விதுரன்கிட்டே பேசி மூணு நாளாச்சு. விடிய விடிய கண்ணீர் தான் மதுரியாவுக்கு. அவ்வளோ வலி. ஆற்றுவார் தேற்றுவார் இல்லாம அழறது வேதனையை அதிகப்படுத்திச்சு. ஃபைனல் டிரைமெஸ்டர்னால ஹாஸ்பிடல், காலேஜ்-னு படிப்பிலேயே தன்னை கரைச்சுக்கிட்டா. அதனால பகலெல்லாம் அமைதியா போனாலும் ராத்திரியானதும் தனிமை நரகமாச்சு. அதுலேயும் வீட்டுலே பேசிக்கறவங்க மூலமா அன்னிக்கு சாயந்திரம் வேதமூர்த்தியும் சங்கரியும் வர்றாங்க-னு தெரிஞ்சதும் படபடப்பும் வேதனையும் அதிகம் தான் ஆச்சு. அவங்க வர்ற நேரத்துக்கு தான் அங்கே இருக்கக் கூடாது-னு ஏதோ சாக்குப் போக்கு சொல்லி வெளியே போனா.
அப்போ கூட கடவுள் அவளுக்கு இரக்கம் காட்டலே. அவ போனது ஆம்பா (Ampa Skywalk) மால். அந்த மால்லே ஒரு ஓரமா இருந்த காபி ஷாப்லே ஒரு மில்க் ஷேக் வாங்கிட்டுத் தனியா உட்கார்ந்தா. அதே மாலுக்கு விதுரன் சுவாதியை கூட்டிட்டு வந்திருந்தான். ரொம்ப நேரமா சிரிப்பும் பேச்சுமா இருந்தாங்க. யாரு-னு திரும்பி பார்க்கவும் இன்னும் வேதனை அதிகமாச்சு. விதுரன் கையை சுவாதி பிடிச்சுட்டு பேசி சிரிச்சுட்டு இருந்தாங்க. விதுரனும் மதுரியா பார்க்கறா-னு தெரிஞ்சதும் வேணும்னே சுவாதி கூட க்ளோஸா இருக்கற மாதிரி நெருங்கி உட்கார்ந்து இன்னும் சுவாரசியமா பேசற மாதிரி பாவ்லா பண்ணான். அதோட விளைவு குபுக்-னு அவளையும் மீறி கண்ணுலே தண்ணி வந்துச்சு. அப்போதான் அவளோட வீங்கின கண்ணும், புஸ்-னு இருக்கற முகமும் அவன் கண்ணுலே பட்டுச்சு. மனசுலே பாரம் ஏறிப் போச்சு. அவ வருத்தத்துலே அவனால சந்தோஷப்பட முடியலே. மதுரியா சட்-னு கிளம்பி போயிட்டா. அவ வாங்கின ஃபுல் மில்க் ஷேக் அப்படியே டேபிள் மேலே கிடந்துச்சு. போக வழியில்லாம இடம் இல்லாம மறுபடியும் வீட்டுக்கே போனா. அங்கே நடக்கறதை பார்க்க இதை விட ரண வேதனையா இருந்துச்சு.
வேதமூர்த்தி திடீர்-னு கால் பண்ணி, “நாளைக்கு சாயங்காலம் வர்றேன் முக்கியமா பேசணும்”-னு சொல்லவும் சரி-னு சொன்னாங்க. ஆனாலும் நித்தியானந்தத்துக்கும் நித்தியவாசனுக்கும் ஒண்ணும் புரியலே. அடுத்த நாள் சாயந்திரம் வீட்டுக்குள்ளே வந்த வேதமூர்த்தி, “வாசு..”-னு கதறலோட நித்தியவாசன் கால்லே விழவும் வீட்லே எல்லாரும் ஸ்தம்பிச்சு போயிட்டாங்க. இந்த காட்சியைத்தான் வாசலோட நின்னுட்டிருந்த மதுரியா பார்த்து அப்படியே மறைஞ்சு நின்னுட்டா. இப்போ போறது சரியா இருக்காது-னு நினைச்சதால அங்கேயே நின்னுட்டா. “டேய், மூர்த்தி, என்ன இது? எழுந்திருடா! அப்பா… பாருங்க இவனை”னு படபடத்துப் போனார் நித்தியவாசன். சங்கரியும் எதுவும் சொல்லாம அழவும், “மூர்த்தி, என்னாச்சு? நீலா நல்லா இருக்கா தானே?”-னு பதறினாங்க கற்பகவல்லி. “இப்படி ஒரு பிள்ளையை பெத்தா நாங்க எப்படி நல்லா இருக்க முடியும்? அவனை பெத்த பாவத்துக்குத் தான் நான் வாசு கால்லே விழுந்தேன். மன்னிச்சுடுடா வாசு”-னு எமோஷனலா பேசினார் வேதமூர்த்தி. “இப்படி விழுந்தா என் மனசு எப்படி கஷ்டப்படும்-னு யோசிச்சியா? மக்கு மாதிரி உளறிட்டு…. சுபி, என்ன அப்படியே நிக்கறே?குடிக்க ஏதாவது கொண்டு வா”-னு நண்பனை தோளோட அணைச்சு உட்கார கூட்டிட்டு போனார்.
சுபத்ராவும் காபி கொண்டு வந்து குடுத்தாங்க. “மூர்த்தி, முதல்லே காபியை குடி. எதுவானாலும் அப்புறம் பேசலாம்”-னு நித்தியானந்தம் சொன்னார். அவங்க ரெண்டுப் பேரும் குடிச்சு ஆசுவாசப் படுத்திக்கற வரை அமைதி. “இப்போ சொல்லுடா… என்ன விஷயம்?”-னு கேட்டார் பெரியவர். வேதமூர்த்தி முகத்திலே அப்படி ஒரு வலியும் வருத்தமும்.. கூடவே அவமானமும்…. “மாமா, விதுரனுக்கு இந்த கல்யாணத்துலே விருப்பம் இல்லையாம்.. கல்யாண பேச்சை நிறுத்த சொல்றான்”-னு ஒரு வழியா கஷ்டப்பட்டு சொல்லி முடிச்சார். எல்லாரும் வெளிப்படையாவே அதிர்ந்தாங்க ரெண்டு பேரைத் தவிர – ஆனந்தியா-பரத். அதை நித்தியவாசனும் கவனிச்சார். வீட்லே எல்லாருக்கும் மதுரியாவோட அழுது வழியற முகத்துக்கு விளக்கம் தெரிஞ்சுது.
“என்ன சொல்றே மூர்த்தி?”-னு கேட்டார் நித்தியானந்தம். “ஆமாம் மாமா… என்னால முடிஞ்ச வரைக்கும் போராடிட்டேன்… முடியலே…. இதுதான் டா உனக்கு நல்லது. நான் சொல்றதை கேளுடா-னு அழுத்தி சொல்லி கேட்கிற பிள்ளையா நான் அவனை வளர்க்கலே…. அவனுக்கு பணிஞ்சுப் போற, தோத்துப் போன அப்பாவா உங்க முன்னாடி இருக்கேன்”-னு குறுகிப் போனார் வேதமூர்த்தி. “இது ஏற்கனவே ரியாவுக்கு தெரியுமா? உங்களுக்கும் தெரியும் போல இருக்கு”-னு பரத்தை பார்த்து கேட்டார் நித்தியவாசன். “அது… அது… மூணு நாள் முன்னாடியே விதுரன் ரியாகிட்டே சொல்லிட்டார். அவளை சமாதானம் பண்ணவே முடியலே.. சரி ஏதோ கோபத்துலே சொல்லி இருப்பார் போல இருக்கு, தன்னைப் போல சரியாகிவிடும்-னு நானும் தியாவும் நினைச்சோம். இன்னிக்கு அங்கிள் வந்து சொல்ற வரைக்கும் இவ்வளோ சீரியஸாகும்-னு நினைக்கலே மாமா”-னு திணறினான் பரத்.
“ரியாவுக்கும் தெரியுமா? அவளையும் கூப்பிட்டு அவ கிட்டேயும் மன்னிப்பு கேட்டுட்டு மொத்தமா கிளம்பறோம்”னு சொன்னார் வேதமூர்த்தி. “மொத்தமா கிளம்பறியா? என்னப்பா… இவன் பாட்டுக்கு பேசிட்டே போறான். நீங்களும் பார்த்துட்டு இருக்கீங்க?”-னு படபடத்தார் நித்தியவாசன். “பொறு… பொறு தம்பி… மூர்த்தியும் வருத்தத்திலே ஏதேதோ பேசறான்”-னு சொன்னார் நித்தியானந்தம். “மூர்த்தி, இது எங்க எல்லோருக்கும் அதிர்ச்சிதான். வருத்தம் தான். ஆனா விதுரனையும் புரிஞ்சுக்க முடியுது. பிடிக்காத பந்தத்திலே பிடிச்சு தள்ளுன்னா, வாழ வேண்டியது அவங்க தானே?என்ன ஒரு வருத்தம்-னா இந்த முடிவை அவன் கொஞ்சம் முன்னாடியே எடுத்திருந்தா ரியாவுக்கு வருந்தற அளவுக்கு எதிர்பார்ப்பு வந்திருக்காது. அவளை தேத்தறது கஷ்டம் தான்… ஆனா அவ தைரியசாலி. தன்னை சீக்கிரமே மீட்டுப்பா”-னு சொன்னார் நித்தியானந்தம்.
வேதமூர்த்தி அவரை பார்க்கும்போதே, “அதுக்கு எதுக்குடா நாம பிரியணும்? ம்ம்ம்? இதுங்க பிறக்கறதுக்கு முன்னாடியே.. ஏன் சுபத்ராவும் சங்கரியும் நம்ம வாழ்க்கையிலே வர்றதுக்கு முன்னாடியே நம்ம நட்பு இருக்கு. அது உறவா மாறணும்-னு நினைச்சோம். ஆனா அது நட்பா மட்டுமே இருக்கணும்-னு விதிச்சிருக்கு போல…. அதுக்கு போயி என்னென்னவோ பேசறே? என்னென்னவோ செய்யறே? என்ன சொன்னே? ரியா கிட்ட மன்னிப்புக் கேட்கறியா? துடிச்சு போயிடுவாடா… நீ இப்படி எல்லாம் பேசறதை கேட்டா”னு படபடத்தார் நித்தியவாசன். அங்கே ஒரு அமைதி. அதோட மதுரியாவும் வாசலோட கிளம்பினா. அப்போ லெட்டர் பாக்ஸ்லே இருந்த பழுப்பு நிற லெட்டர் அவளோட கவனத்தை இழுத்துச்சு. எடுத்துப் பார்த்தவ யோசனையோட கோயிலுக்கு கிளம்பினா. வீட்டுலே அசௌகரியமான அமைதிக்கு அப்புறம், “மாமா, நான் இப்போ என்ன பண்ணணும்?”-னு கேட்டார் வேதமூர்த்தி. “ஒண்ணும் பண்ண வேண்டாம். எப்போவும் போல இரு. இந்த மாதிரி ஒரு கல்யாண பேச்சு நமக்குள்ளே நடந்ததை கொஞ்சம் கொஞ்சமா மறந்துடுவோம் மூர்த்தி. மனசுலே அனாவசியமா எதுவும் யோசிக்காதே. விதிப்போல நடக்கட்டும்.. நடப்பதை நாம எல்லாம் ஏத்துப்போம்”-னு பேசி அனுப்பி வைச்சாங்க நித்தியானந்தமும் நித்தியவாசனும்.
“வீட்டுலே நமக்கு தெரியாம என்னென்னவோ நடக்குதுப்பா… இப்போவாச்சும் கொஞ்சம் சொல்றீங்களா?”-னு ஒரு மாதிரி கேட்டார் நித்தியவாசன். “அப்பா… எங்களுக்கும் மூணு நாள் முன்னாடிதான் நடந்தது தெரியும். சத்தியமாப்பா… நம்புங்க”-னு மிரண்டு போய் சொன்னா ஆனந்தியா. நித்தியவாசன் மனைவியை பார்த்தார். சுபத்ரா பயந்து, “எனக்கொண்ணும் தெரியாதுப்பா… நம்புங்க தியாப்பா”-னு சொன்னாங்க. “என்ன விளையாடறீங்களா?மூணு நாள் முன்னாடி விதுரன் சொன்னதுக்கு ஒரு வாரமா அழறாளா?”-னு குரலை உசத்தினார் நித்தியவாசன். “அதுப் பத்தி கேட்டோம்… எந்த பதிலும் இல்லை. ரொம்ப ப்ரஷர் குடுத்து கேட்க முடியலே மாமா… அல்ரெடி ரொம்ப அப்செட்டா இருக்கா”-னு சொன்னான் பரத். “எதுக்குப்பா அப்செட்? என்ன விவரம்?”-னு கேட்டார் நித்தியானந்தம்.
“தாத்தா… அது வந்து ரியா விதுரனை விரும்பறாப் போல.. அதுதான் இது அவளுக்கு ரொம்ப காயமாயிடுச்சு”-னு தயங்கி தயங்கி சொன்னா ஆனந்தியா. “ஈஸ்வரா… இது என்ன சோதனை? இதையா இந்த பொண்ணு ஒரு வாரமா தனியா வைச்சு கஷ்டப்படுது?”-னு கேட்டாங்க கற்பகவல்லி. பெரியவங்க எல்லாருக்கும் நல்லா படிச்சிட்டு சந்தோஷமா வளைய வந்தப் பொண்ணை உள்ளே இழுத்துவிட்டு இப்படி கஷ்டப் படவிட்டோமே-னு குற்றவுணர்ச்சியா இருந்துச்சு. நித்தியவாசன் நடந்தத் தப்புக்கு பிராயச்சித்தமா அவர் மகளுக்கு 100% ஆதரவா இருந்து அவளை பழையபடி மீட்டு எடுக்கணும்-னு நினைச்சார்.
தாயறியாத சூலான்னு கேக்கறாப் போல, சுபத்ராவுக்கு மகளை நினைச்சு கலக்கம் ஏற்பட்டுச்சு. அவ குணம் தெரிஞ்சவங்க அனர்த்தமா ஏதாவது முடிவு பண்ணிடுவாளோ-னு பயந்தாங்க. அந்த காலத்து மனுஷி. வீட்டுப்பறவை. அவங்களவுக்கு யோசிக்க முடிஞ்ச விஷயம், அது மாதிரி அனர்த்தம் நடக்கறதுக்கு முன்னாடி பொண்ணை வேறே நல்ல இடத்துலே கட்டிக் குடுத்துடணும். அது சந்தோஷம் ஆயிடுச்சு-னா இதெல்லாம் பின்னுக்கு போய் மறந்து போயிடும்-னு நினைச்சாங்க. “வல்லிம்மா, எனக்கென்னவோ பயமா இருக்கு. சீக்கிரம் சின்னவ வாழ்க்கைக்கும் ஒரு முடிவு பண்ணிடணும்”-னு மாமியார்கிட்ட சொன்னாங்க. கற்பகவல்லியும் மருமகளோட கையை தட்டிக் குடுத்தாங்க. “சுபா, பயப்படாதே… நாம எல்லாரும் இருக்கோமே. அவளை தேத்திடலாம்”-னு சொன்னார் நித்தியானந்தம். சுபத்ராவோட எண்ண ஓட்டங்களும் பயமும் அவங்களுக்கேப் புரியலே. அப்புறம் அதை என்னன்னு மத்தவங்களுக்கு புரிய வைப்பாங்க. அதனால உள்ளே பதட்டமும் கவலையுமா இருந்தாலும் வெளியே அமைதியா இருந்தாங்க.
அந்த ஆறு ஜீவன்களும் மதுரியாவோட வருகைக்கு காத்திருந்துச்சு. வீட்டுலே இருந்து மெல்ல நழுவிய மதுரியா, லெட்டர் பாக்ஸ்லே இருந்து எடுத்த லெட்டரை முழுசா படிக்கவும் அவ முகத்துலே குழப்பம் வந்து உட்கார்ந்துச்சு. எந்த குறுக்கீடும் இல்லாம யோசிக்கணும்-னு நினைச்சு, நேரா அவளுக்கு ரொம்ப பிடிச்ச இடமான கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குள படிக்கட்டுகளுக்கு போனா. எப்பவும் போல தண்ணி அலையற சத்தமும், ஜன சந்தடியும், கோயில் மணி சத்தமும் விளக்கு எரியற வாசமும் கொந்தளிக்கற மனசுக்கு அமைதியை குடுத்துச்சு. ‘எதுவானாலும் நீ பார்த்துப்பே’-னு தெளிவை குடுத்துச்சு. அப்புறம் தான் தூசு துரும்பு தாண்டி யோசிக்க ஆரம்பிச்சா. ‘தேவி, நான் விதுரனை ரொம்ப நேசிக்கிறேன்-னு புரிஞ்சுக்கிட்டேன்… ஆனா அவர் எனக்கு பண்ண துரோகம் என்னால அவர் கூட வாழ முடியாது… நேசிச்சவர் பொய்த்துப் போன வலிதான் இருக்கே தவிர இப்போ நேசமில்லே. ஆனா ரொம்ப வலிக்குது… இப்படி இங்கே இருந்து அவரையும் சுவாதியையும் ஜோடியா பார்த்தா எங்கே தோல்வியும் விரக்தியும் சேர்ந்து பைத்தியமா ஆகிவிடுவேனோ-னு இருக்கும்மா…. குடும்பக் கனவு மொத்தமா பொய்ச்சுப் போச்சுன்னாலும், இப்போ எனக்கும் கடந்துப் போகணும்…. வாழ்க்கை இன்னும் இருக்கு… இதெல்லாம் புரியுது… ஆனா மனசு பூரா இன்னும் விதுரன் இருக்கும் போது நான் இதை எப்படி கடந்து போக முடியும்? இவ்வளோ பெரிய காயத்துக்கு அப்புறம், என்னால எந்த ஆண்மகனையும் நம்ப முடியாதே ஈஸ்வரி…. நான் என்ன பண்ணுவேன்?’னு அழுதா. இதோ… இதே அழுகைதானே ஏழு நாளா நடக்குது? அது கடவுளுக்கே போதும்-னு தோணுச்சோ என்னவோ அந்த லெட்டர் காத்துலே படபடத்து தன் இருப்பைக் காட்டுச்சு.
அப்போ தான் மதுரியாவுக்கு தான் ஏன் கோயிலுக்கு வந்தோம்-னு யோசனை வந்துச்சு. “சே… நம்ம வந்த வேலை என்ன? இங்கேயும் வந்து அழுதுக்கிட்டு இருக்கோமே? ஒரு வேளை இந்த படிப்பும் சர்வீசும் தான் என் லைஃப்-னு உணர்த்தறாரோ கடவுள்?”-னு நினைச்ச மாத்திரம் கண்ணுலே வழியற தண்ணியை அழுத்தமா துடைச்சா. “ஈஸ்வரி! நீ காட்டற இந்த வழியை மனமாற ஏத்துக்கறேன். என்னால இந்த ஊர்லே இருந்துட்டு அவங்க ரெண்டுப் பேரையும் பார்த்துட்டு இருக்க முடியாது”-னு நினைச்சா. தெளிவான மனசோட யோசிச்சு நிறைய முடிவுகளை எடுத்தா மதுரியா. ஆனா வீட்டுலே அந்த முடிவுகளுக்கு எதிர்ப்பு இருக்கும்-னு யோசிக்கலே. மனசுலே பிரிவுனால ஏறின பாரம் இறங்கவே இல்லை. ஆனா அழுதுக்கிட்டு கதறிக்கிட்டு இருந்த மனசு அதைத் தாண்டி வர முடிஞ்சுது. மசமச-னு இருந்த பனிமூட்டம் குறைஞ்சு நல்ல தெளிவும் வந்துச்சு. இந்த மனசை அரிக்கற வேதனை கொஞ்சம் குறையாதா?அதோடவே தான் வாழணுமா?-னு ஒரு அலுப்பு வரவும் பெருமூச்சோட கோயிலை விட்டு கிளம்பினா. மதுரியா வீட்டுக்குள்ளே வரும் போது மயான அமைதி. அவளுக்கு எந்த பயமோ தயக்கமோ இருக்கலே. வீட்லே இருந்தவங்களுக்கு எப்படி பேசறது, என்ன சொல்றது-னு தெரியலே. “வாடா ரியா… எங்கே காலேஜ் முடிச்சு நேரா வீட்டுக்கு வரலே?”-னு முதல்லே மௌனத்தை உடைச்சது நித்தியவாசன் தான்.
“ம்ம்ம்… ஆமாம்பா… கோயிலுக்கு போயிருந்தேன். இதைப் பத்தி சில யோசனைகள் செய்ய” அப்படீன்னு கையிலிருந்த லெட்டரை குடுத்தா. “ஓ… சரி… நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா. அதுக்குள்ளே பார்த்துடறேன்”-னு சொன்னார். மதுரியாவும் அமைதியா போனா. அப்பாவோட கரிசனம் கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருந்துச்சு. அவளும் ஃப்ரெஷ் ஆகிட்டு டிபன் சாப்பிட உட்கார்ந்தா. “எங்களை எல்லாம் உன் கஷ்டத்திலே இருந்து ஒதுக்கி வைக்கற அளவுக்கு நாங்க என்ன பண்ணோம் ரியா? தனியா மருகி இருக்கே… என் கிட்டேக் கூட சொல்லணும்-னு தோணலே தானே? திடீர்-னு நான் வேற ஆகிட்டேனா?”னு கேட்டாங்க கற்பகவல்லி. கற்பகவல்லிக்கு அவங்க செல்ல சீமாட்டித் தன் கிட்டக் கூடப் பகிர்ந்துக்கலைன்னு தாங்கவே முடியலை. “ஒரு வேளை உன்னை சப்போர்ட் பண்ணமாட்டோம்-னு நினைச்சுட்டியா ரியா? அப்பா பத்தி உனக்கு தெரியாதாடா?”-னு கேட்டார் நித்தியவாசன். “ப்ளீஸ்… போதும்… முடிஞ்சதைப் பத்தி பேசி என் காயத்தை மேற்கொண்டு கிளறாதீங்க.. உங்களுக்கு விளக்கம் சொல்ற நிலைமையிலே நான் இல்லே”-னு அழுத்தமா சொன்னா மதுரியா. இந்த நிலையிலே அவளை கட்டாயமா சப்போர்ட் பண்ணணும்-னு தோணுச்சு நித்தியவாசனுக்கு. அவரை பொறுத்தவரைக்கும் தனக்காக கண்ணை மூடிட்டு சரி-னு தலையாட்டின பொண்ணுக்கு தன்னால நியாயம் செய்ய முடியலே-னு ஒருப் பெரியக் குற்றவுணர்ச்சி.
“சரிடா… யாரும் அதைப்பத்தி உன்கிட்ட பேசமாட்டோம்.. கேட்க மாட்டோம். அதை விடு. நிம்மதியா சாப்பிடு. சாப்பிட்டுட்டே இந்த லெட்டரைப் பத்திப் பேசுவோம். என்ன முடிவு பண்ணி இருக்கே? அதுக்கு முன்னாடி கங்கிராட்ஸ்! ‘நீட்’-லே நல்ல ஸ்கோர். நீ கேட்ட ஆப்ஷன்ஸே கிடைச்சிருக்கு”-னு கேட்டார் நித்தியவாசன். “தேங்க்ஸ் பா. நானும் நினைக்கவே இல்லே. நான் கவர்ன்மெண்ட் மெடிகல் காலேஜ் செங்கல்பட்டு-னு முடிவு பண்ணியிருக்கேன்பா”-னு சொன்னா மதுரியா. ஒரு நிமிஷம் திகைச்சுத்தான் போனாங்க எல்லாரும். “அது செகண்ட் சாய்ஸ் தானே? அதோட டெய்லி எப்படி போய்ட்டு வருவே?”-னு கேட்டார் நித்தியானந்தம். “இல்லே தாத்தா… நான் ஹாஸ்டல்லே இருக்கப் போறேன்… ஐ நீட் எ சேஞ்ச்… ப்ளீஸ்”-னு கெஞ்சலா சொன்னா மதுரியா. “ரியா! அதெல்லாம் சரி வராது. வரன் பார்த்து முடிக்கணும்-னா இங்கே இருந்தா தான் சரி வரும்… நீ கே.எம்.சி-யிலேயே படி”-னு பதட்டமா சொன்னாங்க சுபத்ரா. மதுரியா கோபத்துலே சேரை தள்ளிட்டு எந்திரிச்சா. “என்னைப் பத்தி என்ன நினைச்சீங்கம்மா நீங்க? அஞ்சு அறிவு பூனையை விட கேவலமா போயிட்டேனா நானு? வரனாம்… பார்க்கிறதாம்… சே… இனிமேல் இந்த கல்யாணம், கருமாதி-னு எங்கிட்ட வந்தீங்க… ஊரைவிட்டு இல்லே… உலகத்தை விட்டேப் போயிடுவேன்.. ச்சே!! வீடா இது?”-னு கத்திட்டு உள்ளே போனவளை அதிர்ந்து போய் பார்த்தாங்க எல்லாரும்.