அந்தச் சூழ்நிலையை மீண்டும் இயல்பாக்கும் பொருட்டு, கோகுல் கை தட்டியபடி,
“சரி… சரி… சென்டிமென்ட் சீன் எல்லாம் முடிஞ்சுது. இப்ப அடுத்த ஆளைப் பார்ப்போமா?” என்று சிரித்தபடி கூறினான்.
அவன் அப்படிச் சொன்னதும் அனைவரும் மீண்டும் பழைய கலகலப்புக்கு திரும்பி, விளையாட்டில் முழு ஆர்வத்துடன் மூழ்கினர்.
அடுத்ததாக கோகுல் கதிரை நோக்கிக் கை காட்டினான்.
“வாங்க மச்சான்… இப்ப உங்க டர்ன்!” என்றான்.
கதிர் மனதிற்குள், ‘இதுல என்ன கேள்வி இருக்குமோ?’ என்று யோசித்துக் கொண்டே அந்த மடிக்கப்பட்ட சீட்டை எடுத்துப் பிரித்துப் பார்த்தான்.
அதில்,
“எந்த பெண்ணையாவது சைட் அடிச்சு இருக்கீங்களா?”
என்று எழுதப்பட்டிருந்தது.
அந்தக் கேள்வியைப் படித்த கதிர் மெதுவாகத் தலையை நிமிர்த்து கோகுலை முறைத்துப் பார்த்தான்.
அதைப் பார்த்த கோகுல் உடனே இரு கைகளையும் தூக்கி,
“ஐயோ அண்ணா… என்னைய ஏன் முறைக்கிறீங்க? இந்தக் கேள்வி உங்களுக்கு வரும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல என்றான் கோகுல்
சரி… சரி… நான் மாத்திக்கிறேன். வேற யாருக்காவது கொடுத்துடலாம்.” என்றான் கதிர்.
உடனே மற்றவர்கள் ஒரே குரலில்,
“அதெல்லாம் முடியாது… உங்களுக்கு வந்த கேள்விக்குப் பதில் சொல்லித்தான் ஆகணும்!” என்று விடாப்பிடியாகக் கூறினர்.
“ஆமாம்… ஆமாம்… பதில் சொல்லுங்க!” என்று அனைவரும் சேர்ந்து வற்புறுத்தினர்.
கதிர் என்ன பதில் சொல்வது என்று யோசித்தபடியே ஓரக்கண்ணால் நிலாவைப் பார்த்தான்.
நிலாவோ, ‘இவர் என்ன சொல்லப் போறாரோ?’ என்ற ஆர்வத்தில், அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கதிரின் பார்வை நிலாவை நோக்கிச் சென்றதை கவனித்த கோகுல் உடனே,
” அண்ணி… இவர் யார் பேரைச் சொன்னாலும் நீங்க கோபப்படக் கூடாது. ஓகேவா?” என்று குறும்பாகக் கேட்டான்.
நிலா சிரித்தபடி,
“நான் ஏன் கோபப்படப் போறேன்? அதெல்லாம் நான் கோபப்பட மாட்டேன்.” என்றாள்.
“அப்புறம் என்ன அண்ணா? அண்ணியே சொல்லிட்டாங்க. இப்ப சொல்லுங்க!” என்று கோகுல் மேலும் சீண்டினான்.
கதிர் லேசாக வெட்கப்பட்டு சிரித்தபடி,
“நான் எல்லாம் யாரையும் சைட் அடிச்சதில்லை… கல்யாணம் ஆன புதுசுல என் பொண்டாட்டியைத்தான் சைட் அடிச்சேன்.” என்றான்.
அவன் சொல்லி முடித்தவுடன், அங்கிருந்த அனைவரும் சத்தமாகச் சிரித்தனர்.
கோகுல் தலையில் கை வைத்தபடி,
“இதெல்லாம் ஏத்துக்க முடியாது! பொண்டாட்டிய சைட் அடிச்சதெல்லாம் கணக்குல வராது. அத ஒத்துக்கவே முடியாது!” என்று அலறினான்.
கதிர் சிரிப்பை அடக்கிக் கொண்டு,
“டேய்… சத்தியமாத்தான் சொல்றேன். நான் எந்தப் பொண்ணையும் அந்த மாதிரி பார்த்ததே இல்ல.” என்றான்.
உடனே விக்ரம் சந்தேகமாக,
“நம்புற மாதிரி இல்லையே மச்சான்!” என்று கிண்டலாகக் கூறினான்.
அதற்கு கதிர்,
“நம்பலைன்னா என் பிரண்டு ஆதிரன்கிட்ட கேளுங்க. அவனே சொல்லுவான்.” என்றான்.
அதைக் கேட்ட கோகுல் உடனே ஆதிரனை நோக்கித் திரும்பி,
“சொல்லுங்க மச்சான். கதிர் அண்ணா இதுவரைக்கும் ஒரு பொண்ணையாவது சைட் அடிச்சிருக்கானா? பார்ட்டில, காலேஜ்ல, வெளிய எங்கயாவது?” என்று கேட்டான்.
ஆதிரன் சிரித்தபடி,
“இல்லடா… அவன் எந்தப் பெண்ணையும் திரும்பிக்கூட பார்க்க மாட்டான். ‘எந்தப் பொண்ணைப் பார்த்தாலும் அவங்க எனக்கு தங்கச்சி மாதிரி தான் தெரியுறாங்க’ன்னு சொல்லுவான்.” என்று கூறிவிட்டு சிரித்தான்.
அதைச் கேட்டதும் மீண்டும் அனைவரும் கலகலவெனச் சிரித்தனர்.
கோகுல் உடனே ஆதிரனை நோக்கி,
“ஓஹோ… அப்படியா? அப்போ நீங்க எத்தனை பொண்ணை சைட் அடிச்சு இருக்கீங்க?” என்று எதிர்கேள்வி கேட்டான்.
ஆதிரன் சற்றும் யோசிக்காமல்,
“டேய்… கேள்வி அவனுக்குத்தான். எனக்கு இல்ல.” என்றான்.
உடனே விக்ரம்,
“சரி… சரி… கேள்வி இல்லன்னாலும் பரவாயில்லை. பொதுவா சொல்லுங்க.” என்று வம்பிழுத்தான்.
ஆதிரன் சிரித்தபடி,
“நீ முதல்ல சொல்லு. அப்புறம் நான் சொல்றேன்.” என்றான்.
அதை கேட்ட விக்ரம் அவசரமாக,
“இல்ல… இல்ல… வேணாம்… நான் சும்மாதான் கேட்டேன்.” என்று பேச்சை மாற்ற முயன்றான்.
விக்ரமின் அந்த அவசரத்தைப் பார்த்த அஞ்சலிக்கு உடனே சந்தேகம் வந்தது.
‘இவர் எதுக்கு இவ்வளவு அவசரமா “வேணாம்” சொல்றாரு? ஏதாவது இருக்குமோ?’ என்று மனதிற்குள் நினைத்தபடி, சந்தேகப் பார்வையுடன் விக்ரமைப் பார்த்தாள்.
அஞ்சலியின் அந்தப் பார்வையை உணர்ந்த விக்ரம், அவளைப் பார்த்து மெதுவாக முறைத்தான்.
அந்தக் காட்சியைப் பார்த்த ஆதிரனின் பார்வை இயல்பாகவே ஆதிரையை நோக்கிச் சென்றது.
ஆனால் ஆதிரையோ, அவனுடைய பார்வையைக் கவனிக்காதது போல, அங்கிருந்தவர்களின் கலகலப்பிலேயே கவனத்தைச் செலுத்தியிருந்தாள்.
“புருஷன்னு ஒரு நினைப்பு இருந்தாத்தானே கோபம் வரும்…” என்று அவளை மனதிற்குள் சீண்டிக் கொண்டவன், அடுத்த நொடியே தன்னையே நினைத்து சலித்துக் கொண்டான்.
திருமணம் நடந்த நாளிலிருந்து, ‘சர்வேஷுக்காகத்தான் இந்தக் கல்யாணம்… வேறு எதற்கும் இல்லை…’ என்று நினைத்துக் கொண்டிருந்தவன், இப்போது ஆதிரையைப் பார்க்கும் போது, ‘இவள் என்னோட மனைவி…’ என்ற எண்ணம் தன்னையும் அறியாமல் மனதில் தோன்றி மறைந்து விடும்.
அந்த உணர்வை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மிகவும் கவனமாக இருந்தான்.
அவன் நினைவுகளை கலைப்பது போல,
“சரி… அடுத்து யாரு?” என்று கோகுல் சத்தமாகக் கேட்டான்.
அப்போது விக்ரம்
“இப்போ உங்க கையில இருக்குற சீட்டை பாருங்க கோகுல். அதுல என்ன எழுதியிருக்குன்னு படிங்க,” என்றான்.
“சரி…” என்று கூறிய கோகுல், தன் கையில் இருந்த சீட்டை மெதுவாகப் பிரித்துப் பார்த்தான்.
அதில்,
“உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் ஆசைப்படும் ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்.”
என்று எழுதப்பட்டிருந்தது.
அதைப் படித்ததும், அங்கிருந்த அனைவரின் பார்வையும் ஆர்வமாக கோகுலின் முகத்தில் நிலைத்தது.
கோகுல் ஒரு சிறிய புன்னகையுடன் அனைவரையும் பார்த்துவிட்டு பேச ஆரம்பித்தான்.
“எனக்கு பெருசா , சொத்து, ஆடம்பரம்… எதுவும் வேண்டாம். என்னைச் சுற்றி இருக்கிற எல்லாரும் சந்தோஷமா இருக்கணும். அவங்க முகத்துல எப்போதும் இந்த சிரிப்பு இருக்கணும்.
அதுக்கப்புறம்… என்னோட அம்மாவுக்கு அடுத்தபடியாக என்னோட வாழப் போறவள் என் மனைவி. அவள் என்னோட குடும்பத்தை அவளோட குடும்பம்னு நினைச்சு, என் அம்மாவ அன்பா பார்த்துக்கணும்.
அதே மாதிரி, நான் கடைசி வரைக்கும் என்னோட அம்மாவயும் குடும்பத்தையும் சந்தோஷமா பார்த்துக்கணும்.
இதுதான்… என்னோட ஒரே ஆசை.”
என்று அமைதியாக முடித்தான்.
அவன் பேச்சைக் கேட்டதும், அங்கிருந்த அனைவரும் சில நொடிகள் அமைதியாகவே இருந்தனர்.
அவர்களது முகத்தில் ஆச்சரியமும், மரியாதையும் கலந்திருந்தது.
திருமணம் ஆகாத ஒரு இளைஞன் என்றால், “எனக்கு இப்படிப்பட்ட மனைவி வேண்டும்… அவள் இப்படி இருக்க வேண்டும்… அப்படி இருக்க வேண்டும்…” என்று தான் பெரும்பாலும் ஆசைப்பட்டு பேசுவார்கள்.
ஆனால் கோகுலோ, தன்னுடைய ஆசையைப் பற்றி பேசும்போது கூட தன்னைப் பற்றி எதுவும் சொல்லாமல், தன்னைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும், தன் மனைவி தன் குடும்பத்தை அன்போடு அனுசரித்து நடத்த வேண்டும் என்பதையே தனது ஆசையாகச் சொன்னான்.
அவனுடைய முதிர்ச்சியான எண்ணம் அனைவரின் மனதையும் கவர்ந்தது.
மித்ரா, கோகுலை ஒரு வித ரசனையுடன் பார்த்தாள்.
“இவ்வளவு பொறுப்பான எண்ணம்… இப்போதைய காலத்தில் இப்படிப்பட்ட மனசு இருக்கிற ஆளுங்க ரொம்பக் குறைவு…” என்று மனதிற்குள் நினைத்தவளின் இதழ்களில் தன்னையும் அறியாமல் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்தது.
அவள் பார்வை தன் மீது நிலைத்திருப்பதை கவனித்த கோகுலும், ஒரு கணம் அவளைப் பார்த்து புன்னகைத்தான். அந்தச் சிறிய பார்வைப் பரிமாற்றத்தை யாரும் கவனிக்கவில்லை என்றாலும், இருவரது மனதிலும் சொல்ல முடியாத ஒரு மென்மையான உணர்வு அமைதியாக முளைக்கத் தொடங்கியது.
கோகுல் சிரித்தபடியே ஆதிரையைப் பார்த்து,
“தங்கச்சிமா… இப்போ நீ தான்!” என்றான்.
ஆதிரை குழப்பமாக அவனைப் பார்க்க, அவன் அவள் கையில் இருந்த சீட்டை வாங்கிப் பிரித்துப் பார்த்தான்.
அதில்,
“நடனம் ஆட வேண்டும்.”
என்று எழுதப்பட்டிருந்தது.
அதைப் பார்த்த ஆதிரை உடனே முகத்தைச் சுளித்தாள்.
“ஐயோ… என்னால முடியாது!” என்று பதறியபடி சொன்னாள்.
உடனே கோகுல்,
“என்ன தங்கச்சிமா? எல்லாரும் அவங்களுக்கு வந்த டாஸ்க்கை செஞ்சாங்க தானே. இப்போ நீயும் ஆடித்தான் ஆகணும்.” என்றான்.
“இல்ல… இல்ல… என்னால முடியாது. எனக்கு டான்ஸே தெரியாது…” என்று அவள் மறுத்துக் கொண்டே இருந்தாள்.
அப்போது அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரன் வாய்திறந்தான்.
“தனியா ஆடுறதுக்கு ஒரு மாதிரி இருக்கும்டா. நிலா, அஞ்சலி, மித்ராவையும் கூட சேர்ந்து ஆடச் சொல்லு.” என்றான்.
அதைக் கேட்ட கோகுல் புருவத்தை உயர்த்தி,
“ஓஹோ… பொண்டாட்டிக்கு சப்போர்ட்டு போல!” என்று கிண்டலாகச் சொன்னான்.
அங்கிருந்த அனைவரும் சிரிக்க,
கோகுல் மீண்டும்,
“ஆனா டாஸ்க் ஒரு ஆள்தான் செய்யணும்.” என்றான்.
ஆதிரை உடனே கெஞ்சுவது போல கோகுலின் முகத்தைப் பார்த்தாள்.
அவளுடைய அந்தப் பாவமான முகத்தைப் பார்த்த கோகுலால் மேலும் மறுக்க முடியவில்லை.
“சரி… சரி… என்னோட தங்கச்சிமாவுக்காக இந்த ஒரு தடவை ஒத்துக்கிறேன். நீங்களும் சேர்ந்து ஆடலாம்.” என்றான்.
அதைக் கேட்ட ஆதிரை இன்னும் தயக்கத்துடன்,
“ஐயோ அண்ணா… எனக்கு ஆடவே தெரியாது. நீங்க வேற இவங்க கூட ஆடச் சொல்றீங்க…” என்று புலம்பினாள்.
“இல்ல தங்கச்சிமா… நீ ஆடித்தான் ஆகணும். உனக்காகத்தான் இவங்களையும் உன்னோட சேர்ந்து ஆட ஒத்துக்கிட்டேன். ப்ளீஸ்… எனக்காக ஆடு…” என்று கோகுல் பாசமாகக் கேட்டான்.
அவனுடைய அன்பான வேண்டுகோளை மறுக்க முடியாமல்,
“சரி…” என்று மெதுவாகத் தலையசைத்தபடி எழுந்து நின்றாள் ஆதிரை.
அவளுடன் நிலா, அஞ்சலி, மித்ரா ஆகியோரும் புன்னகையுடன் எழுந்து வந்தனர்.
நான்கு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர். அடுத்த நொடியே தங்களது சேலையின் முந்தானையை எடுத்து இடுப்பில் நன்றாகச் சொருகிக் கொண்டனர்.
கோகுல் உடனே தனது மொபைலில் ஒரு உற்சாகமான பாடலை ஒலிக்க விட்டான்.
💕அடி பஞ்சு மிட்டாய்
சேலை கட்டி பட்டுவண்ண
ரவிக்கை போட்டு
ஆண் : கஞ்சி கொண்டு
போறவளே நெஞ்சுக்குள்ள
நீ வரியா💕
பாடல் ஒலிக்கத் தொடங்கியதும், நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தபடி மெதுவாக நடனமாட ஆரம்பித்தனர்.
ஆரம்பத்தில் தயக்கத்துடன் நின்ற ஆதிரையும், நிலா, அஞ்சலி, மித்ரா ஆகியோரின் உற்சாகத்தால் மெதுவாக இயல்பாக மாறினாள்.
நால்வரின் அசைவுகளிலும் அழகும், நளினமும் இயல்பாக வெளிப்பட்டது. அவர்கள் முகத்தில் இருந்த சிரிப்பும், குறும்பும், சந்தோஷமும் அந்த இடத்தையே இன்னும் கலகலப்பாக்கியது.
அங்கிருந்த ஆண்களின் கண்கள் தங்கள் மனைவிகளைத் தவிர வேறு எதையும் காணவில்லை. இசைக்கு ஏற்ப அவர்கள் லாவகமாக அசைந்து ஆடிய ஒவ்வொரு அசைவும், அவர்களின் மனதை கொள்ளை கொண்டது. “இவர்கள் இவ்வளவு அழகாக நடனமாடுவார்களா?” என்ற இனிய வியப்புடன், காதல் நிரம்பிய பார்வையை அவர்களிடமிருந்து விலக்க முடியாமல் ரசித்துக் கொண்டிருந்தனர்.
ஆதிரனின் பார்வையோ அடிக்கடி ஆதிரையின் மீதே சென்று நின்றது. அவள் சிரித்தபடி ஆடுவதைப் பார்த்தவனின் மனம் காரணமே இல்லாமல் லேசாகி இருந்தது.
அதே நேரத்தில், கோகுலின் பார்வை முழுவதும் மித்ராவின் மீதே நிலைத்திருந்தது.
அவள் சிரித்தபடி நளினமாக ஆடுவதை இமைக்க மறந்து ரசித்துக் கொண்டிருந்தான்.
மித்ராவின் முகத்தில் தெரிந்த குறும்பான சிரிப்பும், காற்றில் அசைந்த அவளது கூந்தலும், நடன அசைவுகளின் அழகும் அவனது கவனத்தை முழுவதுமாகக் கவர்ந்துவிட்டன.
சில நொடிகள் அவளைப் பார்த்தபடியே நின்றவன், திடீரென்று தன்னிலை உணர்ந்தான்.
“என்னடா கோகுல்… என்ன பண்ற?” என்று தனக்குத்தானே முணுமுணுத்தவன், உடனே தன் பின்தலையில் தானே ஒரு அடி போட்டுக் கொண்டான்.
“அவ சின்னப் பொண்ணுடா… தேவையில்லாம மனசை அலைய விடாத.” என்று தன்னைத்தானே கண்டித்துக் கொண்டவன், வேகமாக தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
ஆனால், சில நொடிகள் கூட ஆகவில்லை. அவனுடைய கண்கள் மீண்டும் தன்னையும் அறியாமல் மித்ராவைத் தேடிச் சென்றன. அதை உணர்ந்தவன், தன்னையே நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். அந்த மாற்றத்தை வேறு யாரும் கவனிக்கவில்லை என்றாலும், கோகுலின் மனதில் மித்ராவுக்கான ஒரு இனிய உணர்வு மெதுவாக வேரூன்றத் தொடங்கியிருந்தது.
தொடரும்