அத்தியாயம் 08 (USAP)
அரசு அவனது வீட்டை நோக்கி வண்டியை செலுத்த அகமியோ, “அப்பறோம் இப்போ கட்சி தலைவர் இனி வருங்கால முதல்வரா?” என்றதும் அவனோ,
மீசையை முறுக்கி விட்டபடி, “இல்லையா பின்ன? உசுர கொடுத்து பைட்லாம் பண்ணியிருக்கேன், ரெண்டு காதல் கிளிகள சேர்த்து வச்சிருக்கேன்”
அகமியோ வாய்விட்டு கைத்தட்டி சிரிக்க அரசுக்கு கோபம் தான் வந்தது அதே கோபத்துடன், “இப்போ எதுக்குடி இப்டி சிரிக்கிற? புருஷனுக்கு அடிப்பட்டுருக்கேனு கொஞ்சம் கூட கவலையில்ல இப்போ தான் சிரிக்கிறா திமிர் பிடிச்சவ”
என்று திட்ட அவளோ கண்ணை சுருக்கி, “நீங்க உசுர கொடுத்து பைட் பண்ணத நினைச்சு சிரிச்சேன்” என்று மீண்டும் சிரிக்க அவனுக்கும் புரிந்தது.
கண்டுப்பிடித்து விட்டாளென்று, அவனோ பல்லைக் கடித்துக் கொண்டே, “எப்படி கண்டுபிடிச்ச?”
என்றதும் அவளோ, “உங்க கையில அறுப்பு போட்ட தடியன் உங்க ஆளு தானே உங்க விசுவாசி தானே உங்களோட எக்கச்சக்க தடவ பார்த்திருக்கேன்”
என்று மீண்டும் சிரிக்க, இதில் ‘அண்ணிக்கு உங்க மேல சாஃப்ட் கார்ணர் வரும்’ என்றவன் மீது கடுப்பு தான் வந்தது. அதே கடுப்புடன் காரை ஓட்ட,
அவளோ, “பார்த்து ஓட்டுங்க கை வலிக்க போகுது” என்று கூற அவனோ பலவருடங்கள் கழித்து கேட்ட அவளது அக்கறையான வார்த்தையில் உச்சி குளிர போனவனிடம் சட்டென்று,
“இல்லாட்டி என்ன வண்டி ஓட்ட சொல்லுவீங்க பாருங்க அதனால மெதுவா போகலாம்”
என்றதும் அவனோ கடுகடுப்புடன் வண்டி ஓட்ட அவளோ குறும்புடன் அவனை பார்த்திருந்தாள். அப்படியே அவனது வீட்டை வந்தடைய அவளுக்கு பற்பல நினைவுகள், அவனுடன் திருமணம் நடந்த போது பற்பல கனவுகளுடன் காலடி எடுத்து வைத்த வீடும் இது தான் அக்கனவுகள் அடியோடு அழிக்கப்பட்ட வீடும் இது தான்,
அந்த அழிக்கப்பட்ட கனவுகள் அவளை வேற்று உலகத்துக்கு வேறொரு நிலைக்கு அல்லவா அழைத்துச் சென்றது. அத்தனை வலியை தாங்கி தான் இன்று பட்டை தீட்டிய வாளாய் மின்னுகிறாள்.
அவனோ, “என்னடி பார்க்குற நம்ம வீடு தான் உள்ள வா” என்று கையில் ஏந்தியபடி மாடியேறியவன் அவளை தொப்பென கட்டிலில் போட்டு விட்டு அவளருகே சாய்ந்து விட அவளோ பதறிக் கொண்டு எழும்ப போக, அவனோ இரும்புக் கரத்தை கொண்டு
அவளை வளைத்து பிடித்து, அவனுடலுடன் அணைத்து பிடிக்க அவளோ திமிறிக் கொண்டிருந்தாள்.
அவனோ, “ஓவரா திமிறாதடி தூக்கம் வருது அப்டியே இரு ஒழுங்கா தூங்கி ரொம்ப வருஷமாகுது”
என்று கூறியபடி கண் சொக்க அவளோ அவன் பிடியில் இருந்து மெல்ல விலக வேண்டுமென நினைத்தவள், “உங்களுக்கு வெண்ணீர் வச்சு எடுத்துட்டு வாரேன் ஒத்தடம் கொடுக்கனும்னு சொன்னீங்க”
என்றதும், “அதெல்லாம் பிறகு பார்த்துக்கலாம் எஸ்கேப் ஆக பார்க்காம கொஞ்ச நேரம் சும்மா இருடி”
என்று சிறிது நேரத்திலேயே ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்ல அவளோ மெதுவாக அவனது ராட்சஸ கையை நகர்த்தி விட்டு எழுந்துக் கொண்டவள்,
தனது வேலையை நேக்காக பார்க்க தொடங்கி விட இங்கு தனக்கு பொறி வைக்க ஏற்பாடு நடப்பதை அறியாது அரசுவும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தான்.
அன்று ஆறாம் வகுப்பு தேர்வு என்பதால் வழமையை விட தாமதமாகியே வீடு திரும்பிக் கொண்டிருந்தாள் ராதிகா, சற்று மாலையாகி விட்டாளே அவளது உடல் பயத்தில் சற்று நடுங்க தொடங்கி விடும்,
எல்லாவற்றுக்கும் காரணம் அவன் தான் அவனை அவளால் காதலன் என்றோ கணவன் என்றோ கூற முடியாது முன்பெல்லாம் குழந்தைத்தனமாக சுட்டித்தனமாக சுற்றி வந்த பெண்ணவளோ இப்போதெல்லாம் அதை இழந்து விட்டிருந்தாள்.
அதனால் அவசர அவசரமாக வீட்டை நோக்கி நடைப் போட்டுக் கொண்டிருந்த சமயம் பின்னாலிருந்து யாரோ “சயந்தா இங்கே வா” என்று கூப்பிட்டது தான் தாமதம் இங்கு ராதிகாவுக்கு கண்கள் கலங்கியது. உடலோ அச்சத்தில் நடுங்கியது.
மனக்கண்முன் சில பல பயங்கர காட்சிகள் யாரோ ஒரு நபர் “ஏய் நான் சொன்ன வேலைய செய்யணும் இல்லன்னு வையேன்” என்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைவது போலும் “இதை குடிச்சு தான் ஆகணும் குடிடி” என்று வாயில் ஏதோ
மருந்துகளை ஊற்றி விடுவது போல் ஏதேதோ பயமுறுத்த அவளோ கண்ணீர் வடித்துக் கொண்டே வேக வேகமாக மூன்று வீடுகள் தாண்டி இருக்கும் வீட்டை
மூன்றே எட்டுக்களில் ஓட்டமும் நடையுமாக அடைந்தவளுக்கு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தக் கூட சக்தி இல்லை கால் கைகள் வெட வெடக்க அப்படியே மயங்கி சரிந்த சமயம் அவளை ஒரு இரும்புக்கரம் தாங்கி பிடித்திருந்தது.
அவ்வளவு தான் அந்த தருணத்திலும் கண்கள் அந்த உருவத்தை பார்த்து பயந்து, “ஐயோ! விட்ரு ஐயோ! ஐயோ! என் குழந்தைக்கு அம்மா வேணும் எங்கள வாழவிடு”
என்று கண்ணீர் வடிய பயத்தில் முனக அவளது காதை நோக்கி குனிந்தவனோ,
“உன்ன விட தான் ப்ரைவேட் ஜெட் புடிச்சு கிளம்பி வந்தேனா?” என்று மெல்ல அவள் கன்னத்தில் தாடி மீசை குத்த முத்தமிட அவளோ அதில் பயமும் அருவருப்பும் ஒன்று சேர,
உடல் விரைத்து துவளும் கைகளால் அவனை விலக்க பார்க்க, அவனது பலத்துக்கு முன்னால் அவளது பலம் ஒன்றுமில்லையே மயங்கி விழுந்த காதலியை தூக்கி தோளில் போட்டவன் அழைப்புமணியை அழுத்த அங்கு வந்த மாதங்கியோ,
“வந்துட்டியாம்மா உன்ன பார்க்காம தான் ருகன் வேற ஒரே அழுகை” என்று திறக்க அவரோ வந்தவனை பார்த்து உறைந்து போனார்.
எவன் கண்ணில் மகளும், அவள் பெற்ற மகவும் படக்கூடாது என்று வேண்டினாரோ,
இன்று அவன் கண் முன்னே நிற்கிறான். அவரை பார்த்து ஒற்றை புருவமுயர்த்தியவன்,
“என்ன அத்தையாரே மருமகன் முதல் முறை வீட்டுக்கு வந்திருக்கேன் ஆரத்தி எடுக்க தேவையில்ல மாப்பிள்ளை உள்ள வாங்கன்னு ஒரு வார்த்தை ஒரேயொரு வார்த்தை கூடவா சொல்லமாட்டீங்க?”
என்றதும் அவரோ கண்ணீர் வடித்தபடி, “தம்பி என் பொண்ண விட்ருங்க அவளாலயும் அவ பெத்த பிள்ளையாலயும் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது தம்பி”
என்று கையெடுத்து கும்பிட அவனோ அவரது கையை இறக்கி விட்டபடி,
“ச்சு ச்சு தம்பி இல்ல மாப்பிள்ளை சரியா அத்தை அப்பறம் என்ன சொன்னீங்க அவ பெத்த குழந்தையா? இல்லயில்ல என் மூலமா வந்த குழந்தை வரம் கேட்டதும் கையில
குழந்தை விழ இவ என்ன குந்தியா? இல்லாட்டி தொடம பிள்ளை கொடுக்க நான் தான் சூர்யதேவனா? சொல்லுங்க”
என்றதும் அவருக்கோ இவனது இரண்டாம்தர பேச்சில் முகம் சுருங்கியது. அவரை தாண்டி உள்ளே நுழைந்தவனோ ராதியை அங்கிருந்த சோபாவில் கிடத்தி விட்டு நெற்றியில் முத்தமிட்டவன்,
“பாப்பு என்ன ரொம்ப மிஸ் பண்ணுனீயா? இனி உன்ன தூக்கிட்டு சுத்தி தொல்லைக் கொடுக்குறேன்” என்றவன் அவளது முகத்தில் கோலமிட அவளோ அவனது தொடுகை தந்த ஒவ்வாமையில் நெளிய,
“பாருங்களேன் அத்தை தூக்கத்துல கூட உங்க மகளுக்கு அவ புருஷன தெரியுது ரொம்ப பிடிவாதக்காரியா வளர்த்துட்டீங்க போங்க”
என்று நக்கலாக கூற மாதங்கியோ அவனது பேச்சு தந்த ஒவ்வாமையில் முக சுளிப்புடன் நின்றிருக்க அவனோ அதை கணித்தவனாக,
“நானும் டீசண்ட்டா பேசணும்னு யோசிக்கிறேன் ஆனா பாருங்களேன் உங்களோட சந்தேகத்துக்கு பதில் சொல்ல போய்”
என்று ஏதோ கூற வந்தவனின் பேச்சு தடைப்பட்டது ராட்சஸனின் இதயமும் வேகமாக துடித்து அடங்கியது. அந்த பிஞ்சுக் குரலில்,
“ம்மா ம்மா வந்துட்…டீயா நான்” என்று அன்னையை தேடி கையில் ஓவியத்துடன் வந்தவன் அங்கு ஓங்கு தாங்கான உருவத்தில் ஆஜானபாகுவாக நின்றவனை பார்த்ததும் பயத்தில் உதட்டை பிதுக்கிக் கொண்டு,
“ம்மா பாத்தி ம்மா பாத்தி சூனியக்காரன் தூக்கிட்டு போக வந்துட்டான் ம்ஹ்ம்ம்” என்று அழுதவன் அன்னையின் கன்னத்தில் பிஞ்சுக் கரங்களால் தட்டி
“அம்மா நான் இனி சேட்டை பண்ண மாட்டேன் ஒழுங்கா சாப்புதுறேன் என்ன இந்த சூனியக்கார கிழவன்ட்ட பிடிச்சு கொடுத்துறாத”
என்று வீல் வீல் என கத்த சயந்தனோ, “சூனியக்கார கிழவனா?” என்று முனு முனுத்து விட்டு குழந்தையை கத்த கத்த தூக்கியவன்
“டேய்! அழுத பின்னாடி ரெண்டு சப்பு சப்புன்னு வச்சிருவேன் வாயமூடு” என்று அதட்ட குழந்தையோ பொங்கி வரும் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டே மாதங்கியிடம் தாவ பார்க்க குழந்தையை இறுக்கி பிடித்தவன்
“ஷூ துள்ளக் கூடாது” என்றவன் குழந்தையின் மென் ஸ்பரிசத்தை பால் வாசத்தை ஆழ்ந்து அனுபவித்தான். ஆயிரம் இருந்தாலும் அவன் பெற்ற மகவாயிற்றே மாறி மாறி கன்னத்தில் முத்தமிட்டவன்,
“நான் தான்டா உன் அப்பா இனி அப்பானு கூப்பிடு” என்றதும் அவனோ உதட்டை பிதுக்கி அழ தொடங்க சயந்தனோ குழம்பியபடி, “ஏன்டா அழுகுற?”
என்று வினவ அவனோ, “அம்மா அப்பா பத்தி கேட்டா என்ன லொள்ளும் அப்பறோம் அழும்”
என்று கிள்ளுவது போல் பாவனை செய்ய அவனோ, “இனி தைரியமா கூப்பிடுடா அப்பா நானிருக்கேன் உங்க அம்மா என்ன செய்றானு பார்க்குறேன்”
என்றதும் சத்ருக்கனோ, “இல்ல மாட்டேன்” என்று அழ அவனுக்கோ அதற்கு மேல் பொறுமையில்லை போலும் ராதியை ஒரு தோளில் தூக்கிப் போட்டவன் குழந்தையையும் அழுக அழுக தூக்கிக் கொண்டு தனது காரில் பறந்து விட்டான்.
மாதங்கியும் என்ன செய்ய என்று தெரியாது விழித்துக் கொண்டு நின்றிருந்தார்.
அகச் செழியனோ தனது ஜீப்பின் பெனட்டில் அமர்ந்தபடி கல்லூரி முடிந்து வெளியேறும் மாணவர்களையும் பேராசிரியர்களையும் நோட்டமிட்டபடி பப்பில்
கம்மை மென்றுக் கொண்டிருக்க அப்போது தான் தன்னுடன் பேராசிரியையாக பணி புரியும் திவ்யாவுடன் கதைத்து சிரித்தபடி பிறைமதியும்
மெதுவாக வந்துக் கொண்டிருந்தாள். அன்று கபில நிற புடவை அணிந்து கண்ணில் மூக்குக் கண்ணாடியுடன் வந்தவளை பார்க்க பார்க்க அவனுக்கு தெவிட்டவில்லை.
கொஞ்ச நேரம் அவளை பார்வையால் அளந்தவன்,
‘இன்னைக்கு கண்டிப்பா தூக்குறோம்’ என்று நினைத்தபடி குதித்து இறங்கியவன்
“குட் ஈவினிங் மிஸ் பிறை மதி” என்று கம்பீர குரலில் அழுத்தமாக கூற அவளோ அவன் குரலில் திடுக்குற்று,
“குட் ஈவினிங் சார்” என்று மெல்லிய குரலில் கூற அவள் பக்கத்திலிருந்த திவ்யாவோ,
“யாருடி இவரு தெரிஞ்சவரா? எனக்கும் இன்ட்ரோ கொடேன்” என்றதும் அதை கேட்ட செழியனோ,
“ஐயோ! சிஸ்டர் இவ என்னோட பியான்ஸி கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க போறோம் வெளிய சொல்லக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டா அதான் மிஸ்னு கூப்பிட்டேன்”
என்றதும் பிறைமதியோ விழி விரித்து அவனை பார்க்க அவனோ அவள் தோளில் கைப்போட்டபடி, “அப்போ நாங்க கிளம்புறோம் சிஸ்டர்”
என்று அவளை இழுக்காத குறையாக இழுத்துச் சென்று ஜீப்பில் ஏற்றியவன் விசிலடித்து கொண்டே வாகனத்தை செலுத்த,
“உங்கள நினைச்சு நான் வெட்கப்படுறேன்” என்று கோபமாக ஏதோ பேச வாயெடுக்க
செழியனோ, “வெரி குட் அப்டி தான் வெட்கப்பட்டு பிராக்டிஸ் பண்ணனும் அப்போ தான் பஸ்ட் நைட் அன்னைக்கு நல்லா வெட்கப்பட முடியும் மாமனுக்கும் மூட் சும்மா கிர்ருன்னு ஏறும்”
என்று கூறியவனை பார்த்தவளோ, “திருந்தாத ஜென்மம்” என்று திட்டிக் கொண்டாள்.
தொடரும்…