❤️அத்தியாயம் (12)

 காரின் முன் கதவைத் திறந்து யஷ்வியை அமரச் செய்தான் ஆரியன். எந்த எதிர்ப்பும் காட்டாமல், ஒரு இயந்திரத்தைப் போல உள்ளே அமர்ந்தாள் அவள். ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த அவன் காரை ஸ்டார்ட் செய்ய, இயந்திரத்தின் சத்தம் மட்டுமே அந்த அமைதியைக் கலைத்தது.

வெளியே வெறித்துப் பார்த்தபடி வந்த யஷ்வியின் மனதுக்குள் ஏகப்பட்ட அலைகள் எழுந்து அடங்கிக் கொண்டிருந்தன. ஆரியன் இடையிடையே அவளைத் திரும்பிப் பார்த்தான். ஏதோ பேச நினைத்தவன், அங்கே நிலவிய கனத்த மௌனத்தைக் கலைக்கத் துணியாமல் அமைதியாகவே காரை ஓட்டினான்.

சிறிது தூரம் சென்றதும், ஒரு கடையின் முன் காரை நிறுத்தினான்.

அங்கிருந்த சிறுவனிடம் ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கி யஷ்வியிடம் நீட்டினான்.

“இந்தா… குடி.”

அவன் குரலில் முன்பிருந்த அதிகாரம் மறைந்து, இப்போது மென்மை மட்டுமே இருந்தது.

தன் சிந்தனையிலிருந்து மீண்டவள் போல, அவன் கையில் இருந்த பாட்டிலை வாங்கி மௌனமாகத் தண்ணீர் பருகினாள்.

அவள் தண்ணீர் குடிப்பதையே ஆரியன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையில் அப்பட்டமான குற்ற உணர்வும், சொல்லத் தெரியாத கவலையும் ஒருசேர தெரிந்தன. பாட்டிலைத் திரும்பக் கொடுத்தவளிடம் எதுவும் பேசாமல் அதை வாங்கிக் கொண்டவன், மீண்டும் காரைச் செலுத்தினான்.

வீடு வந்ததும், அவனே இறங்கி வந்து கதவைத் திறந்து,

“வா…” என்று அழைத்தான்.

யஷ்வி தயக்கத்தோடு இறங்கியபோது, அவளது கையை அவன் பற்றினான். அந்தத் தொடுதலில் அவள் சற்றே திடுக்கிட்டாலும், இம்முறை அவன் பிடியில் வன்முறை இல்லை; மாறாக, ஒருவித அரவணைப்பும் பாதுகாப்பும் இருந்தது.

இருவரும் உள்ளே நுழைந்ததைக் கண்டதும், அங்கிருந்த பெண்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஆரியன் ஒரு பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு வருவதை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.

யஷ்வியின் வாடிய முகத்தைப் பார்த்த பாட்டி பதறிப்போனார்.

“என்னம்மா ஆச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்க?”

பாட்டியின் குரலில் அக்கறை ததும்பியது.

யஷ்வி பதில் சொல்ல எத்தனிக்கும் முன்பே,

“நந்திதா… இவளை ரூமுக்கு கூட்டிட்டுப் போங்க.”

என்று ஆரியன் கூறினான்.

நந்திதா மெல்ல வந்து யஷ்வியை அழைத்துச் செல்ல, ஒரு பொம்மையைப் போல அவளைப் பின்தொடர்ந்தாள் யஷ்வி.

அவர்கள் சென்றதும், பாட்டி விடாமல் கேட்டார்.

“என்னப்பா ஆச்சு அந்தப் பொண்ணுக்கு?”

ஆரியன் நடந்ததைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து விலகப் பார்த்தான்.

“பாவம்… அந்தப் பொண்ணு வெளியே போனாலே ஏதாவது ஒரு பிரச்சனை வந்துடுது. நேரம் சரியில்லை போல…” என்றார் வள்ளியம்மை கவலையுடன்.

“ஆமா அத்தை… நம்ம குலதெய்வம் கோயிலுக்குப் போயிட்டு வந்தா எல்லாம் சரியாயிடும்.” என்றாள் ஜானகி.

பெண்களின் இந்தப் பேச்சு ஆரியனுக்குள் எரிச்சலை மூட்டியது.

“பாட்டி… இதுக்கு எதுக்கு இப்போ கோயில் எல்லாம்?” என்று இடைமறித்தான்.

“இல்லப்பா… அவ வெளியே போனாலே ஏதாச்சும் வம்பு வருது… அதான்…” என்று பாட்டி இழுக்க,

ஆரியனின் கண்கள் சட்டென மாறின.

“அப்படி என்ன வம்பு வந்துச்சு இப்போ?”

அவன் குரலில் இப்போது தீவிரம் அதிகமாக இருந்தது.

பாட்டி, அன்று ஒருவன் யஷ்வியை அடித்த சம்பவத்தை விவரமாகச் சொல்லச் சொல்ல, ஆரியனின் முகம் மெல்ல மாறியது. அவன் தாடைகள் இறுகின.

அருகில் இருந்த ஜானகி, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலப் பேசத் தொடங்கினாள்.

“அவன்மேல தப்பு இல்ல அத்தை… வளர்ப்பு அப்படி! ஒழுங்கான அம்மா வயித்துல பிறந்திருந்தா இப்படித் தரங்கெட்டு நடந்திருப்பானா? அவன் என்னன்னா…”

என்று அவள் தொடர முயன்றபோது, ஆரியனின் பொறுமை எல்லை மீறியது.

“போதும்! நிறுத்துங்க!”

என்று இடி முழக்கமாய் கத்தினான்.

அந்தக் கோபத்தின் பின்னால், யாராலும் உணர முடியாத ஒரு தாங்க முடியாத குற்ற உணர்ச்சி தகித்துக் கொண்டிருந்தது.

“உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா? எப்பப் பார்த்தாலும் யாரையாவது ஒருத்தரைப் பற்றி தப்பா பேசிக்கிட்டே இருக்கணுமா? போங்க… போய் உங்க வேலையைப் பாருங்க முதல்ல!”

என்று அவன் சீற, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“இவனுக்கு என்னாச்சு? ஏன் இப்படி எகிறுறான்?” என்று பாட்டி மெல்ல முணுமுணுக்க,

“அத்தை… நாம இங்கேயே நின்னா, அவன் பார்வையாலேயே நம்மளை எரிச்சுடுவான் போல. வாங்க, போவோம்.” என்று கீதா கூற, அனைவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.

திடீரென அந்த ஹாலில் கனத்த அமைதி நிலவியது.

ஆரியன் மெதுவாகச் சென்று சோபாவில் அமர்ந்து, தலையைப் பின்னால் சாய்த்துக் கண்களை மூடிக் கொண்டான்.

“யாருன்னு தெரியாமலே இவ்வளவு பேசுறாங்களே… அங்கே இருந்தது நான்தான் என்று தெரிந்தால் என்ன செய்வாங்க?”

அவன் மூச்சு கனத்தது.

தான் செய்த செயலின் விபரீதம் இப்போதுதான் அவனுக்கு முழுமையாகப் புரிந்தது.

அவள் அழுது துடித்த முகம்…

பயத்தில் நடுங்கிய குரல்…

தஞ்சம் தேடி லிஃப்ட்டிற்குள் தன்னை அவள் கட்டியணைத்த அந்தத் தருணம்…

எல்லாமே அலை அலையாக வந்து அவன் மனதை அலைக்கழித்தன.

“சீ!”

என்று தன் தலையிலேயே அடித்துக் கொண்டான்.

“முதல்ல அவகிட்ட பேசணும். அன்று நான்தான் அவள அடிச்சேன்னு யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொல்லணும். இல்லைன்னா… மொத்த குடும்பமும் சேர்ந்து என்னைக் கொன்னாலும் கொன்னுடுவாங்க…”

என்று கசப்பாகச் சிரித்துக் கொண்டான்.

ஆனால், அவன் அடிமனதிற்குத் தெரியும்…

அவன் பயப்படுவது குடும்பத்தின் பழிச்சொல்லுக்காக மட்டுமல்ல.

யஷ்வியின் கண்களில், தன்னை ஒரு குற்றவாளியாகப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

தொடரும்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top