❤️அத்தியாயம் 《24》

ஆரியனின் அலுவலகத்திற்குச் சென்ற ருத்ரன், நேராக அவனுடைய அறைக்குள் சென்றான். கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவனைப் பார்த்த ஆரியன்,

“வாடா… என்ன திடீர்னு இந்தப் பக்கம்? என்ன விஷயம்?” என்று கேட்டான்.

“உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசிட்டுப் போகலாம்னுதான் வந்தேன், அண்ணா,” என்றான் ருத்ரன்.

“ஏன்? இதைப் பற்றி வீட்டில் பேச முடியாதா?” என்று ஆரியன் கேட்க,

“வீட்டில் பேச முடியாத விஷயத்தைப் பேசத்தான் இங்க வந்தேன்,” என ருத்ரன் பதிலளித்தான்.

“சரி, சொல்லு… அப்படி என்ன விஷயம்?”

“எல்லாம் மீனா கல்யாணத்தைப் பற்றித்தான், அண்ணா.”

“டேய்! அவ இன்னும் படிச்சிட்டு இருக்காள்டா. அதுக்குள்ள கல்யாணத்தைப் பற்றிப் பேச என்ன அவசரம்?” என்று ஆரியன் சற்று கோபமாகவே கேட்டான்.

உடனே ருத்ரன் நக்கலாக,

“யஷ்வி அண்ணியும் அப்போ படிச்சிட்டுத்தான் இருந்தாங்க… அப்போ அவங்களை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டது மட்டும் சரியா?” என்று கேட்டான்.

“டேய்! அது வேற, இது வேற! நான் அவளைக் கல்யாணம் பண்ணாம இருந்திருந்தா, இந்நேரம் தாத்தா எனக்கு அந்த சுஜித்ராவைக் கட்டி வச்சிருப்பாரு. அந்த பயத்துலதான் நான் அவசரமா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா மீனா விஷயம் அப்படி இல்லையே. அவ படிப்பு முடிஞ்ச உடனே நல்லபடியா கல்யாணத்தைப் பண்ணி வைப்போம்,” என்றவன், சற்று நிதானித்து,

“சரி, இப்போ எதுக்கு அவளுக்கு அவசரமா கல்யாணம் பண்ணணும்னு சொல்ற? முதல்ல அதச் சொல்லு,” என்றான்.

ருத்ரன், நந்திதா சொன்ன எல்லா விஷயங்களையும் ஆரியனிடம் விரிவாகச் சொன்னான். அதைக் கேட்டதும் ஆரியன் அப்படியே அமைதியாகிவிட்டான்.

தொடர்ந்து பேசிய ருத்ரன்,

“நந்திதா சொன்னாங்கன்னு மட்டும் நான் இங்க வரல, அண்ணா. கொஞ்ச நாளாவே வீட்டை நீயே கவனிச்சிட்டு இருக்க… யாருமே சரியில்லை. வீடு முன்ன மாதிரி இல்ல. மீனா கல்யாணம் நடந்தா, நம்ம வீடு மறுபடியும் பழையபடி கலகலப்பா மாறும்னு எனக்குத் தோணுது,” என்றான்.

“சரிடா… நீ மீனாவுக்கு போன் பண்ணி இந்த வாரம் வீட்டுக்கு வரச் சொல்லு. நாம அவகிட்ட நேர்ல பேசணும்,” என்றான் ஆரியன்.

“அண்ணா…” என்று ருத்ரன் ஏதோ சொல்ல வந்துவிட்டு தயங்கி நின்றான்.

“என்னடா… சொல்ல வந்ததைச் சொல்லு, ருத்ரா,” என்றான் ஆரியன்.

“அண்ணா… ஒருவேளை அவ யாரையாவது லவ் பண்றேன்னு சொன்னா என்ன பண்றது?”

“அவ அப்படிச் சொல்ல மாட்டா. அவ யாரையும் லவ் பண்ணலன்னு எனக்கு நல்லாத் தெரியும்.”

“உங்களுக்கு எப்படி, அண்ணா, அவ்வளவு உறுதியாத் தெரியும்?”

“அவ யாரையாவது காதலிச்சிருந்தா, கண்டிப்பா நம்ம வீட்ல யார்கிட்டயாவது சொல்லியிருப்பா. என்கிட்ட சொல்ல பயந்தா கூட, உன்கிட்ட கண்டிப்பா சொல்லியிருப்பா. உன்கிட்ட அப்படி ஏதாச்சும் சொன்னாளா?” என்று ஆரியன் கேட்டான்.

ருத்ரன் சட்டென,

“ஐயோ அண்ணா… அப்படியெல்லாம் அவ ஒன்னும் சொல்லல,” என்றான்.

“அப்புறம் என்ன? நாம கல்யாண வேலைகளைப் பார்க்கலாம். அவளை வரச் சொல்லு. வந்த உடனே பேசிட்டு, தாத்தாவோட ஆசைப்படியே மாப்பிள்ளை பார்ப்போம்,” என்றான் ஆரியன்.

“சரி அண்ணா… அப்புறம், யஷ்வி அண்ணிகிட்ட பேசினீங்களா?”

“எங்க பேச விடுறாங்க? நான் போன் பண்ணாலும் பெரியப்பாகிட்ட குடுத்துட்டுப் போயிடுறா. அப்புறம் எப்படிப் பேசுறது? சரி விடு… இப்போ மீனா கல்யாண விஷயம் ஆரம்பிச்சா, அவ கண்டிப்பா இங்க வந்துதானே ஆகணும்? அப்போ பார்த்துக்கலாம்,” என்றான் ஆரியன்.

“சரி அண்ணா… நான் கிளம்புறேன். நீங்க எப்ப வருவீங்க?” என்று ருத்ரன் கேட்டான்.

“வேலை கொஞ்சம் இருக்கு, ருத்ரா. அதை முடிச்சிட்டு வர்றேன். நீ கிளம்பு,” என்றான் ஆரியன்.

“சரி,” என்று சொல்லிவிட்டு ருத்ரனும் அங்கிருந்து கிளம்பினான்.

நந்திதா வீட்டில்,

“அக்கா… இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்னு இப்படி வந்து நிக்கிற?” என்று கேட்டான் மித்ரன்.

“முதல்ல நீ ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்ற? அதச் சொல்லு,” என்று நந்திதா மடக்கினாள்.

“அக்கா… இப்போ எனக்கு பிசினஸ்ல ஏகப்பட்ட டென்ஷன். இதுல நீ வேற கல்யாணம் பண்ணிக்க சொல்லி ஏன் இப்படித் தொல்லை பண்ற?” என்று கடுப்பாகக் கேட்டான்.

“நாங்களா உன்ன இந்த பிசினஸைப் பார்த்துக்கச் சொன்னோம்? முதல்ல நீ என்ன சொன்ன? இங்க இருக்கிற சொத்து, பிசினஸ் எல்லாத்தையும் விட்டுட்டு, நீயும் ருத்ரனும் மதுரையில ஆரம்பிச்ச பிசினஸைப் பார்த்துக்கலாம்னுதானே முடிவு பண்ணீங்க? திடீர்னு அங்க எல்லாத்தையும் ருத்ரன்கிட்ட கொடுத்துட்டு, இங்க அப்பாவோட பிசினஸைப் பார்த்துக்கிறேன்னு வந்துட்ட… இதுல நாங்க என்ன பண்ண முடியும்?” என்று நந்திதா படபடவென பொரிந்து தள்ளினாள்.

“ஓ… இப்போ உனக்கு, உன் புருஷன் என் வேலையையும் சேர்த்துப் பார்க்குறதுதான் பிரச்சனையா?” என்று மித்ரன் கிண்டலாகக் கேட்டான்.

“ஆமா, அதுதான் பிரச்சனை! இப்போ நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கப் போறியா இல்லையா?” என்று நந்திதா முடிவாகக் கேட்டாள்.

“ஏன் அக்கா… சொன்னா புரிஞ்சுக்கவே மாட்டியா?” என்று மித்ரன் அலுத்துக்கொண்டான்.

இவர்களுடைய பேச்சைப் பாதியிலேயே தடுத்த காயத்ரி,

“சரிம்மா… இப்போவே இதைப் பற்றிப் பேசிட்டு இருக்கணுமா? இங்கதானே இருக்கப்போற? பொறுமையா பேசிக்கலாம். வாங்க, முதல்ல சாப்பிடலாம்,” என்றார்.

“அம்மா… என்னம்மா இங்கேயே இருக்கணும்னு சொல்றீங்க? நான் இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பணும். மீனாவுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க. அவ இந்த வாரம் வீட்டுக்கு வர்றா. மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும் வர்றாங்க. அங்க யஷ்வியும் இல்லை… நான்தான் கூட இருந்து எல்லாத்தையும் பார்த்துக்கணும்,” என்றாள் நந்திதா.

அதைக் கேட்டதும் மித்ரனின் மனதுக்குள் ஒரு இனம் புரியாத கவலை எழுந்தது.

அவன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து எழுந்து நேராக தன்னுடைய அறைக்குள் சென்றான்.

அறைக்குள் வந்தவனுக்கு ஒரே யோசனை…

‘அவ எப்படி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டா? அப்போ என்னை லவ் பண்றேன்னு சொன்னதெல்லாம் பொய்யா? அவளுக்காகத்தானே நான் கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருக்கேன். ஏற்கனவே அக்கா கல்யாண விஷயத்துல நிறைய பிரச்சனை… ருத்ரன், தாத்தா இன்னும் கோவமாத்தான் இருக்காரு. அதனாலதானே கொஞ்ச நாள் போகட்டும், அவ படிப்பு முடிஞ்ச உடனே கல்யாணத்தைப் பற்றிப் பேசலாம்னு நினைச்சேன். ஆனா அவ திடீர்னு எப்படி இப்படி மாறினா?’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தான்.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top