❤️அத்தியாயம் (9)

 

அழுதுகொண்டிருந்த யஷ்வியை நோக்கி ஓடி வந்தார்கள் மித்ரனும் ருத்ரனும்.

“ஏய்… என்னடி ஆச்சு? ஏன் இப்படி அழுற?” என்று பதட்டத்தோடு யஷ்வியின் தோள்களைப் பற்றினான் மித்ரன்.

அவனைப் பார்த்ததும் யஷ்விக்குத் துக்கம் பீறிட்டது. அவனைக் கட்டிக்கொண்டு ஓவென்று அழ ஆரம்பித்தாள்.

ருத்ரனும் பதறிப்போய் அவளருகே வந்து,

“என்னாச்சுன்னு சொல்லு யஷ்வி… யாரு என்ன பண்ணது?” என்று மென்மையாகக் கேட்டான்.

விக்கல் எடுக்க, நடந்தவற்றை ஒவ்வொன்றாகச் சொன்னாள் யஷ்வி.

அவள் சொல்லச் சொல்ல, மித்ரனின் கைகள் கோபத்தில் முறுக்கேறின. ருத்ரனின் கண்கள் சிவந்தன.

“யார்டா அவன்? எந்தத் தைரியத்துல யஷ்வி மேல கை வச்சான்?” என்று பற்களைக் கடித்தபடி கத்தினான் மித்ரன்.

ருத்ரன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,

“இங்க பக்கத்துல விசாரிச்சா கண்டிப்பா அவனைப் பிடிச்சிடலாம்டா. கிளம்பு!” என்று ஆவேசமாக நடந்தான்.

ஆனால், யஷ்வி அவர்களைத் தடுத்தாள்.

“வேணாம்… விட்ருங்க… அவன் ஏதோ போதையில இருந்தான். ஏதோ ஒரு தப்பான புரிதல்ல பேசிட்டான்…” என்றாள் தேம்பிக்கொண்டே.

“தப்பான புரிதல்ல இருந்தா கை நீட்டி அடிப்பானா? அதுவும் ஒரு பொண்ணை?” என்று மித்ரன் அடங்காத கோபத்துடன் கேட்டான்.

“அவன் நேரம்… நாம வர்றதுக்குள்ள தப்பிச்சுப் போயிட்டான். இல்லன்னா இந்நேரம் அவன் கை, கால் எல்லாம் வேற வேற இடத்துல இருந்திருக்கும்!” என்று ருத்ரன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு சொன்னான்.

சிறிது நேரம் கழித்து, மூவரும் கனத்த மனதுடன் வீடு திரும்பினார்கள்.

வாசலில் நின்றிருந்த ஜானகி அவர்களைப் பார்த்ததும்,

“வாங்கப்பா… டீ எடுத்துட்டு வரவா?” என்று கேட்டார்.

ஆனால், யஷ்வியின் வீங்கிய முகத்தையும் சிவந்த கண்களையும் கண்டதும், அவர் கையில் இருந்த பாத்திரம் நழுவப் பார்த்தது.

“என்ன ஆச்சும்மா உனக்கு? ஏன் இப்படி இருக்க?” என்று காமாட்சி பாட்டி பதறியபடி ஓடி வந்தார்.

ருத்ரன் அங்கிருந்த நந்திதாவைப் பார்த்து,

“நந்திதா… முதல்ல இவளை ரூமுக்கு கூட்டிட்டு போ. முகத்துல கொஞ்சம் ஐஸ் வை.” என்றான் அதிகாரமும் அக்கறையும் கலந்த குரலில்.

நந்திதா எதுவும் பேசாமல் யஷ்வியின் கையைப் பிடித்து மெதுவாக உள்ளே அழைத்துச் சென்றாள்.

அவர்கள் மறைந்ததும், மித்ரன் அங்கிருந்தவர்களிடம் நடந்ததை விவரித்தான்.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த வீடே ஒரு கணம் அமைதியில் மூழ்கியது.

“யாருடா அவன்? ஊர்ல புதுசா வந்தவனா?” என்று சிலர் ஆத்திரமாகக் கேட்க,

வீரன் தாத்தா தன் கையில் இருந்த கோலை ஓங்கித் தரையில் தட்டினார்.

“அவனை அப்படியே விட்டுட்டு வந்துட்டீங்களா? நம்ம வீட்டு பொண்ணு மேல கை வச்சவனை இந்நேரம் இழுத்துட்டு வந்து என் முன்னாடி நிறுத்தியிருக்க வேண்டாமா?” என்று கர்ஜித்தார்.

“நாங்க போறதுக்குள்ள அவன் காரைக் கிளப்பிட்டுப் போயிட்டான் தாத்தா…” என்றான் ருத்ரன் தாழ்ந்த குரலில்.

பாட்டி வருத்தத்துடன் கண்களைத் துடைத்துக்கொண்டு,

“வளர்ப்பு சரியில்லாதவன்தான் ஒரு பெண்ணை இவ்வளவு கேவலமா பேசுவான்… கை நீட்டுவான். அவன் எங்க உருப்படப் போறான்? காலமே அவனுக்குப் பதில் சொல்லும்!” என்று சாபமிட்டார்.

அங்கு தன் குடும்பமே தன்னைப் பற்றி கோபமாகப் பேசிக்கொண்டிருப்பது தெரியாமல், இங்கு ஆரியன் ரீனாவுடன் கெஸ்ட் ஹவுஸின் நீச்சல் குளத்தில் திளைத்துக்கொண்டிருந்தான்.

நீரில் மெதுவாக அலைந்தபடி அவன் அருகில் வந்த ரீனா,

“You are so handsome…” என்று மெல்லிய குரலில் கூறி புன்னகைத்தாள்.

ஆரியன் குறும்பாகச் சிரித்தபடி,

“Oh… Really?” என்று கேட்டவாறே அவளைத் தன்னருகே இழுத்தான்.

அவள் சட்டென்று அவன் அருகில் வந்தவுடன், இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி மறைந்தது.

ஆரியன் மெதுவாக அவள் முகத்தைப் பார்த்து, அவளது உதட்டில் முத்தமிட்டான்.

ரீனாவும் அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு, அந்த நிமிடத்தில் தன்னை மறந்தாள்.

நீரின் சலசலப்புக்கு நடுவே, அந்த அமைதி அவர்களுக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது.

அப்போது,

“டேய் மச்சான்… இங்கேயே ஆரம்பிச்சிட்டீங்களா?” என்று கிண்டலாகக் கேட்டபடி வந்தான் பிரவீன்.

அவர்களைப் பார்த்ததும், ஆரியன் சட்டென்று ரீனாவை விட்டு விலகி மேலே வந்தான்.

“டேய்… கரடி மாதிரி சரியான டைம்ல வந்துட்டீங்களே!” என்றான் ஆரியன், போலியான கோபத்துடன் சிரித்தபடி.

“சரி மச்சான்… கூல்!” என்று அவர்கள் சிரிக்க, மூவரும் உள்ளே சென்றார்கள்.

வீட்டுக்குள் இருந்த பார் ஏரியாவில் அமர்ந்து, மூவரும் மது அருந்த ஆரம்பித்தார்கள்.

அரட்டை, சிரிப்பு என நேரம் நகர்ந்தது.

நீச்சல் குளத்தில் ரீனா மட்டும் தனியாக நீந்திக்கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து, பிரவீனும் மகேஷும் தங்கள் காதலிகளுடன் அங்கு வந்தனர்.

“ஹாய்…” என்று ரீனா வரவேற்க, அவர்களும் சிரித்தபடி கை அசைத்தனர்.

அவள் நீரிலிருந்து வெளியே வந்து, அவர்களுடன் கார்டனில் அமர்ந்து பேசினாள்.

சிறிது நேரக் குதூகலத்திற்குப் பிறகு, அனைவரும் தங்களது அறைகளுக்குச் சென்றனர்.

தனது அறைக்குள் சென்ற ஆரியனை, கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் கவுனில் தேவதை போல நின்றிருந்த ரீனா வரவேற்றாள்.

அந்த உடை அவளது அழகை இன்னும் மெருகேற்றிக் காட்டியது.

ஆரியனைக் கண்டதும், ஓடி வந்து அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.

அந்த அணைப்பில் ஆசையும் ஈர்ப்பும் ஒருசேர கலந்திருந்தன.

 

இரண்டு நாட்கள் கழித்து, ஆரியன் வீடு திரும்பினான்.

வரவேற்பறையில் ருத்ரனும் மித்ரனும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

ஆரியனைக் கண்டதும், ருத்ரன் எழுந்து வந்து அவனை அணைத்துக்கொண்டான்.

“எப்படி அண்ணா இருக்கீங்க?” என்று பாசத்துடன் கேட்டான்.

“நல்லா இருக்கேன் டா… நீ எப்படி இருக்க?” என்றான் ஆரியன்.

“நான் நல்லா இருக்கேன் அண்ணா,” என்றான் ருத்ரன்.

அருகில் இருந்த மித்ரனைப் பார்த்த ஆரியன்,

“சாரிடா… உன் அப்பாவோட காரியத்துக்கு எங்களால வர முடியாம போயிடுச்சு,” என்றான் முகத்தில் ஒருவித வருத்தத்துடன்.

“பரவாயில்ல அண்ணா… நீங்க ஏதோ கோயிலுக்குப் போயிருக்கீங்கன்னு ருத்ரன் சொன்னான்,” என்றான் மித்ரன் இயல்பாக.

“சரிடா… அம்மா, அக்கா எல்லாம் எப்படி இருக்காங்க?” என்று ஆரியன் விசாரிக்க,

“அம்மா நல்லா இருக்காங்க அண்ணா… அக்கா எங்க கூடத்தான் வந்து இருக்கா,” என்றான் மித்ரன்.

“சரிடா… நான் அப்புறம் பேசுறேன். இப்போ ஆபீஸ் கிளம்பணும்,” என்று ஆரியன் நகர முயன்றான்.

அப்போது ருத்ரன்,

“அண்ணா… நாங்களும் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்,” என்றான்.

“என்ன விஷயம்?” என்று ஆரியன் நிற்க,

“பிசினஸ் பத்திதான் அண்ணா,” என்றான் மித்ரன்.

“ஓகே… அப்போ இன்னைக்கு ஈவினிங் ஆபீஸ் வாங்க. அங்க வச்சுப் பேசலாம்,” என்று சொல்லிவிட்டு, ஒரு புன்னகையுடன் தன் அறைக்குள் சென்றான் ஆரியன்.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top