அத்தியாயம் 8

முகமூடி உறவு

சென்னை…

காலை ஒன்பது மணி.

பாண்டியன் குழுமத்தின் தலைமை அலுவலகம் வழக்கம்போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்களுடைய வேலையில் மூழ்கியிருந்தனர். அலுவலகம் முழுவதும் ஒரு ஒழுங்கும், கட்டுப்பாடும் நிலவியது.

அந்த பரபரப்புக்கு நடுவே…

தனது அறையில் அமைதியாக அமர்ந்திருந்தான் ஆதவன்.

அவன் முன் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகளை ஒன்றன்பின் ஒன்றாகப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். கணினித் திரையில் ஓடிக்கொண்டிருந்த கணக்குகளையும், புதிய ஒப்பந்தங்களையும் கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தான்.

அந்த நேரம்…

கதவை மெதுவாகத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான் விக்ரம்.

“உள்ளே வா…”

தலையை நிமிர்க்காமலே சொன்னான் ஆதவன்.

விக்ரம் அவன் எதிரே வந்து நின்றான்.

“சார்… ஒரு விஷயம் சொல்லணும்.”

“சொல்.”

“மாரியப்பன் ஐயா நாளை இரவு தன்னோட மாளிகையில் விருந்து வச்சிருக்காரு. புதுசா ஆரம்பிக்கிற தொழில் ஒப்பந்தத்துக்காக.”

ஆதவன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“அதுக்கு என்ன?”

“அவர் எல்லாரையும் குடும்பத்தோட வரச் சொல்லியிருக்காரு.”

அந்த ஒரு வாக்கியத்தில்…

ஆதவனின் கை நின்றது.

மெதுவாக கோப்பை மூடி விட்டு விக்ரமைப் பார்த்தான்.

“நான் மட்டும் போனா போதாதா?”

“இல்ல சார்… குறிப்பா உங்களையும்… உங்க மனைவியையும் கூட்டிட்டு வரணும்னு சொல்லியிருக்காரு.”

ஆதவனின் முகம் இறுகியது.

சில நொடிகள் அறை முழுவதும் அமைதி நிலவியது.

“எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியும்.”

“தெரியும் சார்… ஆனா அவர் நம்ம முக்கியமான கூட்டாளி. இந்த விருந்தை தவிர்க்க முடியாது.”

ஆதவன் நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

அவன் மனதில் உடனே தோன்றியது…

அல்லியின் முகம்.

அடுத்த நொடியே அந்த நினைவையே வெறுப்புடன் தள்ளி வைத்தான்.

“சரி…”

“இன்னைக்கே ஊருக்குப் போறேன்.”

விக்ரம் ஆச்சரியமாக அவனைப் பார்த்தான்.

“சரி சார்.”

விக்ரம் வெளியேறியதும்…

ஆதவன் ஜன்னல் அருகே சென்று நின்றான்.

“உலகத்துக்காக மனைவி…”

“ஆனா… என் வாழ்க்கையில அவளுக்கு எந்த இடமும் இல்லை.”

அவன் உதட்டில் கசப்பான சிரிப்பு தோன்றியது.

“இந்த ஒரு விருந்துக்காகத்தான்…”

“அதுக்கு மேல இல்லை.”

அவன் மேசையில் இருந்த காரின் சாவியை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியே நடந்தான்.

மாலை…

பாண்டியன் மாளிகை வாசலில் கருப்பு நிற கார் வந்து நின்றது.

கார் சத்தம் கேட்டதும்…

“ஆதவன் வந்துட்டான்!” என்று மகிழ்ச்சியாகச் சொன்னார் செல்வி பாண்டியன்.

தாத்தா செல்வராஜ் பாண்டியனும் வாசலுக்கு வந்தார்.

ரேணுகாவின் முகத்திலும் மகிழ்ச்சி மலர்ந்தது.

ஆனால்…

காரிலிருந்து இறங்கிய ஆதவன், யாரையும் பார்க்காமல் நேராக வீட்டுக்குள் நடந்தான்.

“எப்படி இருக்கப்பா?” என்று ரேணுகா கேட்டார்.

“நல்லா இருக்கேன்.”

ஒரே வரியில் பதில்.

“சாப்பிடுறியா?”

“வேண்டாம்.”

அவன் குரலில் வழக்கம்போல இறுக்கம்.

அந்த நேரத்தில்…

சமையலறையில் இருந்த அல்லி, அவன் வந்த சத்தத்தைக் கேட்டு வெளியே வந்தாள்.

ஒரு மாதத்திற்குப் பிறகு…

முதல் முறையாக அவனைப் பார்க்கிறாள்.

ஆனால்…

ஆதவன் அவளை ஒரு நொடி கூட பார்க்கவில்லை.

அவன் பார்வை நேராக அம்மாவை நோக்கி இருந்தது.

“அவ எங்க?”

ரேணுகா மெதுவாக அல்லியைப் பார்த்தார்.

“அல்லி… இங்க வா.”

அல்லி அமைதியாக வந்து நின்றாள்.

ஆதவன் அவளைப் பார்த்தான்.

அந்த பார்வையில் காதல் இல்லை…

கனிவும் இல்லை…

குளிர்ந்த வெறுப்பு மட்டும் இருந்தது.

“உன் துணிகளை எடுத்து வை.”

அல்லி புரியாமல் பார்த்தாள்.

“நாளைக்கு நீ என்னோட சென்னை வரணும்.”

அந்த ஒரு வார்த்தை…

வீட்டில் இருந்த அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top