❤️அத்தியாயம் (13)

கடந்த இரண்டு நாட்களாக யஷ்வி தன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள். வெளி உலகமே அவளுக்குப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்தவர்களும் அவளது மனநிலையைப் புரிந்துகொண்டு, யாரும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை. உணவுகூட அவள் அறைக்கே வந்து சேர்ந்தது.

நந்திதா ஒரு நிழலைப் போல அவளுடனேயே இருந்தாள். ருத்ரனும் மித்ரனும் அவ்வப்போது வந்து நலம் விசாரித்துச் சென்றனர். அனைவரது அன்பும் அவளுக்கு ஆறுதல் அளித்தாலும், ஆரியனின் மௌனம் அவளை ஏதோ ஒரு வகையில் அச்சுறுத்திக் கொண்டே இருந்தது.

அன்று அவளை வீட்டில் கொண்டு வந்து விட்டதோடு சரி; அதன்பிறகு ஆரியன் அவள் கண்ணில் படவே இல்லை. அவன் வராதது அவளுக்குப் பெரும் நிம்மதிதான். ஆனாலும், அன்று சாலையில் நடந்த கசப்பான சம்பவங்களும், அவன் இந்த வீட்டுப் பையன் என்று தெரிந்த அதிர்ச்சியும் அவளுக்குள் ஒரு தீராத பதற்றத்தை விதைத்திருந்தது. அவனை மீண்டும் சந்திப்பதைத் தவிர்க்கவே அவள் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தாள்.

“இப்படி எவ்வளவு நாள்தான் தப்பித்து ஓட முடியும்?” என்று அவளது உள்மனம் கேள்வி கேட்டது.

“எப்படியாவது ருத்ரனிடமும் மித்ரனிடமும் பேசி அமெரிக்காவுக்கே திரும்பிப் போய்விட வேண்டும்.”

என்று ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தாள்.

அந்தச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தபோது, யாரோ அவள் கன்னத்தில் மென்மையாகத் தட்டியது போல இருக்க, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

அங்கே நந்திதா நின்றிருந்தாள்.

“என்னடி ஆச்சு உனக்கு? எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்… அப்படி என்ன யோசனை?”

என்று கவலையுடன் கேட்டாள்.

“அது… ஒன்னுமில்லைக்கா…” என்று தடுமாறினாள் யஷ்வி.

“சரி வா. அப்படியே கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாம்.”

என்று நந்திதா அழைக்க, யஷ்வியின் முகம் சட்டென்று வெளுத்தது.

“ஐயோ… இல்லக்கா! நான் வரல.”

என்று பதட்டமாக மறுத்தாள்.

“ஏன் இப்படி பயப்படுற? வீட்டில் இப்போ யாரும் இல்லை. பாட்டியும் மத்தவங்களும் கோயிலுக்குப் போயிருக்காங்க. நாம ரெண்டு பேர் மட்டும்தான் இருக்கோம். கொஞ்ச நேரம் தோட்டத்தில் உட்கார்ந்து பேசலாம்னுதான் கூப்பிட்டேன். வா…”

என்று நந்திதா வற்புறுத்த, வேறு வழியின்றி அவளுடன் நடக்கத் தொடங்கினாள் யஷ்வி.

தோட்டத்தில் இருந்த கல் பெஞ்சில் இருவரும் அமர்ந்து ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

திடீரென அவர்கள் பின்னால் இருந்து,

“ஹேய்!”

என்று ஒரு பலமான குரல் கேட்டது.

இருவரும் திடுக்கிட்டு எழுந்து நின்றனர். யஷ்விக்கோ இதயம் ஒரு நிமிடம் நின்றே போனது.

அவர்கள் மிரண்டு நிற்பதைப் பார்த்த அந்தப் பெண், கைகளைக் கட்டிக்கொண்டு குலுங்கிச் சிரித்தாள்.

“பயந்துட்டீங்களா?”

என்று குறும்பாகக் கேட்டுவிட்டு அருகில் வந்தாள்.

நந்திதாவும் யஷ்வியும் “யார் இந்தப் பெண்?” என்பது போல ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அவளே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“நான் மீனாட்சி… ஆரியன், ருத்ரனோட தங்கை.”

“ஓ… நீங்களா!” என்று நந்திதாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.

“சாரி… எங்களுக்கு அடையாளம் தெரியல.”

“என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா?”

என்று போலி அதிர்ச்சியைக் காட்டினாள் மீனாட்சி.

“ஆனா, உங்க ரெண்டு பேரைப் பற்றியும் எனக்கு அக்கு வேர், ஆணி வேர் தெரியுமே! டெய்லி என் அம்மாவும் சித்தியும் உங்களைப் பற்றித்தான் பேசிக்கிட்டே இருப்பாங்க. அதான் நேர்ல பார்த்திடலாம்னு ஓடி வந்துட்டேன்!”

“அப்படியா? எங்களுக்கும் உங்களைப் பற்றி சொன்னாங்க. ஆனா நேர்ல பார்த்ததில்லை. போட்டோவில் பார்த்தது சரியா ஞாபகம் இல்லை.”

என்றாள் நந்திதா.

“அதுக்கென்ன? இப்போதான் லைவ்வா வந்துட்டேனே! இனி நாம மூணு பேரும் ஃப்ரெண்ட்ஸ்… ஓகே?”

என்று அவள் கையை நீட்ட, நந்திதாவும் யஷ்வியும் சிரித்துக் கொண்டே கை குலுக்கினர்.

அந்த நேரத்தில் கோயிலுக்குப் போயிருந்தவர்கள் உள்ளே நுழைய,

“பாட்டி!”

என்று கத்திக்கொண்டே ஓடிச் சென்று பாட்டியைக் கட்டிக்கொண்டாள் மீனாட்சி.

“நல்லா இருக்கியா வாயாடி? இப்போதான் வர்றியா?”

என்று பாட்டி கேட்க,

“நல்லா இருக்கேன் பாட்டி… ஆனா உங்க மேல செம கோவம்!”

என்று உதட்டைச் சுழித்தாள்.

“ஏண்டி… நாங்க என்ன செஞ்சோம்?”

என்று ஜானகி கேட்டார்.

“இவங்களைப் பற்றி என்கிட்ட சொல்லி சொல்லி இங்கே வர வச்சுட்டு, என்னைப் பற்றி மட்டும் இவங்ககிட்ட ஒரு வார்த்தைகூட சொல்லலையே!”

என்று அவள் அங்கலாய்க்க, அங்கிருந்தவர்கள் வெடித்துச் சிரித்தனர்.

“உன்னைப் பற்றி எதைச் சொல்லச் சொல்ற? காலேஜ்ல பிட் அடிச்சு மாட்டுனதைச் சொல்லவா? இல்லை ஆரியன் உன்னை அடிச்சு ஹாஸ்டல்ல போட்டதைச் சொல்லவா?”

என்று கீதா கிண்டலாகக் கேட்க,

மீனாட்சி பல்லைக் கடித்தாள்.

“அது மட்டுமா? உன் ஃப்ரெண்டுக்குத் திருட்டுக் கல்யாணம் பண்ணி வைக்கப் போய், யாரோகிட்ட அடிபட்டு வந்த கதையைச் சொல்லவா? இல்லை போலீஸ்காரனுக்கு லவ் லெட்டர் கொடுத்து, அவன் பொண்டாட்டி கம்ப்ளைன்ட் பண்ணி, ஆரியன் உன்னை ஒரு நாள் முழுக்க கேட்ட்ல நிக்க வச்சதைச் சொல்லவா?”

என்று வள்ளியம்மை அடுக்கிக் கொண்டே போக,

“அம்மா… அது என் ஃப்ரெண்டுக்காக…”

என்று தப்பிக்கப் பார்த்தாள் மீனாட்சி.

“ஆனா நீதானே போய் கொடுத்த?”

என்று ஜானகி உடனே கவுண்டர் கொடுக்க,

மீனாட்சி கையைத் தூக்கிச் சரணடைந்தாள்.

“போதும்… போதும்! கிளம்புங்க எல்லாரும். இன்னுமா இவ்வளவு ஞாபகம் வச்சிருக்கீங்க?”

என்று சொல்ல, அவளது வால்தனம் கொஞ்சமும் குறையவில்லை.

பெரியவர்கள் சிரித்துக்கொண்டே நகர்ந்தனர்.

மீனாட்சி திரும்பி நந்திதாவையும் யஷ்வியையும் பார்த்தாள்.

இருவரும் சிரிப்பை அடக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்க,

“கஷ்டப்படாதீங்க… சிரிச்சுடுங்க!”

என்று மீனாட்சி சொல்ல,

இருவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

அந்தச் சிரிப்புச் சத்தம், கடந்த சில நாட்களாக அந்த வீட்டில் நிலவிய கனத்த அமைதியை மெல்ல மெல்லக் கலைக்கத் தொடங்கியது.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top