விக்ரம் அனைவரையும் துரத்தத் தொடங்கினான். அனைவரும் அவனிடமிருந்து ஓடினார்கள். ஓடிக்கொண்டிருக்கும்போது கோகுல் அஞ்சலியைப் பார்த்து, “அஞ்சலிமா, இங்க வா! இங்க வா!” என்று அழைத்தான். அவளோ,
அண்ணா! அவர் உங்க பக்கம் தான் வராரு, நீங்க இங்க வாங்க!” என்று அழைத்தாள்.
“ஐயோ, உனக்கு விளையாடவே தெரியல!” என்றவன், அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு விக்ரம் வரும் திசையை நோக்கி ஓடினான்.
அஞ்சலி அவன் பின்னால் ஓடினாள். சற்றென்று ஒரு இடத்தில் நின்றவன், “இங்க வாங்க, மச்சா இங்ஙதான் இருக்கணும்!” என்றான். விக்ரம் அவனை நோக்கி வர, அஞ்சலி, “ஐயோ அண்ணா வராரு!” என்று பயந்து ஓட முயன்றாள். ஆனால் கோகுல் அவள் கையைப் பிடித்து இழுத்து, விக்ரம் மீது தள்ளிவிட்டான்.
அவள் விழுவாள் என்று எதிர்பார்க்காத விக்ரம் நிலைதடுமாறி கீழே சரிந்தான். இருவரும் கீழே விழுந்தார்கள்; விக்ரம் கீழே இருக்க, அவனுக்கு மேலே அஞ்சலி. விக்ரம் தன் கண்களில் கட்டியிருந்த துணியை அவிழ்த்துப் பார்த்தான். அவன் முகத்திற்கு மிக அருகில் அஞ்சலியின் முகம் இருந்தது.
அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரின் பார்வைகளும் ஒன்றோடு ஒன்று கலந்தன. கல்யாணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது, ஆனால் இதுபோல் ஒருவருடைய கண்களைப் பார்த்து இன்னொருவர் பேசியது கூட இல்லை. அப்படியே ஒரு நிமிடம் உறைந்து இருந்தார்கள்.
அனைவரும் இதைப் பார்த்துக்கொண்டிருக்க, கோகுல் விக்ரம்-அஞ்சலி அருகில் வந்து அமர்ந்து, தலையைக் சாய்து பார்த்து, “இங்கே எல்லாரும் கண் கட்டி விளையாட வந்தா, நீங்க ரெண்டு பேரும் தனியா என்ன விளையாடிட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.
அவன் கேட்டதும் சுய நினைவுக்கு வந்தவர்கள், சட்டென்று அஞ்சலி, விக்ரம் மேல் இருந்து எழுந்தாள். அவள் எழுந்ததும் விக்ரமும் எழுந்தான். அவர்கள் இருவரும் பதறி எழுவதைப் பார்த்து அனைவரும் சிரித்தார்கள். இருவருக்கும் சங்கடமாக இருந்தது. “போதும் உங்க ரொமான்ஸ்! வீட்ல வச்சுக்கங்க, இப்ப வாங்க விளையாடலாம்!” என்றான் கோகுல். அஞ்சலி அவனை முறைத்தாள்.
அடுத்து நிலாவின் கண்கள் கட்டப்பட்டன.
நிலா அனைவரையும் பிடிக்க ஓடினாள். “ஏய் நிலா, இங்க வாடி! நான் இங்க இருக்கேன், இங்கே வா!” என்று ஒவ்வொரு பக்கமாக ஓடி நிலாவை அழைத்தது ஆதிரை தான். அவள் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி! அவள் அப்படி அழைத்துச் சிரிப்பதைப் பார்த்து கதிர் அப்படியே நின்றுவிட்டான். நான்கு வருடங்களுக்குப் பிறகு தன் தங்கையின் முகத்தில் இந்தச் சிரிப்பைப் பார்க்கிறான். கதிர் அப்படியே நிற்பதைக் கண்ட ஆதிரன் அவன் அருகில் வந்து,
“டேய், என்னடா ஆச்சு?” என்றான். கதிர் கண்கலங்க அவனைப் பார்த்து, “நாலு வருஷத்துக்கு பிறகு என் தங்கச்சி சிரிக்கிறாடா!” என்றான். அதைக்கேட்ட ஆதிரனுக்கும் உணர்ச்சிவசமாக இருந்தது.
அப்போது அவர்கள் அருகில் வந்த கோகுல், “என்ன அண்ணா, ஓடாம நிக்கிறீங்க? அண்ணி இங்க தான் வராங்க!” என்றான். கதிர் சற்றென்று கோகுலை அணைத்துக் கொண்டான். “தேங்க்ஸ் டா, ரொம்ப தேங்க்ஸ்! உன்னால தான் இன்னைக்கு என் தங்கச்சி சிரிக்கிறான்!” என்றான்.
அதைக் கேட்ட கோகுல், “அண்ணா, ஆதிரை எனக்கும் தங்கச்சி தான்!” என்றான். அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே நிலா அவர்கள் அருகில் வர, கோகுல் கதிரைப் பிடித்து நிலாவின் மேல் தள்ளிவிட்டு ஓடிவிட்டான். நிலாவும் கதிரைப் பிடித்து, “அவுட்!” என்று கத்தினாள்.
பிறகு கதிர் கண்களைக் கட்டிக்கொண்டான். அனைவரையும் பிடிக்க அவன் வர, அவனிடமிருந்து தப்பி ஓடியவர்களில் ஆதிரை, ஓடி வந்த வழியில் ஏதோ ஒரு கல்லில் இடறி கீழே விழப் போனாள்.
அவள் விழுவதைக் கவனித்த ஆதிரன், சற்றென்று ஓடிச் சென்று ஆதிரையைத் தாங்கிப் பிடித்தான். அவன் அப்படிச் செய்ததும் பயந்து போய் அவனைப் பார்த்தாள் ஆதிரை. அவளை மெதுவாக விட்டுவிட்டு, “சாரி, கீழ விழப்போறன்னு தான் பிடிக்க வந்தேன்,” என்றான். ஆதிரன் அவளோ, “பரவாயில்லை,” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். அவர்களைத் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கோகுல், ஏதோ நினைத்துச் சிரித்துக் கொண்டான்.
அனைவரும் விளையாடி களைத்து, மதியம் சேர்ந்து சமைத்துச் சாப்பிட்டார்கள். இரவும் கோகுலின் பிடிவாதத்தால் மொட்டை மாடியில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிட்டார்கள். எல்லாம் முடிந்து ஆதிரனின் குடும்பம் கிளம்பத் தயாரானது. கதிர், நிலா ஆதிரை மற்றும் குழந்தைகளின் முகம் கூட வாடியிருந்தது. அவர்களின் முக வாட்டத்தைக் கண்ட லட்சுமி, “நாங்க என்ன ரொம்ப தூரத்திலயா இருக்கோம்? இங்கிருந்து பக்கத்துல தானே, அடிக்கடி நாங்களும் வரோம்,
நீங்களும் எங்க வீட்டுக்கு வாங்க. இதே மாதிரி சந்தோஷமா இருக்கலாம்!” என்றார். பிறகு ஏதோ ஞாபகம் வர கதிரைப் பார்த்து, “ஐயோ, சொல்ல மறந்துட்டேன் கதிர்! இன்னும் ஒரு வாரத்துல எங்க சொந்த ஊர்ல திருவிழா இருக்கு. நாங்க எல்லாம் குடும்பத்தோட அங்க போறோம், நீங்களும் கண்டிப்பா வரணும். பத்து நாள் திருவிழா!” என்றார். கோகுல் கதிரின் அருகில் வந்து, “ஆமா அண்ணா, திருவிழா செம்மையா இருக்கும்! பத்து நாள் தானே, வாங்க!” என்றான். கதிர் நிலா மற்றும் ஆதிரையின் முகத்தைப் பார்த்துவிட்டு, “சரி, கண்டிப்பா வர்றேன்,” என்றான்.
அனைவரும் விடைபெற்று கிளம்பினார்கள். ஆதிரை சர்வேஷைத் தூக்கிக்கொண்டு அறைக்குச் சென்றாள். குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு குளியலறைக்குள் சென்றாள். அவள் குளித்து முடித்து வெளியே வர, நிலா யாழினியைத் தூங்க வைத்துக் கொண்டிருந்தாள். நிலாவின் அருகில் சென்ற ஆதிரை, அவளது தோள்களைப் பிடித்துத் திருப்பி, இருக்க அணைத்துக் கொண்டாள். நிலாவும் அவளை அணைத்து, “ஏண்டி இப்படி பண்ணுன?” என்று கேட்டாள். “சாரிடி, இப்படி பண்ண மாட்டேன். நீ என்கிட்ட பேசு,” என்றாள் ஆதிரை.
“சரிடி, நான் உன்கிட்ட பேசணும்னா ஒரு கண்டிஷன்!” என்றாள் நிலா. “என்ன?” என்பது போல் ஆதிரை பார்க்க, “என் மேல சத்தியமா இனி நீ இந்த மாதிரி தப்பான முடிவு எடுக்க மாட்டேன்னு சொல்லு!” என்றாள் நிலா. “சத்தியமா பண்ண மாட்டேன்டி!” என்றாள் ஆதிரை.
“சரி, தூங்கு நாளைக்கு பேசலாம்,” என்றாள் நிலா. “இன்னைக்கு மனசு ரொம்ப நிம்மதியா அமைதியா இருக்குடி,” என்றாள் ஆதிரை. “ஆமாண்டி, ஆதிரன் அண்ணன் குடும்பம் ரொம்ப நல்லவங்க,” என்றாள் நிலா. “
சரி, நான் தூங்குறேன் நீ அண்ணா ரூமுக்கு போ,” என்றாள் ஆதிரை. “இல்ல, நான் உன் கூடவே இருக்கேன்,” என்றாள் நிலா. “நான்தான் சொல்றேனடி, என்னை நம்பு! இனி அந்த மாதிரி எந்த முடிவும் எடுக்க மாட்டேன்,” என்றாள் ஆதிரை. நிலா சரி என்று சொல்லிவிட்டு, யாழினியை தூக்கபோக யாழினி இங்க இருக்கட்டும் நீபோ என்றாள் ஆதிரை. சரி என்ற நிலா கதிரின் அறைக்குச் சென்றாள்.
அவளைக் கண்டதும் கதிர், “என்ன இங்க வந்துட்ட?” என்று கேட்டார். “
உங்க தங்கச்சி தான் போகச் சொல்லிட்டா,” என்றாள் நிலா. “அவ உன் கிட்ட சொன்னாளா? அவ தான் உன்னோட பேச மாட்டேன்னு சொன்னாளே,” என்றான் கதிர். “ஆனா இன்னைக்குப் பேசிட்டேன். இனி அந்த மாதிரி தப்பான முடிவு எடுக்க மாட்டேன்னு என் மேல சத்தியம் பண்ணிச் சொன்னா,” என்றாள் நிலா. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே கதிரின் போன் அடித்தது.
அவன் அதை எடுத்துப் பேசிவிட்டு, நிலாவைப் பார்த்து, “நிலா, சீக்கிரம் நீயும் ஆதிரையும் கிளம்புங்க! குழந்தைகளை வேலைக்காரி பொண்ணைப் பார்த்துக்கச் சொல்லு,” என்று கூறிவிட்டு கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான். நிலாவும் என்னவென்று தெரியாமலேயே ஆதிரையை அழைத்துக் கொண்டு கதிரின் காரில் ஏறினாள். காரில் ஏறியதும் ஆதிரை, “அண்ணா, யாருக்கு என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு அவசரமா எங்க போகணும்?” என்று கேட்டாள். கதிரோ, “சொல்றேன், அமைதியாக இருங்க!” என்று கூறியவாறு காரை ஸ்டார்ட் செய்து கிளப்பினான்.