அடுத்த நாள் காலையில் சக்திவேலின் முன்னே அமர்ந்து இருந்தான் கஜன்.
சக்திவேலோ, “என்னப்பா?” என்று கேட்க, “நவா அவுஸ்திரேலியாவுக்கு படிக்க போகட்டும்ப்பா” என்றான்…
அப்போது தான் குளித்து விட்டு வெளியே வந்த நவநீதனுக்கு கஜன் பேசிக் கொண்டு இருப்பதைக் கேட்டதுமே அதிர்ச்சியும் ஆச்சரியமும்…
‘அண்ணி பேசிட்டாங்க போல’ என்று நினைத்துக் கொண்டே அங்கேயே நின்று இருக்க, சக்திவேலோ, “அங்கே தனியா போய் என்ன பண்ண போறான்?” என்று ஆரம்பிக்க, “அவனும் உலகத்தை தெரிஞ்சுக்கட்டும், நம்ம கைக்குள்ளேயே வச்சு இருக்க வேணாமே” என்று சொல்லிக் கொண்டே நவநீதனைப் பார்க்க, அவன் இதழ்களில் நன்றியுடன் கூடிய புன்னகை…
சக்திவேலோ, “செல்லம்மா கஷ்டப்படுவாப்பா” என்று சொல்ல, “ஒரு வருஷம் தானேப்பா” என்றான் கஜன்…
கஜன் சொல்லி விட்டால் சக்திவேலிடம் மறுப்பேது.
“சரி, அனுப்பிடலாம்” என்று அரை மனதாக ஒத்துக் கொள்ள, துளசியை சமாளிப்பது தான் கஜனுக்கு பெரும் பாடகி போனது…
ஆனாலும் ஒரு வழியாக சமாளித்து விட்டான்…
நவநீதனோ, கஜனை இறுக அணைத்து விடுவித்தவன், “தேங்க்ஸ் அண்ணா” என்று சொல்ல, “அண்ணி கிட்ட சொல்லி சாதிச்சுட்ட தானே” என்றான் கஜன்…
நவநீதனும் கண்களை சிமிட்டி சிரித்துக் கொண்டான்…
நவநீதன் அவுஸ்ரேலியா போகும் நாளும் வந்தது…
எல்லோரும் அவனை வழியனுப்ப, வந்து இருந்தார்கள்…
அர்ஜுனோ, “நீ கேட்ட புது மாடல் ஃபொன்” என்று புதிய ஐ ஃபோனை நீட்ட, அங்கே நின்ற கஜனோ, “என்ன அர்ஜுன் இதெல்லாம்? வருஷத்துக்கு வருஷம் அவன் கேட்டான்னு எல்லாமே வாங்கி கொடுப்பியா?” என்று கேட்க, “நீங்களும் வாங்கி கொடுக்க மாட்டீங்க, வாங்கி கொடுக்கிறவரையும் விட மாட்டீங்க” என்று சொன்ன நவநீதன் அர்ஜுனை அணைத்து விடுவிக்க, “உனக்குன்னு அமைஞ்சு இருக்கான் பாரு அவன்” என்று சொல்லிக் கொண்டான் கஜன்…
அர்ஜுனோ, “உன்னோட இண்டர்நஷனல் லைசென்ஸ்… எங்க வீட்டு அட்ரேசுக்கு வந்திச்சு” என்று அர்ஜுன் ரகசியமாக நீட்ட, அதனை வாங்கி பாக்கெட்டில் வைத்து இருந்தான் நவநீதன்…
நவநீதன் கிளம்பும் நேரமும் வந்தது,…
எல்லோரும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து அவனை வழியனுப்பி இருக்க, கஜனும் விஜய்யும் தான் அவனை விமான நிலையத்தில் விட ஏற்றி சென்றார்கள்…
“டெய்லி கால் எடுடா” என்று சொல்லி, நவநீதனை கஜனும் விஜய்யும் அணைத்து விடுவிக்க, அவனும் மென் சிரிப்புடன் விமானத்தில் ஏற சென்றான்…
முதல் தடவை வீட்டை விட்டு தனியாக ஒரு பயணம்…
எதிர்பார்ப்புகள் நிறையவே இருந்தன…
வெளிநாட்டு வாழ்க்கையை நினைத்து ஒரு வகை சந்தோஷம் இருந்தது…
தனியே தான் இருக்க போவதாக கூறி இருந்தான்.
ஆனால் கஜன் அவனுக்கு எல்லாம் ஏற்பாடு செய்து கொடுக்க, தனது நண்பன் தேவாவின் உதவியை கேட்டு இருந்தான்.
நவநீதனும் அவுஸ்ரேலியாவை அடைந்து விட்டான்…
விமான நிலையத்தில் அவனுக்காக பெயர் பலகையுடன் தேவா காத்துக் கொண்டு இருந்தான்…
“ஹாய் அண்ணா” என்று சொல்லி நவநீதன் கையை காட்ட, “கஜன் தம்பி தானே, எப்படி இருக்கடா?” என்று கேட்டு அவனை அணைத்து விடுவித்தவன் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டு இருந்தான்…
வீட்டுக்கு அழைத்து பேசி விட்டு தேவாவுடன் பேச ஆரம்பித்து இருந்தான் நவநீதன்.
“காலேஜ் பக்கத்துல வீடு எடுத்து இருக்கேன்” என்று சொல்ல, “ம்ம் உங்க அண்ணன் அட்ரெஸ் அனுப்புனான், நல்ல இடம் தான், கீயும் வாங்கி எடுத்துட்டேன் எங்க வீட்லயே தங்கலாமே” என்று சொன்னான் தேவா…
“இல்ல தனியா தங்குறது தான் எனக்கு வசதி” என்று நவநீதன் சொல்லி இருக்க, அவனை அவனது இடத்தில் விட்ட தேவாவும், “எதுன்னாலும் கால் பண்ணு” என்று தனது நம்பரை கொடுத்து விட்டு செல்ல, அவனும் அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான்…
காலேஜ் மாணவர்கள் வசிக்கும் இடம் தான் போலும்…
மென் புன்னகையுடன் சுற்றிப் ஒரு கணம் பார்த்து விட்டு வீட்டினுள் நுழைந்து கொண்டான். களைப்பாக இருந்தது…
குளித்து விட்டு படுத்தவனுக்கு அடுத்த நாள் முழுவதும் வீட்டை அடுக்கி எடுக்கும் வேலை இருந்தது…
வீட்டில் மூன்று நாட்கள் கழித்தவன், காலேஜுக்கு அடுத்த நாள் பஸ்ஸில் புறப்பட்டு விட்டான்…
பிரமாண்டமாக இருந்தது…
எல்லாவற்றையும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே காலேஜ்ஜில் வந்து இறங்கி விட்டான்…
அழகாக இருந்தது.
பல வகையான கற்கை நெறிகள் இருந்தன… எண்ணிலடங்கா மாணவர்கள் இருந்தார்கள்…
தேடிப் பிடித்து தனது டிபார்மென்டில் நுழைந்து விட்டான்.
ஒரு வாரம் கடந்து இருக்கும், நண்பர்களை சேகரித்து இருந்தான்…
ஆனாலும் அவனுக்கு தமிழ் மொழியில் பேசக் கூடிய யாரும் இருந்தால் வசதி என்று தோன்றியது.
அவனது டிபார்ட்மெண்டில் இல்லை.
எல்லா டிபர்மெண்டுக்கும் பொதுவான கேன்டீன் இருந்தது…
‘இங்கேயாச்சும் யாராச்சும் சிக்குறாங்களான்னு பார்ப்போம்’ என்று நினைத்தபடி உள்ளே சென்றான்.
உணவை வாங்கி விட்டு, விழிகளை சுழற்றி தேடினான்.
கேன்டீனுக்குள் நுழைந்தவன் விழிகள் தமது நிறத்தில் அமர்ந்து இருந்த அழகிய பெண்ணில் படிந்தது…
அவள் தான் தனிஷா…
நிறைய நாட்கள் கழித்து, தமது நிறத்தில் ஒருத்தியை பார்க்கின்றான்.
‘அப்பாடா நம்ம கலர் ல ஒருத்தி இருக்கா, ஹிந்தி காரியா மட்டும் இருந்திட கூடாது, நமக்கு வேற ஹிந்தி தெரியாது, இங்க்லீஷ் பேசி பேசி வாயெல்லாம் வலிக்குது’ என்று நினைத்தபடி அவள் முன்னே அமர , அவளும் அவனை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, “ஹாய்” என்றாள். அவளுக்கும் நிறைய நாட்கள் கழித்து, தனது நிறத்தில் ஒருவனைப் பார்த்ததுமே இயல்பான ஆர்வம்…
அவனும், “ஹாய்… தமிழா??” என்று கேட்க, “ம்ம் தமிழும் தெரியும்…” என்றாள் மென் புன்னகையுடன்.
அவனும், ‘அப்படா’ என்று நினைத்து விட்டு, “உங்க பேர்??” என்று கேட்க, சற்று யோசித்து விட்டு, “லைலா” என்றாள்.
அவளை ரசித்துப் பார்த்தான்…
பிங்க் நிற டீ ஷேர்ட் மற்றும் டெனிம் ஜீன்ஸ் அணிந்து இருந்தாள்…
தலைமுடியை விரித்து விட்டு இருந்தாள்…
அவள் மேனியும் பிங்க் நிறத்தில் தான் இருந்தது…
அழகான முக அமைப்பு…
வளைவு நெளிவுகளுடன் கூடிய கச்சிதமான மேனியமைப்பு…
அவனோ, ‘செம்ம அழகா இருக்காளே… இங்க படிக்குற வரைக்கும் அடுத்த ஒரு வருஷத்துக்கு கரெக்ட் பண்ணிடனும், மறந்தும் லவ்ன்னு சொல்லிட கூடாது, கடலை போடுறதோட நிறுத்திடனும்… நம்ம ஊர்ல வாங்குன அடி அப்படி’ என்று நினைத்தபடி, “பை தெ வே, ஐ ஆம் மஜ்னு” என்றான்.
அவனை அவள் ஒரு மார்க்கமாக பார்க்க, “ஆயா சத்தியமா நான் மஜ்னு தான்” என்றான்.
அவன் சொன்ன தோரணையில் அவளுக்கு சிரிப்பு வந்து விட, “ஹாய் மஜ்னு” என்றாள்.
அவளும் அவனை ஆராய்ச்சியாக பார்த்தாள்.
பிங்க் நிற ஷேர்ட் மற்றும் டெனிம் ஜீன்ஸ் அணிந்து இருந்தான்.
ஆறடி உயரம் இருப்பான்.
தாடி மீசை ட்ரிம் செய்து இருந்தான்.
வெளிர் நிறமும் அல்ல, பொது நிறமும் அல்ல, இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிறத்தில் இருந்தான்…
கூரிய நாசி அவளை சட்டென ஈர்த்தது…
பார்த்ததுமே ஈர்க்கும் தோற்றம் தான்…
அதனால் தான் பெண்களும் ஈர்க்கப்பட்டு விடுகின்றார்களோ என்னவோ…
அவன் சொல்வது பொய் என்று தெரியும்… ஆனாலும் அவன் துள்ளல் பேச்சு சிரிப்பை தான் தோற்றுவித்தது…
அவனுடன் பேசுவது அவளுக்கும் ஒரு பிடித்தத்தைக் கொடுத்தது…
முதல் சந்திப்பிலேயே அவளை ஈர்த்து விட்டானே… ஆச்சரியம் தான்…
அவ்வளவு சீக்கிரம் அவளை இப்படி யாரும் ஈர்த்ததும் இல்லை…
அவள் அதற்கான இடைவெளியை வழங்கியதும் இல்லை…
கொஞ்சம் கறாரான கையாள்கை அவளிடம் இருக்கும்…
இவன் வேறு உருட்டி விட்ட வெண்கல கிண்ணம் போல, கல கலவென பேசிக் கொண்டு இருக்கின்றான்…
இல்லை இல்லை உருட்டிக் கொண்டு இருக்கின்றான்…
அவளுக்கும் இதழில் புன்னகை தோன்ற, சற்று மென்மையாக தான் பேசினாள்…
“அப்புறம் உங்க ஃபேமிலி பத்தி சொல்லுங்க” என்று அவன் கேட்க, “அம்மா வீட்டு வேலை செய்யுறாங்க … அப்பா கூலி வேலை செய்யுறார்” என்றாள்.
அவள் அடையாளத்தை அவள் வெளிப்படுத்தவே விரும்பவில்லை…
அவளிடம் இருக்கும் பணத்துக்காக அவள் பின்னே வருபவர்கள் ஏராளம்… அதற்காகவே என்னென்னவோ சொன்னாள். வாயில் வந்தது எல்லாம் சொன்னாள்.
“அப்புறம் எப்படி இந்த பெரிய யூனிவர்சிட்டி ல படிக்கிறீங்க??” என்று கேட்டான்.
” ஹி ஹி ஸ்காலர்ஷிப் ” என்றாள்.
‘நல்லா உருட்டுறாளே, இப்போ நான் உருட்டுறேன் பாரு’ என்று நினைத்தவனும், “நானும் ஸ்காலர்ஷிப் தான். என் அப்பாவும் கூலி வேலை தான்” என்று கையை ஹைஃபை அடிக்க கையை நீட்டினான்.
“இதுக்கெல்லாமா ஹைஃபை அடிப்பாங்க??” என்று அவள் கேட்டுக் கொண்டே கையை அடித்து இருந்தாள்.
அவனுக்கோ இது ஒரு தற்காலிக உறவு… ஒரு வருடம் முடிய அவள் தேடி வந்து விட கூடாது என்பதற்காகவே தனது அடையாளத்தை மறைத்து விட்டான்.
இருவரும் மாறி மாறி தூண்டி துருவவில்லை தங்கள் குட்டு வெளிப்பட்டு விடும் என்று…
ஆனால் இருவருக்குமே அடுத்தவர் சொன்ன தகவல்களில் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. நம்புவது போல காட்டிக் கொண்டார்கள் அவ்வளவு தான்.
அவனோ, “ஒரே ஒரு கேள்வி” என்றான்.
“ம்ம்” என்றாள்…
“நான் பேசிட்டு அப்புறம் உங்க கூட பேசலன்னா தற்கொலை பண்ணிக்க மாட்டீங்களே” என்று கேட்டான்…
தலையை பின்னால் இழுத்து அவனை மேலிருந்து கீழ் ஒரு மார்க்கமாக பார்த்தாள்…
“சொல்லுங்க” என்று சொல்ல, “நீங்க பேசலன்னு நான் தற்கொலை பண்ணுற அளவுக்கு லூசு இல்லைங்க” என்றாள்…
“அப்பாடா, அப்போ நம்ம கன்டினியூ பண்ணலாம்” என்றான்.
‘பெரிய மன்மதன்னு நினைப்பு’ என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டவளோ, “எந்த டிபார்ட்மென்ட்” என்று கேட்டான்.
“மாஸ்டர்ஸ் இன் எஞ்சினியரிங்” என்று அதிலும் உருட்டியவனோ, “நீங்க?” என்று கேட்டான்.
அவளும், “பேச்சலர்ஸ் இன் ஃபினான்ஸ்” என்று அவள் பங்குக்கு உருட்டினான்…
“நீங்க இங்க தான் சாப்பிடுவீங்களா?” என்று கேட்க, “ம்ம் டெய்லி இங்க தான்” என்றாள்.
“அப்போ நானும் இனி இந்த கேன்டீனுக்கு வந்திடுறேன்” என்றான்.
‘என்ன இப்படி வழியுறான்’ என்று நினைத்தவளோ, “ஷோர் நம்ம டெய்லி மீட் பண்ணலாம்” என்று சொல்ல, “ஃபோன் நம்பர்?” என்று கேட்டுக் கொண்டே அலைபேசியை எடுத்து விட்டான்.
‘இவன் ஜெட் ஸ்பீட் ல இருக்கான்” என்று நினைத்தவளோ, நம்பரை சொல்ல வர, “இதுல மட்டும் உருட்டாதீங்க” என்றான்…
“லூசு மாதிரி பேசுனாலும், ஷார்ப் ஆஹ் இருக்கான்” என்று நினைத்துக் கொண்டே, அங்கே அவள் பாவித்துக் கொண்டு இருந்த அவுஸ்ரேலியா நம்பரை கொடுத்தாள்…
அது தற்காலிகமாக பாவிக்கும் நம்பர் என்பதால் நம்பி கொடுத்தாள்…
அவனும் அதே போல தனது தற்காலிக எண்ணை கொடுத்தான்…
அதனை தொடர்ந்து சாப்பிட்டு முடித்த தனிஷாவிடம், “என்னை விட வயசு குறைவு தானே, நீ வா ன்னு பேசுறேன், அப்போ தான் க்ளோஸ் ஆஹ் ஃபீல் பண்ண முடியும்” என்றான்.
“சரி தான்” என்று சொல்லிக் கொண்டே, அவளும் எழுந்து கொள்ள, அவனும் அவளுடன் கூடவே நடந்தான்…
அவள் அருகே நடந்து வந்தவனோ, “உனக்கு சிப்லிங்ஸ் இருக்கா??” என்று கேட்டான்.
அவளோ, “ம்ம் ஒரு தம்பி” என்றாள்.
“என்ன செய்யுறான்??” என்று அவன் கேட்க அவனை மேலிருந்து கீழ் பார்த்தவள், “ஃபாரீன் ல பிச்சை எடுக்கிறான்.” என்றாள்.
“வாவ் அடிச்சுக்கோ, என்னோட சிப்லிங்க்ஸும் பிச்சை தான் எடுக்கிறாங்க… உன் தம்பி ஃபாரின் பிச்சைக்காரன் என் ஆட்கள் எல்லோரும் உள்ளூர் தான்” என்றான். அவளோ, ‘இவன் பெரிய உருட்டு உலகநாதனா இருப்பான் போல’ என்று நினைத்தபடி, “ஓஹோ எங்க பிச்சை எடுக்கிறாங்க?” என்று கேட்டாள்.
“எங்க குடும்பம் ரொம்ப பெருசு லைலா… என்னோட ரெண்டு அண்ணனுங்களும் ஹாஸ்பிடல் முன்னாடி பிச்சை எடுக்கிறாங்க… ரெண்டு அக்கா இருக்காங்க… ஒருத்தி புருஷன் ஊர்ல இருக்கிற ஃபாக்டரி முன்னாடி பிச்சை எடுக்கிறார். அடுத்தவர் சூப்பர் மார்க்கெட் முன்னாடி பிச்சை எடுக்கிறார்.. அப்புறம் எனக்கு ஒரு மச்சினிச்சி இருக்கா… அவளும் அவ புருஷனும் போலீஸ் ஸ்டெஷன் முன்னாடி பிச்சை எடுக்கிறாங்க… இன்னொரு மச்சான் இருக்கிறான் வேற ஊர்ல இருக்கான்… காலேஜ் முன்னாடி பிச்சை எடுத்துட்டு இருக்கான்.” என்று சொன்னான்.
சிரிக்காமல் சொல்லி முடித்தான்.
அவளோ, “ஓஹோ பெரிய பிச்சைக்கார குடும்பம் போல” என்றாள்.
“எஸ் எஸ்” என்றான் பெருமிதமாக முகத்தை வைத்துக் கொண்டே.
அவளுக்கும் சிரிப்பு வர அடக்கிக் கொண்டே, “கலெக்ஷன் எங்க அதிகமா கிடைக்கும்??” என்று கேட்டாள்.
“சூப்பர் மார்க்கட் ல பிச்சை எடுக்கிற மச்சான் கிட்ட கலெக்ஷன் அதிகமா இருக்கும்” என்றான்.
“வாவ், மச்சான் நிறைய பொறுக்கி தருவாரா??” என்று கேட்க, “ம்ம் என்ன கேட்டாலும்.பொறுக்கி தருவார். என் அண்ணனுங்க கொஞ்சம் கறார். மச்சான் அப்படி இல்லை… என்ன பொறுக்கினாலும் எனக்கு கிடைக்கும்…” என்றான்.
“இன்னொரு மச்சான் இருக்கார் ல” என்று கேட்டாள்.
“அவர் என் அண்ணனுங்க கூட கூட்டு… அங்கேயும் ஒன்னும் தேறாது… சூப்பர் மார்க்கெட் பிச்சைக்கார மச்சான் தான் நமக்கு செட் ஆகும்” என்றான்.
அவளும் சிரித்துக் கொண்டே, “நிறைய நாளைக்கு அப்புறம் வாய் நிறைய தமிழ் பேசுறேன், ரொம்ப சந்தோஷமா இருக்கு மஜ்னு” என்றாள்…
“எனக்கும் தான் லைலா” என்று அவன் சொல்ல, இருவரும், “பை” என்று சொல்லி விட்டு தத்தமது பக்கம் நகர்ந்து சென்று விட்டார்கள்…