இதனிடையே வக்கீல் சரவணன் முன்னே தான் அமர்ந்து இருந்தார்கள் ஜெகனும் ராஜதுரையும்…
இருவருக்கும் தங்களது கையை மீறி நடந்த விஷயத்தை ஜீரணிக்கவே முடியவில்லை…
ஆத்திரம் ஆதங்கம்…
யாரிடம் காட்டுவது என்றும் தெரியவில்லை…
ராவணனையே தூக்கி உள்ளே வைத்து விட்டாளே…
எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும் அவளுக்கு…
“பொட்டை புள்ளையா போய்ட்டா, வயித்துல அவன் குழந்தை வேற, அதனால பொறுத்துகிட்டு இருக்கேன், இல்லன்னா இந்நேரம் அவளை புதைச்சு இருப்பேன்” என்று சீறினார் ராஜதுரை…
“ஐயா கொஞ்சம் நிதானமாகுங்க, ப்ரெஷர் ஏறிடும் ல, வக்கீல் கிட்ட பேசலாம்” என்று அவரை சமாதானப்படுத்திய ஜெகனோ சரவணனை பார்க்க, அவன் முகத்தில் ஈயாடவில்லை…
ஜெகனும், “இந்த கேஸ் நிற்குமா சரவணன்?” என்று கேட்க, “ம்ம், ரொம்பவே ஸ்ட்ராங் ஆஹ் நிற்கும்… வாக்குமூலமே இருக்கு… அதுவே போதும்… கொலை கேஸ், அதுவும் போலீஸோட கொலை கேஸ் அதனால அவ்ளோ ஈஸியா எடுத்துக்க மாட்டாங்க” என்று சொல்ல, ராஜதுரையோ, “நிரந்தரமா ஜெயிலுக்குள்ள போயிடுவானா என்ன?” என்று தழுதழுத்த குரலில் கேட்டார்…
ஒரு மௌனத்தின் பின்னர், “அதிகமா வாய்ப்பிருக்கு” என்று சொன்ன சரவணனிடம், “இல்ல அது நடக்கவே கூடாது, அவன் அஞ்சு வருஷத்துக்கு மேல ஜெயில் உள்ளே இருக்க கூடாது… நேர் வழியா இருக்கணும்னு இல்ல, குறுக்கு வழியா இருந்தா கூட பரவாயில்லை, அவன் வெளிய வரணும்… எப்படியாவது வெளியே வரணும், எவ்ளோ பணம் வேணுமோ கேளு, அள்ளி கொடுக்கிறேன்” என்று ஆணித்தரமாக சொல்ல, சரவணனும் பெருமூச்சுடன், “பார்த்துக்கலாம் ஐயா, ஆனா” என்று சரவணன் இழுக்க, “என்ன ஆனா?” என்று ஜெகன் கேட்டான்.
“ஜாமீன் கிடைக்க கூட மோகினி விடுவான்னு தோணல” என்றான்.
“முயற்சி பண்ணுங்க சரவணன்” என்று சொன்ன ராஜதுரை அதனை தொடர்ந்து, ராஜதுரையையும் சரவணனையும் அழைத்துக் கொண்டு ராவணனை பார்க்க சென்று இருந்தார்கள்…
மோகினியின் முகத்தில் முழிக்க இஷ்டம் இல்லை தான், ஆனால் என்ன செய்து விட முடியும்? போலீஸ் நிலையத்தை மிதித்து தானே ஆக வேண்டும்…
ஒரு வழியாக உள்ளே வர, அங்கே மோகினி இல்லை…
வெளியே சென்று இருப்பாள் போலும்…
அதனால், ராவணனை பார்க்க பெரிதான தடைகள் இருக்கவில்லை…
ராவணன் ஜெயில் கம்பியை பிடித்துக் கொண்டே ராஜதுரையை பார்க்க, அவருக்கோ குற்ற உணர்வின் உச்சம்…
அவனை கலங்கிய கண்களுடன் பார்த்தவர், “மன்னிச்சிடுப்பா” என்று கையை கூப்ப, சட்டென எட்டி ஒற்றைக் கையால் அவர் கையை பிடித்து இறக்கி விட்டவனோ, “உங்களுக்கும் தெரியாது தானே, விடுங்க ஐயா பார்த்துக்கலாம்” என்று சொல்ல, “உன்னை மொத்தமா வெளிய கொண்டு வர முடியுமான்னு தெரியல, ஆனா வாழ்க்கை முழுக்க உள்ள இருக்க விட மாட்டேன்” என்றார்.
“உங்க மேல நம்பிக்கை இருக்கு ஐயா” என்றார்.
எல்லாருக்கும் மனம் என்னவோ போல இருந்தது…
அவனை எப்படியாவது வெளியே எடுத்து விட வேண்டும் என்கின்ற எண்ணம் நிறையவே இருந்தது…
ஆனால் அவர்கள் போராடிக் கொண்டு இருப்பது மோகினியுடன் அல்லவா? அவ்வளவு சீக்கிரம் அவள் விட்டால் தானே…
அதனை தொடர்ந்து எல்லாரும் கிளம்பி விட்டார்கள்…
இதே சமயம், வீட்டுக்கு போய் சுடிதாரை மாற்றிய மோகினி வந்தது என்னவோ டாக்டரிடம் தான்.
விசாலாட்சியை அழைத்துக் கொண்டே வந்திருந்தாள்.
அவளது எண்ணுக்காக வெளியே காத்துக் கொண்டு இருந்தார்கள்…
அவள் முகத்தில் இறுக்கம் இருந்தது… ஆனால் தெளிவாக இருந்தது…
குழப்பம் இல்லை…
விசாலாட்சியோ, “மேம் என்ன முடிவு எடுத்து இருக்கீங்க?” என்று மோகினியிடம் கேட்க, ஒரு பெருமூச்சுடன், அவரை திரும்பி பார்த்த மோகினியோ, “இனி கல்யாணம் என்கிறது என் லைஃப் ல இல்ல விசாலாட்சி, வாழ்க்கை ரொம்ப காம்ப்ளிகேட்டட் ஆஹ் இருக்கு… என்னை ஒருத்தன் புரிஞ்சுகிட்டு, அவன் கூட வாழுறது எல்லாம் கனவில தான் நடக்கும், ஆனா எனக்கு இந்த குழந்தை வேணும்னு தோணுது” என்றாள்.
அவளை ஆழ்ந்து பார்த்த விசாலாட்சியோ, “கொலைகாரனோட குழந்தை மேம்” என்றார் சற்று ஏமாற்றமான குரலில்…
மோகினியோ, “ஐ க்னோ, அவன் பண்ணுன வேலைக்கு அவனை ஆயுள் முழுக்க ஜெயில் உள்ளே தள்ளிடுவேன்… அவனால எந்த தொந்தரவும் இருக்காது… எனக்குன்னு ஒரு உயிர் வேணும்… கலைக்க மனசு வர மாட்டேங்குது… போலீஸ் காரியா விறைப்பா வெளிய இருந்தாலும், உள்ள அந்த தாய்மை என்னவோ பண்ணுது” என்றாள்.
விசாலாட்சி முகத்தில் மெல்லிய புன்னகை…
“சரி மேம், புரியுது” என்று சொல்ல, “அது இருக்கட்டும், உங்க பையன் ரிஷிக்கு படிப்பு முடியுது ல?” என்று கேட்க, “ம்ம் இனி டாக்டர் ரிஷி, இங்க இருக்கிற ஹாஸ்பிடல் ல தான் போஸ்டிங் கேட்டு இருக்கான், எப்போவும் அக்கா அக்கான்னு உங்கள பத்தி தான் கேப்பான், அவன் படிப்புக்கு நீங்க கொடுத்த பணத்தை திருப்பி கண்டிப்பா கொடுத்துடுவான்” என்று சொல்ல, “அது ஒன்னும் அவசரம் இல்ல, எனக்குன்னு யாருமே இல்லை… தனியான வாழ்க்கை, பாட்டியும் இறந்துட்டாங்க, வெற்றியை கல்யாணம் பண்ண நினச்சேன், அதுக்கும் வாய்ப்பில்லாம போச்சு” என்று சொல்லிக் கொண்டே, கழுத்தில் மாட்டி இருந்த செயினை வருடியவளோ, ஒரு கணம் நிறுத்தி, “பணத்தை வச்சு நான் என்ன பண்ணுறது? ரிஷிக்காவது உதவட்டும்னு தான் கொடுத்தேன், எனக்கு வாழ்க்கைல பிடிப்பே இல்லாம போயிடுச்சு விசாலாட்சி” என்று சொன்னவள், தனது வயிற்றை வருடிக் கொண்டே, “இனி வந்திடும்னு நம்புறேன்” என்று சொன்னாள்.
அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே, அவள் எண் அழைக்கப்பட, உள்ளே விசாலாட்சியுடன் சென்றாள்.
அவளை பரிசோதித்த வைத்தியரோ, “ஹெல்தியா இருக்கீங்க, வைட்டமின் மாத்திரை எழுதி கொடுக்கிறேன், எடுத்துக்கோங்க” என்று சொல்ல, “ம்ம்” என்று சொன்னாள்…
“அப்புறம், நீங்க ராவணனை அடிச்சது தான் எல்லா இடமும் பேசிட்டு இருக்காங்க, அப்படி இனி பாய்ஞ்சு எல்லாம் அடிச்சிடாதீங்க, உள்ளே பேபி இருக்கு” என்றார் ஹாஸ்யமாக…
அவளும் சிரித்துக் கொண்டே, “ம்ம்” என்று சொன்னவள், அதனை தொடர்ந்து கிளம்பி விட்டாள்…
முதல் நாள் ராவணனை பார்க்க போனதோடு சரி, அதன் பிறகு அவன் பக்கம் அவள் செல்லவில்லை…
அவளுக்கும் புது ஸ்டேஷன் என்பதால் நிறைய வேலைகள் இருக்க, அதில் மூழ்கி விட்டாள்.
அவனை கோர்ட்டில் ஆர்ஜர் செய்தார்கள்.
போலீசையே கொன்று இருக்கின்றான் என்பதால் கெடு பிடி அதிகமாக இருக்க, அவனுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை…
இதே சமயம், கோர்ட்டுக்கு ராஜதுரையுடன் வந்த மீனாட்சியின் விழிகள் அங்கே நின்ற போலீஸ் ஜீப்பில் சாய்ந்து நின்ற விசாலாட்சியில் படிய, “துரோகி, இவ தான் பேசி பேசி, குடும்பத்தையே நாசம் பண்ணுனவ” என்று வாய்க்குள் திட்டியபடி, விசாலாட்சி அருகே வர, விசாலாட்சி கொஞ்சம் பதறி தான் போனார்.
ஆனாலும் சமாளித்துக் கொண்டே, “சொல்லுங்கம்மா” என்க, “அம்மாவா? நீ தானே அப்படி நடிச்ச? கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?” என்று கேட்டார்…
வேறு யாரும் என்றால் போலீஸ் தோரணையுடன் எகிறி பேசி இருப்பார் விசாலாட்சி…
ஆனால் மீனாட்சியிடம் அப்படி பேச வரவில்லை…
அவர் அன்புக்கு அடிமையாகி விட்டார் போல…
தலையை சொரிந்து கொண்டே, “என்னம்மா பண்ணுறது? கடமை” என்று இழுக்க, “என்னடி கடமை? அவனை ஜெயில் ல தள்ளுறது தான் கடமையா?” என்று கண்ட மேனிக்கு திட்ட, மாறி பேச முடியாமல் சிரித்தே சமாளித்துக் கொண்டு இருந்தார் விசாலாட்சி…
இதனிடையே, “என்ன இங்க சத்தம்?” என்றபடி வந்தாள் மோகினி…
அவளை முறைத்து பார்த்த மீனாட்சியோ, “வாம்மா மகராசி, உன்னை விழுந்து விழுந்து கவனிச்சுக்கிட்டானே, இப்படி ஜெயிலுக்குள்ள தள்ளிட்டியே, நீ எல்லாம் நல்லா இருப்பியா?” என்று கண்ணீருடன் புலம்ப, மோகினி எதுவும் பேசவில்லை, அவ்விடம் வந்த ராஜதுரையோ, “கர்ப்பமான பொண்ணுக்கு சாபம் விடாதே, மீனாட்சி, கிளம்பலாம்” என்று அவர் தோளில் கையை போட்டு அழைத்து செல்ல, மோகினியோ தலையை உலுக்கி விட்டு வண்டியில் ஏறிக் கொண்டாள்…
அன்றில் இருந்து கேஸ் சூடு பிடித்து நடக்க ஆரம்பித்து இருந்தது…
ராவணன் தப்பிக்கவே முடியாத போல, சாட்சிகள் அடுக்கப்பட, தீர்ப்பு நாளும் வந்தது…
ராவணன் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை…
போராடி எதுவும் ஆக போவது இல்லை, நடப்பது நடக்கட்டும் என்று இருந்து விட்டான்.
கோர்ட்டில் இருக்கும் கூண்டில் தான் அவன் நின்று இருந்தான், அங்கே தான் மோகினியும் அவனுக்கு கிடைக்க இருக்கும் தண்டனையை கேட்க ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்க, அங்கே வந்த நீதிபதியும் அவனுக்கான தண்டனையை வாசிக்க ஆரம்பித்து இருந்தார்…
உறுதியான சாட்சி இருக்கும் போது குறைந்த பட்சம் பத்து வருடங்களாவது சிறை தண்டனை கிடைக்கும் என்று நினைத்து இருக்க, நீதிபதியோ, “ராவணனுக்கு நான்கு வருடங்கள் கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பளிக்கின்றேன்” என்றாரே பார்க்கலாம்.
போலீசை கொன்று இருக்கின்றான்.
சாட்சிகள் அவ்வளவு உறுதியாக இருக்கின்றன…
நான்கு வருடங்கள் தான் தண்டனையா?
மோகினிக்கு ஜீரணிக்க முடியவே இல்லை…
அவள் விழிகள் அதிர்ந்து விரிய, அவளை கிண்டலாக பார்த்துக் கொண்டே கடந்து சென்றார் ராஜதுரை…
அவர் பணம் விளையாடி இருக்கின்றது என்று அவளுக்கு தெளிவாக புரிந்தது…
கண்களை மூடி திறந்து ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே அவள் வெளியே வர, கையில் விலங்குடன் நடந்து வந்தான் ராவணன்…
கருப்பு நிற ஷேர்ட் மற்றும் ஜீன்ஸ் தான் அணிந்து இருந்தான்.
அதே போல அடர்ந்த தாடி…
அங்கே நின்ற மோகினியை தாண்டி செல்லும் போது, ஒரு கணம் நின்று அவளை திரும்பி பார்த்தவன், “நாலு வருஷம் தான் செல்லம், வந்து இந்த ராவணன் யாருன்னு காட்டுறேன், வரட்டா?” என்று ஒற்றை கண்ணை சிமிட்டி, அவளை நோக்கி இதழ் குவித்து முத்தம் வழங்கி விட்டு அவன் நடக்க, அவன் முதுகை வெறித்து பார்த்தாள் மோகினி.
அங்கே நின்ற ராஜதுரை அவனை அணைத்து விடுவிக்க, அவனோ, “வந்திடுறேன் ஐயா” என்று சொன்னவன், அருகே நின்ற ஜெகனிடம், “ஐயாவை பார்த்துக்கோ டா” என்று சொல்லி விட்டு போலீஸ் வண்டியில் ஏறிக் கொண்டான்…
“என்ன மேம் இப்படி ஆயிடுச்சு, அப்பீல் பண்ணலாமா?” என்று விசாலாட்சி கேட்க, “அங்கேயும் சும்மா இருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? வெளிய இருக்கிறதுக்கு நாலு வருஷம் ஆச்சும் உள்ள இருக்கட்டும்… அங்க நாலு வருஷத்தை ரெண்டு வருஷமாக்கினா என்ன பண்ணுறது?” என்று கேட்டுக் கொண்டே நடந்து சென்ற மோகினி ஜீப்பில் ஏறினாலும், அவனுக்கு இந்த தண்டனை போதாது என்று அவள் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது…
அன்று வீட்டுக்கு வந்து படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை…
மனம் அலைபாய்ந்து கொண்டே இருந்தது…
முக்கியமாக குழந்தையை நினைத்து ஒரு பயம்…
திரும்பி வந்து குழந்தையை உரிமை கோரி விடுவானோ என்று ஒரு தடுமாற்றம்.
சற்று நேரம் தான் யோசித்து இருப்பாள், ‘வெளிய வந்து என்ன புடுங்குறான்னு நானும் பாக்கிறேன்’ என்று நினைத்து மனதை நிலைப்படுத்திய பெண்ணவள் தூங்கிப் போனாள்…
அத்தியாயம் 7
❤️ Loading reactions...