விடாமல் அடித்த அவனது அலைபேசிச் சத்தத்தில் கண்களை லேசாகத் திறந்தவன், அதற்கு உயிர் கொடுத்துக் காதில் வைத்தான்.
“ஹலோ…” என்றான் தூக்கக் கலக்கத்தில்.
“என்னடா இன்னும் தூங்குற? மணி ஒன்பது ஆச்சுடா!” என்றான் கிஷோர் மறுமுனையில்.
‘மணி ஒன்பதா!’ என்று அதிர்ந்துபோய், அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்த விஷ்ணு, வேகமாகக் குளியலறைக்குச் சென்றான். குளித்து முடித்து வந்தவன், அவசரமாக வேலைக்கு ஆயத்தமாகிக் கீழே வந்தான். அவன் வெளியே செல்லப் போக…
“தம்பி…” என்று அழைத்தார் விஜயலட்சுமி. அவ்வீட்டில் வேலை செய்யும் மூத்த பெண்மணி அவர்.
அவனும் திரும்பி அவரைப் பார்க்க, “சாப்பிட்டுப் போங்க தம்பி,” என்றார் பாசத்துடன்.
மறுப்பு ஏதும் சொல்லாமல் அமர்ந்தான் விஷ்ணு. இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி என்று அவனுக்குப் பரிமாறினார். அவன் அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சாப்பிட்டான். “மதியம் சீக்கிரம் வந்துடுவேன்,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.
அவனது கார் அந்தப் பிரம்மாண்டமான கட்டடத்தின் முன்னால் வந்து நின்றது. **’விஷ்ணு குரூப்ஸ்’** – கம்பீரமாகப் பெயர்பலகை மின்னியது.
அலுவலக ஊழியர்கள் அனைவரும் விஷ்ணுவிற்குத் தங்களது காலை வணக்கத்தைக் கூற, அதை ஒரு சிறு தலை அசைப்புடன் ஏற்றபடி அவனது அறையை நோக்கிச் சென்றான். அவனது அறை ஐந்தாவது மாடியில் இருந்ததால், மின் தூக்கியின் (Lift) பொத்தானைத் தட்டிவிட்டு, அதில் ஏறித் தன் அறைக்குச் சென்றான்.
அறைக்குள் நுழைந்த விஷ்ணுவிற்கு அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. பிரியா அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தாள்.
அவளைக் கண்டவன், “என்ன?” என்றான் ஒற்றைச் சொல்லில்.
“ஹே… சாரிப்பா,” என்றாள் பிரியா. ஆம், நேற்று மேடையில் பேசிய அதே பிரியாதான் இவள்.
அவனோ சாதாரணமாக அவளைப் பார்த்துவிட்டு, “சரி, எதுக்கு நீ அப்படி மேடையில கேட்ட?” என்றான்.
“எதை… எதைக் கேட்டேன்?” என்றாள் பிரியா, தெரிந்தே தெரியாதது போல.
அவளைக் கூர்மையாக முறைத்தான் விஷ்ணு.
“நானாதான் கேட்டேன், ஏன் கேட்கக் கூடாதா? அதுக்கு எனக்கு உரிமை இல்லையா?” என்றாள் பிரியா சற்றே சிணுங்கலுடன்.
அப்பொழுது கதவைத் தட்டிக்கொண்டு உள்ளே வந்தான் கிஷோர். அவர்கள் இருவரையும் பார்த்தவன், “என்ன… இன்னும் உங்க சண்டை தீரலையா?” என்றான் சலிப்பாக.
அதை காதில் வாங்காத பிரியா, விஷ்ணுவை நோக்கி, “சொல்லுடா, எனக்கு உரிமை இல்லையா?” என்றாள் மீண்டும்.
“என்ன உரிமை?” என்று இடைமறித்துக் கேட்டான் கிஷோர் குழப்பமாக.
“அதுவா… உன்னை எப்படி டிவோர்ஸ் (Divorce) பண்றதுன்னு விஷ்ணுகிட்ட ஐடியா கேட்டுட்டு இருக்கேன்!” என்று குண்டைத் தூக்கிப் போட்டாள் பிரியா.
ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டான் கிஷோர். “என்ன?!” என்றான் அதிர்ச்சியாக.
“பின்ன என்ன? எனக்கும் உன்கூட வாழ்ந்து போர் அடிச்சுப் போச்சு, அதான்…” என்றாள் பிரியா தன் சிரிப்பை உள்ளுக்குள் அடக்கியபடி. (பிரியாவும் கிஷோரும் கணவன் மனைவி).
“அச்சோ செல்லம்! வெளிய கூட்டிட்டுப் போகலன்றதுக்காகவா டிவோர்ஸ் பண்ணுவாங்க?” என்றான் கிஷோர் கெஞ்சலாக.
“பின்ன? எப்பப் பார்த்தாலும் வெளிய கூட்டிட்டுப் போறேன்னு சொல்ற, ஆனா செய்றியா நீ?” என்றாள் உதட்டைச் சுளித்து.
“இனி நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன், ப்ளீஸ்…” என்றான் கிஷோர் விஷ்ணுவின் சப்போர்ட்டை நாடி, “மச்சான்! பாருடா இவளை…” என்றான்.
விஷ்ணுவோ தன் சிரிப்பைக் காட்டிக் கொள்ளாமல், “நான் என்ன செய்ய? பொண்டாட்டி சொன்னா அதை அப்படியே கேட்கணும். உனக்கு இதெல்லாம் தேவைதான்!” என்றான் கறாராக.
“போடா…” என்ற கிஷோர், “பிரியா செல்லம்…” என்று அவளைக் கொஞ்சத் தொடங்கினான். கிஷோரின் முக பாவத்தைக் கண்டு ‘பக்’ என்று சிரித்துவிட்டாள் பிரியா.
“என்னடி சிரிக்கிற?” என்றான் கிஷோர் ஒன்றும் புரியாமல்.
“பின்ன என்ன? நீ எப்படின்னு எனக்குத் தெரியாதா? சும்மா உன்கிட்ட விளையாடினேன்,” என்றாள் பிரியா கணவனின் கையைப் பிடித்துக்கொண்டு.
அவனோ அவளை முறைத்தபடி, “அப்பாடா… ஒரு நிமிடம் நிஜமாவே பயந்துட்டேன் தெரியுமா?” என்று பெருமூச்சு விட்டான்.
அவனை நெருங்கி நின்ற பிரியா, “இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் யாராவது கோவிச்சுட்டுப் போவாங்களா?” என்றாள் பாசமாய்.
“ம்ம்…” என்ற கிஷோர் அவளது கண்களைப் பார்த்து, “என்னோட பலமும் நீதான், என்னோட பலவீனமும் நீதான்,” என்றான் காதலுடன்.
“இம்ம்ம்…” என்று தன் தொண்டையைச் செருமினான் விஷ்ணு, ‘நானும் இங்கேதான் இருக்கிறேன்’ என்பதைக் காட்டுவதற்காக.
அதில் இருவரும் சட்டென விலகித் தனித்தனியாக நின்றனர். “என்ன… என்ன இது? இது ஆபீஸ் (Office). கல்யாணம் ஆகாத ஒரு பையன் முன்னாடி இப்படியா நடந்துப்பீங்க?” என்றான் விஷ்ணு நக்கலாக.
“டேய்!” என்றனர் இருவரும் ஒரே குரலில்.
“சரி சரி, வந்து வேலையைப் பார்ப்போமா?” என்றான் விஷ்ணு.
“நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன் விஷ்ணு,” என்று கூறிவிட்டு பிரியா அங்கிருந்து நகர்ந்தாள். போகும் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் கிஷோர்.
அவனது பார்வை செல்லும் திசையைக் கவனித்த விஷ்ணு, “கிஷோர்…” என்று கூப்பிட்டான்.
ம்ஹூம்… உடல் மட்டும்தான் அங்கே இருந்தது, கிஷோரின் மனமோ பிரியாவுடன் சென்றுவிட்டது. விஷ்ணு சத்தமாக, “கிஷோர்!” என்று கூப்பிட, “ஆ… ஆஹ்!” என்று திடுக்கிட்டு விஷ்ணுவைப் பார்த்தான்.
“நீ சரியில்லைடா…” என்று சிரித்தபடி தன் நாற்காலியில் அமர்ந்தான் விஷ்ணு.
“அது ஒரு ஃபீல் (Feel) மச்சான்…” என்றான் கிஷோர் புன்னகையோடு.
“என்ன ஃபீலோ!” என்று சலித்துக்கொண்ட விஷ்ணு, வேலையைத் தொடங்கினான். இருவரும் தங்களது அலுவல் பணிகளில் தீவிரமாகினர்.
—
இங்கே… வருணின் வீட்டில்…
மூவரும் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். எதேச்சையாக வருணைப் பார்த்தான் சரவணன். அவனது பார்வை சாப்பாட்டில் இல்லாமல் எங்கோ நிலைத்திருப்பதை கவனித்தான். ‘என்ன இவன் இப்படி விழுங்குற மாதிரி பார்க்குறான்?’ என்று சரவணன் வருண் பார்க்கும் பக்கம் பார்க்க, அங்கே வருண் அனிதாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அனிதாவும் தன் பார்வையை வருண் மீதுதான் பதித்திருந்தாள். இருவரையும் மாறி மாறிப் பார்த்த சரவணன், ‘ம்ம்… சரிதான்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். தன் சாப்பாட்டை முடித்தவன், தட்டை எடுத்துக் கொண்டு சென்றான்.
சரவணன் சென்ற பின்னரும், அவர்கள் இருவரும் தீவிரமாகக் கண்களாலேயே பேசிக் கொண்டிருந்தனர்.
‘இது சரிப்பட்டு வராது’ என்று நினைத்த சரவணன், மீண்டும் வருணின் அருக வந்தவன் ஆல்ரெடி டைம் ஆச்சு இன்னும் எவ்ளோ நேரமா சாப்புடுறதா உத்தேசம்? நீ இட்டிலிய சாதம் ஆக்குறத பாத்த இப்போதைக்கு வர மாட்டா போல நீ பொறுமையா வா நான் போறேன் என்றான்.
அவனது குரலில் இருவரும் சுயநினைவுக்கு வந்தனர். விறுவிறுவென்று சாப்பிட்டு முடித்துத் தத்தமது தட்டுகளை எடுத்துக் கொண்டு நகர்ந்தனர்.
கையைக் கழுவிவிட்டுத் திரும்பினாள் அனிதா. அவளுக்கு மிக நெருக்கமாக வந்து நின்றிருந்தான் வருண். அவனது நெருக்கத்தைக் கடந்து அவள் செல்ல முயன்றபோது, தரையில் இருந்த ஈரத்தால் சட்டென அவளது கால் வழுக்கியது.
“ஆ…” என்று அலறியபடி அவள் கீழே விழப் போக, நொடிப் பொழுதில் அவளை விழாதவாறு தன் பலத்த கரங்களால் தாங்கிக் கொண்டான் வருண்.
இருவரின் கண்களும் ஒன்றோடொன்று கலந்தன. சுற்றியிருக்கும் உலகை மறந்து இருவரும் ஒரு மோன நிலையில் நின்றனர். அவளது மீன் போன்ற கண்கள், கூர்மையான நாசி, வெட்கத்தால் சிவந்து போன கன்னங்கள், சிவந்த இதழ்கள்… வருணை ஏதோ செய்தது.
அவளது இதழை நோக்கி அவன் குனிய… இரு இதழ்களுக்கும் இடையே ஒரு நூல் அளவுதான் இடைவெளி தான்.
“என்ன இவனைக் இன்னும் காணோம்? வருண்… வருண்…” என்று சரவணன் கரடியாய்க் கத்திக்கொண்டே அங்கே வந்தான்.
அவனது சத்தத்தில் இருவரும் திடுக்கிட்டுப் பிரிந்தனர். “இதோ வர்றேன்டா!” என்று குரல் கொடுத்தபடி வருண் சரவணனை நோக்கிச் சென்றான்.
இருவரும் ஒன்றாக வருவதைப் பார்த்த சரவணன், “டைம் ஆச்சு, வாடா,” என்று வருணின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றான். வேலைக்குக் கிளம்பிப் போகும் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள் அனிதா.
வேலை செய்யும் இடத்திற்கு வந்த பிறகும் வருணுக்குப் பணியில் நாட்டம் செல்லவில்லை. அவனது மனது அனிதாவின் நினைவிலேயே சுற்றிக் கொண்டிருந்தது.
“மச்சான்…” என்று சரவணன் ஏதோ கேட்டுக்கொண்டே வருணைப் பார்க்க, அங்கும் வருணின் உடல் மட்டுமே இருந்தது, உள்ளம் அங்கே இல்லை.
“வருண்!” என்று அவனை உலுக்க, “ஆ… ஆஹ்!” என்று திடுக்கிட்டு அவனைப் பார்த்தான்.
“என்னடா ஆச்சு உனக்கு?” என்று கேட்டான் சரவணன் கவலையுடன்.
“ஒன்னும் இல்லை,” என்று சமாளித்தான் வருண்.
“அப்போ வேலையைப் பார்க்கலாமா சார்?” என்றான் சரவணன் சலிப்புடன்.
அவனை முறைத்தான் வருண்.
“பின்ன என்னடா? அந்த அருண் இந்த ப்ராஜெக்ட்டை (Project) இரண்டு நாள்ல முடிக்கணும்னு சொல்லியிருக்கான், ஞாபகம் இருக்கா இல்லையா?” என்றான் சரவணன்.
“இருக்கு…” என்று கூறிவிட்டு, தன் முழு கவனத்தையும் வேலையில் செலுத்த முயன்றான் வருண்.
திடீரெனத் தன்னை யாரோ கண்காணிப்பது போல் தோன்றியது சரவணனுக்கு. சுற்றிலும் பார்த்தான். அனைவரும் தீவிரமாகத் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ‘நமக்குத்தான் அப்படித் தோணுது போல’ என்று நினைத்து மீண்டும் வேலையில் மூழ்கினான்.
ஆனால், சரவணனையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தது அந்த ஒரு ஜோடிக் கண்கள்! அது யாருடைய கண்கள்?
—
செல்லம்பட்டி கிராமத்தில்…
அந்த வெண்டைப்பிஞ்சு விரல்கள் கணினியின் விசைப்பலகையில் (Keyboard) வேகமாக டைப் செய்து கொண்டிருந்தன. அவளுக்கு அருகில் அமர்ந்து, அவள் செய்வதையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் அன்னலட்சுமி. மகாலக்ஷ்மியோ தீவிரமாக டைப் செய்து கொண்டே, பதற்றத்தில் தன் நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தாள்.
அவளது விரல் மறுபடியும் வாயை நோக்கிச் செல்ல, அவளது கையைத் தட்டி விட்டாள் அன்னம். மகா ‘உச்’ கொட்டிவிட்டு மீண்டும் வேலையைப் பார்த்தாள்.
“மகா… அன்னம்…” என்று கூப்பிட்டபடி உள்ளே வந்தார் லட்சுமி.
மகாலக்ஷ்மி, அன்னலட்சுமி இருவரும் அக்கா தங்கைகள். அவர்களது தாயார் தான் இந்த லட்சுமி. அவர்களுக்கு அப்பா இல்லை. இரு மகள்களையும் தன் கண்ணுக்குள் வைத்துப் பாதுகாத்து வளர்த்தார் லட்சுமி.
செல்லம்பட்டி ஊரின் கணக்கு வாத்தியார் இந்த லட்சுமி. கண்டிப்பானவர், அதே சமயம் அன்பானவரும் கூட. அவரது குரல் கேட்டதும், இருவரும் தாங்கள் செய்துகொண்டிருந்த வேலைகளை அவசர அவசரமாக எடுத்து ஒளித்து வைத்துவிட்டு, ஒண்ணுமே தெரியாதது போல் மகா போன் பார்ப்பது போலவும், அன்னம் படிப்பது போலவும் பாசாங்கு செய்தனர்.
அவர்களை ஒரு பார்வை பார்த்த லட்சுமி, சமையலறைப் பக்கம் சென்றார். போனை வைத்துவிட்டு மகாவும் அவருக்குப் பின்னால் சென்றாள். சப்பாத்தி, சிக்கன் கிரேவி என்று சமைத்த உணவுகள் அனைத்தையும் டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்தாள் மகா.
அனைவரும் சுற்றிலும் அமர, லட்சுமி பரிமாற மூவரும் சாப்பிடத் தொடங்கினர்.
“என்னம்மா, இன்னைக்குக் கொஞ்சம் லேட்டா வந்தீங்க? ஸ்கூல்ல எதுவும் பிரச்சினையா?” என்று கேட்டாள் அன்னம்.
“ஒன்னும் இல்லைடா. மீட்டிங் போட்டாங்க. பசங்க ஏன் மேத்ஸ்ல மார்க் கம்மியா வாங்குறாங்கன்னு தலைமை ஆசிரியர் கேட்டார்,” என்றார் லட்சுமி சோர்வாக.
“இது என்னப்பா வம்பா போச்சு! பசங்க மார்க் கம்மியா வாங்குனா நீங்க என்ன பண்ணுவீங்க? உங்களால பாடம் தான் எடுக்க முடியும், நீங்களா போய் எக்ஸாம் எழுத முடியும்?” என்றாள் அன்னம் நியாயமாக.
“ம்ம்… அதுவும் சரிதான். ஆனா என்ன செய்ய? என்னோட பாடத்துலதான் ரிசல்ட் ரொம்ப மோசமா இருக்கு,” என்றார் லட்சுமி வருத்தத்துடன்.
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை அமைதியாகப் பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மகா.
சாப்பிட்டு முடித்து அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு அறைக்குச் சென்றாள் மகா. அங்கே கன்னத்தில் ஒரு கையைத் தாங்கியபடி அப்படியே உறங்கிக் கொண்டிருந்தாள் அன்னம். அவளது முகத்தைப் பார்த்துச் சிறு புன்னகை சிந்திய மகா, அவளுக்குப் போர்வையைப் போர்த்தி விட்டாள். அந்தத் தொடுதலில் சட்டென விழித்துக் கொண்டாள் அன்னம்.
“எழுந்துட்டியா?” என்று கேட்ட மகா, “கொஞ்ச நேரம் தூங்குடா. தூங்கிட்டுக் காலையில எழுந்து படி, நான் உன்னை எழுப்பி விடுறேன்,” என்றாள் அன்போடு.
“சரி அக்கா,” என்று கூறிவிட்டுத் தன் இடத்தில் சென்று படுத்துக் கொண்டாள் அன்னம். மகாவும் படுத்துக் கொண்டாள்.
ஆனால், படுத்த மகாலக்ஷ்மிக்குத் தூக்கம் வரவில்லை. மனதிற்குள் ஏதோ ஏதோ பழைய நினைவுகள் வந்து போக, வெகு நேரம் கழித்தே அவள் கண்கள் அயர்ந்தாள்.
இங்கே லட்சுமியும் மாலையில் நடந்த விஷயங்களை நினைத்தபடி படுத்திருந்தார். அவருக்கும் தூக்கம் வரவில்லை. ‘இது சரிவருமா வராதா? இதை எப்படி அவளிடம் கூறுவது?’ என்று பலவாறு யோசித்தபடியே அவரும் வெகு நேரம் கழித்துத் தூங்கிப்போனார்.
—
இரவு வீட்டுக்கு வந்த வருண் அனிதாவைப் பார்த்தான். அவள் தன் தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு சோகமாக அமர்ந்திருந்தாள். அவள் அருகில் சென்ற வருண், அவள் சொன்ன வார்த்தையைக் கேட்டு அப்படியே அதிர்ந்து போய் நின்றான்!
அப்படி அவள் என்ன கூறினாள்?
தொடரும்..…