புன்னகையின் முகவரி

அத்தியாயம் 3:

சுபத்ரா கண்ணாடியின் முன் நின்று தன் பட்டுப்புடவையைச் சரிசெய்து கொண்டிருந்தாள். முகத்தில் பவுடர் பூசி, நெற்றியில் பொட்டு வைத்தாலும், அவளது கண்களில் ஒரு  இறுக்கம் அப்படியே தெரிந்தது.

இன்று அஷ்வினின் அத்தை மகள் திவ்யாவுக்கு வளைகாப்பு. 

“சுபத்ரா… கிளம்பலாமா? லேட் ஆச்சு,” ஹாலில் இருந்து அஷ்வின் குரல் கொடுத்தான்.

சுபத்ரா வெளியே வந்தாள். அவளைப் பார்த்த அஷ்வின், “ரொம்ப அழகா இருக்க சுபா” என்றான்.

அவள் மெலிதாகப் புன்னகைத்தாள், ஆனால் அந்தப் புன்னகையில் உயிர்  இல்லை. 

நீங்களும் தான் என்றாள்..

இருவரும் கிளம்பினார்கள்..

மண்டபத்திற்குள் நுழைந்தபோதே மல்லிகைப் பூ வாசனையும், உறவினர்களின் சிரிப்பொலியும் காதை அடைத்தன, ஒரு சில குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டு இருந்தனர்..

மேடையில் திவ்யா , கைகள் நிறைய வளையல்களோடு தேவதை போல அமர்ந்திருந்தாள். 

அவளது வயிறு நன்றாகத் தெரிந்திருந்தது.

அஷ்வினும் சுபத்ராவும் மேடைக்குச் சென்று வாழ்த்தினர்.

“வாங்க அக்கா, வாங்க  மாமா , ஏன் லேட் …” என்று திவ்யா அன்போடு வரவேற்றாள்.

 சுபத்ரா அவளது கைகளைப் பற்றி, “ரொம்ப சந்தோஷம் திவ்யா… உடம்பை நல்ல படியா பார்த்துக்கோ” என்றாள். 

அப்பொழுது  சுபத்ராவின் நெஞ்சுக்குள் ஒரு ஏக்கம் அலைமோதியது.

 ‘இந்த இடத்தில நாம எப்போ இப்படி இருப்போம்?’ 

நமக்கும் இந்த மாதிரி நடக்குமா என்று யோசனை செய்து கொண்டே, சுபாவும், அஷ்வினும்

 மேடையை விட்டு இறங்கினர்..

அஷ்வின் அவள் கையை பிடித்துக் கொண்டான்..அவள் என்ன யோசிக்கிறாள் என்று அவனுகக்ம் தெரியுமே..

அஷ்வினின் அம்மா பார்வதி அவர்களை நோக்கி வந்தார்.

“வந்துட்டீங்களா… 

சுபா ,ஏன் லேட்டு , சீக்கிரம் வரத் தெரியாதா?

எப்பப் பார்த்தாலும் உம்மன்னு முகத்தை வெச்சிக்க வேண்டியது என்று சிடுசிடுத்து விட்டு,

அஷ்வின், நீ மாமா கூட போ, ஏதோ வாங்கனும் ன்னு சொன்னாங்க என்று அவர்களை பேச விடாமல் அவனை அங்கிருந்து அனுப்பினார்..

சுபத்ரா மண்டபத்தின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த உறவினர்களிஞம் பேசச் சென்றாள். 

அஷ்வினின் பெரியம்மா, மீனாட்சி அம்மாள் அங்கேதான் அமர்ந்திருந்தார். 

ஊரிலேயே யார் வாயை வேண்டுமானாலும் அடைக்கலாம், இந்த மீனாட்சி அம்மா வாய்க்கு பூட்டு போட்டாலும் அடைக்க முடியாது என்று சுபத்திரா அவரைப் பற்றி நினைத்துக் கொண்டே அவரை தாண்டிச் செல்ல, ஆனால் அவரோ சுபத்ராவைப் பார்த்ததும் அவளை அழைத்தார்…

பிடிக்கவில்லை என்றாலும் சென்றாள்.‌

“வா சுபத்திரா… உட்காரு. 

என்ன, உடம்பு ரொம்ப இளைச்சுப் போயிருக்கு? கலரும் கம்மி ஆயிடுச்சு. 

அந்த ஹாஸ்பிட்டல் மருந்து மாத்திரைங்க  போட்டும் எதுவும் உண்டாகலையா?” என்று எல்லாரும் கேட்கும் விதமாக உயர்த்திக் கேட்டார்..

சுபத்திராவுக்கு  நடுக்கம் ஆரம்பித்தது..

“இல்லங்க, அது வந்து…” என்று அவள் தடுமாறனாள்..

பக்கத்தில் இருந்த இன்னொரு பெண் ஆரம்பித்தார்..

“அதான் மூணு வாட்டி ட்ரீட்மெண்ட் பண்ணியும் தங்கலன்னு பார்வதி சொன்னாளே… 

அதான் கலி முத்திடிச்சே. அந்தக் காலத்துல பத்து மாசத்துல புள்ள பெத்தாங்க. 

இப்ப என்னடான்னா லட்ச லட்சமா கொட்டினாலும் ஒரு புழு பூச்சி தங்க மாட்டேங்குது உடம்புல.” என்றார்..

சுபத்ரா தன் கைகளை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.  என்ன பேசுவது, எதுவும் புரியவில்லை..

அவர்கள் பேசப் பேச ஊசி குத்துவது போல வலித்தது…

அப்போது, அங்கே ஒரு உறவுகாரப் பெண் , அவளுடைய ஒன்பது  மாதக் குழந்தையோடு அந்தப் பக்கமாக வந்தார்.. 

குழந்தை அழகாக சிரித்துக் கொண்டு இருந்த்து… 

சுபத்ரா அவளை அறியாமல், “அக்கா என்கிட்ட கொஞ்ச நேரம் குழந்தைய கொடுங்க, நான் கொஞ்ச நேரம் வச்சிருக்கேன்” என்றாள்.

அவ்வளவுதான், மீனாட்சி அம்மாள் சட்டென்று அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்தார். 

“ஏய்… குழந்தையைக் குடுக்காத. அவளுக்கே இன்னும் விசேஷம் இல்லை. 

ஏங்குற கண்ணு குழந்தை மேல பட்டா, குழந்தைக்கு உடம்புக்கு ஆகாது. 

இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் குழந்தைங்க பக்கத்துல நிக்கக் கூடாதுன்னு அநத்க் காலத்து  பெரியவங்க சும்மாவா சொன்னாங்க?” என்று அதிகமாகவே பேசினார்..

குழந்தையை வைத்து இருந்த பெண்ணுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது..

அவர்களை ஒரு மாதிரி பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

அந்த  மாதிரி வார்த்தை அவளுக்கு புதியது இல்லை தான் .. ஆனாலும் அந்த வார்த்தை இன்று , சுபத்ராவின் நெஞ்சில்  அதிகமாக வலித்தது.  

நான் அப்படி என்ன பாவம் பண்ணிட்டேன்.. ஏன் எல்லாம் கஷ்டப்படுற மாதிரயே  பேசுறாங்க என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து வெளியே வந்தாள்..

சுபத்ராவின் கண்களிலிருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.. 

அவளால்  இனிமேலும் அங்கிருக்க முடியாது என்று தோன்றியது… புடவை முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு, மறைவாக நின்று அழுதாள்..

அப்பொழுது அந்தப் பக்கம் ஃபோன் பேசிக் கொண்டே அந்தப் பக்கம் வந்தான் அஷ்வின்..

 அவள் அழுவதைப் பார்த்ததும் அவன் பதறிப்போனான்.

“சுபா… என்னாச்சு? ஏன் இங்க வந்து அழற?”

சுபத்ரா அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். “அஷ்வின்… என்னை இங்கிருந்து கூட்டிட்டுப் போயிடுங்க. என்னால முடியல. என் கண்ணு பட்டா குழந்தைக்கு ஆகாதாம்…

 நான் ஏங்குற கண்ணோட இருக்கேனாம்… நான் என்ன பாவம் பண்ணேன் அஷ்வின்? எனக்குக் குழந்தை இல்லாதது என் தப்பா?” என்று விம்மி விம்மி அழுதாள்.

அஷ்வினின் முகம் கோபத்தால் சிவந்தது. அவனது கை நரம்புகள் புடைத்தன. தன் மனைவியை இந்த விசேஷ வீட்டுக்குக் கூட்டி வந்ததே இருக்கக் கூடாது என்று நினைத்தான். 

அவளை இப்படிப் பேச இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?

முதலில் யார் என்ன பேசினார்கள் என்று கேட்டான்..

முதலில் அழுதுகொண்டே பேசாமல் இருந்தாள்..

பிறகு அவன் கேட்கவும் தான் நடந்தது எல்லாம் சொன்னாள்..

அவன் அவளது கண்ணீரைத் துடைத்து விட்டான்.. அவளது தோள்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு சொன்னான்

“சுபா… இனி ஒரு நிமிஷம் கூட நாம இங்க இருக்க வேண்டாம். யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். கிளம்பு.” என்றான்

அவன் சுபத்ராவின் கையைப் பிடித்துக் கொண்டு, மண்டபத்திற்கு வெளியே வந்தான். 

வழியில் அவனது அம்மா பார்வதி தடுத்தார். “அஷ்வின், விசேஷம் முடியறதுக்குள்ள எங்கடா போறீங்க? எல்லாரும் தப்பா நினைப்பாங்க.”

“யார் என்ன நினைச்சாலும் எனக்கு கவலை இல்லைம்மா. என் பொண்டாட்டியோட நிம்மதியை விட எனக்கு இந்த விசேஷம் முக்கியம் இல்லை. 

இனிமே எந்த விசேஷத்துக்கும் எங்களை கூப்பிடாதீங்க,” என்று எல்லாரும் பார்க்கும்படி சத்தமாகக் கூறிவிட்டு, சுபத்ராவின் கையைப் பற்றிக் கொண்டு கார் நோக்கி நடந்தான் அஷ்வின்.

காருக்குள் ஏறியதும், அஷ்வின் ஸ்டீயரிங்கை ஓங்கி அடித்தான்…

வீட்டிற்க்குச் செல்லாமல் , சுபத்திராவை மாலுக்கு அழைத்து வந்தான்..

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top