அத்தியாயம் 11

தன் மகனுடன் காலை உணவு உண்டு கொண்டிருந்தார் அதியமான் …தந்தை முன்பு உண்ணுவது அவனுக்கு சோதனையாக இருந்தது..

 

 அவரை காண காண தொண்ட குழியில் உணவு இறங்க மறுத்தது அதிரூபனுக்கு…

 அசௌகரியமாக அமர்ந்திருந்த மகனை வாஞ்சையுடன் பார்த்த அதியமான் தலை திருப்பி தனது உதவியாளரை பார்த்திட.. அவரது பார்வை உணர்ந்து ஒரு கோப்பை எடுத்து வந்து உணவு மேசையில் வைத்துவிட்டு ஓரம் தள்ளி நின்று கொண்டார் …

 

தன் தட்டிற்கு அருகில் இருந்த கோப்பையை பார்த்த அதியமான் உண்டு முடித்து கைகளை கழுவிக்கொண்டு இருக்கையில் வந்து அமர்ந்தவர் மகனை ஏறிட்டு பார்த்தார்…

 

 அவனும் கைகளை கழுவி விட்டு டவவினால் துடைத்தபடி தந்தையை பார்த்து ,

 

“ஆபீஸ்க்கு கிளம்புறேன்ப்பா..!”  என்றவனை தடுத்து நிறுத்தி,

 

” உன் கிட்ட பேசனும் அதி..!” என்றதும் இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டவன்,

 

” என்னப்பா என்ன பேசணும்..?”  என கேட்கும் போதே அவனுக்குள் தடுமாற்றம் நிலவியது…

 

அவந்திகா தான் சொன்னதையும் மீறி தந்தையிடம் ஏதேனும் மாட்டி விட்டிருப்பாளோ ..?..அதை விசாரிக்க தான் தந்தை தன்னை அழைக்கிறாரோ??.. என யோசித்த நொடி பயந்து போனவனுக்கு உடல் வியர்க்க ஆரம்பித்தது…

 

 கோப்பையை திறந்து அவனை நோக்கி தள்ளி வைத்தவர்,

 

” உனக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கேன்னு சொல்லி இருந்தேன்ல.. இந்த பொண்ணு பிடிச்சிருக்கானு பாரு அதி.. நல்லா படிச்சிருக்கா நல்ல குடும்பம் ..பொறுப்பான பொண்ணு..உனக்கு பொருத்தமானவளா இருப்பானானு எனக்கு தோணுது ….நீ பார்த்துட்டு சரின்னு சொன்னா நம்ம மீட்டிங் அரேஞ்ச் பண்ணலாம்..!”  என அலுங்காமல் குண்டினை தூக்கிப் போட்டு இருந்தார் அதியமான்…

 

 தந்தையின் பேச்சில் சட்டென உடல் இறுக்கமானது அதிரூபனுக்கு… நெற்றியை நீவியபடி அவர் தந்த கோப்பினை பார்த்தவன்..பிறகு தந்தையை தடுமாற்றுத்துடன் பார்த்து,

 

” அது ..அப்பா …இப்ப மேரேஜ் அவசியமா ..?” எனக் கேட்ட மகனை விழிகள் சுருக்கி பார்த்தவர்,

 

” அவசியம் தான் அதி… ஒரு ஆம்பளைக்கு அதது  அந்த வயசுல நடந்துட்டா அவன் வழி தவறி போக மாட்டான்.. அதுக்காக நான் உன்னை தப்பா சொல்லல …

நம்மகிட்ட சொத்து பணம் வசதி எல்லாமே இருக்கு.. உங்க அம்மாவும் நம்மளை விட்டு போய் பல வருஷம் ஆச்சு..

 நம்ம வீட்டுக்கு ஒரு பொண்ணு வந்தா நல்லா இருக்குன்னு தோணுது.. நீ எத்தனை வருஷத்துக்கு இப்படி தனியாவே இருக்க போற..?..

 உனக்கும் குடும்பம் குழந்தை முக்கியம் தானே ..!” என ஒரு தந்தையாய் அவர் எடுத்துரைத்திட பாவம் அதிரூபனுக்கு தான்

ஐயோடா என்றானது…

 

 என்னவென்று விளக்கம் அளித்திடுவான் அவன் தந்தையிடத்தில் … அதியமானோ,

 

” சீக்கிரமே நல்ல முடிவை சொல்வேன்னு எதிர்பார்க்கிறேன் …சரி நானும் ஆபீஸ்க்கு கிளம்புறேன்..?”  என எழுந்த கணம் இப்போது தந்தையே தடுத்து நிறுத்துவது அதிரூபனின் முறை ஆயிற்று..

 

” அப்பா ஒரு நிமிஷம் ..!” என்றதும் அதியமான் நின்று தன் மகனை திரும்பிப் பார்த்தவர் ‘இப்போது பிடித்திருக்கிறது எனக் கூற வருகிறான் போல!’  என்கிற ஆவலுடன் அவனைப் பார்த்திட…

 

 அதிரூபன் அவரிடம் இருந்து பார்வையை திருப்பிக் கொண்டு ,

 

“நான் ஒருத்தங்களை லவ் பண்றேன்ப்பா…”  என்ற கணம்  அதியமான் அதிர்ந்து மகனைப் பார்த்தவர்,

 

“வாட்…?? லவ் பண்றியா .??ஆனா அப்படி எதுவும் கேள்விப்படலையே..?” தலை சாய்த்து கேட்டதும் பெருமூச்சு விட்ட அதிரூபன் ,

 

“சீக்ரெட்டா லவ் பண்ணிட்டு இருக்கோம்… யாருக்கும் தெரியாது..!”  என்று விட்டு தந்தையை பார்த்தான்..

 

 அவனது விழிகளை மாறி மாறி பார்த்த அதியமான் தன் உயரத்திற்கு நிமிர்ந்து நின்று,

 

” யாரது..??”  என்று தான் முதலில் கேட்டார் …

 

அதிரூபனுக்கு அவனையும் மீறி உடலில் மெல்லிய நடுக்கம் பரவியது தந்தையின் கேள்வியில்…

 

“அது …நேரிலேயே காட்டுறேன்ப்பா… இன்னைக்கு நீங்க எப்போ ஃப்ரீயா இருப்பீங்களோ அப்போ ஆபீஸ்க்கு வாங்களேன்..”  என்றதும்,

 

” ஆபிஸ்லையா..?? “என்று தான் அதியமான் கேட்டார்…

 

” ஆமாப்பா… ப்ளீஸ்..!”  என்றதும் மகனை அழுத்தமாக பார்த்தவர் சரி என்று வெளியேறி விட்டார்…

 

 தந்தை சென்றதும் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு இருக்கையில் அமர்ந்த அதிரூபனுக்கு எப்படி இந்த விடயத்தை தந்தையிடம் சொல்லி சமாளிப்பது என்று புரியவில்லை…

 

சொல்லாமலும் இருக்க முடியாது அல்லவா..! இன்று அனைத்திற்கும் முடிவு கட்டிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் அவனும் கிளம்பி அலுவலகத்திற்குச் சென்றான்..

 

பத்தாவது தளத்திற்கு லிப்டிலிருந்து வெளியேறி வந்த அதிரூபனின் நடையில் தடுமாற்றம் தெரிந்தது…

 

 எப்படி தந்தையை சமாளிப்பது என யோசனையுடன் நடந்து வந்தவனது பார்வையில் அவந்திகாவின் அறைங்கதவு தென்பட்டது…

 

 அதை பார்த்தவாரே தாண்டி நகர போன கணம் என்ன நினைத்தானோ சட்டென கதவை திறந்து தலையை மட்டும் நீட்டி உள்ளே எட்டிப் பார்த்தான்..

 

 அப்போது‌ தான் அவளும் வந்திருக்கிறாள் போல ..தனது லேப்டாப் என அனைத்தையும் ஒவ்வொன்றாய் எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள் கதவு திறக்கும் சத்தத்தில் யார் என்று நிமிர்ந்து பார்த்திட.. அங்கு அதிரூபனை கண்டதும் பெரிதாய் அலட்டிக் கொள்ளாது முகத்தை  சுழித்துக் கொண்டு தனது வேலையை தொடர்ந்தாள்…

 

அதில் கடுப்பான அதிரூபன் உள்ளே நுழைந்து தனது பையை அங்கிருந்து மேசை மீது வைத்து விட்டு,

 

” உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!”  என்றதும் அவன் ஒருத்தன் கூறுவதை காதிலே வாங்காதது போல அவள் பாட்டிற்கு வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள்…

 

 அதில் கடுப்பான அதிரூபன் யோசிக்கவே இல்லை  மேசையே தாண்டி வந்து அவந்திகாவின் கையைப் பிடித்து இழுத்து சுவற்றில் சாய்த்தவன் ,

 

“நான் கேள்வி கேட்டா பதில் சொல்லணும் ..திமிரா உனக்கு..?”  என பல்லை கடித்து கேட்டிடவும் அவனை எரிச்சலுடன் பார்த்த அவந்திகா,

 

” முதல்ல எதுவா இருந்தாலும் தள்ளி நின்னு பேச பழகிக்கோங்க.. இப்படி என் முன்னாடி வந்து நின்னு என்னை இரிடேட் பண்ணிட்டு இருக்காதீங்க..! பார்த்தாலே எரிச்சலா இருக்கு ..” என முகத்தில் அருவருப்பை வைத்து கூறிடவும் அவனது ஈகோ அடிபட்டது …

 

அவளது கன்னத்தைப் பிடித்து தன்னை பார்க்கச் செய்தவன்,

 

” ஓவரா பண்ணாத.. நான் உன்கிட்ட மரியாதையா தான் நடந்துக்கணும்னு நினைக்கிறேன் ..ஆனா நீ தான் வேணும்னே என்னை கோபப்படுத்தி பார்க்குற..??”  என தன்னிலை விளக்கம் அளிக்க முயன்றவனை இன்னும் எரிச்சலாக பார்த்த அவந்திகா,

 

” அதைத்தான் நானும் சொல்றேன்… எது பேசுறதா இருந்தாலும் தள்ளி நின்னு பேசுங்க…எனக்கு உங்களை இப்படி பார்க்க கூட பிடிக்கல.. எனக்கு ஒரு மாதிரி அருவருப்பா இருக்கு..!”  என வெளிப்படையாக கூறிய கணம் முகம் கருத்து விட்டது அதிரூபனுக்கு…

 

 இன்னும் அவளை நெருங்கி நின்று ,

 

“அப்படி என்னடி உன்னை நான் பண்ணேன்..??? என்னமோ ரேப் பண்ண மாதிரி பேசுற..??”  என்றவனது கூற்றில் அவனை அதிர்ந்து போய் பார்த்திட.. அக்கணம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்திருந்தார் அதியமான்.. 

 

அங்கு நெருக்கமாய் நின்றிருக்கும் மகனையும் அவந்திகாவையும் கண்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டிருந்தார்…

 

 இந்நேரத்தில் தந்தையை எதிர்பார்த்திடாத அதிரூபன் அவந்திகாவின் கைகளை விடுவித்துவிட்டு அதிர்ந்து போய் தான் தந்தையை பார்த்து,

 

“அ….அப்பா…!” இவர்கள் இருவருக்கும் இடையில் பாவம் அவந்திகா தான் சிக்கிக் கொண்டாள் போல..

 

 தான் மரியாதை வைத்திருக்கும் ஒருவரின் முன்பு பதில் பேச முடியாது கூனிக் குறுகி நின்று கொண்டிருந்தாள்…

 

இருவரையும் மாறி மாறி பார்த்த அதியமான் சட்டென சுயம்  அடைந்தவரது முகம் மலர்ந்து போய்விட்டது…

 

 முகம் கொள்ள புன்னகையுடன் அவந்திகாவை பார்த்து விட்டு மகனை ஏறிட்டவர்,

 

” இவளை தான் நீ லவ் பண்றேன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை அதி… ரொம்பவே சந்தோஷமா இருக்கு..!”  என்றவர் வேகமாக வந்து தன் மகனை இறுக அணைத்துக் கொண்டார்…

 

” அவந்திகா மாதிரி ஒரு பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளா கிடைக்க நாம நிஜமாவே கொடுத்து வச்சிருக்கணும் ..!” என மகிழ்ச்சி பொங்க பேசியவர் மகனிடம் இருந்து விலகி  அவனின் இரு பக்க தோள்களை பிடித்தபடி,

 

” எனக்கு தெரியும் உன் செலக்ஷன் எப்பவும் பெஸ்டா தான் இருக்கும்னு..!”  என்றவர் அவந்திகாவை தான் பெருமையாக பார்த்து வைத்தார்.. 

 

இந்தத் திருப்பத்தை அதிரூபனும் சரி அவந்திகாவும் சரி எதிர்பார்க்கவே இல்லை… இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ந்து போய் பார்த்துக்கொண்டனர்…

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top