❤️அத்தியாயம் 《26》

இரண்டு நாட்கள் கழித்து, மீனாட்சி தன் முடிவை வீட்டில் தெரிவித்தாள். அதைக் கேட்டதும், வீட்டில் இருந்த அனைவருக்கும் அளவற்ற மகிழ்ச்சி.

வீரன் தாத்தா, மீனாட்சியைப் பார்த்து, “என் பேத்தி என்னைப் மாதிரிதான் என்று எனக்குத் தெரியும். என் விருப்பத்துக்கு ஏற்ற மாதிரிதான் முடிவெடுப்பா!” என்று பெருமையுடன் கூறியபடியே தன் மீசையை முறுக்கினார். அதைப் பார்த்து ருத்ரனும், ஆரியனும் சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தனர்.

அவர்கள் சென்றதும், மீனாட்சி தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டாள்.

கட்டிலில் அமர்ந்து தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். அதன் முகப்புத் திரையில் (Wallpaper), மித்ரன், ஆரியன், ருத்ரன் மூவரும் இருந்த புகைப்படம் தெரிந்தது. அதைப் பார்த்தவள், மெல்ல மித்ரனின் முகத்தை விரல்களால் வருடியபடி,

“நான் நினைச்சது நடக்கல… என் வீட்ல இருக்கிறவங்க ஆசைப்பட்ட மாதிரியே கல்யாணம் பண்ணிக்கப் போறேன். இனி உங்க வாழ்க்கையில நான் இருக்க மாட்டேன்…” என்று விம்மியவாறே, கைப்பேசியில் இருந்த மித்ரனின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக அழித்தாள்.

மறுபுறம், ஆரியன் யஷ்விக்கு அழைப்பு விடுத்தான்.

“ஹலோ…” என்றாள் யஷ்வி.

“என்ன பண்ற?” என்று கேட்டான் ஆரியன்.

“இந்த நேரத்துல என்ன பண்ணுவாங்க? தூங்குறேன்!” என்று சலிப்புடன் பதிலளித்தாள்.

“சரி, ஓகே… இன்னும் ரெண்டு நாள்ல நான் அங்க வர்றேன்,” என்றான் ஆரியன்.

அதைக் கேட்டதும் பதறிப்போன யஷ்வி,

“ஏன்? ஏன் திடீர்னு இங்க வர்றீங்க?” என்று கேட்டாள்.

“நான் அங்க வர்றதுல உனக்கு என்ன பிரச்சனை?”

“பிரச்சனை ஒன்னும் இல்ல… திடீர்னு வர்றேன்னு சொல்றீங்களே, அதான் கேட்டேன்.”

“மீனாவுக்கு கல்யாணம் முடிவாகியிருக்கு. அடுத்த வாரம் மாப்பிள்ளை வீட்டார் வர்றாங்க. அப்பவே நிச்சயதார்த்தம் வச்சுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. எங்க வீட்டோட மூத்த மருமக நீ. நீ இல்லாம எப்படி? அதான் நான் அங்க வர்றேன். நீ இந்தியா வர ரெடியா இரு. பெரியப்பாகிட்டயும் சொல்லிடு. அவரையும் தயாரா இருக்கச் சொல்லு,” என்றான் ஆரியன்.

“சரி…” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தவள், மனதிற்குள் கதறினாள்.

“ஐயையோ! இப்போ அங்க போனா, எப்படியும் கல்யாணத்தை முடிச்சுட்டுதான் இங்க வர முடியும். அதுவரைக்கும் அவரோடவே இருக்கணுமே! கடவுளே… அவர்கிட்ட இருந்து தப்பிக்கத்தானே படிப்புன்னு பொய் சொல்லி இங்க வந்தேன். இப்போ மறுபடியும் அங்கேயே போகணுமா?”

என்று எண்ணியபடியே, அந்த இரவு முழுவதும் உறக்கமின்றித் தவித்தாள்.

வெளிர் நீல நிற சோபாவில் அமர்ந்து, தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த ஏதோ ஒரு நிகழ்ச்சியை வெற்றுப் பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி. அவளது கண்கள் மட்டும் திரையை நோக்கியிருந்தன; ஆனால் மனம் எங்கோ சிந்தனையில் மூழ்கியிருந்தது.

அந்த நேரத்தில், வீட்டின் பிரதான கதவைத் திறந்துகொண்டு ருத்ரன் உள்ளே நுழைந்தான்.

வீடு அமைதியாக இருப்பதை உணர்ந்தவன், மெல்ல மீனாட்சியின் அருகில் வந்து,

“என்ன மீனா… வீட்ல யாரையும் காணோம்? நீ மட்டும் தனியா என்ன பண்ற?” என்று கேட்டபடியே அவளருகில் அமர்ந்தான்.

அவன் குரல் கேட்டதும் திடுக்கிட்டு நிமிர்ந்தவள்,

“வீட்ல எல்லாரும் ஜோசியரைப் பார்க்க போயிருக்காங்க… அண்ணா,” என்றாள், குரலில் இருந்த தவிப்பை மறைக்க முயன்றபடி.

அவளது பதற்றத்தை ருத்ரன் கவனிக்காமல் இல்லை. அவளது முகத்தையே ஆழமாகப் பார்த்தவன்,

“ஏண்டி… ஒரு மாதிரி இருக்க? உனக்கு இந்த கல்யாணத்துல நிஜமாவே இஷ்டம்தானா? இல்ல ஏதாவது கட்டாயமா?” என்று கேட்டான்.

அந்தக் கேள்வியைக் கேட்டவுடன், மீனாட்சியின் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.

“ஐயோ… அண்ணா! அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல. நான்… நான் நல்லாத்தான் இருக்கேன்,” என்று தடுமாறினாள்.

“இல்ல மீனா… நான் உன்னைக் கவனிச்சுட்டுத்தான் இருக்கேன். முன்னாடி இருந்த மீனா வேற… இப்போ நீ இருக்குற விதம் வேற. உனக்கு ஏதோ ஒண்ணு மனசை உறுத்துது. என்கிட்ட சொல்லணும்னு தோணுச்சுனா தயங்காம சொல்லு… உனக்காக நான் இருக்கேன்,” என்று அழுத்தமாகக் கூறிவிட்டு, அவளது பதிலை எதிர்பார்க்காமல் தன் அறையை நோக்கி நடந்தான்.

தன் அறைக்குள் நுழைந்த ருத்ரன், அடுத்த நொடியே அப்படியே சிலையாக உறைந்து நின்றான்.

அவன் கண்முன் தோன்றிய காட்சி, அவனது இதயத் துடிப்பை ஒரு கணம் அதிகரிக்கச் செய்தது.

அங்கே நந்திதா, குளித்து முடித்துவிட்டு ஈரமான கூந்தலுடன் கண்ணாடி முன் நின்று, தன் தலைமுடியைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அவன் உள்ளே வந்ததை அவள் கவனிக்கவில்லை.

ருத்ரனோ, எதிர்பாராத அந்தச் சூழ்நிலையால் ஒரு கணம் திகைத்துப் போய், என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நின்றான். அறையில் நிலவிய அமைதியை, இருவரின் சுவாச ஓசை மட்டும் உடைத்துக் கொண்டிருந்தது.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top