஷிநந்தன். “பிள்ளைங்களா… ஏன் சண்டை போடறீங்க? நான் நம்பறேன்… என் புருஷனை நம்பறேன்… இது அவர் எடுத்த முடிவு.. கற்பகத்தோட பேத்தி இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்-னு அவர் தான் முடிவு பண்ணார்… அந்த முடிவை அவரே செயல் படுத்துவார்.. எனக்குத் தெரியும்”-னு நீலவேணி சொல்லவும், ‘நான் இங்கே தான் இருக்கேன்’னு சொல்ற மாதிரி வேதாசலம் படத்துலே இருந்து மல்லிச்சரம் கீழே விழுந்துச்சு. நீலவேணி பூவை எடுத்து திரும்ப வைச்சு, “கிழவனாரே, என்ன விளையாட்டு இது? உம்மடப் பிள்ளை அழுதே கரைவா போலிருக்கே?”-னு சங்கரியை பார்த்து சொல்லி புன்னகைச்சாங்க.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top