அஞ்சலி கையில் இருந்த ஆயின்மென்ட்டைப் பார்த்தபடியே அப்படியே தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தாள். அவள் முகத்தில் தெரிந்த அந்தச் சங்கடத்தை கவனித்த விக்ரம், மெதுவாக அவளைப் பார்த்து,
“அஞ்சலி… அதை என்கிட்ட கொடு. நானே போட்டுக்கிறேன்…” என்று கையை நீட்டினான்.
அவன் அப்படிச் சொன்னதும், அவளது மனதில் ஏதோ ஒரு பாரம் ஏற்றி உணர்வு தோன்றியது. ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றவள், உடனே தலையசைத்து,
“இல்ல விக்ரம்… நான் போட்டுவிடுறேன்…” என்று மெதுவாகக் கூறினாள்.
அதன் பிறகு அவன் அருகில் வந்து படுக்கையின் ஓரத்தில் அமர்ந்தாள். கையில் இருந்த ஆயின்மென்ட்டைத் திறந்தவள், சிறிது தயக்கத்துடன்,
“விக்ரம்… உங்க சட்டையைக் கொஞ்சம் கழட்டுங்க. அப்பத்தான் ஆயின்மென்ட் போட முடியும்…” என்றாள்.
விக்ரம் உடனே,
“இடுப்பு மட்டும்தான் வலிக்குது. இடுப்பு பக்கம் மட்டும் போட்டா போதும்…” என்று சங்கடத்துடன் கூறினான்.
அவனது தயக்கத்தை புரிந்துகொண்ட அஞ்சலி, அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை. மெதுவாக அவனது சட்டையை இடுப்பு வரை மட்டும் தூக்கிவிட்டு, டாக்டர் கொடுத்திருந்த ஆயின்மென்ட்டை அவன் காயம்பட்ட இடத்தில் மிகவும் மென்மையாகத் தடவினாள்.
அவள் விரல்கள் அவன் இடுப்பில் மெதுவாக வருடியபடி மருந்தைத் தேய்த்துக் கொண்டிருந்தன. வலி இருந்தாலும், அவளது அக்கறை கலந்த அந்தத் தொடுதல் விக்ரமுக்கு ஒரு விதமான நிம்மதியைக் கொடுத்தது. மனதில் இருந்த பதற்றமும் மெதுவாகக் குறைய, உடல் முழுவதும் ஒரு அமைதி பரவியது.
சிறிது நேரத்திலேயே வலியின் சோர்வும், அவளது அன்பான கவனிப்பும் சேர்ந்து அவனை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்திவிட்டது.
விக்ரம் தூங்கிவிட்டதை கவனித்த அஞ்சலி, மிகவும் மெதுவாக அவனது சட்டையை மீண்டும் கீழே இழுத்துவிட்டாள். பின்னர் அறையின் ஏசியை இயக்கி, அவனுக்கு குளிர் அதிகமாகப் படக்கூடாது என்று ஒரு போர்வையை எடுத்து அழகாகப் போர்த்திவிட்டாள். அவன் நிம்மதியாக உறங்குவதை ஒரு கணம் அமைதியாகப் பார்த்தவள், மெதுவாக கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
அவளைப் பார்த்ததும் லட்சுமி அருகே வந்து,
“அஞ்சலிம்மா… விக்ரமுக்கு இப்போ எப்படி இருக்கு?” என்று அக்கறையுடன் கேட்டார்.
“இப்போ பரவாயில்லை அத்தை… தூங்கிட்டு இருக்காரு…” என்று மெதுவாகப் பதிலளித்தாள் அஞ்சலி.
“சரி மா… கொஞ்சம் கவனமா பாத்துக்கோ. வலி அதிகமா இருந்தா உடனே சொல்லு…” என்று கூறிவிட்டு லட்சுமி அங்கிருந்து சென்றார்.
அதன்பிறகு அஞ்சலி பெரும்பாலும் விக்ரம் அருகிலேயே இருந்தாள். அவனை ஒரு நிமிடம் கூட தனியாக விடாமல் நன்றாகக் கவனித்துக் கொண்டாள். அவனுக்குச் சாப்பாடு ஊட்டுவது முதல், மாத்திரைகளை சரியான நேரத்தில் கொடுப்பது வரை அனைத்தையும் அவளே பார்த்துக் கொண்டாள்.
அன்று இரவு முழுவதும் அஞ்சலி சரியாகத் தூங்கவே இல்லை. அவ்வப்போது கண்விழித்து விக்ரமைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். அவன் வலியால் முகத்தைச் சுளித்தாலே உடனே எழுந்து, அவன் இடுப்பில் மீண்டும் ஆயின்மென்ட்டைத் தேய்த்து விடுவாள். அவனுக்குத் தாகமாக இருந்தால் உடனே தண்ணீர் எடுத்துக் கொடுப்பாள். தலையணையைச் சரிசெய்து வைப்பாள். போர்வை விலகினால் மீண்டும் போர்த்திவிடுவாள்.
ஒரு சிறு குழந்தையைத் தாய் எப்படி பார்த்துக் கொள்வாளோ, அதுபோலவே ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்து விக்ரமைப் பார்த்துக் கொண்டாள் அஞ்சலி.
அந்த அக்கறையும், பாசமும், அரவணைப்பும் விக்ரமின் மனதை ஆழமாகத் தொட்டது. தன் தாய்க்குப் பிறகு, இப்படி யாருமே தன்னை இவ்வளவு அன்பாகக் கவனித்ததே இல்லை என்ற உணர்வு அவன் மனதில் எழுந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக அவன் எதிர்பார்க்காமல் தவித்த அந்த அன்பு, இன்று அஞ்சலியின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட்டது.
அதே நேரத்தில், அஞ்சலிக்கும் தெரியாமல் அவளது மனதில் இருந்த தூரம் மெதுவாகக் குறைந்து கொண்டிருந்தது. நான்கு வருடங்களாக விக்ரமிடமிருந்து விலகியே இருந்த அவள், இப்போது அவனது வலியைத் தன்னுடைய வலியாக உணர ஆரம்பித்திருந்தாள்.
இந்த நான்கு வருடங்களில் முதல் முறையாக, அஞ்சலி மனதாலும் செய்கையாலும் விக்ரமிடம் நெருங்கி வர ஆரம்பித்திருந்தாள். அந்த மாற்றம் சிறியதாகத் தோன்றினாலும், அவர்களது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப் போகிறதற்கான அமைதியான அறிகுறியாக அது மாறிக் கொண்டிருந்தது.
அதிகாலை நேரம். வீடு முழுவதும் அமைதியில் மூழ்கியிருந்தது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அந்த அமைதியைக் கலைக்கும் விதமாக ஆதிரனின் செல்போன் திடீரென்று ஒலிக்கத் தொடங்கியது.
தூக்கக் கலக்கத்திலேயே கையை நீட்டி போனை எடுத்த ஆதிரன், திரையைப் பார்க்காமலேயே அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.
“ஹலோ…” என்று சோர்வான குரலில் கூறியவனின் காதில், கதிரின் பதட்டம் நிறைந்த குரல் ஒலித்தது.
“ஆதி…”
அந்த குரலில் இருந்த பதற்றத்தை உணர்ந்த ஆதிரன், சட்டென்று படுக்கையில் எழுந்து அமர்ந்தான்.
“டேய்… என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி பேசுற? யாருக்கு என்ன ஆச்சு?” என்று பதற்றத்துடன் கேட்டான்.
மறுமுனையில் சிறிது நேரம் அமைதியாக இருந்த கதிர், பின்னர் மெதுவாக,
“ஆதி… சர்வேஷை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருக்கோம்…” என்றான்.
அந்த ஒரு வார்த்தை ஆதிரனின் இதயத்தை பலமாகத் தாக்கியது.
“என்னடா சொல்ற? சர்வேஷ்க்கு என்ன ஆச்சு?” என்று பதறியபடி கேட்டான்.
“ரெண்டு நாளாகவே அவனுக்கு உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடலுக்கு வந்து டாக்டர்கிட்ட காட்டிட்டு போணம் . ஆனா நேத்து நைட்டு திடீர்னு காய்ச்சல் ரொம்ப அதிகமாகி மயங்கி விழுந்துட்டான். அதுக்குப் பிறகுதான் அவசரமா ஹாஸ்பிடலுக்கு கொண்டு வந்து அட்மிட் பண்ணினோம்…” என்றான் கதிர் கவலையுடன்.
“என்னது… நேத்து நைட்டே அட்மிட் பண்ணீங்களா? அப்பவே ஏன் என்கிட்ட சொல்லல நீ?” என்று ஆதிரன் கோபத்துடனும் வருத்தத்துடனும் கேட்டான்.
கதிர் அமைதியாக,
“சாரிடா…” என்று மட்டும் கூறினான்.
“சரி… இன்னும் கொஞ்ச நேரத்துல நான் ஹாஸ்பிடல் வந்துடுறேன்,” என்று கூறிவிட்டு ஆதிரன் வேகமாக அழைப்பை துண்டித்தான்.
அடுத்த நொடியே படுக்கையிலிருந்து எழுந்து, அவசரமாகத் தயாரானவன், மாடிப்படிகளில் வேகமாக இறங்கி வந்தான்.
அவன் இவ்வளவு அவசரமாக இறங்கி வருவதை பார்த்த ஸ்ரீராம்,
“என்ன ஆதி? ஏன் இவ்வளவு அவசரம்? பொறுமையா வரமாட்டியா?” என்று கேட்டார்.
ஆனால் ஆதிரனின் மனம் முழுவதும் சர்வேஷின் நினைவிலேயே இருந்தது.
ஸ்ரீராமை பார்த்தவன்,
“அப்பா… நான் அவசரமா கிளம்பணும்,” என்று மட்டும் கூறினான்.
அந்த நேரத்தில் அங்கு வந்த லக்ஷ்மி,
“என்ன ஆதி? இந்த நேரத்துல எங்க இவ்வளவு அவசரமா கிளம்புற?” என்று கேட்டார்.
“அம்மா… சர்வேஷ்க்கு உடம்பு முடியல. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க. கதிர் இப்போதான் கால் பண்ணி சொன்னான். அங்கதான் போயிட்டு இருக்கேன்,” என்றான் ஆதிரன்.
“என்ன சொல்ற ஆதி? நல்லாத்தானே இருந்தான்!” என்று அதிர்ச்சியடைந்தார் லக்ஷ்மி.
அடுத்த நொடியே,
“சரி… நாங்களும் வர்றோம்,” என்றார்.
“சரி… வாங்க,” என்று கூறிய ஆதிரன் வெளியே சென்றான்.
அவனைத் தொடர்ந்து வீட்டிலிருந்த அனைவரும் அவசரமாகத் தயாராகி வெளியே வந்தனர்.
விக்ரமும் அஞ்சலியும் மட்டும் வீட்டிலேயே இருந்தனர். மற்ற அனைவரும் காரில் ஏறினர்.
ஆதிரனின் மனம் முழுவதும் சர்வேஷைப் பற்றிய கவலையால் நிரம்பியிருந்தது. “அவனுக்கு எதுவும் ஆகக்கூடாது…” என்ற எண்ணமே மீண்டும் மீண்டும் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
சில நிமிடங்களில் கார் மருத்துவமனையை நோக்கி வேகமாகப் புறப்பட்டது. வீட்டை விட்டு கிளம்பிய அந்த நொடியிலிருந்தே, காருக்குள் இருந்த அனைவரின் மனதிலும் ஒரே பிரார்த்தனை—சர்வேஷ் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான்.
மருத்துவமனைக்கு அவசரமாக வந்து சேர்ந்த ஆதிரனின் குடும்பத்தினர், சர்வேஷ் அனுமதிக்கப்பட்டிருந்த அறையை நோக்கி வேகமாக நடந்தார்கள். அனைவரின் முகத்திலும் பதற்றமும் கவலையும் தெளிவாக தெரிந்தது. யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அறைக்குள் நுழைந்த ஆதிரனின் பார்வை நேராக படுக்கையில் மயக்கமாக படுத்திருந்த சர்வேஷின் மீது விழுந்தது. சிறிய உடலில் சோர்வு அப்பட்டமாக தெரிந்தது. அவனருகில் இருந்த நாற்காலியில் ஆதிரை அமர்ந்து, கண்ணீர் நிறைந்த கண்களுடன் சர்வேஷின் தலையை மெதுவாக வருடிக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் கவலை, பயம், வேதனை—மூன்றும் ஒன்றாகக் கலந்திருந்தன.
சர்வேஷை அந்த நிலையில் பார்த்ததும் ஆதிரனின் மனம் நொறுங்கியது. அவன் கண்களில் வலி தெரிந்தது. மெதுவாக அவன் அருகில் சென்று,
“சர்வேஷ்…” என்று அழைத்தான்.
அந்த குரல் கேட்டதும், சட்டென்று எழுந்து நின்ற ஆதிரை, ஒரு நொடி கூட யோசிக்காமல் ஆதிரனின் சட்டைக் காலரைப் பிடித்தாள்.
“இங்க எதுக்கு வந்தீங்க? உங்களால்தான் என் பையன் இப்படி இருக்கான்! அவனுக்கு மட்டும் ஏதாவது ஆனுச்சுன்னா… நான் என்ன பண்ணுவேன்னே தெரியாது!” என்று கதறியபடி கத்தினாள்.
அவளது குரலில் இருந்த கோபத்தை விட, பயமும் தாயின் தவிப்பும்தான் அதிகமாக இருந்தது.
அங்கிருந்த ஆதிரனின் வீட்டார் அனைவரும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“இவள் ஏன் இப்படி பேசுறா? சர்வேஷுக்கு உடம்பு முடியாம போனதுக்கும் ஆதிரனுக்கும் என்ன சம்பந்தம்?” என்ற கேள்விதான் ஒவ்வொருவரின் மனதிலும் எழுந்தது.
ஆதிரனும் அதே குழப்பத்தில்தான் இருந்தான். ஆதிரை ஏன் தன்னை மட்டும் குற்றவாளியாகக் காட்டுகிறாள் என்று அவனுக்குப் புரியவில்லை. அவளது வார்த்தைகள் அவன் மனதை காயப்படுத்தின.
அந்த நேரத்தில் அறையின் கதவு மெதுவாக திறந்து, மருத்துவர் உள்ளே வந்தார்.
மருத்துவரைப் பார்த்ததும், ஆதிரை உடனே ஆதிரனின் சட்டைக் காலரில் இருந்த கைகளை எடுத்துக்கொண்டு சற்று விலகி நின்றாள். அறையில் மீண்டும் அமைதி நிலவியது.
மருத்துவர் நேராக சர்வேஷின் அருகில் சென்று அவனது உடல்நிலையை கவனமாகப் பரிசோதித்தார். ஸ்டெதஸ்கோப்பால் இதயத் துடிப்பைக் கேட்டார். கண்களைப் பார்த்தார். நெற்றியைத் தொட்டு வெப்பத்தையும் சோதித்தார்.
அவர் பரிசோதித்து முடித்ததும், ஆதிரன் பதற்றத்துடன் முன்வந்து,
“டாக்டர்… சர்வேஷ்க்கு பயப்படுற மாதிரி எதுவும் இல்லையே?” என்று கேட்டான்.
மருத்துவர் அவனைப் பார்த்து அமைதியாக,
“நீங்க யாரு? சர்வேஷோட அப்பாவா?” என்று கேட்டார்.
ஒரு நொடி கூட தயங்காமல்,
“ஆமாம்…” என்று பதிலளித்தான் ஆதிரன்.
அந்த பதிலை கேட்ட மருத்துவர் மெதுவாக தலையசைத்துவிட்டு கூறினார்.
“உங்க மகனுக்கு இப்போ மருந்தோ, மாத்திரையோ மட்டும் போதாது. அவனுக்கு ரொம்ப தேவைப்படுறது நீங்கதான். மனதளவிலும், உடலளவிலும் அவன் உங்களை அதிகமா தேடுறான். குழந்தைகளோட மனசு ரொம்ப மென்மையானது. அவங்க உணர்வுகளை நாம நினைக்கிறத விட அதிகமா புரிஞ்சுக்குவாங்க.”
சிறிது நேரம் இடைவெளி விட்ட மருத்துவர், ஆதிரையைப் பார்த்தபடி தொடர்ந்தார்.
“நான் நேத்தே உங்க வைஃப் கிட்டயும் சொன்னேன். உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ பிரச்சனை இருக்குன்னு எனக்கு புரியுது. அது என்ன பிரச்சனையா இருந்தாலும், அதை குழந்தை கிட்ட காட்டாதீங்க. பெரியவங்களோட சண்டையையும் பிரிவையும் குழந்தைகள் தாங்கிக்க முடியாது. அதோட தாக்கம்தான் இப்போ அவன் உடல்நிலையிலும் தெரிகிறது. அதனால இனிமேல் அவன் முன்னாடி எந்த பிரச்சனையும் காட்டாம பார்த்துக்கோங்க.”
என்று அறிவுரை கூறிவிட்டு, மருத்துவர் அமைதியாக அறையை விட்டு வெளியேறினார்.
மருத்துவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் அந்த அறையில் இருந்த அனைவரின் மனதிலும் ஆழமாகப் பதிந்தது.
ஆதிரையோ, மின்னல் தாக்கியது போல அப்படியே உறைந்து நின்றாள். அவளது கண்கள் வெறுமையை வெறித்துப் பார்த்தன.
அதேபோல் அங்கிருந்த மற்றவர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தார்கள். மருத்துவர் பேசியதை மறுத்து ஒரு வார்த்தை கூட யாராலும் பேச முடியவில்லை. அறை முழுவதும் கனமான அமைதி மட்டுமே நிலவியது.
டாக்டர் கூறிய அந்த ஒரு வார்த்தை, அங்கிருந்த அனைவரின் மனதிலும் இருந்த குழப்பத்திற்கான விடையை தெளிவாகக் கொடுத்தது.
ஆதிரனின் குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல, ஆதிரனுக்கே அந்த நொடியில்தான் உண்மை முழுமையாகப் புரிந்தது.
சர்வேஷுக்கு திடீரென காய்ச்சல் வந்ததற்குக் காரணம் சாதாரண உடல்நலக் குறைவு மட்டுமல்ல. அவன் மிகவும் நேசித்த ஆதிரன் தன்னருகில் இல்லாத ஏக்கமும், அவனைப் பார்க்க முடியாத தவிப்பும், மன அழுத்தமும்தான் அந்தச் சிறிய குழந்தையை இந்த அளவுக்கு பாதித்திருந்தது.
அதனால்தான் ஆதிரை, ஆதிரனைப் பார்த்தவுடனேயே தனது கோபம், பயம், வேதனை என அனைத்தையும் அவன் மீதே கொட்டித் தீர்த்தாள். அது வெறும் கோபமல்ல; ஒரு தாயின் இயலாமை, பதற்றம், தனது மகனின் நிலையைப் பார்த்து ஏற்பட்ட வேதனை.
இப்போது அவள் ஏன் அப்படி நடந்துகொண்டாள் என்பதற்கான காரணம் அனைவருக்கும் தெளிவாகப் புரிந்தது.
ஆதிரனின் மனம் குற்றவுணர்ச்சியில் கனத்தது. “என்னாலதான் என் பையன் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கானா…?” என்ற எண்ணம் அவன் மனதை விட்டு அகலவில்லை. படுக்கையில் சோர்வாக படுத்திருந்த சர்வேஷைப் பார்த்தபோது, அவன் கண்கள் தன்னையும் மீறி கலங்கின.
தொடரும்