💓அத்தியாயம்《13》

நிலா கதிரின் அறைக்குள் சென்றாள். அவள் உள்ளே நுழைந்தபோது கதிர் அங்கு இல்லை. அவன் குளியலறையில் இருந்தான். அவள் அவன் கட்டிலில் சென்று அமர்ந்துகொண்டாள்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து, கதிர் குளித்துவிட்டு தலையைத் துவட்டிக்கொண்டே வெளியே வந்தான். அவனைக் கண்டதும் நிலா எழுந்து நின்றாள். அவளைப் பார்த்தவன் ஒன்றும் பேசவில்லை. கையில் இருந்த டவலை அருகிலிருந்த சோபாவில் போட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

அவன் சென்றதும் நிலா தன் உடைப்பையை எடுத்து, அதிலிருந்து தேவையான உடைகளையும் டவலையும் எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.

ஹாலில், கதிர் சோபாவில் அமர்ந்து போனைப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆதிரையும் கௌதமும் சேர்ந்து சமைத்த உணவுகளை டைனிங் டேபிளில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரம் கழித்து, நிலாவும் நீல நிற சல்வார் அணிந்து வெளியே வந்தாள். அவள் வெளியே வந்ததும் கதிர் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் கட்டிய தாலியைத் தவிர வேறு எந்த நகையும் அவள் அணிந்திருக்கவில்லை.

நிலாவைக் கண்டதும் ஆதிரை அவளருகில் வந்து,

“வாடி, சாமி ரூம்ல வந்து விளக்கு ஏத்து,” என்று கூறி அவளை அழைத்துச் சென்றாள்.

கௌதமும் கதிரை அழைத்துக்கொண்டு பூஜை அறைக்குள் சென்றான்.

ஒருபுறம் கௌதமும் ஆதிரையும், மறுபுறம் கதிரும் நிலாவும் நின்றிருந்தார்கள்.

ஆதிரை தீப்பெட்டியை நிலாவிடம் கொடுத்து,

விளக்கேற்று, என்றாள்.

நிலாவும் அதை வாங்கி விளக்கேற்றினாள். நால்வரும் மனம் உருகி கடவுளை வேண்டிக்கொண்டனர்.

பிறகு அங்கிருந்த குங்குமத்தை எடுத்து கதிரிடம் நீட்டிய ஆதிரை,

அண்ணா, இந்தக் குங்குமத்தை நிலா நெத்தியிலும் தாலியிலும் வச்சு விடுங்க, என்றாள்.

கதிர் குங்குமத்தை எடுத்து நிலாவின் நெற்றியிலும் தாலியிலும் வைத்தான்.

அந்த நொடி, கதிர் மற்றும் நிலா இருவரின் மனதிலும் ஒரு இனிய சிலிர்ப்பு எழுந்தது.

அதன்பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர்.

சாப்பிட்டு முடித்ததும்,

சரி, நாங்க கிளம்புறோம்,” என்றான் கௌதம். உடனே கதிர்,

இன்னைக்கு இங்க தங்கிக்கோங்க. நாளைக்கு கிளம்பலாம். அம்மு இன்னைக்கு ரொம்ப டிராவல் பண்ணிட்டா. அவ உடம்புக்கு ஒத்துக்காது,” என்றான்.

அவன் சொன்னதை கேட்ட கௌதம்,

சரி மச்சான், நான் நாளைக்கு போறேன்,

என்று கூறிவிட்டு ஆதிரையின் அறைக்குள் சென்றுவிட்டான்.

கதிரும் தன் அறைக்குச் சென்றான்.

நிலா மட்டும் அங்கேயே நின்றுகொண்டு, இப்போ நான் எங்க போறது? என்று யோசித்துக்கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்த ஆதிரை,

என்னடி பாத்துட்டு இருக்க? வா,” என்று அவளை சமையலறைக்குள் அழைத்துச் சென்றாள்.

எதற்கென்று தெரியாமல் நிலாவும் அவள் பின்னால் சென்றாள்.

உள்ளே நுழைந்ததும், அங்கிருந்த பால் செம்பை எடுத்து நிலாவின் கையில் கொடுத்தாள் ஆதிரை.

என்னடி இது?” என்று கேட்டாள் நிலா. அது வந்து பால் டி,  என்றாள் ஆதிரை.

இப்பதானே சாப்பிட்டேன். எதுக்கு பால் தர?” என்றாள் நிலா.

உனக்கு இல்லடி, அண்ணாவுக்கு, என்றாள் ஆதிரை.

அவரும் இப்பதான் சாப்பிட்டாரு, என்றாள் நிலா.

ஐயோ கடவுளே! இவளுக்கு உண்மையிலேயே தெரியலையா? இல்ல நடிக்கிறாளா?” என்று மனதில் நினைத்துக்கொண்ட ஆதிரை,

எங்க அண்ணன் தூங்குறதுக்கு முன்னாடி பால் குடிப்பான். கொண்டு போய் கொடு, என்றாள்.

லூசு மாதிரி பேசாத ஆதிரை. நான் உங்க அண்ணா ரூமுக்கு போகல. எனக்கு வேற ஒரு ரூம் அரேஞ்ச் பண்ணித் தா,” என்றாள் நிலா.

நீதான் லூசு மாதிரி பேசுற நிலா. கல்யாணம் ஆகி வந்த முதல் நாளே வேற ரூமுக்கு போறேன்னா எப்படி? முதல்ல நீங்க ரெண்டு பேரும் பேசுங்க. பேசி ஒரு முடிவுக்கு வாங்க. அதுக்குப் பிறகு வேற ரூம்ல தங்கிக்கிறதும், இல்ல இந்த வீட்டை விட்டே போறதும் உன் விருப்பம்,” என்று கூறிவிட்டு ஆதிரை தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

அறைக்குள் வந்த ஆதிரையைப் பார்த்த கௌதம்,

என்ன ஆச்சு? நிலா போயிட்டாளா உங்க அண்ணா ரூமுக்கு?” என்று கேட்டான்.

நீங்க வேற கௌதம். அவ வேற ரூம் வேணும்னு கேக்குறா. நான் ஏதேதோ சொல்லி சமாளிச்சுட்டு வந்துட்டேன். இப்போ எப்படியும் அவ அண்ணா ரூமுக்குத்தான் போகணும்,” என்றாள்.

நாம தப்பு பண்றோமோ ஆதிரை,” என்றான் கௌதம்.

ஏன் இப்படி சொல்றீங்க?” என்று கேட்டாள் ஆதிரை. 

விருப்பம் இல்லாத ரெண்டு பேருக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு இப்படி பண்ணிட்டு இருக்கோமே,” என்றான்.

அதெல்லாம் ஒண்ணும் இல்ல. அவங்க பேசிப் ஒரு முடிவுக்கு வரட்டும். அதுக்குப் பிறகு பாத்துக்கலாம்,” என்றாள் ஆதிரை.

அதே நேரம் கதிரின் அறைக்குள் நுழைந்தாள் நிலா.

கதிர் கட்டிலில் அமர்ந்து லேப்டாப்பில் ஏதோ பார்த்துக்கொண்டிருந்தான்.

அவளைக் கண்டதும்,

வா,” என்றான்.

அவளும் அருகில் சென்றாள்.

என்ன இது?” என்று அவள் கையில் இருந்த பால் செம்பைக் காட்டிக் கேட்டான்.

அது உங்களுக்குத்தான். ஆதிரை கொடுத்தா,” என்றாள்.

சரி, அத அங்க வை,” என்றான். அவளும் மேசையின் மீது வைத்துவிட்டு வந்தாள்.

அவளை அருகில் அமரச் சொன்ன கதிர், நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் நிலா,” என்றான்.

சொல்லுங்க,” என்றாள்.

நான் இவ்வளவு நாள் கல்யாணம் வேணாம்னு சொன்னதுக்கு காரணமே என் தங்கச்சிதான். எனக்குன்னு ஒரு குடும்பம் வந்துட்டா, அவ மேல நான் வச்சிருக்கிற பாசம் குறைஞ்சிடுமோன்னு பயம். நானும் சுயநலமா மாறிடுவேனோன்னு நினைச்சேன். அதனாலதான் கல்யாணமே வேண்டாம்னு இருந்தேன்.

ஆனா இப்போ ஏதேதோ பண்ணி என் தங்கச்சி எனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டா. இது அவ எனக்கு அமைச்சு கொடுத்த வாழ்க்கை. இதை நான் வேண்டாம்னு சொன்னா அவ மனசு கஷ்டப்படும்.

அதனால நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன். எனக்கு உன்னோட வாழ்றதுல எந்த பிரச்சனையும் இல்லை. இதுதான் என் முடிவு.

இப்போ நீ உன் முடிவை சொல்லலாம். நான் என் தங்கச்சிக்காக யோசிக்கிற மாதிரி, நீ யாருக்காகவும் யோசிக்கணும்னு அவசியம் இல்லை. இது உன் வாழ்க்கை. நீதான் முடிவு பண்ணணும்,” என்றான்.

நிலா சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு,

என்னாலயும் என்னோட ஃபிரெண்ட்ஸ் மனசு கஷ்டப்படுத்த முடியாது. கௌதமும் ஆதிரையும் எனக்கு நல்லதுன்னு நினைச்சுத்தான் இதை பண்ணி வச்சாங்க.

இந்த வாழ்க்கை எனக்கு வேணாம்னு நான் போயிட்டேனா, அவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க.

என்னோட  குடும்பத்தைவிட  பாசமா என்னைப் பார்த்துக்கிட்டது அவங்க ரெண்டு பேரும்தான். இப்ப வரைக்கும் என் கூடவே இருந்திருக்காங்க.

என் வீட்டில இருக்கிறவங்க கூட என்னோட சம்பாத்தியத்துக்குத்தான் ஆசைப்பட்டாங்க. ஆனா ஆதிரையும் கௌதமும் நான் நல்லா இருக்கணும், சந்தோஷமா வாழணும்னுதான் நினைச்சாங்க.

அவங்க அமைச்சு தந்த இந்த வாழ்க்கையை என்னாலயும் மறுக்க முடியாது.

நான் அப்போ ஹாஸ்டல் போறேன்னு சொன்னது கூட அவங்க மேல இருந்த கோவத்துலதான். இப்போ யோசிச்சா புரியுது, அவங்க என் மேல வச்சிருக்கிற பாசம்,” என்றாள்.

கதிர் அவளைப் பார்த்து,

ஓகே. அப்போ உனக்கு என்னோட வாழ ஓகே தானே?” என்று கேட்டான்.

நிலா தயக்கத்துடன்,

அது ஓகேதான்… ஆனா இப்பவே இதெல்லாம் வேண்டாம்,” என்றாள்.

எதெல்லாம் வேண்டாம்?” என்று கேட்டான் கதிர். 

வெட்கத்துடன், நிலா 

அது… ஃபர்ஸ்ட் நைட்,” என்றாள்.

அதைக் கேட்ட கதிர் சிரித்துவிட்டு,

ஓகே. எனக்கு புரியுது. நானும் இதுக்கெல்லாம் ரெடி ஆகல. கொஞ்ச நாள் போகட்டும். நம்ம ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டதுக்கு பிறகு நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்,” என்றான்.

“அப்புறம் இன்னொரு விஷயம். எந்த சூழ்நிலையிலும் நீ  நான்  அம்மு மேல வச்சிருக்கிற பாசத்துக்கு இடையில வரக்கூடாது. எனக்கு அவதான் எல்லாம். அவளுக்கு அப்புறம்தான் நீ. அவளுக்கு நீ எப்பவும் மரியாதை கொடுக்கணும். பாசமா பாத்துக்கணும்,” என்றான்.

நிலா உடனே,

அவ என்னோட ஃபிரெண்டு. அவ மேல எனக்கு நிறைய பாசம் இருக்கு. உங்க தங்கச்சின்னு சொன்னதுக்காக நான் அவ மேல கோபப்பட மாட்டேன்,” என்றாள்.

கதிர் அமைதியாக,

இப்போ அவ உன் புருஷனோட தங்கச்சி. நான் உன்னை விட அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்னு நீ நினைச்சா, அந்த இடத்துல உங்களுக்குள்ள பிரச்சனை வரும். அதுதான் சொல்றேன்,” என்றான்.

அதைக் கேட்ட நிலா கோபமாக,

நான் அவளை எப்பவுமே என்னோட ஃபிரெண்டாவே பார்க்குறேன். உங்க தங்கச்சின்னு மட்டும் பார்க்க மாட்டேன்.

நீங்க என்னமோ நான் கொடுமைக்காரி மாதிரி பேசுறீங்க. நான் அப்படிப்பட்டவ கிடையாது.

எனக்கும் பாசம்னா என்னன்னு தெரியும். உண்மையை சொல்லணும்னா, எல்லா உறவுகளும் இருந்தும் நான் பாசத்துக்காக ஏங்கிருக்கே.

எனக்கு உண்மையான பாசத்தைக் காட்டியது ஆதிரையும் கௌதமும்தான்.

அப்படிப்பட்ட  அவ  மேல நான் கோவமோ பொறாமையோ பட மாட்டேன்,” என்றாள்.

பேசிக்கொண்டே அவள் கண்கள் கலங்கின.

அதைப் பார்த்த கதிர் அவளருகில் வந்து, அவளது தோளைப் பிடித்து தன்னோடு அணைத்துக்கொண்டான். அவளும் அவன் மார்பில் சாய்ந்து அழுதாள்.

சாரி. நான் என் மனசுல பட்டதை சொல்லிட்டேன். தப்பா எடுத்துக்காத. நீ உன் ஃபிரெண்டாவே அவளைப் பாரு. உங்க ரெண்டு பேருக்கும் இடையில நான் வரமாட்டேன். எனக்கும் அவளுக்கும் இடையில நீ வராத. நமக்குள்ள எந்த பிரச்சனையும் வராது,” என்றான். நிலாவும் சம்மதமாக தலையசைத்தாள்.

அவளை அணைத்தபடியே கதிர் மீண்டும் பேசினான்.

நிலா, உன் அம்மா அப்பா இப்போ உன் மேல கோவமா இருக்கலாம். ஆனா எப்போதாவது உன்னைத் தேடி வருவாங்க. அப்படி வந்தா, அவங்களோட பேசாத, போகாதன்னு நான் சொல்ல மாட்டேன்.

அவங்களுக்குன்னு இருக்கிறதே நீ மட்டும்தான்.

அதனால நீ அவங்களோட எப்பவும் போல இருக்கலாம். ஆனா நம்ம குடும்ப விஷயத்துல அவங்கள தலையிட  விடக்கூடாது,” என்றான்.

நிலாவும் அமைதியாக,

சரி,” என்று கூறினாள்.

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top