அத்தியாயம்:32
சர்வேஷின் உடல்நலம் நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வந்தது. சில வாரங்களுக்கு முன்பு இருந்த அந்த பலவீனமான நிலை இப்போது இல்லை. முகத்தில் மீண்டும் பழைய சிரிப்பு மெல்ல மெல்ல திரும்பி வந்தது. வீட்டில் இருந்த அனைவருக்கும் அது ஒரு பெரிய நிம்மதியாக இருந்தது.
ஆதிரனும் தினமும் ஒரு முறையாவது கதிரின் வீட்டிற்குச் சென்று சர்வேஷைப் பார்த்துவிட்டு தான் திரும்புவான். அவனிடம் விளையாடி, பேசிச் சிரிக்க வைத்து, அவனுக்குப் பிடித்த சாக்லேட்டோ, பொம்மையோ வாங்கிக் கொடுத்து மகிழ்விப்பான். சர்வேஷும் ஆதிரனை மிகவும் நெருக்கமானவனாகவே நினைக்கத் தொடங்கிவிட்டான்.
ஆனால், ஆதிரனின் மனதில் மட்டும் ஒரு எண்ணம் தினமும் சுழன்று கொண்டே இருந்தது.
“எப்படியாவது ஆதிரையை இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க வேண்டும்… அவள் மனதை மாற்ற வேண்டும்…”
அந்த எண்ணமே அவனது ஒவ்வொரு நாளையும் ஆக்கிரமித்திருந்தது.
அன்று மாலை நேரம்…
கதிரின் வீட்டுத் தோட்டம் மாலைச் சூரியனின் பொன்னிற ஒளியில் மிகவும் அழகாகக் காட்சியளித்தது. பல வண்ண மலர்கள் பூத்து குலுங்க, குளிர்ந்த தென்றல் காற்று வீசிக் கொண்டிருந்தது.
தோட்டத்தில் இருந்த கல் இருக்கையில் ஆதிரை, நிலா, மித்ரா மூவரும் அமர்ந்து பல விஷயங்களைப் பற்றி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
சற்று தள்ளி, யாழினியும் சர்வேஷும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இருவரின் சிரிப்புச் சத்தமும் தோட்டம் முழுவதும் எதிரொலித்தது.
விளையாடிக் கொண்டிருந்த சர்வேஷ் திடீரென்று தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோட்டக்காரரிடம் ஓடிச் சென்றான்.
“அண்ணா… எங்களுக்கு மூணு ரோஜா பூ பறிச்சு தர்றீங்களா?” என்று தனது மழலைக் குரலில் கேட்டான்.
அவனுடன் யாழினியும் ஆர்வமாக நின்றிருந்தாள்.
குழந்தைகளின் ஆசையை மறுக்க முடியாமல் சிரித்தபடியே தோட்டக்காரர் மூன்று அழகான சிவப்பு ரோஜாக்களைப் பறித்து அவர்களிடம் கொடுத்தார்.
அதை வாங்கிக் கொண்ட இருவரும் மகிழ்ச்சியாக ஓடி வந்து…
“இது உங்களுக்கு…”
என்று ஒவ்வொருவருக்கும் ஒரு ரோஜாவாக ஆதிரை, நிலா, மித்ரா மூவரிடமும் நீட்டினார்கள்.
அந்த அழகான செயலைப் பார்த்த மூவரின் முகத்திலும் மலர்ந்த சிரிப்பு இன்னும் அழகாகியது.
“தேங்க்யூ டா செல்லங்களா…”
என்று கூறிய அவர்கள், இரு குழந்தைகளின் கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டு, அவர்கள் கொடுத்த பூக்களை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டார்கள்.
அந்த நிமிடம் அனைவரின் மனதையும் நிறைத்த ஒரு இனிமையான தருணமாக இருந்தது.
ஆனால் அடுத்த நொடியே…
சர்வேஷ் ஆதிரையின் அருகே வந்து அவளது கையைப் பிடித்துக் கொண்டு,
“அம்மா… இன்னைக்கு ஆதி அப்பா வருவாரு?” என்று ஏக்கமாகக் கேட்டான்.
அவன் கேட்ட அந்த ஒரு கேள்வி…
அவ்வளவு நேரம் சிரித்துக் கொண்டிருந்த ஆதிரையின் முகத்தில் இருந்த புன்னகையை ஒரு நொடியில் மறையச் செய்தது.
அவளது இதயம் ஏதோ கனத்தது.
தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஆழமாக மூச்சை இழுத்து, முகத்தில் மீண்டும் இயல்பான புன்னகையை வரவழைக்க முயன்றவள்,
“வருவாரு கண்ணா…”
என்று மட்டும் மெதுவாகச் சொன்னாள்.
அதை கேட்ட சர்வேஷின் முகம் உடனே மலர்ந்தது.
“ஓகே அம்மா…”
என்று சந்தோஷமாகத் தலையசைத்தவன், மீண்டும் யாழினியின் கையைப் பிடித்துக் கொண்டு விளையாட ஓடிவிட்டான்.
அந்தக் காட்சியை முழுவதுமாக அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர் நிலாவும் மித்ராவும்.
சில நொடிகள் யாரும் எதுவும் பேசவில்லை.
பிறகு தயக்கத்துடன் மித்ரா மெதுவாக ஆதிரையைப் பார்த்தாள்.
“அண்ணி… இதை உங்ககிட்ட சொல்லலாமா வேண்டாமான்னு எனக்கு தெரியல. ஆனா… என் மனசுக்குள்ளேயே வச்சிக்கிட்டு இருக்கவும் ஒரு மாதிரி இருக்கு…”
என்றாள்.
ஆதிரை குழப்பத்துடன் அவளைப் பார்த்தாள்.
மித்ரா மெதுவாகத் தொடர்ந்தாள்.
“உங்களுக்காக இல்லாட்டியும்… சர்வேஷுக்காகவாவது நீங்க கொஞ்சம் யோசிக்கலாமே அண்ணி…”
அந்த வார்த்தைகள் ஆதிரையின் காதில் விழுந்தவுடன், அவள் அதிர்ச்சியாக மித்ராவைத் திரும்பிப் பார்த்தாள்.
அதைப் புரிந்துக் கொண்ட மித்ரா மெதுவாகப் புன்னகைத்தாள்.
“ஆமா அண்ணி… உங்களுக்கே நல்லாவே தெரியும். உங்களைத் தவிர எங்க எல்லாருக்குமே நீங்க ஆதி அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிறதுல முழு விருப்பம்தான். ஆனா… அப்படி இருந்தும் நாங்க யாருமே இதைப் பற்றி உங்ககிட்ட பேசல.”
சிறிது நேரம் இடைவெளி விட்டவள் மீண்டும் தொடர்ந்தாள்.
“ஏன்னா… உங்க மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும் என்று எங்களுக்கு தெரியும். உங்களை இன்னும் காயப்படுத்த விரும்பல. அதனால்தான் இந்த விஷயத்தை நாங்க இதுவரைக்கும் எடுத்துப் பேசவே இல்லை.”
ஆதிரை அமைதியாக அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
மித்ராவின் குரல் மெதுவாகக் கலங்கியது.
“ஆனா… இப்ப சர்வேஷைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப கவலையா இருக்கு அண்ணி. அவன் ஒவ்வொரு தடவையும் ‘அப்பா எப்போ வருவாரு?’ன்னு கேட்குறப்ப… என் மனசே வலிக்குது.”
அவளது கண்கள் மெல்ல கலங்கின.
“எனக்கு அவனைப் பார்க்கும் போதெல்லாம்… என் அண்ணன் ஞாபகம்தான் வருது. என் அண்ணன் எப்போதும் சிரிச்சுட்டு, சந்தோஷமா இருக்கணும்னு தான் நான் ஆசைப்படுவேன். அதே மாதிரி தான் இப்ப சர்வேஷ் விஷயத்துலயும் யோசிக்கிறேன்.”
மித்ராவின் அந்த உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள் அங்கிருந்த சூழ்நிலையையே கனமாக மாற்றின.
ஆதிரை எதுவும் பேசாமல் அமைதியாகத் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவளது மனதிற்குள் பல உணர்வுகள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டிருந்தன. ஒரு பக்கம் கடந்த காலத்தின் காயங்கள், மறுபக்கம் சர்வேஷின் எதிர்காலம்… இரண்டிற்கும் நடுவில் சிக்கித் தவித்த அவளால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அன்று ஆதிரன் கதிரின் வீட்டிற்கு வருவதற்கு இரவாகிவிட்டது.
அவனுக்கு அலுவலகத்தில் ஒரு முக்கியமான வேலை இருந்ததால், அதை முடித்துவிட்டுத்தான் கிளம்ப முடிந்தது. நேராக வீட்டிற்குச் செல்ல மனம் வரவில்லை. “சர்வேஷை ஒரு முறை பார்த்துவிட்டுச் செல்வோம்…” என்ற எண்ணமே அவனை கதிரின் வீட்டிற்கு அழைத்து வந்தது.
வருவதற்கு முன்பே கதிருக்கு போன் செய்து, தான் வருவதாகக் கூறியிருந்தான்.
வீட்டிற்குள் நுழைந்த ஆதிரனை கண்டதும், ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த கதிர் எழுந்து நின்றனர்.
“வாடா…” என்று கதிர் புன்னகையுடன் அவனை வரவேற்றான்.
ஆதிரன் சுற்றிலும் ஒரு முறை பார்வையைச் சுழற்றிவிட்டு,
“சர்வேஷ் தூங்கிட்டானாடா?” என்று ஆவலாகக் கேட்டான்.
கதிர் சிரித்தபடி,
“தெரியலடா… முழிச்சுதான் இருப்பான். நீ நேத்து வரல இல்ல… இன்னைக்கு நாள் முழுக்க ‘ஆதி அப்பா வருவாரு…? ஆதி அப்பா வருவாரு…?’ன்னு கேட்டுக்கிட்டே இருந்தான். நீ கண்டிப்பா வருவன்னு தூங்காம இருப்பான். போய் பாரு…” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்ட ஆதிரனின் இதழ்களில் தன்னையும் அறியாமல் ஒரு புன்னகை மலர்ந்தது.
“சரி…” என்று கூறியவன் மாடிப்படிகளில் ஏறிச் சென்றான்.
கதிரோ, தனது அறைக்குள் சென்றுவிட்டான்.
ஆதிரன் மெதுவாக ஆதிரையின் அறைக்குச் சென்று கதவைத் தட்டினான்.
“வாங்க…” என்ற குரல் கேட்க, கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.
அவன் உள்ளே வந்தபோது, ஆதிரை கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து எதையோ ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.
மறுபுறம் சர்வேஷ் மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான்.
ஆதிரனைப் பார்த்ததும் அவனது முகம் மலர்ந்தது.
“அப்பா…!”
என்று மகிழ்ச்சியாகக் கத்திக்கொண்டே ஓடி வந்து அவன் மீது தாவி கட்டிக் கொண்டான்.
அவனது அந்த மழலை அன்பில் ஆதிரனின் மனமும் இலகுவானது.
“என்னடா செல்லம்… இன்னும் தூங்கலையா?” என்று அவன் கன்னத்தை வருடியபடி கேட்டான்.
“உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணேன்…” என்று சர்வேஷ் சிரித்தான்.
அந்த ஒரு பதில் ஆதிரனின் மனதை முழுவதுமாக உருக்கிவிட்டது.
அவன் சர்வேஷைத் தூக்கிக் கொண்டு பால்கனிக்குச் சென்றான்.
அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து அவனுடன் சிறிது நேரம் விளையாடினான். அவனுக்காக வாங்கி வந்திருந்த சாக்லேட்டையும், ஒரு சிறிய கார்பொம்மையையும் கொடுத்தான்.
இருவரின் சிரிப்புச் சத்தம் பால்கனி முழுவதும் எதிரொலித்தது.
சிறிது நேரத்தில் விளையாடி சோர்ந்து போன சர்வேஷ், ஆதிரனின் தோளில் தலை சாய்த்தபடியே தூங்கிவிட்டான்.
அவன் தூங்கிவிட்டதை உணர்ந்த ஆதிரன் மெதுவாக அவனைத் தோளில் சாய்த்தபடி அறைக்குள் வந்தான்.
மிகுந்த கவனத்துடன் சர்வேஷை கட்டிலில் படுக்க வைத்து, போர்வையை அவன் மீது போர்த்திவிட்டான்.
அவன் முகத்தை ஒரு கணம் பாசமாகப் பார்த்தவன், மெதுவாக வெளியே செல்ல திரும்பினான்.
“ஒரு நிமிஷம்…”
ஆதிரையின் குரல் அவன் காலடிகளை நிறுத்தியது.
ஆதிரன் திரும்பிப் பார்த்தான்.
அவள் மெதுவாக எழுந்து அவன் முன் வந்து நின்றாள்.
அவளது முகத்தில் எந்த உணர்வையும் படிக்க முடியவில்லை.
“நான்… உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”
“என்ன?” என்று புருவத்தை உயர்த்தியபடி கேட்டான் ஆதிரன்.
சில நொடிகள் அமைதியாக நின்ற ஆதிரை, ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு அவன் கண்களை நேராகப் பார்த்தாள்.
“நான்… உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்.”
அந்த ஒரு வாக்கியம்…
ஆதிரனின் இதயத்தையே ஒரு நொடி நிறுத்தியது போல இருந்தது.
அவன் கண்களில் அதிர்ச்சி தெளிவாகத் தெரிந்தது.
“என்ன சொன்ன…?” என்று நம்ப முடியாமல் கேட்டான்.
அவள் அமைதியாகத் தலையசைத்தாள்.
“உண்மையாத்தான் சொல்றேன்.”
ஆதிரன் இன்னும் நம்ப முடியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இத்தனை நாட்களாக எவ்வளவோ முயன்றும் கிடைக்காத சம்மதம்… இன்று அவளாகவே சொல்லிவிட்டாள்.
ஆதிரை மீண்டும் பேசத் தொடங்கினாள்.
“உங்களுக்கு நல்லாவே தெரியும்… நான் ஏன் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்னு. அன்னைக்கு நான் சொன்னது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.”
சிறிது நேரம் அமைதியாக நின்றவள் தொடர்ந்தாள்.
“என்கிட்ட எதையும் எதிர்பார்க்காம இருந்தா… கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க.”
அவளது குரலில் எந்த விதமான உணர்ச்சியும் இல்லை.
அது ஒரு நிபந்தனை.
ஒரு ஒப்பந்தம்.
அந்த வார்த்தைகள் ஆதிரனின் மனதை குத்தியது.
அவன் மெதுவாக அவளை நெருங்கினான்.
“நானும் அன்னைக்கே உனக்கு தெளிவா சொன்னேன்.”
அவனது குரல் உறுதியாக இருந்தது.
“நானும் அன்னைக்கே உன்கிட்ட தெளிவா சொன்னேன். இந்தக் கல்யாணத்தை நான் கேட்டது சர்வேஷுக்காக மட்டும் தான். அவனுக்கு ஒரு நல்ல அப்பாவா, பாதுகாப்பான வாழ்க்கையா இருக்கணும்னுதான் நான் நினைச்சேன். உன்கிட்ட இருந்து கணவன்-மனைவி உறவையோ, வேற எதையோ நான் எதிர்பார்க்கல. அதே மாதிரி இனிமேலும் உன்ன எதற்காகவும் கட்டாயப்படுத்த மாட்டேன்.”
ஆதிரை அவன் பேச்சை அமைதியாகக் கேட்டாள்.
பிறகு எந்த பதிலும் சொல்லாமல், அலட்சியமான ஒரு பார்வையை மட்டும் அவன் மீது வீசிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அந்த ஒரு செயல் ஆதிரனுக்குள் இருந்த கோபத்தைத் தூண்டியது.
ஆனால் அடுத்த நொடியே தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
“இப்போதான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கா… இப்போ ஏதாவது பேசிப் பிரச்சனை பண்ணிட்டா, வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிடும்…” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டவன், அவளை மீண்டும் ஒரு முறை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியேறினான்.
ஆதிரன் அறையை விட்டு வெளியேறியதும், அறை முழுவதும் மீண்டும் அமைதி சூழ்ந்தது.
ஆதிரை மெதுவாக திரும்பி வந்து, கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சர்வேஷின் அருகில் அமர்ந்தாள். தூக்கத்தில் கூட முகம் முழுவதும் புன்னகையுடன் இருந்த மகனின் தலைமுடியை மெதுவாக வருடிக் கொடுத்தாள்.
பிறகு அவளது பார்வை மெதுவாக அறையின் சுவரை நோக்கித் திரும்பியது.
அங்கு சுவரில் மாட்டியிருந்த கௌதமின் புகைப்படம் அவளது கண்களில் பட்டது.
அந்தப் புகைப்படத்தில் எப்போதும் போல புன்னகையுடன் நின்றிருந்த கௌதமின் முகத்தைப் பார்த்த நொடியே, அவள் இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் அனைத்தும் உடைந்து வெளியே வந்தன.
கண்கள் மெதுவாகக் கலங்கின.
புகைப்படத்தை வெறித்துப் பார்த்தபடியே நடுங்கும் குரலில் பேசத் தொடங்கினாள்.
“ஏன் கௌதம்…?”
“என்ன விட்டுட்டு போன…?”
“என்னை இப்படி ஒரு சூழ்நிலைக்கு ஏன் தள்ளிட்டுப் போன…?”
அவளது குரல் உடைந்து ஒலித்தது.
“ரொம்ப கஷ்டமா இருக்கு கௌதம்…”
கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் கன்னத்தில் வழிந்தன.
“சர்வேஷுக்காகத்தான் இந்த முடிவை எடுத்தேன். அவன் சந்தோஷமா இருக்கணும்… அவனுக்கு ஒரு முழுமையான வாழ்க்கை கிடைக்கணும்னு தான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்.”
சிறிது நேரம் பேச முடியாமல் அமைதியாக அழுதவள், மீண்டும் கௌதமின் புகைப்படத்தைப் பார்த்தாள்.
“ஆனா… என் மனசு இதை ஏத்துக்கவே மாட்டேங்குது கௌதம். இன்னும் நீ என் கூடதான் இருக்குற மாதிரி தோணுது. உன் இடத்துல வேற யாரையாவது நினைக்க என்னால முடியல…”
அவள் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.
“சர்வேஷ் சந்தோஷமா இருக்கணும்னு… சுயநலமா நான் எடுக்குற இந்த முடிவு… ஒருத்தரோட வாழ்க்கையையே பாதிச்சிடுமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு.”
ஆதிரனின் அமைதியான முகம் அவளது நினைவில் தோன்றியது.
அவளது குரல் முழுவதும் வலியால் நிரம்பியிருந்தது.
“நான் எடுக்குற இந்த முடிவு… சரியா? தப்பா? எனக்கே தெரியல கௌதம்…”
என்று கூறியவள், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்கக் கூட மறந்து, சுவரில் மாட்டியிருந்த கௌதமின் புகைப்படத்தையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
தொடரும்