அத்தியாயம் 4

அத்தியாயம் 4

அவர்கள் சந்திப்பின் ஆரம்பம் அவுஸ்ரேலியாவில் இருக்கும் யூனிவெர்சிட்டி தான்…

தனிஷா தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவள்…

தந்தையின் அதீத கட்டுப்பாடுகளுக்கு நடுவே ஸ்கூல் படிப்பினை முடித்தவள்…

சிங்கப்பூரில் பல்கலைகழக கல்வியை படிக்க சொல்லி வீரராகவன் சொன்னாலும், அவளுக்கோ வீரராகவனின் கட்டுபாட்டில் இருந்து வெளியேறி, சுயமாக கொஞ்ச நாட்கள் கழிக்க ஆசை…

“அப்பா, நான் அவுஸ்ரேலியா போறேனே ப்ளீஸ்” என்று கெஞ்சி கூத்தாடி, ஐ டி டிக்ரீ படிப்பதற்காக அங்கே கிளம்பி விட்டாள்…

வீரராகவனும் தடுக்கவில்லை…  அவள் மீது நம்பிக்கை இருந்தது… 

அனுப்பி வைத்து விட்டார்…

நான்கு வருட கல்வி அவளுக்கு…

அவளை தொடர்ந்து, அவள் தம்பி தனேஷ்வரும் செல்ல ஆசைபட்டான்…

தனேஷ்வர் விஷயத்தில் வீரராகவனுக்கு நம்பிக்கை சற்று குறைவு தான்…

‘டாட்டூ போடதே, டை அடிக்காதே, கொஞ்சம் ப்ரொஃபெஷனலா இரு’ என்ற வீரராகவன் சொல்லியும் கேட்காமல் இஷ்டத்துக்கு எல்லாமே செய்து விட்டு வருவான்… 

கைக்குள் இருந்தே சொல்வதை கேட்க மாட்டேன் என்கின்றான்… வெளியே விட்டால் தவறாகி போய் விடுவானோ என்று பயத்தில், அவனை சிங்கபூரிலேயே படிக்க வைத்தார் வீரராகவன்…

தனிஷாவுக்கோ நான்கு வருடங்கள் தனிமையான சுதந்திரமான நாட்கள் தான்…

மூன்று வருடங்களை அவள் கடந்து விட்டாள்…

நான்காவது வருடத்துக்குள்ளும் நுழைந்து விட்டாள்…

அவள் அவுஸ்ரேலியா சென்ற சம்பவம் சாதாரண கதை தான்…

ஆனால் நவநீதன் அவுஸ்ரேலியா சென்ற கதை பெரிய சரித்திரம்…

காலேஜ் முடித்து விட்டு, பெண்களுடன் கடலை போடுவது தான் நவநீதனின் முழு நேர தொழிலாக இருந்தது. 

ஒரு பெண் அல்ல, பல பெண்கள்… சில பெண்களுடன் பேசி சலித்து விட்டால் அவர்களை ப்ளாக் செய்து விடுவான்.

பேசுவதை தாண்டி எதுவும் செய்தது இல்லை… 

கஜனும் சக்திவேலும் வீட்டில் இருக்கும் போது அவனால் என்ன செய்து விட முடியும்…

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் சாப்பிடுவது தூங்குவது, ஜிம் செய்வது, பெண்களுடன் பேசுவது, குழந்தைகளுடன் விளையாடுவது  என்று நேரத்தைக் கடத்திக் கொண்டு இருப்பான்…

சக்திவேலும், “விஜய் கூட ஃபேக்டரிக்கு போடா” என்று சொல்லிப் பார்த்து விட்டார்.

“நான் கொஞ்ச நாள் ஜாலியா இருக்க போறேன், என்னை டாச்சர் பண்ணாதீங்க” என்று சொல்லி விட்டான்.

இப்படியான ஒரு நாள், அவன் சொகுசாக சோபாஃவில் படுத்துக் கொண்டே, டி வி பார்த்தபடி இருந்தான்.

அப்போது தான் கஜனின் வண்டி வீட்டினை அடைந்து இருந்தது…

வண்டியில் இருந்து இறங்கிய அவன் முகமோ கோபத்தில் சிவந்து இருக்க, ஷேர்டின் கையை மடித்து விட்டபடி வீட்டினுள் நுழைந்தவன், சோஃபாவில் காலை ஆட்டியபடி படுத்துக் கிடந்தவன் முன்னே வந்து நின்று அவனை ஆழ்ந்து பார்த்தான்…

“இப்படி நின்னா நான் டி வி பார்க்கிறது இல்லையா?” என்று நவநீதன் கேட்க, “எந்திரி” என்றான்…

அவனும், “ஏன்?” என்று கேட்டான்.

“எந்திரி டா” என்றான் கஜன் பற்களை கடித்துக் கொண்டே…

அவனும், “உங்க கூட முடியல” என்று சொல்லிக் கொண்டே, எழுந்த அடுத்த கணம், ஓங்கி ஒரு அறை…

அதிர்ந்தே விட்டான்.

கனத்தைப் பொத்திக் கொண்டே கஜனை அதிர்ந்து பார்க்க, “உனக்கு எல்லாமே விளையாட்டுல? உன் வயசுக்கு ஏத்த புத்தி இல்லையா?” என்று சற்று கடுமையாக திட்டிக் கொண்டே, அவன் ஷேர்ட்டின் காலரை இறுகப் பற்ற, நவநீதன் மிரண்டே விட்டான்…

கஜனின் இந்த அவதாரம் அவனுக்கு புதிது… 

பல்லவியோ, ஓடி வந்து கஜனின் கையை பற்றி அகற்றியவள், “என்ன பண்ணிட்டு இருக்கீங்க? வளர்ந்த பையனை அடிச்சிட்டு இருக்கீங்க” என்று கேட்க, “இவன் வளர்ந்த பையனா? என்ன பண்ணி வச்சு இருக்கான் தெரியுமா?” என்று சீற, அங்கே எல்லாருமே ஒன்று கூடி விட்டார்கள்…

சக்திவேலோ ஓடி வந்து, “என்னடா ஆச்சு?” என்று கேட்க, “எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு சாவடி அடிக்கணும் போல இருக்கு” என்றான்… துளசியும், “என்னடா பண்ணி தொலைச்ச?” என்று நவநீதனிடம் கேட்க, “நான் எதுவும் பண்ணல” என்று ஆரம்பிக்க, ஒற்றை விரலை நீட்டி, “சாவடிச்சிடுவேன் பார்த்துக்கோ” என்று சீறியவன் சக்திவேலிடம், “கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தா சார் இன்னைக்கு ஜெயிலுக்குள்ள இருந்து இருப்பார், தப்பிட்டான்” என்று சொன்னான்.

“ஜெயிலா? நான் எதுவும் பண்ணலையே” என்று நவநீதன் ஆரம்பிக்க, “வாயை திறக்காதே, ஏன் உனக்கு பொண்ணுங்க கூட பேசாம இருக்க முடியாதா?” என்று சீறினான்…

நவநீதன் திரு திருவென விழித்த படி, ‘எவ போட்டு கொடுத்தான்னு தெரியலையே’ என்று நினைக்க, சக்திவேலோ, “என்னடா பண்ணுனான்?” என்று கேட்டார்.

“விஷயத்தை கேள்விபட்டா, அவன் தலைல கர்லா கட்டையை போடுவீங்க” என்றான்…

‘அப்பாவும் பையனும் என்னை போட்டு தள்ளாம விட மாட்டாங்க போல’ என்று நினைத்த நவநீதனோ, “அப்படி என்ன பண்ணிட்டேன்?” என்று கேட்டான்.

அவனுக்கு நிஜமாகவே தெரியவில்லை…

அவனை ஆழ்ந்து பார்த்த கஜனோ, “மலர்விழி தெரியுமா?” என்று கேட்டான்… 

நவநீதன் யோசித்துக் கொண்டே, “எங்கேயோ கேள்விப்பட்ட பேர் போல இருக்கே” என்று சொல்ல, “இருக்கும் டா இருக்கும், இன்னைக்கு ஹாஸ்பிடலுக்கு நீ அனுப்புன மெசேஜ் எல்லாம் பிரிண்ட் எடுத்துட்டு அந்த பொண்ணோட அம்மா, என் கூட சண்டைக்கு வந்தாங்க” என்றான்…

“அடி ஆத்தாடி” என்று துளசி நெஞ்சில் கை வைக்க, சக்திவேலோ, “என்னது?” என்று அதிர, நவநீதனோ, ‘சிக்கிட்டேன் போல இருக்கே’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான்.

கஜனோ, “அந்த பொண்ணு காலேஜ் ஃபெர்ஸ்ட் இயர் படிக்கிறா, எப்படியோ கேன்டாக்ட் எடுத்து சார் லவ் மெசேஜ் எல்லாம் பறக்க விட்டு இருக்கார், அந்த பொண்ணும் இந்த தறுதலையை நம்பி, லவ் பண்ணி இருக்கு, ரெண்டு நாள் பேசி இருக்கான், மூணாவது நாள் அந்த பொண்ண ப்ளாக் பண்ணி இருக்கான், அந்த பொண்ணு ரொம்ப சென்சிடிவ், இவன் பேரை லெட்டர் ல எழுதி வச்சுட்டு தூக்கு மாட்ட போய் இருக்கு, அவ அம்மா பார்த்து காப்பாத்திட்டாங்க, மிஸ் ஆகி இருந்தா என்ன ஆகி இருக்கும்? அப்புறம் விசாரிச்சதுல சாரோட பேர் வந்து இருக்கு, நான் கூட இவன் ஃப்ரெண்ட்லியா பேசிட்டு இருக்கான்னு தான நினச்சேன், அப்புறம் தான் சார் எல்லார் கூடவும் லவ் ட்ராமா பண்ணி இருக்காருன்னு தெரிய வந்திச்சு… அந்த பொண்ணோட அம்மா வந்து அவ்ளோ அழுது, சத்தம் போட்டாங்க, இப்போ அந்த பொண்ணோட வீட்டுக்கு போய் பேசிட்டு தான் வர்றேன்” என்று சொல்ல, சக்திவேலுக்கு ஆத்திரம்…

“இவனை” என்று சொல்லிக் கொண்டே, நவநீதனை நெருங்க, நவநீதன் பயந்தே விட்டான்…

கஜன் அடியே விண் விண்ணென்று வலித்தது… சக்திவேல் அடித்தால் தாங்க முடியுமா என்ன? 

“அவர் அடிச்சா உயிரே போயிடும், காப்பாத்துங்க அண்ணா” என்று சொல்லிக் கொண்டே, கஜன் பின்னால் நவநீதன் ஒளிந்து கொள்ள, “அப்பா, விடுங்க, பார்த்துக்கலாம்” என்றான் கஜன்…

“இவன் என்னடா நம்ம குடும்பத்தில தப்பி பிறந்து இருக்கான்” என்று திட்டிய சக்திவேலோ, “உனக்கு கல்யாணம் வேணும்னா சொல்லு, முடிச்சு வைக்கிறேன், இனி இந்த குரங்கு சேட்டை எல்லாம் பண்ணுனா, மகன்னு கூட பார்க்காம, கொன்னுடுவேன் பார்த்துக்கோ” என்று மிரட்ட, ‘அடியேய் மலர்விழி, மூணு நாள் லவ்வுக்கு தூக்கு போடவா போவ? உன்னால நான் தான் இப்ப புதைகுழி உள்ளே போக போறேன்’ என்று நினைத்த நவநீதனோ, “இனி இப்படி பண்ண மாட்டேன்பா” என்றான்…

கஜனோ பெருமூச்சுடன், அவன் தோளில் கையை போட்டவன், அவனை வெளியே அழைத்து வந்தான்… 

நவநீதனின் கன்னம் வீங்கி இருந்தது…

கோபத்தில் அடியும் பலமாக விழுந்து இருக்கும் போல, அவன் தாடையை பற்றி, கன்னத்தைப் பார்த்த கஜனோ, “ஏன் டா இப்படி பண்ணுற?” என்று கேட்க, அவன் தலையை குனிந்தபடி நின்று இருந்தான்…

கொஞ்சம் குற்ற உணர்வாகவும் இருந்தது. 

கன்னத்தை வருடிப் பார்த்தான்…

“ஆஹ்” என்றான்.

“வலிக்குதா?” என்று கேட்டான் கஜன்…

“கையா அது?” என்று கேட்டான் நவநீதன்…

“இங்க பாரு நவா, பொண்ணுங்க விஷயத்துல விளையாடாதே, உனக்கு அது டைம் பாஸ், ஆனா எல்லாருக்குமே அப்படி இருக்காது, பொண்ணுங்க கூட பேச வேணாம்னு நான் சொல்லவே இல்லை… ஆனா லவ் வச்சு விளையாடதே, எல்லாரும் உன்னை போல இல்லை, சிலருக்கு ரொம்ப வலிக்கும்… எதுக்கு அடுத்தவங்க மனசை உடைக்கிற?” என்று கேட்டான்.

அவனோ பெருமூச்சு ஒன்றை விட்டவன், “இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றான்.

“சரி அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று கேட்டான்.

அவசரமாக இல்லை என்று தலையாட்டினான்…

“ஏன் டா?” என்று கேட்க, “அவ ரொம்ப சென்சிடிவா இருக்கா? இதுக்கே தூக்கு போட போனவ, ஏதாவது சண்டை வந்துச்சுன்னா, சூசைட் பண்ணி என்னை ஜெயிலுக்கு அனுப்பிடுவா” என்றான். அவனை மேலிருந்து கீழ் பார்த்த கஜனோ, “நீ ரொம்ப தெளிவா தான் இருக்கிற, பொண்ணுங்க பின்னாடி சுத்துறத விட்டுட்டு ஏதாவது உருப்படியா செய்” என்றான் கஜன்…

“மச்சான் வீட்ல கொஞ்ச நாள் போய் நின்னுட்டு வரவா?” என்று கேட்க, “ம்ம், நான் அர்ஜுன் கிட்ட பேசுறேன், அங்கே போயும் பொண்ணுங்க பிரச்சனை வந்துச்சுன்னா சாவடிச்சிடுவன் பார்த்துக்கோ” என்றான். 

“இல்ல இனி வராது” என்றான். 

“குட்” என்று சொன்னவன் அர்ஜுனுக்கு அழைக்க, அவனும், அலைபேசியை காதில் வைத்தான்…

“நவாவை கொஞ்ச நாள் அங்கே கொண்டு விடுறேன், பார்த்துக்கோ, உன் கூட சூப்பர் மார்க்கெட் அழைச்சிட்டு போ, ட்ரைவிங் கத்து கொடு, தொழில் கத்து கொடு, இங்க இருந்து நாசமா போயிட்டு இருக்கான்” என்றான் கஜன்.

“அனுப்புங்க மச்சான் பார்த்துக்கிறேன்” என்றான் அர்ஜுன்…

அடுத்த நாளே நவநீதனை அர்ஜுனின் வீட்டில் விட்டு வந்தான் கஜன்…

அவனைக் கண்டதுமே, “மாமா” என்று சொல்லிக் கொண்டே ஆரண்யன் ஓடி வர, அவனை தூக்கிக் கொண்டான் நவநீதன்…

அவனும் நவநீதனின் கன்னத்தில் முத்தம் பதிக்க, “ஸ்ஸ் ஆஹ்” என்றான் நவனீதன்…

அங்கே நின்ற அர்ஜுனோ அவன் கன்னத்தைப் பார்த்துக் கொண்டே, “என்ன மச்சி கன்னம் பண்ணு மாதிரி இருக்கு?” என்று கேட்க, நவநீதனோ, “இந்த நக்கல் தானே வேணாங்குறது” என்றான்.

அங்கே தனது மகளை தூக்கிக் கொண்டே வந்த ராகவியும், “எப்படி டா இருக்க? என்ன கன்னம் இப்படி வீங்கி போய் இருக்கு?” என்று கேட்க, “ஆஹ் விழுந்துட்டேன்” என்றான்…

அர்ஜுன் சிரித்தபடி அவன் தோளில் கையை போட்டவன், “நம்ம வீட்டை சுத்தி பார்த்துக்கிட்டே பேசலாமே” என்று சொல்ல, நவநீதனும் ஆரண்யனை இறக்கி விட்டவன், அர்ஜுனுடன் நடந்தான்…

“மச்சான் கை வரிசையை காட்டிட்டார் போல” என்றான் அர்ஜுன்…

“உங்களுக்கு எப்படி தெரியும்? சொன்னாரா?” என்று நவநீதன் கேட்க, “இல்லை, பார்த்தாலே தெரியுதே, தாடை ரொம்ப வலிக்குமே, ஒரு வராத்துக்கு வலி இருக்கும்” என்றான்…

“நீங்க ஏதோ அடி வாங்கி அனுபவப்பட்ட போல சொல்றீங்க” என்று நவநீதன் கேட்க, இருமிக் கொண்டே தலையை தட்டிய அர்ஜுன், “ச்ச ச்ச” என்றான்…

நவநீதன் அவனை சந்தேகமாகப் பார்க்க, “டேய், என்னை விடு, இப்படி உன்னோட கன்னத்தில கோலம் போட என்ன ரீசன்?” என்று கேட்க, அவனோ பெருமூச்சுடன், “என் கை சும்மா இருக்காம, பொண்ணுங்க கடலை போட போய் இப்படி ஆயிடுச்சு” என்று நடந்ததை சொல்ல, “உனக்கு அடிச்சது தப்பே இல்லடா, கொஞ்சம் விட்டு இருந்தா ஜெயில் தான்” என்றான் அர்ஜுன்…

“மூணு நாள் லவ்வுக்கு தூக்கு போட போறா மச்சான், என்ன பொண்ணு அவ” என்று சலித்தான் நவநீதன்…

“நீ பண்ணினது தப்பு தானே, லவ்ன்னு சொல்லி எதுக்கு ஏமாத்துற, உண்மையாவே அந்த ஃபீல் வந்தா மட்டும் லவ் சொல்லு, சும்மா டைம் பாஸுக்கு ஐ லவ் யூ எல்லாம் சொல்லி திரியாதே, நீ விளையாட்டா பண்ண போனது எப்படி ஆயிடுச்சு பார்த்தியா?” என்று கேட்க, அவனும், “இனி ஒன்லி கடலை தான், லவ் எல்லாம் சொல்லவே மாட்டேன்” என்றான்.

“அப்ப நீ இன்னும் திருந்தல” என்றான் அர்ஜுன்…

“பொண்ணுங்க கூட பேசுறது தப்பா மச்சான்?” என்று நவநீதன் கேட்க, “எங்கயோ நீ செமத்தியா வாங்கி தான் டி அடங்க போற” என்று சொன்னான் அர்ஜுன்…
 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top