💓அத்தியாயம் 《11》

கல்யாணம் முடிந்து ஒரு வருடம் அவர்கள் ரொம்பவே சந்தோஷமாக வாழ்ந்தார்கள். இவர்களைப் போல ஒரு கணவன்-மனைவி இருக்கவே முடியாது என்பது போல அவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள். கௌதம், ஆதிரையை அவ்வளவு அன்பாகப் பார்த்துக் கொண்டான். அவன் வீட்டில் உள்ளவர்களும், ஆதிரை தாய்-தந்தை இல்லாத பெண்  என்று அவளுக்கு இன்னொரு தாய்-தந்தையாக இருந்து பார்த்துக் கொண்டார்கள். 

 

ஆதிரையின் சந்தோஷமான வாழ்க்கையைப் பார்த்த கதிரும் மிகுந்த நிம்மதியுடன் இருந்தான்.

அவர்களின் நாட்கள் இப்படியே அழகாகச் சென்றுகொண்டிருந்தபோது, ஆதிரை கர்ப்பமாக இருக்கிறாள் என்ற சந்தோஷமான செய்தியும் அவர்களுக்குக் கிடைத்தது. அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். அப்படி இருக்கையில், ஒரு நாள் கதிரின் போனுக்கு கௌதமிடமிருந்து அழைப்பு வந்தது.

 

“சொல்லுங்க கௌதம், என்ன விஷயம்?” என்று கேட்டான் கதிர்.

“மச்சான், நீங்க ஆபீஸ்க்கு வெளியே கொஞ்சம் வர முடியுமா?” என்று கேட்டான் கௌதம்.

“என்ன விஷயம்? இவ்வளவு அவசரமா?” என்று கதிர் கேட்க, “அவசரம் தான், நீங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க” என்றான் கௌதம்.

அவசரம் என்று சொன்னதும், 

 

எதைப் பற்றியும் யோசிக்காமல் கதிர் வெளியே வந்தான். கௌதம் காரிலிருந்து இறங்க, அவன் அருகில் சென்ற கதிர், “என்ன ஆச்சு கௌதம்? ஆதிரைக்கு ஏதாவது பிரச்சனையா? அவ நல்லா இருக்கா தானே?” என்று பதட்டத்துடன் கேட்டான். அப்போது காரிலிருந்து ஆதிரை இறங்கினாள்.

 

“அண்ணா, எனக்கு ஒன்னும் இல்ல. ஆனா பேசுறதுக்கு நேரமில்லை, நீங்க கார்ல ஏறுங்க” என்றாள் ஆதிரை.

எதற்கு என்று தெரியாதபோதும், அவள் சொன்னதற்காக கதிர் காரில் ஏறினான். கௌதம் காரை ஓட்டினான். காரினுள் ஏறிய கதிர், “சரி, இப்ப சொல்லுங்க… எங்க போறோம்?” என்று கேட்டான்.

“என் ஃப்ரெண்டுக்கு ஒரு பிரச்சனை அண்ணா, அங்கதான் போறோம்” என்றாள் ஆதிரை.

 

“பிரச்சனையா? அதுக்கு ஏன் என்னை கூட்டிட்டுப் போறீங்க?” என்று கதிர் கேட்க, கௌதம் அவனைப் பார்த்து, “ஒரு சின்ன சப்போர்ட்டுக்குதான் மச்சான்” என்றான்.

“ஐயோ கடவுளே! முக்கியமான மீட்டிங்கை விட்டுட்டு வந்திருக்கேன்” என்றான் கதிர்.

 

“அண்ணா, மீட்டிங்கா முக்கியம்? என் ஃப்ரெண்டுதான் முக்கியம்” என்றாள் ஆதிரை. அவளிடம் அதற்கு மேல் பேச முடியாது என்று அறிந்த கதிர் அமைதியாகிவிட்டான்.

மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, கார் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தது. 

 

அவர்கள் நேராகச் சென்றது ஒரு கல்யாண மண்டபத்தின் முன். அது ஒரு சிறிய கிராமம் என்பதால், மண்டபமும் சிறிதாகவே இருந்தது. இவர்கள் காரைக் கண்டதும் அங்கிருந்தவர்களிடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டது. காரை நிறுத்திவிட்டு, கௌதமும் ஆதிரையும் நேராக உள்ளே சென்றார்கள். 

கதிரும் அவர்கள் பின்னால் சென்றான்.

உள்ளே சென்றபோது அவர்கள் கண்ட காட்சி: ஐயர் கையில் இருந்த தாலியை வாங்கிய மாப்பிள்ளை, அதை  நிலா வின் கழுத்தில் கட்டத் தயாராக இருந்தான். அதைப் பார்த்த ஆதிரை, “நிறுத்துங்க!” என்று கத்தினாள்.

 

அவள் கத்தியதால் அனைவரும் அவளைத் திரும்பிப் பார்த்தனர். “இந்தக் கல்யாணத்துல நிலா வுக்கு விருப்பம் இல்லை. விருப்பம் இல்லாம நீங்க எப்படி கல்யாணம் பண்ணி வைக்கலாம்?” என்று கேட்டாள் ஆதிரை. 

அவர்களும் அவளைப் பார்த்து, யாருமா நீ? நல்ல காரியம் நடக்கிற இடத்தில் வந்து

 

இப்படி அபசகுனமாகப் பேசுறீங்க? என் பொண்ணு முழு விருப்பத்தோடுதான் இந்தத் திருமணம் நடக்குது,” என்று நிலாவின் பெற்றோர் ஆவேசமாகக் கூறினார்கள்.  “அவ விருப்பத்தோடு நடக்குதுன்னு அவ சொல்லட்டும் நீங்க சொல்லாதீங்க எனறாள் ஆதிரை. 

அவ எதுக்குச் சொல்லணும்? அவளைப் பெத்தவங்க நாங்க, நாங்க சொல்றதுதானே சரி!” என்றார்கள்.

“ஆனா, கல்யாணம் பண்ணிக்கப்போறது அவ. அவளே சொல்லட்டும்!” என்றாள் ஆதிரை. இதைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவரும் அவர்கள் அருகில் வர, 

 

கதிரும் கௌதமும் ஆதிரை அருகில் சென்று அவளுக்குத் துணையாக நின்று கொண்டனர்.

ஊர் தலைவர் முன்னே வந்து, இவர்கள மூவரையும் பார்த்து, “யார் நீங்க? எங்கிருந்து வந்திருக்கீங்க? ஏன் இப்படி ஒரு நல்ல காரியம் நடக்கிற வீட்ல வந்து பிரச்சனை பண்றீங்க?” என்று கேட்டார்.

 

அவரைப் பார்த்த கௌதம், “ஐயா, நாங்க பிரச்சனை பண்ணனும்னு வரல. இந்த கல்யாணத்துல நிலாவுக்கு விருப்பம் இல்லை. அவ எங்களுடைய ஃப்ரெண்ட், எங்க கூடத்தான் சென்னையில படிச்சா. அவளுக்கு விருப்பம் இல்லாமத்தான் இந்த கல்யாணம் நடக்குது” என்றான்.

 

அதைக் கேட்ட ஊர் தலைவர், பெண்ணின் தாய்-தந்தையைப் பார்த்தார். அவர்கள் அவசரமாக, “ஐயா, இவங்க பொய் சொல்றாங்க! எங்க பொண்ணு விருப்பத்தோடதான் கல்யாணம் நடக்குது” என்று கூறினார்கள்.

உடனே ஆதிரை, “யாரு பொய் சொல்றா? எங்களுக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!” 

 

என்றவள், ஊர் தலைவரைப் பார்த்து, “ஐயா, இவ வேறொருத்தரை லவ் பண்றா. வேறொருத்தரை காதலிக்கிற பொண்ணை இவங்க மிரட்டி, இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்காங்க. நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னா, அந்தப் பெண்ணுக்கே கேளுங்க!” என்றாள்.

 

ஊர் தலைவர் மணமேடையில் அமர்ந்திருந்த நிலாவை பார்த்து, “என்னம்மா இது? இவங்க ஏதோ சொல்றாங்க. அது உண்மையா? நீ யாரையாவது லவ் பண்றியா? உன் வீட்ல உன்னை மிரட்டித்தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சாங்களா? சொல்லு!” என்று கேட்டார்.

 

நிலா அவர்களை நிமிர்ந்து பார்த்து, ‘ஆம்’ என்று தலையாட்டினாள். அதைக் கேட்ட பெண்ணின் தாய், “அடிப்பாவி! இப்படி ஊர் முன்னாடி எங்க மானத்தை வாங்கிட்டியே!” என்று அவளை அடிக்கச் சென்றார்.

அவரைத் தடுத்த ஆதிரை, நிலாவின்  அருகில் சென்று அவள் கையைப் பிடித்துக் கொண்டாள். 

 

“இங்க பாருங்க, இவ மேல கைய வச்சீங்கன்னா அப்புறம் நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியது வரும். முதலிலேயே போலீஸோட வரணும்னுதான் நினைச்சேன். சரி, முதல்ல பேசிப் பார்க்கலாம்னு நாங்க மட்டும் வந்தோம். மறுபடியும் யாராவது பிரச்சனை பண்ணுங்க, அப்புறம் போலீஸ்தான் வரும்!” என்றாள். 

 

அவள் மிரட்டியதில் அங்கிருந்தவர்களுக்குப் பயம் தொற்றிக் கொண்டது.

நிலா, கிளம்பு, போலாம்!” என்றாள் ஆதிரை. நிலாவும் அவர்களுடன் சென்றாள். ஊர் தலைவர் அவர்களை நிறுத்தி, “சரிம்மா, இங்க  இரண்டு பசங்க இருக்காங்க இதுல யாரு இந்த பொண்ணு காதலிக்கிறது ?” என்று கேட்டார்.

 

ஆதிரை சற்று யோசிக்காமல், “இவர்தான்!” என்று கதிரைக் கை காட்டினாள். கதிர் அதிர்ச்சியில், “என்ன அம்மு பண்ற?” என்று கேட்டான். அவளோ, “கண்கள் மூலமாக அமைதியா இருங்க” என்று சைகை செய்தாள். அதன்பிறகு கதிர் அமைதியாகிவிட்டான்.

இவள் சொன்னதைக் கேட்டு நிலாவுக்கும் அதிர்ச்சிதான்! 

 

ஏனென்றால், அவள் யாரையும் காதலிக்கவில்லை. கல்யாணத்திலிருந்து தப்புவதற்காகத்தான் ஆதிரை கேட்டதற்கு ‘ஆம்’ என்று தலையாட்டினாள். ஆனால், இவள் ஏதோ ஒரு அந்நியரைத் தன் காதலன் என்று கை காட்டுகிறாளே என்று  நிலாவுக்கும்  அதிர்ச்சியாக இருந்தது.

 

ஆதிரை சொன்னதைக் கேட்டதும், அங்கே இருந்த அனைவரும் கதிரையே பார்த்தார்கள். “மாப்பிள்ளை நல்லாத்தான் இருக்காரு, இவருக்கு என்ன குறைச்சல்? ஏன் வேணாம்னு சொல்றாங்க?” என்றுதான் அவர்கள் பேசிக்கொண்டார்கள்.

 

ஊர் தலைவர், “சரிம்மா! இவ்வளவு தூரம் வந்து கல்யாணத்தை நிறுத்திட்டு, அந்தப் பெண்ணை கூட்டிட்டுப் போறீங்க. அதுக்கு நாங்க எதுவும் சொல்லல. ஆனா எங்க ஊருன்னு ஒரு மரியாதை இருக்கு. அதனால, நிலா கழுத்துல தாலி கட்டி கூட்டிட்டுப் போங்க, நாங்க யாரும் தடுக்கல!” என்று சொல்லிவிட்டார்.

 

அதைக் கேட்டு கதிரும், நிலாவும் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்கள். ஆதிரை மட்டும், “சரிங்கய்யா!” என்றவள், நிலாவை மணமேடையில் அழைத்துச் சென்று அமர வைத்தாள். கௌதமும் பழைய மாப்பிள்ளை அருகில் சென்று, “கல்யாணம் இல்லைன்னு தெரியுதுல, எந்திரி!” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தான். 

அவனும், “எனக்குக் கிடைச்சது ஒரே பொண்ணு, அதுவும் போயிடுச்சா!” என்று புலம்பிக்கொண்டே எழுந்து நின்றான்.

அவன் எழுந்ததும், கௌதம் கதிரிடம் வந்து, “மச்சான், வாங்க!” என்று அழைத்தான். அப்போதுதான் சுய நினைவுக்கு வந்த கதிர், கௌதமைப் பார்த்து, “என்ன நடக்குது கௌதம்?” 

என்று பல்லைக்கடித்தான்.

“மச்சான் ப்ளீஸ் மச்சான்! அவ என் ஃப்ரெண்டு. விருப்பம் இல்லாத கல்யாணம் நடக்குது, நம்மதானே அவளைக் காப்பாத்தணும்?” என்றான் கௌதம்.

“காப்பாத்தணும்னு காப்பாத்தி கூட்டிட்டுப் போகணும்! அதை விட்டுட்டு என்ன தாலி கட்டச் சொல்றீங்க?” என்று கதிர் கத்தினான்.

 

“மச்சான், இப்ப தாலி கட்டு! அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு பார்த்துக்கலாம்” என்றான் கௌதம்.

“என்ன விளையாட்டுப் பண்ணிட்டு இருக்கீங்களா?” என்று கதிர் கேட்க, ஆதிரை அவன் அருகில் வந்து, “அண்ணா, என்ன பண்ணிட்டு இருக்க? வா!” என்றாள்.

“அம்மு, உனக்கு என்ன பைத்தியமா? 

என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கதிர் அவளைக் கேட்டான். இவர்கள் குசுகுசுவெனப் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்ட ஊர் தலைவர், “என்னம்மா, மாப்பிள்ளைக்கு கல்யாணத்துல விருப்பம் இல்ல போலயே?” என்று கேட்டார்.

உடனே ஆதிரை, 

 

“ஐயோ, அப்படியெல்லாம் இல்லைங்க ஐயா! அண்ணா எங்க ஊர்ல போய் கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றாருங்க ஐயா!” என்றாள்.

“கல்யாணம் தானே பண்ணப்போறீங்க? அது எங்க பண்ணா என்ன?” என்றார் அவர்.

“அதுதான் நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன்!” என்று ஆதிரை சிரிக்க, 

கதிரைப் பார்த்து, “ப்ளீஸ் அண்ணா, இப்ப நீ மட்டும் தாலி கட்டலைன்னா, நம்பளை இந்த ஊர்க்காரங்க எல்லாம் சேர்ந்து கட்டி வச்சி  அடிப்பாங்க!” என்றாள்.

“அடிச்சா அடி வாங்கிக்குங்க, நான் 

கிளம்புறேன்!” என்றான் கதிர்.

 

அண்ணா, ப்ளீஸ் அண்ணா! நான் சொல்றத கேப்பல? எனக்காக இத பண்ணு அண்ணா. எப்படியும் நான் பாக்குற பொண்ணுதானே நீ கட்டிக்கப் போற, அது என் ஃப்ரெண்டா இருந்தா நல்லா இருக்கும்ல?” என்று கெஞ்சினாள். , அவனுக்கும்  வேறு வழி தெரியாமல் மணமேடையில் போய் அமர்ந்தான். ஐயரும் தாலியை எடுத்துக் கொடுக்க,  நிலாவின்  கழுத்தில் கதிர் இரண்டு முடிச்சுப் போட்டான். மூன்றாவது முடிச்சை ஆதிரையே போட்டாள்.

ஊர் எல்லையில் இருந்த ஒரு ஜூஸ் கடையின் அருகே கௌதமின் கார் நின்றிருந்தது. கௌதம் ஆதிரைக்கு ஜூஸ் வாங்கிக் கொடுக்க, கதிர் ஒரு பக்கம் போனில் பேசிக் கொண்டிருந்தான். நிலா காரிலிருந்து இறங்கி, அதன் அருகிலேயே நின்று அழுதுகொண்டிருந்தாள்.

 

நிலாவின் அருகில் சென்ற கௌதமும் ஆதிரையும், “ஏண்டி, இப்படி அழுதுட்டு இருக்க? உன்னோட கல்யாணத்தைத்தானே நாங்க தடுத்து நிறுத்திட்டோம், அப்புறம் என்ன?” என்று கேட்டார்கள்.

அவர்களை முறைத்துப் பார்த்த நிலா, “அப்போ இதுக்கு என்ன பேரு?” என்று கேட்டு, தன் கழுத்தில் இருந்த தாலியைக் எடுத்துக் காட்டினாள். 

 

அதைப்பார்த்த கௌதமும் ஆதிரையும் , என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாகிவிட்டார்கள்.

“ஏண்டி இப்படிப் பண்ண?” என்று நிலா  கேட்க,  “எனக்கு வேற வழி தெரியலடி. இப்போ மட்டும் உனக்கும் என் அண்ணாவுக்கும் கல்யாணம் ஆகாம இருந்திருந்தா, நீ எங்களோட வந்திருக்க முடியுமா?

அதுக்காகத்தான் அப்படி ஒரு பொய்யைச் சொன்னேன்.”

அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போது, கதிர் அவர்கள் அருகில் வந்து சேர்ந்தான்.

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top