கைய விடுங்க, விக்ரம்…! இப்போ நீங்க வெளியே போகலன்னா நான் சத்தம் போட்டு எல்லாரையும் கூப்பிடுவேன்…” என்று கோபமும் பதற்றமும் கலந்த குரலில் கூறினாள் அஞ்சலி.
அவளை நேராகப் பார்த்த விக்ரமின் உதட்டில் மெல்லிய சிரிப்பு தோன்றியது.
“என்ன… மிரட்டுறியா?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டவன், அவளை நோக்கி இன்னும் ஒரு அடி நெருங்கி நின்றான்.
அவன் இவ்வளவு அருகில் வந்ததும், அவனின் சூடான மூச்சுக்காற்று அஞ்சலியின் முகத்தில் மோதியது. அந்த நொடியில் அவளது உடல் முழுவதும் சொல்ல முடியாத ஒரு சிலிர்ப்பு ஓடியது. இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. ஆனால் அந்த உணர்வை வெளிக்காட்ட விரும்பாதவள், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அவன் மார்பில் கையை வைத்து அவனைத் தள்ள முயன்றாள்.
ஆனால்…
விக்ரம் அசையவே இல்லை.
மலை போல அசையாமல் நின்றவனைப் பார்த்து, அவள் எரிச்சலுடன்,
“ப்ளீஸ் விக்ரம்… வெளியே போங்க. நான் சத்தம் போட்டா உங்களுக்குத்தான் அசிங்கம்…” என்றாள்.
அதற்கு அவன் குறும்பாக சிரித்தான்.
“புருஷன் பொண்டாட்டி பக்கத்துல வந்ததுக்கு சத்தம் போடுற உன்னைத்தான் எல்லாரும் வித்தியாசமா பார்ப்பாங்க. என்னை யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க…” என்றான் மிகவும் இயல்பாக.
அவன் பேச்சைக் கேட்ட அஞ்சலி சலிப்பாக அவனை முறைத்துப் பார்த்தாள்.
“சரி… இப்போ உங்களுக்கு என்ன வேணும்?” என்று சோர்வாகக் கேட்டாள்.
பதில் சொல்லாமல் அவன் மெதுவாக அவளது இரு கைகளையும் பிடித்து தன்னருகே இழுத்தான்.
எதிர்பாராத அந்த இழுப்பில், அஞ்சலி நேராக வந்து அவன் அகன்ற மார்பில் மோதினாள்.
“விக்ரம்…!” என்று பற்களைக் கடித்தபடி அழைத்தாள்.
அவன் அவளைப் பார்த்தபடியே இருந்தான்.
அஞ்சலியின் உயரம் அவன் மார்பு வரை மட்டுமே இருந்ததால், அவள் அவன் முகத்தைப் பார்க்கத் தலையை நிமிர்த்த வேண்டியிருந்தது.
விக்ரமோ அவளது கண்களை நேராகப் பார்க்கும் வகையில் சற்றுக் குனிந்து நின்றான்.
இருவரின் பார்வையும் சில நொடிகள் ஒன்றோடொன்று கலந்தது.
அந்த அமைதியை உடைத்தபடி, மிக மென்மையான குரலில்…
“சாரி…” என்றான்.
அவ்வளவு நெருக்கத்தில், அவன் இதுவரை கேட்காத அளவிற்கு மென்மையாகச் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை, அஞ்சலியின் மனதில் கட்டியிருந்த கோபத்தின் சுவர்களை மெதுவாக உடைக்க ஆரம்பித்தது.
அவளால் எதுவும் பேச முடியவில்லை.
அவனது கண்களில் தெரிந்த உண்மையான வருத்தம், அவளது மனதை கரைத்துவிட்டது.
அறியாமலேயே, அவள் மெதுவாக அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
அந்த நொடியில் விக்ரமின் முகத்தில் ஒரு சிறிய நிம்மதி தோன்றியது. அவளை மெதுவாக அணைக்க அவன் கைகள் உயர்ந்தன.
அதே நேரத்தில்…
ட்ரின்… ட்ரின்…
அமைதியை கலைத்தபடி விக்ரமின் மொபைல் சத்தமாக ஒலித்தது.
சிறிது தயக்கத்துடன் அவளை விட்டு விலகியவன், தனது மொபைலை எடுத்துப் பார்த்தான்.
அஞ்சலியும் ஆர்வமாக திரையைப் பார்த்தாள்.
திரையில் தெரிந்த பெயர்…
“ரோஜா”
அந்த பெயரைப் பார்த்த அஞ்சலியின் முகம் உடனே மாறியது.
சில நொடிகள் முன்பு இருந்த நெருக்கம் அனைத்தும் காணாமல் போனது.
அவள் சட்டென்று அவனை விட்டு விலகி, சந்தேகத்துடன் அவன் முகத்தைப் பார்த்தாள்.
விக்ரமும் ஒரு முறை அவளைப் பார்த்துவிட்டு, மீண்டும் மொபைல் திரையை நோக்கினான்.
“யார் இந்த ரோஜா…? உங்க முன்னாள் காதலியா?” என்று அமைதியாகக் கேட்டாலும், அந்தக் கேள்விக்குள் பொறாமையும் உரிமையும் கலந்திருந்தது.
அந்தக் கேள்வியைக் கேட்ட விக்ரமுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.
‘இவ்வளவு வருஷம் கழிச்சு… இவ இப்போ ஏன் கால் பண்றா?’ என்று மனதிற்குள் எண்ணியவன், அஞ்சலியைப் பார்த்து மெதுவாக “ஆமாம்…” என்பது போலத் தலையசைத்தான்.
“அவ எதுக்கு இப்போ உங்களுக்கு கால் பண்றா?” என்று மீண்டும் கேட்டாள் அஞ்சலி.
“தெரியல…” என்றான் விக்ரம்.
“தெரியலையா?” என்று அவள் சந்தேகமாகப் பார்த்தாள்.
“சத்தியமா தெரியல, அஞ்சலி. இத்தனை வருஷத்துல அவ என்கிட்ட பேசுனதே இல்ல. இப்போதான் முதல் தடவையா கால் பண்றா…” என்றான் உண்மையாக.
அவள் நம்பாத பார்வையோடு,
“என்ன நடிக்கிறீங்களா, விக்ரம்? அவ நம்பரை இன்னும் பேரோட சேவ் பண்ணி வச்சிருக்கீங்க… ஆனா பேசவே மாட்டாங்கன்னு சொல்றீங்க?” என்று கேட்டாள்.
விக்ரம் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு,
“சத்தியமா சொல்றேன். அவ பேசவே மாட்டா. ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே இந்த நம்பரை சேவ் பண்ணது. டெலீட் பண்ணணும்னு எனக்கு தோணல. அதனால அப்படியே இருந்துச்சு. இப்போதான் திடீர்னு கால் வருது…” என்றான்.
சில நொடிகள் அமைதியாக இருந்த அஞ்சலி,
“சரி… அட்டெண்ட் பண்ணி என்னன்னு கேளுங்க…” என்றாள்.
விக்ரம் அழைப்பை ஏற்க மொபைலை ஸ்வைப் செய்யப் போனான்.
ஆனால் அதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
அவன் மொபைலைப் பார்த்துவிட்டு,
“போன் கட் ஆயிடுச்சு…” என்றான்.
உடனே அஞ்சலி உதட்டை சுளித்தபடி,
“கட் ஆகத்தானே செய்யும். இவ்வளவு நேரம் ஆன்சர் பண்ணாம கையிலேயே வச்சுட்டு இருந்தீங்க…” என் முன்னாடி பேச முடியாம தானே என்றாள்.
விக்ரம் சோர்வாக ஒரு பெருமூச்சு விட்டான்.
“அடடா… நீ இவ்வளவு நேரம் என் கிட்ட கேள்வி கேட்டுட்டே இருந்த. அதுக்கெல்லாம் நான் பதில் சொல்லிட்டே இருந்தேன். அதனாலதான் அட்டெண்ட் பண்ண முடியல…” என்றான்.
அவனது பதிலைக் கேட்ட அஞ்சலி அமைதியாக அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் சொன்னதில் பொய் இருப்பது போலவும் தெரியவில்லை… ஆனால் அவள் மனதில் எழுந்திருந்த சந்தேகமும், பொறாமையும் இன்னும் முழுவதுமாக விலகவில்லை.
“நீங்க சொல்றதை என்னால நம்ப முடியல…” என்று கண்களில் நீர் வழிய, வேதனையுடன் அவனைப் பார்த்துக் கூறினாள் அஞ்சலி.
“நம்மளுக்கு கல்யாணம் ஆகி நாலு வருஷம் ஆகுது. இந்த நாலு வருஷமும் அவளை மனசுல நினைச்சுக்கிட்டுத்தானே என்னை விட்டு விலகி இருந்தீங்க? இப்போ மட்டும் என்னை நம்பச் சொல்றீங்களா?”
அவளது வார்த்தைகளில் இருந்த வலியை உணர்ந்தாலும், அதை வெளிக்காட்டாமல் ஆழமாக மூச்சை இழுத்தான் அவன்.
“லூசு மாதிரி பேசாத, அஞ்சலி. நான் உனக்காக யோசிச்சுதான் விலகி போயிட்டு இருந்தேன். நீ சந்தோஷமா இருக்கணும், என்றான்
அவள் கசப்பாக சிரித்தாள்.
“எது… எனக்காக யோசிச்சீங்களா? இல்லை… என்னை சந்தேகப்பட்டு விலகி இருந்தீங்க. இதுக்கு பேரு அக்கறை இல்லை… சந்தேகம்!”
அவள் கூறிய அந்த ஒரு வார்த்தை அவன் மனதை குத்தியது.
“மறுபடி மறுபடி அப்படிச் சொல்லாத!” என்று கோபமாகக் கூறினான்.
உடனே அஞ்சலி அவனை நேராகப் பார்த்தாள்.
“ஓஹோ… நீங்க என்னைப் பற்றி அப்படி நினைச்சப்போ உங்களுக்கு தப்பா தோணல. ஆனா நான் உண்மையைச் சொன்னா மட்டும் உங்களுக்கு கோபம் வருதா? இது என்ன நியாயம்?”
அவள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அவனை பதில் சொல்ல முடியாமல் திணற வைத்தது.
“உன்கிட்ட பேச வந்ததே என் தப்பு. நான் போறேன்…” என்று சொல்லிவிட்டு கோபமாக வெளியே செல்ல முயன்றான்.
அவன் கதவை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க, பின்னால் இருந்து அவளது குரல் மீண்டும் ஒலித்தது.
“ஆமாமா… வெளியே போனா தானே உங்க எக்ஸ் லவ்வரோட ஃப்ரீயா பேச முடியும்!”
அந்த வார்த்தை அவன் பொறுமையை முற்றிலும் உடைத்தது.
“அஞ்சலி!” என்று கர்ஜித்தபடி அவளை நோக்கித் திரும்பினான்.
அவன் சட்டென்று திரும்பியதும், ஒரு கணம் பயத்தில் உறைந்துபோன அஞ்சலி தன்னையறியாமல் ஒரு அடி பின்னோக்கி எடுத்தாள். அவளின் முகத்தில் தெரிந்த பதற்றத்தை பார்த்தபடி, முறைத்துக் கொண்டே அவள் அருகில் வந்தான். அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அவளது இதயத் துடிப்பை அதிகரித்தது.
அவன் மிக அருகில் வந்து நின்றதும், அஞ்சலி தன்னிச்சையாக மீண்டும் ஒரு அடி பின்னோக்கி நகர்ந்தாள்.
“நீ உன்னை தப்பா நினைச்சதுக்காகத்தான் இவ்வளவு நேரமும் பொறுமையா பேசிட்டு இருக்கேன். அதுக்காக ஓவரா பேசிட்டு இருக்காத,” என்று பற்களைக் கடித்தபடி சொன்னான்.
பிறகு தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முயன்று, சற்று மெதுவான குரலில்,
“நான்தான் சொல்றேனே… அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த நாலு வருஷத்துல ஒரு தடவை கூட நாங்க பேசினதே இல்லை. இப்போதான் திடீர்னு அவ கால் பண்ணிருக்கா. அதுக்கும் நீ நினைக்கிற மாதிரி எந்த அர்த்தமும் இல்லை,” என்று தன் தரப்பு நியாயத்தை விளக்க முயன்றான்.
ஆனால் அஞ்சலியின் முகத்தில் இருந்த நம்பிக்கையின்மை மட்டும் இன்னும் மாறவில்லை. அவன் சொன்ன வார்த்தைகளை அவள் கேட்டாலும், அவளது மனதில் எழுந்த சந்தேகத்தின் புயல் இன்னும் அடங்காமல் கொந்தளித்துக் கொண்டே இருந்தன.
“சரி…” என்று ஆழமாக மூச்சை இழுத்தாள் அஞ்சலி.
“அவளுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்றீங்க தானே? அப்படின்னா இப்பவே… என் கண்ணு முன்னாடியே அவ நம்பரை பிளாக் பண்ணிட்டு, டெலிட் பண்ணுங்க.”
அவள் கூறிய குரலில் கட்டளை இருந்தது.
விக்ரம் சற்றுநேரம் அவளைப் பார்த்துக்கொண்டே நின்றான். அவள் இவ்வளவு பிடிவாதமாக இருப்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
“ஏய்… அவ கால் பண்ணியிருக்கா. என்ன விஷயம், ஏன் கால் பண்ணிருக்கான்னு கூட தெரியாம எப்படி டெலிட் பண்றது? நான் முதல்ல என்னன்னு கேட்டுட்டு… அதுக்கப்புறம் பிளாக் பண்ணி டெலிட் பண்றேன்,” என்றான் பொறுமையாக.
அவனுடைய பதில் அஞ்சலியின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியது.
“அவளுக்கு என்ன நடந்தா உங்களுக்கு என்ன?” என்று கூர்மையான பார்வையுடன் கேட்டாள்.
“அஞ்சலி… இந்த நாலு வருஷத்துல அவ ஒரு தடவை கூட எனக்கு கால் பண்ணதில்லை. இப்போ திடீர்னு கால் பண்ணுறான்னா, ஏதோ அவசரமான விஷயம் இருக்கும். அதான் என்னன்னு மட்டும் கேட்டுக்கறேன்,” என்றான் விக்ரம், அவளைப் புரிய வைக்க முயன்று.
ஆனால் அஞ்சலியின் மனம் அவன் வார்த்தைகளை ஏற்கவே மறுத்தது.
“ அவளுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. இப்போ… இந்த நிமிஷமே அவ நம்பரை பிளாக் பண்ணுங்க.”
அவளின் ஒவ்வொரு வார்த்தையும் உறுதியாக விழுந்தது.
விக்ரம் ஒரு பெருமூச்சை விட்டான். இந்த வாக்குவாதம் இன்னும் நீண்டால் நிலைமை மோசமாகிவிடும் என்று அவனுக்குப் புரிந்தது.
“சரி… பிளாக் பண்றேன். ஆனா அதுக்கு முன்னாடி ஒரே ஒரு நிமிஷம். நான் அவளுக்கு கால் பண்ணி என்ன பிரச்சனைன்னு மட்டும் கேட்டுக்கறேன். அதுக்கப்புறம் உன் முன்னாடியே பிளாக் பண்ணிடுறேன்.”
அவன் சொன்னதும், அஞ்சலி மறுப்பதற்குள் கைப்பேசியை எடுத்தான்.
அவளது எண்ணை அழுத்தி அழைத்தான்.
சில நொடிகள் ரிங் போனது.
அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது.
“ஹலோ…” என்று இவன் சொல்ல வாயைத் திறப்பதற்குள், மறுமுனையில் இருந்த பெண் நடுங்கும் குரலில்,
“விக்ரம்…”
என்று ஒரே ஒரு வார்த்தை மட்டுமே சொன்னாள்.
அந்த ஒரு வார்த்தை அஞ்சலியின் காதில் விழுந்த அடுத்த நொடியே, அவளுக்குள் அடக்கி வைத்திருந்த கோபம் வெடித்துச் சிதறியது.
எங்கிருந்துதான் அவ்வளவு ஆத்திரம் வந்ததோ தெரியவில்லை.
மின்னல் வேகத்தில் விக்ரமின் கையிலிருந்த கைப்பேசியைப் பிடுங்கியவள், எந்தவித யோசனையும் இல்லாமல் அருகில் இருந்த சுவரை நோக்கி முழு வேகத்தில் வீசி எறிந்தாள்.
“டமார்!”
என்ற பெரும் சத்தத்துடன் கைப்பேசி சுவரில் மோதி, சுக்கு நூறாக நொறுங்கி சிதறி தரையில் விழுந்தது.
அறை முழுவதும் அமைதி நிலவியது.
அஞ்சலியின் அந்தச் செயலைக் கண்டு விக்ரம் ஒரு கணம் அதிர்ந்து நின்றான். அவளை ஆழமாகப் பார்த்தவன், பிறகு கீழே உடைந்து கிடந்த தனது மொபைலை நோக்கினான். எதுவும் பேசாமல், இறுகிய முகத்துடன் அமைதியாக அறையை விட்டு வெளியேறினான்.
விக்ரம் வெளியேறியதும், கலங்கிய கண்களுடன் உடைந்து கிடந்த அந்த மொபைலையே அஞ்சலி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சில நொடிகள் அமைதியாக நின்றவள், “நான் கொஞ்சம் ஓவராக நடந்துகொண்டேனோ?” என்று தனக்குத்தானே எண்ணினாள்.
ஆனால் அடுத்த நொடியே, “இல்லை… நான் எதுவும் தவறு செய்யவில்லை. என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
மனதில் இருந்த குழப்பமும் கலக்கமும் நீங்காமல், மெதுவாகச் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டாள். ஆனால் அவளால் கண்களை மூடி நிம்மதியாக உறங்க முடியவில்லை. விக்ரமின் கோபம் நிறைந்த முகமும், பேசாமல் வெளியேறிய அந்த நொடியும் மீண்டும் மீண்டும் அவள் மனக்கண்ணில் வந்து போய்க் கொண்டே இருந்தது.
தொடரும்