“கோவை – பாலக்காடு புறநகரில் கைவிடப்பட்ட ஒரு குவாரி ,அந்த குவாரி மேட்டின் அருகே ஒரு குடிசையில் மங்கலாக எரிந்து கொண்டிருந்த டியூப் லைட் வெளிச்சத்தில் அக்னீஸ்வரன் நின்று கொண்டிருந்தான். தன் கையில் ஒட்டியிருந்த கறியையும் எண்ணெயையும் ஒரு துணியால் துடைத்துக் கொண்டேயிருந்தான். ஆறடி இரண்டு அங்குல உயரம், வெயிலில் காய்ந்த கருமை நிறம், நன்றாக தூங்கியே இராது என்று சொல்லும் அளவுக்குக் கலைந்த கண்கள். பார்த்தாலே ஒரு நிமிடம் நெஞ்சு திடுக்கிடும் தோற்றம் அவனுடையது.
அவனுக்குப் பின்னால், ‘பெரியவரின்’ ஆட்களான மருதுவும் ,சேதுவும் மூச்சிரைக்க நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் காலடியில், அடி தாங்க முடியாமல் ஒருவன் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். பெரியவரின் தாது மணல் கொள்ளை கணக்கில் கைவைத்த ஒரு கணக்கப்பிள்ளை அவன்.
“அக்னீ அண்ணா…”என்று கையில் ரத்தக் கரையோடு இரும்பு கம்பியைப் பிடித்தபடி மருது தயங்கினான். “பெரியவர் இவனை முடிச்சிடச் சொன்னாரு. ஆனா இவன் எங்க கையில இருந்து தப்பிச்சு மெயின் ரோடு பக்கம் ஓடிட்டான். யாராச்சும் பார்த்தாங்களான்னு தெரியலண்ணா.”
அக்னீஸ்வரன் அந்தக் கணக்கப்பிள்ளையைப் பார்க்கவில்லை. நூறு மீட்டர் தள்ளியிருந்த அந்த இருட்டு சாலையையே பார்த்தான். “வாயைத் திறந்தானா?”
“இல்ல அண்ணா. அவன் ஊருக்குள்ள போறதுக்குள்ள புடிச்சிட்டோம்.”
“முடிச்சிடு,அக்னீஸ்வரன் குரல் ஒரு வெற்றுப் பாறை போல எந்த உணர்ச்சியுமின்றி வெளிவந்தது. “ஆத்தங்கரையில குழி தோண்டிப் புதைச்சிடுங்க. தடம் தெரியக் கூடாது.”
அவன் அப்படியே திரும்பி, தன் பழைய மஹிந்திரா ஜீப்பை நோக்கி நடந்தான். அவனுக்கு இந்த வன்முறை பிடிக்கும் என்று இல்லை, அதே சமயம் அதை அவன் வெறுக்கவும் இல்லை. அக்னியைப் பொறுத்தவரை உலகம் என்பது வெறும் கடன்களால் ஆனது; அவன் அந்தக் கடனை வசூலிக்கும் ஒரு கணக்கன், அவ்வளவுதான். பன்னிரண்டு வயதில் பசியோடு அனாதை ஆசிரமத்தில் கிடந்தவனைப் பெரியவர்தான் தூக்கி வளர்த்தார். அதற்காகக் அவன் கொடுக்கும் வாடகைதான் இந்த ரத்தம்.
அவன் ஜீப்பை ஸ்டார்ட் செய்த அதே நொடி, சற்று தொலைவில் ஒரு சத்தம் கேட்டது..
ஜீப் இன்ஜினை அணைத்தான். மருதுவும் சேதுவும் பதற்றத்தில் காரியத்தைக் கெடுத்துவிட்டார்கள். முள் புதர்களுக்கு நடுவே அக்னீ பார்த்தபோது, அந்த ரத்த வெள்ளத்தில் கிடந்த கணக்கப்பிள்ளை எப்படியோ உயிர் தப்பி, நெஞ்சைப் பிடித்தபடி சாலையைக் கடந்து ஓடிக் கொண்டிருந்தான்.
அவன் ஓட முடியாது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சில தூரம் ஓடினான்.. அங்கே ஒரு சிறிய வெள்ளை நிறக் கட்டடத்தில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சிறிய ஆரம்ப சுகாதார மருத்துவமனை.
டாக்டர் நிலா தன் மருந்துப் பெட்டிகளை அடுக்கிக் கொண்டே, தூக்கம் வராமல் இருக்க ஒரு பழைய இளையராஜா பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். சுவரில் இருந்த கடிகாரம் இரவு 11:45 என்று காட்டியது.
சென்னையில் இருந்த தன் வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு, அரசு மருத்துவர்கள் கூட வர பயப்படும் இந்த கிராமத்துக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிலா வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அவளது பெற்றோர் அவளைப் பைத்தியம் என்று நினைத்தார்கள். தோழிகளோ இது அவளது தற்காலிக சமூக சேவை ஆசை என்று சிரித்தார்கள். ஆனால், பல கிலோமீட்டர் தள்ளிப் போகாமல் இங்கேயே மருத்துவம் பார்த்து ஊசி போட்டுக் கொள்ளும் அந்த ஏழை கிராமத்து முதியவர்களின் முகத்தைப் பார்க்கும்போது, தான் சரியான இடத்தில்தான் இருக்கிறோம் என்று நிலாவிற்குத் தோன்றியது.
திடீரென்று மருத்துவமனையின் கண்ணாடித் கதவின் மீது ஏதோ பலமாக மோதும் சத்தம் கேட்க, நிலா கையில் இருந்த மருந்துப் பாட்டிலைக் கீழே போட்டாள்.
“காப்பாத்துங்க…” ஒரு கரகரப்பான குரல் கேட்டது.
நிலா ஓடிப்போய் கதவைத் திறந்தாள். ஒரு மனிதன் அப்படியே தரையில் சுருண்டு விழுந்தான். உடல் முழுக்க ரத்தம், சட்டை கிழிந்து தொங்கியது.
“ஐயோ! என்னாச்சு உங்களுக்கு?” நிலா பதறிப்போய் கீழே அமர்ந்தாள். அவளது பயத்தை மீறி அவளுக்குள் இருந்த மருத்துவம் விழித்துக் கொண்டது. ஒரு பஞ்சை எடுத்து அவனது தோளில் இருந்த ஆழமான காயத்தில் வைத்து அழுத்தினாள். “கண்ணைத் திறங்க சார்… என்னாச்சு?”
“அவங்க… அவங்க கொன்னுடுவாங்க…” அந்த மனிதனின் கண்கள் சொருகின.
நிலா அவனை உள்ளே இழுப்பதற்குள், அந்த மருத்துவமனையின் வாசல் கதவு பலமாக உதைத்துத் திறக்கப்பட்டது.
மருதுவும் சேதுவும் கையில் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்தார்கள். அவர்கள் முகத்தில் கொலைவெறி தாண்டவமாடியது.
“தள்ளி நில்லுங்க டாக்டர் அம்மா,” மருது துப்பாக்கியை நிலாவை நோக்கிக் காட்டினான். “இந்த நாயை விட்டுட்டு தள்ளிப் போங்க. இவன் இன்னைக்குச் செத்தாகணும்.”
நிலாவின் இதயம் வேகமாகத் துடித்தது, ஆனால் அவள் பின்வாங்கவில்லை. அந்த ரத்த வெள்ளத்தில் கிடந்த மனிதனை தனக்கு பின்னால் மறைத்துக் கொண்டு நின்றாள். “இது ஹாஸ்பிட்டல்! இவர் என் பேஷண்ட். முதல்ல வெளிய போங்க, இல்லன்னா போலீஸைக் கூப்பிடுவேன்!”
சேது கேவலமாகச் சிரித்தான். “போலீஸா? இந்தக் கிராமத்துலயா? அம்மா, நீங்க புதுசுன்னு நினைக்கிறேன். மரியாதையா தள்ளிப் போங்க. இல்லன்னா அடுத்த புல்லட் உங்க அழகான தொண்டைக்குள்ள இறங்கும்.”
நிலா அந்தத் துப்பாக்கி முனையைப் பார்த்தாள். அவளது கைகள் நடுங்கின, ஆனால் குரல் தளரவில்லை. “முடியாது! நான் டாக்டரா சத்தியப்பிரமாணம் எடுத்திருக்கேன். என்னைச் சுட்டுட்டு அப்புறம் இவனைத் தொடுங்க.”
மருது கெட்ட வார்த்தை ஒன்றைச் சொல்லி, துப்பாக்கியை நிலாவின் நெற்றிக்கு நேராக நீட்டினான். அவனது விரல் ட்ரிக்கரை அழுத்தியது.
“கையைக் கீழே போடு.”
அந்தக் குரல் உள்ளே இருந்து வரவில்லை. வாசலில் இருந்து வந்தது.
மருது அப்படியே உறைந்து நின்றான். சேது உடனடியாக ஒரு அடி பின்வாங்கி, தன் திமிரையெல்லாம் விட்டுவிட்டுப் பணிவாகக் குனிந்தான். “அ.. அக்னீ அண்ணா.”
நிலா அந்த ஆட்களுக்குப் பின்னால் பார்த்தாள். வாசலில், அந்த இருண்ட நள்ளிரவு இருஞ்டுக்கு நடுவே ஒரு மனிதன் நின்றிருந்தான். அவனது வெள்ளைச் சட்டையில் அழுக்கும் எண்ணெயும் படிந்திருந்தன; முகம் பாறையைச் செதுக்கியது போல இருந்தது. அவனது கண்கள் அந்த ஆட்களைப் பார்க்கவில்லை; நேராக நிலாவைப் பார்த்தன. அந்தக் கண்கள் குளிர்ந்து, எந்த உணர்ச்சியுமின்றி, மரணத்தைப் போல வெறிச்சோடிப் போயிருந்தன.
“அண்ணா, இந்த அம்மா எல்லாத்தையும் பார்த்துடுச்சு,” மருது பதற்றமாகச் சொன்னான். “நம்மைப் பார்த்தாச்சு. சாட்சியை உயிரோட விட்டா பெரியவர் நம்மைத் தோலை உரிச்சிடுவாருண்ணா.”
அக்னீ உள்ளே நடந்தான். அவன் உள்ளே வந்ததும் அந்தச் சிறிய மருத்துவமனையே இன்னும் சிறியதாக மாறியது போல இருந்தது. தரையில் கிடந்து ஏற்கனவே இறந்துவிட்ட அந்த கணக்கப்பிள்ளையை அவன் பார்க்கவில்லை. நிலாவிற்கு மிக அருகில், இரண்டு அடி தூரத்தில் வந்து நின்றான்.
இருவருக்கும் இடையே அத்தனை வித்தியாசம்: அவள், சிறிய உருவம், மென்மையான சுடிதார், அவளிடமிருந்து மருந்து மற்றும் லாவெண்டர் வாசனை வந்தது; அவனோ, பெட்ரோல், வேர்வை , சரக்கு வாசனையோடு நின்றிருந்தான்.
நிலா அண்ணாந்து அவனைப் பார்த்தாள். அவனிடம் கோபத்தையோ, கொடூரத்தையோ அவள் எதிர்பார்க்கவில்லை;
“நீ… நீங்கதான் இவங்களோட தலைவனா?” மெல்லிய குரலில் கேட்டாள். “நீங்க ஒரு மிருகம்.”
அவனின் தாடை இறுகியது. அவனது கன்னத்தில் சதை துடித்தது. அவன் தன் இடுப்புப் பக்கமாகக் கையை எடுத்துச் செல்ல, நிலா பயத்தில் கண்களை மூடிக்கொண்டாள். புல்லட் பாயப் போகிறது என்று நினைத்தாள்.
ஆனால், அக்னீ மருதுவின் சட்டையைப் பிடித்து அப்படியே சுவற்றில் தூக்கி அடித்தான். கைத்துப்பாக்கி தரையில் விழுந்து சிதறியது.
“அண்ணா!” மருது அலறினான்.
“உன்னை நெடுஞ்சாலையில வச்சு சுடச் சொன்னேனா?” அவனின் குரல் மிகத் தாழ்வாக, ஆனால் ஆபத்தானதாக ஒலித்தது. “ரோட்டுல வச்சு நாடகம் ஆடச் சொன்னேனா?”
“இல்ல அண்ணா… ஆனா இந்த டாக்டர்”
“மிச்சமிருக்கிற வேலையை நான் பார்த்துக்கிறேன்,” என்று மருதுவைத் தள்ளிவிட்ட அக்னீ, மீண்டும் நிலாவைப் பார்த்தான். பிறகு தரையில் கிடந்த பிணத்தைப் பார்த்தான்.
இவளை இங்கே விட்டுட்டுப் போனால், அக்னீ போன அடுத்த நிமிடம் மருது வந்து இவளைக் கொன்று ஆத்தங்கரையில் புதைத்துவிடுவான். பெரியவரிடம் கூட்டிக் கொண்டு போனாலும் இவள் உயிர் பிழைக்க மாட்டாள்.
அவன் கீழே குனிந்து, தரையில் கிடந்த துப்பாக்கியை எடுத்துத் தன் இடுப்பில் சொருகிக் கொண்டான். அடுத்த நொடி, எந்த எச்சரிக்கையும் இன்றி, நிலாவின் இடுப்பைப் பிடித்து அப்படியே தன் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டான்.
“என்னை விடுங்க! யாராச்சும் காப்பாத்துங்க!” நிலா கத்தினாள், அவனது இரும்பு போன்ற முதுகில் தன் கைகளால் குத்தினாள். அவளது தலைமுடி கலைந்து அவனது தோள்களில் விழுந்தது. “யோவ் கிரிமினல்! என்னை இறக்கி விடு!”
அவன் அவளது அடிகளுக்குச் சற்றும் அசையவில்லை. அவன் மருத்துவமனையை விட்டு வெளியேறி, தன் ஜீப்பை நோக்கி நேராக நடந்தான்.
“அண்ணா? இவளை என்ன பண்றது?” சேது புரியாமல் கேட்டான்.அக்னீ நிலாவை ஜீப்பின் முன் சீட்டில் தூக்கிப் போட்டான். அவள் தப்பித்து ஓடுவதற்குள், ஜீப்பில் இருந்த ஒரு நைலான் கயிற்றை எடுத்து, அவளது கைகளை ஜீப்பின் சீட்டோடு சேர்த்து இறுக்கிக் கட்டினான்.
அவன் டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்து, இன்ஜினை ஸ்டார்ட் செய்துவிட்டு, தன் ஆட்களைப் பார்த்தான்.
“பெரியவர்கிட்ட கணக்கப்பிள்ளை செத்துட்டான்னு சொல்லுங்க,” என்று நேராக சாலையைப் பார்த்தபடி சொன்னான். “ஹாஸ்பிட்டல்ல இருந்த சாட்சியையும் நான் முடிச்சிட்டேன்னு சொல்லிடுங்க. யாரும் எதையும் பார்க்கல.”
“ஆனா அண்ணா, இவ உயிரோட”
அக்னீ கியரை மாற்றி, ஆக்சிலேட்டரை மிதிக்க, டயர்கள் அலறியபடி அந்த ஜீப் இருட்டுக்குள் பாய்ந்தது. மூணாறு மலையை நோக்கி ஜீப் வேகம் எடுத்தது.
முன் சீட்டில் நிலா சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தாள். கயிறு கடித்ததில் அவளது மணிக்கட்டு சிவந்திருந்தது. “என்னை எங்க கூட்டிட்டுப் போறீங்க?” அவனது முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.
அவன் அவளைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. ஸ்பீடை இன்னும் கூட்டினான்.
“நீ கத்துற சத்தம் யாருக்கும் கேட்காத இடத்துக்கு, உன்னைக் கொல்ல யாருக்கும் தெரியாத இடத்துக்கு கூட்டிட்டுப் போறேன், டாக்டர் அம்மா,” என்றான் அக்னீ அமைதியாக.