அச்சமயம் அவந்திகா, அதியமான் மற்றும் அதிரூபன் மூவரும் அங்கே வருவதைப் பார்த்த ரேவந்த் சற்றுத் திகைத்துப் போனான்.
அதிர்ச்சியுடன் அதிரூபனைப் பார்க்க, அவனோ தன் தந்தையையும் அவந்திகாவையும் கண்ஜாடை காட்டிவிட்டு, எதுவும் தெரியாதது போல இயல்பாக நின்றுக் கொண்டான்.
அதற்குள் அதியமான் ரேவந்தின் அருகே வந்து,
அதியமான்: “ஹாய் ரேவந்த்! இங்கே என்ன பண்ற?”
என்று இயல்பாகக் கேட்டார்.
அவரது கம்பீரமான தோரணையைக் கண்டு சற்றுப் பதறிப் போன ரேவந்த்,
ரேவந்த்: “அது… பாஸுக்காக லஞ்ச் எடுத்துட்டு வந்தேன், சார்.”
என்று மரியாதையுடன் பதிலளித்தான்.
அதைக் கேட்ட அதியமான் புன்னகைத்தபடி மகனை நோக்கித் திரும்பி,
அதியமான்,
“பாருடா… உன் பிஏ உன்னை எவ்வளவு பொறுப்பாகப் பார்த்துக்கிறான்! ரொம்ப சந்தோஷமா இருக்கு.”
என்று பெருமையாகக் கூறி, ரேவந்தின் தோளைத் தட்டிக் கொடுத்தார்.
அந்தப் பாராட்டைக் கேட்ட ரேவந்த் சங்கடத்தில் காதுகள் சிவந்தபடி தலைகுனிந்து நின்றான்.
பிறகு அதியமான்,
அதியமான்: “நீயும் எங்களோட சேர்ந்து சாப்பிடணும். வா!”
என்று அழைக்க,
அந்த வார்த்தையைக் கேட்ட ரேவந்த்தின் முகமோ விளக்கெண்ணெய் குடித்தது போல சட்டென்று மாறிப்போனது.
ரேவந்த்தின் முகம் ஏன் அப்படிச் சட்டென்று மாறியது என்பதை அறியாதவர்கள் யாராக இருந்தாலும், ரேவந்த் மட்டும் அதற்கான காரணத்தை நன்றாகவே அறிந்திருந்தான்.
ஏனெனில், மதிய உணவு நேரம் என்பது அதிரூபனுக்கும் ரேவந்துக்கும் மட்டுமே உரித்தான நேரம்.
அந்த நேரத்தில் இருவரும் தனியாக அமர்ந்து, ஒருவர் மற்றவருக்கு உணவு பரிமாறிக் கொள்வார்கள்.
ரேவந்த்,
“வாயைத் திற…”
என்று ஒரு கவளம் ஊட்ட,
அதிரூபன்,
“நீ மட்டும் ஊட்டினா போதுமா? இப்போ என் டர்ன்.”
என்று அவனும் ஒரு கவளத்தை ரேவந்த்தின் வாயில் வைத்துவிடுவான்.
“நீ சாப்பிடு…”,
“முதல்ல நீ…” என்று இருவருக்கும் இடையே செல்லச் செல்லச் சின்னச் சின்ன அக்கப்போர்கள் அரங்கேறும்.
அந்த மதிய உணவு இடைவேளை, அவர்கள் இருவருக்கும் மட்டுமே சொந்தமான ஒரு பிரத்தியேக உலகம்.
அதனால்தான் ரேவந்த், அதிரூபனுக்குப் பிடித்த ஒவ்வொரு உணவையும் பார்த்துப் பார்த்து, மிகவும் கவனமாக எடுத்து வைத்து வருவான்.
‘மனநிலை நன்றாக இருந்தால்தானே பழைய சோறும் சுவையாக இருக்கும்…’
என்பதைப் போல,சுவையான உணவு மட்டும் அல்லாது அது சாப்பிடும் இடம் கூட பார்த்தவுடனே மனம் நிறைய வேண்டும் என்ற எண்ணத்தில், அனைத்தையும் அன்போடும் அக்கறையோடும் ஏற்பாடு செய்து வைப்பான் ரேவந்த்.
அதுவும்… தன்னவனுக்காக மட்டுமே.
ஆனால் இப்போது…
அதியமான்,
“வா ரேவந்த்… நீயும் எங்களோட சேர்ந்து சாப்பிடு.”
என்று அழைத்ததும், ரேவந்தின் மனம் சுருங்கிப் போனது.
‘இன்றும் நமக்கான அந்த கொஞ்ச நேரம் கிடைக்காதா…?’
என்ற ஏக்கத்துடன், அதிரூபனை ஒரு கணம் நிமிர்ந்து பார்த்தான்.
அந்தப் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்த அதிரூபனும், அவனை அமைதியாகவே பார்த்தான்.
அவனால் மட்டும் என்ன செய்து விட முடியும்?
தன் காதலியை ஒரு கணம் பார்த்த அதிரூபன், உள்ளுக்குள் பெருமூச்சு விட்டுவிட்டு தன் தந்தையை நோக்கித் திரும்பினான்.
அதிரூபன்,
“டாட்… உங்களுக்கான லஞ்சும் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடும். அதுவரைக்கும் நீங்க ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க.”
அதியமான்,
“ஓகேடா.”
என்று கூறிவிட்டு, அருகில் இருந்த கைகளை கழுவும் இடத்தை நோக்கி நடந்தார்.
அவந்திகாவோ, அந்த இரு ஆண்களையும் மாறி மாறிப் பார்த்தபடி, பெருமூச்சு விட்டவாறு இருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றாள்.
அவளைப் பல்லைக் கடித்தபடி பார்த்த ரேவந்த், அதிரூபனை நோக்கி,
“உங்களுக்காகத்தான் இந்த அரெஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் பண்ணியிருக்கேன், பாஸ்…”
என்று அழுத்தமாகக் கூறினான்.
அதைக் கேட்ட அதிரூபன் சிரிப்பை அடக்கிக் கொண்டு,
“ரொம்ப நல்லா இருக்கு…”
என்று மட்டும் சொல்லி அமைதியாகி விட்டான்.
அந்த நேரத்தில் கைகளைக் கழுவிக் கொண்டு அதியமான் திரும்பி வந்தார்.
அதன் பிறகு நால்வரும் ஒன்றாக உணவு மேசையில் அமர்ந்தனர்.
மேஜையில் இருந்த உணவையும், அதைச் சுற்றியிருந்த அழகான ஏற்பாட்டையும் பார்த்த அதியமான் ரசித்தபடி,
“பரவாயில்லையே ரேவ்ந்த்… ரொம்ப அழகா அரேஞ்ச் பண்ணியிருக்க. இதைப் பார்த்ததும் வேலை டென்ஷன் எல்லாம் அப்படியே ஓடிப் போயிடுச்சு. ரொம்ப ரிலாக்ஸா ஃபீல் ஆகுது. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு.”
என்று மனதாரப் பாராட்டினார்.
உடனே ரேவந்த் பணிவுடன்,
“தேங்க்யூ, சார். நாள் முழுக்க உழைக்கிறோம். சாப்பிடும் போது மனசுக்கு நிம்மதியா இருக்கணும்னு தோணும். அதனால் தான் பாஸுக்காக ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு பண்ணுவேன், சார்.”
என்றான் பணிவாக.
அவன் பேசிய விதத்தையும், முகத்தில் தெரிந்த அக்கறையையும் ஆழமாகக் கவனித்தார் அதியமான்.
அதன் பிறகு அனைவரும் தங்களுக்கான உணவைப் பரிமாறிக் கொள்ள ஆரம்பித்தனர்.
அவந்திகா, தானே சமைத்து கொண்டு வந்திருந்த பன்னீர் பிரியாணியை டிபன் பாக்ஸிலிருந்து எடுக்க,
அதன் மணம் காற்றில் பரவியது.
அந்த வாசனையை நன்றாக உள்ளிழுத்து ரசித்த அதியமான், கண்களை ஒரு நொடி மூடிவிட்டு,
“வாவ்… வாசனையே ரொம்ப அருமையா இருக்கு. அவந்திகா, பன்னீர் பிரியாணி நீதான் செஞ்சியா?”
என்று கேட்டார்.
“ஆமாம், சார்.”
என்று புன்னகையுடன் பதிலளித்தாள் அவந்திகா.
அதியமானோ,
“அப்படியா? அப்போ கொஞ்சம் எனக்குக் கொடு.”
என்று எந்தத் தயக்கமும் இல்லாமல் அவளிடமிருந்த டிபன் பாக்ஸை வாங்கிக் கொண்டார்.
அவரது செயலைக் கண்ட அதிரூபனே ஒரு கணம் ஆச்சரியத்தில் உறைந்து போனான்.
அவன் பார்த்தவரை, அவனது தந்தை எப்போதும் கம்பீரமாகவும் ஆளுமையுடனும் அனைவரிடமும் நடந்து கொள்வார்.
அதிரூபனிடம் மட்டும் சிரித்துப் பேசினாலும், ஒரு மரியாதையான இடைவெளியை எப்போதும் கடைப்பிடிப்பார்.
அப்படிப்பட்டவர், அவந்திகாவிடம் இவ்வளவு உரிமையாக அவளது சாப்பாட்டைக் கேட்டு வாங்கிச் சாப்பிடுவதைப் பார்த்ததும்…
‘என்னடா இது…?’
என்று தோன்றிய அதிரூபனின் மனதில், அவனையும் மீறி ஒரு வித பொறாமை முளைத்தது.
அதை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தவன், தன் முன் வைக்கப்பட்டிருந்த உணவை அவந்திகாவை நோக்கி நகர்த்தினான்.
அவனை கேள்வியாக பார்த்தவளிடம்,
“இன்னைக்கு நீ இதைச் சாப்பிடு.”
என்றதும் அவளும்
“சரி.”
என்று தலையசைத்தவள், அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாகச் சாப்பிட ஆரம்பித்தாள்.
உணவு முடிந்ததும் முதலில் பேச்சை ஆரம்பித்தது ரேவந்த் தான்.
“நாளைக்கு கவர்மெண்ட் டெண்டர் அனௌன்ஸ் பண்ணப் போறாங்க, பாஸ். பாலம் கட்டுற ப்ராஜெக்ட்க்கு தேவையான கம்பிங்க எல்லாம் நாம்தான் சப்ளை பண்ணணும்னு முடிவு பண்ணியிருந்தோம். நாளைக்கே அதை ஃபைனல் பண்ணிடணும்.”
என்றான்.
அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அதியமான்,
“நானும் அதைத்தான் யோசிச்சுட்டு இருந்தேன்.”
என்று கூறிவிட்டு மகனைப் பார்த்தார்.
“நீ என்ன முடிவு பண்ணி இருக்க?”
என்று கேட்டார்.
அதிரூபன்,
“எல்லாத்தையும் பக்காவா பிளான் போட்டாச்சு, டாட். அவந்திகா கிட்டயும் இதை பத்தி பேசி இருக்கேன். நாளைக்கே எல்லா டாக்குமென்ட்ஸும் ரெடி பண்ணிடலாம்.”
என்று நம்பிக்கையுடன் பதிலளித்தான்.
மகன் பேசும் விதத்தையும், அவனது தன்னம்பிக்கையையும் பார்த்த அதியமான், எதுவும் சொல்லாமல் பெருமிதம் கலந்த பார்வையால் அவனை மெச்சிக் கொண்டார்.
சிறிது நேரம் கழித்து அதியமான் அங்கிருந்து கிளம்ப, மற்றவர்களும் தங்களது வேலைகளைப் பார்க்கச் சென்றனர்.