மதுரியா எந்திரிச்சு போனதும் அந்த இடத்துலே ஒரு மயான அமைதி. யாருக்கும் ஒண்ணும் புரியலே. சுபத்ரா தான் முதல்லே, “நான் பயந்த மாதிரியே முட்டாள்தனமா யோசிச்சிருக்காளே?”-னு கலங்கிப் போய் சொன்னாங்க. அதுக்கு நித்தியவாசன், “ஆமா… அவ யோசிச்சதை உன் முட்டாள் தனத்தால முடிவா எடுக்க வைச்சுட்டே! இப்போ திருப்தியா?”-னு கடுப்பா கேட்டார். “நான் என்ன தியாப்பா பண்ணேன்? தியா மாதிரியே இவளுக்கும் ஒரு நல்ல வாழ்கை அமையணும்.. அமைச்சுக் குடுக்கணும்… இப்படி ஏதோ ஒரு தப்புனால உடைஞ்சு உட்காரக் கூடாது-னு நினைச்சேன். ஒரு அம்மாவா நான் நினைச்சதுலே என்ன தப்பிருக்கு?”-னு கேட்டாங்க சுபத்ரா. “சுபா, நீ நினைச்சதிலே தப்பே இல்லே. எங்க நினைப்பும் அதுதான். கொஞ்சம் அவ போக்குலே விட்டுப் பிடிச்சு அப்புறம் வழிக்கு கொண்டு வரலாம்-னு நினைச்சோம். ஆனா உன் பதட்டத்துலே அவ நினைச்சதை முடிவு பண்ற மாதிரி பண்ணிட்டியேம்மா?”-னு வருத்தமா கேட்டார் நித்தியானந்தம்.
“சாரிப்பா… அவ நம்ம அழுத்தி சொன்னா கேட்பா… உடனே மாத்திடலாம்-னு நினைச்சேன்”-னு வருத்தமா சொன்னாங்க சுபத்ரா. “எப்படி அத்தை கேட்பா? நம்ம எடுத்த முடிவு நடக்காம போனது மட்டுமில்லே… அவளை ரொம்ப காயப்படுத்திடுச்சே”-னு சொன்னான் பரத். சுபத்ரா ஒண்ணுமே பேசலே. “சரி… சரி… என்னவோ பண்ணிட்டா.. அவளுக்கும் கவலை, வருத்தம் இருக்கும் தானே? சும்மா எல்லாரும் அவளை குறை சொல்லாதீங்க”-னு சப்போர்ட் பண்ணாங்க கற்பகவல்லி. “ம்மா… புரியாம சப்போர்ட் பண்றீங்க. அடுத்து என்ன பண்றது?”-னு கேட்டார் நித்தியவாசன். “ஒரு ரெண்டு நாள் விடுங்கப்பா… அவ கோபம் குறைஞ்ச அப்புறம், இப்போ உடனே இல்லே…. பொறுத்துத் தான் பண்ணப் போறோம்னு எடுத்து சொல்லலாம்பா”-னு சொன்னா ஆனந்தியா. அமைதியும் அப்பாவித்தனமும் நிறைஞ்சிருக்கற பெரிய மகள் கிட்ட கோபமே பட முடியலே நித்தியவாசனுக்கு. மதுரியாவோட வெடுக்-னு பேசற குணத்துக்கு அவ கிட்ட அப்பப்போ ஸ்டிரிக்டா நடந்துப்பார். ஆனா இவ கிட்ட எப்போவுமே முடியாது அவரால. இப்போ இருக்கற நிலையிலே சின்ன மகள் கிட்டேயும் கடுமை காட்ட முடியாது. அவரோட கோபமே நொந்த மகளை மனைவி இன்னும் நோகடிச்சாளேங்கறதுதான்.
ஒரு பெருமூச்சு விட்டு, “தியாம்மா… உனக்கு அவளைப் பத்தி தெரியாதா? மாத்த முடியும்-னு நினைக்கறியா?அதுவும் எவ்வளோ பெரிய வார்த்தை பேசிட்டு போயிட்டா டா”-னு கனிவாவே கேட்டார் நித்தியவாசன். “என்னப்பா… ஏதோ கோபத்துலே பேசினதை போயி பெரிசா எடுக்கறீங்க?”-னு அப்பாவுக்காக ஆனந்தியா சொன்னாலும் அவளுக்கும் உள்ளே பயமிருந்துச்சு. “இல்லேடா… என்னால முடியாது…. எனக்கு இப்போதைக்கு அவ நிம்மதியும் சந்தோஷமும் தான் முக்கியம்.. அவளோட நல்லதுக்குன்னாலும் என்னால அவளை வற்புறுத்த முடியாது.. இனி இந்த விஷயத்துலே அவ முடிவுதான் என் முடிவு. நீங்க யாரும் பேச வேண்டாம்-னு தடுக்கலே.. ஆனா அவ என்ன முடிவு எடுத்தாலும் நான் முழுமையா சப்போர்ட் பண்ணுவேன்”-னு டாபிக் முடிஞ்சுது-னு எந்திரிச்சு போயிட்டார் நித்தியவாசன்.
சுபத்ராவுக்கு எப்படியாவது சின்ன மகளுக்கு பேசி புரியவைக்கணும்-னு வேகம் குறையவே இல்லை. தன்னால அதை தனியா செய்ய முடியாது-னு கற்பகவல்லி, பரத், ஆனந்தியா உதவியை எடுத்துக்கிட்டாங்க. ஏன்னா, வெளியே சொல்லலேன்னாலும் நித்தியானந்தத்துக்கும் மகனோட முடிவு தான். ரெண்டு பேத்திகளும் அவர் கண்கள் ஆச்சே. பாட்டிம்மா கூட எப்படி எப்படியோ பேசிப் பார்த்தாங்க. கடைசியா, “இங்கே பாரு வல்லி, ரியா கடைசி வரை கல்யாணமே பண்ணாம இருக்கப் போறது விதின்னா, அதை நீயோ நானோ தடுக்க முடியாது”-னு அழுத்தமா சொல்லி முடிச்சுட்டார் நித்தியானந்தம்.
கற்பகவல்லிக்கு கோபம் வந்துடுச்சு. “வாசுப்பா, நல்லா வாழ்ந்த வயசான மனுஷன் பேசற பேச்சா இது?”-னு கேட்டாங்க. “வேறே என்ன.. நீயும் உன் மகளும் தான் அப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டு கால்லே சலங்கையை கட்டிட்டு ஆடறீங்க… சின்ன பொண்ணு. ஏதோ கோபம்… வேதனையிலே பேசுது.. கேட்கிற மன மாற்றத்துக்கான நேரத்தைக் குடுத்தா அவளா இறங்கி வருவா. வல்லி! முடிச்சை அவுக்க கயிறை உருக்கிக்கிட்டுப் போகணும்… விலகி இழுத்தா முடிச்சு இன்னும் இறுகிக்கும். அப்புறம் உங்க இஷ்டம்”-னு விட்டுட்டார். அப்பா, தாத்தா சொன்னதே உண்மை போல மதுரியாவை யாரும் நெருங்கவே முடியலே. கோபம் குறையவே இல்லை. தன்னை சுத்தி ஒரு சுவரை எழுப்பி, யாருமே உள்ளே நுழைய முடியாதபடி இருந்தா. அதுக்கு ஏத்த மாதிரி ஃபைனல் எக்சாமும் வரவும் ஒரு வாரம் எதுவுமே பேச முடியலே. அப்புறம் ஒரு வார முடிவுலே ஒரு சனிக்கிழமை மத்தியானம் சாப்பாடு முடிஞ்சதும் கையிலே ஒரு ஃபார்மோட வந்தா மதுரியா. அது என்னன்னு சொல்லாமலே தெரிஞ்சுது. திரும்ப பேச முயற்சிப் பண்ணாங்க எல்லாரும்.
“அப்பா! ஃபார்ம்லே கையெழுத்துப் போடுங்க… இதை அனுப்பினா இண்டர்வியூ லெட்டர் வரும்… அப்புறம் அட்மிஷன் ஃபார்மாலிடீஸ் எல்லாம் வரும்”-னு சொன்னா மதுரியா. “குடும்மா! கார்டியாலஜி போட்டிருக்கியாடா?எம்.எஸ் படிக்கப் போறே-னு சொன்னியே?”-னு ஃபார்மை பார்த்துட்டே கேட்டார் நித்தியவாசன். “ம்ம்ம்… எனக்கு ரெண்டுமே பிடிக்கும்பா”-னு ஸ்மைல் பண்ணா. “ரியா, நான் கொஞ்சம் பேசலாமா?”-னு ஸ்டார்ட் பண்ணா ஆனந்தியா. ‘என்ன?’-னு கேட்கற மாதிரி பார்த்தா மதுரியா. “ரியா, அம்மா அன்னிக்கு திடீர்-னு யோசிக்காம பேசிட்டாங்க. ஆனா அது தப்பில்லையே ரியா? ஒரு விதுரனுக்காக நீ ஏன் தனியா இருக்கணும்-னு யோசிக்கறே?ஏன் பயந்து ஓடறே ரியா? அவனுக்காக எங்களை… முக்கியமா நீ உயிரையே வைச்சிருக்கற நிகேஷை, பாட்டியை விட்டு போறேன்-னு சொல்றியே?”னு வருத்தமா சொன்னா. அதிகாரமா பேசியிருந்தா கோபத்தை இழுத்துப் பிடிச்சிருப்பாளா இருக்கும். ஆனா இந்த குரலுக்கு கோபம் வரலே. “அக்கா… நானும் கல்யாணம் பண்ணிக்கணும்-னு உங்களை கேட்க வைக்கறது உங்க கணவன்மார்கள்… அவங்க குடுக்கற அன்பும் தைரியமும்… கரெக்டா?”னு கேட்டா மதுரியா.
ஆனந்தியா எதுவும் பேசாமல் இருக்கவும், “ஆனா எனக்குத் துணையா வர வேண்டிய மனுஷன் எனக்கு குடுத்தது காயமும் வலியும், வேதனையும். அதான், என்னை கொஞ்ச நாளைக்கு தனியா இருக்க சொல்லுதுக்கா. அதோட அவர் நினைப்பும் எண்ணமும் என் மண்டையிலே இருந்து போகாம என் லைஃபை நான் வேறொருத்தருக்கு கமிட் பண்றதுக்குப் பேரு துரோகம். ஸோ, தற்காலிகமா எனக்கு இந்த தனிமை வேணும். என்ன கேட்டேக்கா? நான் ஓடறேன்னா? நான்… விதுரனை உண்மையா நேசிச்சேன்… அவரை என் கண்முன்னாடி இன்னொருத்தி கூட தினப்படிக்குப் பார்க்க… நான் சன்னியாசி இல்லே. என் வலி உங்களுக்கு புரியலே. புரியவும் வேண்டாம். ஆனா இப்படி மாறி மாறி கார்னர் பண்ணா, நான் என்ன பண்ணட்டும்க்கா? ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட்… ஐ வாண்ட் டு பி அலோன் ஃபர் சம்டைம்.. மனசு இப்போ எதையும் ஏத்துக்கற நிலைமையிலே இல்லே”னு வருத்தமும், கலக்கமும், கண்ணுலே தண்ணியுமா சொன்னா. நித்தியவாசன் ஆதரவா தலையை தடவி குடுத்தார்.
“ஏண்டாம்மா, இதுதான் உன் முடிவா?”ன்னு கேட்டாங்க கற்பகவல்லி. “தெரியலே பாட்டி.. இப்போதைக்கு இங்கே இருந்து போய், என்னை யார்-னு தெரியாத இடத்துலே இருக்கணும்-னு தோணுது. அதே சமயத்துலே உங்க எல்லாரையும் விட்டு ரொம்ப தூரமும் போக முடியாது என்னால”-னு குழப்பமா சொன்னா. அவளுக்கு ஒரு மாற்றம் தேவை-னு எல்லாருக்குமே புரிஞ்சுது. “விடு ரியா, அதையே போட்டு ஒளப்பாதே. போனதுப் போகட்டும்… நமக்கு நிறைய வேலை இருக்கு. காலேஜ் பார்க்கணும்… ஹாஸ்டல் ஓகேவா.. இல்லே வெளியே வீடு பார்க்கணுமா-னு யோசிக்கணும்”-னு மகளுக்கு மறைமுகமா சம்மதம் சொன்னாங்க சுபத்ரா. ஒரு சிரிப்போட சுபத்ராவோட இடையை அணைச்சா மதுரியா. “ஆனா ஒண்ணு. வெள்ளிக்கிழமை சாயந்திரம் இங்கே இருக்கணும்”னு காதைத் திருகி மிரட்டினாங்க கற்பகவல்லி. “அவ வராம இருந்தா விட்டுடுவோமா? போயி கையை காலை கட்டி தூக்கி வந்துடமாட்டோமா? ஏன் தியா?”-னு பரத் கேட்கவும், “ம்ம்ம்”-னு தியா சொல்லவும், கூடவே ஒரு வயசாகப் போகிற நிகேஷும் அம்மா மாதிரியே “ம்ம்ம்”-னு தலையை ஆட்டவும் மனசு விட்டு எல்லாரும் சிரிச்சாங்க. அதுக்கப்புறம் அக்கா பையனும் சித்தியும் வேறே உலகத்துலே இருந்தாங்க.
ஹால்லே மதுரியாவும் நிகேஷும் விளையாடும் போது, “சுபி, நீ மனசாரத்தான் ஒத்துக்கிட்டியா?”-னு கேட்டார் நித்தியவாசன். “தியாப்பா எந்த அம்மா, பொண்ணு இப்படித் தனிமையில் இருக்கறதை மனசார ஒத்துப்பா? ஆனா ரியாவோட அமைதியும் நிம்மதியும் எனக்கு முக்கியம். போகட்டும். நம்பிக்கை இருக்கு தியாப்பா. அவ மனசு மாறும்”-னு சொன்னாங்க சுபத்ரா. நித்தியவாசன் மனைவியோட தோளைத் தட்டிக் குடுத்தார். அதுக்கப்புறம் நாளும் வேகமா போச்சு. வேலைகளும் மளமள-னு நடந்துச்சு. மதுரியா முடிவு பண்ணா போலவே செங்கல்பட்டு மெடிகல் காலேஜ்லே அப்ளிகேஷன் போட்டா… கவுன்சலிங்… இண்டர்வியூ எல்லாம் முடிஞ்சு அட்மிஷன் கன்ஃபர்ம் ஆச்சு. அவளோட எம்.பி.பி.எஸ்-சும் முடிஞ்சுது. இறுதிப் பரிட்சை, வைவா-னு நாளும் ரெக்கை கட்டிட்டு பறந்துச்சு. ஒரு வழியா எல்லாம் முடிஞ்சு சுபத்ரா, பரத், ஆனந்தியா அவ கூட அட்மிஷனுக்கு போயிட்டு வந்தாங்க. காலேஜ் ஊருக்கு வெளியே இருந்ததால, லைப்ரரி எல்லாம் யூஸ் பண்ண வேண்டி இருந்ததால ஹாஸ்டல் தான் வசதி-னு ஒரு மனதா முடிவு பண்ணாங்க. சாப்பாடு கொஞ்சம் அப்படி இப்படி இருக்குமோ-னு சுபத்ராவுக்கு கவலைதான். ஆனா சமாளிச்சுக்கிறேன்-னு சொன்னா மதுரியா.
எல்லாம் முடிஞ்சு ஈவினிங் நாலு பேரும் வீட்டுக்கு வர்றப்போ ஏழரைக்கு மேலே ஆயிடுச்சு. வர்றப்போவே மதுரியாவுக்கு அசதியா இருந்துச்சு. ரெண்டு வார்த்தை பேசிட்டு, சாப்பாடு வேண்டாம்-னு சொல்லிட்டு தூங்க போயிட்டா. அவளுக்கு மனசுலே உற்சாகமே இல்லே. எல்லா வேலையும் செய்யற வரைக்கும் வேற நினைப்புக்கு வழி இல்லாம இருந்துச்சு. இப்போ எல்லாம் முடிவு பண்ணியாச்சு. ஆனா ஒரு மாசம் லீவு-னு நினைச்சப்போவே மலைப்பா எதுலேயும் இண்டரஸ்ட் இல்லாம போச்சு. இந்த ஒரு மாசம் ஒரு சோதனைக் காலம்-னு தான் நினைச்சா. அவ மன சோர்வுதான் உடல் சோர்வுக்கும் காரணம்-னு வீட்டுலே உள்ளவங்களுக்கும் புரிஞ்சுது. பெரியவங்களுக்கு விதுரன் மேலே கோபமா-னு தெரியாது. ஆனா பரத்துக்கு ஒவ்வொரு நாளும் வாடிப் போகிற மதுரியாவைப் பார்த்து கோபம் ஏறிப் போச்சு. அதுவும் அஃபிஷியலா வெளியே போய் வரப்போ விதுரன் – சுவாதி ரெண்டு பேரையும் ஜோடியா பார்க்கறப்போ அன்னிக்கு பூரா கொந்தளிப்பா இருக்கும். அவங்க ரெண்டுப் பேரும் ஊருக்கு மறைச்சு பழகலேங்கறது இன்னொரு காரணம். “சுபி, ஹாஸ்டல் எல்லாம் பார்த்தீங்களா?”-னு கேட்டார் நித்தியவாசன். “பார்த்தோம் தியாப்பா… நல்லாத்தான் இருக்கு..”ன்னு இழுத்தாங்க சுபத்ரா. “சுபா, நல்லா இருக்கு வேறே… நல்லாத்தான் இருக்குங்கறது வேறே, தெரியுமா?”-னு நித்தியானந்தம் சொல்லவும், சுபத்ராவையும் சேர்த்து எல்லாரும் சிரிச்சாங்க.
“எல்லாம் நல்லா இருக்கு தாத்தா.. பி.ஜி.-ங்கறதால தனி ரூம் தான் குடுக்கறாங்க… அத்தைக்குத்தான் சாப்பாடு எப்படி இருக்குமோ. ரியா அட்ஜஸ்ட் பண்ணிப்பாளான்னு கவலை”-னு சிரிச்சுட்டே சொன்னான் பரத். “ஆமாம்மா! நீங்க சொல்லுங்க. உருளைக்கிழங்கு முறுகலா வேணும்… சாப்பாடு விறை விறையா வேணும், குழம்பு காரமா வேணும்-னு நூறு பணிக்கை. அவ போயி அங்கே சாப்பிடுவாளா? ஏதோ கோபத்துலேயும் வேகத்துலேயும் போறேங்கறா”-னு மாமியார் கிட்ட சொன்னாங்க சுபத்ரா. “அம்மா! திரும்பத் திரும்ப பழசை ஆரம்பிக்காதீங்க. அவளே தன்னை சமாளிச்சு வெளியே வர டிரை பண்றா. நீங்க வேறே டென்ஷன் பண்ணாதீங்க. அவ போகட்டும். எதுன்னாலும் நாம பார்த்துக்கலாம்”-னு அம்மாவை சமாதானம் பண்ணா ஆனந்தியா.
பரத் முகத்துலே பெருமிதமா ஒரு சிரிப்பு. “பரத், இடமெல்லாம் சேஃப் தானே? ஒரு வேளை அவளுக்கு இங்கே இருந்து போக வேண்டி இருந்துச்சுன்னா எவ்வளோ நேரம் ஆகும். போக முடியும் தானே?”-னு கேட்டார் நித்தியானந்தம். “முடியும் தாத்தா. கார் இல்லே டிரெயின் ரெண்டும் ஒண்ணே முக்கால் மணி நேரம் தான். மொத்தமா பார்த்தா டூ ஹவர்ஸ்லே காலேஜ்லே இருப்பா… ஹாஸ்டலும் சேஃப் தான்”னு சொன்னான் பரத். “ஹப்பா.. பரவாயில்லே… வெள்ளிக்கிழமை வந்தா திங்கள் கிழமை போனா போதும்”-னு சந்தோஷப்பட்டாங்க கற்பகவல்லி. ஆனா பாவம்… அவங்களுக்கு தெரியலே மதுரியா கொஞ்ச நாளைக்கு அவ மனசு சமன் படறவரைக்கும் இந்த பக்கமே வர்றதில்லேன்னு முடிவு பண்ணியிருக்கா-னு. நித்தியவாசனும் சிரிச்சு, “அது சரி… எல்லாம் முடிஞ்சுதா பரத்? ஃபீஸ் பே பண்ணி ரூம் எல்லாம் பார்த்தாச்சா?”-னு கேட்டார் நித்தியவாசன். “ஃபீஸ் வேலையெல்லாம் முடிஞ்சுது மாமா. இந்தாங்க ரசீது. ஹாஸ்டல் காலேஜ் திறக்கறதுக்கு முந்தின நாள் தான் பார்க்க முடியும். சாமான் செட்டோட போய் ரூமை பார்த்து அப்படியே அரேஞ்ஜ் பண்ணிட வேண்டியதுதாந்”னு சொன்னான் பரத்.
“ம்ம்ம்… சரி… சுபி, அம்மா இப்போ தான் ஞாபகப்படுத்தினாங்க. பர்த்டே விஷயம்… நாளைக்கு ரியாகிட்ட பேசிடணும்”-னு சொன்னார் நித்தியவாசன். “தியாப்பா, அவ கிட்ட பேச என்ன இருக்கு?”-னு கேட்டாங்க சுபத்ரா. “மாமா, நா ஒண்ணு சொல்றேன்… இப்போ பெரிசா பண்ண என்ன தேவையிருக்கு. அதுவும் ரியா இப்படி இருக்கும் போது. ஏதோ வீட்டு வரைக்கும் பண்ணலாமே?”-னு கேட்டான் பரத். “அதெப்படி, ஒரு நல்லது-னு நினைக்கலாமில்லே?”-னு கேட்டாங்க சுபத்ரா. “பரத்! வீட்டோட ஃபங்க்ஷன் குறையா விட முடியாது. விடவும் கூடாது. உங்கம்மா பிறந்த நாளன்னிக்கே வருது… அவளோட திருப்தி இது. அதோட வீட்டு மட்டுக்கு பண்ணா நீ நினைக்கற மாதிரி பிரச்சினை தீராது”-னு சொன்னார் நித்தியானந்தம்.
யோசிச்சா அவர் சொன்னது சரின்னு தான் பட்டுது. “ரியாகிட்ட நான் பேசறேன்… அவளும் புரிஞ்சுப்பா… அவளுக்கு ஏதோ க்ளாஸ் பார்த்திருக்கே-னு சொன்னியே தியா?”-னு கேட்டார் நித்தியவாசன். “என்ன க்ளாஸ் தியா?எதுக்கு?”-னு கேட்டாங்க சுபத்ரா. “நான் தான் அத்தைப் பார்க்கச் சொன்னேன். ஒரு மாசம் லீவு அவளுக்கு. அதுதான் அவளுக்கு நல்லா தெரிஞ்ச பெயிண்டிங்லே அட்வான்ஸ் லெவல்லே சேர்க்கலாம்-னு பார்க்கச் சொன்னேன். இங்கே டிரிப்ளிகேன்லே தான். தியாவோட ஃப்ரெண்ட் தான் எடுக்கறா”-னு சொன்னான். “எதுக்குப்பா அதெல்லாம்? நம்மளே ரொம்ப பண்ணா அவ இன்னும் மேலே ஏறிப்பா.. இதெல்லாம் சாதாரணமா நடக்கறது தானே.. பொண்ணு பார்த்துட்டு போய் சரி வராது-னு சொல்றதில்லே? அதுப் போல தானே? ரியாவே சென்சிடிவா இருக்கா-னு தோணுது”-னு சொன்னாங்க சுபத்ரா. இந்த சமூகத்தை சேர்ந்த ஒரு சராசரி அம்மாவோட மனநிலை. ரொம்ப முக்கியத்துவம் குடுக்காம இருந்தாலே எல்லாம் மறந்துடும்-னு நினைச்சாங்க. “அப்படி இருந்திருந்தாத்தான் இவ்வளோ வருத்தம் ரியாவுக்கு இருந்திருக்காதே. ஒரு நிமிஷம்..”-னு உள்ளே போய் ஒரு வெள்ளை பேப்பரோட வந்தான் பரத். “இது மூணு நாளைக்கு முன்னாடி அவ ரூம்லே அவ கிறுக்கின பென்சில் வரைப்படம். இது வெறும் டைம்பாஸ் கிறுக்கல் தான்”-னு விரிச்சுக் காட்டவும் ஆனந்தியாவை தவிர மத்த நாலு பேரும் அதிர்ந்தாங்க.