அதேநேரம் அஜூதியா அனைவரையும் பார்த்து வணங்கிவிட்டு, மேடையில் இருந்து கீழ் இறங்கி, அங்கிருந்து மறையும் வரை அவளை இமை தட்டாமல் பார்த்த பரந்தாமன் தன் காரியதரிசியை அழைத்து,
“யாரு டா இந்த பொண்ணு” என்று கேட்ட தோரணையில் தன் தலைவனின் எண்ணத்தை புரிந்து கொண்ட அவரது காரியதரிசி,
“ஏற்பாடு பண்ணிரேன் சார், லாஸ்ட் எலெக்ஷ்ன் அப்போ கஷ்டப்பட்ட பிள்ளைங்களுக்கு இலவசமா சீட் கொடுத்தோமே அதில இந்த பொண்ணும் உண்டு” என்று சொல்ல, அதையெல்லாம் எங்க அவன் காதில் வாங்கினான்,
“இன்னைக்கு நைட்” என்று பரந்தாமன் தன் எண்ணத்தை தீவிரமாக சொல்லவும், அவர் இன்னைக்கேவா என்று தயங்க,
“என்னய்யா?” பரந்தாமனுக்கு எரிச்சல் வந்தது.
“சின்ன பொண்ணு சார் பேசி அவ அதுக்கு சம்மதிக்கணும்”
“ம்ம் நீ வர வை நான் பேசிக்கிறேன்” என்றவர் பெண்ணவளை வேட்டையாட போகும் நிமிடத்திற்காக காத்திருந்தார்.
!!!!!!!!!!!!!
“சந்துரு என்னாச்சு ஏன் சிக்னல் கொடுக்கலை? அங்க என்ன நடக்குது” என பாத்ரூமில் இருந்து விக்கி தனது கூட்டாளி சந்த்ருவிடம் கேட்க,
“அதை பத்தி கேட்காத டா, பையா இப்போ வேற மூட்ல இருக்காரு, இன்னைக்கு சம்பவம் நடக்குறதெல்லாம் கஷ்டம் தான். இப்போதைக்கு பிளான் ஏ போச்சு, அடுத்த என்னன்னு பாய் தான் சொல்லணும், எல்லாருமே கிளம்பிடலாம்” என்று சிறு புன்னகையுடன் கூறியவன், அரங்கத்திற்கு உள்ளே இருக்கும் தன் மற்ற கூட்டாளிகளுக்கும் தகவல் கொடுக்க, சமையல் உதவியாளர், பாத்ரூம் கிளீனர், என வேறு வேறு வேடத்தில் இருந்த அனைவரும் வெவ்வேறு திசை வழியாக திட்டமிட்டபடி லாவகரமாக வெளியேறினர்.
!!!!
“ராவணா நீயா இது? நீ வந்த நோக்கம் என்ன? செய்வது என்ன? போட்ட மொத்த திட்டத்தையும் சொதப்பிவிட்டு ச்ச் ச்ச” இந்த உணர்வு அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, இவளுக்காக மீண்டும் தன் சுயத்தை இழந்துவிட்டேனே ஆத்திரத்தில் உடல் இறுக அமர்ந்திருந்தான்.
இதோ அரங்கத்தை விட்டு அவன் வெளியேறி பத்து நிமிடத்திற்கு மேல் ஆகிறது, ஆனால் இன்னும் அவளது நினைவுகள் அவனை சிறைபிடிப்பதற்காக சுத்தி சுத்தி வரவும் அவன் கோபத்தில் கண்களை இறுக்கமாக மூட, பெண்ணவளின் கரு விழிகள் அவன் மனக்கண் முன்பு தோன்றி இம்சை கொடுக்கவும், அதீத கோபத்தில் காரின் டேஷ்போர்டில் ஓங்கி குத்தினான்.
ஒரு முறை தான் என்றாலும் கைமுஷ்ட்டி இறுக அவன் குத்திய வேகத்தில் டேஷ்போர்ட் தானாக திறந்து கொள்ள, அதில் இருந்து கீழே விழுந்த பொருள் ஒன்று எழுப்பிய சத்தத்தில் விழிகளை திறந்து பார்த்தவன், தன் முகத்தை அழுத்தமாக தேய்த்தபடி கீழே விழுந்த தன் துப்பாக்கி மற்றும் சலங்கையையும் அவ்விரண்டையும் சேர்த்து பின்னிக்கிடந்த கழுத்து சங்கிலியையும் மொத்தமாக தன் கரத்தில் எடுத்துக்கொண்டு சலங்கையை லேசாக வருடினான். அவன் கரத்தில் இருந்த துப்பாக்கி அவனை பார்த்து சிரித்தது.
ராவணனுக்கு அஜூதியாவை பார்க்கும் பொழுதும் சரி, இப்பொழுது இந்த சலங்கையை தன் கையில் எடுத்து வருடிய பொழுதும் சரி அவன் மனம் எண்ண நினைக்கிறது? அவன் எப்படி உணர்கிறான்? என்று அவனுக்கே சரி வர புரியவில்லை.
ஆனால் தன் கையில் இருந்த பொருட்களை மீண்டும் மீண்டும் வருடியபடி அமர்ந்திருந்தவனின் மனம் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியடைய அவனது இமைகள் இப்பொழுது தானாக மூடி கொண்டது.
!!!!!
“என்னாச்சு சந்துரு, பாய் ஏன் ஒருமாதிரி வந்தாரு” என அவனது கூட்டாளிகள் காருக்கு வெளியே நின்றுகொண்டு சந்துருவிடம் கேட்க,
“எனக்கும் அதான் தெரியல” என்ற சந்த்ருவிடம்,
“இப்போ நம்ம அடுத்த பிளான் தான் என்ன? இந்த மிஷன் நடக்குமா நடக்காதா” என்று ஒருவன் கேட்க, அப்பொழுது தன் கையில் முளைத்த துப்பாக்கியுடன் “நடக்கும்” என்றபடி காரின் கதவை திறந்த ராவணன் குரலில் ‘எடுத்த காரியத்தை முடித்தே தீருவேன்’ என்கிற வெறி நிறைந்திருந்தது.
!!!!
“இந்த நேரத்திலையா?!” பெண்ணவள் தயக்கத்துடன் வினவ அவளது முகத்தில் விரவியிருந்த அச்சத்தை உள்வாங்கிக்கொண்டவர்,
“இதுல பயப்பட என்னடா இருக்கு? நான் தான் கூட வரேன்ல வா, சேர்மென் வைஃப்க்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான் ப்ரோக்ராமை ஆன்லைன்ல பார்த்திருப்பாங்க போல, உன் டான்ஸ் ரொம்ப புடிச்சு போச்சாம் உன்னை நேர்ல பார்த்து சேர்மென் வைஃப்க்கு பாராட்டனுமாம், நாளைக்கு காலையில அவங்களுக்கு ஃப்ளைட்டாம் அதான் சேர்மென் சார் இப்பவே உன்னை கூட்டிட்டு வரச் சொல்லிருக்காங்க, வா டா போயிட்டு வந்துடலாம்” என்று கூறிய வார்டன் பெண்ணவளின் கரத்தை பிடித்துக்கொள்ள,
“ஓகே மேம்” என்றவளுக்கு முதலில் இருந்த தயக்கம் இப்பொழுது இல்லை.
பரந்தாமனை இதுவரை நேரில் சந்தித்ததில்லை என்றாலும் அரசல் புரசலாக அவர் பெண்கள் விடயத்தில் மோசம், இங்கு படித்த மாணவியை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டார் என்று ,அவள் கல்லூரியில் வந்த புதிதில் சிலர் கூறி கேள்வி பட்ட பொழுது முதலில் பயந்தவள், பிறகு நாளிதழில் அந்த பெண்ணுக்கு போதைப்பழக்கம் உண்டு ஆண் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் போதை மயக்கத்தில் கீழே விழுந்து இறந்துவிட்டாள், என்ற செய்தி வரவும், சமுதாயத்தில் அந்தஸ்தில் இருக்கும் மனிதருக்கு அவப்பெயரை ஏற்படுத்த இது போன்ற செய்திகளை அவருக்கு வேண்டாதவர் யாரோ பரப்பியிருக்க வேண்டும், நாம் படிக்க உதவியவர் அவர் , அவரை இனி தவறாக நினைக்க கூடாது என்று முடிவெடுத்தவளுக்கு லட்சங்களையும் கோடிகளையும் கொட்டி, பெரிய பெரிய பணக்காரர்கள் மட்டுமே படிக்கும் இந்த கல்லூரியில் தனக்கு ஒரு செலவும் இல்லாமல் படிக்க உதவிய பரந்தாமன் மீது மரியாதை பெருகியது. அதுவும் இப்பொழுது அவரது மனைவியே அவளை பாராட்டுவதற்காக அழைத்திருக்கிறார் என்று கூறியதும் உள்ளம் மகிழ்ந்தவள், தனக்காக காத்திருக்கும் சூழ்ச்சி பற்றி ஆராயாமல் ஏற்கனவே தங்களுக்காக ஹாஸ்ட்டலின் வாசலில் காத்திருந்த வெள்ளை நிற ஆடி காரில் வார்டனுடன் ஏறி அமர்ந்தாள்.
‘சேர்மென் மனைவிக்கு என் நடனம் பிடித்திருக்கின்றதாம், அவருக்கு என்னை நேரில் சந்திக்க வேண்டுமாம்!’ பெண்ணவளின் மனம் உற்சாகத்தில் துள்ளி குதித்தது. போதாக்குறைக்கு வார்டன் மேம் வராங்க ஏன் பயப்பட வேண்டும் என்று எண்ணினாளோ என்னவோ, மகிழ்ச்சி நிறைந்த மனதுடன் காரில் அமர்ந்தபடி வெளியே வேடிக்கை பார்த்து கொண்டே வந்தாள் அஜூதியா.
அரைமணிநேர பயணத்தின் முடிவில் கார் பிரம்மாண்டமான அந்த பங்களாவின் வாசலில் வந்து நிற்க, காரில் இருந்து இறங்கிய அஜூதியாவின் கண்கள் அந்த மாளிகையின் தோற்றத்தை கண்டு ஆச்சரியத்தில் விரிந்துகொண்டது.
அப்பொழுது அவர்களின் அருகில் வந்த காவலாளி, வார்டனிடம் விசாரித்துவிட்டு அவர்களை மேலே அனுப்ப, அஜூதியாவை அழைத்து கொண்டு வந்த வார்டன், ஒரு அறையின் வாசலில் கைகளில் துப்பாக்கியுடன் நின்றிருந்த காவலாளிகளிடம் சேர்மென்னை பார்க்க வேண்டும் என்று கூற, அஜூதியாவை மட்டும் உள்ளே அனுமதித்தவர்கள் அந்த வார்டனை வெளியேவே இருக்க சொல்லிவிட,
“போயிட்டு வா அஜூதியா, நான் வெளில தான் இருக்கேன்” என்றவர் அஜூதியாவை உள்ளே அனுப்பினார்.
!!!!