அதே சமயம் , அங்கே வந்து சேர்ந்தார்கள் அர்ஜீன், கஜன், ராம் மற்றும் வந்தனா…
அர்ஜுனோ, “டேய் மச்சி” என்று சொல்லிக் கொண்டே ஜீவிதனை அணைத்து விடுவிக்க, நேத்ராவோ, ராமின் கையில் இருந்த அவன் மகளைப் பார்த்து, “செம்ம கியூட் ஆஹ் இருக்கா” என்று சொல்லி அவள் கன்னத்தை வருடினாள்.
உடனே கஜனின் கையில் இருந்த விஷ்ணுவோ எட்டி நேத்ராவின் கையை தட்டி விட, “அட, அவளை நான் தோட்டா உனகென்னடா?” என்று நேத்ரா அவனை அதட்ட, “மாமா” என்று சொல்லிக் கொண்டே கஜனை அவன் அணைத்துக் கொண்டான்.
கஜனும் சிரித்தபடி, “எப்படி இருக்க நேத்ரா? ஹெல்த் ஓகே யா?” என்று கேட்க, “ஓகே மாமா, நீங்க எப்படி இருக்கீங்க?” என்று புன்னகையுடன் கேட்டவளோ அருகே அவன் அருகே நின்ற பல்லவியை பார்த்து விட்டு, “ட்வின்ஸ் ட்வின்ஸ் ஆஹ் ரேஸ் ல முன்னாடி நிக்கிறீங்க போல” என்றாள்.
பல்லவியும் கஜனும் அதனைக் கேட்டு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடியே, “கடவுள் கொடுக்கிறார்” என்று ஒருமித்து சொன்னார்கள்…
உடனே அர்ஜுன், “மச்சான்” என்று ஆரம்பிக்க, “டேய் நீ என்ன சொல்ல வர்றன்னு தெரியும்… கொஞ்சம் சும்மா இருடா” என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டான் கஜன்…
ஜீவிதனோ, “எங்க நம்ம சிங்கப்பூர் மாப்பிள்ளை?” என்று கேட்க, ராம்குமாரோ, “அவன் ரூமுக்குள்ள இருக்கிறான்… ஏனோ தானோன்னு இருக்கிறான்… பெருசா கல்யாணத்துல இன்டரெஸ்ட் காட்டுற போல தெரியல” என்று சலித்துக் கொண்டான்.
இதனைக் கேட்ட அர்ஜுனோ, “தாலி எப்படி கட்டுறதுன்னு சைலென்ட் ஆஹ் இருந்து ப்ராக்டிஸ் பண்ணுறான் போல” என்று சொல்லி சிரித்துக் கொண்டான்.
பல்லவியோ கஜனிடம், “நான் தான் அவன் கிட்ட தனிஷாவோட நம்பர் கொடுத்து விட்டேன். பேசி இருப்பான் தானே” என்று கேட்க, “தெரியல பல்லவி, மந்திரிச்சு விட்ட போல திரியுறான். எத்தனையோ தடவை கல்யாணத்தை பத்தி கேட்டுட்டேன், கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்றான், அவன் பேசுனானா? இல்லையான்னு தெரியாம தான் அம்மா கிட்ட ஃபோட்டோ கொடுக்க சொல்லி சொன்னேன். பார்த்தானா இல்லையான்னு கூட தெரியல” என்றான் பெருமூச்சுடன்.
ராமோ, “நானும் அன்னைக்கு பொண்ணு பத்தி பேச ஆரம்பிச்சேன், எந்திரிச்சு ஃபேக்டரிக்கு போறேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டான்” என்று சொன்னான்.
ராகவியோ, “பொண்ண பார்க்காம தாலி கட்டுவேன்னு சபதம் ஏதும் எடுத்து இருக்கானோ” என்று சிரித்தபடி கேட்டுக் கொள்ள, “உன் தம்பி எடுத்தாலும் எடுப்பான், அவன் என்ன டிசைன்னு இப்போ வரைக்குமே புரியல” என்று சொன்னான் அர்ஜுன்…
“ரெண்டு நாள் முன்னாடி தான் தனிஷா வந்து இறங்கி இருக்கா, அத்தை மாமாவோட போய் பார்த்துட்டு வர சொன்னா, கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்றான்” என்றாள் சுகனா.
அர்ஜுனோ, “வெட்கப்படுறானோ?” என்று கேட்க, ராம்குமாரோ, “அவனுக்கு வெட்கமா? அவன் ஊரை வெண்டவன் ஆச்சே… பெரியப்பாவையே வச்சு செய்யுற ஒரே ஆள் அவன் தான்…”
கஜனோ, “அதென்னவோ உண்மை தான்… அப்பாவையே கலாய்ச்சிட்டு இருப்பான்” என்று சொல்லி சிரித்தான்.
பேசிக் கொண்டே ராகவி அருகே நின்று இருந்த அர்ஜுனோ அவள் தோளில் கையை போட்டான்.
அப்போது அவன் கையை யாரோ சுரண்டியது போல இருந்தது…
குனிந்து பார்த்தான்…
அங்கே ஆரண்யன் தான் அவனை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே நின்று இருந்தான்…
“என்னடா?” என்று அர்ஜுன் கேட்க, “அம்மா மேல இருந்து கையை எடுங்க” என்றான் அவன்…
“அவ உனக்கு அம்மா ஆக முதல் எனக்கு பொண்டாட்டி டா, என் பொண்டாட்டி மேல நான் கையை போடுவேன்” என்றான் அவன்…
கஜனோ, “நீ ஏன் டா அவன் கூட சண்டைக்கு போற?” என்று அர்ஜூனிடம் கேட்க, “உங்களுக்கு தெரியாது மச்சான், அவ பக்கத்துல இருக்கவே விட மாட்டான்…” என்று அர்ஜுன் சொல், ஆரண்யனோ, ராகவிக்கும் அர்ஜுனும் நடுவே வந்து நின்று கொண்டான்.
ராகவியோ கஜனிடம், “நான் பேசாம வீட்டுக்கே வந்திடுறேன் அண்ணா, என்னை வச்சு செய்யுறாங்க ரெண்டு பேரும்” என்று சிணுங்கிக் கொண்டே, கஜனை நெருங்கி நிற்க, ஆரண்யன் கஜனை ஏறிட்டுப் பார்த்தான் தவிர அவன் அருகே செல்லவில்லை…
“என்னடா?” என்று கஜன் கேட்க, “ஒன்னுமில்லையே” என்றான் அவன்…
சற்று குனிந்து, அவன் கன்னத்தை தட்டிய கஜன், “விஷ்ணுவை வச்சுக்கோ, அவனுக்கு உன் கூட விளையாடணுமாம்” என்று சொல்லி, தனது கையில் இருந்த குழந்தையை கொடுக்க, “வாடா குட்டிப் பையா” என்று சொல்லிக் கொண்டே ஆரண்யன் விஷ்ணுவை தூக்கி சென்றான்.
“அண்ணா, கொஞ்ச நேரத்துல அவன அழகா ஹாண்டில் பண்ணுறீங்க” என்று ராகவி சிரித்துக் கொண்டே சொன்னாள். “ரொம்ப துடினமா இருந்தா பொறுப்பை கொடு, கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவான்” என்று கஜன் சொன்னான்.
ஆரண்யன் சென்று கொஞ்ச நேரம் கூட ஆகவில்லை, “அப்பா” என்று சொல்லிக் கொண்டே அர்ஜுனின் வேஷ்டியை பிடித்து ஆட்டினாள் அகல்யா…
“நீ வாடி என் செல்லக்குட்டி” என்று சொல்லிக் கொண்டே, அவன் அகல்யாவை தூக்கிக் கொள்ள, “கேக் வேணுமா?” என்று விழிகளை ஆட்டி கேட்டபடி கையில் இருந்த கேக்கை அர்ஜுனின் வாய்க்குள் வைக்க, அவனும் அதனை கடித்து சாப்பிட, “குழந்தையோட கேக்கை புடுங்கி சாப்பிடுறீங்க அர்ஜுன்” என்று ராகவி திட்டினாள்.
“நான் எங்கடி பிடுங்குனேன், அவ தானே டி தர்றா, சாப்பிடலன்னா ஃபீல் பண்ணுவா” என்று சொல்லிக் கொண்டே, அகல்யாவிடம் நெற்றி முட்ட, “அப்பாக்கு மட்டும் தான் கொடுப்பியா? எங்களுக்கு இல்லையா?” என்று சுகானா கேட்க, “இல்ல அப்பாக்கு மட்டும் தான்” என்றாள் அவள் மழலை குரலில்…
கஜனும் அவள் கன்னத்தை எட்டி கிள்ளியவள், “செம்ம கியூட் என் மருமக” என்றான் வாஞ்சையுடன்…
அகல்யாவோ அர்ஜுனை அணைத்து கன்னத்தில் கன்னம் வைத்து உரசியவள், “குத்துது” என்றாள்.
“அப்போ நாளைக்கு க்ளீன் ஷேவ் எடுத்துடட்டுமா?” என்று கேட்க, “இல்ல வேணாம்” என்றாள் ராகவி…
கஜனோ, “அவன் ஆரண்யன் கூட சண்டைக்கு போனா, நீ என்னம்மா அகல்யா கூட சண்டைக்கு போற?” என்று கேட்க, “அது அப்படி தான், அவ வந்தா என் நினைப்பே இருக்காது அர்ஜுனுக்கு” என்று ராகவி சொல்ல, பல்லவியோ, “ரெண்டு பேரும் நல்லா சேர்ந்து இருக்காங்க ஜோடி” என்று சிரித்தபடி சொல்லிக் கொண்டாள்.
அர்ஜுனோ ராகவியை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்து, “பொறாமை பிடிச்சவ” என்று சொல்ல, அவளும் இதழ்களை சுளித்துக் கொண்டாள்.
அதனை தொடர்ந்து, அகல்யாவும் இறங்கி பார்த்தீபனிடம் ஓடி விட்டாள்.
இதே சமயம், அந்த வழியால் வந்தான் தனிஷாவின் தம்பி தனேஷ்வர்…
தனிஷா மற்றும் தனேஷ்வர் வேறு யாருமல்ல, புகழ்பெற்ற பிசினெஸ் மேன் ஆன வீரராகவன் மற்றும் அக்ஷயாவின் வாரிசுகள் தான்.
தனேஷ்வர் சிங்கப்பூரில் படித்து முடித்து விட்டு இப்போது தான் வீரராகவனின் தொழிலை எடுத்து நடத்த ஆரம்பித்து இருக்கின்றான்.
“டேய் தனா, இங்க வா” என்று அர்ஜுன் அழைக்க, அவனும், “அர்ஜுன் அண்ணா” என்று சொல்லிக் கொண்டே, அங்கே செல்ல, “இது யாருன்னு தெரியுதா?” என்று கேட்டான் அர்ஜுன் ஜீவிதனிடம்…
“தனான்னா, தனிஷாவோட தம்பி தானே, அதுக்குள்ள ஃப்ரென்ட் ஆயிட்டியா?” என்று ஜீவிதன் கேட்க, அர்ஜுனோ, “நான் கூட ரொம்ப எலைட் ஆஹ் இருக்கிறானே, பேசுவனா? இல்லையான்னு யோசிச்சேன். சட்டுன்னு ஒட்டிக்கிட்டான்” என்றான். அவனை ஆராய்ச்சியாக பார்த்தான் ஜீவிதன்.
வீரராகவன் போல ஆறடி உயரம் இருப்பான்…
கட்டுமஸ்தான தோற்றம்…
தலைக்கு பிரவுன் டை அடித்து இருந்தான்…
ஒற்றைக் காதில் கடுக்கண்.
ஆங்காங்கே அவன் வேஷ்டி சட்டையை மீறி டாட்டுக்கள் தெரிந்தன…
“டேய் காதெல்லாம் குத்தி இருக்கியா?” என்று ஜீவிதன் கேட்க, அவனும், “ம்ம்” என்றான்.
இலகுவாக அவனுடன் ஒன்றி விட்டார்கள்…
அவனும் ஒன்றி விட்டான்.
“உன் லெவெலுக்கு அது டயமென்ட் தான் கரெக்ட் ஆஹ்?” என்று ராம்குமார் கேட்க, அவனோ சற்று தயக்கத்துடன், “ம்ம்ம்” என்றான்.
“அட டாட்டூ வேறையா?” என்று ஜீவிதன் கேட்க, கஜனோ, “டேய் பாவம் டா, அவனை விடுங்கடா, ராகிங் பண்ணிட்டு இருக்கீங்க” என்று சிரித்தபடி அதட்டினான்…
அர்ஜுனோ, “மச்சான், அவனை சும்மா எடை போட்ராதீங்க, பார்க்க தான் பம்முறான், பொண்ணு வீடு என்கிறதால அடக்கி வாசிக்கிறான் போல” என்று சொல்ல, “அர்ஜுன் அண்ணா, அப்படி எல்லாம் இல்ல” என்று சிரித்தபடி சொன்னான் தனேஷ்வர்.
“உன்னை பார்த்தா, அவ்ளோ நல்லவனா தெரியலைடா” என்று அர்ஜுன் அவன் தோளில் கையை போட்டுக் கொண்டே சொல்ல. “அர்ஜுன், சும்மா இரு பார்ப்போம்” என்று அவன் தோளில் அடி போட்டாள் பல்லவி.
“நான் அவன் கூட ஜாலியா பேசிட்டு இருக்கிறேன், சும்மா இரு பல்லவி” என்று சொல்லிக் கொண்டே, தனேஷ்வரைப் பார்த்தவன். “நீ சீரியஸ் ஆஹ எடுக்கிறியா என்ன?” என்று கேட்க, அவனோ இதழ் பிரித்து சிரித்துக் கொண்டே, “இல்ல, இல்ல, உங்க எல்லாரையும் எனக்கு பிடிச்சு இருக்கு” என்றான்.
“அக்காவுக்கு கல்யாணத்தை வச்சுட்டு, இரண்டு நாள் முன்னாடி வந்து சார் இறங்கி இருக்கார்” என்றான் ராம்குமார் கிண்டலாக.
“கல்யாண பொண்ணே என் கூட தான் வந்து இறங்கினா” என்று சொல்லி சிரித்தவனோ மேலும், “இப்ப தான் ஆஃபீஸ அப்பா கைல கொடுத்து இருக்கார் மச்சான்… சரியா கொண்டு நடத்தலன்னா பிடுங்கி எடுத்துடுவேன்னு சொல்லி இருக்கார், அதனால ரெண்டு நாளுல கிளம்பிடுவேன்…” என்று தனேஷ்வர் சொல்ல, அர்ஜுனோ, “ரொம்ப சின்சியர் டா நீ, சூப்பர், இப்படி தான் இருக்கனும்… சரி உன்னை எல்லோருக்கும் இன்ட்ரோ கொடுக்கிறேன் வா” என்று சொல்லி அவனை எல்லோருக்கும் அறிமுகப்படுத்துவற்காக அழைத்து சென்று இருந்தான்…
கஜனோ, “செம்ம ஹாண்ட்சம் ஆஹ் இருக்கான் ல, டாக்டர் எப்போவும் சொல்லுவார் என்னை போல ஒரு பேரன் இருக்கான் அப்படின்னு…” என்று சொல்ல, ஜீவிதனோ, “அவன் அப்பாவும் செம்ம ஹாண்ட்சம் தானே… அவரை போலவே இருக்கான்…” என்று சொல்லிக் கொண்டான்.
பல்லவியோ, “அங்கே பாருங்க, மாமாவும் தனிஷவோட அப்பாவும் பேசிக்கிறாங்க, ரெண்டு பேருக்கும் வயசே ஆகல” என்று சொல்ல, சுகானவோ, “அவங்க மார்கண்டேய வம்சம், அவங்களுக்கு என்றும் பதினாறு தான்” என்று சொல்லிக் கொண்டாள்.
இதே சமயம், வீரராகவனும் சக்திவேலும் பேசிக் கொண்டே இருந்தார்கள்…
“ரொம்ப சந்தோஷம் சம்பந்தி, ஊர் பிடிச்சு இருக்கா?” என்று சக்திவேல் கேட்க, “ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு, அதுவும் உங்க குடும்பத்தை ரொம்ப பிடிச்சு இருக்கு, இப்படி ஒரு பெரிய குடும்பத்தில என் பொண்ண கட்டி கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன்… நான் தனிப் பையன்… ஆனா என் பொண்ணு நிறைய சொந்தங்களோட வாழணும்னு ஆசை, அது தான் அப்பா சொன்னதுமே சரின்னு சொல்லிட்டேன்” என்று சொல்ல, “உங்க பொண்ண என் பொண்ணு மாதிரி பார்த்துக்கிறேன், அவளை எங்க ஃபக்டரிக்கு நவா கூட அனுப்பி வைக்கிறேன்… வீட்ல இருந்து என்ன பண்ண போறா? வெளிய போய் நிறைய கத்துக்கட்டும்” என்று சொல்ல, “இது போதும் எனக்கு” என்று சொல்லிக் கொண்டார் வீரராகவன்…
இதே சமயம், கஜனோ, “டாக்டர் கூட பேசிட்டு வந்திடுறேன், வந்ததுல இருந்து பேசவே இல்லை” என்று சொல்லிக் கொண்டே, அங்கே அமர்ந்து இருந்த தனிஷாவின் தாத்தாவான வைத்தியர் தனபாலனை தேடி சென்றான்.
ஆம், இந்த சம்பந்தம் உருவானது கஜனினால் தான்…
தனிஷாவின் தாத்தா தனபாலன் புகழ்பெற்ற மகப்பேற்று நிபுணர் ஆயிற்றே…
அவரின் கீழ் ஆரம்பத்தில் வேலை செய்தவன் தான் கஜன்…
ஒரு கட்டத்தில் தனபாலன் சிங்கபூருக்கு மகனுடன் கிளம்பி இருந்தாலும், அடிக்கடி ஊருக்கு வந்து செல்வார்… ஊருக்கு வரும் போதெல்லாம் கஜனை வர சொல்லி, பேசி விடுவார்…
அப்படி பேசும் போது தான் நவநீதனின் பேச்சு அவர்களிடத்தில் வந்தது…
நவநீதனோ படித்து முடித்து விட்டு, கடந்த இரண்டரை வருடங்களாக சக்திவேலின் பிசினஸ் அனைத்தையும் விஜய்யுடன் சேர்ந்து பார்த்துக் கொள்கின்றான்…
ஆரம்பத்தில், தனியே அனைத்தையும் கஷ்டப்பட்டு விஜய் சமாளித்துக் கொண்டு இருந்தான். அவனுக்கோ வீட்டுக்கு வரும் நேரமே குறைந்து போனது.. அப்போது தான் வந்தனா சக்திவேலிடம் இதனை பற்றி கவலைப்பட்டு சொல்லி இருந்தாள்…
இதே சமயம், எஞ்சினியரின் முடித்து விட்டு, ஒற்றைக் காலில் நின்று அவுஸ்திரேலியாவுக்கு பிசினஸ் மேனேஜ்மென்ட் படிக்க சென்று இருந்த நவநீதன் பாதியிலேயே திரும்பி வந்திருந்தான்.
ஒரு வருஷ கோர்ஸ் அது…
ஆனால் ஆறு மாதத்திலேயே, படித்து முடிக்காமல் வந்து விட்டான்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த நவநீதனை, சக்திவேல் தான், வந்தனாவின் பிரச்சனையை சொல்லி இதற்குள் புகுத்தி விட, அவனும் குட்டி சக்திவேல் ஆகி விட்டான்.
அவனைப் பற்றி கேட்டறிந்த தனபாலனோ, “கஜன், உங்க ஃபேமிலி பத்தி நிறையவே கேள்விப்பட்டு இருக்கிறேன்… என் பேத்திக்கும் இப்போ மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கிறோம், உங்களுக்கு ஓகேன்னா நான் வீரா கிட்ட பேசிப் பார்க்கவா?” என்று கேட்க, கஜனுக்கும் வீரராகவன் குடும்பம் மேல் நல்ல அபிப்ராயம் தான்…
“வீட்ல கேட்டுட்டு சொல்றேன்” என்று சொன்ன கஜனோ, சக்திவேலிடம் பேசி விட்டு சம்மதத்தை சொல்லி இருந்தான்.
இரு பக்கமும் சம்மதம் வந்து சேர்ந்தது…
நவநீதனிடம், பெண்ணின் பெயரையும் குடும்பத்தை பற்றியும் சொன்னார்கள்…
கேட்டுக் கொண்டான்…
அலைபேசி எண்ணை கொடுத்தார்கள்…
வாங்கிக் கொண்டான்…
ஆனால் ஒரு வார்த்தை கூட அவன் தனிஷாவுடன் பேசியது இல்லை.
அவனை போல தான் தனிஷாவும்.
“நீங்க பார்க்கிற மாப்பிள்ளை யாரா இருந்தாலும் ஓகே தான்… எனக்கு சில ப்ராஜெக்ட்ஸ் முடிக்கணும்… கல்யாணம் வரைக்கும், அத பத்தி பேசாதீங்க, கல்யாணத்துக்கு பிறகு எல்லாமே பார்த்துக்கிறேன்” என்றாள்.
ஆம் அவள் வேலை செய்து கொண்டு இருந்தது வீர ராகவனின் கம்பனி ப்ராஜெக்ட் ஒன்றில் தான்… திருமணத்துக்கு முதல் ப்ராஜெக்டை முடிக்க நினைத்தவளுக்கு மாப்பிள்ளையை பார்ப்பதில் பெரிதாக ஈடுபாடு கூட இல்லை.
அவள் செயலும் பேச்சும் வீரராகவனுக்கு விசித்திரமாக தோன்றினாலும், தான் சொல்வதை மகள் கேட்பாள் என்கின்ற நம்பிக்கையில், நவநீதனின் தகவல்களை சொல்லி அலைபேசி எண்ணையும் அவளிடத்தில் கொடுத்த வீரராகவன், திருமண பேச்சில் இறங்கி இருந்தான்.
இரு குடும்பங்களுக்கும் சமூகத்தில் நல்ல பெயரும் அந்தஸ்தும் இருக்க, இறுதியாக திருமண தேதியினையும் குறித்து விட்டார்கள்…
இதனிடையே திருமணத்துக்கு ஒரு வாரம் முன்னர் வீரராகவனும் அக்ஷயாவும் வந்து இறங்கி விட்டார்கள்…
இரு நாட்கள் முன்பு தான் தனேஷ்வருடன் தனிஷா வந்து இறங்கி இருந்தாள்…
அவளுக்கு அலங்கார வேலைகளில் நேரமே போய் விட்டது…
நவநீதனின் குடும்பத்தினர் தனிஷாவை பார்த்து விட்டு சென்றார்கள்…
அனைவரையும் அவளுக்கு பிடித்து விட்டது…
ஆனாலும் மனதுக்குள் இன்னுமே ஒரு நெருடல் ஒன்று இருந்து கொண்டு தான் இருந்தது.
வீரராகவனும் தனேஷ்வரும் ஃபாக்டரிக்கு சென்று நவநீதனுடன் பேசி விட்டு வந்தார்கள்…
அவனும் சாதரணமாக அவர்களுடன் பேசி இருந்தான்.
இன்று திருமண நாளும் வந்து விட்டது… ஆனால் மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் பார்த்துக் கொள்ளக் கூட இல்லை. பேசிக் கொள்ளவும் இல்லை.
நேரத்துக்கே வந்த நவநீதனோ, “தனிஷா” என்று கல்யாண பெண்ணின் பெயரை ஒரு தடவை முன்னே இருந்த பலகையில் பார்த்து உச்சரித்து விட்டு மணமகன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
தனிஷா அலங்காரம் செய்யும் பெண்ணுடன் நேரத்தைக் கடத்த, நவநீதனோ, கட்டிலில் படுத்து, அலைபேசியை பார்த்தபடி இருந்தான்.
மனம் எதிலும் லயிக்கவில்லை…
மீண்டும் மீண்டும் அவன் மனதை கொள்ளை கொண்ட பேரழகியின் எண்ணம் தான் வந்தது…
எத்தனையோ பெண்களுடன் பழகி இருக்கின்றான் அவன்…
ஆனால் அவளை மட்டும் தான் முத்தமிட்டு இருக்கின்றான்.
அதனால் என்னவோ அவளை சட்டென்று மறக்க முடியவில்லை…
அவனது இறுதி காதலி அவள் தான்… இரண்டரை வருடங்கள் முன்னர் அவளுடனான காதல் முறிந்தது…
அதன் பிறகு எந்த பெண்ணையும் பார்க்க அவனுக்கு இஷ்டம் இல்லை…
அதனால் தான் அவன் கல்யாண பெண்ணை கூட பார்க்க விரும்பவில்லை…
அவள் ஒருத்தி அவனுக்குள் ஆழாமாக ஊடுருவி பெண் இனத்தையே வெறுக்க வைத்து விட்டாளே.
அவனது லைலா தான் அவள்…
இன்னுமே அவள் எண்ணம் மனதில் சுழல, ‘அவளோட உண்மையான பேர் கூட தெரியல, சும்மா அவளையே நினைச்சிட்டு இருக்கியே நவா. அவ உனக்கு வாழ்க்கைக்கு செட் ஆகவே மாட்டா, சரியான பஜாரி’ என்று முணுமுணுத்தவனோ, சலிப்பாக நேரத்தைப் பார்த்து விட்டு மீண்டும் குப்பற படுத்துக் கொண்டான்.
இதே சமயம், தனிஷாவும் தன்னை கண்ணாடியில் பார்த்தாள்…
பிங்க் நிற சேலையில் தேவதையாக இருந்தாள்…
மனதில் இன்னுமே அழுத்தம்…
வாழ்க்கையில் யாரிடமும் காதலில் விழாத இந்த பேரழகியை மயக்கியது அவன் ஒருவன் தான்…
அவன் தான் மஜ்னு… அவளது முதலும் கடைசியுமான காதலன்.
அவளை முத்தமும் இட்டு இருந்தான்…
ஆனால் எல்லாமே நடிப்பென்று ஆகி விட்டது…
இப்போவுமே நினைக்கும் போது வலித்தது…
அவனிடம் ஏமாந்து போன ஆதங்கமும் கோபமும்…
அவள் புத்திசாலி…
அவளையே முட்டாளாக்கி இருக்கின்றான்…
யார் என்று அவனை பற்றி மொத்தமாக அறிந்து கொள்ள முதலே, முத்தமிட அனுமதி அளித்து இருக்கின்றாள்.
நினைக்க நினைக்க தன் மீதே ஆத்திரம்…
காதல் என்கின்ற ஒன்று இனி வாழ்க்கையில் இல்லை என்று முடிவெடுத்து விட்டாள்.
அதனாலேயே தந்தை சொல்லும் மணமகனை திருமணம் செய்ய நினைத்து இருந்தாள்…
அது யாராக இருந்தாலும் பரவாயில்லை என்கின்ற எண்ணம் தான்…
மணமகனை பார்த்தாலோ, பேசினாலோ அவளது மஜ்னுவுடன் ஒப்பிட்டுப் பார்க்க தோன்றும்…
அது தவறு என்று அவளுக்கும் தெரியும்…
அதனாலேயே கல்யாணத்துக்கு பிறகு பார்த்துக் கொள்ள நினைத்து விட்டாள்…
அவள் மனமோ, ‘இப்ப எதுக்கு அவன பத்தி நினைச்சுட்டு இருக்க, அவனோட உண்மையான பேர் கூட தெரியாது, இப்ப யாரு பொண்ணு கூட குஜாலா இருக்கானோ’ என்று திட்டியபடி, கண்களை மூடி ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.