அத்தியாயம் -4

சாயங்காலம் அஞ்சரை மணிக்கு செம்மொழி பூங்காவுலே அங்கங்கே சின்ன பிள்ளைங்க விளையாடிட்டு இருந்தாங்க. வார நாள் மாலையினால அவ்வளோ கூட்டமில்லே. வெயில் தாழ்ந்து லேசா காத்தடிச்சு சூடும் தணிய ஆரம்பிச்சுது. விதுரன் எல்லாத்தையும் சுத்தி வேடிக்கைப் பார்த்துட்டு இருந்தான். மனசுலே கொஞ்சம் சந்தோஷம். இன்னியோட இந்த கல்யாணம்-கிற சங்கிலியை அறுத்து எறியப் போகிறோம்-னு. ‘கொஞ்ச நாளைக்கு இந்த அவஸ்தை தேவையில்லே. சுவாதிக்கும் எனக்கும் எப்போ தோணுதோ அப்போ பார்த்துக்கலாம். இப்போதைக்கு ஜாலியாத் தானே போகுது’-னு ஏதோ யோசனையிலே இருந்தான். ‘இது சரியான முடிவா?’ன்னு தோணறக் கேள்விக்கு, ‘சரியான முடிவு தான். சரியான பழங்காலம்… வெறும்னே படிச்சா மட்டும் போதுமா? மாடர்னா டிரெஸ் மட்டும் பண்ணிக்கிட்டா போதுமா? எண்ணங்களும் புதுமையா இருக்க வேண்டாமா? ஐயோ… பார்ட்டியா?அதெல்லாம் வேண்டாமே… நான் சொன்னேன்-லே தனியா வரமாட்டேன்னு… கையை பிடிக்காதீங்க… இந்த தோள்லே கை போடறதெல்லாம் அட்லீஸ்ட் எங்கேஜ்மெண்ட் முடிஞ்சுதான்-னு கருத்துப் பேசியே உயிரை வாங்கறா’-னு மனசுலே அர்ச்சனை பண்ணிட்டே திரும்பினா எண்ணத்தின் நாயகியே எதிர்லே அவனை நோக்கி வந்துட்டிருந்தா.

நல்ல அடர் ஊதா நிற டாப்ஸ்… கருப்பு நிற லெக்கின். சுருள்முடியை இறுக்க பின்னி விட்டு அது இடுப்புக்கு கீழே வரை தொங்கிச்சு. நெத்தியிலே சின்ன திலகவடிவுலே கருப்பு பொட்டு, அவளோடத் தந்த நிறத்துக்கு எடுப்பா தெரிஞ்சுது. எந்த வித ஒப்பனையுமில்லாம, வேலை முடிஞ்சு வர்ற அசதியிலே கூட முகம் பளிங்கு மாதிரி மின்னுச்சு. ‘இவளையா வேண்டாம்-னு சொல்லப் போறோம்? எதுக்கு? சுவாதிக்காகவா? இல்லையே… இவ திமிருக்காக… எனக்கேத்த மாதிரி மாறதுக்கு கத்துக்குடுத்தா, முடியாது-னு திருப்பிக்கறா இல்லே? அதான் இந்த முடிவு’-னு தனக்குத் தானே பேசிக்கிட்டான். “ஹாய்.. விது…ரன்… வந்து ரொம்ப நேரமாச்சா?”-னு கேட்டா மதுரியா. “ஹாய்… மது… இப்போத்தான் வந்தேன்”-னு அவனும் சொன்னான். அவனோட மதுங்கற அழைப்பு அவளை சுறுக்-னு குத்தினது உண்மை. ஆனா முகம் மாறாம பார்த்துக்கிட்டா. “உட்கார்… இப்போதான் ட்யூட்டி முடிஞ்சுதா?”னு கேட்டான் விதுரன். “ம்ம்ம்… ஆமா”-னு சொல்லிட்டு அமைதியானா. அது ஒரு சங்கடமான அமைதி. அவனுக்கு நேரடியா விஷயத்துக்கு வர்ற தயக்கம். அவளுக்கென்னவோ அவன் என்ன பேசப் போறான்-னு தெரியும்.

“இந்தாங்க விதுரன்”னு ஒரு பாக்கெட்டை நீட்டினா மதுரியா. “என்ன இது?”-னு கேட்டான். “ட்யூட்டி முடிஞ்சு நேரா இங்கே வந்துட்டேன். நீங்களும் அப்படித் தானே? அதான் வர்ற வழியிலே ரெண்டு பாதாம் பால் பாக் வாங்கினேன்”னு நீட்டும் போது கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனான். ‘இந்த அன்பை இழந்தே ஆகணுமா?’-னு யோசனை பண்ண அடுத்த கணமே, ‘சாகசக்காரி’-னு இறுகிப் போனான். “ஏன்? இப்படி எல்லாம் பண்ணி என்னை இம்ப்ரெஸ் பண்ண பார்க்கிறியா? இதுலே எல்லாம் என் முடிவு மாறாது”-னு கிண்டலா சொன்னான் விதுரன். “என்ன முடிவு? என்ன சொல்றீங்க? நான் ஏன் உங்களை இம்ப்ரெஸ் பண்ணணும்?”-னு புரியாத மாதிரி கேட்டா மதுரியா. “ஓ… நம்மதான் முடிவையே இன்னும் சொல்லலியே”-னு தலையிலே தட்டிக்கிட்டு, “குடு..”ன்னு சொல்லி அந்த பாதாம் பாலை வாங்கி குடிக்க ஆரம்பிச்சான். தப்புப் பண்றதை தன்னோட பிறப்புரிமையா நினைச்சதால மன்னிப்புக் கேக்கணும்-னு நினைப்பே வரலை.

அப்புறம் ஏதேதோ பேசிட்டிருந்தாங்க. ஒரு அரை மணிநேரம் நல்லாவே போச்சு மதுரியாவோட பொறுமையை சோதிக்கற அளவுக்கு. அவளுக்கு விதுரன் மேலே நிறைய அன்பிருந்துச்சு. ஆனா அவனுக்காக வேறே ஒருத்தி கூட போட்டி போடவோ,  இல்லே என்னை விட்டு போயிடாதே-னு கெஞ்சவோ அவ தயாராயில்லே. அதோட அவளோட இந்த உயிர் வலிக்கான காரணம் அவளுக்கு விதுரன் – சுவாதி உறவு தெரிஞ்சேயிருந்துச்சு. அன்னியிலே இருந்து இன்னிக்கு வரைக்கும் அவளைப் பொறுத்த வரைக்கும் விதுரன் ஒரு பச்சை துரோகி. எந்த நாள்லேயும் அவனை மன்னிக்க முடியாது. தன்னோட அன்பை புரிஞ்சுக்காம தன்னை விட்டுட்டானே-னு வலியும் வேதனையும் எவ்வளோ இருக்கோ அதுக்கும் மேலே துரோகின்னு கோபமும் ஆத்திரமும் இருந்துச்சு. அதனாலேயே தலையை தாழ்த்தாம இந்த உறவை முடிச்சுக்கற தைரியமும் அவளுக்கு வந்துச்சு. இப்படி ஆத்திரத்துக்கும் வருத்தத்துக்கும் நடுவுலே அல்லாடி களைச்சுப் போனவ இன்னியோட இதுக்கு ஒரு முடிவு-னு நினைச்சா, இவன் ஏதேதோ பேசறானேன்னு கடுப்பானா.

ஒரு நிலைக்கு மேலே, “விதுரன்… ஏதோ பேசணும்னு சொன்னீங்க”-னு நியாபகப் படுத்தினா. “ம்ம்ம்…. ஆமால்லே? சாரி… மது… எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம்… நமக்கு ஒத்து வராது”-னு ஒரு வருத்தமோ கவலையோ இல்லாம, என்னவோ ‘எனக்கு நாளைக்கு அந்த ஹோட்டலுக்கு போக வேண்டாம்’கிற மாதிரி அலட்சியமா சொன்னான். ஒரு வருஷமா ஒரு பொண்ணுக்கு எதிர்பார்ப்பை குடுத்து, அப்புறம் அந்த உறவை முறிக்கிறதுல எவ்வளோ அலட்சியம்-னு ஆத்திரம் ஒரு பக்கம்… அதே சமயம் இவன் மனசுல நமக்கு இவ்வளோ தான் இடமா?-ன்னு வலி ஒரு பக்கம்-னு அலமலந்துப் போனா. ஆனா ஒரு ராத்திரியெல்லாம் உருவேத்தியிருந்த மனோதிடம் கைக் குடுத்துச்சு. கண்ணுலே ஒரு நொடி தெரிஞ்ச வலி, அதுவே பொய்யோ-னு நினைக்கற அளவு முகம் எந்த உணர்வும் காட்டல. அவளோட அமைதியை உணர்ந்த விதுரன், அவ கண்ணுலே தண்ணி, முகத்துலே சோகம், அவ கெஞ்சல் எல்லாம் எதிர்பார்த்தான். ஒரு வேளை ரொம்ப உருகிக் கெஞ்சினா அவளை மன்னிக்கறதைப் பத்தி கூட யோசிக்கறதா இருந்தான். அந்த அளவு கனமான தலை அவனுக்கு! அதுலே கிரீடம் வைக்கறவங்களை எல்லாம் ரொம்ப பிடிக்கும். ஒரு அலட்சிய சிரிப்போட அவளைப் பார்த்தவன் ஈகோவுக்கு விழுந்த முதல் அடி அவளோட அந்த கல்லு மாதிரி இருந்த அந்த முகம்!

“ஓ… என்ன திடீர்-னு கேட்க மாட்டேன்… ஏன்னா, இதெல்லாம் அப்படி எடுக்கிற முடிவு இல்லே. பட், கொஞ்சம் முன்னாடியே சொல்லி இருக்கலாமே? பெரியவங்களுக்கு எக்ஸ்பெக்டேஷன்ஸ் இல்லாம இருந்திருக்கும்”-னு சர்வ சாதாரணமா சொல்லவும் விதுரனுக்கு சுர்னு ஏறிடுச்சு. அவன் எக்ஸ்பெக்ட் பண்ணது அழுது, கெஞ்சுவா-னு. “என்ன இவ்வளோ ஈசியா எடுத்துக்கறே? எக்ஸ்பெக்ட் பண்ணியோ?”-னு நக்கலா கேட்டான். அவனை நேருக்கு நேர் பார்த்து, “இருக்கலாம்…. மே பி…. தக்காளி அழுகிப் போனா வாசம் வரும் தானே?”-னு நிமிர்வு குறையாம சொன்னா. அந்த நேரம் அவங்களைப் பார்க்க சண்டைக்குத் தயாரா இருக்கற பெண் புலி, ஆண் சிங்கம் மாதிரி தெரிஞ்சுது. வெறும் கர்வத்தோடவும் பதவியோடவும் சுத்தற ஆண் சிங்கத்துக்கு பெண் புலியோட சக்தி என்ன-னு தெரியலே. அதோட இப்போ குள்ள நரியோட சுத்தறதுனால புலின்னா என்னனும் மறந்துட்டான். “வாட் டு யூ மீன் மது?”-னு சீறினான். “ஐ மீன் வாட் ஐ செட். ஏன் இங்கிலீஷ் புரியாதா?”-னு கேட்டா மதுரியா. “அப்புறம், என்னை மதுரியா-னு ஃபார்மலா கூப்பிடுங்க”-னு அழுத்தமா முடிக்கவும் விதுரன் கொந்தளிச்சான்.

“ஓ… அப்போ மதுன்னு கூப்பிட வேறே ஆள் இருக்கா?”-னு கேட்டான் விதுரன். ‘உன்னைத் தவிர என் வாழ்நாள்லே அந்த உரிமை வேறே யாருக்கும் இல்லே’-னு மனசுலே சொல்லிட்டு, “என்ன சொல்றீங்க?”-னு கூர்மையா கேட்டா. “ம்ம்ம்… லுக்ஸ் லைக் யூ ஹாவ் ஃபௌண்ட் சம்வன்”-னு எகத்தாளமா சொன்னான். கோபப்படறதுக்கு பதிலா கடகட-னு சிரிச்சா. சிரிப்புக்கு நடுவுலே, “ஆமா-னு சொன்னா என்ன பண்ணுவீங்க? ம்ம்ம்?அதெல்லாம் ஏன் உங்ககிட்ட சொல்லணும்? நான் என்ன வாக்குமூலம் குடுக்கவா வந்தேன்?”-னு அலட்சியமா சொன்னா. “அவ்வளோ சுலபமில்ல மது நான்… என்னை  ஏமாத்த நினைக்காதே”-னு சொன்னான் விதுரன். “அது சரி… எல்லாரையும் நம்மளை மாதிரியே நல்லவங்களா நினைக்கக் கூடாது… எங்களை மாதிரி கெட்டவங்களும் இருக்கோம்”னு மதுரியா எறிஞ்ச ஈட்டி இலக்கு தவறாம விதுரனை தாக்கிச்சு.

“ஆமாடீ  பண்ணேன். அதுக்கென்ன இப்போ? உன் கூட எல்லாம் மனுஷன் இருப்பானா? சரியான தத்தி நீ… வெளியே கூப்பிட்டா வர மாட்டே.. போன்லே பேச சொன்னா படிக்கணும்-னு போயிடுவே… கையை பிடிக்கக்கூடாது… தோள்லே கை போடக்கூடாது… ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டிக்கு கூப்பிட்டா நாட்டுப்புறம் மாதிரி பிஹேவ் பண்ணுவே… ஓ மை காட்! பார்க்க அழகாயிருக்கே-னு சரின்னு சொன்னா, நீ ஒரு அழகா இருக்கற ஜடம்… அவனவன் கோர்ட்ஷிப்லே நைட் ஸ்டே, அவுட்டிங், டின்னர் டேட்-னு போறாங்க… நீ என்னடான்னா வெளியிலேயே வரமாட்டேங்கறே? கேட்டா கொள்கைகளாம்…. நான்சென்ஸ்! பொம்பிள்ளைங்க உங்களுக்கு எல்லாம் புருஷன் தானே டீ உலகமா இருக்கணும்?அவன் சொல்றதை செய்யாம இருக்கே? போன் பேச மாட்டாளாம்… படிக்கணுமாம்… எனக்கு அப்புறம் தான் படிப்பு எல்லாம்… நான் வேண்டாம்-னு சொன்னா உன் படிப்பே உனக்கு இல்ல”ன்னு அவன் முடிக்கறதுக்குள்ளே, “ஹேய்…” அப்படீ-னு ஒரு விரலை காட்டி கண்ணுலே கனல் தெறிக்க நின்ன மதுரியாவை பார்த்து ஒரு நொடி மிரண்டுப் பின்னாடிப் போனான் விதுரன்.

ஆனா ‘அல்ஃபா-மேல்’ ஆச்சே… பதுங்கினதுக்கு ரெண்டு பங்கு பாய்ஞ்சான். இப்படி ரசாபாசம் ஆயிடாம போயிடணும்-னு வந்தவளை சீண்டி வாக்குவாதத்தை ஸ்டார்ட் பண்ணான். அவனால மதுரியா இந்த விஷயத்தை இத்தனை ஈசியா எடுத்துக்கிட்டதை தாங்கவே முடியலே! அவ உலகம் தன்னை சுத்தி இருக்கணும்-னு நினைச்சான். அது இல்லே-னு தெரியும் போது கண்ணு மண்ணு தெரியாம கோபம் வந்துச்சு. முட்டாளுக்கு அதுக்கு பேரு தான் பரஸ்பர அன்பு-னு தெரியலே. அந்த நேசம் வேணும்னா புரிதலும், மரியாதையும் வேணும்-னு புரியலே. புரியாம அதை அவன் வாயாலேயே அழிச்சான். இனி சேரவே முடியாதபடி வார்த்தைகளை தூக்கி எறிஞ்சான். பெண்புலியும் தன்னை காயப்படுத்திய ஆண் சிங்கத்தை இனி மன்னிக்க போகறதுக் கிடையாது. காயத்தை நக்கி, நக்கி அதை ஆறவிடப் போவதும் கிடையாது. ஏதோ நம்மால ஆனது இவங்களை இப்போதைக்கு பிரிப்போம். 

“ஏன் உண்மையை சொன்னா எரியுதோ? அப்படி நினைச்சுத்தானே பெரியவங்களும் படிப்பு முடிக்கறதுக்கு முன்னே கல்யாணம் பேசினாங்க? ஏதோ என் நல்ல எண்ணம். நீ படிப்பை கண்டின்யூ பண்ணட்டும்-னு பர்மிஷன் கொடுத்தேன்… நீ என்ன செஞ்சிருக்கணும்.. இவ்வளோ நல்ல வருங்கால புருஷன் மனசு கோணாம நடக்கணும்-னு நினைச்சு, எனக்கு புடிச்ச மாதிரி நடந்திருக்கணும்”-னு தோளை குலுக்கவும், இவன்கிட்ட பேசறதே வேஸ்ட்-னு வாயை கப்-னு மூடிக்கிட்டா மதுரியா. விதுரனுக்கே அவன் பேசறது பயங்கர முரண்பாடா இருந்தது தான் கொடுமை.

விதுரன் கர்வம் புடிச்சவனே தவிர கண்மூடித்தனமான ஆணாதிக்கவாதிக் கிடையாது. ஆனா இப்போ, மதுரியாவை காயப்படுத்தணும்கிற வெறி மட்டும் தான் இருக்கு. “நீ அப்படிப் பண்ணலே… அதான் அப்படி பண்றவ வந்த உடனே நான் என் மனசை மாத்திக்கிட்டேன்”னு சொன்னான் விதுரன். 

மதுரியா மனசு ரணப்பட்டுப் போச்சு. துடிச்சுப் போனா. 22 வயசு சின்ன பொண்ணு.. பறக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே அடிபட்டு கீழே விழுந்தா. ‘உங்களை எல்லாம் நம்பினதுக்கு என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்திட்டீங்களே?’-னு மனசுக்குள்ளே அழுதா. “விது, நீங்க என்ன இழக்கிறீங்க-னு புரிய உங்களுக்கு ஒரு ஜென்மம் வேணும்”-னு மனசுக்குள்ளேயே அவன்கிட்ட சொன்னா. “என்ன மது? பேச மாட்டேங்கறே? மதுன்னு கூப்பிடக்கூடாதுன்னு சொன்னே இல்லே… வெல்… நான் அப்படித்தான் கூப்பிடுவேன்… அப்படி மட்டும் தான் கூப்பிடுவேன்… என்ன பண்ண முடியும் உன்னால?”-னு திமிரா கேட்டு சிரிக்கவும் அப்போவும் அமைதியா இருந்தா மதுரியா.

“சரி, விதுரன். உங்களுக்கு இப்போ என்ன வேணும்?”-னு நேரடியா கேட்டா மதுரியா. இந்த நேரடிக் கேள்வியாலே கொஞ்சம் தடுமாறித் தான் போனான் விதுரன். அது எப்பவும் அப்படித்தான். சுத்தி வளைச்சு ஊமைக் குத்தா குத்தறவங்கக் கிட்ட நேரடியா கேட்டா விஷயத்தை சொல்ல தடுமாறுவாங்க. நாம கொஞ்சம் அதிகமா போறோம்-னு அவங்களே உணர்ற தருணம் அது. “இல்லே… நான் பிரியறேன்-னு சொல்றேன்… உடனே சரின்னு சொல்லவும் என் மனசுலே வந்த சந்தேகத்தை தீர்த்துக்கலாம்-னு கேட்டேன்”-னு கொஞ்சம் சுதாரிச்சவன் நக்கலா சொன்னான். “உங்க அபத்த பஞ்சாங்கத்துக்கு விளக்கம் சொல்ற ஆளு நான் இல்லே.. என்னை தெரிஞ்சவங்களுக்கு விளக்கம் சொல்லத் தேவையும் இல்லே… என்னை தெரியாதவங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியமும் எனக்கு இல்லே”-னு ஏட்டிட்யூடோட சொல்லவும் விதுரன் முகம் அவமானத்துலே சிவந்து போச்சு. “நான் பிரியறதுக்கு உன்னோட பிஹேவியரை காரணமா சொல்றேன். அப்போ கூட, என்னை மாத்திக்கறேன், எனக்கு இன்னொரு சான்ஸ் குடுங்க-னு கேட்க மனசு வரலே இல்லே?”-னு எகத்தாளமா கேட்கவும், மதுரியாவின் பொறுமை பறந்து போச்சு.

“எது? சான்ஸ் குடுங்க-னு கேட்கணுமா? நான் என்ன தப்பு பண்ணேன்? நான் நானா இருந்தேன். அது உங்களுக்கு பிடிக்கலேன்னா நமக்கு ஒத்து வராதுங்கறது லாஜிக்… என்னை அப்படியே ஏத்துக்கக் கூடியவர் கூட தான் நான் வாழ முடியும். அது நீங்க இல்லேன்னு நீங்களே சொல்லும்போது நான் என்ன செய்ய முடியும்? கேரக்டர் என்ன போட்டிருக்கற சட்டையா, வேண்டாம்-னா கழட்டி மாத்திக்கறதுக்கு… அப்புறம் அது என்ன சான்ஸ் குடுங்க-னு கேட்கணுமா? கேட்டா? வாம்மா-னு சொல்லிடுவீங்களோ? வேறே எவளுக்கோ நம்பிக்கையை குடுத்துட்டு வந்திருக்கீங்களே… அவளை என்ன பண்ணுவீங்க? அவகிட்ட நோ-னு சொல்லிடுவோம். அப்படித் தானே? நமக்குத்தான் நம்பிக்கை குடுத்து நோ சொல்றது புதுசு இல்லையே?”-னு கோபத்துலே படபடத்தாள் மதுரியா. அவ கோபத்தை பார்த்ததும் அவனுக்கு சிரிப்புத்தான் வந்துச்சு. அவன் எதிர்பார்த்ததும் அதைத்தானே. “என்னம்மா இவ்வளோ கோபம்? பொறாமையா இருக்கா? நீ இல்லைன்னாலும் நான் சந்தோஷமா வாழ முடியும் தெரியுமா?இப்போ கூட உன்னை மாத்திக்கறேன்-னு சொல்லு. உனக்குத்தான் ஃபர்ஸ்ட் ப்ரிஃபரன்ஸ்”-னு சிரிச்சான் விதுரன்.

“தேங்க்ஸ் ஃபர் தி ஆஃபர்… ஆனா என்னை மாத்திக்கற ஐடியா எனக்கு இல்லே… இப்போப் புரியுது! உங்க கூட இருந்தா நான் எந்த மாதிரி ஒரு இண்செக்யூர்ட் லைஃபை வாழ்ந்திருப்பேன்-னு. எனக்கு அது வேண்டாம்… முழு மனதா உங்க முடிவை ஏத்துக்கிறேன்! நீங்களே இதை உங்க வீட்லே சொல்லி, எங்க வீட்லே பேசி க்ளோஸ் பண்ண சொல்லிடுங்க. ஏன்னா உங்களை மாதிரி ஒரு ஆளுக்காக எங்க வீட்டாளுங்க கூட எனக்கு இருக்கற நல்ல உறவைக் கெடுத்துக்க நான் தயாரில்லை மிஸ்டர்.விதுரன் வேதமூர்த்தி. அப்புறம் என் அன்பு உண்மை. ஆனா அதை நான் செலுத்தின இடம் தான் தப்பா போச்சு. குட் பை”-னு கண்ணுலே வழியற தண்ணியோட எல்லாத்தையும் சொல்லிட்டு விறுவிறு-னு போயிட்டா. அவ போறதை மலைச்சுப் போயி பார்த்துட்டு இருந்தான் விதுரன். நியாயமா அவன் நினைச்சு வந்தது ரசாபாசமா இல்லாம முடிஞ்சுதே-னு ஆசுவாசமா உணரணும். ஆனா அவனுக்கு மனசுலே பெரிய இரும்பு குண்டு வைச்சு அழுத்தின மாதிரி இருந்துச்சு. நிம்மதி மொத்தமா காணாம போனப் போல உணர்ந்தான். குதூகலமா போன் பண்ணி சுவாதிக்கு சொல்ல வேண்டியவன் அதை பண்ணலே. ஆனா சுவாதியே போன் பண்ணா. “ஹாய் பேபி… எல்லாம் முடிஞ்சுதா?”-னு கேட்டா. “ஏது பேபியா? நான்சென்ஸ்! எப்போவும் போல விதுரன்னு கூப்பிடு”னு சள்னு விழுந்தான்.

ஒரு வினாடி திகைச்சாலும், “என்னாச்சுடா… ஏதாவது ப்ராப்ளம் பண்ணிட்டாளா? நான் வரட்டுமா?”-னு குழைவா கேட்டா சுவாதி. “எல்லாம் முடிஞ்சுது. நவ்.. லுக்.. லீவ் மீ அலோன். நான் அப்புறம் பேசறேன்”-னு பட்னு போனை கட் பண்ணிட்டான். அவ குடுத்த பாதாம் பால் பேக்கை காலி பண்ணாலும் அதை தூக்கி போடாம கையோட தூக்கிட்டுப் போனான்.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top