❤️அத்தியாயம் 《19》

அந்த மாலைப் பொழுது, வீரன் சக்கரவர்த்தியின் வீடே ஒரு முக்கியமான முடிவிற்காகக் காத்திருந்தது. ஜானகி மெதுவாகப் பேச்சைத் தொடங்கினார்.

“அப்பா… எப்ப நிச்சயத்தை வச்சுக்கலாம்? நாள் பார்க்கச் சொல்லிடலாமா?”

சக்கரவர்த்தி தலையசைத்தபடி, “நல்ல விஷயம்மா. ஜோசியர் கிட்ட சொல்லி ஒரு நல்ல முகூர்த்தம் பார்க்கச் சொல்றேன்,” என்றார்.

அனைவரும் அந்தத் திருமணப் பேச்சில் ஆழ்ந்திருக்க, திடீரென்று ஆரியன் ஒரு இடியைப் போல எழுந்து நின்றான்.

“தாத்தா… எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லை!”

கூடத்தில் இருந்த சிரிப்புச் சத்தங்கள் அனைத்தும் அடங்கி, ஒரு கனத்த அமைதி நிலவியது.

“என்னப்பா சொல்ற?” என்று தாத்தா அதிர்ச்சியுடன் கேட்டார்.

“ஆமாம் தாத்தா… நான் ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன். அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்,” என்று ஆரியன் கூறியதும், ஜமுனா சீறினார்.

“இது என்ன ஆரியன்? விளையாடுறியா? ரெண்டு வருஷமா என் பொண்ணுதான் இந்த வீட்டுக்கு மருமகளா வரப்போறான்னு முடிவாயிடுச்சு. இப்போ வந்து இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?”

ஆரியன் சற்றும் தாமதிக்காமல்,

“நான் எப்ப உங்க பொண்ணைக் கட்டிக்கிறேன்னு சொன்னேன்? தாத்தா சொன்னதை நீங்களாத்தான் அப்படி நினைச்சுக்கிட்டீங்க,” என்றான்.

நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட சக்கரவர்த்தி கோபமாக ஏதோ சொல்ல வர, ருத்ரன் குறுக்கே வந்தான்.

“தாத்தா… நீங்க கேட்டப்போ நாங்க யோசிச்சுச் சொல்றோம்னுதான் சொன்னோம். ஆனா இப்போ யோசிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லை.”

“ஏன்?” என்று தாத்தா ஆத்திரமாகக் கேட்டார்.

“ஏன்னா… எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு!”

ருத்ரனின் அந்த ஒரு வரி, அந்த வீட்டின் அஸ்திவாரத்தையே உலுக்கியது.

ஜமுனா நிலைகுலைந்து போனார்.

“ருத்ரா… என்னடா சொல்ற? கல்யாணம் ஆயிடுச்சா?”

ருத்ரன் அமைதியாகத் தலையசைத்தான்.

காமாட்சிப் பாட்டி உடனே ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்.

“அப்பவே சொன்னேன்… யாரும் கேக்கலை! இப்போ யாரோ ஒரு வெள்ளைக்காரியைக் கட்டிட்டு வந்துட்டானே…”

“ஐயோ பாட்டி!” என்று ருத்ரன் எரிச்சலுடன், “நான் கல்யாணம் பண்ணிட்டேன்னுதான் சொன்னேன். வெள்ளைக்காரின்னு நீங்களா கற்பனை பண்ணிக்காதீங்க!” என்றான்.

வள்ளியம்மை மட்டும் அமைதியாக எழுந்து வந்து அவன் அருகில் நின்றார்.

“சரிப்பா… யாரை கல்யாணம் பண்ணிக்கிட்ட? அவ எங்க இருக்கா?”

ருத்ரனின் கண்கள் கூட்டத்தைத் துளைத்தன. ஒரு மூலையில் பயத்தில் உறைந்து நின்ற நந்திதாவைக் கண்டான். நேராகச் சென்று, அவளது நடுங்கும் கரங்களைப் பிடித்து அழைத்து வந்து அனைவரின் முன்னாலும் நிறுத்தினான்.

“இவதான் என் பொண்டாட்டி!”

அந்த ஒரு வார்த்தையில் அனைவரும் கல்லாய் உறைந்தனர்.

நந்திதா கண்ணீர் மல்கத் தலைகுனிந்து நின்றாள்.

அந்த இக்கட்டான சூழ்நிலை எப்படி உருவானது என்பதை மித்ரன் அனைவரிடமும் ஒவ்வொன்றாக விளக்கிச் சொல்லி, தன் தரப்பிலிருந்தும் மன்னிப்பு கேட்டான்.

ஆனால் ஜமுனா மட்டும் சமாதானமாகவில்லை.

குரூரமான சிரிப்புடன்,

“சரி… இந்தப் பொண்ணு கல்யாணத்துல ‘நடத்தை கெட்டவள்’ன்னு சொல்லி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க காரித் துப்பிட்டு போயிட்டாங்க. அந்த நேரத்துல என் வீட்டுப் பையனை கூட்டிட்டு போய் இந்த நடத்தை கெட்டவளுக்குக் கழுத்துல தாலி கட்ட வச்சியா நீ?” என்று மித்ரனைப் பார்த்துக் கொதித்தார்.

“அதை இப்பவே கழட்டிக் கொடுத்துட்டு, அவளை தாராளமா இங்கிருந்து கூட்டிட்டுப் போங்க. தாலி போட்டுக்கிட்டுத்தான் போகணும்னு அவசியமில்லை!” என்றார்.

அந்த வார்த்தையைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரின் ரத்தமும் உறைந்தது.

ருத்ரனின் கண்கள் கோபத்தில் சிவந்தன. நந்திதாவின் கையை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டான்.

“இதுக்கு மேல அவளைப் பத்தி ஒரு வார்த்தை தப்பாப் பேசினீங்கன்னா… நான் மனுஷனா இருக்க மாட்டேன்!” என்று கர்ஜித்தான்.

“இவதான் என் பொண்டாட்டி. நான் தாலி கட்டுன நாள்ல இருந்து என் உயிர் மூச்சு இருக்கிற வரைக்கும் அவதான் இந்த வீட்டு மருமகள். அதை மாற்றிப் பேச யாருக்கும் உரிமை இல்லை!”

ருத்ரன் உறுதியாகச் சொன்னதும், சக்கரவர்த்தி ஆழமாக ஒரு பெருமூச்சு விட்டார். பிறகு ஆரியனை நோக்கித் திரும்பினார்.

“சரி… ருத்ரன் ஏதோ ஒரு சூழ்நிலையில தாலி கட்டிட்டேன்னு சொல்றான். நீ என்னப்பா சொல்ற? உன் முடிவு என்ன?”

“நான்தான் ஆரம்பத்திலேயே சொல்லிட்டேனே தாத்தா… எனக்கு இந்த நிச்சயத்துல துளியும் விருப்பம் இல்லை,” என்றான் ஆரியன்.

“அப்போ… நீ யாரைத்தான் காதலிக்கிற?”

தாத்தாவின் அந்தக் கேள்விக்கு வீடு முழுவதும் பதிலை எதிர்பார்த்து காத்திருந்தது.

ஆரியன் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை.

சட்டென்று மித்ரனின் அருகில் நின்றிருந்த யஷ்வியின் கையைப் பிடித்து அவளை தாத்தாவின் முன்னால் நிறுத்தினான்.

“இவளைத்தான் நான் காதலிக்கிறேன்! யஷ்வியைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்!”

வீட்டில் மீண்டும் ஒரு பேரதிர்ச்சி அலை எழுந்தது.

ஜமுனா அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றார்.

“என்னப்பா நடக்குது இங்க? ஒருத்தன் ‘பொண்டாட்டி’ன்னு ஒருத்தியைக் கூட்டிட்டு வந்து நிக்கிறான்… இன்னொருத்தன் இந்த வீட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஒருத்தியைக் ‘காதலி’ன்னு சொல்றான்! அப்போ என் பொண்ணுங்க நிலைமை என்ன? அவங்க வாழ்க்கையை யார் வாழப்போறது?” என்று ஆவேசமாகக் கத்தினார்.

அப்போது சக்திவேல் குறுக்கிட்டு,

“நாங்க என்னம்மா பண்றது? அவங்க அவங்க விருப்பத்தைச் சொல்லிட்டாங்க. இதுல நாங்க தலையிட முடியாது.

உன் பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் நாங்களே நல்ல இடத்துல வரன் பார்த்து, சீர் செஞ்சு கல்யாணம் பண்ணி வைக்கிறோம். அது எங்க பொறுப்பு,” என்றார்.

ஜமுனா எகத்தாளமாகச் சிரித்தார்.

“என்ன பேசுறீங்க நீங்க? என் பொண்ணுங்களுக்குச் சீர் செய்ய வக்கில்லாம நான் இங்க வந்து நிக்கிறேனா? கௌரவம், பாரம்பரியம்னு பேசிட்டு இப்போ இப்படி அநியாயம் பண்றீங்களே!”

உடனே கதிர்வேல் கறாராக,

“இங்க பாரு ஜமுனா… பசங்க ஒரு முடிவை உறுதியா சொல்லிட்டாங்க. நீ வீணா வீட்டை ரணகளமாக்காம இரு,” என்றார்.

“ஓ… இப்போ நான் தான் வில்லி! நான் தான் பிரச்சனை பண்றேனா? சரி… இந்த ரெண்டு கல்யாணமும் என்னைத் தாண்டி எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்!” என்று சவால் விட்ட ஜமுனா, தன் மகள்களையும் கணவனையும் அழைத்துக்கொண்டு புயலென அங்கிருந்து கிளம்பினார்.

சுஜித்ரா ஆரியனைப் பார்த்து ஏமாற்றத்துடன் அழுதபடியே சென்றாள். தாரணி மட்டும் ருத்ரனை எரித்துவிடும் பார்வையுடன் பார்த்துவிட்டு வெளியேறினாள்.

அவர்கள் சென்றதும், தாத்தா மித்ரனைப் பார்த்து,

“உங்க அம்மாவை உடனே வரச் சொல்லுப்பா. பெரியவங்க எல்லாரும் பேசி ஒரு முடிவெடுக்கலாம்,” என்றார்.

“சரிங்க தாத்தா,” என்றான் மித்ரன்.

பிறகு ஆரியன் தாத்தாவிடம்,

“யஷ்வியோட பெரியப்பாகிட்ட நான் ஏற்கனவே பேசிட்டேன் தாத்தா. அவரும் கிளம்பி வர்றேன்னு சொல்லியிருக்காரு,” என்றான்.

தாத்தா எதுவும் பேசாமல், பாரமான மனதுடன் அங்கிருந்து நகர்ந்தார்.

அனைவரும் சென்றபின், ஆரியன், யஷ்வி, ருத்ரன், நந்திதா, மித்ரன் மற்றும் மீனாட்சி மட்டும் அங்கே நின்றிருந்தனர். அந்த இடமே கனத்த அமைதியில் மூழ்கியிருந்தது.

மித்ரன் மெதுவாக ஆரியனின் அருகே வந்து,

“என்ன அண்ணா… திடீர்னு இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுட்டீங்க?” என்று கேட்டான்.

“என்ன குண்டு?” என்று ஆரியன் சாதாரணமாகக் கேட்டான்.

“இல்ல… யஷ்வியை லவ் பண்றேன்னு சொன்னீங்களே… நிஜமாவேவா?”

ஆரியன் ஒரு கணம் யஷ்வியை ஆழமாகப் பார்த்தான். அவளது கண்கள் இன்னும் பயத்திலும் ஆச்சரியத்திலும் விரிந்திருந்தன.

பிறகு மித்ரனை நோக்கி மெதுவாகப் புன்னகைத்தபடி,

“ஆமாடா… காதலிச்சா காதலிக்கிறேன்னுதான் சொல்லணும். வேற என்ன சொல்லணும்?” என்றான்.

அவன் பேச்சு யஷ்வியின் இதயத்தில் ஒரு புதிய படபடப்பை உருவாக்கியது.

அதே நேரத்தில், மீனாட்சி ஓரக்கண்ணால் மித்ரனைப் பார்த்து,

‘பாத்தியா… என் அண்ணாவே கெத்தா ஒத்துக்கிட்டாரு. நீதான் இன்னும் “போடி… போடி…”ன்னு சொல்லிட்டு இருக்க!’ என்பது போல நக்கலாகச் சிரித்தாள்.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top