அத்தியாயம் 3
அடுத்த நாள் காலையில் எழுந்து அமர்ந்த ஜெகனுக்கு தலை விண் விண்ணென்று வலித்தது…
‘நேத்து மப்பு ஓவரா போச்சு’ என்று முணுமுணுத்துக் கொண்டே, “காந்தா” என்று அழைத்த அடுத்த கணமே ஒரு வெண்கல செம்பு, அவன் அறையை நோக்கி பறந்து வந்தது…
‘ஆத்தாடி, கொடூரமா இருப்பா போலவே, இன்னைக்கு அடக்கி வாசிக்கணும்’ என்று நினைத்தவனோ, மெதுவாக எழுந்து, சமையலறையை நோக்கி வந்தான்.
எட்டிப் பார்த்தான்.
பெண்ணவள் சமைத்துக் கொண்டு இருந்தாள்.
‘இன்னைக்கு செத்தேன்’ என்று நினைத்தபடி, “காந்தா” என்றான் மென்மையாக…
சட்டென திரும்பினாள், அதுவும் கையில் கத்தியுடன் திரும்ப, ஜெகனுக்கு நெஞ்சே அடைத்து விட்டது…
“என்னடி கொலை பண்ண ரெடி ஆகிட்டா?” என்று கேட்க, “ஆமா அதான் பண்ண போறேன், குடிக்கார கபோதி” என்று ஆரம்பித்தது மட்டும் தான் காதில் கேட்டது…
ஊரில் இருக்கும் எல்லா வகையான கெட்ட வார்த்தைகளும் அவள் வாயில் வர, “வயித்துல குழந்தையை வச்சிட்டு இப்படிலாம் பேசாதே” என்றான் அவனும் பொறுமை இழந்து…
“நீ தான் டா பேச வைக்கிற, இந்த ஒருத்தி இரவெல்லாம் தூங்காம இருக்கா, கொஞ்சமாவது அக்கறை இருக்கா? குடிச்சிட்டு வர்ற?” என்று சீறியவளுக்கு அழுகை வர, விம்மி அழ ஆரம்பித்து விட்டாள்…
அவள் அழுதால் தான் அவனுக்கு தாங்காதே, “ஹேய் இதுக்கெல்லாம் எதுக்குடி அழுற?” என்று கேட்டுக் கொண்டே, அவளை இறுக அணைத்துக் கொள்ள, “தள்ளி போங்க” என்று சீறினாள்.
இன்னும் அணைத்துக் கொண்டே, “சரி இனி குடிக்கல” என்றான்.
“எத்தனை தடவை ஜெகா இதே பொய்யை சொல்வீங்க?” என்று அதற்கும் திட்டு விழ, “ராவணாவுக்கு அடுத்த வாரம் கல்யாணம் காந்தா, அதனால தான்” என்று சொன்னான்.
சட்டென அவனை ஏறிட்டு பார்த்த காந்தாவோ, “கல்யாணமா? பொண்ணு யாரு?” என்று கேட்க, “ஐயாவுக்கு தெரிஞ்ச பொண்ணு” என்றான் ஜெகன்.
“அப்பாடா இப்போ தான் நிம்மதியா இருக்கு” என்று சொன்ன காந்தா, சற்று முன்னர் சாமி ஆடினாள் என்று சொன்னாலும் நம்ப மாட்டார்கள்…
ஜெகனோ, “என்னடி, அந்நியன் போல சட்டுன்னு மாறிட்டே” என்று சொல்ல, “அவருக்கு கல்யாணம் நடக்காததால தான் உங்கள சேர்த்து கெடுத்துட்டு இருக்கார், ஒருத்தி வந்து அடக்கி வைக்கணும், அதான் என்னோட ஆசை, இப்போ தான் நிம்மதியான இருக்கு” என்றாள்.
“ஐயோ நீ வேற, அந்த பொண்ணு ரொம்ப சாது, இவன் கிட்ட அவ மாட்டி இருக்கா, நடக்கவும் முடியாது” என்றான் சற்று பரிதாபம் தோய்ந்த குரலில்…
“அடக்கி வைக்க நடக்கணும்னு இல்ல ஜெகா… இது வேற மாதிரி அடக்குமுறை… உங்க ஐயாவும் பொண்டாட்டின்னா கம்முன்னு ஆயிடுறார் ல” என்று சொல்ல, ஜெகனோ, “அது சரி தான்” என்று சத்தமாக சிரித்துக் கொண்டான்…
அடுத்த ஒரு வாரம் எப்படி நகர்ந்தது என்று தெரியவில்லை…
அன்று காலையில் எழுந்த ராவணன், திருமணத்துக்கு ராஜதுரை வாங்கி கொடுத்த பட்டு வேஷ்டி சட்டையை எடுத்து பார்த்தான்…
உடுத்தவே இஷ்டம் இல்லை…
கருப்பு ஷேர்ட் கருப்பு ஜீன்ஸ் என்று செல்லவும் முடியாது…
அவனை ஒரு வழி பண்ணி விடுவார்கள்…
யாருக்கும் அடங்காதவன், ராஜதுரை மற்றும் மீனாட்சியின் அன்புக்கு அடங்கி விடுவான்…
அதனால் தானே, பெண்ணைக் கூட பார்க்காமல், திருமணம் செய்ய சம்மதித்து இருக்கின்றான்…
சலிப்பாக குளித்து விட்டு வேஷ்டி சட்டையை அணிந்தான்…
ஜெகன் வருவதாக சொல்லி இருக்க, வாசல் கதவை தாழிட்டு விட்டு, வீட்டின் சுவரில் சாய்ந்து நின்று, சிகரெட் பிடிக்க ஆரம்பித்து விட்டான்.
சற்று நேரத்தில் வந்து சேர்ந்த ஜெகனோ, “என்னடா போற நேரத்தில சிகரெட் பிடிச்சுட்டு இருக்க?” என்று கேட்க, அவனோ, “பிடிச்சா என்ன தப்பு?” என்றான்.
“பேசு டா பேசு, இன்னைக்கு மட்டும் தான் பேசுவ” என்று கிண்டலாக சொன்னவனோ மேலும், “இந்த தாடி மீசையை இன்னைக்காச்சும் ஷேவ் பண்ணலாம் ல?” என்று கேட்க, “தோணல” என்று சொல்லிக் கொண்டே, சிகரெட்டை நிலத்தில் போட்டவன், அதனை செருப்பினால் அழுத்தி விட்டு, வாய்க்குள் பப்பில் கம்மை போட்டுக் கொண்டே நடந்தான்…
ஜெகனும், “ஐயா வீட்ல எல்லாரும் கிளம்பிட்டாங்க போல” என்று சொல்ல, “நான் போனா தானே கல்யாணமே நடக்கும்” என்று சிரித்தபடி சொன்னவன் வண்டியில் ஏறி இருக்க, வண்டியும் புறப்பட்டு இருந்தது…
ஜெகன் வண்டியை ஓட்ட அருகே அமர்ந்து இருந்த ராவணனோ, “உன் பொண்டாட்டி கல்யாணத்துக்கு வருவாளா இல்லையா?” என்று கேட்டான்.
“அவளுக்கு உன் கல்யாணம்னு சொன்னதுமே அவ்ளோ சந்தோசம், நேரத்துக்கே கோவிலுக்கு போய்ட்டா” என்று ஜெகன் சொல்ல, “கல்யாணம் பண்ணுனா, உன்னை விட்ருவேன்னு தப்பு கணக்கு போடுறா போல” என்று சிரித்தபடி சொல்ல, ஜெகனும் சிரித்துக் கொண்டான்.
ஒரு வழியாக கோவிலுக்கு வந்து சேர, வண்டியில் இருந்து இறங்கிய ராவணன், காலை கழுவி விட்டு உள்ளே நுழைந்த போதே அவன் கண்கள் அங்கே சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்த பெண்ணில் படிந்தது…
அவள் தான் அவன் திருமணம் செய்ய இருக்கும் மனோகரி…
மஞ்சளும் சிவப்பும் சேர்ந்த கட்டம் போட்ட புடவை அணிந்து இருந்தாள்.
நகைகள் அணிந்து இருந்தாள், மீனாட்சி போட்டு விட்டு இருப்பார் என்று உணர்ந்து கொண்டான்…
தலை நிறைய பூக்கள் இருந்தன…
மாசு மருவற்ற அழகிய வதனம்…
அழகாக இருந்தாள்.
திருமணம் செய்ய இருக்கும் பெண்ணையே இப்போது தான் பார்க்கின்றான்…
‘அழகாக இருக்கின்றாள்’ என்று மட்டும் தோன்றியது…
குறைகளையோ நிறைகளையோ அவன் கவனிக்கவில்லை…
ராஜதுரை சொல்லி விட்டார், திருமணம் செய்ய இருக்கின்றான் அவ்வளவு தான்…
அங்கே நின்ற காந்தாவோ, விழிகளை தாழ்த்தி அமர்ந்து இருந்த மனோகரியிடம், “இது தான் உன் ஆள்ம்மா பார்த்துக்கோ” என்று சொல்ல, அவளோ மெதுவாக விழிகளை உயர்த்தி அவனை பார்த்தாள்…
அவளும் இன்று தான் அவனை முதன் முதலில் பார்க்கின்றாள்…
அவன் விழிகள் அவளில் சட்டென நிலைக்க, கொஞ்சம் தடுமாறிய பெண்ணவளோ விழிகளை தாழ்த்திக் கொண்டாள்.
இதே சமயம், அங்கே நின்ற மனோகரியின் தாய் விசாலாட்சியோ, “ரொம்ப நன்றிங்க ஐயா, என் பொண்ணுக்கு கல்யாணமே நடக்காதோன்னு பயந்துட்டு இருந்தேன்” என்று கண்ணீருடன் சொல்ல, “கோவில் ல வந்து எதுகும்மா அழுதுட்டு இருக்க? நம்ம பையன் தான் நல்லா பார்த்துப்பான்” ராஜதுரை சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அவ்விடம் வந்தான் ராவணன்…
“இது தான் பா, உன்னோட அத்தை” என்று விசாலாட்சியை அறிமுகம் செய்ய, “ம்ம், வீட்ல பார்த்து இருக்கேன்” என்றான்…
விசாலாட்சி, நன்றியுடன் கையை கூப்ப, “இதெல்லாம் எதுக்கு, ஐயா சொல்லிட்டார், கல்யாணம் பண்ணிக்கிறேன், என் உயிர் இருக்கிற வரைக்கும் நல்லா பார்த்துப்பேன்” என்று சொன்னான்.
இதனை கேட்டபடி தலையை தாழ்த்தி இருந்த மனோகரிக்கு மெல்லிய வெட்கம்…
சிரிப்பை இதழ்களுக்குள் அடக்கிக் கொள்ள, “அட பொண்ணுக்கு வெட்கத்தை பாருங்களேன்” என்று சொன்ன மீனாட்சியோ, “சாமி சந்நிதிக்கு போயிடலாம், ஐயர் காத்துட்டு இருக்கார்” என்று சொல்ல, மனோகரி, சக்கர நாற்காலியை கையால் உருட்ட முற்பட்ட சமயம், ராவணனே, கையை நீட்டி, நாற்காலியின் தலைப்பை பிடித்து உருட்டினான்…
அதனை பார்த்த எல்லாருக்குமே ஒரு திருப்தியான புன்னகை இதழ்களில் அரும்பியது…
ராவணனுக்கு என்ன தான் திருமணத்தில் பெரிதாக ஆர்வம் இல்லை என்றாலும், ராஜதுரை சொன்னதற்காக அந்த பெண்ணை திருமணம் செய்து, வாழ்க்கை முழுக்க சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் என்கின்ற கடமை உணர்வு மட்டும் நிறையவே இருந்தது…
மனோகரியும் தலையை தாழ்த்தி அமர்ந்து இருக்க, சன்னிதானத்தில் ஐயர் பூ மாலைகளை இருவரிடமும் நீட்டினார்…
மாற்றிக் கொண்டார்கள்…
அவள் கழுத்தில் மாலை போடுவதற்காக, குனிந்து கொண்டான் அவன்…
அதனை தொடர்ந்து, ஐயர் மந்திரத்தை உச்சரித்து தாலியை நீட்ட, அதனை வாங்கிய ராவணனோ, அதனை மனோகரியின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சுக்களையும் இட்டான்.
சட்டென பெண்ணவளுக்கு கண்ணீர் வழிய, கழுத்தில் தொங்கிய தாலியை பார்த்துக் கொண்டே, கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
இன்னும் அவள் பெயர் கூட கேட்கவில்லை…
அதனை தொடர்ந்து, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி இருந்தார்கள்.
ராவணனை அணைத்து விடுவித்த ராஜதுரையோ, “அந்த பொண்ணா நல்லா பார்த்துப்பன்னு நம்பிக்கை இருக்கு, சீக்கிரம் குழந்தையை பெத்து கைல கொடு, ஜெகனோட குழந்தையும் உன் குழந்தையும் சேர்ந்து விளையாட வேணாமா?” என்று கேட்க, ராவணன் மென் சிரிப்புடன், “சரிங்க ஐயா” என்று சொல்லி விட்டு, மனோகரியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு புறப்பட்டு விட்டான்.
அவர்களுடன் வந்து சேர்ந்த ஜெகன் மற்றும் காந்தா, முதலிரவுக்கு அறையை அலங்கரிப்பது தொடக்கம் ஆரத்தி எடுப்பது வரை எல்லாமே பார்த்து பார்த்து செய்தார்கள்…
மனோகரியை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து வந்த சமயம், “சாமி அறை இல்லையா?” என்று கேட்டாள் மனோகரி…
ராவணன், பிடரியை சங்கடமாக வருடிக் கொள்ள, அவனை கிண்டலாக பார்த்து விட்டு, மனோகரியை பார்த்த காந்தாவோ, “அதெல்லாம் இங்க எங்க இருக்கு? நீ தான் இனி சாமி படம் வச்சு கும்பிடனும்” என்று சொல்ல, மனோகரியும் புரியாமல் அவர்களை பார்த்து தலையசைத்தாள்…
விசாலாட்சியும் மகளுடன் வந்து இருந்தவர், மனோகரி நெற்றியில் முத்தமிட்டு விட்டு, அங்கே நின்ற ராவணனிடம், “ரொம்ப நன்றிப்பா” என்று கை கூப்பி சொல்ல, “இதெல்லாம் எதுக்கு?” என்று கேட்டான் அவன்…
விசாலாட்சி பெருமூச்சுடன், “என்னோட தவிப்பு ரொம்ப பெருசு… இதெல்லாம் எனக்கு சின்ன விஷயம் இல்ல” என்று சொன்னவரோ, மேலும், “நான் கிளம்புறேன்” என்று எல்லாரிடமும் சொல்லி விட்டு புறப்பட்டு இருந்தார்…
ஜெகன் தான் முதலிரவு அறைக்குள், பூக்களை சுற்றி சுற்றி தூவிக் கொண்டு இருக்க, அங்கே வந்த ராவணனோ, “டேய் என்னடா இதெல்லாம்?” என்று கேட்டான்…
“முதலிரவு மச்சி, ம்ம் ம்ம்” என்று சொல்ல, “அடிங், அவ பேர் கூட எனக்கு சரியா தெரியாது… இதுல முதலிரவா, எப்போ கொண்டாடணுமோ அப்போ கொண்டாடிக்கிறோம், இதெல்லாம் கொஞ்சம் நிறுத்து” என்று பூக்கூடையை பறித்து எடுக்க, “அது சரி, இனி நான் கண்ணுக்கு தெரிவேனோ மாட்டேனோ” என்று புலம்பிக் கொண்டே வெளியே சென்றான்.
அதனை தொடர்ந்து, முதலிரவு அலங்காரங்களை தனி அறைக்குள் வைத்து, மனோகரிக்கு செய்து கொண்டு இருந்தாள் காந்தா…
மனோகரி தன்னையே கண்ணாடியில் பார்த்து இருக்க, “கேக்கிறேன்னு கோச்சுக்காதே, எப்படி நடக்க முடியாம போச்சு?” என்று கேட்டாள்…
“சின்ன வயசுல ஒரு விபத்து, ஒரு மாசம் ஹாஸ்பிடல் ல இருந்தேன், அதுக்கப்புறம், கால் கீழ வேலை செய்யல” என்றாள்…
“இனி அண்ணா எல்லாம் பார்த்துப்பார், எதுக்கும் கவலைப்படாதே” என்று சொல்லி விட்டு, அவள் கையில் பால் செம்பை கொடுத்தவள், அவளை அறைக்குள் சக்கர நாற்காலியில் அனுப்பி விட்டு, ஜெகனுடன் புறப்பட்டு இருந்தாள் காந்தா…
மனோகரி, தயங்கி தயங்கி உள்ளே வர, அங்கே கட்டிலில் அமர்ந்து இருந்த ராவணன், அவளை ஆழ்ந்து பார்த்து, “உன் பேர் கூட எனக்கு தெரியல” என்றான்.
“மனோகரி” என்றாள் தலையாய தாழ்த்திக் கொண்டே…
“ம்ம், கட்டிலிலே உட்கார்ந்துக்கிறியா?” என்று கேட்டவனிடம், “இன்னைக்கு இதெல்லாம் வேணாமே” என்றாள் தயக்கமாக…
அவனும், “எனக்கும் இன்னைக்கு எதுவும் வேணாம், இந்த ஜெகன் பண்ணுன வேலை இது… உன்னை பத்தி தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன்… அப்போ தான் உனக்கு என்ன தேவையோ இங்க பண்ணி கொடுக்கலாம்” என்று சொன்னவன், அவள் அருகே வந்து சக்கர நாற்காலியை தள்ளிக் கொண்டே கட்டில் அருகே கொண்டு வந்து கையை நீட்ட, அவளும் அவனை பற்றி தட்டு தடுமாறி எழுந்து, அப்படியே கட்டிலில் தொப்பென அமர்ந்தாள்.
ராவணனிடம் எப்படி இந்த மென்மை வந்தது என்று அவனுக்கே தெரியவில்லை…
மனோகரியிடம் கடினத்தை கொஞ்சம் கூட காட்ட விரும்பவில்லை அவன்…
அப்படி ஒரு மென்மை…
அவளுமே அதீத தயக்கத்தில் தான் அமர்ந்து இருக்க, “உனக்கு இந்த வீட்ல என்ன எல்லாம் தேவைன்னு முதலில சொல்லு” என்றான்…