அத்தியாயம் 4

அத்தியாயம் 4

அவனை ஏறிட்டு பார்த்த மனோகரியோ, “எனக்கு பெருசா ஒன்னும் தேவையில்லை” என்றாள்.

அவனும் பெருமூச்சுடன், “காலுக்கு என்ன ஆச்சு?” என்று கேட்க, “சின்ன வயசில ஒரு விபத்து, அதுல இருந்து நடக்க முடியல” என்றாள்.

“ஓஹ்” என்றவனோ மேலும், “டாய்லெட் எல்லாம் உனக்கு வசதியான போல மாத்திடுறேன்” என்று சொல்ல, அவளும் மென்மையாக சிரித்துக் கொண்டாள்.

ஒரு சிறு மௌனத்தின் பின்னர், “இந்த கல்யாணத்துல உனக்கு இஷ்டமா?” என்று கேட்டவனிடம், “என்னை தான் யாருமே கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களே, இதுல இஷ்டம் இஷ்டம் இல்லன்னு எப்படி சொல்றது?” என்று கேட்டாள்.

பாவமாக இருந்தது அவனுக்கு… 

“சரி தூங்கு” என்று சொல்லி அவளை படுக்க வைத்தவன், அருகே படுத்துக் கொண்டான்…

இதமான நீரோடை போல தான் ஆரம்பித்து இருந்தது அவர்கள் வாழ்க்கை…

அடுத்த நாள் இருந்து அவனுக்கு பொறுப்புணர்வு வந்து சேர்ந்து இருந்தது… 

ராஜதுரையின் ஃபேக்டரியில் இருந்து வீட்டுக்கு நேரத்துக்கே கிளம்பியவனிடம், “டேய், இப்போ தான் டா ஆறு மணி” என்றான் ஜெகன்…

“மனோகரி தனியா இருப்பா, சமைச்சு சாப்பிடுறேன்னு சொன்னா, என்ன பண்ணி வச்சு இருக்கான்னு பார்க்கணும்” என்று சொல்லிக் கொண்டே வண்டியை எடுக்க, அவனை அதிர்ந்து பார்த்த ஜெகனோ, “நம்ம பாக்கிறது கனவா, நிஜமான்னு தெரியலையே” என்று புலம்பிக் கொண்டான்.

அவன் வீட்டுக்கு வந்த சமயம், மீன் குழம்பு வாசனை மூக்கை துளைத்தது…

அவன் வீட்டில் சமைப்பதே இல்லை…

வீடு புதிதாக இருந்தது…

எல்லாம் நேர்த்தியாக அடுக்கப்பட்டு இருந்தது…

“எல்லாமே நீயா பண்ணுன?” என்று கேட்க, “ம்ம்” என்ற பெண்ணவளோ, “சாமி படம் வைக்கலாம்னு இருக்கேன்… உங்களுக்கு ஒன்னும் ஆட்சேபனை இல்லையே” என்று கேட்டாள்.

அவனோ, “அதுல என்ன இருக்கு?” என்று கேட்க, “அப்போ நாளைக்கு ஒரு சாமி படம் வாங்கி வர்றீங்களா?” என்று கேட்க, “ம்ம்” என்று சொன்னவன் குளிக்க சென்றான்.

குளித்து விட்டு அவன் வரவும், அவனுக்கு உணவு எடுத்து பெண்ணவள் தட்டில் போட்டு வைத்து இருக்கவும் நேரம் சரியாக இருந்தது…

அவனோ சாப்பாட்டு தட்டை எடுத்துக் கொண்டே, “நீ சாப்பிட்டியா?” என்று கேட்க, “இல்ல நீங்க சாப்பிடுங்க” என்றாள்.

“அட நீயும் சாப்பிடு” என்று சொன்னதும் அவளும் தட்டில் சாப்பாடு போட்டு கொண்டு வர, இருவரும் ஒன்றாக தான் அமர்ந்து சாப்பிட்டார்கள்…

ராவணன் சாப்பிட்டுக் கொண்டே, “நான் தான் உன்னை பார்த்துக்க வேண்டி இருக்கும்னு நினச்சேன், நீ தான் என்னை பார்த்துக்கிற” என்று சொல்ல, அவள் மென்மையாக சிரித்துக் கொண்டாள்.

தேவைகள் தாண்டி அவள் பேசியது இல்லை, அதிக பட்சம் புன்னகை மட்டும் தான்… 

அவள் மனைவி என்று ஆகி விட்டாள்.

முதல் நாளே அவன் மனதையும் கவர்ந்து விட்டாள்…

அடுத்த நாள் அவள் சொன்னதற்கு ஏற்ப, பிள்ளையார் படம் ஒன்றை வாங்கிக் கொண்டவனோ அவளுக்காக பூச்சரமும் வாங்கி விட்டு வீட்டுக்கு புறப்பட்டு இருந்தான்… 

இப்போதெல்லாம் அவனுக்கு கோபம் அதிகமாக வருவது இல்லை…

ஒரே நாளில் இப்படி தோசையை புரட்டி போட்ட போல மாறிய ராவணனை பார்த்து ஜெகனுக்கு பேரதிர்ச்சி தான்…

இப்போதெல்லாம் ஜெகன் நேரத்துக்கே வீட்டுக்கு வர, காந்தாவோ, “எங்க அடிச்சா எங்க மாறும் பார்த்தீங்களா?” என்று கேலி பேசினாள்.

“ஆமாடி ஒரே நாளுல மாறிட்டான்” என்று சொல்ல, காந்தாவும், “அந்த பொண்ணும் ரொம்ப மென்மையா இருக்கா, அதான் அண்ணாவை மொத்தமா மாத்திட்டா” என்றாள்…

இதே சமயம், வீட்டுக்கு சாமிப்படத்துடனும் அவள் சொல்லி விட்ட பொருட்களுடனும், பூச்சரத்துடனும் வந்து சேர்ந்த ராவணனோ, முன்னறையில் இருந்த மனோகரியிடம் அவற்றை நீட்டினாள்.

அதனை வாங்கிய மனோகரியோ, “சாமிக்கு பூ வாங்கி வந்தீங்களா?” என்று கேட்க, “இல்ல உனக்கு” என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்றான்.

பெண்ணவள் இதழ்களில் மெல்லிய புன்னகை…

சாமி படத்தை வைத்து, அன்று சாமி கும்பிட்டாள்.

வீடெல்லாம் சாம்பிராணி வாசம் வீசியது… 

அவனுக்கு வீடே புதிதாக இருந்தது…

பிடித்தும் இருந்தது… 

மெல்ல மெல்ல அவனை பெண்ணவள் ஈர்த்துக் கொண்டு இருந்தாள்.

அவர்கள் திருமணம் செய்து ஒரு மாதம் கடந்து இருக்கும், அன்று காந்தா மற்றும் ஜெகனின் திருமண நாள் என்று இருவரையும் விருந்துக்கு அழைத்து இருந்தார்கள்.

ராவணனும், மனோகரியை அழைத்துக் கொண்டே அவர்கள் வீட்டுக்கு புறப்பட்டு இருந்தான்.

ராஜதுரை, மீனாட்சி என்று அவர்களும் அங்கே வந்திருக்க, ஒன்றாக வந்த ராவணனையும் மனோகரியையும் பார்த்த மீனாட்சியோ, “என் கண்ணே பட்டிடும் போல இருக்கு, சுத்தி போட்டுக்கோங்க” என்றார்.

ராவணனிடம் இப்போது மென் சிரிப்பு மட்டுமே…

அவன் வன்மை எல்லாமே பெண்ணவள் முன்னே தொலைந்து போயிருந்தது…

ராஜதுரையோ, “என்னம்மா வந்த வேகத்தில சிங்கம் போல இருந்தவனை பூனைக்குட்டியா மாத்திட்டே, இப்போ லாம் யாரையும் அடிச்சிட்டு வர்றது இல்லை… பேசி தீர்க்க பழகி இருக்கான்” என்று சொல்ல, “ஐயா, கொஞ்சம் சும்மா இருக்கீங்களா?” என்று சிரித்தபடி சொன்னான் ராவணன்.

அவன் அருகே அமர்ந்த ஜெகனோ, “டேய், உனக்கு வெட்கம் லாம் வேற வருமா?” என்று முகத்தை திருப்பி கேட்க, “சும்மா இரு டா” என்றான் ராவணன்… 

“எப்படி இருந்த என் மச்சானை இப்படி மாத்திட்டியேம்மா” என்று மனோகரியிடம் சொல்ல, அவளிடம் மெல்லிய வெட்கப் புன்னகை மட்டுமே…

மனோகரி அருகே அமர்ந்த காந்தவோ, “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மனோகரி, அண்ணா எப்படி இருந்தார் தெரியுமா? இப்போ லாம் ஜெகன் அஞ்சு மணிக்கே வீட்டுக்கு வர்றான். உனக்கு நான் என்னன்னு தான் நன்றி சொல்ல போறேனோ தெரியல” என்று சொல்ல, அதற்கும் மெல்லிய புன்னகை தான்…

அதனை தொடர்ந்து, எல்லாருக்கும் செய்து வைத்து இருந்த பிரியாணியை பகிர, எல்லாரும் சந்தோஷமாக சாப்பிட்டார்கள்…

இதனிடையே மீனாட்சியோ, “நம்ம காந்தாவுக்கு சீக்கிரம் குழந்தை பிறந்திடும், நீ எப்போ நல்ல விஷயம் சொல்ல போற?” என்று கேட்க, அவன் விழிகள் இப்போது மனோகரியில் படிய, தன்னை அவன் பார்ப்பது தெரிந்தாலும், தலையை மென் சிரிப்புடன் அவள் தாழ்த்திக் கொண்டாள்.

அவனோ குரலை செருமியபடி, “சீக்கிரமே” என்று மட்டும் சொல்லிக் கொண்டான்.

அதனை தொடர்ந்து, அவளை அழைத்துக் கொண்டே வீட்டுக்கு செல்லும் வழியில், “உனக்கு குழந்தைங்க இஷ்டமா?” என்று அவனே கேட்டான்.

அவளோ தலையை தாழ்த்தியபடி, “ம்ம்” என்றாள்.

“குழந்தை பெத்துகிறதுல, உனக்கு ஒரு சிரமமும் இருக்காதே” என்று கேட்க, அவளோ, “இல்லன்னு டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க” என்றாள் மென் குரலில்…

அவனும் குரலை செருமிக் கொண்டே இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகையுடன் வண்டியை செலுத்தினான்.

ஒரு வழியாக அன்று வீட்டுக்கு வந்து விட்டார்கள்…

அன்று ராவணன் வேலைக்கு செல்லவில்லை…

வீட்டில் தானே இருந்தான்…

அவனுக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் என்கின்ற உணர்வு… 

வாசலுக்கு வந்தவன், சுவரில் சாய்ந்து நின்று, சிகரெட்டை புகைத்துக் கொண்டு இருக்க, மனோகரியும் வெளியே சக்கர நாற்காலியில் வந்தாள்.

அவனை கடந்து சென்ற சமயம், அவளிடம் ஒரு இருமல்…

சட்டென சிகரெட்டை கீழே போட்டவன், “சிகரெட் ஸ்மெல் பிடிக்காதா என்ன?” என்று கேட்க, “இல்ல” என்று மென்மையாக சொல்லி விட்டு, வாசலுக்கு சென்றவள் விழிகள், வானத்தில் படிந்தன…

இரவு ஏழு மணி இருக்கும்…

அன்று பௌர்ணமி வேறு…

வானத்தில் நிலவு முழுமையாக அழகாக ஜொலித்துக் கொண்டு இருந்தது… 

அதனையே அவள் மென் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருக்க, பாக்கட்டில் இருந்த பப்பில் கம்மை எடுத்து வாய்க்குள் போட்டுக் கொண்டே ராவணனின் விழிகள் பெண்ணவளில் தான் படிந்தன…

அவளை இன்று ரசனையாக பார்த்தான்…

அந்த ரசனையில் மோகமும் கலந்து இருந்தது… 

இன்று அவன் மறைமுகமாக கேட்ட கேள்விக்கு அவளுமே அவனுடன் வாழ சம்மதித்து இருந்தாளே.

இதன் பிறகு ஏன் இந்த தயக்கம் என்று அவனுக்கும் தெரியவில்லை…

அது தான் மனைவி ஆகி விட்டாள்.

அடுத்தவரிடம் காட்டும் வன்மையை அவளிடம் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை…

குரல் உயர்த்தி பேச மாட்டேன் என்கின்றாள்…

மென்மையின் மருவுருவமாக வேறு இருக்கின்றாள்…

அவளை சின்னதாக காயப்படுத்த கூட தோன்றவில்லை… 

ராணி போல வைத்து இருக்க வேண்டும் என்கின்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு…

காந்தாவை பார்த்து திருமணம் என்றாலே தலை தெறிக்க ஓடியவன் அவன்…

இப்படி ஒரு மென்மையான பெண் என்றால் நேரத்துக்கே திருமணம் செய்து இருப்பானோ என்னவோ… 

அவளை அணுவணுவாக ரசித்தான்…

பச்சை மற்றும் வெண்ணிற கட்டம் போட்ட புடவை அணிந்து இருந்தாள்…

கழுத்தில் அவன் கட்டிய தாலி இருந்தது…

அழகான முகம்…

எல்லாமே அவனை ஈர்த்து எடுத்துக் கொண்டு இருந்தது…

முக்கியமாக அவள் பெண்மையும் மென்மையும்…

அவளையே பார்த்துக் கொண்டு, அவள் அருகே இருந்த மணல் திட்டில் அமர்ந்து கொண்டு, அவள் விழிகள் நோக்கிய அதே நிலவை பார்த்தவன், “உன் மனசுல என்ன இருக்கு?” என்று கேட்டான்.

அவளோ, அவனை பார்க்காமலே, “என் மனசுல எதுவும் இல்லை, ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன், உங்கள பத்தி தான் தெரிஞ்சுக்க தோணுது… எப்படி கேக்கிறதுன்னு தெரியல” என்றாள் காற்றுக்கும் கேட்காத குரலில்…

அவனோ இதழ் பிரித்து அழகாக சிரித்தவன், “இத நேரடியா கேட்டு இருக்கலாமே” என்று சொல்ல, அவளோ, “தயக்கமா இருந்திச்சு” என்றாள் அவனை இப்போது பார்த்துக் கொண்டே…

அவன் விழிகளும் அவளையே நோக்கி இருக்க, இந்த இருளின் நிசப்தத்தில் ஒரு வித ரம்மியம் அந்த இடத்தையே நிரப்பி இருந்தது…

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top