அசுரன் 36
ரதி யின் நினைவுகள் ஒரு வருடத்திற்கு முன்பு நகர்ந்தது…
அது ஒரு தொழில் சார் கூட்டம்… தொழிலதிபர்கள் பலர் அதில் கலந்து
கொண்டு இருந்தனர்…
அங்கு தான் ஆதியை முதன் முதலில் பார்த்தாள் ரதி. குழுக்களாய் நின்று
பேசிக் கொண்டு இருக்கையில்… கூட்டத்தின் நடுவே கண்ணில்
கூலர்சுடன்… இதுக்கான நடையுடன்.. ஃபார்மல் பேண்ட் சர்ட் அணிந்து…
சட்டை பட்டன்களின் இடைவெளியில் தெரிந்த திமிறிய புஜத்துடன்…
ஸ்டைலாய் நடந்து வந்தவனை… பலர் இடையே நிறுத்தி, கைகுலுக்கி
கட்டி அணைத்து வரவேற்றனர்.
அவனிடம் இருந்த அழுத்தமும் கண்களில் தெரிந்த கர்வமும் ரதியை
வெகுவாக கவர்ந்தது.
அன்று முழுவதும் ரதியின் பார்வை ஆதியைத்தான் சுற்றி வளைத்தது.
கூட்டம் முடிந்து ரதி வீடு திரும்பிய பின்… ரதியின் நினைவுகளை விட்டு
ஆதி அகலவில்லை… உடனே தனது நண்பனுக்கு அழைத்து கூட்டத்தில்
ஆதி பேசும்போது எடுத்த புகைப்படத்தை அவனுக்கு அனுப்பி அவனைப்
பற்றி முழு தகவலும் விசாரிக்க சொல்லியிருந்தாள்.
அவனைப் பற்றி கேட்க கேட்க அவன் மீதான ஆர்வம் அதிகமாகியது
ரதிக்கு …
மேடையில் பேசிக் கொண்டு இருக்கையில் அவன் அடிக்கடி தலையை
கோதியது… கோட்டை சரி செய்தது… முக்கியமாய் கண்களில் ஒட்டி
இருந்த கர்வம்.. இவை அனைத்தும் அவள் தூக்கத்தை கெடுத்தன…
அடுத்த நாள் தனது தோழியியல் கூட்டத்தின் நடுவே , ஆதியின்
புகைப்படத்தை காட்டி…. அவன் மேல் எழுந்த உணர்வை விவரித்துக்
கொண்டிருந்தாள்…
புடிச்சிருந்தா சொல்லிட வேண்டியதுதானே? நீ சொன்னா எவன்
வேணான்னு சொல்லுவான்? லட்டு மாதிரி உன்ன அள்ளிட்டு
போயிருவானுங்க… என்று தோழிகளும் கூற…
மனதில் புதிதாய் பிறந்த உற்சாகத்துடன் ஆதியிடம்… இதைப் பற்றி பேசி
விட முடிவு எடுத்தாள் ரதி.
அவனுக்கு போன் செய்து… தனிப்பட்ட முறையில் உங்களிடம் பேச
வேண்டும் என்று காபி ஷாப்பிற்கு அழைத்திருந்தாள்…
தனது தோழியர் அனைவரையும் ஒரு டேபிளில் அமர வைத்துவிட்டு..
அவனிடம் தன் விருப்பத்தை தெரிவிக்க… மற்றொரு டேபிளில்
காத்திருந்தாள் ரதி.
அவனுக்காக பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து ஆடை அணிந்து வந்து
இருந்தாள் ரதி.
நினைத்தது போலவே வந்து சேர்ந்தான் ஆதி ஆனால் அன்று பார்மல்
உடையில் பார்த்ததைவிட… இன்று கேஷுவல் உடையில் சற்று இளமை
ததும்பியே தெரிந்தான்.
ஏய்… உன் ஆள் சூப்பர் டி என்று.. தோழிகளும் அவளைப் பார்த்து சைகை
செய்தனர்.
ரதியின் எதிரே வந்து ஹாய்… என்று கூறி அமர்ந்தான் ஆதி.
தன்னை அறிமுகம் செய்து கொண்டாள் ரதி.
இருவருக்கும் ஜூஸ் ஆர்டர் செய்து வந்து இருக்க…
என்ன எதுக்காக பாக்கணும்னு சொன்னீங்க..
அன்னைக்கு உங்களை இண்டஸ்ட்ரியலிஸ்ட் மீட்டிங்ல பார்த்தேன்.
பார்த்ததிலிருந்து எனக்குள்ள.. அது எனக்கு சரியா சொல்ல தெரியல…
உங்கள கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்படறேன்… ஷெல்
வி… என்று அவள் பேச வேண்டிய அனைத்தையும் சுருக்கமாக
பட்டு என்று பேசி முடித்தாள் ரதி.
ஆனால் அவள் பேசியதை கவனிக்காமல் வெளியில் எதையோ
ஆர்வமாய் கவனித்துக் கொண்டிருந்தவன். பின் ஏதோ ஒரு
யோசனையில் சாரி… எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு… என்று
டேபிளை விட்டு எழுந்தான் ஆதி.
அப்போ நான் சொன்னதுக்கு பதில்… என்று ரதி கேட்க…
அவசரமாக கிளம்ப சென்றவனை தடுத்து நிறுத்திய கோவத்தில் தன்
பின்னந்தலையை கோதி பின் ஒரு பெருமூச்சுடன்…. ஓ…சாரி மிஸ் ரதி… ஐ
ஆம் நாட் இன்ட்ரஸ்டட்… என்று கூறிவிட்டு வேகமாக டேபிளில் இருந்த
கூலர்ஸ், ஃபோனையும் எடுத்தவன் கை பட்டென்று அந்த ஜூஸ் டம்ளரில்
பட்டு அவள் மேலே மொத்த ஜூஸும் கொட்டி விட்டது … ஐயோ… சாரி..
சாரி… கிளீன் பண்ணிக்கோங்க… இப்ப எனக்கு அர்ஜென்ட் ஒர்க் இருக்கு…
என்று கூறிவிட்டு… அந்த இடத்தை விட்டு நகர்ந்து சாலையை கடக்க
ஓடினான்.
தோழியரின் முன்னே பெருத்த அவமானமாய் போனது ரதிக்கு.
தோழியரும் இப்படி ஜூசை மேல ஊத்திகிறதுக்கு தான் காலையில
இருந்து அவ பார்த்து பார்த்து ரெடியாயிட்டு வந்தா போலடி…. என்று
தங்களுக்குள்ளேயே கேலி பேசிக்கொண்டனர்… இதுவரைக்கும் ரதி தான்
எல்லாரையும் ரிஜெக்ட் பண்ணி பார்த்திருக்கோம்… இன்னைக்கு
ஒருத்தன் ரதியவே தூக்கி போட்டு போயிட்டான் பாத்தியா… என்று
இன்னொருத்தி சொல்லி சிரிக்க … அக்னி நட்சத்திரம் வெயில் போல்
கொதித்துக் கொண்டு இருந்த அவளின் மேல் வெண்ணீர் ஊற்றியது
போல் ஆனது … மனதில் வன்மத்தை வளர்த்துக் கொண்டாள்..
அவன் கை தவறுதலாய் தட்டி விட்டு சென்ற ஜூஸ் அவள் முகத்திலேயே
ஊற்றிவிட்டு சென்றது போல் தோன்றியது இப்போது.
பல ஆண்கள் அவளிடம் காதலை சொல்லி, அவமான பட்டு சென்று
இருக்க… முதன் முதலில் தானாக சென்று பேசியவன்… தன்னை தன்
தோழிகள் முன்னையே அவமானப்படுத்தி சென்று விட்டான் என்ற
கோபம் வன்மமாய் மாறியது.
அதிலிருந்து அவனை எதிரியாக நினைத்தவள்.. அவனுக்கு தொழில்
ரீதியாக நிறைய தொந்தரவுகளை மறைமுகமாக கொடுத்தாள்…
நேரடியாக கொடுக்க முடியாதே.. கண்ணுக்குத் தெரியும் எதிரியை ஆதி
ஒருபோதும் விட்டு வைப்பதே இல்லை… அவர்கள் இருந்த இடம்
தெரியாமல் அழித்துவிட்டு தான் அடுத்த வேலை செய்வான்… உயிரைக்
கொல்லும் அளவு பாவி இல்லை அவன்… ஆனால் உயிரை மட்டும்
விட்டுவிட்டு மொத்தத்தையும் அழித்து விடுவான்… அதனால் தன்னுடைய
ஆட்களை ஆதியின் அலுவலகத்தில் வேலைக்கு அமர்த்தி
கொட்டேஷனை திருடுவது தொழிலாளர்களுக்குள் குழப்பத்தை உண்டு
பண்ணுவது ஸ்டே ஆர்டர் வாங்குவது போன்ற பல விஷயங்களை பல
பேர் வைத்து செய்து பார்த்தாள்… அதையெல்லாம் ஆதி லெஃப்ட்
ஹேண்டில் டீல் பண்ணிவிட்டு செல்வான்…
ஆதி அருண் விக்ரமின் நட்பை பற்றி தெரிந்தவள் ஆதியை பழிவாங்கும்
நோக்கத்துடன் தான் முதலில் அருணுடன் பழகினாள்.
பின்பு அருணுக்கும் அவளுக்கும் நிறைய விஷயங்களில் ஒத்துப்
போனதால்…
ஆனால் திருமணம் குழந்தை என்று ஒரு வட்டத்துக்குள் செல்ல அவளுக்கு
விருப்பமில்லை… ஆனால் எதிர்பாராத குழந்தை உருவாகியதால் வேறு
வழி இல்லாமல் அருணை திருமணம் செய்ய வேண்டியது ஆயிற்று…
அருண்- ரதி திருமணத்தை ஆதி தடுப்பான் என்றுதான் நினைத்தாள்,
ஆனால் அவன் ரதியை தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை….
இதோ இப்போது நிச்சயம் நின்று போன பின் சைத்ராவும் ரதியுடன் கூட்டு
சேர்ந்து விட்டாள்..
ஆதி நீ கடைசி வரைக்கும் கல்யாணமே பண்ண முடியாமல்….
ஆம்பளையே இல்லன்னு அவமானப்பட்டு வாழனும் டா… இன்று
மனதிற்குள்ளேயே கருவிக் கொண்டாள்…
***************
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக ரதியின் வயிற்றில்
இருந்த கரு வளர்ந்தது….
கரு வளர வளர… ரதியின் இடைப் பெருத்தது… உடல் எடை கூடி கொஞ்சம்
பூசினார் போல் ஆனது… பெருத்த மார்புடன் தாய்மைக்கு உரிய அழகுடன்
வளம் வந்த ரதிக்கு ஏனோ அவளை கண்ணாடியில் பார்க்கும்போது
தன்னைப் பிடிக்கவில்லை…
தன்னுடைய அழகு கெட்டுப் போய்விட்டதாக எண்ணினாள் அதனால்
வந்த கோபம் முழுதும் வயிற்றில் இருக்கும் கருவின் மேல் திரும்பியது…
இந்த சனியன் வந்ததும்… என்னோட அழகே கெட்டுப் போச்சு… ஜீரோ
சைஸ் பிகரா இருந்த என்னை… இப்படி கிழவி மாதிரி மாத்திவிட்டது….
என்று கண்ணாடியில் தன் இடையை சுற்றி சுற்றி பார்த்து புலம்பி
கொள்வாள்…
இதைப் பெத்து போட்டா…. தான் எனக்கு நிம்மதி… இத வயித்துல
சுமந்துகிட்டு ஒரு பார்ட்டிக்கும் போக முடியல… ஒரு பப்புக்கும் போக
முடியல ஒரே எரிச்சலா இருக்கு… பார்ட்டில போறவன் வர்றவன் எல்லாம்
ஒரு மாதிரி பாத்துட்டு போறானுங்க …
அடிக்கடி வீட்டில் இருக்கும் அனைவரின் மேல் எரிந்து விழுந்தாள்… திட்டு
வாங்குவதில் மலருக்கு தான் முதலிடம்…
அப்படி இருந்தும்…. ரதிக்கு மலரிடம் இருந்து வரும் கவனிப்பு ஏகபோகம்
தான்… ரதி வீட்டில் இருந்தால்… ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை
பழச்சாறு, சூப், அறையை தேடி வரும்… மாலையில் ஆரோக்கியத்திற்கு
தேவையான நவதானியங்கள் சில பலகாரங்கள் என்று அவளுக்கு மட்டும்
தனியாக அறைக்கு வருவதை அருணும் கவனித்தான்… உள்ளே வரும்
ஒவ்வொரு உணவையும் அவனும் ஒரு ஸ்பூன் எடுத்து டேஸ்ட் பண்ணி
பார்த்து புருவத்தை உயர்த்தி விட்டு செல்வான்..
இதோ இன்று கூட அவளுக்கென்று பார்லிக் கஞ்சியை தயார் செய்து
சுதாவிடம் கொடுத்து விட்டிருந்தாள் மலர் அந்த சமயம் அறையை விட்டு
வெளியே வந்த அருண் என்ன என்று கேட்க…
ரதி அம்மாவுக்கு பார்லி கஞ்சி கொண்டு வந்திருக்கேன் சார்…
இது புள்ளதாச்சீங்க குடிக்கிறது ரொம்ப நல்லது என்று கூற…
பூச்சாண்டியை கண்டு விழிக்கும் குழந்தை போல்…. கீழே
சமையலறையில் ஒளிந்து கொண்டு, சிறிதாக தலையை நீட்டி மாடியை
எட்டி பார்க்கும் மலரை அருணும் கண்டான். அவனுக்கு புரிந்து விட்டது
பார்லி கஞ்சி உபயம் யார் என்று… அவனுக்கு தெரியும் இந்த கவனிப்பு
எல்லாம் ரதிக்கு அல்ல… ரதியின் வயிற்றில் வளரும் தன் பிள்ளைக்கு
என்று…
சுதா அதை கொண்டு போய் ரதிக்கு கொடுக்க….
ஐந்து நிமிடத்தில் கோப்பை பறந்து வந்து வாசலில் விழுந்தது…
என்ன கருமம் இது… இதையெல்லாம் என்னால குடிக்க முடியாது….
டெய்லி எதையாவது கொண்டு வந்து தின்னு… குடின்னு… உயிரை
வாங்குறீங்க… இதுக்காக இன்னும் என்னென்ன சந்தோஷத்தை எல்லாம்
நான் இழக்கணுமோ…. என்று கடுப்பாக தன் வயிற்றை சுட்டி
காண்பித்தாள்…
இதையெல்லாம் கேட்கும்போது அருணுக்கே தலைக்கு மேல் கோபம்
ஏறியது.
முதலில் அருண் குழந்தையின் மேல் பற்று இல்லாமல்
இருந்தாலும்… நிறைமாத வயிறுடன் உலா வரும் ரதியை பார்க்கும்
போது… அவனுள்ளும் தந்தை பாசம் எழத்தான் செய்கிறது.
அன்று ஒரு நாள் அருணை அணைத்த படி படுத்திருந்தாள் ரதி…
திடீரென்று உடம்பில் ஒரு அதிர்வு தென்பட… கண்விழித்து பார்த்தான்
அருண்… கண்களுக்கு எதுவும் புலப்படவில்லை… மீண்டும் அந்த அதிர்வு
அவனால் உணரப்பட்டது… அதிர்வு வந்த திசையை நோக்கி பார்த்தவன்
அப்பொழுதுதான் கவனித்தான் ரதியின் உடை விலகிய வயிற்றை…
வயிற்றுப் பகுதி மெதுவாக மேல் எழும்பி கீழ் இறங்கியது…நெளிந்து
உருண்டு கொண்டிருந்த தன் உயிரின் ஒரு பகுதியை…. அதன் மேல் கை
வைத்து லேசாக வருடி பார்த்தான் அருண் அவன் மெய் சிலிர்த்தது…
தந்தையின் பரிசத்தை உணர்ந்த அவன் குட்டி அவன் கையில் மீண்டும்
ஒரு உதை வைத்தது. பெரிய அதிசயத்தை கண்டது போல்
குதூகலமானான்… பாப்பா என்றான் அதில் காதை வைத்து கேட்டான்…
ஏதோ அந்த குட்டி இவனிடம் ரகசியம் பேசுவது போல்…. இதை
யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று அவனுக்கு ஒரே பூரிப்பு. ரதியை
எழுப்பலாம் என்று பார்த்தால் அவள் அப்போதுதான் அசந்து தூங்கிக்
கொண்டிருந்தாள்… அவள் வயிற்றில் கை வைத்தபடியே உறங்கிப்
போனான் அருண்.
தன் தந்தையின் கை சுகத்தில் குட்டியும் அமைதியாய் உறங்கிபோனது…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️