❤️அத்தியாயம் 《33》

ருத்ரனும் ஆரியனும் தன்னையே பார்ப்பதைக் கவனித்த மித்ரன், ஒருவித சங்கடத்துடன் அங்கிருந்து வெளியேறிவிட்டான்.

மீனாவால் தலைநிமிரவே முடியவில்லை.

‘ஐயோ! அண்ணன்களுக்கு முன்னாடி இப்படி நடந்துக்கிட்டோமே… இப்போ எப்படி அவங்க முகத்தைப் பார்க்கிறது?’ என்று குற்ற உணர்ச்சியில் தவித்தாள்.

அவளை ஒரு நிமிடம் அமைதியாகப் பார்த்த ஆரியன், பிறகு ருத்ரனை நோக்கி,

“சரி வாங்க… கிளம்பலாம்,” என்றான்.

வெளியே நின்றிருந்த போலீஸாரிடம் நடந்தவற்றை விளக்கிய ஆரியன், மித்ரன் ஆத்திரத்தில் ரகுராமைச் சுட்டதையும் கூறினான்.

அந்த அதிகாரி ஆரியனுக்குப் பழக்கமானவர் என்பதால்,

“சரி தம்பி… நாங்க பார்த்துக்கிறோம். நீங்க கிளம்புங்க,” என்று அனுப்பி வைத்தார்.

ஆறு பேரும் ருத்ரனின் காரில் வீடு நோக்கிப் பயணித்தனர்.

கார் முழுவதும் ஒரு கனத்த மௌனம் சூழ்ந்திருந்தது. யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை.

வீடு வந்து சேர்ந்ததும், அங்கிருந்த பெண்கள் நந்திதா, யஷ்வி மற்றும் மீனாவை அணைத்துக்கொண்டு கதறி அழுதார்கள்.

வீரன் சக்கரவர்த்தி, ஆரியனிடமும் ருத்ரனிடமும் நடந்த அனைத்தையும் கேட்டறிந்தார்.

“மித்ரனுக்கு இதனால எதுவும் பிரச்சனை வராதுல்ல?” என்று அவர் கவலையுடன் கேட்டார்.

“வராது தாத்தா. நாங்க போலீஸ் கிட்ட பேசிட்டோம்,” என்றான் ருத்ரன்.

“நம்ம வீட்டுப் பொண்ணுக்காக அவன் ஒரு கொலையே செஞ்சிருக்கான். அவனுக்கு எந்தப் பாதிப்பும் வராம பார்த்துக்க வேண்டியது நம்ம பொறுப்பு,” என்று பெரியவர் உறுதியாகக் கூறினார்.

அதன்பின் அனைவரும் தத்தம் அறைகளுக்குச் சென்றனர்.

ஆரியனின் அறைக்குள் நுழைந்ததும், யஷ்வி அவனைக் கட்டிக்கொண்டு மீண்டும் அழத் தொடங்கினாள்.

“ஏய்… இப்போ எதுக்குடி அழுகுற?” என்று அவன் மென்மையாகக் கேட்டான்.

“நான் ரொம்ப பயந்துட்டேன் மாமா…” என்றாள்.

“சரி விடு… இப்போதான் எல்லாம் சரியாகிடுச்சே,” என்று ஆறுதல் கூறினான்.

அவனது அணைப்பில் இருந்தபடியே,

“இப்படியெல்லாம் படத்துலதான் பார்த்திருக்கேன்… ஆனா இன்னைக்கு நேர்ல பார்க்கும்போது…” என்று நடுக்கத்துடன் சொன்னாள்.

அவளது உதட்டிலிருந்த காயத்தை மெதுவாக வருடிய ஆரியன்,

“ரொம்ப வலிக்குதாடி?” என்று கேட்டான்.

“அவர் அடிச்சப்போ வலிச்சது… ஆனா இப்போ உங்கூட இருக்கும்போது அந்த வலி தெரியல,” என்றாள் யஷ்வி.

“சாரிடா… உன்னை இன்னும் கவனமாப் பார்த்துக்கிட்டு இருந்திருக்கணும்,” என்று வருந்தினான்.

“உங்க மேல தப்பில்லை. நாங்கதான் தனியா கோயிலுக்குப் போனது தப்பு,” என்று அவள் அவனைத் தேற்றினாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் ஆறுதல் கூறியபடி படுத்தனர்.

சிறிது நேரம் கழித்து யஷ்வி மெதுவாக,

“மித்ரன் – மீனாட்சி பத்தி என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்டாள்.

“அவ பயத்துல அவனைப் பிடிச்சிருப்பா… அவ்வளவுதான்,” என்றான் ஆரியன் இயல்பாக.

“எனக்கு அப்படித் தோணலையே…” என்று யஷ்வி இழுக்க,

“எதுவா இருந்தாலும் அவங்களே சொல்லட்டும். அதுவரைக்கும் இதை யார்கிட்டயும் பேசாத,” என்று அவளை அமைதிப்படுத்தினான்.

அடுத்த அறையில், ருத்ரன் தன் மனைவி நந்திதாவைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.

“இப்ப எதுக்கு நந்திதா அழுதுட்டு இருக்க?” என்று கேட்டான்.

“என்னாலதான் இவ்வளவு பிரச்சனையும்…” என்று அவள் விம்மினாள்.

“இங்க பாரு… இதையே சொல்லிட்டு இருந்தா எனக்குக் கோபம் வரும். எல்லாம் முடிஞ்சிடுச்சு. இனி போலீஸ் பார்த்துப்பாங்க,” என்றான்.

நந்திதா சட்டென்று அவன் பக்கம் திரும்பி,

“இதனால மித்ரனுக்கு ஏதும் பிரச்சனை வராதுல்ல?” என்று கேட்டாள்.

“வராதுன்னு சொல்லிட்டேன்ல… நீ இப்போ தூங்கு,” என்றான்.

அவள் தயக்கத்துடன்,

“இல்ல… மீனாவும் மித்ரனும்…” என்று ஆரம்பிக்க,

ருத்ரன் அவள் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.

“உங்களுக்குப் மித்ரன் மேல கோபமா?” என்று கேட்டாள்.

“என் தங்கைக்காக அவன் உயிரையே கொடுக்கத் துணிஞ்சிருக்கான். அவன் மேல எனக்கு ஏன் கோபம் வரப்போகுது? ஆனா, அவங்க மனசுல என்ன இருக்குன்னு அவங்களே சொல்லட்டும். அதுவரைக்கும் நாம எதையும் கற்பனை பண்ணிக்க வேணாம்,” என்று கூறி அவளை அணைத்தபடி உறங்கினான்.

 

மறுநாள் காலை…

ஹாலில் நந்திதாவும் யஷ்வியும் ஏதோ பேசிக்கொண்டிருக்க, மீனா மட்டும் எதிலோ தொலைந்தவள் போல அமைதியாக அமர்ந்திருந்தாள்.

அப்போது ருத்ரனும் ஆரியனும் வந்து சோபாவில் அமர்ந்தனர்.

தேநீர் கொண்டு வந்த வள்ளியம்மை,

“எல்லாரும் போய் சீக்கிரம் தயாராகுங்க… மாப்பிள்ளை வீட்ல இருந்து வர்றாங்க,” என்றார்.

அப்போதுதான் தன் அறையிலிருந்து வெளியே வந்த மித்ரனின் காதுகளிலும் அந்தச் செய்தி விழுந்தது.

அதைக் கேட்டதும் அவன் நெஞ்சு ஒரு நிமிடம் கனத்துப் போனது.

எதையும் வெளிக்காட்டாமல் ஹாலுக்குள் வந்தான்.

அவனைப் பார்த்த மீனா, சட்டென்று எழுந்து தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

சிறிது நேரத்தில் மாப்பிள்ளை வீட்டினர் வந்தனர்.

வீரன் சக்கரவர்த்தி அவர்களை அமர வைத்துப் பேச்சைத் தொடங்கினார்.

“சொல்லுங்கம்மா… ஏதோ சொல்லணும்னு சொன்னீங்களே?”

மாப்பிள்ளையின் அம்மா தயக்கத்துடன் பேச ஆரம்பித்தார்.

“ஐயா… எங்களை மன்னிச்சிடுங்க. இந்தத் திருமணம் நடப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. நேற்று நடந்த விபரங்கள் எல்லாம் கேள்விப்பட்டோம். ஏதோ பெரிய தடங்கல் மாதிரி எங்களுக்குத் தோணுது…” என்றார்.

குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஆனால், வீரன் சக்கரவர்த்தி மட்டும் நிதானமாக,

“சரிம்மா… நானும் இதைத்தான் சொல்லணும்னு நினைச்சேன்,” என்றார்.

அவர் சொன்னது அனைவருக்கும் இன்னும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

‘இந்தக் கல்யாணம் நடந்தே ஆகணும்னு அவசரப்பட்டவர், இப்போ இவரே வேண்டாம்னு சொல்றாரே!’ என்று ருத்ரனும் ஆரியனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

மாப்பிள்ளை வீட்டினர் விடைபெற்றுச் சென்றதும், வெற்றிவேல் தன் தந்தையைப் பார்த்து,

“அப்பா! என்ன சொல்றீங்க? நீங்கதானே இந்தத் திருமணம் நடக்கணும்னு பிடிவாதமா இருந்தீங்க?” என்று கேட்டார்.

“நான் அந்த மாப்பிள்ளைதான் வேண்டாம்னு சொன்னேன். ஆனா, கல்யாணம் வேணாம்னு சொல்லலையே!” என்றார் பெரியவர் புதிராக.

“என்னப்பா சொல்றீங்க? எங்களுக்கு ஒரே குழப்பமா இருக்கு,” என்றார் கதிர்வேல்.

ருத்ரனோ பொறுமையிழந்து,

“தாத்தா! என்னன்னு தெளிவாச் சொல்லுங்க,” என்றான்.

“உன்கிட்ட ஏன்டா சொல்லணும்? என் பேத்தி கல்யாணம் நான் ஆசைப்பட்ட மாதிரிதான் நடக்கும். ஆனா மாப்பிள்ளை இவன் இல்லை… வேற ஒருத்தன்!” என்றார்.

காமாட்சி பாட்டி அருகே வந்து,

“சரி… அந்த மாப்பிள்ளை யாருன்னு சொல்லுங்க,” என்றார்.

பெரியவர் மெதுவாக எழுந்து, அங்கிருந்த மித்ரனின் அருகில் சென்றார்.

அவன் கையைப் பிடித்து நடுவில் நிறுத்தியவர்,

“இவன்தான் என் பேத்திக்கு ஏத்த மாப்பிள்ளை!” என்றார்.

மீண்டும் ஒரு பேரதிர்ச்சி!

மித்ரனும் மீனாவும் ஒரு கணம் இந்த உலகத்திலேயே இல்லாதவர்கள் போல திகைத்து நின்றனர்.

உள்ளுக்குள் ஏங்கித் தவித்த ஒரு ஆசை, எதிர்பாராத நேரத்தில் நனவாகியதை அவர்களால் நம்பவே முடியவில்லை.

“நிஜமாவா சொல்றீங்க?” என்று காமாட்சி பாட்டி மகிழ்ச்சியுடன் கேட்டார்.

“ஆமா காமாட்சி… எப்ப இந்தத் தம்பி நம்ம வீட்டுப் பொண்ணுக்காக ஒருத்தனைக் கொல்லத் துணிஞ்சானோ, அப்பவே முடிவு பண்ணிட்டேன். இவனை விட வேற யாரு என் பேத்தியை நல்லாப் பார்த்துக்கப் போறாங்க?” என்றார் வீரன் சக்கரவர்த்தி உறுதியுடன்.

ருத்ரனும் ஆரியனும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்.

வள்ளியம்மை, மித்ரனின் அம்மா காயத்ரியிடம் சென்று,

“அண்ணி! நீங்க என்ன சொல்றீங்க?” என்று கேட்டார்.

“நான் சொல்றதுக்கு என்ன அண்ணி இருக்கு? மீனா மாதிரி ஒரு மருமகள் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும். பாண்டியன் என் அண்ணன்தான். அவனால உங்க வீட்டுப் பொண்ணுக்குப் பிரச்சனை வந்ததுன்னு தெரிஞ்சப்போ எனக்கு ரொம்ப சங்கடமா இருந்துச்சு. ஆனா, இப்போ அவ என் வீட்டு மகளாக வரப்போறாள்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு,” என்று காயத்ரி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

“அப்புறம் என்ன? எல்லாரும் கல்யாண வேலையைப் பாருங்க!” என்று வீரன் சக்கரவர்த்தி உத்தரவிட,

அந்த வீடு முழுவதும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது.

தொடரும்…

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top