அத்தியாயம் 6

அத்தியாயம் 6

அந்த ஊரில் இருக்கும் போலீஸ் குவாட்டர்ஸ்ஸில் தான் கண்ணாடி முன்னே காக்கி சட்டையில் நின்று இருந்தாள் மனோகரி…

இல்லை இல்லை, அவள் பெயர் மோகினி…

தனது பெயரை எடுத்து தனது மார்பில் குற்றியவளது விழிகளில் இதுவரை இருந்த கனிவு எங்கே போனது என்று தெரியவில்லை… 

‘அடக்க ஒடுக்கமா நடிக்கிறது எவ்ளோ கஷ்டம், ஊப்’ என்று முணுமுணுத்தபடி இதழ் குவித்து ஊதியவளுக்கு, எதையோ சாதித்த உணர்வு…

அந்த ஊரில் அவள் தான் இனி வெற்றியின் இடத்துக்கு வந்திருக்கின்றாள்.

அவள் விழிகள் அங்கே கழட்டி வைத்து இருந்த தனது தாலியில் படிய பெருமூச்சுடன் அதற்கு அருகே இருந்த செயினை எடுத்து மாட்டினாள்.

அதனை கழுத்தில் போடும் போதே, வெற்றியின் நினைவு தோன்றுவதை தடுக்க முடியவில்லை…

வெற்றி வேறு யாருமல்ல, அவள் திருமணம் செய்ய இருந்த அவளது காதலன் தான்.

ஒரு மாதத்தில் திருமணம் என்கின்ற நிலையில், அவள் காதில் கேட்டது அவனது இறப்பு செய்தி…

அவன் கொலைக்கு காரணமானவனை கைது செய்து இருந்தால் கூட அவள் மனம் ஆறி இருக்கும்…

நிஜம் தெரிந்தும் விபத்து என்று வெற்றியின் கேஸ் திசை மாறி போனதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை… 

சின்ன ஆதரம் கூட திரட்ட முடியாதளவு அந்த இடத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்கள் ராஜதுரையும் ராவணனும்…

வேறு கேஸ் என்றாலே பிரித்து மேய்பவள் அவள், திருமணம் செய்ய இருந்தவனின் இறப்பை சும்மா விடுவாளா? ராவணனை குறி வைத்தே அந்த ஊருக்கு வந்து சேர்ந்தாள்.

அவனது பலம், பலவீனம் என்று எல்லாவற்றையும் படித்துக் கொண்டாள்… 

விசலாட்சி அவள் கீழே வேலை பார்க்கும் நடுத்தர வயது போலீஸ் தான்.

அவரை தாய் என்று அறிமுகம் செய்து ராஜதுரை வீட்டில் அவரை வேலைக்கு சேர்த்து விட்டாள்.

கால் இயலாத போல நடித்ததால் அவள் மீது பரிதாபம் சட்டென எல்லாருக்கும் தோன்றியது…

அவள் அப்படி நடித்ததும் அதற்காக தானே…

ராவணனின் வாயினால் உண்மையை அறிய வேண்டும் என்று நினைத்தவளுக்கு அவனை திருமணம் செய்வதை விட வேறு வழி தெரியவில்லை…

பழி வாங்க எந்த எல்லைக்கும் செல்ல நினைத்தவள், விசாலாட்சி மூலம் திருமணத்துக்கு அடி போட்டாள்.

அவரும் மகளுக்கு திருமணம் ஆகவில்லை என்று அழுது வடிந்தது மட்டும் அல்லாமல், ராவணனை பார்த்து, “இந்த தம்பிக்கு கல்யாணம் ஆகல தானே, என் பொண்ண கட்டிக்க மாட்டாரா?” என்று ஆரம்பித்து இருக்க, இரக்க குணம் கொண்ட மீனாட்சியும் ஒரு வழியாக அவளுக்கும் ராவணனுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டார்…

அவன் வேலைக்கு போனதுமே, வீடு முழுவதும் கேமாராவை கண்ணுக்கு தெரியாமல் புகுத்தி வைத்து விட்டாள்…

அவனிடம் இருந்து உண்மையை வாங்குவது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை…

அதுவும் அவளுக்கு பொறுமை மிகவும் குறைவு…

இப்படி அவள் பொறுமையாக அடக்காமாக இருப்பது போல நடித்ததே பெரிய விஷயம்…

ராவணன் வேலைக்கு சென்ற பிறகு சில நாட்களில் விசாலாட்சி பார்க்க வருவார்.

“வாயை திறக்கவே மாட்டேங்குறான் விசாலாட்சி, எவ்வளவு காலத்துக்கு இப்படியே வீல் செயார் ல இருக்கிறது, கால் வேற வலிக்குது தெரியுமா?” என்று அவள் புலம்ப, “மேம், ஒரு வழி இருக்கு, ஆனா அது உங்களுக்கு சரி வராது” என்றார்.

“பரவாயில்ல சொல்லுங்க, என்ன வழி?” என்று கேட்க, “கட்டிலில கண்டிப்பா வாயை திறப்பாங்க, அப்போ தான் ரொம்ப நெருக்கம் வரும்” என்று அவர் சொல்ல, அதன் பிறகு, அவனுடன் கலவி கொள்ள முடிவெடுத்தும் விட்டாள்.

வாழ்க்கையில் வெற்றி இல்லை என்றதும் திருமணத்தில் அவளுக்கு ஈடுபாடு இல்லை…

இதில் கற்பை காப்பாற்றி என்ன செய்வது? 

அவனுடன் கலவி கொண்டாள்.

ஆனாலும் பயன் இல்லை…

குழந்தை உருவானது…

அதன் பிறகு தான் அவன் மெதுவாக வாயை திறந்தான்.

அந்த ஒரு நாளுக்காக அவள் எத்தனை தியாயங்களை செய்து இருந்தாள்.

அன்று இரவு விசாலாட்சிக்கு மெசேஜை அனுப்பி விட்டு தூங்கியவளுக்கு நிம்மதியான தூக்கம்…

அவள் மாட்டி வைத்து இருந்த கேமெராவில் எல்லாமே பதிவாகி இருந்தது… 

அவன் வாக்கு மூலம், அது தானே அவளுக்கு தேவை…

கிடைத்தும் விட்டது…

அடுத்த நாள், வேஷத்தை கலைத்து இருந்தாள்.

மனோகரி மோகினியாகி போனாள்.

அவனை கைது செய்து சிறையில் அடைத்த பின்னர் தான், ஒரு பெருமூச்சு அவளிடம்…

அப்படியே முடியை தூக்கி கொண்டை போட்டவள், போலீஸ் கேப்பை போட்டுக் கொண்டே வெளியே வந்த சமயம், அவளது ட்ரைவர், முருகன் அங்கே தான் நின்று இருக்க, “இன்னைக்கு டியூட்டி ல ஜாயின் பண்ண போறேன் முருகன், வண்டியை எடுங்க” என்று சொல்லிக் கொண்டே ஜீப்பில் ஏறி அமர, வண்டியும் போலீஸ் நிலையத்தை நோக்கி புறப்பட்டு இருந்தது…

அவள் போலீஸ் நிலையத்தை அடைந்த போதே, அங்கு ராஜதுரை தனது ஆட்களுடன் நின்று இருந்தார்.

அவருக்கோ அப்படி ஒரு ஆத்திரம்…

அவர் பார்த்து வைத்து செய்த திருமணம் அல்லவா? இப்படி பொய்த்து போய் விட்டதே… 

அவரையே ஏமாற்றி இருக்கின்றாள் என்பதை ஜீரணிக்க முடியாமல், போலீஸ் ஜீப்பில் இருந்து இறங்கிய மோகினி முன்னே வந்து நின்றவர், “நீ யார் கூட விளையாடிட்டு இருக்கன்னு தெரியுதா மனோகரி” என்று சீற, அவரை ஆழ்ந்து பார்த்தவள், “மோகினி” என்று தனது பெயரை திருத்தி விட்டு நடக்க, “உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்” என்று சீறினார்…

அவரை திரும்பி கூட பார்க்கவில்லை…

“வீட்ல போய் ரெஸ்ட் எடுங்க ஐயா, எதுவா இருந்தாலும் வக்கீலை அனுப்புங்க” என்று சொல்லி விட்டு விறு விறுவென படியேறி போலீஸ் நிலயத்தினுள் நுழைய, அவள் முதுகை வெறித்து பார்த்தவரோ, “வண்டி எடு டா, வக்கீல அழைச்சிட்டு வரலாம்” என்று சொல்லிக் கொண்டே புறப்பட்டு விட்டார்… 

அவர் முன்னே இப்படி தெனாவட்டாக யாரும் பேசியது இல்லை… 

ஆனால் அவரை யாரோ ஒருவர் போல அல்லவா மோகினி கையாண்டு கொண்டு இருக்கின்றாள்…

அப்படியே நடந்து வந்து, இன்ஸ்பெக்டரின் இருக்கையை பார்த்தாள்.

அவளது வெற்றி அமர்ந்த இருக்கை அது… 

அவளை போல உறுதியானவள் பார்க்க முடியாது… 

வெற்றியின் இறப்புக்கு கூட அவள் அழுதது இல்லை… 

ஒரு பெருமூச்சுடன் வந்து இருக்கையில் அமர்ந்தவள், அங்கே நின்ற விசாலாட்சியிடம், “என்னவாம் ராவணா?” என்றாள் கிண்டல் தொனியில்… 

“வாயே திறக்கலை மேம்” என்று அவர் சொல்ல, “அதான் வாக்கு மூலமே கொடுத்து இருக்கானே” என்று சொல்லிக் கொண்டே எழுந்தவள் சென்றது என்னவோ அவனை பார்க்க தான்… 

அவன் அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தான்.

மேசையில் அவனது கரங்கள் இருக்க, அதில் கை விலங்கு மாட்டப்பட்டு இருந்தது… 

உள்ளே வலித்தது தான்… 

ஏமாந்து விட்டோம் என்கின்ற வலி… 

இப்படி நடித்து ஏமாற்றி இருக்கின்றாளே என்று ஆத்திரம்…

பெண்களை பிடிக்காது என்று இருந்தவன், அவளில் பைத்தியமாகி அல்லவா போனான்…

தன்னை முட்டாள் ஆக மாற்றி விட்ட கோபம்… 

என்னென்னவோ உணர்வுகள்… 

அவனை பார்த்துக் கொண்டே, அவன் முன்னே இருந்த இருக்கையில் வந்து அமர்ந்த மோகினியோ, அருகே இருந்த லத்தியை நீட்டி, தலையை தாழ்த்தி இருந்தவனின் தாடையில் வைத்து தன்னை நோக்கி நிமிர்த்த, அவன் விழிகள் அவளை தீண்டின…

அதுவும் எரித்து விடுவது போல தீண்டின…

மென்மையாக பார்த்த பெண்ணவளை போலீஸ் யூனிஃபோர்மில் முதல் முதலில் பார்க்கின்றான்.

பெரிய மாற்றமாகவே அவனுக்கு பட்டது… 

அவளோ, அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, “நான் கல்யாணம் பண்ணிக்க இருந்தவனை கொன்னா அப்படியே விட்ருவேன்னு நினைக்கிறியா?” என்று கேட்டாள்.

இப்போது தான் ராவணனுக்கு அவள் பழி வாங்க வந்த நோக்கமே புரிந்தது…

அவளை நிதானமாக பார்த்துக் கொண்டே, “ம்ம், காதலனுக்காக பழி வாங்க வந்திருக்கீங்க?” என்றான் கிண்டலாக.

“தப்பில்லையே… ஆனாலும் உன் வாயில இருந்து விஷயத்தை எடுக்க இவ்ளோ நாள் ஆச்சு” என்றாள் சலிப்பாக…

அவளை இமைக்காமல் பார்த்தவன், “பெட் ரூம் வரைக்கும் கேமரா வைக்கிற அளவுக்கு தைரியம் தான் மேடம் உங்களுக்கு” என்றான். 

“உன் கூட படுத்தாவது உன்ன அரெஸ்ட் பண்ணி ஆகணும்னு நினைக்கிற அளவுக்கு எனக்குள்ள வன்மம் இருக்கு ராவணா, கேமெரா எல்லாம் எம்மாத்திரம்” என்றாள் இளக்காரமாக….

“ம்ம், கேஸை நடத்துங்க, உள்ளே தள்ளுங்க, ஆனா வெளியே வரவே கூடாதுன்னு கடவுள் கிட்ட வேண்டிக்கோங்க” என்றான் அவளை வெறித்து பார்த்துக் கொண்டே…

“ஏன் வெளியே வந்தா சார் என்ன பண்ணுவீங்க? என்னையும் உயிரோட கொளுத்துவீங்களா என்ன?” என்றாள் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கிக் கொண்டே…

“வெளியே வந்த அப்புறம் என்ன பண்ணுவேன்னு மட்டும் பாரு, என்னோட மோசமான முகத்தை நான் எப்போவும் உனக்கு காட்டுனது இல்லை… பொண்டாட்டியாச்சேன்னு கைல வச்சு தாங்குனேன், இதுக்கப்புறம், பொண்டாட்டியவாது டேஷாவது” என்றான்.

“ஐ ஆம் வெயிட்டிங் சார்” என்று அவள் சத்தமாக சிரித்தபடி சொன்னவள், எழுந்து வெளியேற, அவள் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தான் ராவணன்…

வெளியே வந்தவளிடம், “மேம், ஊர்ல இருக்கிற பொண்ணுங்க எல்லாம் கும்பலா வந்து போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க, இந்த கொளுத்துற வேயில்ல கைக்குழந்தை கூட நிக்கிறாங்க” என்று சொல்ல, மோகினியோ, இதழ் குவித்து ஊதிக் கொண்டே, “இவன் ஒரு கொலைகாரன், இந்த ஊர் ஏதோ தியாகி போல ஏன் கொண்டாடுதுன்னு தெரியல” என்று சலித்தபடி வெளியே வர, அங்கே முன்னால் கைக்குழந்தையுடன் நின்றது வேறு யாருமல்ல காந்தா தான்.

‘இவளா?’ என்று மனதுக்குள் சலித்தபடி, அவர்கள் முன்னே வந்தவள், “இப்போ எல்லாருக்கும் என்ன?” என்று கேட்டாள்…

காந்தாவுக்கு அப்படி ஒரு ஆதங்கம்…

அதனால் தான், ஜெகனை வக்கீலிடம் ராஜதுரையுடன் அனுப்பி விட்டு, கைக்குழந்தையுடன் போராட வந்து விட்டாள்…

மோகினியை வெறித்து பார்த்தவள், “உன்னை அவர் எவ்ளோ நம்புனார் தெரியுமா? இப்படி பண்ணிட்டியே” என்று சீற, “நான் போட்டிருக்கிற யூனிஃபார்ம் க்கு மரியாதை கொடுத்து பேசு… குழந்தையோட நிக்கிறன்னு கூட பார்க்காம தூக்கி உள்ளே போட்ருவேன்” என்று மிரட்டலாக சொன்ன மோகினியோ, சத்தமாக, “இங்க என்ன தான் போராட்டம் பண்ணுனாலும் ஒன்னும் புடுங்க முடியாது… எவிடென்ஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு… வக்கீலை வச்சு டீல் பண்ணிக்கோங்க” என்று சொல்லி விட்டு அங்கே நின்ற போலீஸ் காரனிடம், “ரொம்ப பண்ணுனா, பொம்பிளைங்கன்னு இரக்கம் எல்லாம் பாக்காதே, லத்தியால நாலு தட்டு தட்டு” என்று சொல்ல, அங்கே நின்ற பெண்களோ, ‘இவ எல்லாம் பொம்பிளயா?’ என்று கிசு கிசுத்தார்கள்.

சட்டென திரும்பிய மோகினியோ, “யார் டி என்னை பொம்பிளையான்னு கேட்டது?” என்று சீற, அவள் கர்ஜனையில் எல்லோருடைய இதழ்களும் கப்பென்று மூடிக் கொள்ள, “அது! வெளிய சத்தம் வந்தா, தூக்கி போட்டு மிதிச்சிடுவேன், போங்கடி, வந்துட்டாளுங்க, அண்ணா ஆட்டுகுட்டின்னு சொல்லிட்டு” என்று திட்டி விட்டு, போலீஸ் நிலையம் உள்ளே நுழைய, அவளது மாற்றத்தை ஜீரணிக்க முடியாமல் அதிர்ந்து நின்றது என்னவோ காந்தா தான்…

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top